Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 15

பேச்சில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்களா?

பேச்சில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்களா?

‘பேச்சில், . . . உண்மையுள்ளவர்களுக்கு நீ முன்மாதிரியாக இரு.’—1 தீ. 4:12.

பாட்டு 90 ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவோம்

இந்தக் கட்டுரையில்... *

1. பேசும் திறன் நமக்கு எப்படிக் கிடைத்தது?

 நமக்கு இருக்கிற பேசும் திறன், நம்முடைய அன்பான கடவுளிடமிருந்து கிடைத்திருக்கிற ஒரு பரிசு. முதல் மனிதனான ஆதாம் படைக்கப்பட்டபோது அவனால் வார்த்தைகளைப் பயன்படுத்தி அவனுடைய பரலோக அப்பாவிடம் பேச முடிந்தது. அதுமட்டுமல்ல, புதுப் புது வார்த்தைகளையும் அவனால் உருவாக்க முடிந்தது. இந்தத் திறனைப் பயன்படுத்தித்தான் ஆதாம் எல்லா மிருகங்களுக்கும் பெயர் வைத்தான். (ஆதி. 2:19) தன்னுடைய அழகான மனைவி ஏவாளிடம் முதல் தடவையாகப் பேசியபோது அவன் எவ்வளவு பூரித்துப்போயிருப்பான்!—ஆதி. 2:22, 23.

2. அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி பேசும் திறன் எப்படித் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது?

2 சீக்கிரத்திலேயே, பேசும் திறன் என்ற பரிசை சிலர் தவறாகப் பயன்படுத்தினார்கள். ஏவாளிடம் சாத்தான் பொய் பேசினான். அதனால், மனிதர்கள் பாவ இயல்புள்ளவர்களாக ஆனார்கள். (ஆதி. 3:1-4) ஆதாம் தன்னுடைய தப்பை மறைப்பதற்காக ஏவாள்மேல் மட்டுமல்ல, யெகோவாமேலும் பழிபோட்டான். (ஆதி. 3:12) காயீன் தன்னுடைய தம்பி ஆபேலைக் கொன்ற பிறகு, யெகோவாவிடம் பொய் சொன்னான். (ஆதி. 4:9) கொஞ்ச வருஷங்களுக்குப் பிறகு, காயீனின் வம்சத்தில் வந்த லாமேக்கு சொன்ன ஒரு கவிதையிலிருந்து அவர் வாழ்ந்த காலத்தில் வன்முறை எந்தளவுக்கு இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. (ஆதி. 4:23, 24) இன்றைக்கு மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அரசியல் தலைவர்கள் கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல் எல்லார் முன்பும் கெட்ட வார்த்தைகளைப் பேசுகிறார்கள். இன்றைக்கு எந்தச் சினிமாவை எடுத்துக்கொண்டாலும் அதில் அசிங்கமான வார்த்தைகள் இருக்கின்றன. ஸ்கூலிலும் சரி, வேலை செய்கிற இடத்திலும் சரி, கெட்ட வார்த்தை பேசுவது சகஜமாக இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இந்த உலகம் எவ்வளவு சீரழிந்துபோயிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

3. நாம் எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்? இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

3 நாம் கவனமாக இல்லையென்றால், மற்றவர்கள் பயன்படுத்துகிற கெட்ட வார்த்தையைக் கேட்டுக் கேட்டு நாமும் அதைப் பேச ஆரம்பித்துவிடலாம். நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதால் யெகோவாவை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், அதற்குக் கெட்ட வார்த்தை பேசாமல் இருந்தால் மட்டும் போதாது. யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற பேசும் திறன் என்ற அற்புதமான பரிசை நல்ல விதத்தில் பயன்படுத்த வேண்டும். அதாவது, யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்பதற்காக அதை நாம் பயன்படுத்த வேண்டும். (1) ஊழியம் செய்யும்போது, (2) கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது, (3) தினமும் மற்றவர்களிடம் பேசும்போது இதை எப்படிச் செய்யலாம் என்பதை இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம். அதற்கு முன்பு, நாம் பேசும் விதம் யெகோவாவுக்கு ஏன் முக்கியமாக இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

நாம் பேசும் விதம் யெகோவாவுக்கு ரொம்ப முக்கியம்

உங்களுடைய பேச்சு உங்கள் இதயத்தில் இருப்பதை எப்படிப் படம்பிடித்துக் காட்டும்? (பாராக்கள் 4-5) *

4. நாம் பேசும் விதம் யெகோவாவுக்கு ரொம்ப முக்கியம் என்பதை மல்கியா 3:16-லிருந்து எப்படித் தெரிந்துகொள்கிறோம்?

4 மல்கியா 3:16-ஐ வாசியுங்கள். தனக்குப் பயந்து நடந்து தன்னுடைய பெயரை எப்போதும் நினைத்துப் பார்க்கிறவர்கள் பேசுவதை யெகோவா கவனித்துக் கேட்கிறார். அவர்களுடைய பெயர்களை ஒரு ‘நினைவுப் புத்தகத்தில்’ எழுதி வைத்துக்கொள்கிறார். ஏன்? ஏனென்றால், நம்முடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை நம்முடைய பேச்சு காட்டுகிறது. “இதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது” என்று இயேசுவும் சொன்னார். (மத். 12:34) நாம் யெகோவாமேல் எந்தளவுக்கு அன்பு வைத்திருக்கிறோம் என்பதை நாம் பேசும் விதத்திலிருந்து தெரிந்துகொள்ள முடியும். தன்மேல் உண்மையிலேயே அன்பு வைத்திருக்கிறவர்களைப் புதிய உலகத்தில் என்றென்றும் வாழ வைக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார்.

5. (அ) நாம் பேசும் விதம் எப்படி யெகோவாவை வணங்குவதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது? (ஆ) பேசும் விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் எப்படிக் காட்டுகிறது?

5 யெகோவா நம்முடைய வணக்கத்தை ஏற்றுக்கொள்வாரா மாட்டாரா என்பது நாம் பேசும் விதத்தைப் பொறுத்துதான் இருக்கிறது. (யாக். 1:26) கடவுள்மேல் அன்பில்லாத சில ஆட்கள் கோபமாக... கடுகடுப்பாக... ஆணவமாக... பேசுகிறார்கள். (2 தீ. 3:1-5) அவர்களைப் போல் இருக்க நாம் கண்டிப்பாக விரும்ப மாட்டோம். யெகோவாவுக்குப் பிடித்த விதமாகப் பேசுவதற்குத்தான் நாம் முயற்சி செய்கிறோம். ஆனால், நாம் ஊழியத்திலும் கூட்டங்களிலும் கலந்துகொள்ளும்போதும் மற்றவர்களிடம் பேசும்போதும் அன்பாகப் பேசிவிட்டு, வீட்டில் இருப்பவர்களிடம் அன்பு இல்லாமல் கடுகடுப்பாகப் பேசினோம் என்றால் யெகோவாவுக்கு நம்மைப் பிடிக்குமா?—1 பே. 3:7.

6. காவியா நல்ல விதமாகப் பேசியதால் என்ன பலன் கிடைத்தது?

6 பேசும் திறனை நல்ல விதமாகப் பயன்படுத்தும்போது, நாம் யெகோவாவை வணங்கும் ஒருவர் என்பதைக் காட்டுகிறோம். அப்படிச் செய்யும்போது “கடவுளுக்குச் சேவை செய்கிறவனுக்கும் செய்யாதவனுக்கும்” உள்ள வித்தியாசத்தை மற்றவர்களால் தெளிவாகப் பார்க்க முடியும். (மல். 3:18) காவியா * என்ற சகோதரியின் விஷயத்திலும் இதுதான் நடந்தது. ஸ்கூலில் அவள் இன்னொரு பெண்ணோடு சேர்ந்து ஒரு பிராஜெக்ட் செய்தாள். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்தபோது, காவியா பேசிய விதம் மற்ற பிள்ளைகள் பேசிய விதத்திலிருந்து வித்தியாசமாக இருந்ததை அந்தப் பெண் கவனித்தாள். காவியா மற்றவர்களைப் பற்றிக் குறை சொல்லவில்லை, கெட்ட வார்த்தை பேசவில்லை. ஆனால், ரொம்ப அன்பாக பேசினாள். அதைப் பார்த்து அந்தப் பெண் ரொம்ப ஆச்சரியப்பட்டாள். பிறகு, பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டாள். நாம் பேசுகிற விதத்தைப் பார்த்து மக்கள் பைபிளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படும்போது அது யெகோவாவுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும், இல்லையா?

7. கடவுள் கொடுத்திருக்கிற பேசும் திறன் என்ற பரிசை நீங்கள் எப்படிப் பயன்படுத்த விரும்புகிறீர்கள்?

7 யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிற விதமாகவும், சகோதர சகோதரிகளிடம் நெருங்கிப்போகிற விதமாகவும் நம்முடைய பேச்சு இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். அப்படியென்றால், நாம் எப்போதுமே ‘பேச்சில் . . . முன்மாதிரியாக இருக்க’ வேண்டும். அதற்கு உதவி செய்கிற சில விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

ஊழியத்தில் முன்மாதிரியாக இருங்கள்

ஊழியத்தில் பார்க்கிறவர்களிடம் நாம் அன்பாகப் பேசும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார் (பாராக்கள் 8-9)

8. ஊழியத்தில் மற்றவர்கள் கோபப்படுத்துகிற விதமாகப் பேசியபோது இயேசு எப்படி நடந்துகொண்டார்?

8 மற்றவர்கள் கோபமாகப் பேசினாலும், அவர்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் பேசுங்கள். இயேசு ஊழியம் செய்த சமயத்தில் நிறைய பேர் அவரைப் பொய்யாக குற்றம் சாட்டினார்கள். அவரை குடிகாரர், பெருந்தீனிக்காரர், பேய்களின் தலைவர், ஓய்வுநாளைக் கடைப்பிடிக்காதவர், கடவுளை நிந்திக்கிறவர் என்றெல்லாம் சொன்னார்கள். (மத். 11:19; 26:65; லூக். 11:15; யோவா. 9:16) ஆனாலும், இயேசு அவர்களிடம் பதிலுக்குக் கோபமாகப் பேசவில்லை. நம்மிடமும் யாராவது கோபமாகப் பேசினால் இயேசுவைப் போலவே பதிலுக்குக் கோபப்படாமல் இருக்க வேண்டும். (1 பே. 2:21-23) அப்படி நடந்துகொள்வது சுலபம் இல்லைதான். (யாக். 3:2) ஆனால், அதற்கு எது உதவும்?

9. ஊழியம் செய்யும்போது கோபப்பட்டு ஏதாவது பேசி விடாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம்?

9 ஊழியத்தில் யாராவது உங்களிடம் கோபமாகப் பேசினால், அவர் ஏன் அப்படிப் பேசினார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். இதைப் பற்றி சாம் என்ற சகோதரர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள். “நான் ஊழியத்துல பாக்கற ஒரு நபர் கடவுள பத்தி தெரிஞ்சிக்குறது முக்கியம்னும் கண்டிப்பா ஒருநாள் அவர் மாறுவார்னும் யோசிச்சு பார்ப்பேன்” என்று சொல்கிறார். சிலசமயங்களில், நாம் தவறான நேரத்தில் ஒருவருடைய வீட்டுக்குப் போவதால் அவர் கோபப்படலாம். யாராவது நம்மிடம் கோபமாகப் பேசினால், நாம் லூசியா என்ற சகோதரி செய்ததையே செய்யலாம். அமைதியாக இருப்பதற்கும், கோபமாகவோ... மரியாதை இல்லாமலோ... ஏதாவது திருப்பி சொல்லிவிடாமல் இருப்பதற்கும் உதவும்படி யெகோவாவிடம் சுருக்கமாக ஒரு ஜெபம் செய்யலாம்.

10. ஒன்று தீமோத்தேயு 4:13 சொல்கிறபடி, நாம் என்ன குறிக்கோள் வைக்கலாம்?

10 திறமையாக ஊழியம் செய்யுங்கள். ஊழியம் செய்வதில் தீமோத்தேயுவுக்கு நிறைய அனுபவம் இருந்தது. ஆனால், அவரும் தொடர்ந்து தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. (1 தீமோத்தேயு 4:13-ஐ வாசியுங்கள்.) நாம் எப்படி ஊழியத்தில் திறமையாகப் பேசலாம்? அதற்கு நாம் நன்றாகத் தயாரிக்க வேண்டும். திறமையாகச் சொல்லிக்கொடுப்பதற்கு உதவும் நிறைய கருவிகள் நம்மிடம் இருக்கின்றன. வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழுமூச்சோடு ஈடுபடுங்கள் சிற்றேட்டை நாம் பயன்படுத்தலாம். நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகத்தில் இருக்கிற “ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்” பகுதியிலிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். இதையெல்லாம் நீங்கள் நன்றாகப் பயன்படுத்துகிறீர்களா? நன்றாகத் தயாரித்தோம் என்றால் பதட்டம் இல்லாமல் நம்மால் தைரியமாகப் பேச முடியும்.

11. நன்றாகக் கற்றுக்கொடுப்பதற்கு சில சகோதர சகோதரிகள் என்ன செய்கிறார்கள்?

11 ஊழியத்தில் திறமையாகப் பேசுவதற்கு சபையில் இருக்கிற மற்றவர்களிடமிருந்தும் நாம் நிறையக் கற்றுக்கொள்ளலாம். நாம் ஏற்கெனவே பார்த்த சாம் என்ற சகோதரர் மற்றவர்களால் எப்படித் திறமையாகக் கற்றுக்கொடுக்க முடிகிறது என்று யோசித்துப்பார்க்கிறார். அவர்கள் எப்படிச் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பதை நன்றாகக் கவனித்து, அவரும் அதேபோல் பேசுவதற்கு முயற்சி செய்கிறார். டாலியா என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். நன்றாகப் பொதுப் பேச்சு கொடுக்கிற சகோதரர்கள் விஷயங்களை எப்படி விளக்குகிறார்கள் என்பதை அவர் கூர்ந்து கவனிக்கிறார். இப்படிச் செய்வதால், ஊழியத்தில் மக்கள் அடிக்கடி கேட்கிற கேள்விகளுக்கு எப்படிப் பதில் சொல்லலாம் என்று கற்றுக்கொள்கிறார்.

கூட்டங்களில் முன்மாதிரியாக இருங்கள்

கூட்டங்களில் நாம் மனதிலிருந்து பாட்டு பாடுவது, யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் (பாராக்கள் 12-13)

12. சிலருக்கு எதெல்லாம் கஷ்டமாக இருக்கிறது?

12 கூட்டங்களில் கலந்துகொண்டு நம் எல்லாராலும் பாட்டு பாட முடியும், நல்ல பதில்கள் சொல்ல முடியும். (சங். 22:22) ஆனால், சிலருக்கு எல்லார் முன்பும், பாட்டு பாடுவதும், பதில்கள் சொல்வதும் கஷ்டமாக இருக்கிறது. உங்களுக்கும் அப்படி இருக்கிறதா? அப்படியென்றால், கூட்டங்களில் பயப்படாமல் பதில் சொல்வதற்கும் பாட்டு பாடுவதற்கும் நிறைய பேருக்கு எது உதவி செய்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது உங்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும்?

13. கூட்டங்களில் மனதிலிருந்து பாடுவதற்கு எது உங்களுக்கு உதவி செய்யும்?

13 மனதிலிருந்து பாடுங்கள். நாம் யெகோவாவைப் புகழ்வதற்காகத்தான் முக்கியமாகக் கூட்டங்களில் பாட்டு பாடுகிறோம். சாரா என்ற சகோதரி, தனக்கு அவ்வளவாகப் பாட வராது என்று நினைத்தார். ஆனாலும், யெகோவாவைப் புகழ்ந்து பாட வேண்டுமென்று அவர் ஆசைப்பட்டார். அதனால், கூட்டங்களுக்காகத் தயாரிக்கும்போது அதில் வருகிற பாடல்களைப் பாடிப் பழகினார். இப்படிச் செய்வதால், பாடல் வரிகள் கூட்டத்தில் கலந்துபேசப்படும் மற்ற விஷயங்களோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. “இப்படி பாட்டுல இருக்கிற வரிகளுக்கு நான் கவனம் செலுத்துறப்போ, நான் நல்லா பாடுறேனா இல்லையாங்கறத பத்தியெல்லாம் யோசிக்கிறதில்ல” என்று அவர் சொல்கிறார்.

14. கூட்டங்களில் பதில் சொல்ல உங்களுக்குப் பயமாக இருந்தால் நீங்கள் என்ன செய்யலாம்?

14 பதில் சொல்வதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இது சிலருக்குக் கஷ்டமாக இருக்கும் என்பது உண்மைதான். நாம் ஏற்கெனவே கவனித்த டாலியா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “மத்தவங்க முன்னாடி பேசணும்னாலே எனக்கு ரொம்ப பயமா இருக்கும். ஆனா, இது நிறைய பேருக்கு தெரியாது. ஏன்னா, பொதுவாவே நான் மெதுவாதான் பேசுவேன். இந்த பயத்துனால, கூட்டங்கள்ல பதில் சொல்றது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.” ஆனாலும், டாலியா பதில் சொல்லாமல் இருந்துவிடவில்லை. கூட்டங்களுக்காகத் தயாரிக்கும்போது, அவர் ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்கிறார். ஒரு கேள்விக்கு முதலில் சொல்லும் பதில் நேரடியான சுருக்கமான பதிலாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைக்கிறார். “நான் சொல்ற பதில், சுருக்கமா, சாதாரணமா, நேரடியான பதிலா இருந்தாலும் பரவாயில்ல. ஏன்னா, கூட்டத்த நடத்துற சகோதரர், அந்த மாதிரி பதிலதான் எதிர்பார்ப்பார்” என்று அவர் சொல்கிறார்.

15. பதில் சொல்கிற விஷயத்தில் நாம் எதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்?

15 கூச்ச சுபாவம் இல்லாதவர்கள்கூட, சிலசமயங்களில் பதில் சொல்வதற்குத் தயங்கலாம். ஏன்? ஜூலியட் என்ற சகோதரி சொல்வதைக் கவனியுங்கள்: “சிலசமயங்கள்ல எனக்கு பதில் சொல்றதுக்கு தயக்கமா இருக்கும். ஏன்னா, நான் சொல்ற பதில் அவ்வளவா நல்லா இல்ல, ரொம்ப சாதாரணமாதான் இருக்குனு நினைப்பேன்.” ஆனால், நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைக் கொடுக்க வேண்டும் என்றுதான் யெகோவா எதிர்பார்க்கிறார் என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். * ஒருவேளை நமக்குப் பயமாக இருந்தாலும், கூட்டங்களில் ஒரு நல்ல பதிலைச் சொல்வதற்கு நாம் முயற்சி செய்வதைப் பார்த்து அவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார்.

மற்றவர்களிடம் பேசுவதில் முன்மாதிரியாக இருங்கள்

16. நாம் எப்படிப் பேசக் கூடாது?

16 எல்லா விதமான “பழிப்பேச்சையும்” தவிர்க்க வேண்டும். (எபே. 4:31) ஏற்கெனவே கவனித்ததுபோல், கிறிஸ்தவர்களுடைய வாயிலிருந்து மோசமான வார்த்தைகள் வரக் கூடாது என்று நமக்குத் தெரியும். சிலசமயங்களில் நாம் பேசுவது அந்தளவுக்கு மோசமாக இல்லாததுபோல் தெரியலாம். ஆனால், அப்படிப் பேசுவதையும் நாம் தவிர்க்க வேண்டும். உதாரணத்துக்கு, மற்ற கலாச்சாரத்தை... இனத்தை... நாட்டை... சேர்ந்தவர்களைப் பற்றி நாம் தரக்குறைவாக எதுவும் பேசக் கூடாது. அதுமட்டுமல்ல, மற்றவர்கள் மூக்கை உடைக்கிற மாதிரி நாம் எதுவும் பேசிவிடக் கூடாது. ஒரு சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “சிலசமயங்கள்ல, நான் மத்தவங்கள நக்கலா, கிண்டலா ஏதாவது பேசிடுவேன், இதில் என்ன தப்பு இருக்குது, விளையாட்டுக்கு தானே சொன்னேன்னு நினைச்சேன். ஆனா, உண்மையில அது மத்தவங்களோட மனச ரொம்பவே காயப்படுத்தி இருக்குது. எப்பல்லாம் என்னோட பேச்சு என் மனைவியயும் மத்தவங்களயும் காயப்படுத்துற மாதிரி இருக்குமோ, அப்பல்லாம் என் மனைவி தனியா வந்து என்கிட்ட பேசி புரிய வைப்பா. இத்தனை வருஷமா அவ எனக்கு உதவி செஞ்சதால, நான் பேசுற விதத்த மாத்திக்கிட்டேன்.”

17. எபேசியர் 4:29 சொல்கிறபடி, மற்றவர்களைப் பலப்படுத்துவதற்கு நாம் என்ன செய்யலாம்?

17 மற்றவர்களைப் பலப்படுத்துகிற விதமாகப் பேச வேண்டும். மற்றவர்களைக் குறை சொல்வதற்குப் பதிலாக அவர்களைப் பாராட்டுவதற்கு எப்போதும் நாம் முயற்சி செய்ய வேண்டும். (எபேசியர் 4:29-ஐ வாசியுங்கள்.) இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்ல நிறைய காரணங்கள் இருந்தன. ஆனால், அவர்கள் அடிக்கடி குறை சொன்னார்கள். இப்படிக் குறை சொல்வது மற்றவர்களைச் சுலபமாகத் தொற்றிக்கொள்ளும். உதாரணத்துக்கு, கானான் தேசத்தை உளவு பார்த்த பத்துப் பேர், அந்தத் தேசத்தைப் பற்றி மோசமாகப் பேசினார்கள். “அதைக் கேட்ட ஜனங்கள் எல்லாரும் . . . மோசேக்கு . . . விரோதமாக முணுமுணுத்தார்கள்.” (எண். 13:31–14:4) மற்றவர்களைக் குறை சொல்வதற்குப் பதிலாக அவர்களைப் பாராட்டும்போது அது அவர்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். இதை யெப்தாவின் மகளுடைய உதாரணத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம். அவளுடைய தோழிகள் அவளைப் பாராட்டியதால், யெகோவாவுடைய சேவையைத் தொடர்ந்து செய்வதற்கான உற்சாகம் அவளுக்குக் கிடைத்தது. (நியா. 11:40) ஏற்கெனவே பார்த்த சாரா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “நாம மத்தவங்கள பாராட்டுறப்போ, யெகோவாவுக்கு அவங்கமேல அன்பு இருக்குங்கறதையும் அவங்களும் அமைப்புல முக்கியமான ஒருத்தர்ங்கறதையும் அவங்க புரிஞ்சுப்பாங்க.” அதனால், நம்முடைய சகோதர சகோதரிகளை மனதாரப் பாராட்டுவதற்கு நாம் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருக்கலாம்.

18. சங்கீதம் 15:1, 2 சொல்கிறபடி, நாம் ஏன் எப்போதுமே உண்மையைப் பேச வேண்டும், அதில் வேறு எதுவும் அடங்கியிருக்கிறது?

18 மற்றவர்களிடம் உண்மையைப் பேச வேண்டும். நாம் பொய் பேசினால் நம்மால் யெகோவாவை சந்தோஷப்படுத்த முடியாது. ஏனென்றால், எந்த விதத்தில் நாம் பொய் சொன்னாலும் அதை அவர் வெறுக்கிறார். (நீதி. 6:16, 17) இன்றைக்கு நிறைய பேர் பொய் சொல்வதை ஒரு சாதாரண விஷயமாக நினைக்கிறார்கள். ஆனால், இந்த விஷயத்தில் நாம் யெகோவா மாதிரி யோசிக்க வேண்டும். (சங்கீதம் 15:1, 2-ஐ வாசியுங்கள்.) ஒருவேளை, நாம் நேரடியாகப் பொய் சொல்லாமல் இருக்கலாம். அதேசமயத்தில், உண்மையில்லாத ஒரு விஷயத்தை உண்மை என்று மற்றவர்கள் நம்பும் விதமாகவும் பேசக்கூடாது.

மற்றவர்கள் கிசுகிசுக்கும்போது, பேச்சை மாற்றி பலப்படுத்துகிற விஷயங்களை நாம் பேசினால், யெகோவாவுக்கு நம்மைப் பிடிக்கும் (பாரா 19)

19. மற்றவர்களிடம் பேசுகிற விஷயத்தில் நாம் வேறு எதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்?

19 மற்றவர்களைப் பற்றிக் கிசுகிசுப்பதைத் தவிர்க்க வேண்டும். (நீதி. 25:23; 2 தெ. 3:11) முன்பு பார்த்த ஜூலியட், கிசுகிசுப்பது எவ்வளவு மோசமான விஷயம் என்று சொல்கிறார். “யாராவது ஒருத்தர் கிசுகிசுக்கிறத கேட்குறப்போ என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது. அவங்கமேல இருக்கிற நம்பிக்கையே போயிடுது. ஏன்னா, மத்தவங்கள பத்தி என்கிட்ட வந்து பேசுறவங்க என்னை பத்தி மத்தவங்ககிட்ட போய் கிசுகிசுக்க மாட்டாங்கனு என்ன நிச்சயம்?” என்று அவர் சொல்கிறார். யாராவது உங்களிடம் கிசுகிசுத்தால், அந்தப் பேச்சை மாற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள். மற்றவர்களைப் பலப்படுத்துகிற நல்ல விஷயங்களைப் பேசுங்கள்.—கொலோ. 4:6.

20. எப்படிப் பேச நீங்கள் தீர்மானமாக இருக்கிறீர்கள்?

20 இன்றைக்கு உலகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் மோசமாகப் பேசுவதைத்தான் கேட்கிறோம். அதனால், நம்முடைய பேச்சு யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி இருப்பதற்கு நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. பேசும் திறன் யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற பரிசு, அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதை அவர் கவனிக்கிறார். ஊழியத்திலும், கூட்டங்களிலும், மற்றவர்களிடமும், நல்ல விதமாகப் பேசுவதற்கு நாம் எடுக்கிற முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார். இந்த மோசமான உலகத்துக்கு யெகோவா முடிவு கட்டிய பிறகு அவருக்குப் பிடித்த விதமாகப் பேசுவது நமக்கு ரொம்பச் சுலபமாக இருக்கும். (யூ. 15) அதுவரை உங்கள் ‘வாயிலிருந்து வருகிற வார்த்தைகள்’ யெகோவாவுக்குப் பிரியமாக இருப்பதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்.—சங். 19:14.

பாட்டு 121 சுயக்கட்டுப்பாடு அவசியம்

^ பாரா. 5 பேசும் திறன்... இது யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற ஓர் அற்புதமான பரிசு. ஆனால் வருத்தமான விஷயம் என்னவென்றால், இன்றைக்கு நிறைய பேர் யெகோவா எதிர்பார்ப்பதுபோல் அதைப் பயன்படுத்துவதில்லை. இந்த மோசமான உலகத்தில் மற்றவர்களைப் பலப்படுத்துகிற விதமாகவும், யெகோவாவுக்குப் பிடித்த விதமாகவும் நம்முடைய பேச்சு இருப்பதற்கு எது நமக்கு உதவி செய்யும்? ஊழியத்திலோ கூட்டங்களிலோ மற்றவர்களிடமோ பேசும்போது அது யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? இதற்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 6 சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ பாரா. 15 பதில் சொல்வதைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள ஜனவரி 2019 காவற்கோபுரத்தில்சபையில் யெகோவாவைப் புகழுங்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ பாரா. 61 படவிளக்கம்: ஒரு சகோதரர் ஊழியத்தில் தன்னிடம் கோபமாகப் பேசுகிற ஒருவரிடம் பதிலுக்குக் கோபமாகப் பேசுகிறார். ஒரு சகோதரர், கூட்டத்தில் பாட்டு பாடாமல் சும்மா நின்றுகொண்டிருக்கிறார். ஒரு சகோதரி, மற்றவர்களைப் பற்றிக் கிசுகிசுக்கிறார்.