Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 16

யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்கும்போது சந்தோஷம் கிடைக்கும்

யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்கும்போது சந்தோஷம் கிடைக்கும்

“ஒவ்வொருவனும் தன்னுடைய செயல்களை ஆராய்ந்து பார்க்கட்டும்.”—கலா. 6:4.

பாட்டு 37 முழு மூச்சோடு சேவை செய்வேன்

இந்தக் கட்டுரையில்... *

1. எதைச் செய்யும்போது நமக்குள் சந்தோஷம் ஊற்றெடுக்கிறது?

 நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று யெகோவா ஆசைப்படுகிறார் என்பது நமக்குத் தெரியும். ஏனென்றால், சந்தோஷம் என்பது கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களில் ஒன்று. (கலா. 5:22) வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது என்று பைபிள் சொல்வது ரொம்பவே உண்மை. அதனால்தான், மும்முரமாக ஊழியம் செய்யும்போதும், நம்முடைய சகோதர சகோதரிகளுக்குப் பலவிதங்களில் உதவி செய்யும்போதும், நமக்குள் சந்தோஷம் ஊற்றெடுக்கிறது.—அப். 20:35.

2-3. (அ) நாம் யெகோவாவுக்கு சந்தோஷமாக சேவை செய்வதற்கு உதவுகிற என்ன இரண்டு விஷயங்களைப் பற்றி கலாத்தியர் 6:4 சொல்கிறது? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

2 கலாத்தியர் 6:4-ஐ வாசியுங்கள். நாம் சந்தோஷமாக இருக்க உதவுகிற இரண்டு விஷயங்களைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இந்த வசனத்தில் சொல்கிறார். முதலில், நம்மால் முடிந்த மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுப்பது நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். அப்படிச் செய்வதை நினைத்து நாம் சந்தோஷப்பட வேண்டும். (மத். 22:36-38) இரண்டாவதாக, மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப்பார்க்கக் கூடாது. நம்முடைய பலத்தால்... நமக்குக் கிடைத்த பயிற்சியால்... அல்லது, இயல்பாகவே நமக்கு இருக்கிற திறமையால்... எதைச் செய்தாலும் அதற்கு யெகோவாவுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், நம்மிடம் இருப்பது எல்லாமே அவர் கொடுத்ததுதான். ஒருவேளை, ஊழியத்தில் மற்றவர்கள் நம்மைவிட ஏதாவது ஒரு விஷயத்தைத் திறமையாகச் செய்யலாம். அவர்களோடு போட்டிப் போடுவதற்குப் பதிலாக அவர்களைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டும். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், மற்றவர்கள் முன்னால் தங்களைப் பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல, யெகோவாவைப் புகழ்வதற்காகத்தான் அந்தத் திறமைகளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

3 நாம் ஆசைப்பட்ட விதமாக யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியவில்லையே என்று நினைத்து சோர்ந்துபோகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, நம்மிடம் இருக்கிற திறமைகளை மிகச் சிறந்த விதத்தில் எப்படிப் பயன்படுத்தலாம் என்றும் மற்றவர்களுடைய உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்றும் பார்ப்போம்.

அதிகமாகச் செய்ய முடியாதபோது...

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யும்போது அதைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுகிறார் (பாராக்கள் 4-6) *

4. எது நம்மை சோர்ந்துபோக வைக்கலாம்? ஓர் உதாரணம் சொல்லுங்கள்.

4 வயதாகிவிட்டதாலோ உடம்பு முடியாததாலோ முன்புபோல் என்னால் அதிகமாக சேவை செய்ய முடியவில்லையே என்று நினைத்து சிலர் சோர்ந்துபோகிறார்கள். கேரல் என்ற சகோதரியின் விஷயத்தில் இதுதான் நடந்தது. ஒருசமயம், தேவை அதிகமுள்ள இடத்தில் அவர் சேவை செய்தார். அப்போது, 35 பைபிள் படிப்புகளை நடத்தினார். நிறைய பேர் யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பதற்கு அவர் உதவி செய்திருக்கிறார். இப்படி ஊழியத்தில் அவருக்கு ஏராளமான பலன்கள் கிடைத்திருக்கின்றன. அதற்குப் பின்பு, அவருக்கு உடல்நிலை ரொம்ப மோசமாக ஆகிவிட்டது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது. “உடம்பு முடியாததாலதான், மத்தவங்கள மாதிரி என்னால அதிகமா செய்ய முடியலைனு தெரியும். ஆனாலும், அவங்க அளவுக்கு நான் உண்மையா இல்லைனு எனக்கு தோணுச்சு. நிறைய செய்யணுங்கற ஆசை ஒருபக்கம் இருந்தாலும் அப்படி செய்ய முடியலயேங்கற சோகம் என்னை வாட்டுச்சு” என்று கேரல் சொல்கிறார். யெகோவாவுக்குத் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்றுதான் கேரல் ஆசைப்படுகிறார். அது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம். தன்னால் முடிந்த மிகச் சிறந்ததை அவர் செய்வதை அன்பான நம் கடவுள் பார்த்து நிச்சயம் சந்தோஷப்படுவார்.

5. (அ) முன்பு மாதிரி யெகோவாவுக்கு நிறைய செய்ய முடியவில்லை என்று நினைத்து சோர்ந்துபோனால் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்? (ஆ) இந்தப் படங்களில் பார்க்கிறபடி, அந்த சகோதரர் யெகோவாவுக்கு மிகச் சிறந்ததை தொடர்ந்து செய்திருக்கிறார் என்று நாம் எப்படிச் சொல்லலாம்?

5 யெகோவாவுக்கு நிறைய செய்ய முடியவில்லையே என்று நினைத்து சோர்ந்துபோகிற சமயங்களில், ‘யெகோவா என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறார்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் இருக்கிற சூழ்நிலையில் உங்களால் எந்தளவு முடியுமோ அந்தளவு செய்ய வேண்டும் என்றுதான் அவர் எதிர்பார்க்கிறார். இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: 80 வயதான ஒரு சகோதரி, 40 வயதில் ஊழியம் செய்த மாதிரி இப்போது செய்ய முடியவில்லை என்று நினைத்து சோர்ந்துபோகிறார். தன்னால் முடிந்த மிகச் சிறந்ததை அவர் இப்போது செய்தாலும் அதைப் பார்த்து அந்தளவுக்கு யெகோவா சந்தோஷப்பட மாட்டார் என்று நினைக்கிறார். ஆனால், அது உண்மையா? 40 வயதில், தன்னால் முடிந்ததையெல்லாம் அவர் செய்தார். இப்போது 80 வயதிலும் தன்னால் முடிந்ததை செய்துகொண்டுதான் இருக்கிறார். அப்படியென்றால், யெகோவாவுக்கு மிகச் சிறந்ததை அவர் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார் என்றுதான் அர்த்தம். யெகோவா சந்தோஷப்படுகிற அளவுக்கு நிறைய செய்ய முடியவில்லையே என்று நாம் நினைத்தோம் என்றால், ஒரு முக்கியமான விஷயத்தை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். எவ்வளவு செய்தால் அவர் சந்தோஷப்படுவார் என்று முடிவு செய்வதே அவர்தான். அப்படி நம்மால் முடிந்த மிகச் சிறந்ததை செய்தால், அவர் நம்மைப் பார்த்து “சபாஷ்!” நன்றாகச் செய்திருக்கிறாய் என்று சொல்வார்.—மத்தேயு 25:20-23-ஐ ஒப்பிடுங்கள்.

6. சகோதரி மரியாவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

6 நம்மால் செய்ய முடியாத விஷயத்தைப் பற்றி யோசிப்பதற்குப் பதிலாக, செய்ய முடிகிற விஷயத்தைப் பற்றி யோசித்தால் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும். சகோதரி மரியாவைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவருக்கு உடம்பு முடியாமல் போய்விட்டதால், முன்பு மாதிரி அதிகமாக ஊழியம் செய்ய முடியவில்லை. அதனால், அவர் சோர்ந்துபோய் ‘என்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை’ என்று நினைத்தார். அப்போது, அவருடைய சபையில் படுத்த படுக்கையாக இருக்கிற ஒரு சகோதரியைப் பற்றி யோசித்துப்பார்த்தார். அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். “அவங்ககூட சேர்ந்து போன் மூலமாவும் லெட்டர் மூலமாவும் ஊழியம் செஞ்சேன். ஒவ்வொரு தடவயும் அவரோட சேர்ந்து ஊழியம் செஞ்சுட்டு வீட்டுக்கு வரும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். என்னோட சகோதரிக்கு உதவி செஞ்சேங்கற திருப்தி இருக்கும்” என்று அவர் சொல்கிறார். நாமும் நம்மால் செய்ய முடியாத விஷயத்தைப் பற்றி யோசிக்காமல் செய்ய முடிகிற விஷயத்தைப் பற்றி யோசிக்கும்போது நம்முடைய சந்தோஷமும் அதிகமாகும். ஒருவேளை, யெகோவாவின் சேவையில் சில விஷயங்களை இயல்பாகவே உங்களால் நன்றாகச் செய்ய முடியலாம் அல்லது நிறைய செய்யும் விதமாக உங்களுடைய சூழ்நிலை இருக்கலாம். அப்படியென்றால், நீங்கள் என்ன செய்யலாம்?

உங்களிடம் ஏதாவது திறமை இருந்தால் அதை நன்றாகப் “பயன்படுத்துங்கள்”

7. அப்போஸ்தலன் பேதுரு கிறிஸ்தவர்களுக்கு என்ன ஆலோசனை கொடுத்தார்?

7 அப்போஸ்தலன் பேதுரு தன்னுடைய சகோதரர்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில், அவர்களிடம் இருக்கிற வரங்களை, அதாவது திறமைகளை, பயன்படுத்தி மற்ற சகோதர சகோதரிகளைப் பலப்படுத்தும்படி சொன்னார். “கடவுளுடைய அளவற்ற கருணையைப் பெற்ற நீங்கள் அதன் சிறந்த நிர்வாகிகளாக இருக்கிறீர்கள்; அதனால், அவரவருக்குக் கிடைத்த வரத்துக்கு ஏற்றபடி, அந்த வரத்தை ஒருவருக்கொருவர் சேவை செய்யப் பயன்படுத்துங்கள்” என்று அவர் எழுதினார். (1 பே. 4:10) அப்படியென்றால், மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படுவார்களோ சோர்ந்துவிடுவார்களோ என்றெல்லாம் நினைத்து பயந்துகொண்டு நம்மிடம் இருக்கிற திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருந்துவிடக் கூடாது. அப்படிப் பயந்தால், யெகோவாவுக்கு நம்மால் முடிந்த மிகச் சிறந்ததை செய்யாமல் போய்விடுவோம்.

8. ஒன்று கொரிந்தியர் 4:6, 7 சொல்கிறபடி, நமக்கு இருக்கிற திறமைகளைப் பற்றி ஏன் பெருமையடிக்கக் கூடாது?

8 நம்மிடம் இருக்கிற திறமைகளை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அதேசமயத்தில், அதைப் பற்றிப் பெருமையடிக்கக் கூடாது. (1 கொரிந்தியர் 4:6, 7-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதில் நீங்கள் கெட்டிக்காரராக இருக்கலாம். அப்படியென்றால், அந்தத் திறமையை நீங்கள் பயன்படுத்தாமல் இருந்துவிடக் கூடாது. அதேசமயத்தில், அதைப் பற்றிப் பெருமையடிக்காமல் இருப்பது முக்கியம். ஒருவேளை, ஊழியத்தில் சந்தித்த ஒருவரிடம் நீங்கள் நன்றாகப் பேசி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்துவிட்டதாக வைத்துக்கொள்ளலாம். உங்களுடைய ஊழியத் தொகுதியில் இருக்கிறவர்களிடம் அதைச் சொல்ல வேண்டுமென்று நீங்கள் ரொம்ப ஆர்வமாக இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் தொகுதியில் இருக்கிற எல்லாரும் ஒன்றுசேரும்போது ஊழியத்தில் ஒருவருக்குப் பத்திரிகையைக் கொடுத்த அனுபவத்தைப் பற்றி ஒரு சகோதரி சொல்கிறார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அந்தச் சகோதரி ஒரு பத்திரிகையைக் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒரு பைபிள் படிப்பே ஆரம்பித்திருக்கிறீர்கள். உங்களுடைய அனுபவத்தைச் சொன்னால், தொகுதியில் இருக்கிற எல்லாருக்கும் ரொம்ப உற்சாகமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், பத்திரிகையைக் கொடுத்த சகோதரி என்ன நினைக்கலாம்? உங்கள் அளவுக்கு திறமையாக ஊழியம் செய்யவில்லையோ என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது. அந்த சகோதரிமேல் உங்களுக்கு அன்பு இருப்பதால், இன்னொரு சந்தர்ப்பத்தில் உங்களுடைய அனுபவத்தைச் சொல்லலாம் என்று முடிவு செய்வீர்கள். அதற்காக பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதை விட்டுவிடாதீர்கள். அது உங்களிடம் இருக்கிற திறமை, அதை நன்றாகப் பயன்படுத்துங்கள்!

9. நம்முடைய திறமைகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

9 நம்மிடம் இருக்கிற திறமைகள் எல்லாமே கடவுளிடமிருந்து நமக்குக் கிடைத்த பரிசுகள்தான். அதையெல்லாம் சகோதர சகோதரிகளைப் பலப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்த வேண்டும். நம்மைப் பெரிய ஆளாகக் காட்டிக்கொள்வதற்காகப் பயன்படுத்தக் கூடாது. (பிலி. 2:3) கடவுளுடைய விருப்பத்தைச் செய்வதற்காக நம்முடைய சக்தியையும் திறமைகளையும் பயன்படுத்தும்போது அதை நினைத்து நாம் சந்தோஷப்படலாம். ஏனென்றால், நிறைய செய்கிறோம் எனக் காட்டிக்கொள்வதற்கும், மற்றவர்களைவிட பெரிய ஆளாக காட்டிக்கொள்வதற்கும் அந்தத் திறமைகளை நாம் பயன்படுத்துவதில்லை. யெகோவாவைப் புகழ்வதற்காகத்தான் அதைப் பயன்படுத்துகிறோம்.

10. மற்றவர்களை உங்களோடு ஒப்பிட்டுப்பார்ப்பது ஏன் சரியாக இருக்காது?

10 ஒருவேளை, நம்மால் ஒரு விஷயத்தை நன்றாகச் செய்ய முடியலாம். அதே விஷயத்தை நன்றாகச் செய்வது இன்னொருவருக்குக் கஷ்டமாக இருக்கலாம். அவர்களை நம்மோடு ஒப்பிட்டுப்பார்ப்பது சரியாக இருக்காது. உதாரணத்துக்கு, ஒரு சகோதரரால் சூப்பராகப் பொதுப் பேச்சுகளை கொடுக்க முடியும் என்று வைத்துக்கொள்ளலாம். அப்படிக் கொடுப்பதற்கான திறமை அவருக்கு இருக்கிறது. அதற்காக அந்தளவுக்கு நல்ல பொதுப் பேச்சு கொடுக்க முடியாத ஒரு சகோதரரை அவர் மட்டமாக நினைக்கக் கூடாது. ஏனென்றால், அந்த சகோதரருக்கு வேறு திறமைகள் இருக்கலாம். தாராளமாக உபசரிக்கிற குணம் இருக்கலாம், அல்லது பிள்ளைகளுக்கு நல்ல பயிற்சி கொடுப்பதிலோ ஊழியத்தை ரொம்ப ஆர்வமாக செய்வதிலோ அவர் திறமைசாலியாக இருக்கலாம். இப்படி வித்தியாச வித்தியாசமான திறமைகள் இருக்கிற சகோதர சகோதரிகள் அந்தத் திறமைகளைப் பயன்படுத்தி யெகோவாவுக்குச் சேவை செய்கிறார்கள், மற்றவர்களுக்கும் உதவி செய்கிறார்கள். இவர்கள் எல்லாரும் நமக்குக் கிடைத்த பெரிய பாக்கியம்!

மற்றவர்களுடைய உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

11. இயேசுவைப் போல நடந்துகொள்ள நாம் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?

11 மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப்பார்க்கக் கூடாது என்றாலும் விசுவாசத்துக்கு முன்மாதிரியாக இருப்பவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, இயேசுவைப் பற்றிப் பார்க்கலாம். இயேசுவைப் போல் நாம் பாவமே செய்யாதவர்கள் இல்லைதான். இருந்தாலும், அவருடைய அருமையான குணங்களில் இருந்தும் அவர் செய்த நல்ல நல்ல விஷயங்களில் இருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். (1 பே. 2:21) நம்மால் முடிந்தவரை அவரைப் போலவே நடந்துகொள்ள முயற்சி செய்தால், நாம் யெகோவாவுக்குப் பிடித்த நபர்களாக ஆவோம், ஊழியத்தையும் ரொம்ப நன்றாகச் செய்வோம்.

12-13. தாவீது ராஜாவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

12 கடவுளுக்கு உண்மையாக இருந்த ஆண்கள் பெண்கள் நிறைய பேருடைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. அவர்கள் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும், அவர்களுடைய முன்மாதிரியை நம்மால் பின்பற்ற முடியும். (எபி. 6:12) தாவீது ராஜாவைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவரை ‘என் இதயத்துக்குப் பிடித்தமானவன்’ என்று யெகோவா சொன்னார். (அப். 13:22) ஆனாலும், அவர் பாவம் செய்யாதவர் கிடையாது. சொல்லப்போனால், ரொம்ப மோசமான சில பாவங்களை அவர் செய்திருக்கிறார். இருந்தாலும், அவர் நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், அவரைக் கண்டித்தபோது சாக்குப்போக்கு சொல்லி தப்பிக்க வழி தேடவில்லை. கடவுள் கொடுத்த கடுமையான கண்டிப்பை ஏற்றுக்கொண்டு மனதார மன்னிப்பு கேட்டார். அதனால், அவரை யெகோவா மன்னித்தார்.—சங். 51:3, 4, 10-12.

13 தாவீதிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு இந்தக் கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ளலாம்: ‘எனக்கு ஆலோசனை கிடைக்கிறப்போ நான் எப்படி நடந்துக்கறேன்? செஞ்ச தப்ப உடனே ஒத்துக்கறேனா? இல்லனா, நான் செஞ்சது சரிதான்னு நிரூபிக்க பாக்கறேனா? அடுத்தவங்கமேல பழி போடறேனா? செஞ்ச தப்ப திரும்பவும் செய்யாம இருக்க கடினமா முயற்சி பண்றேனா?’ மற்ற உண்மையுள்ள ஊழியர்களைப் பற்றி பைபிளில் படிக்கும்போதும் இதுபோன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம். அவர்களைப் பற்றிப் படிக்கும்போது, ‘எனக்கு இருக்கற மாதிரியான பிரச்சினைகள்தான் அவங்களுக்கும் இருந்ததா? அவங்க என்ன நல்ல குணங்களயெல்லாம் காட்டுனாங்க?’ என்றெல்லாம் யோசித்துப்பாருங்கள். ஒவ்வொருவரைப் பற்றியும் படிக்கும்போது ‘யெகோவாவுக்கு உண்மையா இருந்த அந்த ஊழியர மாதிரியே நடந்துக்க நான் என்ன செய்யலாம்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

14. நம்முடைய சகோதர சகோதரிகளிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

14 நம்முடைய சகோதர சகோதரிகளிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம். அவர்கள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி. உதாரணத்துக்கு, நண்பர்களுடைய தொல்லை... குடும்பத்தில் இருக்கிறவர்களுடைய எதிர்ப்பு... அல்லது நோய்... போன்ற ஏதாவது ஒரு கஷ்டம் இருந்தால், அதைச் சகித்துக்கொண்டு யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறவர்கள் உங்கள் சபையிலும் இருக்கலாம். நீங்கள் வளர்த்துக்கொள்ள விரும்புகிற அருமையான குணங்கள் அவர்களிடம் இருக்கலாம். அவர்களுடைய நல்ல முன்மாதிரியை நீங்கள் யோசித்துப்பார்த்தால் உங்களுடைய கஷ்டங்களை எப்படிச் சகித்துக்கொள்ளலாம் என்று தெரிந்துகொள்வீர்கள். கடவுளுக்கு உண்மையாக இருக்கிற இந்த சகோதர சகோதரிகள் நம்மோடு இருப்பது நமக்குக் கிடைத்த பெரிய ஆசீர்வாதம்!—எபி. 13:7; யாக். 1:2, 3.

யெகோவாவுக்கு சந்தோஷமாக சேவை செய்யுங்கள்

15. தொடர்ந்து சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கு உதவுகிற என்ன ஆலோசனையை அப்போஸ்தலன் பவுல் கொடுத்தார்?

15 சபையில் சமாதானமும் ஒற்றுமையும் இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவருமே தங்களால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்ய வேண்டும். முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாச வித்தியாசமான திறமைகளும் பொறுப்புகளும் இருந்தன. (1 கொ. 12:4, 7-11) ஆனாலும், அவர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டிப் போடவோ சண்டை போடவோ இல்லை. அதற்குப் பதிலாக, ‘கிறிஸ்துவின் உடலைப் பலப்படுத்துவதற்கு’ தேவையானதைச் செய்யும்படி ஒவ்வொருவருக்கும் பவுல் ஆலோசனை கொடுத்தார். “ஒவ்வொரு உறுப்பும் அதனதன் வேலையைச் சரியாகச் செய்வதால் முழு உடலும் வளர்ச்சியடைந்து அன்பால் பலப்படுத்தப்படுகிறது” என்று எபேசியர்களுக்கு பவுல் எழுதினார். (எபே. 4:1-3, 11, 12, 16) அவர் சொன்னதுபோல் செய்தவர்கள் சபையில் சமாதானமும் ஒற்றுமையும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள். இன்றைக்கு நம்முடைய சபைகளிலும் அதைத்தான் பார்க்கிறோம்.

16. எதைச் செய்வதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்? (எபிரெயர் 6:10)

16 உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப்பார்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். அதற்குப் பதிலாக இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவர் காட்டிய நல்ல குணங்களைக் காட்டுவதற்கு முயற்சி செய்யுங்கள். பைபிள் காலங்களில் கடவுளுக்கு உண்மையாக இருந்தவர்களிடமும் இன்றைக்கு கடவுளுக்கு உண்மையாகச் சேவை செய்கிறவர்களிடமும் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்களால் முடிந்த மிகச் சிறந்ததை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது, ‘உங்களுடைய உழைப்பை . . . மறந்துவிடுவதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் கிடையாது’ என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். (எபிரெயர் 6:10-ஐ வாசியுங்கள்.) உங்களால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யும்போது அதைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுவார். அதனால், தொடர்ந்து சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்.

பாட்டு 65 முன்னே செல்வோமே!

^ பாரா. 5 யெகோவாவுக்கு மற்றவர்கள் செய்கிற சேவையை நாம் கவனித்தோம் என்றால், அவர்களிடமிருந்து நம்மால் நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஆனால், அவர்களோடு நம்மை ஒப்பிட்டுப்பார்க்கக் கூடாது. நாம் எப்போதும் சந்தோஷமாக இருப்பதற்கும், மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப்பார்த்து பெருமைப்படாமல் அல்லது சோர்ந்துபோகாமல் இருப்பதற்கும் இந்தக் கட்டுரை நமக்கு உதவும்.

^ பாரா. 49 படவிளக்கம்: ஒரு சகோதரர் இளம் வயதில் பெத்தேலில் சேவை செய்கிறார். கல்யாணமான பின்பு, மனைவியோடு பயனியர் சேவை செய்கிறார். பிள்ளைகள் பிறந்த பின்பு, நன்றாக ஊழியம் செய்வதற்கு அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார். இப்போது வயதான பின்பு கடிதம் மூலமாக சாட்சி கொடுக்கிறார். இப்படி தன்னால் முடிந்த மிகச் சிறந்ததைத் தொடர்ந்து செய்கிறார்.