Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 25

மன்னிக்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்

மன்னிக்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்

“யெகோவா உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.”—கொலோ. 3:13.

பாட்டு 130 மன்னியுங்கள்

இந்தக் கட்டுரையில்... *

1. மனம் திருந்தியவர்களுக்கு யெகோவா என்ன நம்பிக்கை கொடுக்கிறார்?

 யெகோவா நம்மைப் படைத்தவராக... நமக்கு சட்டம் கொடுப்பவராக... நம் நீதிபதியாக... இருந்தாலும் நம்முடைய அன்பான அப்பாவாகவும் இருக்கிறார். (சங். 100:3; ஏசா. 33:22) நாம் செய்த பாவத்தை நினைத்து உண்மையிலேயே மனம் திருந்தும்போது அவர் நம்மை மன்னிக்கிறார். அப்படி மன்னிப்பதற்கு அவருக்கு அதிகாரம் மட்டுமல்ல, ஆசையும் இருக்கிறது. (சங். 86:5) ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா இந்த நம்பிக்கையைக் கொடுக்கிறார்: “உங்களுடைய பாவங்கள் இரத்தம்போல் சிவப்பாக இருந்தாலும், பனிபோல் வெண்மையாகும்.” (ஏசா. 1:18) இது நமக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கிறது, இல்லையா?

2. மற்றவர்களோடு நல்ல பந்தத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

2 நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் மற்றவர்களுடைய மனதைக் காயப்படுத்துவதுபோல் எதையாவது சொல்லிவிடுகிறோம் அல்லது செய்துவிடுகிறோம். (யாக். 3:2) அதற்காக நாம் அவர்களோடு நல்ல பந்தத்தை அனுபவிக்கவே முடியாது என்று அர்த்தம் கிடையாது. நாம் மன்னிக்க கற்றுக்கொண்டோம் என்றால் எல்லாரோடும் நன்றாகப் பழக முடியும். (நீதி. 17:9; 19:11; மத். 18:21, 22) சின்னச் சின்ன விஷயங்களில் மற்றவர்கள் நம்முடைய மனதைக் காயப்படுத்தும்போது அவர்களை நாம் மன்னிக்க வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார். (கொலோ. 3:13) அப்படிச் செய்வதற்கு நல்ல காரணமும் இருக்கிறது. ஏனென்றால், யெகோவாவே நம்மை “தாராளமாக” மன்னிக்கிறார்.—ஏசா. 55:7.

3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 பாவ இயல்புள்ள நாம் எப்படி யெகோவாவைப் போலவே மற்றவர்களை மன்னிக்கலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். எப்படிப்பட்ட பாவங்களை மூப்பர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்? நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டுமென்று யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார்? மற்றவர்கள் செய்த பாவத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நம்முடைய சகோதர சகோதரிகளிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் பார்ப்போம்.

ஒரு கிறிஸ்தவர் பெரிய பாவத்தைச் செய்யும்போது

4. (அ) யெகோவாவை வணங்கும் ஒருவர் ஒரு பெரிய பாவம் செய்துவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்? (ஆ) பாவம் செய்தவரை சந்தித்துப் பேசும்போது என்ன செய்ய வேண்டிய பொறுப்பு மூப்பர்களுக்கு இருக்கிறது?

4 ஒருவர் பெரிய பாவத்தைச் செய்துவிட்டால் அதை நாம் மூப்பர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட சில பாவங்களைப் பற்றி 1 கொரிந்தியர் 6:9, 10-ல் சொல்லப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் கடவுளுடைய சட்டத்துக்கு நேர் எதிரான, மோசமான பாவங்கள். ஒரு கிறிஸ்தவர் இப்படிப்பட்ட பாவத்தைச் செய்துவிட்டார் என்றால், முதலில் ஜெபத்தில் யெகோவாவிடம் அதைப் பற்றிச் சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்குப் பின்பு, சபையிலுள்ள மூப்பர்களிடம் அதைப் பற்றிப் பேச வேண்டும். (சங். 32:5; யாக். 5:14) இந்த விஷயத்தில் மூப்பர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது? பாவங்களை முழுமையாக மன்னிக்கும் அதிகாரம் யெகோவாவுக்கு மட்டுமே இருக்கிறது என்பது உண்மைதான். இயேசு கொடுத்த மீட்புவிலையின் அடிப்படையில் அவர் அப்படி மன்னிக்கிறார். * ஆனாலும், பாவம் செய்தவர் சபையில் தொடர்ந்து இருக்க முடியுமா முடியாதா என்று வசனங்களின் அடிப்படையில் முடிவு செய்யும் பொறுப்பை யெகோவா மூப்பர்களுக்குக் கொடுத்திருக்கிறார். (1 கொ. 5:12) அதை முடிவு செய்யும்போது இந்தக் கேள்விகளையும் அவர்கள் யோசித்துப் பார்க்கிறார்கள்: அவர் வேண்டுமென்றே திட்டம் போட்டு அந்த பாவத்தைச் செய்தாரா? அந்தப் பாவத்தை மற்றவர்களிடமிருந்து மறைக்க முயற்சி செய்தாரா? அவர் அந்தப் பாவத்தைக் கொஞ்ச காலமாகவே செய்துகொண்டிருக்கிறாரா? எல்லாவற்றையும்விட முக்கியமாக, அவர் உண்மையிலேயே மனம் திருந்தியிருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி இருக்கிறதா? யெகோவா அவரை மன்னித்துவிட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறதா?—அப். 3:19.

5. மூப்பர்கள் தங்களுடைய பொறுப்பைச் செய்வதால் என்ன பலன்கள் கிடைக்கின்றன?

5 பாவம் செய்தவரை மூப்பர்கள் சந்தித்துப் பேசும்போது பரலோகத்தில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட அதே முடிவை எடுப்பதுதான் அவர்களுடைய குறிக்கோளாக இருக்கிறது. (மத். 18:18) இந்த ஏற்பாடு சபைக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்? மனம் திருந்தாத ஒருவர் சபையிலிருந்து நீக்கப்படுவார் என்பதால், அவரால் மற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராதபடி சபையைப் பாதுகாக்க முடியும். (1 கொ. 5:6, 7, 11-13; தீத். 3:10, 11) அதோடு, பாவம் செய்தவர் மனம் திருந்தி யெகோவாவின் மன்னிப்பை பெறுவதற்கும் இந்த ஏற்பாடு உதவியாக இருக்கும். (லூக். 5:32) மனம் திருந்தியவருக்காக மூப்பர்கள் ஜெபம் செய்து, அவர் மறுபடியும் யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்துக்குள் வர உதவும்படி கேட்பார்கள்.—யாக். 5:15.

6. ஒருவர் சபைநீக்கம் செய்யப்பட்டாலும் யெகோவா அவரை மன்னிப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா? விளக்குங்கள்.

6 பாவம் செய்தவரை மூப்பர்கள் சந்தித்துப் பேசும்போது அவர் மனம் திருந்தவில்லை என்பது ஒருவேளை தெரியவரலாம். அப்போது என்ன செய்வார்கள்? அவரை சபைநீக்கம் செய்துவிடுவார்கள். ஒருவேளை அவர் அரசாங்க சட்டத்தை மீறியிருந்தால், அதனால் வரும் விளைவுகளிலிருந்து அவரை மூப்பர்கள் பாதுகாக்க மாட்டார்கள். ஏனென்றால், சட்டத்தை யார் மீறினாலும் சரி, அவர் மனம் திருந்துகிறாரோ இல்லையோ, அவரை விசாரித்து தண்டிப்பதற்கான அதிகாரத்தை அரசாங்க அதிகாரிகளுக்கு யெகோவா கொடுத்திருக்கிறார். (ரோ. 13:4) ஆனால், சட்டத்தை மீறிய அந்த நபர் பிற்பாடு மனம் திருந்தி தன்னுடைய வழியை மாற்றிக்கொண்டால் யெகோவா அவரை மன்னிப்பதற்குத் தயாராக இருக்கிறார். (லூக். 15:17-24) அவர் எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்திருந்தாலும் சரி, யெகோவா அவரை மன்னிப்பார்.—2 நா. 33:9, 12, 13; 1 தீ. 1:15.

7. நமக்கு எதிராகப் பாவம் செய்தவரை எந்த விதத்தில் நாம் மன்னிக்கலாம்?

7 பாவம் செய்தவரை யெகோவா மன்னிப்பாரா இல்லையா என்பதை முடிவு செய்யும் பொறுப்பு நமக்கு இல்லை என்பது ஆறுதலான விஷயம். ஆனால், நாம் முடிவு செய்வதற்கு இன்னொரு விஷயம் இருக்கிறது. அது என்ன? சில சமயங்களில் நமக்கு எதிராக யாராவது ஒரு பாவம் செய்துவிடலாம். அது பெரிய பாவமாகவும் இருக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு, அவர் தன்னுடைய தவறை ஒத்துக்கொண்டு நம்மிடம் மன்னிப்பு கேட்கலாம் அல்லது மன்னிப்பு கேட்காமலும் போகலாம். அப்போதும்கூட நாம் அவரை மன்னிக்கலாம். எந்த விதத்தில்? அவர்மேல் எந்த வெறுப்பையோ கோபத்தையோ மனதில் வைத்துக்கொள்ளாமல் இருப்பதன் மூலம் மன்னிக்கலாம். ஆனால், அதற்குக் காலம் எடுக்கும், முயற்சியும் தேவைப்படும். அதுவும், நம் மனது ரொம்பக் காயப்பட்டிருந்தால் சொல்லவே வேண்டாம்! இதைப் பற்றி செப்டம்பர் 15, 1994 காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: ‘ஒரு பாவியை நீங்கள் மன்னிக்கிறீர்கள் என்றால், அவர் செய்த பாவத்தைக் கண்டும்காணாமலும் விட்டுவிடுகிறீர்கள் என்று அர்த்தம் இல்லை. ஒரு கிறிஸ்தவரைப் பொறுத்தவரை, மன்னிப்பது என்பது அந்த விஷயத்தை யெகோவாவின் கையில் நம்பிக்கையோடு விட்டுவிடுவதைக் குறிக்கிறது. இந்தப் பிரபஞ்சத்திலேயே நீதிநியாயம் தவறாத நீதிபதி அவர்தான். சரியான சமயத்தில் அவர் நீதி செய்வார்.’ மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்று யெகோவா ஏன் சொல்கிறார்? பிரச்சினையை ஏன் அவருடைய கையில் விட்டுவிடச் சொல்கிறார்?

யெகோவா ஏன் மன்னிக்கச் சொல்கிறார்?

8. மற்றவர்களை மன்னிக்கும்போது நாம் யெகோவாவின் இரக்கத்துக்கு நன்றி காட்டுகிறோம் என்று எப்படிச் சொல்லலாம்?

8 நாம் மன்னிக்கும்போது யெகோவா காட்டும் இரக்கத்துக்கு நன்றியோடு இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். இயேசு சொன்ன ஒரு கதையில், ஒரு ராஜா தன் அடிமை வாங்கியிருந்த பெரிய கடனை இரக்கத்தோடு ரத்து செய்தார். ஏனென்றால், அவனால் அதைக் கட்ட முடியவில்லை. ஆனால், அந்த அடிமை தன்னிடம் கொஞ்சம் பணத்தைக் கடன் வாங்கியிருந்த அடிமைக்கு இரக்கம் காட்டாமல் போய்விட்டான். (மத். 18:23-35) இந்தக் கதையிலிருந்து இயேசு சொல்லிக் கொடுத்த பாடம் என்ன? யெகோவா அந்த ராஜாவைப் போல நம்மேல் அளவில்லாமல் இரக்கம் காட்டுகிறார். அந்த இரக்கத்துக்கு நாம் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருந்தோம் என்றால், நாம் மற்றவர்களை மன்னிப்போம். (சங். 103:9) ரொம்ப வருஷங்களுக்கு முன்னால் வெளிவந்த காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “நாம் எத்தனை தடவை மற்றவர்களை மன்னித்திருந்தாலும் சரி, இயேசு மூலமாக கடவுள் நமக்குக் காட்டிய இரக்கத்துக்கும் மன்னிப்புக்கும் அது ஈடாகவே முடியாது.”

9. யெகோவா யாருக்கு இரக்கம் காட்டுகிறார்? (மத்தேயு 6:14, 15)

9 மன்னிக்கிறவர்கள் மன்னிக்கப்படுவார்கள். இரக்கம் காட்டுபவர்களுக்கு யெகோவா இரக்கம் காட்டுவார். (மத். 5:7; யாக். 2:13) எப்படி ஜெபம் செய்ய வேண்டுமென்று தன்னுடைய சீஷர்களுக்குச் சொல்லிக்கொடுத்தபோது இயேசு இதைப் பற்றித் தெளிவாகச் சொன்னார். (மத்தேயு 6:14, 15-ஐ வாசியுங்கள்.) யோபுவிடம் யெகோவா சொன்ன விஷயத்திலிருந்தும் இதே பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம். எலிப்பாஸ், பில்தாத், சோப்பார் என்ற மூன்று பேர் யோபுவின் மனதைக் குத்திக் கிழிப்பதுபோல் பேசினார்கள். அவர்களுக்காக ஜெபம் செய்யும்படி யோபுவிடம் யெகோவா சொன்னார். யோபு ஜெபம் செய்த பிறகு யெகோவா அவரை ஆசீர்வதித்தார்.—யோபு 42:8-10.

10. மனக்கசப்பு ஏன் ஆபத்தானது? (எபேசியர் 4:31, 32)

10 மனக்கசப்பு ஆபத்தானது. மனக்கசப்பு என்பது ஒரு பாறாங்கல் போல நம்முடைய மனதைப் பாரமாக்கும். அந்தப் பாரத்தை இறக்கி வைத்து நாம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றுதான் யெகோவா ஆசைப்படுகிறார். (எபேசியர் 4:31, 32-ஐ வாசியுங்கள்.) நாம் ‘கோபத்தையும் ஆத்திரத்தையும் விட்டுவிட’ வேண்டும் என்று அவர் சொல்கிறார். (சங். 37:8) இந்த ஆலோசனையைக் கேட்டு நடப்பது நமக்குத்தான் நல்லது. ஏனென்றால், ஒருவர்மேல் கோபத்தையும் வெறுப்பையும் நாம் மனதில் வைத்துக்கொண்டிருந்தால், அது நம்முடைய உடலையும் பாதிக்கும், மனதையும் பாதிக்கும். (நீதி. 14:30) மனக்கசப்பை மனதில் வைத்திருப்பது, விஷத்தை நாம் குடித்துவிட்டு இன்னொருவர் சாக வேண்டுமென்று நினைப்பதுபோல் இருக்கிறது. அது நமக்குத்தான் ஆபத்து, மற்றவர்களுக்கு அல்ல. அதனால், நாம் மற்றவர்களை மன்னிக்கும்போது நமக்குநாமே நல்லது செய்துகொள்கிறோம். (நீதி. 11:17) நமக்கு மன நிம்மதி கிடைக்கும். நம்மால் யெகோவாவின் சேவையைத் தொடர்ந்து சந்தோஷமாகச் செய்யவும் முடியும்.

11. பழிவாங்குவதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? (ரோமர் 12:19-21)

11 பழிவாங்குவது யெகோவாவின் பொறுப்பு. நமக்கு எதிராகப் பாவம் செய்தவர்களைப் பழிவாங்கும் அதிகாரத்தை யெகோவா நமக்குக் கொடுக்கவில்லை. (ரோமர் 12:19-21 வாசியுங்கள்.) கடவுளைப் போல் நம்மால் ஒரு விஷயத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாது. (எபி. 4:13) ஏனென்றால், நாம் பாவ இயல்புள்ள சாதாரண மனிதர்கள்தான். அதோடு, சில சமயங்களில் நாம் உணர்ச்சிகளுக்கு இடம்கொடுத்துவிடுகிறோம், கோபப்படுகிறோம். “கோபப்படுகிற மனிதனால் கடவுளுடைய நீதியை நிறைவேற்ற முடியாது” என்று யாக்கோபு மூலமாக யெகோவா சொல்லியிருக்கிறார். (யாக். 1:20) அதனால், விஷயங்களை யெகோவா கையில் விட்டுவிட வேண்டும். அவர் எப்போதுமே சரியானதைத்தான் செய்வார், நமக்கு நீதி கிடைக்கும்படி செய்வார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.

கோபத்தையும், வெறுப்பையும் மனதிலிருந்து தூக்கிப் போடுங்கள். விஷயங்களைக் கடவுளுடைய கையில் விட்டுவிடுங்கள். பாவத்தால் வந்த எல்லா விளைவுகளையும் அவர் சரிசெய்வார் (பாரா 12)

12. யெகோவா நீதி செய்வார் என்பதை நாம் நம்புகிறோம் என எப்படிக் காட்டலாம்?

12 மன்னிக்கும்போது யெகோவா நீதி செய்வார் என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். விஷயங்களை யெகோவாவின் கையில் விடும்போது, பாவத்தால் வந்த எல்லா விளைவுகளையும் அவர் கண்டிப்பாகச் சரிசெய்வார் என நம்புவதைக் காட்டுவோம். யெகோவா கொண்டுவரப்போகிற புதிய உலகில் வேதனையான நினைவுகள் “இனி யாருடைய மனதுக்கும் வராது. யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.” (ஏசா. 65:17) ஆனால், யாராவது ஒருவரால் நம்முடைய மனம் ரொம்ப ஆழமாகக் காயப்பட்டிருந்தால், கோபத்தையும் வெறுப்பையும் நம் மனதிலிருந்து உண்மையிலேயே தூக்கிப்போட முடியுமா? சிலர் அதை எப்படிச் செய்திருக்கிறார்கள் என்று இப்போது நாம் பார்க்கலாம்.

மன்னிப்பதால் வரும் பலன்கள்

13-14. டோனி-ஹோசே அனுபவத்திலிருந்து மன்னிப்பைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

13 நம்முடைய சகோதர சகோதரிகள் நிறையப் பேர் மனதில் ஆழமாகக் காயப்பட்டிருந்தாலும் தங்களைக் காயப்படுத்தியவர்களை மன்னித்திருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு என்ன பலன்கள் கிடைத்திருக்கின்றன?

14 பிலிப்பைன்சில் வாழ்கிற டோனி * என்பவரின் உதாரணத்தைப் பார்க்கலாம். அவர் யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு நிறைய வருஷங்களுக்கு முன்பு, அவருடைய ஒரு அண்ணனை ஹோசே என்பவர் கொலை செய்த விஷயம் அவருக்குத் தெரியவந்தது. அந்தச் சமயத்தில் டோனி பயங்கர கோபக்காரராகவும் முரடராகவும் இருந்தார். அதனால் பழிவாங்கத் துடித்தார். ஹோசேயை போலீஸ் கைது செய்து ஜெயிலில் அடைத்தார்கள். தண்டனைக் காலம் முடிந்த பின்பு ஹோசே விடுதலையானார். அவரை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து தீர்த்துக்கட்ட வேண்டுமென டோனி சபதம் எடுத்தார். ஒரு துப்பாக்கியையும் வாங்கினார். ஆனால், அதற்குப் பின்பு டோனி யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். “பைபிள படிக்க படிக்க நான் நிறைய மாற்றங்கள செய்யணும்னு புரிஞ்சுகிட்டேன். என் கோபத்தையும் மூட்டை கட்டி வெக்கணும்னு தெரிஞ்சுகிட்டேன்” என்று அவர் சொல்கிறார். கொஞ்சக் காலத்துக்குப் பிறகு டோனி ஞானஸ்நானம் எடுத்தார். அதற்குப் பிறகு சபையில் மூப்பராகவும் நியமிக்கப்பட்டார். ஹோசேயும் ஞானஸ்நானம் எடுத்து ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆன விஷயம் அவருக்குத் தெரியவந்தது. அப்போது அவருக்கு எவ்வளவு ஆச்சரியமாக இருந்திருக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் இரண்டு பேரும் சந்தித்துக்கொண்டபோது, ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்டார்கள். ஹோசேயை மன்னித்துவிட்டதாக டோனி அவரிடம் சொன்னார். இப்படி மன்னித்ததால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு சந்தோஷம் கிடைத்ததாக டோனி சொல்கிறார். டோனி மன்னிக்கத் தயாராக இருந்ததால் யெகோவா அவரை ஆசீர்வதித்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கோபத்தையும் வெறுப்பையும் நம்மால் விட்டொழிக்க முடியும் என்பதை பீட்டர்-சூ தம்பதியின் அனுபவத்திலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம் (பாராக்கள் 15-16)

15-16. பீட்டர்-சூ தம்பதியின் அனுபவத்திலிருந்து மன்னிப்பைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

15 பீட்டர்-சூ தம்பதி 1985-ஆம் வருஷம் ராஜ்ய மன்றத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் இருந்தார்கள். அப்போது திடீரென்று ஒரு பெரிய குண்டு வெடித்தது. யாரோ ஒருவன் ராஜ்ய மன்றத்துக்குள் குண்டு வைத்திருந்தான். சூவுக்குப் பெரிய காயங்கள் ஏற்பட்டன. அவருடைய கண் பார்வையும் கேட்கும் திறனும் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டது. முகரும் திறனையும் அவர் இழந்துவிட்டார். * ‘இப்படி ஒரு அக்கிரமத்த செய்யறதுக்கு அந்த ஆளுக்கு எப்படிதான் மனசு வந்துச்சோ’ என்று பீட்டரும் சூவும் அடிக்கடி யோசித்தார்கள். நிறைய வருஷங்களுக்கு பிறகு, குண்டு வைத்த அந்த ஆள் கைது செய்யப்பட்டான். அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது. பீட்டரும் சூவும் அந்த ஆளை மன்னித்தார்களா? அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்: “கோபத்தையும் வெறுப்பையும் மனசுல வெச்சிக்கிட்டே இருந்தா நம்ம உடம்பும் மனசும் பாதிக்கப்படும்னு யெகோவா சொல்றாரு. அதனால அதையெல்லாம் விட்டுட்டு நிம்மதியா வாழ்றதுக்கு உதவுங்கனு ஆரம்பத்தில இருந்தே நாங்க யெகோவாகிட்ட கேட்டுட்டு இருந்தோம்.”

16 குண்டு வைத்தவனை மன்னிப்பது அவர்களுக்கு எப்போதுமே சுலபமாக இருந்ததா? இல்லைதான். அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்: “சூவுக்கு ஏற்பட்ட காயங்கள்னால அப்பப்ப நாங்க கஷ்டப்படுறப்போ கோபம் பொத்துகிட்டு வரும். ஆனா நாங்க அத பத்தியே யோசிச்சிட்டிருக்க மாட்டோம். அதனால கோபம் சீக்கிரத்துல போயிடும். குண்டு வெச்சவன் ஒரு யெகோவாவின் சாட்சியா ஆனா கண்டிப்பா நாங்க அவன வரவேற்போம். பைபிள் நியமங்கள கடைப்பிடிக்கிறதுனால நமக்கு நிம்மதி கிடைக்குது, நினைச்சு பாக்க முடியாத விதங்கள்ல அது நமக்கு விடுதலை தருதுனு இந்த அனுபவத்திலிருந்து நாங்க தெரிஞ்சுகிட்டோம். அதோட, சீக்கிரத்துல இந்த எல்லா பாதிப்புகளயும் யெகோவா சரிசெஞ்சுருவாருங்கிற விஷயம் எங்களுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு.”

17. மீராவின் அனுபவத்திலிருந்து மன்னிப்பைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

17 மீரா என்பவருடைய அனுபவத்தை இப்போது பார்க்கலாம். அவர் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது, அவருக்கு கல்யாணம் ஆகி இரண்டு சின்ன பிள்ளைகள் இருந்தார்கள். அவருடைய கணவர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. கொஞ்சக் காலத்தில் அவர் வேறொரு பெண்ணோடு தொடர்பு வைத்துக்கொண்டார். குடும்பத்தையும் அம்போவென விட்டுவிட்டுப் போய்விட்டார். மீரா இப்படிச் சொல்கிறார்: “நாம ரொம்ப அன்பு வெச்சிருக்கற ஒருத்தர் நமக்கு துரோகம் செய்றப்போ அதிர்ச்சி, வேதனை, கோபம், குற்ற உணர்ச்சினு எல்லா உணர்ச்சிகளும் நம்மள வாட்டி எடுத்துடும். என்னோட கணவர் என்னையும் என்னோட ரெண்டு பிள்ளைகளையும் விட்டுட்டு போனப்போ எனக்கு அப்படித்தான் இருந்துது. என்னை நானே குற்றப்படுத்திகிட்டேன்.” மீராவின் கல்யாண வாழ்க்கை முடிந்துவிட்டாலும் துரோகத்தால் ஏற்பட்ட அந்த வலியும் வேதனையும் குறையவே இல்லை. அவர் தொடர்ந்து இப்படிச் சொல்கிறார்: “மாசக்கணக்கா அந்த உணர்ச்சிகளோட நான் போராடினேன். அந்த உணர்ச்சிகள் யெகோவாகிட்ட இருந்தும் மத்தவங்ககிட்ட இருந்தும் என்னை பிரிச்சு கொண்டுபோயிட்டு இருந்ததையும் நான் புரிஞ்சுகிட்டேன்.” இப்போது மீரா தன்னுடைய முன்னாள் கணவர்மேல் இருந்த கோபத்தை விட்டுவிட்டார். மீராவுக்கு அவர்மேல் எந்த வெறுப்பும் இல்லை. அவர் என்றாவது ஒருநாள் யெகோவாவிடம் வருவார் என்று நம்புகிறார். இப்போது மீராவால் கடந்தகாலத்தைப் பற்றி யோசிக்காமல் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க முடிகிறது. அவர் தனியாக இரண்டு பிள்ளைகளை வளர்த்தார். அவர்களும் அவர்களுடைய குடும்பமும் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறார்கள். இப்போது மீரா அவர்களோடு சேர்ந்து யெகோவாவை சந்தோஷமாக வணங்குகிறார்.

யெகோவாதான் தலைசிறந்த நீதிபதி

18. இந்தப் பிரபஞ்சத்துக்கே நீதிபதியாக இருக்கிற யெகோவா என்ன செய்வார் என்று நாம் உறுதியாக நம்பலாம்?

18 மற்றவர்களை நியாயந்தீர்க்கிற முக்கியமான வேலையை இந்தப் பிரபஞ்சத்துக்கே நீதிபதியாக இருக்கிற யெகோவாதான் செய்வார். அந்தப் பொறுப்பு நமக்கு இல்லாததை நினைத்து நாம் சந்தோஷப்படலாம். (ரோ. 14:10-12) சரி எது, தவறு எது என்று அவருக்கு மட்டும்தான் நன்றாகத் தெரியும். அதற்கு ஏற்ற விதமாகத்தான் அவர் நியாயந்தீர்ப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். (ஆதி. 18:25; 1 ரா. 8:32) அவர் ஒருநாளும் அநியாயமாக நடந்துகொள்ள மாட்டார்.

19. தலைசிறந்த நீதிபதியாக இருக்கிற யெகோவா என்ன செய்வார்?

19 பாவ இயல்பால் வந்த எல்லா மோசமான பாதிப்புகளையும் யெகோவா முழுமையாகச் சரிசெய்யப்போகிறார். அந்த நாளுக்காக நாம் ரொம்ப ஆசையாகக் காத்திருக்கிறோம். அந்தச் சமயத்தில் நம்முடைய உடலிலும் மனதிலும் ஏற்பட்டிருக்கிற எல்லா காயங்களும் நிரந்தரமாகக் குணமாகிவிடும். (சங். 72:12-14; வெளி. 21:3, 4) அதெல்லாம் நம்முடைய ஞாபகத்துக்கு வரவே வராது. அந்த அருமையான காலத்துக்காகக் காத்திருக்கிற இந்தச் சமயத்தில் நாம் யெகோவாவுக்கு ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். ஏனென்றால், அவரைப் போலவே மற்றவர்களை மன்னிப்பதற்கான மனதை நமக்கு அவர் கொடுத்திருக்கிறார்.

பாட்டு 18 மீட்புவிலைக்கு நன்றி!

^ மனம் திருந்தியவர்களை மன்னிக்க யெகோவா ஆசையாக இருக்கிறார். நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதால், நம்மை யாராவது காயப்படுத்தும்போது யெகோவாவைப் போலவே அவர்களை மன்னிக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். இந்தக் கட்டுரையில், எப்படிப்பட்ட பாவங்களை நாம் மன்னிக்கலாம் என்றும், எப்படிப்பட்ட பாவங்களை மூப்பர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் பார்ப்போம். அதோடு, நாம் ஒருவரையொருவர் மன்னிக்க வேண்டுமென யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார் என்றும், அப்படிச் செய்யும்போது என்ன பலன்கள் கிடைக்கும் என்றும் பார்ப்போம்.

^ காவற்கோபுரம், 1996, ஏப்ரல் 15 இதழில் வெளிவந்த “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ JW பிராட்காஸ்டிங்கில்® வெளிவந்த பீட்டர் ஷுல்ஸும் அவருடைய மனைவியும்: விபத்தின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர முடியும் என்ற வீடியோவைப் பாருங்கள்.