Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

யெகோவா காட்டிய வழியில் நடந்தேன்

யெகோவா காட்டிய வழியில் நடந்தேன்

டீனேஜில் இருந்தபோது, நானே ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தேன். என் வேலைதான் அது. எனக்கு அது ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால், யெகோவா எனக்கு வேறொரு வழியைக் காட்டினார். “நான் உனக்கு விவேகத்தை தந்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்” என்று அவரே என்னிடம் சொன்னதுபோல் இருந்தது. (சங். 32:8) அவர் காட்டிய வழியில் நடந்ததால் வாழ்க்கை முழுக்க என்னால் அவருக்குச் சேவை செய்ய முடிந்திருக்கிறது. ஆப்பிரிக்காவில் மட்டுமே 52 வருஷம் சேவை செய்தேன். யெகோவா காட்டிய வழியில் நடந்ததால் ஏராளமான ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கின்றன.

இருண்ட நாட்டிலிருந்து இதமான ஆப்பிரிக்காவுக்கு

நான் 1935-ல் டாலஸ்டனில் பிறந்தேன். இங்கிலாந்தில் இருந்த இருண்ட நாடு என்ற பகுதியில் அது இருந்தது. அங்கு நிறைய தொழிற்சாலைகள் இருந்ததால், அந்தப் பகுதி எப்போதும் ஒரே புகைமண்டலமாக இருக்கும். அதனால்தான் அதை இருண்ட நாடு என்று சொல்வார்கள். எனக்கு கிட்டத்தட்ட நான்கு வயது இருந்தபோது, என்னுடைய அப்பா-அம்மா யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள். எனக்கு 14, 15 வயது இருந்தபோது அதுதான் சத்தியம் என்பதைப் புரிந்துகொண்டேன். அதனால், 1952-ல் எனக்கு 16 வயது இருந்தபோது ஞானஸ்நானம் எடுத்தேன்.

கிட்டத்தட்ட அந்தச் சமயத்தில்தான், கைக் கருவிகள் மற்றும் வாகனங்களுக்குத் தேவையான பாகங்களைச் செய்யும் ஒரு கம்பெனியில் சேர்ந்து நான் பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். அந்தக் கம்பெனியில் செக்ரெட்டரியாக வேலை செய்வதற்கான பயிற்சிதான் அது. அந்த வேலை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

திடீரென்று ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை எனக்கு வந்தது. என்னுடைய வட்டாரக் கண்காணி என்னிடம், ‘வில்லன்ஹாலில் இருக்குற உங்களோட சபையில சபை புத்தகப் படிப்பு நடத்த முடியுமா?’ என்று கேட்டார். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஏனென்றால், அந்தச் சமயத்தில் நான் இரண்டு சபைகளுக்குப் போய்க் கொண்டிருந்தேன். வார நாட்களில் என்னுடைய கம்பெனிக்குப் பக்கத்திலிருந்த ப்ராம்ஸ்குரோவ் சபைக்கு போவேன். எங்களுடைய வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 32 கிலோமீட்டர் தூரத்தில் அது இருந்தது. சனி ஞாயிறுகளில், நான் என்னுடைய அப்பா-அம்மா வீட்டுக்கு போய்விடுவேன். அங்கிருந்து வில்லன்ஹால் சபைக்குப் போவேன்.

யெகோவாவின் அமைப்புக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நினைத்ததால், அந்த வட்டார கண்காணி கேட்டவுடனே சரி என்று சொன்னேன். ஆனால், எனக்கு ரொம்பப் பிடித்த அந்த வேலையை விட வேண்டியிருந்தது. யெகோவா காட்டும் வழியில் நடக்க வேண்டும் என்று முடிவெடுத்ததை நினைத்து நான் ஒருநாளும் வருத்தப்பட்டதில்லை. சொல்லப்போனால், நான் எடுத்த அந்த முடிவால் எனக்கு ரொம்ப சந்தோஷமான வாழ்க்கை கிடைத்திருக்கிறது.

ப்ராம்ஸ்குரோவ் சபைக்குப் போனபோது, யெகோவாவுடைய சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஒரு அழகான சகோதரியைப் பார்த்தேன். அவளுடைய பெயர் ஆன். நாங்கள் 1957-ல் கல்யாணம் செய்துகொண்டோம். நானும் ஆன்னும் ஒன்றாகச் சேர்ந்து ஒழுங்கான பயனியர்களாகவும் விசேஷப் பயனியர்களாகவும் சேவை செய்தோம், வட்டார சேவையும் செய்தோம், பிறகு பெத்தேலிலும் சேவை செய்தோம். வாழ்க்கை முழுக்க நான் சந்தோஷமாக யெகோவாவுக்கு சேவை செய்ய ஆன் ரொம்ப உதவியாக இருந்திருக்கிறாள்.

1966-ல் கிலியட் பள்ளியின் 42-வது வகுப்பில் நாங்கள் கலந்துகொண்டோம். அதற்குப் பிறகு எங்களுக்கு மலாவியில் சேவை செய்ய நியமிப்பு கிடைத்தது. அந்த இடத்தை ஆப்பிரிக்காவின் இதமான இதயம் என்று சொல்வார்கள். ஏனென்றால், அங்கிருக்கும் மக்கள் ரொம்ப நட்பாக, பாசமாக பழகுவார்கள். ஆனால், அந்த வரவேற்பெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான் இருக்கும் என்று அப்போது எங்களுக்குத் தெரியாது.

மலாவியில் சவால்கள் மத்தியில் சேவை

மலாவியில் மாவட்டக் கண்காணியாக சேவை செய்தபோது பயன்படுத்திய கேய்ஸர் ஜீப்

பிப்ரவரி 1, 1967-ல் நாங்கள் மலாவிக்கு வந்தோம். அங்கே பேசுகிற மொழியைக் கற்றுக்கொள்வதற்காக நாங்கள் ஒரு மாதத்துக்கு விழுந்து விழுந்து படித்தோம். அதற்குப் பிறகு, நான் மாவட்டக் கண்காணியாக சேவை செய்ய ஆரம்பித்தேன். கேய்ஸர் என்ற ஜீப்பில்தான் நாங்கள் எல்லா இடங்களுக்கும் போனோம். இந்த வண்டி எல்லா இடத்திலும் போகும்... ஆற்றில்கூட போகும் என்று நிறைய பேர் நினைத்தார்கள். ஆனால், தண்ணீர் ஆழமாக இல்லாத இடங்களில் மட்டும்தான் எங்களால் அதை ஓட்ட முடிந்தது. சிலசமயங்களில் நாங்கள் குடிசை வீடுகளில் தங்கினோம். மழைக்காலத்தில் தண்ணீர் ஒழுகாமல் இருப்பதற்காக பொதுவாக கூரைக்குக் கீழே தார்ப்பாய் போடுவார்கள். இப்படித்தான் எங்களுடைய மிஷனரி சேவை ஆரம்பித்தது! ஆனால், அது எங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

சீக்கிரத்திலேயே அரசாங்கத்திலிருந்து பிரச்சினை வரப்போகிறது என்பதை நான் தெரிந்துகொண்டேன். ஏப்ரல் மாதத்தில், மலாவியின் ஜனாதிபதி டாக்டர் ஹேய்ஸ்டிக்ஸ் பான்டா ரேடியோவில் பேசியதிலிருந்து அதை நான் தெரிந்துகொண்டேன். யெகோவாவின் சாட்சிகள் வரி கட்டுவதில்லை, அரசாங்கத்துக்கு பிரச்சினை உண்டாக்குகிறார்கள் என்றெல்லாம் அவர் சொன்னார். ஆனால், இது எல்லாமே வெறும் பொய் குற்றச்சாட்டுகள்தான். நாம் அரசியல் விஷயங்களில் தலையிடாமல் இருப்பதும் அரசியல் கட்சி அட்டைகளை வாங்காமல் இருப்பதும்தான் அவர்களுடைய பிரச்சினையே.

செப்டம்பர் மாதத்துக்குள் இன்னும் சில பிரச்சினைகள் உருவானது. நம்முடைய சகோதரர்கள் எல்லா இடத்திலும் பிரச்சினை பண்ணுகிறார்கள் என்று ஜனாதிபதி குற்றம்சாட்டி இருப்பதாக செய்தித்தாளில் படித்தோம். யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகள் எல்லாவற்றையும் தடை செய்வதற்கு சீக்கிரத்தில் நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் ஒரு அரசியல் மாநாட்டில் அறிவிப்பு செய்தார். அக்டோபர் 20, 1967-ல் நம்முடைய வேலை தடை செய்யப்பட்டது. சீக்கிரத்திலேயே, போலீஸ் அதிகாரிகளும் குடியேற்ற அதிகாரிகளும் கிளை அலுவலகத்துக்கு வந்தார்கள். அதை மூடுவதற்காகவும், மிஷனரிகள் எல்லாரையும் நாடு கடத்துவதற்காகவும் அவர்கள் வந்தார்கள்.

எங்களோடு மிஷனரிகளாக இருந்த ஜாக் மற்றும் லிண்டா யோகன்சனோடு 1967-ல் கைது செய்யப்பட்டு மலாவியிலிருந்து நாடுகடத்தப்பட்டபோது

மூன்று நாட்களுக்கு எங்களை ஜெயிலில் வைத்திருந்தார்கள். பிறகு, பிரிட்டனுடைய கட்டுப்பாட்டில் இருந்த மொரிஷியஸுக்கு எங்களை அனுப்பினார்கள். ஆனால், அங்கு மிஷனரிகளாக இருப்பதற்கு எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு, இப்போது ஜிம்பாப்வே என்று அழைக்கப்படுகிற ரோடீசியாவுக்கு எங்களை அனுப்பினார்கள். அங்கே போனபோது, அங்கிருந்த ஒரு குடியேற்ற அதிகாரி, அந்த நாட்டில் இருக்க எங்களுக்கு அனுமதி இல்லை என்று சொன்னார். அவர் எங்களிடம், “மலாவியிலிருந்து உங்கள துரத்திட்டாங்க... மொரிஷியஸ்லயும் உங்கள இருக்கவிடல... இப்போ உங்களுக்கு வசதியா இருக்கும்ன்னு இங்க வந்துடீங்களா?” என்று கடுகடுப்பாகக் கேட்டார். அதைக் கேட்டு ஆன் அழ ஆரம்பித்துவிட்டாள். எல்லாருமே எங்களை ஒதுக்குவது மாதிரி இருந்தது. இங்கிலாந்துக்கே திருப்பிப் போய்விடலாம் என்று எனக்குத் தோன்றியது. அந்தச் சமயத்தில், ஒரு ராத்திரி மட்டும் கிளை அலுவலகத்தில் தங்குவதற்குக் குடியேற்ற அதிகாரிகள் அனுமதி கொடுத்தார்கள். அடுத்த நாள் அவர்களுடைய தலைமை அலுவலகத்துக்கு நாங்கள் வர வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். எங்களுக்கு உடம்பில் தெம்பே இல்லாததுபோல் இருந்தாலும் எல்லாவற்றையும் யெகோவாவுடைய கையில் விட்டுவிட்டோம். அடுத்த நாள் மத்தியானம் நாங்கள் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்தது. ஜிம்பாப்வேயில் தற்காலிகமாகக் குடியிருக்க எங்களுக்கு அனுமதி கிடைத்தது. அன்றைக்கு எனக்கு எப்படி இருந்தது என்பதை என்னால் மறக்கவே முடியாது. யெகோவாதான் என் பாதைக்கு வழி காட்டிக்கொண்டிருந்தார் என்பதை நான் முழுமையாக நம்பினேன்.

ஜிம்பாப்வேயில் இருந்து மலாவிக்கு உதவினோம்

1968-ல் ஜிம்பாப்வே பெத்தேலில் நானும் ஆன்னும்

ஜிம்பாப்வே கிளை அலுவலகத்தில் ஊழிய இலாக்காவில் சேவை செய்யும் நியமிப்பு எனக்குக் கிடைத்தது. மலாவியிலும் மொசாம்பிக்கிலும் நடக்கிற ஊழிய வேலைகளைக் கவனிக்க வேண்டியிருந்தது. மலாவியில் இருந்த சகோதரர்கள் பயங்கரமாகத் துன்புறுத்தப்பட்டார்கள். மலாவியில் இருந்த வட்டாரக் கண்காணிகள் அனுப்பும் அறிக்கையை மொழிபெயர்க்கிற வேலையையும் நான் செய்தேன். ஒருநாள் ராத்திரி, ஒரு அறிக்கையை நான் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது, நம்முடைய சகோதர சகோதரிகள் எந்தளவுக்குக் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள் என்பதைப் பார்த்து பயங்கரமாக அழுதுவிட்டேன். * இருந்தாலும், எல்லா கஷ்டங்களையும் சகித்துக்கொண்டு அவர்கள் யெகோவாவுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பதைப் பார்த்தபோது, எனக்குப் புதுத்தெம்பு கிடைத்தது.—2 கொ. 6:4, 5.

மலாவியிலிருந்த சகோதரர்களுக்கும், துன்புறுத்தலில் இருந்து தப்பிப்பதற்காக மொசாம்பிக் நாட்டுக்குப் போன சகோதரர்களுக்கும் பைபிள் பிரசுரங்களைக் கொடுக்க எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தோம். மலாவியில் சிச்சேவா மொழிதான் அதிகமாகப் பேசுவார்கள். அதனால், சிச்சேவா மொழிபெயர்ப்புக் குழு ஜிம்பாப்வேயில் இருக்கிற ஒரு சகோதரருடைய பெரிய பண்ணை நிலத்துக்கு மாற்றப்பட்டது. அவர்களுக்காக வீடுகளையும் ஒரு அலுவலகத்தையும் அவர் கட்டிக்கொடுத்தார். பைபிள் பிரசுரங்களை மொழிபெயர்க்கிற முக்கியமான வேலையை அந்தக் குழுவினர் அங்கிருந்து தொடர்ந்து செய்தார்கள்.

ஜிம்பாப்வேயில், சிச்சேவா மொழியில் ஒவ்வொரு வருஷமும் நடந்த மாவட்ட மாநாட்டில், மலாவியில் இருந்த வட்டாரக் கண்காணிகள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்தோம். அவர்கள் இங்கு வரும்போது மாநாட்டுப் பேச்சுகளின் குறிப்புத்தாள்களை வாங்கிக்கொள்வார்கள். அதனால், மலாவிக்குத் திரும்பிப்போகும்போது, மாநாட்டில் கற்றுக்கொண்ட விஷயங்களை சகோதர சகோதரிகளிடம் முடிந்தளவுக்கு அவர்களால் சொல்ல முடிந்தது. ஒருசமயம் இப்படி அவர்கள் ஜிம்பாப்வேவுக்கு வந்திருந்தபோது, அந்த தைரியமான வட்டாரக் கண்காணிகளை உற்சாகப்படுத்த நாங்கள் ராஜ்ய ஊழியப் பள்ளியை நடத்தினோம்.

ஜிம்பாப்வேவில் சிச்சேவா, ஷோனா மொழிகளில் நடந்த மாநாட்டில் சிச்சேவா மொழியில் பேச்சு கொடுக்கும்போது

மலாவியிலிருந்து அகதிகளாக வந்து, மொசாம்பிக்கிலுள்ள முகாம்களில் தங்கியிருந்த சகோதரர்களைப் பார்ப்பதற்காக பிப்ரவரி 1975-ல் நான் அங்கே போனேன். அந்தச் சகோதரர்கள் எல்லாருமே யெகோவாவின் அமைப்பு சமீபத்தில் கொடுத்த ஆலோசனைகளைக்கூட கடைப்பிடித்துக் கொண்டிருந்தார்கள். புதிதாகச் செய்யப்பட்டிருந்த மூப்பர் குழு ஏற்பாட்டையும் அவர்கள் கடைப்பிடித்தார்கள். இந்தப் புதிய மூப்பர் குழுவில் இருந்த சகோதரர்கள், பொதுப்பேச்சு கொடுப்பது... தினவசனத்தைக் கலந்துபேசுவது... காவற்கோபுர படிப்பை நடத்துவது... மாநாடுகளை நடத்துவது... போன்ற நிறைய வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் அந்த முகாம்களையே மாநாட்டில் இருக்கிற வித்தியாசமான டிபார்ட்மென்ட்டுகள் போல ஒழுங்கமைத்திருந்தார்கள். எப்படியென்றால், சுத்தம் செய்ய, உணவு கொடுக்க, பாதுகாப்பு தர என ஒவ்வொரு முகாமுக்கும் ஒவ்வொரு வேலையைக் கொடுத்து ஒழுங்கமைத்திருந்தார்கள். யெகோவாவுடைய ஆசீர்வாதத்தோடு இந்த உண்மையுள்ள சகோதரர்கள் நிறைய விஷயங்களைச் சாதித்திருந்தார்கள். அதையெல்லாம் பார்த்து நான் வாயடைத்து போய்விட்டேன்.

கிட்டத்தட்ட 1976-க்கு பிறகு மலாவியில் நடக்கிற ஊழிய வேலைகளை ஜாம்பியா கிளை அலுவலகம் கவனிக்க ஆரம்பித்தது. இருந்தாலும், மலாவியில் இருக்கிற சகோதர சகோதரிகளைப் பற்றி அடிக்கடி யோசித்துப் பார்த்தேன். அவர்களுக்காக ஜெபம் செய்தேன். நான் மட்டுமல்ல, நிறைய பேர் ஜெபம் செய்தார்கள். நான் ஜிம்பாப்வே கிளை அலுவலகக் குழுவில் இருந்ததால், நிறைய சமயங்களில் உலகத் தலைமை அலுவலகப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. அந்தச் சமயங்களில் மலாவி, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜாம்பியாவைச் சேர்ந்த பொறுப்பில் இருந்த சகோதரர்களும் எங்களோடு இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு தடவை சந்தித்தபோதும், “மலாவியில் இருக்கிற சகோதரர்களுக்காக இன்னும் என்ன செய்யலாம்?” என்பதைப் பற்றி நாங்கள் பேசினோம்.

போகப் போக, மலாவியில் சகோதரர்களுக்கு இருந்த துன்புறுத்தல் குறைய ஆரம்பித்தது. அங்கிருந்து வேறு நாடுகளுக்குத் தப்பித்துப் போனவர்கள் எல்லாம் திரும்பவும் மலாவிக்கு வர ஆரம்பித்தார்கள். அதேசமயத்தில், துன்புறுத்தல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்ததால் அங்கே இருந்த சகோதரர்கள் ஓரளவுக்கு நிம்மதியாக வாழ ஆரம்பித்தார்கள். பக்கத்தில் இருந்த நாடுகளிலும் யெகோவாவின் சாட்சிகளுக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், அவர்களால் திரும்பவும் ஊழியம் செய்யவும், கூட்டங்களை நடத்தவும் முடிந்தது. 1991-ல் மொசாம்பிக்கிலும் இதுதான் நடந்தது. ஆனால், மலாவியில் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளுக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்று நாங்கள் யோசித்தோம்.

திரும்பவும் மலாவிக்கு போனோம்

மலாவியில் அரசியல் நிலவரம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. 1993-ல் யெகோவாவின் சாட்சிகள்மேல் போடப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட்டது. அப்போது ஒருநாள் ஒரு மிஷனரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “நீங்க திரும்பவும் மலாவிக்கு போகப் போறீங்களா?” என்று அவர் என்னிடம் கேட்டார். ஆனால், அந்தச் சமயத்தில் எனக்கு 59 வயதாகியிருந்தது. அதனால், “இல்ல! எனக்கு ரொம்ப வயசாயிடுச்சு” என்று சொன்னேன். ஆனால், அதே நாளில் ஆளும் குழுவிடமிருந்து எங்களுக்கு ஒரு ஃபேக்ஸ் வந்திருந்தது. ‘மலாவிக்கு திரும்பிப் போக முடியுமா?’ என்று அதில் கேட்டிருந்தார்கள்.

ஜிம்பாப்வேயில் நாங்கள் ரொம்ப சந்தோஷமாக யெகோவாவுக்கு சேவைசெய்து கொண்டிருந்தோம். எங்களுக்கு இங்கே நிறைய ஃபிரென்ட்ஸ் இருந்தார்கள். அதனால், ஜிம்பாப்வே நாட்டைவிட்டுப் போவதா வேண்டாமா என்று முடிவு எடுக்க ரொம்பக் கஷ்டமாக இருந்தது. அதோடு, உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால், ஜிம்பாப்வேயில்கூட இருந்துகொள்ளலாம் என்றும் ஆளும் குழு எங்களிடம் ரொம்ப அன்பாக சொல்லியிருந்தார்கள். நாங்கள் நினைத்திருந்தால், யெகோவா காட்டிய வழியை விட்டுவிட்டு ஜிம்பாப்வேயிலேயே இருந்திருக்கலாம். ஆனால், ஆபிரகாமையும் சாராளையும் பற்றி நாங்கள் யோசித்துப்பார்த்தோம். அவர்களுடைய வயதான காலத்தில் வசதியான வீட்டைவிட்டு யெகோவா காட்டிய வழியில் கீழ்ப்படிந்து போனார்கள்.—ஆதி. 12:1-5.

யெகோவாவின் அமைப்பு கொடுத்த ஆலோசனைப்படி செய்ய நாங்கள் முடிவெடுத்தோம். பிப்ரவரி 1, 1995-ல் நாங்கள் மலாவிக்குத் திரும்பப் போனோம். 28 வருஷங்களுக்கு முன்பு அதே நாளில்தான் நாங்கள் மலாவிக்கு முதன்முதலில் வந்திருந்தோம். அங்கே புதிதாக ஏற்படுத்தப்பட்ட கிளை அலுவலக குழுவில் நானும் இன்னும் இரண்டு சகோதரர்களும் சேவை செய்தோம். யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகள் எல்லாவற்றையும் திரும்பவும் ஆரம்பிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நாங்கள் செய்தோம்.

யெகோவா வளரச் செய்தார்

மலாவியில் நடந்த அபாரமான வளர்ச்சியைப் பார்த்தது எனக்குக் கிடைத்த பெரிய ஆசீர்வாதம். 1993-ல் கிட்டத்தட்ட 30,000-மாக இருந்த பிரஸ்தாபிகளுடைய எண்ணிக்கை 1998-ல் 42,000-க்கும் அதிகமாக ஆனது. * நிறைய வளர்ச்சி இருந்ததால், ஒரு புதிய கிளை அலுவலகத்தைக் கட்ட ஆளும் குழு அனுமதி கொடுத்தார்கள். அதற்காக லிலாங்குவேவில் 30 ஏக்கர் இடத்தை நாங்கள் வாங்கினோம். கட்டுமான வேலைகளை மேற்பார்வை செய்த குழுவில் நானும் நியமிக்கப்பட்டேன்.

மே 2001-ல் இந்தப் புதிய கிளை அலுவலகத்தின் அர்ப்பண நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் ஆளும் குழுவில் இருந்த சகோதரர் கை பியர்ஸ் பேச்சுக் கொடுத்தார். அதில் 2,000-க்கும் அதிகமான சாட்சிகள் கலந்துகொண்டார்கள். அவர்களில் நிறைய பேர் ஞானஸ்நானம் எடுத்து 40 வருஷங்களுக்கு அதிகமாக ஆகியிருந்தது. தடை உத்தரவு இருந்த சமயத்தில் இவர்கள் பல வருஷங்களாக பயங்கரமான கஷ்டங்களை உண்மையோடு சகித்திருந்தார்கள். அவர்களிடம் நிறைய காசு பணம் இல்லையென்றாலும், யெகோவாவோடு ஒரு நெருக்கமான பந்தத்தை வைத்திருந்தார்கள். இப்போது, இந்தப் புதிய கிளை அலுவலகத்தைச் சுற்றிப் பார்ப்பது அவர்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவர்கள் போன இடங்களிலெல்லாம் ராஜ்ய பாடல்களை ஆப்பிரிக்க மக்களுடைய பாணியில் பாடிக்கொண்டு போனார்கள். அந்த முழு நிகழ்ச்சியிலேயே இதுதான் என் மனதை ரொம்பத் தொட்டது. துன்புறுத்தலை உண்மையோடு சகிப்பவர்களை யெகோவா எந்தளவுக்கு ஆசீர்வதிக்கிறார் என்பதை நான் கண்கூடாகப் பார்த்தேன்.

கிளை அலுவலகத்தின் கட்டுமான வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு, ராஜ்ய மன்ற அர்ப்பணப் பேச்சுகளைக் கொடுப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவ்வளவாக வசதியில்லாத நாடுகளில் ராஜ்ய மன்றத்தை வேகமாக கட்டுவதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாட்டிலிருந்து மலாவியிலிருந்த நிறைய சபைகள் பயனடைந்தன. முன்பெல்லாம், சில சபைகளிலுள்ள சகோதர சகோதரிகள் யூக்கலிப்டஸ் மரங்கள் கீழ்தான் கூடிவருவார்கள். இன்னும் சிலர், புல்லால் செய்யப்பட்ட கூரைகளுக்குக் கீழே நீளமான மண் பென்ஞ்சுகளில் உட்கார்ந்துதான் கூட்டங்களில் கலந்துகொண்டார்கள். ஆனால் இப்போது நம்முடைய சகோதரர்கள், செங்கல் சூளையில் அவர்களாகவே சுட்ட செங்கலைப் பயன்படுத்தி, அழகான புதிய ராஜ்ய மன்றங்களைக் கட்டுகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு பென்ஞ்சுகளில் உட்காருவதுதான் ரொம்ப பிடித்திருக்கிறது. பென்ஞ்சில் இன்னும் ஒருவரைக்கூட உட்கார வைத்துக்கொள்ளலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

சகோதர சகோதரிகள் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆவதற்கு யெகோவா எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்பதைப் பார்ப்பதற்கான வாய்ப்பும்கூட எனக்குக் கிடைத்திருக்கிறது. முக்கியமாக, ஆப்பிரிக்காவிலுள்ள இளம் சகோதரர்கள் தாங்களாகவே முன்வந்து வாலண்டியர்களாக சேவை செய்தது என் மனதை தொட்டது. அவர்கள் யெகோவாவின் அமைப்பு கொடுத்த பயிற்சியைப் பயன்படுத்தி வேலைகளை நன்றாக செய்ய சீக்கிரமாகவே கற்றுக்கொண்டார்கள். அதனால், சபையிலும் பெத்தேலிலும் நிறைய பொறுப்புகளை எடுத்து செய்வதற்கு அவர்கள் தகுதிகளை வளர்த்துக்கொண்டார்கள். புதுப்புது வட்டாரக் கண்காணிகள் நிறைய பேர் நியமிக்கப்பட்டதால் சபைகள் எல்லாமே பலப்பட்டன. இந்த வட்டாரக் கண்காணிகளில் நிறைய பேர் கல்யாணம் ஆனவர்கள். கல்யாணம் ஆனவர்கள் கண்டிப்பாகக் குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குடும்பத்தாரும் மற்றவர்களும் எதிர்பார்த்தாலும், யெகோவாவுக்குச் சேவை செய்வதற்காகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.

நல்ல தீர்மானங்கள் எடுத்ததால் திருப்தி

பிரிட்டன் பெத்தேலில் நானும் ஆன்னும்

ஆப்பிரிக்காவில் 52 வருஷங்கள் சேவை செய்த பிறகு, எனக்குச் சில உடல்நல பிரச்சினைகள் வர ஆரம்பித்தன. எங்களைத் திரும்ப பிரிட்டனுக்கு அனுப்பச் சொல்லி கிளை அலுவலகக் குழுவில் இருந்தவர்கள் கேட்டுக்கொண்டதால் ஆளும் குழு ஒப்புதல் கொடுத்தார்கள். நாங்கள் ஆசை ஆசையாக செய்த ஒரு நியமிப்பை விட்டுப் போவதை நினைத்து எங்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. ஆனால், பிரிட்டன் பெத்தேல் குடும்பத்தில் இருக்கிறவர்கள் எங்களை ரொம்ப நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.

யெகோவா காட்டிய வழியில் போக வேண்டும் என்று நான் எடுத்த தீர்மானம்தான் என்னுடைய வாழ்க்கையிலேயே நான் எடுத்த மிகச் சிறந்த தீர்மானம். இளம் வயதில் என்னுடைய சொந்த புத்தியை நான் நம்பியிருந்திருந்தால் என்னுடைய வாழ்க்கை என்ன ஆகியிருக்கும் என்றே எனக்குத் தெரியாது. என்னுடைய ‘வழியில் இருக்கிற தடைகள் எல்லாம் நீக்குவதற்கு’ என்ன செய்ய வேண்டும் என்று யெகோவாவுக்குத்தான் நன்றாகத் தெரிந்திருந்தது. (நீதி. 3:5,6) இளம் வயதில் ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்தபோது, அங்கு நடக்கிற வேலைகளின் நுணுக்கங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள நான் ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால், யெகோவாவின் உலகளாவிய அமைப்பு அதைவிட ரொம்பவே திருப்தியான ஒரு வேலையை எனக்குக் கொடுத்திருக்கிறது. யெகோவாவுக்கு சேவைச் செய்தது எனக்கு முழுமையான சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது. இனியும் அதுதான் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்!

^ மலாவியில் இருக்கிற நம்முடைய சாட்சிகளின் வரலாற்றைப் பற்றி யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 1999, பக். 148—223-ல் இருக்கிறது.

^ மலாவியில் இப்போது 1,00,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள்