Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 37

சகோதர சகோதரிகளை நீங்கள் தாராளமாக நம்பலாம்

சகோதர சகோதரிகளை நீங்கள் தாராளமாக நம்பலாம்

‘அன்பு . . . எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும்.’—1 கொ. 13:4, 7

பாட்டு 124 என்றும் உண்மையுள்ளோராய்

இந்தக் கட்டுரையில்... a

1. யாரையுமே நம்ப முடிவதில்லை என்று நிறையப் பேர் சொல்வதைக் கேட்டு நாம் ஏன் ஆச்சரியப்படுவதில்லை?

 சாத்தானுடைய இந்த உலகத்தில் மக்களுக்கு யாரை நம்புவது என்றே தெரியவில்லை. வியாபாரிகள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் என எல்லாருமே மக்களை ஏமாற்றுகிறார்கள். அதுமட்டுமல்ல, நண்பர்களையும், அக்கம்பக்கத்தாரையும், குடும்பத்தாரையும்கூட நம்ப முடிவதில்லை என்று நிறையப் பேர் சொல்கிறார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால், “கடைசி நாட்களில், . . . மனிதர்கள் . . . உண்மையில்லாதவர்களாக, . . . மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்களாக, . . . நம்பிக்கைத் துரோகிகளாக” இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. வேறு வார்த்தைகளில், நம்பிக்கைக்குத் தகுதியே இல்லாத இந்த உலகத்தின் கடவுளான சாத்தானின் குணங்களைக் காட்டுவார்கள் என்று சொல்கிறது.—2 தீ. 3:1-4; 2 கொ. 4:4.

2. (அ) நாம் யாரையெல்லாம் முழுமையாக நம்பலாம்? (ஆ) சிலர் என்ன யோசிக்கலாம்?

2 நாம் யெகோவாவை வணங்குவதால், அவரை முழுமையாக நம்ப முடியும் என்று நமக்குத் தெரியும். (எரே. 17:7, 8) அவர் நம்மேல் உயிரையே வைத்திருக்கிறார் என்றும், தன் நண்பர்களை ‘கைவிடவே மாட்டார்’ என்றும் நாம் நம்புகிறோம். (சங். 9:10) அதுபோலவே, கிறிஸ்து இயேசு நமக்காக உயிரையே கொடுத்திருப்பதால் அவரும் நம் நம்பிக்கைக்குத் தகுதியானவர் என்று நமக்குத் தெரியும். (1 பே. 3:18) அதோடு, பைபிளில் இருக்கும் ஆலோசனைகள் எவ்வளவு நம்பகமானவை என்பதை நம் சொந்த அனுபவத்தில் பார்த்திருக்கிறோம். (2 தீ. 3:16, 17) அப்படியென்றால், யெகோவாவையும் இயேசுவையும் பைபிளையும் நாம் முழுமையாக நம்பலாம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளை எப்போதும் நம்ப முடியுமா என்று சிலர் யோசிக்கலாம். கண்டிப்பாக நம்ப முடியும்! ஏன் என்று பார்க்கலாம்.

நம் சகோதர சகோதரிகள் நமக்குத் தேவை

நம்மைப் போலவே யெகோவாவை நேசிக்கிற சகோதர சகோதரிகள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்களை நாம் தாராளமாக நம்பலாம் (பாரா 3)

3. என்ன அருமையான பாக்கியம் நமக்கு இருக்கிறது? (மாற்கு 10:29, 30)

3 யெகோவா தன் உலகளாவிய குடும்பத்தில் நம்மையும் சேர்த்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய பாக்கியம்! இதனால் நமக்கு எவ்வளவு நன்மைகள்! (மாற்கு 10:29, 30-ஐ வாசியுங்கள்.) நம்மைப் போலவே யெகோவாவை நேசிக்கும் சகோதர சகோதரிகள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ அவர்கள் முழுமுயற்சி எடுக்கிறார்கள். அவர்களுடைய மொழியும் கலாச்சாரமும் உடையும் வித்தியாசமாக இருந்தாலும், முதல் தடவை பார்க்கும்போதே அவர்களோடு நெருக்கமாக இருப்பதுபோல் உணர்கிறோம். முக்கியமாக, அவர்களோடு சேர்ந்து யெகோவாவைப் புகழவும் வணங்கவும் ஆசைப்படுகிறோம்.—சங். 133:1.

4. நம்முடைய சகோதர சகோதரிகள் நமக்கு ஏன் தேவை?

4 சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமையாக இருப்பது எப்போதையும்விட இப்போது ரொம்ப முக்கியம். நம் சுமைகளைச் சுமக்க அவர்கள் உதவி செய்கிறார்கள். (ரோ. 15:1; கலா. 6:2) யெகோவாவுக்குச் சுறுசுறுப்பாக சேவை செய்யவும் அவரோடு நெருக்கமாக இருக்கவும்கூட உதவுகிறார்கள். (1 தெ. 5:11; எபி. 10:23-25) நம் எதிரிகளான சாத்தானையும் அவனுடைய பொல்லாத உலகத்தையும் எதிர்த்து நிற்க சகோதர சகோதரிகளுடைய உதவி இல்லையென்றால் நமக்கு என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்! சீக்கிரத்தில், சாத்தானும் அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறவர்களும் நம்மைத் தாக்குவார்கள். அப்போது சகோதர சகோதரிகள்தான் நமக்குப் பக்கபலமாக இருப்பார்கள். அதற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருப்போம்!

5. சகோதர சகோதரிகளை நம்புவது சிலருக்கு ஏன் கஷ்டமாக இருக்கலாம்?

5 இருந்தாலும், நம்மில் சிலருக்கு சகோதர சகோதரிகளை நம்புவது கஷ்டமாக இருக்கலாம். ஏனென்றால், சகோதர சகோதரிகளில் யாராவது தாங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் போயிருக்கலாம் அல்லது அவர்களை நம்பி நாம் சொன்ன ஒரு விஷயத்தை வேறு யாரிடமாவது சொல்லியிருக்கலாம். இல்லையென்றால், நம் மனதை ரணமாக்குகிற விதமாக ஏதாவது சொல்லியிருக்கலாம் அல்லது செய்திருக்கலாம். இப்படியெல்லாம் நடக்கும்போது மற்றவர்களை நம்புவது உண்மையிலேயே கஷ்டமாக இருக்கும். அப்படியென்றால், சகோதர சகோதரிகள்மேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள எது நமக்கு உதவும்?

மற்றவர்கள்மேல் நம்பிக்கை வைக்க அன்பு நமக்கு உதவும்

6. மற்றவர்கள்மேல் நம்பிக்கை வைக்க அன்பு எப்படி உதவும்? (1 கொரிந்தியர் 13:4-8)

6 நம்பிக்கைக்கு அஸ்திவாரமே அன்புதான். அன்பைப் பற்றி 1 கொரிந்தியர் 13-ஆம் அதிகாரம் விவரிக்கிறது. மற்றவர்கள்மேல் நம்பிக்கை வைக்கவும், இழந்த நம்பிக்கையைத் திரும்ப வளர்த்துக்கொள்ளவும் அது நமக்கு உதவி செய்யும். (1 கொரிந்தியர் 13:4-8-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, 4-ஆம் வசனம் “அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது” என்று சொல்கிறது. நாம் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தால்கூட அவர் நம்மிடம் பொறுமையாக இருக்கிறார். அப்படியென்றால், சகோதர சகோதரிகள் நம்மை எரிச்சல்படுத்துகிற விதமாக அல்லது காயப்படுத்துகிற விதமாக ஏதாவது செய்தாலோ சொன்னாலோ நாமும் பொறுமையாக இருக்க வேண்டும். “[அன்பு] எரிச்சல் அடையாது, தீங்கை கணக்கு வைக்காது” என்று 5-ஆம் வசனம் சொல்கிறது. அப்படியென்றால், சகோதர சகோதரிகள் செய்கிற ‘தீங்கை நாம் கணக்கு வைக்க’ மாட்டோம். அதாவது, ‘அன்னைக்கு அவரு அப்படி செஞ்சாரு, இப்படி செஞ்சாரு’ என்றெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு இருக்க மாட்டோம். “சட்டென்று கோபப்படாதே” என்று பிரசங்கி 7:9 சொல்கிறது. “சூரியன் மறைவதற்கு முன்னால் உங்கள் கோபம் தணிய வேண்டும்” என்று எபேசியர் 4:26 சொல்கிறது. இந்த வார்த்தைகளின்படி நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், இல்லையா?

7. மற்றவர்களை நம்புவதற்கு மத்தேயு 7:1-5-ல் உள்ள நியமங்கள் நமக்கு எப்படி உதவும்?

7 சகோதர சகோதரிகள்மேல் நம்பிக்கை வைக்க வேறு எது நமக்கு உதவும்? அவர்களை யெகோவா பார்க்கிற மாதிரி நாம் பார்க்க வேண்டும். யெகோவா அவர்களை நேசிக்கிறார். அவர்கள் செய்யும் தவறுகளை அவர் கணக்கு வைத்துக்கொள்வது கிடையாது. நாமும் அவரைப் போல் நடந்துகொள்ள வேண்டும். (சங். 130:3) சகோதர சகோதரிகளிடம் இருக்கும் குறைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, அவர்களுடைய நல்ல குணங்களையும் நல்ல மனதையும் நாம் பார்க்க வேண்டும். (மத்தேயு 7:1-5-ஐ வாசியுங்கள்.) அன்பு “எல்லாவற்றையும் நம்பும்.” அதனால், சகோதர சகோதரிகள் நமக்கு நல்லது செய்யத்தான் ஆசைப்படுகிறார்கள், நம்மைக் காயப்படுத்திப் பார்ப்பது அவர்களுடைய நோக்கமல்ல என்று நாம் நம்ப வேண்டும். (1 கொ. 13:7) அதற்காக, கண்மூடித்தனமாக நாம் அவர்களை நம்ப வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பதில்லை. நம்முடைய நம்பிக்கையைச் சம்பாதிக்கும் விதத்தில் அவர்கள் நடந்துகொள்வதால்தான் அவர்களை நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். b

8. சகோதர சகோதரிகள்மேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?

8 ஒருவர்மேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள கொஞ்சம் காலம் எடுக்கலாம். அப்படியென்றால், சகோதர சகோதரிகள்மேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்? அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். கூட்டங்களுக்கு வரும்போது அவர்களிடம் பேசுங்கள். அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்யுங்கள். அவர்களிடம் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள். அவர்கள் நம் நம்பிக்கைக்குத் தகுதியானவர்கள் என காட்டுவதற்கு வாய்ப்பு கொடுங்கள். ஒருவரைப் புதிதாகத் தெரிந்துகொள்ள ஆரம்பிக்கும்போது, உங்களுடைய சொந்த விஷயங்கள் எல்லாவற்றையும் நீங்கள் அவரிடம் சொல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரோடு நெருக்கமான பிறகு, மனம்திறந்து பேசுவது உங்களுக்கு சுலபமாக இருக்கும். (லூ 16:10) சகோதர சகோதரிகளில் யாராவது உங்கள் நம்பிக்கையை உடைக்கிற மாதிரி நடந்துகொண்டால், நீங்கள் என்ன செய்யலாம்? இனிமேல் அவரோடு பழகவே கூடாது என்ற முடிவுக்கு உடனே வந்துவிடாதீர்கள். கொஞ்சம் காத்திருந்து பாருங்கள். அதோடு, இனிமேல் யாரையுமே நம்பக் கூடாது என்ற முடிவுக்கும் வந்துவிடாதீர்கள். யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் பலர் இந்த விஷயத்தில் நமக்கு நல்ல உதாரணமாக இருக்கிறார்கள். அவர்களுடைய மனதை சிலர் நோகடித்தபோதும், அவர்கள் எப்படித் தொடர்ந்து மற்றவர்களை நம்பினார்கள் என்று இப்போது பார்க்கலாம்.

மற்றவர்கள்மேல் தொடர்ந்து நம்பிக்கை வைத்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

மனதைக் கஷ்டப்படுத்தும் விதமாக ஏலி நடந்துகொண்டாலும் அன்னாள் தொடர்ந்து யெகோவாவின் ஏற்பாட்டின்மேல் நம்பிக்கை வைத்தாள் (பாரா 9)

9. (அ) முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள், தவறான விஷயங்களைச் செய்தாலும் யெகோவாவின் ஏற்பாட்டை நம்பியதை அன்னாள் எப்படிக் காட்டினாள்? (ஆ) யெகோவாவின் ஏற்பாட்டை நம்பும் விஷயத்தில் அன்னாளிடம் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? (படத்தைப் பாருங்கள்.)

9 பொறுப்பில் இருக்கும் ஒரு சகோதரர், உங்கள் நம்பிக்கையை உடைக்கிற மாதிரி ஏதாவது செய்திருக்கிறாரா? அப்படியென்றால், அன்னாளின் உதாரணத்தை யோசித்துப் பார்ப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும். அவள் வாழ்ந்த சமயத்தில் ஏலிதான் தலைமைக் குருவாக இருந்தார், வணக்க விஷயத்தில் இஸ்ரவேலர்களை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பு அவருக்குத்தான் இருந்தது. ஆனால், அவருடைய குடும்பத்தில் இருந்தவர்களே மக்களுக்கு முன்மாதிரியாக இல்லை. குருமார்களாகச் சேவை செய்த அவருடைய மகன்கள் ஒழுக்கங்கெட்ட விஷயங்களைச் செய்துவந்தார்கள், ரொம்பக் கேவலமாக நடந்துகொண்டார்கள். அவர்களைத் திருத்த ஏலி பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஆனாலும் யெகோவா, ஏலியைப் பொறுப்பிலிருந்து உடனே நீக்கிவிடவில்லை. அன்னாளும், ‘ஏலி தலைமை குருவா இருக்குற வரைக்கும் நான் வழிபாட்டு கூடாரத்துக்கு போக மாட்டேன்’ என்று சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, கடவுளுடைய ஏற்பாட்டை அவள் மதித்தாள். தாங்க முடியாத வேதனையில் அன்னாள் ஜெபம் செய்துகொண்டிருந்ததைப் பார்த்து, குடிபோதையில் அவள் உளறுவதாக ஏலி நினைத்தார். என்ன, ஏது என்று விசாரிக்காமலேயே அவள் மனதைக் கஷ்டப்படுத்தும் விதத்தில் பேசினார். (1 சா. 1:12-16) இருந்தாலும் அன்னாள், தனக்கு ஒரு மகன் பிறந்தால் வழிபாட்டுக் கூடாரத்தில் சேவை செய்ய அவனை அர்ப்பணிப்பதாக வாக்குக் கொடுத்தாள். ஏலியின் தலைமையின் கீழ்தான் அவன் இருக்க வேண்டும் என்று தெரிந்தும் அப்படிச் சொன்னாள். (1 சா. 1:11) ஏலியின் மகன்கள் செய்த தவறுகளுக்காக சரியான நேரத்தில் யெகோவா அவர்களைத் தண்டித்தார். (1 சா. 4:17) அதேசமயத்தில், அன்னாளுக்கு சாமுவேல் என்ற மகனைக் கொடுத்து ஆசீர்வதித்தார்.—1 சா. 1:17-20.

10. சிலர் நம்பிக்கை துரோகம் செய்ததால் தாவீது ராஜா யாரையுமே நம்பாமல் போய்விட்டாரா? விளக்குங்கள்.

10 நெருக்கமான ஒரு நண்பர் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறாரா? அப்படியென்றால், தாவீது ராஜாவின் அனுபவத்தை யோசித்துப் பாருங்கள். அவருக்கு அகித்தோப்பேல் என்ற ஒரு நண்பர் இருந்தார். தாவீதின் மகன் அப்சலோம், ராஜ பதவியை தாவீதிடமிருந்து பறிக்க நினைத்தபோது அகித்தோப்பேல் அவனோடு சேர்ந்துகொண்டு கலகம் செய்தார். சொந்த மகனும் நண்பரும் சேர்ந்து துரோகம் செய்தது தாவீதுக்கு எவ்வளவு பெரிய இடியாக இருந்திருக்கும்! ஆனாலும், இனி யாரையுமே நம்பப் போவதில்லை என்ற முடிவுக்கு தாவீது வரவில்லை. அந்தக் கலகத்துக்குத் துணைபோகாமல் இருந்த அவருடைய இன்னொரு உண்மையான நண்பர் ஊசாய்மேல் அவர் தொடர்ந்து நம்பிக்கை வைத்தார். அதற்கு நல்ல காரணங்கள் இருந்தன. ஊசாய் தாவீதுக்காகத் தன்னுடைய உயிரையே பணயம் வைக்கும் அளவுக்கு ஒரு நல்ல நண்பராக இருந்தார்.—2 சா. 17:1-16.

11. நாபாலின் வேலைக்காரர்களில் ஒருவன் அபிகாயில்மேல் நம்பிக்கை வைத்திருந்ததை எப்படிக் காட்டினான்?

11 நாபாலின் வேலைக்காரர்களில் ஒருவனுடைய உதாரணத்தை இப்போது பார்க்கலாம். தாவீதும் அவருடைய ஆட்களும், இஸ்ரவேலனாகிய நாபாலின் வேலைக்காரர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தார்கள். ஒருசமயம், தாவீதுக்கும் அவருடைய ஆட்களுக்கும் உணவு தேவைப்பட்டது. அதனால், முடிந்த உதவியைச் செய்யச் சொல்லி நாபாலிடம் தாவீது கேட்டு அனுப்பினார். நாபால் முடியாது என்று சொல்லிவிட்டான். அதனால், தாவீது பயங்கர கோபத்தோடு நாபாலின் வீட்டில் இருக்கிற எல்லா ஆண்களையும் கொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இந்த விஷயத்தை நாபாலின் மனைவி அபிகாயிலிடம் ஒரு வேலைக்காரன் சொன்னான். அவனும் அந்த வீட்டில் இருந்ததால், அவனுடைய உயிரும் ஆபத்தில் இருந்தது. ஆனால், அங்கிருந்து ஓடிப் போவதற்குப் பதிலாக அபிகாயிலால் தன் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றும், இந்தச் சூழ்நிலைமையைச் சரிசெய்ய முடியும் என்றும் அவன் நம்பினான். எதை வைத்து அவன் அப்படி நம்பினான்? அபிகாயில் ஒரு புத்திசாலிப் பெண் என்பது அங்கிருந்த எல்லாருக்குமே தெரிந்திருந்தது. அவனுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. கொலை செய்ய வேண்டும் என்று கிளம்பிய தாவீதிடம் அபிகாயில் தைரியமாகப் பேசி அவரைத் தடுத்து நிறுத்தினாள். (1 சா. 25:2-35) தாவீது நியாயமாக நடந்துகொள்வார் என்று அபிகாயில் நம்பினாள்.

12. சீஷர்கள் தப்பு செய்தபோதும் அவர்கள்மேல் நம்பிக்கை வைத்திருந்ததை இயேசு எப்படிக் காட்டினார்?

12 தன்னுடைய சீஷர்கள் தப்பு செய்தபோதும் இயேசு அவர்கள்மேல் நம்பிக்கை வைத்தார். (யோவா. 15:15, 16) யாக்கோபும் யோவானும் கடவுளுடைய அரசாங்கத்தில் தங்களுக்கு விசேஷமான ஒரு இடம் வேண்டும் என்று கேட்டார்கள். அதற்காக அவர்கள் தப்பான உள்நோக்கத்தோடு யெகோவாவுக்கு சேவை செய்கிறார்கள் என்று இயேசு முடிவு செய்துவிடவில்லை. அப்போஸ்தலர்களாக இருக்கும் பொறுப்பிலிருந்து அவர்களை நீக்கிவிடவும் இல்லை. (மாற். 10:35-40) இயேசு கைது செய்யப்பட்டபோது, அவருடைய சீஷர்கள் எல்லாரும் அவரை அம்போவென்று விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். (மத். 26:56) இருந்தாலும், அவர்கள்மேல் வைத்திருந்த நம்பிக்கையை இயேசு இழந்துவிடவில்லை. அவர்களுடைய குறைகள் எல்லாமே அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும், அவர்கள்மேல் “முடிவுவரை அன்பு காட்டினார்.” (யோவா. 13:1) உயிர்த்தெழுந்த பிறகு, இயேசு தனக்கு உண்மையாக இருந்த 11 அப்போஸ்தலர்களை நம்பி முக்கியமான பொறுப்புகளைக்கூட ஒப்படைத்தார். அதாவது, சீஷராக்கும் வேலையை முன்நின்று வழிநடத்துகிற பொறுப்பையும், தன்னுடைய அருமையான ஆடுகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பையும் கொடுத்தார். (மத். 28:19, 20; யோவா. 21:15-17) அவர்கள்மேல் அவர் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. அவர்கள் எல்லாருமே, பூமியில் வாழ்ந்த கடைசி நிமிஷம் வரைக்கும் ரொம்ப உண்மையாக சேவை செய்தார்கள். குறையுள்ள மனிதர்கள்மேல் நம்பிக்கை வைக்கும் விஷயத்தில் அன்னாள், தாவீது, நாபாலின் வேலைக்காரன், அபிகாயில், இயேசு என எல்லாருமே நமக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்கள்.

இழந்த நம்பிக்கையைத் திரும்பவும் வளர்த்துக்கொள்ளுங்கள்

13. மற்றவர்களை நம்புவது எப்போது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம்?

13 ஒரு சகோதரரை நம்பி நீங்கள் சொன்ன ஒரு விஷயத்தை அவர் மற்றவர்களிடம் சொல்லிவிட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்கள் மனம் அப்படியே சுக்குநூறாக உடைந்துவிடும், இல்லையா? ஒரு சகோதரிக்கு இதுதான் நடந்தது. தனிப்பட்ட ஒரு விஷயத்தை அவர் ஒரு மூப்பரிடம் சொன்னார். அதை யாரிடமும் அவர் சொல்ல மாட்டார் என்று நம்பினார். ஆனால், அதே விஷயத்துக்காக அவரை ஆறுதல்படுத்த அடுத்த நாள் அந்த மூப்பரின் மனைவி அவருக்கு ஃபோன் பண்ணினார். அதன் பிறகு, அந்த மூப்பர்மேல் இருந்த நம்பிக்கை அந்தச் சகோதரிக்கு சுத்தமாகப் போய்விட்டது. ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், அந்தச் சகோதரி இன்னொரு மூப்பரிடம் அதைப் பற்றிப் பேசி உதவி கேட்டார். மூப்பர்கள்மேல் திரும்பவும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள அந்த மூப்பர் அவருக்கு உதவி செய்தார்.

14. இழந்த நம்பிக்கையைத் திரும்பவும் வளர்த்துக்கொள்ள ஒரு சகோதரருக்கு எது உதவியது?

14 ஒரு சகோதரருக்கு ரொம்பக் காலமாகவே இரண்டு மூப்பர்கள்மேல் மனவருத்தம் இருந்தது. அந்த மூப்பர்களை நம்பவே கூடாது என்று அவர் முடிவு செய்திருந்தார். ஆனால், அவர் ரொம்ப மரியாதை வைத்திருந்த ஒரு சகோதரர் சொன்ன விஷயத்தைப் பற்றி யோசித்துப் பார்க்க ஆரம்பித்தார். ‘சாத்தான்தான் நம்ம எதிரி, நம்ம சகோதரர்கள் இல்ல’ என்று அந்த சகோதரர் சொல்லியிருந்தார். அந்த எளிமையான, அதேசமயத்தில் வலிமையான வார்த்தைகளை அவர் நிதானமாக யோசித்துப் பார்த்தார். தான் என்ன செய்ய வேண்டும் என்றும் யோசித்தார். பிறகு, உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்துவிட்டு, திரும்பவும் அந்த மூப்பர்களோடு சமாதானம் ஆனார்.

15. இழந்த நம்பிக்கையைத் திரும்பவும் வளர்த்துக்கொள்ள ஏன் கொஞ்சம் காலம் எடுக்கலாம்? ஒரு உதாரணம் சொல்லுங்கள்.

15 சபையில் ஏதாவது ஒரு பொறுப்பை நீங்கள் இழந்திருக்கிறீர்களா? அது உண்மையிலேயே வேதனையான ஒரு அனுபவம்தான். க்ரெட் என்ற சகோதரிக்கு அதுதான் நடந்தது. அவரும் அவருடைய அம்மாவும் நாசி ஜெர்மனியில் வாழ்ந்தார்கள். 1930-களில் நம்முடைய வேலை தடை செய்யப்பட்டிருந்த சமயத்தில்கூட அவர்கள் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்தார்கள். காவற்கோபுர பத்திரிகைகளை சகோதர சகோதரிகளுக்கு டைப் செய்து கொடுக்கும் ஒரு அருமையான பொறுப்பை க்ரெட் செய்துகொண்டிருந்தார். ஆனால், அவருடைய அப்பாவுக்கு யெகோவாவின் சாட்சிகளைப் பிடிக்கவில்லை என்று சகோதரர்கள் கேள்விப்பட்டபோது, அவர் சபையில் இருப்பவர்களைக் காட்டிக்கொடுத்துவிடுவாரோ என்று நினைத்து பயந்தார்கள். அதனால், க்ரெட்டை அந்தப் பொறுப்பிலிருந்து எடுத்துவிட்டார்கள். இது போதாதென்று, இரண்டாவது உலகப் போர் முடியும்வரை க்ரெட்டுக்கும் அவருடைய அம்மாவுக்கும் படிப்பதற்கு எந்தப் பத்திரிகைகளையும் சகோதரர்கள் கொடுக்கவில்லை. அவர்களை வெளியில் எங்கேயாவது பார்த்தாலும் பேசக்கூட இல்லை. க்ரெட்டின் மனதில் ஏற்பட்ட அந்தக் காயம் ரொம்ப நாளாக ஆறவே இல்லை. அதனால், அந்தச் சகோதரர்களை மன்னிக்கவும், திரும்ப அவர்களை நம்பவும் ரொம்ப காலம் எடுத்ததாக க்ரெட் சொல்கிறார். ஆனால், நாட்கள் போகப் போக யெகோவா அவர்களை மன்னித்திருப்பார் என்று க்ரெட் புரிந்துகொண்டார். அதனால், அவரும் அந்தச் சகோதரர்களை மன்னித்துவிட்டார். c

“சாத்தான்தான் நம்ம எதிரி, நம்ம சகோதரர்கள் இல்ல”

16. சகோதர சகோதரிகள்மேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள நாம் ஏன் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்?

16 இப்படிப்பட்ட கசப்பான அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால், திரும்பவும் மற்றவர்கள்மேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள கடினமாக முயற்சி செய்யுங்கள். அதற்குக் கொஞ்சக் காலம் எடுக்கலாம். ஆனால், உங்களுடைய முயற்சி கண்டிப்பாக வீண்போகாது. இதைப் புரிந்துகொள்ள இந்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். ஏதாவது உணவு உங்களுக்கு ஒத்துக்கொள்ளாமல் போனால், அதற்கு பிறகு சாப்பிடும் விஷயத்தில் நீங்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பீர்கள். அதற்காக எதையுமே சாப்பிடாமல் இருந்துவிட மாட்டீர்கள். அதுபோலவே, யாராவது ஒருவர் நம் நம்பிக்கையை உடைத்துவிட்டால், சகோதர சகோதரிகள் யாரையுமே நம்பக் கூடாது என்ற முடிவுக்கு நாம் வரக் கூடாது. ஏனென்றால், நாம் எல்லாருமே தப்பு செய்யும் இயல்புள்ளவர்கள்தான். மற்றவர்கள்மேல் திரும்பவும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்தால் சந்தோஷமாக இருப்போம். சபையில் இப்படிப்பட்ட சந்தோஷத்தைக் கட்டிக்காக்க நம்முடைய பங்கில் என்ன செய்யலாம் என்றும் எப்போதுமே யோசிப்போம்.

17. மற்றவர்கள்மேல் நம்பிக்கை வைப்பது ஏன் ரொம்ப முக்கியம், அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?

17 சாத்தானுடைய உலகத்தில், மக்கள் யாரை நம்புவது என்றே தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஆனால், நம் சகோதர சகோதரிகளை நாம் தாராளமாக நம்பலாம். ஏனென்றால், அவர்கள் நம்மை ரொம்ப நேசிக்கிறார்கள், நாமும் அவர்களை நேசிக்கிறோம். சகோதர சகோதரிகளை நம்புவதால்தான் நாம் இப்போது சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறோம், எதிர்காலத்தில் பிரச்சினைகள் வரும்போது பாதுகாப்பாகவும் இருப்போம். ஒருவர் உங்கள் நம்பிக்கையை உடைத்துவிட்டால் நீங்கள் என்ன செய்யலாம்? உங்கள் பிரச்சினையை யெகோவா பார்க்கிற விதத்தில் பார்க்க முயற்சி செய்யுங்கள். பைபிள் நியமங்களின்படி நடங்கள். சகோதரி சகோதரிகள்மேல் இன்னும் அதிகமாக அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள். அதோடு, பைபிள் உதாரணங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை மறந்து, மற்றவர்கள்மேல் திரும்பவும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள நிச்சயம் நம்மால் முடியும்! அப்போது, “கூடப்பிறந்தவனைவிட பாசமாக ஒட்டிக்கொள்ளும்” ஏராளமான நண்பர்கள் நமக்குக் கிடைப்பார்கள். (நீதி. 18:24) நாம் மற்றவர்கள்மேல் நம்பிக்கை வைத்தால் மட்டும் போதாது. அவர்களும் நம்மேல் நம்பிக்கை வைக்கும் விதத்தில் நாம் நடந்துகொள்ள வேண்டும். எப்படி என்று அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

பாட்டு 99 மாபெரும் ஓர் குடும்பம்

a நம்முடைய சகோதர சகோதரிகள்மேல் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். இது எல்லா சமயங்களிலும் சுலபமில்லைதான். ஏனென்றால், சில சமயங்களில் அவர்கள் நம் மனதைக் கஷ்டப்படுத்திவிடலாம். இந்தக் கட்டுரையில், சில பைபிள் நியமங்களையும் பைபிள் உதாரணங்களையும் பார்ப்போம். நம் சகோதர சகோதரிகள்மேல் நம்பிக்கை வைக்கவும், இழந்த நம்பிக்கையை மறுபடியும் வளர்த்துக்கொள்ளவும் அவை நமக்கு உதவும்.

b நம் நம்பிக்கைக்குத் தகுதியில்லாத ஒருசிலர் சபையில் இருக்கலாம் என்று பைபிள் எச்சரிக்கிறது. (யூ. 4) சிலசமயம், போலி சகோதரர்கள் ‘உண்மைகளைத் திரித்துச் சொல்லி’ மற்றவர்களைத் தப்பான வழிக்குக் கொண்டுபோக முயற்சி செய்யலாம். (அப். 20:30) அப்படிப்பட்டவர்களை நாம் நம்பவும் கூடாது, அவர்கள் சொல்வதைக் கேட்கவும் கூடாது.

c க்ரெட்டின் அனுபவத்தை முழுமையாகப் படித்துப் பார்க்க யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 1974-ல் (ஆங்கிலம்), பக்கங்கள் 129-131-ஐப் பாருங்கள்.