Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 38

நீங்கள் நம்பகமானவர் என்பதைக் காட்டுங்கள்

நீங்கள் நம்பகமானவர் என்பதைக் காட்டுங்கள்

“நம்பகமானவன் ரகசியத்தைக் காப்பாற்றுகிறான்.”—நீதி. 11:13.

பாட்டு 101 ஒற்றுமையாக உழைப்போம்

இந்தக் கட்டுரையில்... a

1. நம்பகமான ஒருவர் எப்படி நடந்துகொள்வார்?

 நம்பகமான ஒருவர், தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவார், எப்போதும் உண்மையைப் பேசுவார். (சங். 15:4) அவரை நம்பலாம் என்று எல்லாருக்கும் தெரியும். நம்முடைய சகோதர சகோதரிகள் நம்மையும் நம்பகமானவர்களாகப் பார்க்க வேண்டும் என்றுதான் நாமும் ஆசைப்படுவோம். அப்படியென்றால், அவர்களுடைய நம்பிக்கையை சம்பாதிக்க நாம் என்ன செய்யலாம்?

2. நாம் நம்பகமானவர் என்பதை எப்படிக் காட்டலாம்?

2 நம்பிக்கையைக் கேட்டு வாங்க முடியாது, அதைச் சம்பாதிக்க வேண்டும். பணம் சம்பாதிப்பதும் நம்பிக்கையைச் சம்பாதிப்பதும் ஒன்றுதான். அதைச் சம்பாதிப்பதற்கு நாம் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால், ஒரு நொடியிலே அதை நாம் தொலைத்துவிடலாம். யெகோவா நம்முடைய நம்பிக்கையைச் சம்பாதித்திருக்கிறார் என்று நிச்சயம் சொல்லலாம். நம்முடைய நம்பிக்கையைக் கெடுக்கிற மாதிரி அவர் எதுவுமே செய்ய மாட்டார். ஏனென்றால், “அவருடைய செயல்கள் எல்லாமே நம்பகமானது.” (சங். 33:4) நாமும் அவரைப் போலவே நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். (எபே. 5:1) நம்முடைய அப்பா யெகோவா மாதிரியே நம்பகமானவர்களாக நடந்துகொண்ட சிலருடைய உதாரணத்தை இப்போது பார்க்கலாம். அப்படி நம்பகமானவர்களாக நடந்துகொள்ள உதவுகிற ஐந்து குணங்களைப் பற்றியும் பார்க்கலாம்.

யெகோவாவுடைய நம்பகமான ஊழியர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

3-4. தான் நம்பகமானவர் என்று தானியேல் தீர்க்கதரிசி எப்படிக் காட்டினார், அவருடைய உதாரணத்தைப் பார்த்து நம்மை நாமே என்னென்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

3 நம்பகமாக நடந்துகொள்வதில் தானியேல் தீர்க்கதரிசி ஒரு அருமையான முன்மாதிரி. பாபிலோனியர்கள் அவரை சிறைபிடித்துக் கொண்டுபோனார்கள். அப்படியிருந்தும், அங்கே இருக்கிறவர்களிடம் அவர் நம்பகமானவர் என்று சீக்கிரத்திலேயே பெயர் எடுத்தார். பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் கனவை யெகோவாவுடைய உதவியோடு அவர் விளக்கியபோது, மற்றவர்களுக்கு அவர்மேல் இருந்த நம்பிக்கை இன்னும் அதிகமானது. நேபுகாத்நேச்சார் செய்வது யெகோவாவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று ஒருசமயம் தானியேல் அவரிடம் சொல்ல வேண்டியிருந்தது. இப்படி ஒரு செய்தியை எந்தவொரு ராஜாவும் கேட்க ஆசைப்பட மாட்டார். அதனால், அதைச் சொல்ல தானியேலுக்கு உண்மையிலேயே தைரியம் தேவைப்பட்டது. அதுவும், நேபுகாத்நேச்சார் பயங்கரக் கோபக்காரராக இருந்தார். ஆனாலும், தானியேல் அதைச் சொன்னார். (தானி. 2:12; 4:20-22, 25) பல வருஷங்கள் கழித்து, பாபிலோனின் அரண்மனை சுவரில் ஒரு விரல் வினோதமான ஒரு செய்தியை எழுதியது. அந்தச் செய்தியைப் பற்றிய விளக்கத்தைக்கூட அப்படியே சொல்வதன் மூலமாக, தானியேல் நம்பகமானவராக நடந்துகொண்டார். (தானி. 5:5, 25-29) பின்பு, மேதிய ராஜாவான தரியுவும் அவருக்குக் கீழே இருந்த மற்ற அதிகாரிகளும்கூட தானியேல் ‘மகா புத்திசாலியாக இருந்ததை’ கவனித்தார்கள். அதோடு, அவர் “நம்பகமானவராகவும் பொறுப்பானவராகவும் ஊழல் செய்யாதவராகவும்” இருந்தார் என்று அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். (தானி. 6:3, 4) பார்த்தீர்களா, பொய் தெய்வங்களை வணங்குபவர்களிடம்கூட நம்பகமானவர் என்று தானியேல் பெயர் எடுத்திருக்கிறார்!

4 தானியேலின் உதாரணத்தை மனதில் வைத்து நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘யெகோவாவ வணங்காதவங்ககிட்ட நான் எப்படிப்பட்ட பேர் எடுத்திருக்கேன்? பொறுப்பானவர், நம்பகமானவர் அப்படினெல்லாம் பேர் எடுத்திருக்கேனா?’ இந்தக் கேள்விகளைப் பற்றி நாம் யோசித்துப் பார்ப்பது முக்கியம். ஏனென்றால், நாம் நம்பகமானவர்களாக நடக்கும்போதுதான் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்க முடியும்.

முக்கியமான வேலைகளைச் செய்ய நெகேமியா நம்பகமான ஆட்களைத் தேர்ந்தெடுத்தார் (பாரா 5)

5. நம்பகமானவர் என்று பெயர் எடுக்க அனனியாவுக்கு எது உதவியது?

5 ஆளுநராக இருந்த நெகேமியா கி.மு. 455-ல் எருசலேமின் மதில்களைக் கட்டி முடித்தார். அதற்குப் பின்பு, அந்த நகரத்தைப் பார்த்துக்கொள்வதற்கு நம்பகமானவர்களை நியமிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த ஆட்களில் கோட்டைத் தலைவராக இருந்த அனனியாவும் ஒருவர். “அனனியா மிகவும் நம்பகமானவர், மற்றவர்களைவிட அதிக பயபக்தியுள்ளவர்” என்று பைபிள் சொல்கிறது. (நெ. 7:2) யெகோவாமேல் இருந்த அன்பும், அவருக்குப் பிடிக்காததைச் செய்து அவரைக் கஷ்டப்படுத்திவிடுவோமோ என்ற பயமும்தான் இந்த முக்கியமான பொறுப்பை நல்ல விதத்தில் செய்வதற்கு அனனியாவுக்கு உதவியது. கடவுளுடைய சேவையில் நம்பகமானவர்களாக நடந்துகொள்ள இந்தக் குணங்கள் நமக்கும் உதவி செய்யும்.

6. தீகிக்கு எப்படி அப்போஸ்தலன் பவுலின் நம்பகமான நண்பராக நடந்துகொண்டார்?

6 அப்போஸ்தலன் பவுலுக்கு நம்பகமான நண்பராக இருந்த தீகிக்குவின் உதாரணத்தை இப்போது பார்க்கலாம். பவுல் வீட்டுக் காவலில் இருந்தபோது தீகிக்குவை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைத்தார். அவரை ‘உண்மையுள்ள ஊழியர்’ என்றும்கூட சொன்னார். (எபே. 6:21, 22) எபேசு சபைக்கும் கொலோசெ சபைக்கும் கடிதங்களைக் கொடுத்தனுப்ப பவுல் தீகிக்குவைப் பயன்படுத்தினார். அதுமட்டுமல்ல, அங்கே இருந்த சகோதர சகோதரிகளைப் பலப்படுத்துகிற... ஆறுதல்படுத்துகிற... வேலையையும் அவரை நம்பிக் கொடுத்தார். தீகிக்குவைப் போலவே இன்றைக்கும் பொறுப்பில் இருக்கிற நம்பகமான சகோதரர்கள் யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்தைப் பாதுகாப்பதற்கு உதவி செய்கிறார்கள்.—கொலோ. 4:7-9.

7. உங்கள் சபையில் இருக்கிற மூப்பர்களும் உதவி ஊழியர்களும் எப்படி நம்பகமானவர்களாக நடந்துகொள்கிறார்கள்?

7 மூப்பர்களும் உதவி ஊழியர்களும் நம்பகமானவர்களாக நடந்துகொள்வதற்காக நாம் அவர்களுக்கு நன்றியோடு இருக்கிறோம். தானியேலையும் அனனியாவையும் தீகிக்குவையும் போலவே அவர்களும் தங்களுடைய பொறுப்புகளைப் பொறுப்பாகச் செய்கிறார்கள். நம்மோடு பைபிள் படிக்கிறவர்களை வார இறுதி நாட்களில் நடக்கிற கூட்டங்களுக்கு அழைக்கும்போது, பொதுப் பேச்சு கொடுப்பதற்கு சகோதரர்கள் இருப்பார்களா மாட்டார்களா என்று நாம் யோசித்ததே இல்லை. வார நாட்களில் நடக்கிற கூட்டங்களில் எல்லா நியமிப்புகளையும் செய்வதற்கு சகோதரர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்களா என்று நாம் சந்தேகப்படுவதும் இல்லை. சகோதர சகோதரிகளுக்கு மூப்பர்கள் முன்கூட்டியே அவர்களுடைய நியமிப்புகளைக் கொடுத்துவிடுகிறார்கள். நம்மை நம்பிக் கொடுக்கப்படுகிற நியமிப்புகளை நாம் நன்றாகத் தயாரித்துக் கொடுப்பதைப் பார்க்கும்போது மூப்பர்கள் ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். ஊழியம் செய்வதற்கான பிரசுரங்கள் நமக்குக் கிடைக்கும்படி அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். இந்த உண்மையுள்ள சகோதரர்கள் நம்மை நன்றாகக் கவனித்துக்கொள்வதற்காக யெகோவாவுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்! அவர்களைப் போலவே நாம் எப்படி நம்பகமானவர்களாக நடந்துகொள்ளலாம்?

ரகசியத்தைக் காத்துக்கொள்ளுங்கள், நம்பகமானவர்களாக இருங்கள்

8. மற்றவர்கள்மேல் அக்கறை காட்டுகிற விஷயத்தில் நாம் எப்படி நியாயமானவர்களாக நடந்துகொள்ள வேண்டும்? (நீதிமொழிகள் 11:13)

8 நம்முடைய சகோதர சகோதரிகளை நமக்கு ரொம்ப பிடிக்கும். அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள நாம் ஆசைப்படுவோம். அதேசமயத்தில், அவர்களுடைய சொந்த விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடாத மாதிரி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். முதல் நூற்றாண்டில் இருந்த சபைகளில் சிலர், “வம்பளக்கிறவர்களாகவும், மற்றவர்களுடைய விஷயங்களில் அநாவசியமாகத் தலையிடுகிறவர்களாகவும், பேசக்கூடாத விஷயங்களைப் பேசுகிறவர்களாகவும்” இருந்தார்கள். (1 தீ. 5:13) அவர்களைப் போல இருக்க நிச்சயம் நாம் விரும்ப மாட்டோம். உதாரணத்துக்கு, ஒரு சகோதரி தன்னுடைய உடல்நல பிரச்சினையைப் பற்றி அல்லது தனக்கு இருக்கிற வேறு ஏதாவது பிரச்சினையைப் பற்றி நம்மிடம் சொல்லலாம். அதைப் பற்றி நாம் வேறு யாரிடமும் சொல்லக் கூடாது என்று அவர் கேட்டுக்கொள்ளலாம். இந்த மாதிரி சூழ்நிலையில் நாம் அவருடைய விருப்பத்தை மதிக்க வேண்டும். அவர் விரும்புகிற மாதிரி நடந்துகொள்ள வேண்டும். b (நீதிமொழிகள் 11:13-ஐ வாசியுங்கள்.) வேறு எந்தச் சூழ்நிலைகளில் ரகசியம் காப்பது முக்கியம் என்று இப்போது பார்க்கலாம்.

9. குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் தாங்கள் நம்பகமானவர்கள் என்பதை எப்படிக் காட்டலாம்?

9 குடும்பத்தில். குடும்பத்தில் நடக்கிற விஷயத்தை வெளியில் இருக்கிறவர்களிடம் சொல்லாமல் இருக்கும் பொறுப்பு குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. உதாரணத்துக்கு, மனைவிக்கு இருக்கிற ஏதாவது ஒரு பழக்கம் கணவருக்கு காமெடியாக தெரியலாம். அதை அவர் மற்றவர்களிடம் சொல்லி மனைவியைத் தர்மசங்கடப்படுத்துவது சரியாக இருக்குமா? கண்டிப்பாக சரியாக இருக்காது! மனைவிமேல் உயிரையே வைத்திருக்கிற ஒருவர் அப்படிச் செய்ய மாட்டார். மனைவியைக் காயப்படுத்துகிற மாதிரி எதுவும் செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். (எபே. 5:33) டீனேஜ் பிள்ளைகளும் ஓரளவுக்கு மரியாதையை எதிர்பார்ப்பார்கள். பெற்றோர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், பிள்ளைகள் செய்கிற தவறுகளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லி அவர்களை அவமானப்படுத்தக் கூடாது. (கொலோ. 3:21) குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லாமல் இருக்க பிள்ளைகளும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் சொன்னால், அது குடும்பத்தில் இருப்பவர்களை அவமானப்படுத்துவதுபோல் இருக்கும். (உபா. 5:16) குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லாமல் இருக்கும்போது, அவர்களுக்குள் இருக்கிற நெருக்கம் இன்னும் அதிகமாகும்.

10. உண்மையான நண்பர் எப்படி நடந்துகொள்வார்? (நீதிமொழிகள் 17:17)

10 நட்பில். நம் மனதில் இருக்கிற எல்லாவற்றையும் சொல்வதற்கு நெருக்கமான ஒரு நண்பர் நமக்குத் தேவைப்படலாம். ஆனால், சிலசமயம் அப்படிச் சொல்வது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஒருவேளை, மற்றவர்களிடம் மனம்விட்டுப் பேசும் பழக்கம் நமக்கு இருக்காது. இல்லையென்றால், நாம் சொல்வதை அவர்கள் வேறு யாரிடமாவது சொல்லிவிடுவார்களோ என்று நாம் பயப்படலாம். ஆனால், அப்படிச் சொல்லாத நம்பகமான ஒரு நண்பர் நமக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்படிப்பட்ட ஒருவர்தான் ‘உண்மையான நண்பர்.’—நீதிமொழிகள் 17:17-ஐ வாசியுங்கள்.

ரகசியமாக வைக்க வேண்டிய விஷயங்களை, மூப்பர்கள் தங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்களிடம் சொல்வதில்லை (பாரா 11) c

11. (அ) மூப்பர்களும் அவர்களுடைய மனைவிகளும் எப்படி நம்பகமானவர்களாக நடந்துகொள்கிறார்கள்? (ஆ) சபை விஷயங்களைக் குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்லாமல் ரகசியமாக வைத்துக்கொள்கிற ஒரு மூப்பரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (படத்தைப் பாருங்கள்.)

11 சபையில். ரகசியத்தைக் காத்துக்கொள்கிற மூப்பர்கள் சகோதர சகோதரிகளுக்கு, “காற்றுக்கு ஒதுங்கும் இடமாக இருப்பார்கள். புயலிலிருந்து பாதுகாக்கும் புகலிடமாக இருப்பார்கள்.” (ஏசா. 32:2) அவர்களிடம் எதை வேண்டுமானாலும் நாம் சொல்லலாம். அவர்களிடம் ஒரு விஷயம் சொன்னால் அது வெளியே போகாது என்று நாம் முழுமையாக நம்பலாம். அவர்கள் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்களைச் சொல்லச் சொல்லி அவர்களை நாம் தொந்தரவு செய்யக் கூடாது. மூப்பர்களுடைய மனைவிகள் இந்த விஷயத்தில் நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்கள். ஏனென்றால், தங்களுடைய கணவரிடமிருந்து விஷயத்தை வாங்குவதற்காக அவரை அவர்கள் நச்சரிப்பதில்லை. சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளைப் பற்றிய ரகசியமான விஷயங்களை ஒரு மூப்பரின் மனைவி தெரிந்துகொள்ளாமல் இருப்பது உண்மையிலேயே அவருக்கு ஒரு ஆசீர்வாதம் என்று சொல்லலாம். இதைப் பற்றி ஒரு மூப்பரின் மனைவி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்: “என்னோட கணவர் யாருக்கெல்லாம் மேய்ப்பு சந்திப்பு செய்றாரு, ஆன்மீக விதத்துல யாருக்கெல்லாம் உதவி செய்றாரு அப்படிங்கறத எல்லாம் என்கிட்ட சொல்ல மாட்டாரு. அவங்களோட பேர கூட எனக்கு சொல்ல மாட்டாரு. அத நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்படறேன். ஏன்னா, அதயெல்லாம் தெரிஞ்சுகிட்டாலும் என்னால அவங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. அதுவே எனக்கு பெரிய பாரம் ஆயிடும். இப்படித் தெரிஞ்சுக்காம இருக்கறதால, எல்லார்கிட்டயும் என்னால சகஜமா பழக முடியுது. அதேமாதிரி, நான் எப்படி உணர்றேன், எனக்கு என்ன பிரச்சினை இருக்குனு என்னோட கணவர நம்பி என்னால சொல்ல முடியுது. ஏன்னா, அவரு அத யார்கிட்டயும் சொல்ல மாட்டாருனு எனக்கு தெரியும்.” உண்மையைச் சொன்னால், நம்பகமானவர்கள் என்று பெயர் எடுக்க நாம் எல்லாருமே ஆசைப்படுவோம். அதற்கு என்னென்ன குணங்கள் உதவும்? அவற்றில் ஐந்தை இப்போது நாம் பார்க்கலாம்.

நம்பகமானவர்களாக இருக்க உதவும் குணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்

12. நம்பிக்கைக்கு அஸ்திவாரமே அன்புதான் என்று ஏன் சொல்லலாம்? விளக்குங்கள்.

12 நம்பிக்கைக்கு அஸ்திவாரமே அன்பு தான். இரண்டு முக்கியமான கட்டளைகளை இயேசு கொடுத்தார். ஒன்று, யெகோவாமேல் அன்பு காட்ட வேண்டும். இன்னொன்று, மற்றவர்கள்மேல் அன்பு காட்ட வேண்டும். (மத். 22:37-39) யெகோவாமேல் அன்பு இருந்தால், அவரைப் போலவே நம்பகமானவர்களாக நடந்துகொள்வோம். சகோதர சகோதரிகள்மேல் அன்பு இருந்தால், நம்மை நம்பி அவர்கள் சொல்கிற விஷயங்களை யாரிடமும் சொல்ல மாட்டோம். அப்படிச் சொல்லி, அவர்களுக்கு ஆபத்தையோ வேதனையையோ அவமானத்தையோ தேடித் தர மாட்டோம்.—யோவா. 15:12.

13. நம்பகமானவர்களாக நடந்துகொள்வதற்கு மனத்தாழ்மை எப்படி உதவும்?

13 நம்பகமானவர்களாக இருப்பதற்கு உதவி செய்கிற இன்னொரு குணம் மனத்தாழ்மை. மனத்தாழ்மை இருந்தால், ஒரு கிறிஸ்தவர் தனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு சொல்வதில் முதல் ஆளாக இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார். (பிலி. 2:3) அதுபோல, ரகசியமான ஒரு விஷயம் அவருக்குத் தெரியும் என்று காட்டி அவரைப் பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ள மாட்டார். அதோடு, மனத்தாழ்மை இருந்தால் பைபிளிலோ நம்முடைய பிரசுரங்களிலோ இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றிய தன்னுடைய அபிப்பிராயத்தை அவர் பரப்ப மாட்டார்.

14. நம்பகமானவர்களாக இருப்பதற்கு பகுத்தறிவு எப்படி உதவி செய்யும்?

14 பகுத்தறிவு இருக்கிற ஒருவருக்கு எப்போது ‘பேச’ வேண்டும், எப்போது ‘பேசாமல் இருக்க’ வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். (பிர. 3:7) “பேச்சு வெள்ளிக்கு சமம் என்றால், மௌனம் தங்கத்துக்கு சமம்” என்று ஒரு பழமொழி சொல்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், சில நேரங்களில் பேசாமல் இருப்பது ரொம்ப நல்லது. அதனால்தான், நீதிமொழிகள் 11:12 இப்படிச் சொல்கிறது: “பகுத்தறிவு நிறைந்தவன் அமைதியாக இருக்கிறான்.” இதைப் புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். அனுபவமுள்ள ஒரு மூப்பருக்கு பிரச்சினைகள் இருக்கிற மற்ற சபைகளுக்கு உதவி செய்கிற நியமிப்பு அடிக்கடி கிடைக்கும். “மத்த சபைகளை பத்தின ரகசியமான விஷயங்கள சொல்லவே கூடாதுங்கறதுல அவரு ரொம்ப கவனமா இருப்பாரு” என்று அவருடைய சபையில் இருக்கும் இன்னொரு மூப்பர் சொல்கிறார். அனுபவமுள்ள அந்த மூப்பர் பகுத்தறிவோடு நடந்துகொள்வதால், மூப்பர் குழுவிலுள்ள மற்ற சகோதரர்களின் நம்பிக்கையைச் சம்பாதித்திருக்கிறார். தங்கள் சபையில் இருக்கிற விஷயங்களைக்கூட அவர் மற்ற சபைகளில் சொல்ல மாட்டார் என்று அந்த மூப்பர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

15. மற்றவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதிக்க நேர்மை எப்படி உதவும் என்பதற்கு ஒரு உதாரணம் கொடுங்கள்.

15 நம்பகமானவர்களாக இருப்பதற்கு கைகொடுக்கிற இன்னொரு குணம் நேர்மை. நேர்மையாக இருக்கிற ஒருவரை நாம் எப்போதுமே நம்பலாம். ஏனென்றால், அவர் உண்மையைத்தான் பேசுவார். (எபே. 4:25; எபி. 13:18) இப்படி யோசித்துப் பாருங்கள்: பேச்சுக் கொடுக்கிற விஷயத்தில் நீங்கள் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதனால் ஒருவரிடம், ‘என்னோட பேச்சை கேட்டு நான் எதுல எல்லாம் முன்னேறணும்னு எனக்கு சொல்லுங்க’ என்று கேட்கிறீர்கள். யார் உண்மையை மறைக்காமல் சொல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் காதுக்கு இனிமையாக இருப்பதைச் சொல்பவரா அல்லது உள்ளதை உள்ளபடி சொல்பவரா? பதில் நமக்கே நன்றாகத் தெரியும். “வெளிப்படையாகக் கண்டிப்பதே மறைத்து வைக்கப்படும் அன்பைவிட மேலானது. நண்பன் உண்மையுள்ளவனாக இருப்பதால் காயங்களை ஏற்படுத்துகிறான்” என்று பைபிள்கூட சொல்கிறது. (நீதி. 27:5, 6) ஆரம்பத்தில் அந்த நபர் சொல்வது உங்கள் மனதுக்குக் கஷ்டமாக இருந்தாலும், அவருடைய நேர்மையான ஆலோசனைதான் முன்னேற்றம் செய்ய உங்களுக்கு உதவும்.

16. சுயக்கட்டுப்பாடு நமக்கு எந்தளவுக்கு அவசியம் என்று நீதிமொழிகள் 10:19 சொல்கிறது?

16 மற்றவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதிப்பதற்கு சுயக்கட்டுப்பாடு கண்டிப்பாகத் தேவை. அந்தக் குணம் இருந்தால்தான், ரகசியமாக வைக்க வேண்டிய விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வந்தாலும், நம்முடைய வாய்க்கு நாம் கடிவாளம் போடுவோம். (நீதிமொழிகள் 10:19-ஐ வாசியுங்கள்.) சோஷியல் மீடியாவைப் பயன்படுத்தும்போது சுயக்கட்டுப்பாடு காட்டுவது ரொம்பவே கஷ்டமாக இருக்கலாம். ஜாக்கிரதையாக இல்லையென்றால், ரகசியமாக வைக்க வேண்டிய விஷயங்களைத் தெரியாத்தனமாக நிறைய பேருக்கு அனுப்பிவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி சோஷியல் மீடியாவில் நாம் அதைப் போட்டால், அந்த விஷயம் நம்முடைய கட்டுப்பாட்டிலேயே இருக்காது. அதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதனால் நிறைய ஆபத்துகளும் வரலாம். சுயக்கட்டுப்பாடு இருந்தால்தான், எதிரிகள் நம் வாயைக் கிளறினாலும் நம்முடைய சகோதர சகோதரிகளை ஆபத்தில் சிக்க வைக்கும் விஷயங்களைச் சொல்லிவிடாமல் இருப்போம். நம்முடைய வேலைக்கு கட்டுப்பாடுகளோ தடையோ போடப்பட்டிருக்கிற நாடுகளில் போலீஸ் இந்த மாதிரி விஷயங்களை நம்மிடம் கேட்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதுபோன்ற சமயங்களிலும் மற்ற சமயங்களிலும் “என் வாய்க்குப் பூட்டுப்போட்டுக் காத்துக்கொள்வேன்” என்ற நியமத்தின்படி நாம் நடக்க வேண்டும். (சங். 39:1) நம்முடைய குடும்பத்தில் இருக்கிறவர்களிடம்... நண்பர்களிடம்... சகோதர சகோதரிகளிடம்... அல்லது வேறு யாரிடம் நாம் பழகினாலும், நாம் நம்பகமானவர்களாக நடந்துகொள்ள வேண்டும். அப்படி நம்பகமானவர்களாக நடந்துகொள்வதற்கு நமக்கு சுயக்கட்டுப்பாடு ரொம்பவே தேவை.

17. சபையில் இருக்கிற நம் ஒவ்வொருவருக்குமே என்ன பொறுப்பு இருக்கிறது? அதை நாம் எப்படிச் செய்யலாம்?

17 அன்பான, நம்பகமான சகோதர சகோதரிகளோடு இருப்பதற்காக யெகோவா நம்மையும் தேர்ந்தெடுத்ததற்கு அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. சகோதர சகோதரிகளுடைய நம்பிக்கையைச் சம்பாதிக்கிற பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அன்பு, மனத்தாழ்மை, பகுத்தறிவு, நேர்மை, சுயக்கட்டுப்பாடு போன்ற குணங்களைக் காட்டுவதற்கு நாம் ஒவ்வொருவருமே முயற்சி செய்யும்போது, சபையில் இருப்பவர்களுடைய நம்பிக்கையை நம்மால் சம்பாதிக்க முடியும். ஆனால், மற்றவர்களுடைய நம்பிக்கையை ஒரே நாளில் நாம் சம்பாதித்துவிட முடியாது. அதற்காகத் தொடர்ந்து உழைக்க வேண்டும். நம்முடைய அப்பா யெகோவாவைப் போல் நடந்து, நாம் நம்பகமானவர்கள் என்பதை எப்போதும் நிரூபிக்க தீர்மானமாக இருக்கலாம்.

பாட்டு 123 தேவ அமைப்புக்கு பணிந்து செல்வோம்

a மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்றால் நாம் நம்பகமானவர் என்பதைக் காட்ட வேண்டும். நாம் நம்பகமானவராக நடந்துகொள்வது எந்தளவுக்கு முக்கியம்? அதற்கு என்னென்ன குணங்கள் உதவி செய்யும்? இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

b சபையில் யாராவது ஒருவர் பெரிய பாவம் செய்தது நமக்குத் தெரியவந்தால் மூப்பர்களிடம் போய் அதைச் சொல்லும்படி அவரிடம் சொல்ல வேண்டும். ஒருவேளை அவர் அப்படிச் செய்யவில்லை என்றால் நாம் போய் மூப்பர்களிடம் சொல்ல வேண்டும். அப்போதுதான் நாம் யெகோவாவுக்கும் சபைக்கும் உண்மையாக இருக்கிறோம் என்று அர்த்தம்.

c படவிளக்கம்: ஒரு மூப்பர், சபையில் இருக்கும் ஒரு சகோதரியின் தனிப்பட்ட பிரச்சினையைப் பற்றித் தன் குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்லாமல் ரகசியம் காக்கிறார்.