Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்வதும் கற்றுக்கொடுப்பதும் எனக்கு எப்போதுமே பிடிக்கும்

யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்வதும் கற்றுக்கொடுப்பதும் எனக்கு எப்போதுமே பிடிக்கும்

அமெரிக்கா, பென்ஸில்வேனியாவில் இருக்கிற ஈஸ்டன் நகரத்தில் நான் வளர்ந்தேன். வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று நான் குறியாக இருந்தேன். அதனால், எப்படியாவது காலேஜுக்குப் போய்ப் படிக்க நினைத்தேன். புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். கணக்கிலும் அறிவியலிலும் நான் கெட்டிக்காரனாக இருந்தேன். கருப்பின மாணவர்களிலேயே நான்தான் முதல் மார்க் எடுத்தேன். அதனால் 1956-ல், ஒரு சிவில் உரிமை அமைப்பில் இருந்தவர்கள் எனக்கு 25 டாலர் பரிசாகக் கொடுத்தார்கள். போகப் போக, வாழ்க்கையில் நான் வைத்திருந்த லட்சியங்கள் மாறிவிட்டன. ஏன் என்று சொல்கிறேன்.

யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொண்டேன்

1940-க்கு பிறகு, என் அப்பா அம்மா யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிக்க ஆரம்பித்தார்கள். கொஞ்ச நாட்கள் கழித்து, படிப்பதை விட்டுவிட்டார்கள். ஆனாலும், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் என் அம்மாவுக்குத் தொடர்ந்து கிடைத்தன. 1950-ல், நியு யார்க்கில் நடந்த சர்வதேச மாநாட்டில் குடும்பமாகக் கலந்துகொண்டோம்.

கொஞ்ச நாட்களிலேயே லாரன்ஸ் ஜெஃப்ரிஸ் என்ற சகோதரர் எங்களை வந்து பார்க்க ஆரம்பித்தார். பைபிளைப் பற்றி எனக்கு சொல்லித்தர அவர் முயற்சி செய்தார். ஆனால், யெகோவாவின் சாட்சிகள் அரசியலிலும் ராணுவத்திலும் சேராமல் இருப்பது தப்பு என்று ஆரம்பத்தில் நான் அவரோடு வாதாடினேன். அமெரிக்காவில் இருக்கிற யாருமே போருக்குப் போகவில்லை என்றால் எதிரிகள் வந்து மொத்த நாட்டையும் சுலபமாகப் பிடித்துவிடுவார்களே என்று சொன்னேன். அதற்கு அவர், “அமெரிக்காவுல இருக்குற எல்லாருமே யெகோவாவுக்கு சேவை செய்றதா வெச்சுக்குவோம். எதிரிகள் வந்து அவங்கள தாக்குனா யெகோவா என்ன செய்வாருனு நீ நினைக்குற?” என்று பொறுமையாகக் கேட்டார். இப்படி, ஒவ்வொன்றாக அவர் எடுத்துச் சொன்னதால், நான் யோசித்ததுதான் தப்பு என்று புரிந்துகொண்டேன். பைபிளை இன்னும் நன்றாகப் படிக்க வேண்டுமென்ற ஆர்வமும் எனக்கு வந்தது.

நான் ஞானஸ்நானம் எடுத்தபோது

ஸ்டோர் ரூமில் என் அம்மா போட்டு வைத்திருந்த பழைய காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை எடுத்து நான் மணிக்கணக்காகப் படித்தேன். கடைசியில், இதுதான் சத்தியம் என்று புரிந்துகொண்டேன். அதனால், சகோதரர் ஜெஃப்ரிஸோடு சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். கூட்டங்களிலும் தவறாமல் கலந்துகொண்டேன். கற்றுக்கொண்ட விஷயங்கள் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதனால், ஒரு பிரஸ்தாபியாக ஆனேன். “யெகோவாவின் மகா நாள் நெருங்கிவிட்டது” என்பதை நான் புரிந்துகொண்டபோது என் லட்சியங்களை மாற்றிக்கொண்டேன். (செப். 1:14) காலேஜ் போய்ப் படிக்கும் ஆசையை ஓரங்கட்டிவிட்டு, மற்றவர்களுக்கு பைபிளைச் சொல்லித்தருவதில் மும்முரமானேன்.

ஜூன் 13, 1956-ல், ஸ்கூல் படிப்பை முடித்தேன். மூன்று நாட்களுக்குப் பிறகு, ஒரு வட்டார மாநாட்டில் ஞானஸ்நானம் எடுத்தேன். யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ளவும் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் வாழ்க்கையை அர்ப்பணித்தால் எவ்வளவு ஆசீர்வாதங்கள் வரும் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

பயனியர் சேவையில் கற்றுக்கொண்டேன், கற்றுக்கொடுத்தேன்

ஞானஸ்நானம் எடுத்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, நான் ஒழுங்கான பயனியராக ஆனேன். டிசம்பர் 1956 நம் ராஜ்ய ஊழியத்தில், “தேவை அதிகம் உள்ள இடத்தில் போய் சேவை செய்ய உங்களால் முடியுமா?” என்று ஒரு கட்டுரை வந்தது. என்னால் முடியும் என்று தோன்றியது. அதனால், பிரஸ்தாபிகள் குறைவாக இருக்கிற இடத்துக்குப் போய்ச் சேவை செய்ய ஆசைப்பட்டேன்.—மத். 24:14.

தென் கரோலினாவில் இருக்கிற எட்ஜ்ஃபீல்ட் என்ற இடத்துக்கு நான் குடிமாறிப் போனேன். அங்கிருந்த சபையில் என்னோடு சேர்த்து ஐந்து பிரஸ்தாபிகள்தான் இருந்தோம். ஒரு சகோதரருடைய வீட்டில் கூட்டங்களை நடத்தினோம். நான் ஒவ்வொரு மாதமும் 100 மணிநேரம் ஊழியம் செய்தேன். அதோடு, ஊழியத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வது, கூட்டங்களில் பேச்சு கொடுப்பது என்று ரொம்ப பிஸியாக இருந்தேன். எந்தளவு இதையெல்லாம் செய்தேனோ, அந்தளவு யெகோவாவைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன்.

ஒரு பெண் என்னிடம் பைபிளைப் படித்துக்கொண்டிருந்தார். சவ அடக்க நிகழ்ச்சிகள் நடக்கும் ஒரு மன்றத்தை அவர் வைத்திருந்தார். அது சில மைல் தூரத்தில் ஜான்ஸ்டன் என்ற ஊரில் இருந்தது. அப்போது எனக்கு ரொம்ப தேவைப்பட்ட ஒரு பகுதிநேர வேலையையும் அவர் கொடுத்தார். அவருக்கு சொந்தமான ஒரு சின்னக் கட்டிடத்தில் கூட்டங்களை நடத்தக்கூட அனுமதி கொடுத்தார்.

எனக்கு பைபிள் படிப்பு நடத்திய சகோதரருடைய மகன் ஜாலி ஜெஃப்ரிஸ், நியு யார்க்கில் இருக்கும் புருக்லினிலிருந்து குடிமாறி வந்தார். அவரும் நானும் சேர்ந்துதான் பயனியர் ஊழியம் செய்தோம். ஒரு சகோதரர் ஒரு சின்ன ட்ரெய்லர் வண்டியை எங்களுக்குக் கொடுத்தார். அதில்தான் நாங்கள் தங்கியிருந்தோம்.

நான் இருந்த பகுதியில் சம்பளம் ரொம்ப குறைவாகத்தான் கிடைத்தது. நாள் முழுக்க வேலை செய்தாலும் இரண்டு மூன்று டாலர்தான் கிடைக்கும். ஒருசமயம், கையிலிருந்த காசையெல்லாம் வைத்து மளிகை சாமான்கள் வாங்கிவிட்டு வந்தபோது ஒருவர் என்னிடம் வந்து, “உங்களுக்கு வேலை வேணுமா? ஒரு மணிநேரத்துக்கு ஒரு டாலர் தர்றேன்” என்று சொன்னார். கட்டிட வேலை நடந்த ஒரு இடத்தில், மூன்று நாட்களுக்கு சுத்தம் செய்கிற வேலையை அவர் எனக்குக் கொடுத்தார். நான் தொடர்ந்து எட்ஜ்ஃபீல்டிலேயே தங்கி ஊழியம் செய்ய யெகோவாதான் உதவினார் என்று எனக்குப் புரிந்தது. அதுமட்டுமல்ல, 1958-ல் நியு யார்க்கில் நடந்த சர்வதேச மாநாட்டில்கூட என்னால் கலந்துகொள்ள முடிந்தது.

எங்களுக்குக் கல்யாணம் ஆனபோது

மாநாட்டின் இரண்டாவது நாளில் நடந்த ஒரு விஷயத்தை என்னால் மறக்கவே முடியாது. ரூபி வேட்லிங்டன் என்ற சகோதரியை நான் அன்றைக்குப் பார்த்தேன். அவர் டென்னெஸீயில் இருந்த கலாட்டினில் ஒழுங்கான பயனியராக சேவை செய்துகொண்டிருந்தார். நாங்கள் இரண்டு பேருமே மிஷனரி சேவை செய்ய ஆசைப்பட்டோம். அதனால், அந்த மாநாட்டில் நடந்த கிலியட் கூட்டத்தில் கலந்துகொண்டோம். அதற்குப் பிறகு, ஒருவருக்கு ஒருவர் கடிதம் எழுத ஆரம்பித்தோம். ஒருசமயம், பொதுப் பேச்சு கொடுப்பதற்காக என்னை கலாட்டினுக்குக் கூப்பிட்டார்கள். ‘என்னை கல்யாணம் பண்ணிப்பியா?’ என்று ரூபியிடம் கேட்பதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் என்னைத் தேடிவந்த மாதிரி இருந்தது. பின்பு, ரூபியின் சபைக்கு நான் மாறிப்போனேன். 1959-ல், நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம்.

சபையில் கற்றுக்கொண்டேன், கற்றுக்கொடுத்தேன்

23 வயதில், கலாட்டினில் சபை ஊழியராக, அதாவது மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக, நியமிக்கப்பட்டேன். சார்ல்ஸ் தாம்ஸன் முதன்முதலில் எங்கள் சபைக்குத்தான் வட்டாரக் கண்காணியாக வந்தார். அவருக்கு நிறைய அனுபவம் இருந்தது. ஆனாலும், சகோதரர்களுக்கு என்னென்ன தேவை இருக்கிறது... முன்பு இருந்த வட்டாரக் கண்காணிகள் அந்தத் தேவைகளை எப்படிக் கவனித்துக்கொண்டார்கள்... என்றெல்லாம் என்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு, மற்றவர்களிடம் விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது முக்கியம் என்று நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

மே 1964-ல், ராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு கிடைத்தது. அது நியு யார்க்கில் இருக்கிற தெற்கு லாசிங்கில் ஒரு மாதத்துக்கு நடந்தது. அதில் கலந்துகொண்ட பிறகு, யெகோவாவைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டும்... அவரிடம் இன்னும் நெருங்கி போக வேண்டும்... என்ற துடிப்பு எனக்குள் வந்தது.

வட்டார சேவையிலும் மாவட்ட சேவையிலும் கற்றுக்கொண்டேன், கற்றுக்கொடுத்தேன்

ஜனவரி 1965-ல், வட்டார சேவை செய்ய எனக்கும் ரூபிக்கும் அழைப்பு கிடைத்தது. எங்கள் வட்டாரம் ரொம்ப பெரியதாக இருந்தது. டென்னெஸீயில் உள்ள நாக்ஸ்விலிலிருந்து வர்ஜீனியாவில் உள்ள ரிச்மாண்ட் வரைக்கும் எல்லா பகுதியுமே அந்த வட்டாரத்துக்குள் வந்தது. வட கரோலினாவிலும் கென்டகீயிலும் மேற்கு வர்ஜீனியாவிலும் இருந்த எல்லா சபைகளும் அதில் இருந்தன. கருப்பினத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருந்த சபைகளை மட்டும்தான் நான் சந்தித்தேன். ஏனென்றால், ஐக்கிய மாகாணத்தின் தென்பகுதியில் அன்றைக்கு இருந்த சட்டங்களின்படி, கருப்பின மக்களும் வெள்ளையின மக்களும் ஒன்றுசேர்ந்து கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது. அங்கே இருந்த சகோதரர்கள் ரொம்ப ஏழையாக இருந்தார்கள். அதனால், எங்களிடம் இருந்ததை அவர்களோடு பகிர்ந்துகொண்டோம். ரொம்ப காலமாக வட்டாரக் கண்காணியாக இருந்த ஒரு சகோதரர், ஒரு முக்கியமான பாடத்தை எனக்குக் கற்றுக்கொடுத்தார். “நீ ஒரு சபைக்கு போறப்போ ஒரு முதலாளி மாதிரி நடந்துக்காத. நல்ல சகோதரனா நடந்துக்கோ. அங்க இருக்குறவங்க உன்னை ஒரு நல்ல சகோதரனா நினைச்சா மட்டும்தான் உன்னால அவங்களுக்கு உதவி செய்ய முடியும்” என்று அவர் சொன்னார்.

ஒருசமயம், நாங்கள் ஒரு சின்ன சபையைச் சந்திக்கப் போயிருந்தோம். அங்கே ஒரு இளம் பெண்ணுக்கு ரூபி பைபிள் படிப்பை ஆரம்பித்தாள். அந்தப் பெண்ணுக்கு ஒருவயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. அந்தப் பெண்ணுக்கு படிப்பு நடத்தும் நிலையில் யாருமே இல்லாததால், ரூபியே தொடர்ந்து கடிதம் மூலமாகப் படிப்பு நடத்தினாள். அடுத்த தடவை நாங்கள் அந்தச் சபையை சந்தித்தபோது, அந்தப் பெண் தவறாமல் எல்லா கூட்டங்களுக்கும் வந்துகொண்டு இருந்தாள். அந்தச் சபைக்கு இரண்டு விசேஷ பயனியர் சகோதரிகள் நியமிக்கப்பட்ட பிறகு, அவர்களே அந்தப் பெண்ணுக்கு படிப்பு நடத்தினார்கள். பிறகு, சீக்கிரத்திலேயே அவள் ஞானஸ்நானம் எடுத்தாள். கிட்டத்தட்ட 30 வருஷங்கள் கழித்து, அதாவது 1995-ல், பேட்டர்சன் பெத்தேலில் ரூபியிடம் ஒரு இளம் பெண் வந்து பேசினாள். அவள் யார் தெரியுமா? ரூபி பைபிள் படிப்பு நடத்திய அந்தப் பெண்ணின் மகள்! அவளும் அவளுடைய கணவரும் 100-வது கிலியட் பள்ளியின் மாணவர்களாக இருந்தார்கள்.

இரண்டாவது வட்டார சேவையை நாங்கள் மத்திய ஃப்ளோரிடாவில் செய்தோம். அந்தச் சமயத்தில் எங்களுக்கு ஒரு கார் தேவைப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்த மாதிரியே ஒரு கார் ரொம்ப குறைவான விலையில் கிடைத்தது. ஆனால், முதல் வாரமே அதன் என்ஜினில் ஏதோ கோளாறு ஆகிவிட்டது. அதை ரிப்பேர் பண்ண எங்கள் கையில் காசே இல்லை. இந்த மாதிரி ரிப்பேர் வேலைக்கு ஒரு சகோதரர் உதவுவார் என்று எனக்குத் தெரியும். அதனால், அவரிடம் கேட்டேன். அவர் ஒரு ஆளை அனுப்பி காரை சரிசெய்து கொடுத்தார். அதற்கு காசுகூட வாங்கவில்லை. “அதெல்லாம் வேணாம் பிரதர்” என்று சொல்லிவிட்டார். அதுமட்டுமல்ல, கொஞ்சம் பணத்தை எங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்! யெகோவா தன் மக்களை எவ்வளவு நன்றாகக் கவனித்துக்கொள்கிறார் என்று நாங்கள் கண்கூடாகப் பார்த்தோம். நாங்களும் மற்றவர்களுக்குத் தாராளமாக உதவி செய்ய வேண்டும் என்று கற்றுக்கொண்டோம்.

சபைகளைச் சந்திக்கப் போகும்போது, சகோதர சகோதரிகளுடைய வீட்டில்தான் நாங்கள் தங்கினோம். அதனால், நிறைய நல்ல நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். ஒருநாள், ஒரு சபையின் அறிக்கையை நான் டைப் செய்துகொண்டு இருந்தேன். பிறகு, அதைப் பாதியிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டேன். சாயங்காலம் வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, அந்த வீட்டில் இருந்த மூன்று வயது குட்டிப் பையன் டைப்ரைட்டரில் விளையாடி, எதை எதையோ அடித்து வைத்திருந்தான்! அதனால், மொத்த அறிக்கையையும் திரும்ப டைப் செய்கிற மாதிரி ஆகிவிட்டது. அவன் பெரியவனான பிறகுகூட அவனைப் பார்க்கிறபோதெல்லாம் இதைச் சொல்லிச் சொல்லி அவனைக் கலாய்ப்பேன்.

1971-ல், நியு யார்க்கில் நான் மாவட்டக் கண்காணியாக நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்று எனக்கு ஒரு கடிதம் வந்தது. எங்களுக்கு ஒரே ஆச்சரியம்! ஏனென்றால், அப்போது எனக்கு வெறும் 34 வயதுதான். அங்கே இருந்த சகோதரர்களைச் சந்தித்த மாவட்டக் கண்காணிகளில் கருப்பினத்தைச் சேர்ந்த முதல் மாவட்டக் கண்காணி நான்தான். சகோதர சகோதரிகள் எங்களை ரொம்ப அன்பாக வரவேற்றார்கள்.

ஒரு மாவட்டக் கண்காணியாக ஒவ்வொரு வார இறுதியிலும் வட்டார மாநாட்டில் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொடுப்பது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நிறைய வட்டாரக் கண்காணிகள் என்னைவிட அனுபவம் உள்ளவர்களாக இருந்தார்கள். அதில் ஒருவர் என் ஞானஸ்நான பேச்சைக் கொடுத்தவர். இன்னொருவர், பின்பு ஆளும் குழுவில் ஒருவராக ஆன சகோதரர் தியோடர் ஜாரக்ஸ். இவர்களைத் தவிர, புருக்லின் பெத்தேலில் சேவை செய்த அனுபவமுள்ள சகோதரர்கள் நிறைய பேரும்கூட அந்த மாவட்டத்தில் இருந்தார்கள். அந்த வட்டாரக் கண்காணிகளும், பெத்தேல் ஊழியர்களும் கடவுளுடைய வார்த்தை சொல்வதையும் அமைப்பு சொல்வதையும் அப்படியே செய்தார்கள், அன்பான மேய்ப்பர்களாக இருந்தார்கள். இதையெல்லாம் நான் கண்ணாரப் பார்த்தேன். அவர்கள் எல்லாருமே மனத்தாழ்மையாக நடந்துகொண்டதால், மாவட்டக் கண்காணியாக சேவை செய்வது எனக்கு சுலபமாக இருந்தது. அவர்களுக்கு நான் ரொம்ப நன்றியோடு இருக்கிறேன்.

மறுபடியும் வட்டாரக் கண்காணியாக ஆனேன்

1974-ல், ஆளும் குழு வேறு சில வட்டாரக் கண்காணிகளை மாவட்டக் கண்காணிகளாக நியமித்தார்கள். என்னை மறுபடியும் வட்டாரக் கண்காணியாக சேவை செய்யச் சொன்னார்கள், இந்தத் தடவை தென் கரோலினாவில். அப்போது கருப்பின சகோதரர்களும் வெள்ளையின சகோதரர்களும் சபைகளிலும் வட்டாரங்களிலும் ஒன்றாகக் கூடிவந்தார்கள். இது அவர்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

1976-ன் கடைசியில், நான் ஜார்ஜியாவில் இருந்த ஒரு வட்டாரத்துக்கு நியமிக்கப்பட்டேன். அது அட்லாண்டாவுக்கும் கொலம்பஸ்க்கும் இடையில் இருந்தது. ஒருசமயம், கருப்பினத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகளுடைய சவ அடக்க பேச்சைக் கொடுத்ததை என்னால் மறக்கவே முடியாது. யாரோ சிலர் குண்டு போட்டதால் அவர்களுடைய வீடு எரிந்துவிட்டது. அந்த ஐந்து பிள்ளைகளும் இறந்துவிட்டார்கள். அவர்களுடைய அம்மா காயங்களோடு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரையும் அவருடைய கணவரையும் பார்த்து ஆறுதல் சொல்வதற்காக கருப்பின சகோதரர்களும் வெள்ளையின சகோதரர்களும் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டே இருந்தார்கள். அவர்கள் காட்டிய அன்பைப் பார்த்து மலைத்துப்போனேன். கடவுளுடைய ஊழியர்கள் இதுபோல ஒருவருக்கு ஒருவர் கரிசனையும் அன்பும் காட்டினால், பிரச்சினை புயல்போல் வந்தாலும் அதைச் சமாளிக்க முடியும்.

பெத்தேலில் கற்றுக்கொள்கிறேன், கற்றுக்கொடுக்கிறேன்

1977-ல், ஒரு வேலைக்காக சில மாதங்களுக்கு புருக்லின் பெத்தேலுக்கு எங்களைக் கூப்பிட்டார்கள். அந்த வேலை முடிந்ததும், எனக்கும் ரூபிக்கும் பெத்தேலில் சேவை செய்ய விருப்பமா என்று இரண்டு ஆளும் குழு சகோதரர்கள் கேட்டார்கள். நாங்கள் உடனே ஒத்துக்கொண்டோம்.

24 வருஷங்களாக நான் ஊழிய இலாகாவில் சேவை செய்தேன். சிலசமயம், சகோதரர்கள் கேட்கிற ரொம்ப கஷ்டமான கேள்விகளுக்குக்கூட ஊழிய இலாகா பதில் சொல்ல வேண்டியிருக்கும். பைபிள் நியமங்களின் அடிப்படையில் காலம்காலமாகவே ஆளும் குழு கொடுத்துவரும் வழிநடத்துதலை அடிப்படையாக வைத்துதான் ஊழிய இலாகா எல்லா கேள்விகளுக்கும் பதில் தருகிறது. அதோடு, வட்டாரக் கண்காணிகளுக்கும் மூப்பர்களுக்கும் பயனியர்களுக்கும் பயிற்சியும் கொடுக்கிறது. அதனால், நிறைய சகோதர சகோதரிகள் முதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள், யெகோவாவுடைய அமைப்பும் பலம் அடைந்திருக்கிறது.

மண்டலக் கண்காணியாக, அதாவது தலைமை அலுவலகப் பிரதிநிதியாக, 1995-லிருந்து 2018-வரை நிறைய கிளை அலுவலகங்களுக்கு நான் போயிருக்கிறேன். கிளை அலுவலகக் குழுக்களையும் பெத்தேல் ஊழியர்களையும் மிஷனரிகளையும் சந்தித்து உற்சாகப்படுத்தியிருக்கிறேன். பிரச்சினைகளைச் சமாளிக்க அவர்களுக்கு உதவியிருக்கிறேன். அதேசமயம், அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டு நானும் ரூபியும் உற்சாகம் அடைந்திருக்கிறோம். உதாரணத்துக்கு, 2000-த்தில் நாங்கள் ருவாண்டாவுக்குப் போயிருந்தோம். அங்கிருந்த சகோதர சகோதரிகளும் பெத்தேல் ஊழியர்களும், 1994-ல் நடந்த இனப் படுகொலையை எப்படிச் சமாளித்தார்கள் என்று சொன்னபோது கண் கலங்கிவிட்டோம். அவர்களில் நிறைய பேர், அன்பானவர்களைப் பறிகொடுத்திருந்தார்கள். அப்போதும்கூட தங்கள் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் விட்டுக்கொடுக்கவே இல்லை.

எங்களுடைய 50-வது கல்யாண நாளின்போது

இப்போது எங்களுக்கு 80 வயதுக்குமேல் ஆகிவிட்டது. 20 வருஷங்களாக நான் அமெரிக்க கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்துவருகிறேன். நான் காலேஜுக்குப் போய்ப் படிக்கவில்லை. ஆனால், இருப்பதிலேயே சிறந்த கல்வி எனக்குக் கிடைத்திருக்கிறது. அது, யெகோவாவும் அவருடைய அமைப்பும் கொடுத்த கல்வி. நிரந்தரமான நன்மைகளைக் கொடுக்கிற பைபிள் உண்மைகளை மற்றவர்களுக்கு சொல்லித்தர அது எனக்கு உதவி செய்திருக்கிறது. பைபிள் மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் உதவியிருக்கிறது என்று நான் பார்த்திருக்கிறேன். (2 கொ. 3:5; 2 தீ. 2:2) நல்லபடியாக வாழவும், கடவுளோடு ஒரு நல்ல நட்பை வளர்த்துக்கொள்ளவும் அது அவர்களுக்கு உதவியிருக்கிறது. (யாக். 4:8) யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்கிற வாய்ப்பையும், கற்றுக்கொடுக்கிற வாய்ப்பையும் நழுவவிடவே கூடாது என்று நானும் ரூபியும் எப்போதுமே மற்றவர்களுக்குச் சொல்வோம். ஏனென்றால், அதுதான் யெகோவாவின் ஊழியர்களுக்கு கிடைக்கிற ரொம்ப பெரிய பாக்கியம்!