Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 4

நினைவு நாளில் கலந்துகொள்ள நாம் எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிக்கிறார்

நினைவு நாளில் கலந்துகொள்ள நாம் எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிக்கிறார்

“என் நினைவாக இதைத் தொடர்ந்து செய்யுங்கள்.”—லூக். 22:19.

பாட்டு 19 எஜமானின் இரவு விருந்து

இந்தக் கட்டுரையில்... a

1-2. ஒவ்வொரு வருஷமும் நாம் ஏன் நினைவு நாளில் கலந்துகொள்கிறோம்?

 கிட்டத்தட்ட 2,000 வருஷங்களுக்கு முன்பு இயேசு கிறிஸ்து நமக்காகத் தன்னுடைய உயிரையே கொடுத்தார். இப்படி, நமக்கு முடிவில்லாத வாழ்க்கை கிடைப்பதற்கு ஒரு வழியைத் திறந்து வைத்தார். அவர் செய்த தியாகத்தை நினைத்துப் பார்க்கச் சொல்லி, அவர் இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி அவருடைய சீஷர்களுக்குக் கட்டளை கொடுத்தார். ரொட்டியையும் திராட்சமதுவையும் வைத்து எளிமையான விதத்தில் அதை நினைத்துப் பார்க்கச் சொன்னார்.—1 கொ. 11:23-26.

2 இயேசு கொடுத்த கட்டளைக்கு நாமும் கீழ்ப்படிகிறோம். (யோவா. 14:15) ஏனென்றால், இயேசுமேல் நாம் ரொம்ப அன்பு வைத்திருக்கிறோம். ஒவ்வொரு வருஷமும் நினைவு நாள் சமயத்தில், இயேசு நமக்காகச் செய்த தியாகத்துக்கு நாம் நன்றி காட்டுகிறோம். எப்படி? இயேசு கொடுத்த மீட்புவிலையால் நமக்கு என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதை ஆழமாக யோசித்துப் பார்க்கிறோம். அதற்காக நன்றி சொல்லி ஜெபம் செய்கிறோம். அதோடு, நிறைய ஊழியம் செய்கிறோம். எவ்வளவு பேரை முடியுமோ அவ்வளவு பேரை நினைவு நாளுக்குக் கூப்பிடுகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, என்ன பிரச்சினை வந்தாலும் நினைவு நாளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதில் நாம் தீர்மானமாக இருக்கிறோம்.

3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 இயேசுவின் மரண நினைவு நாளை யெகோவாவின் மக்கள் மிக முக்கியமான நாளாக நினைக்கிறார்கள். அதை மூன்று விதங்களில் அவர்கள் காட்டுகிறார்கள்: (1) இயேசு சொன்ன விதத்திலேயே நினைவு நாளை அனுசரிக்கிறார்கள். (2) நினைவு நாளுக்கு மற்றவர்களையும் கூப்பிடுகிறார்கள். (3) தடைகளையும் தாண்டி நினைவு நாளில் கலந்துகொள்கிறார்கள். இதையெல்லாம் எப்படிச் செய்கிறார்கள் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

இயேசு சொன்ன விதத்திலேயே அனுசரிக்கிறோம்

4. ஒவ்வொரு வருஷமும் நினைவு நாள் பேச்சில் என்னென்ன கேள்விகளுக்கெல்லாம் நமக்குப் பதில் கிடைக்கிறது, அந்த உண்மைகளை நாம் ஏன் லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது? (லூக்கா 22:19, 20)

4 ஒவ்வொரு வருஷமும் நினைவு நாள் நிகழ்ச்சியில் பைபிளின் அடிப்படையில் ஒரு பேச்சு கொடுக்கப்படுகிறது. அந்தப் பேச்சில், நிறையக் கேள்விகளுக்கு நமக்குத் தெளிவான பதில் கிடைக்கிறது. மனிதர்களுக்கு ஏன் மீட்புவிலை தேவை... ஒருவர் இறந்ததால் எப்படி நிறையப் பேர் பாவத்திலிருந்து விடுதலையாக முடியும்... ரொட்டியும் திராட்சமதுவும் எதற்கு அடையாளமாக இருக்கின்றன... அதை யார் சாப்பிட வேண்டும்... என்றெல்லாம் தெரிந்துகொள்வோம். (லூக்கா 22:19, 20-ஐ வாசியுங்கள்.) பூமியில் வாழப்போகிறவர்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்றும்கூட அந்தப் பேச்சில் தெரிந்துகொள்வோம். (ஏசா. 35:5, 6; 65:17, 21-23) இந்த உண்மைகளையெல்லாம் நாம் லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது. லட்சக்கணக்கான ஆட்களுக்கு இதெல்லாம் தெரியாது. இயேசுவின் மீட்புப் பலி எவ்வளவு முக்கியமானது என்றும்கூட அவர்களுக்குத் தெரியாது. அதோடு, இயேசு சொன்ன விதத்தில் அவருடைய மரண நினைவு நாளை அவர்கள் அனுசரிப்பதில்லை. ஏன்?

5. பெரும்பாலான அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு இயேசுவின் நினைவு நாளை மக்கள் எப்படி அனுசரிக்க ஆரம்பித்தார்கள்?

5 பெரும்பாலான அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு போலி கிறிஸ்தவர்கள் சபைக்குள்ளே நுழைய ஆரம்பித்தார்கள். (மத். 13:24-27, 37-39) “சீஷர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வதற்காக உண்மைகளைத் திரித்துச்” சொன்னார்கள். (அப். 20:29, 30) அவர்கள் அப்படித் ‘திரித்துச் சொன்ன’ ஒரு விஷயத்தை இப்போது பார்க்கலாம். “பலருடைய பாவங்களைச் சுமப்பதற்காக எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாக” இயேசு பலி கொடுத்தார் என்று பைபிள் சொல்கிறது. ஆனால், அவர்கள் அந்தப் பலியைத் திரும்பத் திரும்பக் கொடுக்க வேண்டுமென்று மாற்றிச் சொன்னார்கள். (எபி. 9:27, 28) இன்றைக்கும் நிறையப் பேர் இந்தப் பொய்யை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சர்ச்சுக்கு அடிக்கடி போய் அல்லது தினமும் போய் மாஸில் கலந்துகொள்கிறார்கள். அதை திருப்பலி பூசை என்று சொல்வார்கள். b மற்ற சில கிறிஸ்தவர்கள் இவ்வளவு அடிக்கடி இயேசு கிறிஸ்துவின் மரணத்தை அனுசரிப்பதில்லை. அதேசமயத்தில், அவர்களில் நிறையப் பேருக்கு இயேசுவின் பலியைப் பற்றி விவரமாக எதுவும் தெரியாது. ‘இயேசு பலி கொடுத்ததால் என் பாவங்கள் எப்படி மன்னிக்கப்படும்?’ என்று சிலர் சந்தேகப்படலாம். ஏன் அப்படிச் சந்தேகப்படுகிறார்கள்? இயேசுவின் பலியினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படாது என்று நினைக்கிறவர்கள் இவர்களுடைய மனதைக் கெடுத்திருக்கலாம். இயேசுவின் உண்மையான சீஷர்கள் இப்படிப்பட்ட மக்களுக்கு எப்படி உதவி செய்திருக்கிறார்கள்?

6. 1872-க்குள் பைபிள் மாணாக்கர்கள் சிலர் என்ன முடிவுக்கு வந்தார்கள்?

6 1870-களில் சார்ல்ஸ் டேஸ் ரஸலின் தலைமையில் பைபிள் மாணக்கர்கள் சிலர் பைபிளை ஆழமாக ஆராய்ச்சி பண்ணி படிக்க ஆரம்பித்தார்கள். இயேசுவின் பலி எவ்வளவு முக்கியமானது, அவருடைய மரணத்தை எப்படி அனுசரிக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் தெரிந்துகொள்ள நினைத்தார்கள். எல்லாருக்காகவும்தான் இயேசு மீட்புப் பலியைக் கொடுத்தார் என்று 1872-க்குள் பைபிளிலிருந்து அவர்கள் கண்டுபிடித்தார்கள். கண்டுபிடித்த உண்மைகளை தங்களுக்குள்ளேயே அவர்கள் வைத்துக்கொள்ளவில்லை. புத்தகங்கள், செய்தித்தாள்கள், பத்திரிகைகள் என எல்லாவற்றிலும் அந்த உண்மைகளைப் பரப்பினார்கள். அதற்குப் பிறகு, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே வருஷத்துக்கு ஒரே ஒரு தடவை நினைவு நாள் நிகழ்ச்சியை அனுசரிக்க ஆரம்பித்தார்கள்.

7. அன்று பைபிள் மாணாக்கர்கள் செய்த ஆராய்ச்சி இன்று நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கிறது?

7 ரொம்ப வருஷங்களுக்கு முன்பு பைபிள் மாணாக்கர்கள் செய்த அந்த ஆராய்ச்சி இன்று நமக்கும் பிரயோஜனமாக இருக்கிறது. எப்படி? யெகோவாவின் உதவியோடு, இயேசுவின் மீட்புப் பலி எவ்வளவு முக்கியமானது என்றும், அதனால் மனிதர்களுக்கு என்ன நன்மை என்றும் நாம் புரிந்துகொண்டோம். (1 யோ. 2:1, 2) அதோடு, கடவுளுக்குப் பிடித்த மாதிரி வாழ்பவர்களுக்கு இரண்டு விதமான நம்பிக்கை இருக்கிறது என்று நாம் தெரிந்துகொண்டோம். சிலருக்கு பரலோகத்தில் சாவாமை உள்ள வாழ்க்கையும், மற்ற லட்சக்கணக்கானவர்களுக்கு இந்தப் பூமியில் என்றென்றும் வாழ்கிற வாழ்க்கையும் கிடைக்கும் என்று நாம் தெரிந்துகொண்டோம். யெகோவா நம்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதையும், இயேசுவின் பலி நமக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும் என்பதையும் பற்றி ஆழமாக யோசிக்கும்போது நாம் யெகோவாவிடம் இன்னும் நெருங்கிப்போகிறோம். (1 பே. 3:18; 1 யோ. 4:9) அதனால், அந்த பைபிள் மாணாக்கர்களைப் போலவே இயேசுவின் நினைவு நாளில் கலந்துகொள்வதற்காக மற்றவர்களையும் கூப்பிடுகிறோம்.

நினைவு நாளுக்கு மற்றவர்களையும் அழைக்கிறோம்

நினைவு நாள் அழைப்பிதழ்களைக் கொடுக்கிற விசேஷ ஊழியத்தில் நீங்கள் முழுமையாகக் கலந்துகொள்வதற்கு என்ன செய்யலாம்? (பாராக்கள் 8-10) e

8. நினைவு நாளுக்கு மற்றவர்களைக் கூப்பிடுவதற்காக யெகோவாவின் மக்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள்? (படத்தைப் பாருங்கள்.)

8 யெகோவாவின் மக்கள் காலம் காலமாகவே நினைவு நாளுக்கு மற்றவர்களைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். 1881-ல் அமெரிக்காவிலிருந்த எல்லா சகோதர சகோதரிகளும் பென்ஸில்வேனியாவில் உள்ள அலிகென்னியில் இருக்கிற ஒரு சகோதரருடைய வீட்டில் ஒன்றாகக் கூடிவந்து நினைவு நாளை அனுசரித்தார்கள். அதற்குப் பிறகு, ஒவ்வொரு சபையிலும் தனித்தனியாக நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. மார்ச் 1940-ல், ஆர்வம் காட்டுகிற எல்லாரையுமே இந்த நிகழ்ச்சிக்குக் கூப்பிடலாம் என்று பிரஸ்தாபிகளுக்கு அமைப்பு சொன்னது. 1960-ல், முதல் தடவையாக பெத்தேலில் நினைவு நாள் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு சபைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதுமுதல், லட்சக்கணக்கான அழைப்பிதழ்களை எல்லாருக்கும் கொடுத்திருக்கிறோம். நாம் ஏன் இவ்வளவு நேரமும் முயற்சியும் எடுத்து மற்றவர்களை நினைவு நாளுக்குக் கூப்பிடுகிறோம்?

9-10. நினைவு நாளுக்கு நாம் யாரையெல்லாம் கூப்பிடுகிறோம், அதில் கலந்துகொள்வதால் அவர்கள் எப்படி நன்மை அடைகிறார்கள்? (யோவான் 3:16)

9 நினைவு நாளுக்குப் புதியவர்களை நாம் கூப்பிடுவதற்கான ஒரு காரணம், யெகோவாவும் இயேசுவும் நமக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். (யோவான் 3:16-ஐ வாசியுங்கள்.) அங்கே அவர்கள் பார்க்கிற விஷயங்களும் கேட்கிற விஷயங்களும், இன்னும் நிறையத் தெரிந்துகொண்டு யெகோவாவின் மக்களாக ஆக அவர்களைத் தூண்டும் என்று நாம் நம்புகிறோம். அதேசமயத்தில், நிகழ்ச்சிக்கு வருகிற மற்றவர்களுக்கும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.

10 ஒருகாலத்தில் யெகோவாவுக்குச் சுறுசுறுப்பாகச் சேவை செய்தவர்களைக்கூட நாம் நினைவு நாளுக்குக் கூப்பிடுகிறோம். யெகோவா இன்னும் அவர்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக அப்படிச் செய்கிறோம். நிறையப் பேர் நம்முடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது நமக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நினைவு நாளில் கலந்துகொள்ளும்போது, அவர்கள் ஒருசமயத்தில் யெகோவாவுக்கு எவ்வளவு சந்தோஷமாகச் சேவை செய்தார்கள் என்று யோசித்துப் பார்ப்பார்கள். சகோதரி மோனிகாவுடைய அனுபவத்தைப் பார்க்கலாம். c அவர் செயலற்ற பிரஸ்தாபியாக இருந்தார். கோவிட்-19 சமயத்தில் அவர் மறுபடியும் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். 2021 நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவர் இப்படிச் சொன்னார்: “இந்த நினைவு நாள் நிகழ்ச்சி எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏனென்றால், 20 வருஷத்துக்குப் பிறகு முதல் தடவையாக மற்றவர்களுக்கு நான் சாட்சி கொடுத்தேன். நினைவு நாளுக்கு எல்லாரையும் கூப்பிடுவதற்காக என்னால் முடிந்ததையெல்லாம் செய்தேன். ஏனென்றால், யெகோவாவும் இயேசுவும் எனக்காகச் செய்த தியாகத்துக்கு நன்றி காட்ட ஆசைப்பட்டேன்.” (சங். 103:1-4) மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ நம்மால் முடிந்தளவு நிறையப் பேரை நினைவு நாளுக்கு நாம் கூப்பிடுகிறோம். ஏனென்றால், நாம் எடுக்கிற முயற்சியை யெகோவா ரொம்ப பெரிதாகப் பார்க்கிறார் என்று நமக்குத் தெரியும்.

11. நினைவு நாளுக்கு மற்றவர்களைக் கூப்பிடுவதற்காக நாம் எடுக்கிற முயற்சிகளை யெகோவா எப்படி ஆசீர்வதித்திருக்கிறார்? (ஆகாய் 2:7)

11 நினைவு நாளுக்கு மக்களைக் கூப்பிடுவதற்காக நாம் எடுத்திருக்கும் முயற்சிகளை யெகோவா பெரிய அளவில் ஆசீர்வதித்திருக்கிறார். 2021-ல், கோவிட்-19 காரணமாக சில கட்டுப்பாடுகள் இருந்தபோதுகூட இதுவரை இல்லாத அளவுக்கு 2,13,67,603 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இது உலகம் முழுக்க இருக்கிற யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கையைவிட கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு அதிகம். ஆனால், யெகோவாவுக்கு எண்ணிக்கை முக்கியமல்ல. அங்கே வரும் ஒவ்வொருவரும்தான் முக்கியம். (லூக். 15:7; 1 தீ. 2:3, 4) நினைவு நாளுக்காக நாம் அழைப்பிதழ்கள் கொடுக்கிறபோது, நல்மனமுள்ள ஆட்களைக் கண்டுபிடிக்க யெகோவா உதவி செய்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.—ஆகாய் 2:7-ஐ வாசியுங்கள்.

தடைகளையும் தாண்டி நினைவு நாளில் கலந்துகொள்கிறோம்

நினைவு நாளை அனுசரிப்பதற்காக நாம் எடுக்கிற முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிக்கிறார் (பாரா  12) f

12. நினைவு நாளில் கலந்துகொள்வது சிலசமயம் நமக்கு ஏன் கஷ்டமாகிவிடலாம்? (படத்தைப் பாருங்கள்.)

12 கடைசி நாட்களில் குடும்பத்திலிருந்து எதிர்ப்பு... துன்புறுத்தல்... போர்... கொள்ளை நோய்... போன்ற ஏகப்பட்ட பிரச்சினைகள் நமக்கு வரும் என்று இயேசு முன்கூட்டியே சொல்லியிருக்கிறார். (மத். 10:36; மாற். 13:9; லூக். 21:10, 11) சிலசமயம், இப்படிப்பட்ட பிரச்சினைகளால் நினைவு நாளில் கலந்துகொள்வது நமக்குக் கஷ்டமாகிவிடலாம். இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி நினைவு நாளில் கலந்துகொள்வதற்கு சகோதர சகோதரிகள் என்ன செய்திருக்கிறார்கள்? அவர்களுக்கு யெகோவா எப்படி உதவி செய்திருக்கிறார்?

13. ஜெயிலில் இருந்தாலும் நினைவு நாளை அனுசரிக்க வேண்டும் என்று தைரியமாக முடிவெடுத்த ஆர்டியமை யெகோவா எப்படி ஆசீர்வதித்தார்?

13 ஜெயிலில் இருக்கும்போது. விசுவாசத்துக்காக சிறையில் இருக்கிற நம்முடைய சகோதர சகோதரிகள் நினைவு நாளை அனுசரிப்பதற்காகத் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறார்கள். சகோதரர் ஆர்டியமின் உதாரணத்தைக் கவனியுங்கள். 2020 நினைவு நாள் சமயத்தில் அவர் ஜெயிலில் இருந்தார். அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறை 183 சதுர அடிதான் இருந்தது. ஒரே சமயத்தில் அந்த அறையில் நான்கு அல்லது ஐந்து கைதிகள் இருந்தார்கள். ஆர்டியம் ஜெயிலில் இருந்தாலும் தன்னிடம் இருந்ததை வைத்து நினைவு நாள் சின்னங்களை எப்படியோ ரெடி பண்ணிவிட்டார். தனக்குத்தானே நினைவு நாள் பேச்சைக் கொடுப்பதற்கும் தயாரானார். ஆனால் பிரச்சினை என்னவென்றால், அவரோடு இருந்த கைதிகள் சிகரெட் பிடித்தார்கள், நிறையக் கெட்ட வார்த்தை பேசினார்கள். அதனால், அவர் என்ன செய்தார்? ஒரு மணிநேரத்துக்கு மட்டும் அதையெல்லாம் செய்யாமல் இருக்க முடியுமா என்று அவர்களிடம் கேட்டார். ஆச்சரியம் என்னவென்றால், அதற்கு அந்தக் கைதிகள் ஒத்துக்கொண்டார்கள். “நினைவு நாளைப் பற்றிச் சொல்லட்டுமா?” என்று ஆர்டியம் கேட்டபோது, வேண்டாம் என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால், ஆர்டியம் நினைவு நாள் நிகழ்ச்சியை அனுசரித்ததைப் பார்த்த பிறகு அவர்களே வந்து அதைப் பற்றிக் கேட்டார்கள்.

14. கோவிட்-19 வந்தபோதுகூட நினைவு நாள் நிகழ்ச்சியை அனுசரிப்பதற்காக யெகோவாவின் மக்கள் என்னவெல்லாம் முயற்சி பண்ணினார்கள்?

14 கோவிட்-19 வந்தபோது. கோவிட் பெருந்தொற்று வந்தபோது நினைவு நாள் நிகழ்ச்சியை நேரில் நடத்த முடியாத சூழ்நிலை இருந்தது. ஆனால், அதற்காக யெகோவாவின் சாட்சிகள் அதை நடத்தாமல் விட்டுவிடவில்லை. d இன்டர்நெட் வசதியிருந்த சபைகள் நினைவு நாள் நிகழ்ச்சியை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக நடத்தினார்கள். ஆனால், இன்டர்நெட் வசதியில்லாத லட்சக்கணக்கானவர்களுக்கு என்ன ஏற்பாடு செய்யப்பட்டது? சில நாடுகளில், டிவியிலோ ரேடியோவிலோ நினைவு நாள் பேச்சு ஒளிபரப்பப்பட்டது. அதுமட்டுமல்ல, மூலைமுடுக்கில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்காக நினைவு நாள் பேச்சை 500-க்கும் அதிகமான மொழிகளில் கிளை அலுவலகங்கள் ரெக்கார்ட் செய்தன. சில சகோதரர்கள், ரெக்கார்ட் செய்யப்பட்ட பேச்சை அந்தச் சகோதர சகோதரிகளுக்குக் கொண்டுபோய்க் கொடுத்தார்கள்.

15. ஸூ என்ற பெண்ணின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

15 குடும்பத்தில் எதிர்ப்பு வரும்போது. குடும்பத்தில் இருக்கிறவர்கள் எதிர்ப்பதால் சிலருக்கு நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. பைபிள் படிப்பு படித்துக்கொண்டிருந்த ஸூ என்ற பெண்ணுடைய உதாரணத்தைக் கவனியுங்கள். 2021-ல், நினைவு நாளுக்குத் தன்னால் வர முடியாது என்று அதற்கு முந்தின நாள் ஸூ தனக்கு பைபிள் படிப்பு எடுத்த சகோதரியிடம் சொன்னார். வீட்டில் எதிர்ப்பு இருப்பதால் நினைவு நாளுக்கு வருவது கஷ்டம் என்று சொன்னார். நம்முடைய சகோதரி அவருக்கு லூக்கா 22:44-ஐக் காட்டினார். அதோடு, கஷ்டம் வரும்போது இயேசு மாதிரியே நாமும் யெகோவாவிடம் ஜெபம் பண்ண வேண்டும், அவரை முழுமையாக நம்ப வேண்டும் என்று அவரிடம் சொன்னார். அடுத்த நாள் ஸூ நினைவு நாள் சின்னங்களைத் தயார் பண்ணினார். jw.org-ல் விசேஷ காலை வழிபாடு நிகழ்ச்சியையும் பார்த்தார். பிறகு, சாயங்காலம் தன்னுடைய ரூமுக்குள் தனியாகப் போய் ஃபோன் மூலமாக நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதற்குப் பிறகு நம்முடைய சகோதரிக்கு அதைப் பற்றி எழுதி அனுப்பினார். அதில், “நேற்று நீங்கள் எனக்கு ரொம்ப தைரியம் சொன்னீர்கள். அதனால் நினைவு நாளில் கலந்துகொள்வதற்காக என்னால் முடிந்த எல்லாவற்றையும் நான் செய்தேன். மற்றதை யெகோவா பார்த்துக்கொண்டார். நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன், எவ்வளவு நன்றியோடு இருக்கிறேன் என்று சொல்ல வார்த்தைகளே இல்லை” என்று எழுதியிருந்தார். இதே மாதிரி ஒரு சூழ்நிலை உங்களுக்கு வந்தால், யெகோவாவால் உங்களுக்கும் உதவி செய்ய முடியும் என்று நம்புகிறீர்களா?

16. நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாம் எடுக்கிற முயற்சியை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்று நாம் ஏன் சொல்லலாம்? (ரோமர் 8:31, 32)

16 இயேசுவின் மரணத்தை நினைத்துப் பார்ப்பதற்காக நாம் எடுக்கிற ஒவ்வொரு முயற்சியையும் யெகோவா ரொம்ப உயர்வாக மதிக்கிறார். அவர் நமக்காக செய்த தியாகத்துக்கு நாம் நன்றி காட்டும்போது அவர் நிச்சயம் நம்மை ஆசீர்வதிப்பார். (ரோமர் 8:31, 32-ஐ வாசியுங்கள்.) அதனால், இந்த வருஷம் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கும், நினைவு நாள் சமயத்தில் யெகோவாவுக்கு இன்னும் நிறையச் சேவை செய்வதற்கும் நாம் தீர்மானமாக இருக்கலாம்.

பாட்டு 18 மீட்புவிலைக்கு நன்றி

a ஏப்ரல் 4, 2023, செவ்வாய்க்கிழமை அன்று, இயேசு கிறிஸ்துவின் மரண நினைவு நாளை உலகம் முழுக்க இருக்கிற லட்சக்கணக்கான ஆட்கள் அனுசரிப்பார்கள். நிறையப் பேர் அதில் முதல் தடவையாகக் கலந்துகொள்வார்கள். ஒருகாலத்தில் யெகோவாவுக்குச் சுறுசுறுப்பாக சேவை செய்துகொண்டிருந்தவர்கள்கூட ரொம்ப வருஷங்கள் கழித்து அதில் கலந்துகொள்வார்கள். இன்னும் சிலர், பல தடைகளைத் தாண்டி அதில் கலந்துகொள்வார்கள். உங்களுடைய சூழ்நிலைமை எதுவாக இருந்தாலும் சரி, நினைவு நாளில் கலந்துகொள்வதற்காக நீங்கள் எடுக்கிற முயற்சியைப் பார்த்து யெகோவா கண்டிப்பாக சந்தோஷப்படுவார்.

b இந்தப் பூசையில் அப்பமும் திராட்சமதுவும் நிஜமாகவே இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுவதாக அவர்கள் நம்புகிறார்கள். ஒருவர் இந்தச் சடங்கில் கலந்துகொள்கிற ஒவ்வொரு தடவையும் இயேசுவின் உடலும் இரத்தமும் பலி கொடுக்கப்படுவதாக அவர்கள் சொல்கிறார்கள்.

c சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

d “2021 நினைவு நாள் நிகழ்ச்சி” என்ற தலைப்பில் இருக்கிற கட்டுரைகளை jw.org-ல் பாருங்கள்.

e பட விளக்கம்: 1960-லிருந்து நினைவு நாள் அழைப்பிதழ்களில் நிறையப் புதுப் புது மாற்றங்கள் வந்திருக்கின்றன. இப்போது அது பிரிண்ட்டிலும் எலெக்ட்ரானிக் வடிவிலும் கிடைக்கிறது.

f பட விளக்கம்: உள்ளூர் கலவரம் நடக்கிற சமயத்தில்கூட சகோதர சகோதரிகள் நினைவு நாளை அனுசரித்தது நடித்துக் காட்டப்பட்டிருக்கிறது.