Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 5

’கிறிஸ்துவின் அன்பு நம்மைத் தூண்டியெழுப்புகிறது’

’கிறிஸ்துவின் அன்பு நம்மைத் தூண்டியெழுப்புகிறது’

‘கிறிஸ்துவின் அன்பு நம்மைத் தூண்டியெழுப்புகிறது . . . அவர் எல்லாருக்காகவும் இறந்திருப்பதால், வாழ்கிறவர்கள் இனி தங்களுக்காக வாழக் கூடாது.’—2 கொ. 5:14, 15.

பாட்டு 13 ஏசு நமக்கு முன்மாதிரி

இந்தக் கட்டுரையில்... a

1-2. (அ) இயேசு பூமியில் இருந்த சமயத்தில் சொன்ன விஷயங்களையும் செய்த விஷயங்களையும் பற்றி யோசிக்கும்போது நம்முடைய மனதுக்கு எப்படி இருக்கும்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்?

 நமக்குப் பிடித்த யாராவது இறந்துவிட்டால், அவர்களுடைய பிரிவை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியாது. அதுவும் அவர்கள் கஷ்டப்பட்டு இறந்திருந்தால், ஆரம்பத்தில் அதையே நினைத்து நினைத்து நாம் ரொம்ப வேதனைப்படுவோம். ஆனால் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அவர்கள் நமக்குச் சொல்லிக்கொடுத்த ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றியோ, நம்மை உற்சாகப்படுத்துவதற்காக அவர்கள் செய்த அல்லது சொன்ன ஒரு விஷயத்தைப் பற்றியோ யோசிக்கும்போது நமக்கு சந்தோஷம் கிடைக்கும்.

2 அதேபோல், இயேசு எவ்வளவு கஷ்டப்பட்டு இறந்துபோனார் என்பதைப் படிக்கும்போது நம்முடைய மனதுக்கு ரொம்ப வேதனையாக இருக்கும். இயேசு நமக்காக எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கிறார் என்பதை முக்கியமாக நினைவு நாள் சமயத்தில் நாம் நினைத்துப் பார்ப்போம். (1 கொ. 11:24, 25) ஆனாலும், இயேசு பூமியில் இருந்த சமயத்தில் என்னவெல்லாம் சொன்னார் என்பதையும் செய்தார் என்பதையும் யோசித்துப் பார்க்கும்போது, நமக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அதுமட்டுமல்ல, அவர் இப்போது என்ன செய்கிறார், இனிமேல் நமக்காக என்ன செய்யப்போகிறார் என்பதை நினைத்துப் பார்க்கும்போதும் நமக்கு உற்சாகம் கிடைக்கும். இந்த விஷயங்களைப் பற்றியும் அவர் நம்மேல் வைத்திருக்கிற அன்பைப் பற்றியும் ஆழமாக யோசிக்கும்போது, அதற்கு நன்றி காட்ட வேண்டும் என்ற ஆசை நமக்கு வரும். எப்படியெல்லாம் நாம் நன்றி காட்டலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

நன்றியுணர்வு இயேசுவைத் தொடர்ந்து பின்பற்ற நம்மைத் தூண்டுகிறது

3. மீட்புப் பலிக்கு நாம் நன்றியோடு இருப்பதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றன?

3 இயேசுவின் வாழ்க்கையைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் நாம் யோசிக்கும்போது நம்முடைய மனதில் நன்றியுணர்வு பொங்குகிறது. இயேசு இந்தப் பூமியில் ஊழியம் செய்தபோது, கடவுளுடைய அரசாங்கம் என்னென்ன ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என்று மக்களுக்குச் சொன்னார். மீட்புவிலையைப் பற்றியும் அதனால் நமக்குக் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றியும் பைபிளில் படிக்கும்போது நமக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இயேசுவுடைய மீட்புப் பலியால்தான் யெகோவாவோடும் இயேசுவோடும் நம்மால் நல்ல நண்பர்களாக இருக்க முடிகிறது. அதனால் நாம் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். இயேசுவின்மேல் விசுவாசம் வைக்கும்போது, என்றென்றும் வாழ்கிற வாழ்க்கை நமக்குக் கிடைக்கும். அதோடு, இறந்துபோன நம்முடைய அன்பானவர்களை மறுபடியும் பார்க்கிற வாய்ப்பும் கிடைக்கும். (யோவா. 5:28, 29; ரோ. 6:23) இந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு நமக்கு எந்தத் தகுதியும் இல்லை. அதேபோல், யெகோவாவும் இயேசுவும் நமக்குச் செய்த எல்லாவற்றுக்கும் கைமாறாக நம்மால் எதையும் செய்ய முடியாது. (ரோ. 5:8, 20, 21) ஆனால், அதற்கெல்லாம் நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம் என்பதைக் காட்ட முடியும். எப்படி?

மகதலேனா மரியாளின் உதாரணத்தைப் பற்றி யோசித்துப் பார்ப்பது யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் நன்றி காட்ட உங்களை எப்படித் தூண்டுகிறது? (பாராக்கள் 4-5)

4. இயேசு செய்த உதவிக்கு மகதலேனா மரியாள் எப்படி நன்றி காட்டினாள்? (படத்தைப் பாருங்கள்.)

4 மகதலேனா மரியாள் என்ற யூதப் பெண்ணின் உதாரணத்தைக் கவனியுங்கள். ஏழு பேய்கள் அவளைப் பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தன. அந்தச் சித்திரவதையிலிருந்து தப்பிக்க வழியே இல்லை என்று அவள் நினைத்திருக்கலாம். ஆனால், அந்தப் பேய்களுடைய பிடியிலிருந்து இயேசு அவளை விடுதலை பண்ணியபோது அவள் எவ்வளவு நன்றியோடு இருந்திருப்பாள் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! அந்த நன்றியைக் காட்டுவதற்காக அவள் இயேசுவுடைய சீஷராக ஆனாள். தன்னுடைய நேரம், சக்தி, பொருள்கள் எல்லாவற்றையும் பயன்படுத்தி இயேசுவுக்குச் சேவை செய்தாள். (லூக். 8:1-3) இயேசு செய்த உதவி மரியாளுக்கு ஒரு பெரிய விஷயமாக இருந்தது. ஆனால், அதைவிட பெரிய ஒரு உதவியை இயேசு செய்யப்போகிறார் என்பது அப்போது ஒருவேளை அவளுக்குத் தெரிந்திருக்காது. அதாவது இயேசு ‘தன்மேல் விசுவாசம் வைக்கிறவர்களுக்கு’ முடிவில்லாத வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய உயிரையே கொடுக்கப்போகிறார் என்பது அவளுக்குத் தெரிந்திருக்காது. (யோவா. 3:16) ஆனாலும், மரியாள் இயேசுவுக்கு உண்மையாக இருந்தாள். இந்த விதத்தில் இயேசுவுக்கு நன்றியைக் காட்டினாள். இயேசு சித்திரவதைக் கம்பத்தில் அறையப்பட்டிருந்தபோது, அவருக்கும் மற்றவர்களுக்கும் ஆதரவாக அவர்களுக்குப் பக்கத்திலேயே மரியாள் நின்றுகொண்டிருந்தாள். (யோவா. 19:25) இயேசு இறந்த பிறகு அவருடைய உடம்பில் நறுமணப் பொருள்களைப் பூசுவதற்காக மரியாளும் இன்னும் இரண்டு பெண்களும் அவற்றைக் கல்லறைக்கு எடுத்துக்கொண்டு போனார்கள். (மாற். 16:1, 2) மரியாள் இயேசுவுக்கு உண்மையாக இருந்ததால் யெகோவா அவளுக்கு ஒரு பெரிய ஆசீர்வாதத்தைக் கொடுத்தார். நிறைய சீஷர்களுக்குக் கிடைக்காத ஒரு வாய்ப்பு, அதாவது உயிரோடு எழுப்பப்பட்ட இயேசுவைப் பார்த்துப் பேசுவதற்கான வாய்ப்பு, மரியாளுக்குக் கிடைத்தது.—யோவா. 20:11-18.

5. யெகோவாவும் இயேசுவும் நமக்குச் செய்திருக்கிற உதவிக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்?

5 யெகோவாவும் இயேசுவும் நமக்குச் செய்த உதவிக்கு நாமும் நன்றி காட்டலாம். எப்படி? நம்முடைய நேரம், சக்தி, பணம், பொருள் எல்லாவற்றையும் பயன்படுத்தி அவருக்கு நாம் சேவை செய்யலாம். உதாரணத்துக்கு, யெகோவாவை வணங்குவதற்காக நாம் பயன்படுத்துகிற கட்டிடங்களைக் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் நாம் உதவி செய்யலாம்.

யெகோவாமேலும் இயேசுமேலும் இருக்கும் அன்பு மற்றவர்கள்மேல் அன்பு காட்ட நம்மைத் தூண்டுகிறது

6. மீட்புப் பலி நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கிற அன்பளிப்பு என்று ஏன் சொல்லலாம்?

6 யெகோவாவும் இயேசுவும் நம்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று நாம் யோசிக்கும்போது, நாமும் அவர்கள்மேல் அன்பு காட்ட வேண்டும் என்ற ஆசை நமக்கு வருகிறது. (1 யோ. 4:10, 19) அதுவும் இயேசு நம் ஒவ்வொருவருக்காகவும் உயிரைக் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும்போது அவர்மேல் நமக்கு இருக்கிற அன்பு இன்னும் அதிகமாகிறது. அப்போஸ்தலன் பவுலுக்கும் இதுதான் நடந்தது. அவர் கலாத்தியருக்கு எழுதியபோது, “கடவுளுடைய மகன் . . . என்மேல் அன்பு வைத்து எனக்காகத் தன்னையே தியாகம் செய்தார்” என்று நன்றியுணர்வோடு சொன்னார். (கலா. 2:20) மீட்புப் பலியின் அடிப்படையில் யெகோவா தன்னிடம் உங்களை ஈர்த்திருக்கிறார். இப்படி, தன்னுடைய நண்பராகும் வாய்ப்பை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். (யோவா. 6:44) யெகோவா உங்களிடம் இருக்கிற ஏதோ ஒரு நல்ல விஷயத்தைப் பார்த்திருக்கிறார்... உங்களை நண்பராக்கிக்கொள்வதற்காக ஒரு பெரிய விலையைக் கொடுத்திருக்கிறார்... என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது? ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது, இல்லையா? யெகோவாமேலும் இயேசுமேலும் உங்களுக்கு இருக்கிற அன்பு இன்னும் அதிகமாகிறது, இல்லையா? ‘இந்த அன்பு என்ன செய்ய என்னைத் தூண்ட வேண்டும்?’ என்று நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

யெகோவாமேலும் இயேசுமேலும் நாம் வைத்திருக்கிற அன்பு, எல்லா விதமான மக்களிடமும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சொல்ல நம்மைத் தூண்டுகிறது (பாரா 7)

7. படத்தில் பார்க்கிறபடி, யெகோவாமேலும் இயேசுமேலும் நமக்கு அன்பு இருக்கிறது என்பதை எப்படிக் காட்டலாம்? (2 கொரிந்தியர் 5:14, 15; 6:1, 2)

7 யெகோவாமேலும் இயேசுமேலும் நாம் வைத்திருக்கிற அன்பு மற்றவர்கள்மேல் அன்பு காட்ட நம்மைத் தூண்டுகிறது. (2 கொரிந்தியர் 5:14, 15; 6:1, 2-ஐ வாசியுங்கள்.) அந்த அன்பைக் காட்டுவதற்கு ஒரு வழி பிரசங்க வேலையை மும்முரமாகச் செய்வதுதான். பார்க்கிற எல்லாரிடமும் நாம் பேசுகிறோம். அவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், அவர்கள் படித்தவர்களா, படிக்காதவர்களா, ஏழைகளா, பணக்காரர்களா என்றெல்லாம் நாம் பார்ப்பதே இல்லை. இப்படி, பாகுபாடு பார்க்காமல் எல்லாரிடமும் பேசும்போது யெகோவாவின் விருப்பத்தை நாம் செய்கிறோம். “எல்லா விதமான மக்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும் அவருடைய விருப்பம்.”—1 தீ. 2:4.

8. நம்முடைய சகோதர சகோதரிகள்மேல் நாம் எப்படி அன்பு காட்டலாம்?

8 யெகோவாமேலும் இயேசுமேலும் அன்பு இருப்பதைக் காட்டுவதற்கு இன்னொரு வழி, நம்முடைய சகோதர சகோதரிகள்மேல் அன்பு காட்டுவதுதான். (1 யோ. 4:21) அவர்கள் ஒவ்வொருவர்மேலும் நாம் அக்கறை காட்டுகிறோம். அவர்கள் கஷ்டப்படுகிறபோது அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கிறோம். அன்பானவர்களை இழந்து அவர்கள் தவிக்கிறபோது நாம் ஆறுதல் சொல்கிறோம். அவர்கள் உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது அவர்களைப் போய்ப் பார்க்கிறோம். அவர்கள் சோர்ந்துபோயிருக்கும்போது நாம் அவர்களை உற்சாகப்படுத்துகிறோம். (2 கொ. 1:3-7; 1 தெ. 5:11, 14) அதோடு, அவர்களுக்காக நாம் எப்போதும் ஜெபம் செய்கிறோம். ஏனென்றால், “நீதிமானின் மன்றாட்டு மிகவும் வலிமையுள்ளது” என்று பைபிள் சொல்கிறது.—யாக். 5:16

9. சகோதர சகோதரிகள்மேல் நமக்கு அன்பு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்கு இன்னொரு வழி என்ன?

9 சகோதர சகோதரிகளோடு சமாதானமாக இருக்கக் கடினமாக உழைப்பதன் மூலமாகவும்கூட அவர்கள்மேல் அன்பு இருப்பதை நாம் காட்டுகிறோம். மன்னிக்கிற விஷயத்தில் யெகோவாவைப் போலவே நடந்துகொள்ள நாம் முயற்சி செய்கிறோம். நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கு யெகோவா தன்னுடைய மகனையே கொடுக்கத் தயாராக இருந்தார். அப்படியென்றால், நம்முடைய சகோதர சகோதரிகள் நமக்கு எதிராகப் பாவம் செய்கிறபோது நாமும் அவர்களை மன்னிப்பதற்கு எந்தளவுக்குத் தயாராக இருக்க வேண்டும், இல்லையா? இயேசு ஒரு உவமையில் சொன்ன பொல்லாத அடிமையைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் வாங்கிய பெரிய கடனையே அவனுடைய எஜமான் ரத்து செய்துவிட்டார். ஆனால், அவனிடம் கொஞ்சம் கடன் வாங்கிய இன்னொரு அடிமையை அவன் மன்னிக்காமல் போய்விட்டான். (மத். 18:23-35) ஒருவேளை, சபையில் இருக்கிற யாருடனாவது உங்களுக்கு மனஸ்தாபம் இருக்கிறதா? அப்படியென்றால் நினைவு நாளுக்கு முன்பாகவே அவர்களோடு சமாதானமாவதற்கு நீங்கள் முதல் படியை எடுக்க முடியுமா? (மத். 5:23, 24) அப்படி முயற்சி எடுத்தால், யெகோவாமேலும் இயேசுமேலும் உங்களுக்கு ரொம்ப அன்பு இருக்கிறது என்று அர்த்தம்.

10-11. யெகோவாமேலும் இயேசுமேலும் வைத்திருக்கிற அன்பை மூப்பர்கள் எப்படிக் காட்டலாம்? (1 பேதுரு 5:1, 2)

10 யெகோவாமேலும் இயேசுமேலும் அன்பு இருக்கிறது என்பதை மூப்பர்கள் எப்படிக் காட்டலாம்? அதற்கு ஒரு முக்கியமான வழி, இயேசுவின் ஆடுகளை நன்றாகக் கவனித்துக்கொள்வதுதான். (1 பேதுரு 5:1, 2-ஐ வாசியுங்கள்.) இந்த விஷயத்தை அப்போஸ்தலன் பேதுருவுக்கு இயேசு தெளிவாகப் புரிய வைத்தார். இயேசுவைத் தெரியாது என்று மூன்று தடவை பேதுரு சத்தியம் பண்ணிய பிறகு இயேசுமேல் உண்மையிலேயே அன்பு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்கு பேதுரு துடித்திருப்பார். இயேசு உயிர்த்தெழுந்த பிறகு பேதுருவிடம், ‘யோவானின் மகனான சீமோனே, என்மேல் உனக்கு அன்பு இருக்கிறதா?’ என்று கேட்டார். எஜமான்மேல் அன்பு இருப்பதைக் காட்டுவதற்கு பேதுரு என்ன வேண்டுமானாலும் செய்ய அப்போது தயாராக இருந்திருப்பார். இயேசு அவரிடம், “அப்படியென்றால் என் ஆட்டுக்குட்டிகளை நீ மேய்க்க வேண்டும்” என்று சொன்னார். (யோவா. 21:15-17) அதற்குப் பிறகு, பேதுரு தன்னுடைய வாழ்க்கை முழுவதும் இயேசுவின் ஆடுகளை அக்கறையாகக் கவனித்துக்கொண்டார். இப்படி, இயேசுமேல் அன்பு இருப்பதைக் காட்டினார்.

11 மூப்பர்களே, பேதுருவிடம் இயேசு சொன்ன வார்த்தைகளை நீங்களும் முக்கியமாக நினைக்கிறீர்கள் என்று இந்த நினைவு நாள் சமயத்தில் எப்படிக் காட்டலாம்? நிறைய மேய்ப்புச் சந்திப்புகளை நீங்கள் செய்யலாம். அதோடு, யெகோவாவிடம் திரும்பி வருவதற்கு செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு முக்கியமாக உதவி செய்யலாம். (எசே. 34:11, 12) பைபிள் படிப்பு படிக்கிறவர்களையும் நினைவு நாளுக்குப் புதிதாக வருகிறவர்களையும்கூட நீங்கள் உற்சாகப்படுத்தலாம். அவர்களை அன்பாக வரவேற்று அவர்களிடம் நன்றாகப் பேசிப் பழகலாம். அவர்களும் இயேசுவின் சீஷர்களாவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். இதையெல்லாம் செய்யும்போது, யெகோவாமேலும் இயேசுமேலும் உங்களுக்கு எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை நீங்கள் காட்ட முடியும்.

கிறிஸ்துமேல் இருக்கும் அன்பு தைரியமாய் இருக்க நம்மைத் தூண்டுகிறது

12. இயேசு இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி சொன்ன விஷயம் நமக்கு எப்படித் தைரியத்தைக் கொடுக்கிறது? (யோவான் 16:32, 33)

12 இயேசு, தான் இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி தன்னுடைய சீஷர்களிடம், “இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் இருக்கும். ஆனால் தைரியமாயிருங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்” என்று சொன்னார். (யோவான் 16:32, 33-ஐ வாசியுங்கள்.) எதிரிகளைத் தைரியமாகச் சந்திப்பதற்கும் சாகும்வரை யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதற்கும் இயேசுவுக்கு எது உதவி செய்தது? அவர் எப்போதும் யெகோவாவையே நம்பியிருந்தார். அவருடைய சீஷர்களுக்கும் அதே மாதிரி பிரச்சினைகள் வரும் என்று அவருக்குத் தெரியும். அதனால், அவர்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி யெகோவாவிடம் அவர் கேட்டார். (யோவா. 17:11) இது நமக்குத் தைரியத்தைக் கொடுக்கிறது. ஏனென்றால், எப்பேர்ப்பட்ட எதிரிகளையும்விட யெகோவா ரொம்ப சக்தி உள்ளவர். (1 யோ. 4:4) அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். நாம் எப்போதுமே அவரை நம்பியிருந்தால் பயப்படாமல் தைரியமாக இருப்பதற்கு அவர் நமக்கு உதவி செய்வார்.

13. அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு எப்படித் தைரியத்தைக் காட்டினார்?

13 அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பின் உதாரணத்தைக் கவனிக்கலாம். யூத மக்கள் மத்தியில் அவருக்கு ரொம்ப மதிப்புமரியாதை இருந்தது. அவர் நியாயசங்கத்தில், அதாவது யூத உயர் நீதிமன்றத்தில், ஒரு உறுப்பினராக இருந்தார். ஆனாலும், இயேசு ஊழியம் செய்துகொண்டிருந்த சமயத்தில் அவர் கொஞ்சம்கூட தைரியத்தைக் காட்டவில்லை. அவர் “இயேசுவின் சீஷர்களில் ஒருவர். ஆனால், யூதர்களுக்குப் பயந்து அதை வெளியே சொல்லாமல் இருந்தவர்” என்று யோவான் எழுதினார். (யோவா. 19:38) இயேசு சொன்ன செய்தியில் யோசேப்பு ஆர்வம் காட்டினார். ஆனாலும், இயேசுமேல் நம்பிக்கை வைத்திருந்ததை அவர் மற்றவர்களிடமிருந்து மறைத்துவிட்டார். சமுதாயத்தில் தனக்கு இருந்த மதிப்புமரியாதை போய்விடுமோ என்று அவர் பயப்பட்டார். ஆனாலும், இயேசு இறந்த பிறகு அவர் ஒருவழியாக “தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பிலாத்துவிடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார்” என்று பைபிள் சொல்கிறது. (மாற். 15:42, 43) தான் இயேசுவின் சீஷர் என்பதை அதற்கு மேலும் அவர் மறைக்கவில்லை.

14. நீங்கள் மனுஷர்களைப் பார்த்துப் பயப்பட்டால் என்ன செய்யலாம்?

14 யோசேப்பு மாதிரியே நீங்களும் சிலசமயம் மனுஷர்களைப் பார்த்துப் பயப்படுகிறீர்களா? ஸ்கூலிலோ வேலை செய்கிற இடத்திலோ நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்று சொல்ல தயங்குகிறீர்களா? மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்துப் பயந்துகொண்டு பிரஸ்தாபி ஆவதையும் ஞானஸ்நானம் எடுப்பதையும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறீர்களா? எதைச் செய்வது சரி என்று உங்களுக்குத் தெரியும். மனுஷர்களுக்குப் பயந்துகொண்டு அதைச் செய்யாமல் இருந்துவிடாதீர்கள். யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் பண்ணுங்கள். அவருடைய விருப்பத்தைச் செய்வதற்கு அவரிடம் தைரியத்தைக் கேளுங்கள். யெகோவா உங்களுடைய ஜெபங்களுக்கு எப்படிப் பதில் கொடுக்கிறார் என்று நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கு நிறைய தைரியமும் பலமும் கிடைக்கும்.—ஏசா. 41:10, 13.

விடாமல் யெகோவாவுக்குச் சேவை செய்ய சந்தோஷம் நம்மைத் தூண்டுகிறது

15. சீஷர்கள் முன்னால் இயேசு தோன்றிய பிறகு, சந்தோஷத்தில் அவர்கள் என்ன செய்தார்கள்? (லூக். 24:52, 53)

15 இயேசு இறந்தபோது சீஷர்கள் சோகத்தில் மூழ்கிவிட்டார்கள். அப்போது அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர்களுடைய உயிர் நண்பர் மட்டுமல்ல, அவர்களுடைய நம்பிக்கையே அவர்களைவிட்டுப் போய்விட்டதாக நினைத்திருப்பார்கள். (லூக். 24:17-21) ஆனால், இயேசு அவர்கள் முன்னால் தோன்றி, பைபிள் தீர்க்கதரிசனத்தை அவர் எப்படி நிறைவேற்றினார் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவி செய்தார். அவர்களுக்கு ஒரு முக்கியமான வேலையையும் கொடுத்தார். (லூக். 24:26, 27, 45-48) 40 நாட்கள் கழித்து இயேசு பரலோகத்துக்குப் போனார். அதற்குள், சீஷர்களுடைய சோகமெல்லாம் சந்தோஷமாக மாறியிருந்தது. தங்களுடைய எஜமான் உயிரோடு இருக்கிறார்... தங்களுக்குக் கொடுத்த பொறுப்பைச் செய்வதற்கு அவர் உதவி செய்வார்... என்றெல்லாம் தெரிந்துகொண்டு அவர்கள் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். அந்தச் சந்தோஷத்தில் விடாமல் யெகோவாவைப் புகழ்ந்தார்கள்.—லூக்கா 24:52, 53-ஐ வாசியுங்கள்; அப். 5:42.

16. நாம் எப்படி இயேசுவின் சீஷர்களைப் போலவே நடந்துகொள்ளலாம்?

16 நாம் எப்படி இயேசுவின் சீஷர்களைப் போலவே நடந்துகொள்ளலாம்? நினைவு நாள் சமயத்தில் மட்டுமல்ல, எல்லா சமயத்திலும் நாம் சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்யலாம். அதற்கு நம் வாழ்க்கையில் கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் தர வேண்டும். தவறாமல் ஊழியத்திலும் கூட்டங்களிலும் குடும்ப வழிபாட்டிலும் கலந்துகொள்வதற்காக நிறையப் பேர் தங்களுடைய வேலை நேரத்தை மாற்றியிருக்கிறார்கள், இல்லையென்றால் குறைத்திருக்கிறார்கள். சிலர் சபைக்கு இன்னும் பிரயோஜனமாக இருப்பதற்காக அல்லது தேவை அதிகம் இருக்கும் இடத்துக்குப் போய் ஊழியம் செய்வதற்காக மற்றவர்கள் அவசியம் என்று நினைக்கிற பொருள்களைக்கூட வேண்டாமென்று விட்டிருக்கிறார்கள். யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்யும்போது நமக்குப் பிரச்சினைகள் வரும்தான். அதை நாம் சகித்துக்கொள்ள வேண்டும். ஆனாலும், கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு வாழ்க்கையில் முதலிடம் தந்தால் நமக்கு நிறைய ஆசீர்வாதங்களைக் கொடுப்பதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்.—நீதி. 10:22; மத். 6:32, 33.

நினைவு நாள் சமயத்தில் யெகோவாவும் இயேசுவும் உங்களுக்காக செய்திருக்கிற தியாகத்தைப் பற்றி யோசித்துப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் (பாரா 17)

17. இந்த நினைவு நாள் சமயத்தில் என்ன செய்ய நீங்கள் தீர்மானமாக இருக்கிறீர்கள்? (படத்தைப் பாருங்கள்.)

17 ஏப்ரல் 4, செவ்வாய்க்கிழமை அன்று இயேசுவின் நினைவு நாளை அனுசரிக்க நாம் ஆசையாகக் காத்துக்கொண்டிருக்கிறோம். ஆனாலும், இயேசுவின் வாழ்க்கையையும், அவருடைய மரணத்தையும், அவரும் யெகோவாவும் நம்மேல் காட்டியிருக்கிற அன்பையும் பற்றி யோசித்துப் பார்ப்பதற்கு அந்த நாள்வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. நினைவு நாளுக்கு முன்பும் பின்பும் உள்ள வாரங்களில் அதைப் பற்றியெல்லாம் அடிக்கடி யோசித்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, பூமியில் இயேசு வாழ்ந்த கடைசி வாரத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றி வாசிப்பதற்கும் ஆழமாக யோசித்துப் பார்ப்பதற்கும் நேரம் ஒதுக்குங்கள். அதற்கு, புதிய உலக மொழிபெயர்ப்பில் இணைப்பு B12-ல் இருக்கிற “பூமியில் இயேசுவின் கடைசி வாரம்” என்ற அட்டவணையைப் பயன்படுத்துங்கள். அந்தச் சம்பவங்களைப் பற்றியெல்லாம் யோசிக்கும்போது உங்களுடைய நன்றியையும் அன்பையும் தைரியத்தையும் சந்தோஷத்தையும் அதிகமாக்குகிற வசனங்களைக் கண்டுபிடியுங்கள். பிறகு, நீங்கள் மனதார நன்றி காட்டுவதற்குக் குறிப்பாக என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்துப் பாருங்கள். இந்த நினைவு நாள் சமயத்தில் இயேசுவை நினைத்துப் பார்க்க நீங்கள் எடுக்கிற எல்லா முயற்சியையும் அவர் உயர்வாக மதிப்பார் என்பதில் சந்தேகமே இல்லை!—வெளி. 2:19.

பாட்டு 17 நான் ஆசையாய் செய்வேன்

a நினைவு நாள் சமயத்தில் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றியும், அவருடைய மரணத்தைப் பற்றியும், அவரும் யெகோவாவும் நம்மேல் காட்டிய அன்பைப் பற்றியும் நாம் ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்வது யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் நன்றி காட்ட நம்மைத் தூண்டும். நாம் என்னென்ன விதங்களில் மீட்புவிலைக்கு நன்றி காட்டலாம்... யெகோவாமேலும் இயேசுமேலும் அன்பு காட்டலாம்... என்பதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதுமட்டுமல்ல, நாம் எப்படிச் சகோதர சகோதரிகள்மேல் அன்பு காட்டலாம்... எப்படித் தைரியமாக நடந்துகொள்ளலாம்... எப்படிச் சந்தோஷமாகக் கடவுளுக்குச் சேவை செய்யலாம்... என்பதைப் பற்றியும் பார்ப்போம்.