Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 6

பைபிள் அதன் ஆசிரியரைப் பற்றி என்ன சொல்கிறது?

பைபிள் அதன் ஆசிரியரைப் பற்றி என்ன சொல்கிறது?

“நான் உன்னிடம் சொல்கிற எல்லா வார்த்தைகளையும் ஒரு புத்தகத்தில் எழுது.”—எரே. 30:2.

பாட்டு 96 தேவன் தந்த வேதம்

இந்தக் கட்டுரையில்... a

1. பைபிள் கிடைத்ததற்காக நீங்கள் ஏன் நன்றியோடு இருக்கிறீர்கள்?

 பைபிளைக் கொடுத்ததற்காக யெகோவாவுக்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம், இல்லையா? இன்று வரும் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குத் தேவையான ஞானமான ஆலோசனைகளை அதில் அவர் சொல்லியிருக்கிறார். எதிர்காலத்தில் அருமையான வாழ்க்கையைத் தரப்போவதாகவும் அதில் வாக்குக் கொடுத்திருக்கிறார். அதைவிட முக்கியமாக, அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி நிறைய விஷயங்களை அதில் சொல்லியிருக்கிறார். அவருடைய அருமையான குணங்களைப் பற்றி யோசிக்க யோசிக்க அப்படியே புல்லரித்துப்போகிறோம்! அவருடைய நண்பராக ஆக வேண்டுமென்றும் ஆசைப்படுகிறோம்.—சங். 25:14.

2. என்னென்ன வழிகளில் யெகோவா தன்னைப் பற்றி மனிதர்களிடம் சொல்லியிருக்கிறார்?

2 யெகோவா, தன்னைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அந்தக் காலத்தில் கனவுகள்... தரிசனங்கள்... தேவதூதர்கள்... மூலமாகத் தன்னைப் பற்றி அவர் சொல்லியிருக்கிறார். (எண். 12:6; அப். 10:3, 4) அதையெல்லாம் யாரும் எழுதி வைக்கவில்லை என்றால் நம்மால் எப்படி யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்? அதனால்தான், நாம் எதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டாரோ அதையெல்லாம் ‘ஒரு புத்தகத்தில் எழுதி’ வைத்திருக்கிறார். (எரே. 30:2) நம்மிடம் பேசுவதற்கு யெகோவா தேர்ந்தெடுத்திருக்கும் இந்த வழிதான் ரொம்பச் சிறந்தது, பிரயோஜனமானது என்று நாம் நம்பிக்கையாக இருக்கலாம். ஏனென்றால், “உண்மைக் கடவுளுடைய வழிகள் குறை இல்லாதவை.”—சங். 18:30.

3. பைபிள் அழிந்துபோகாதபடி யெகோவா எப்படிப் பார்த்துக்கொண்டார்? (ஏசாயா 40:8)

3 ஏசாயா 40:8-ஐ வாசியுங்கள். ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே கடவுளுடைய வார்த்தை உண்மையுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிறைய நல்ல ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறது. ஆனால், ‘பைபிள் எத்தனையோ காலத்துக்கு முன்பு எழுதப்பட்டது, அதுவும், அழிந்துபோகும் பொருள்களில்! முதன்முதலில் எழுதப்பட்ட பிரதிகளில் ஒன்றுகூட இப்போது இல்லை. அப்புறம் எப்படி ஆயிரக்கணக்கான வருஷங்களாக அது நல்ல ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறது?’ என்று நாம் யோசிக்கலாம். பைபிள் திரும்பத் திரும்ப நகல் எடுக்கப்படும்படி யெகோவா பார்த்துக்கொண்டார். நகல் எடுத்தவர்கள் தப்பு செய்யும் இயல்புள்ளவர்களாக இருந்தாலும், இந்த வேலையை ரொம்பக் கவனமாகச் செய்தார்கள். உதாரணத்துக்கு, எபிரெய வேதாகமத்தைப் பற்றி ஒரு அறிஞர் இப்படிச் சொல்கிறார்: “பழங்கால புத்தகங்களில் வேறெந்த புத்தகமும் இந்தளவு துல்லியமாக நகல் எடுக்கப்படவில்லை.” பைபிள் எத்தனையோ காலத்துக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும்... அழிந்துபோகும் பொருள்களில் எழுதப்பட்டிருந்தாலும்... தப்பு செய்யும் இயல்புள்ள மனிதர்கள் அதை நகல் எடுத்திருந்தாலும்... ஒரு விஷயத்தில் நாம் உறுதியாக இருக்கலாம். பைபிளின் நூலாசிரியரான யெகோவா நமக்குச் சொன்ன விஷயங்களைத்தான் இன்று நாம் பைபிளில் படிக்கிறோம்.

4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

4 ‘நல்ல பரிசுகள் ஒவ்வொன்றையும், மிகச் சிறந்த அன்பளிப்புகள் ஒவ்வொன்றையும்’ யெகோவாதான் நமக்குத் தருகிறார். (யாக். 1:17) யெகோவா நமக்குத் தந்திருக்கிற மிகச் சிறந்த பரிசுகளில் பைபிளும் ஒன்று. ஒருவர் நமக்குக் கொடுக்கும் பரிசை வைத்தே அவர் எந்தளவு நம்மையும் நம் தேவைகளையும் புரிந்துவைத்திருக்கிறார் என்று சொல்லிவிடலாம். பைபிளை நமக்குப் பரிசாகக் கொடுத்த யெகோவாவின் விஷயத்திலும் இதுதான் உண்மை. நமக்குப் பரிசாகக் கிடைத்த பைபிளை நன்றாக ஆராய்ச்சி செய்து படிக்கும்போது, யெகோவாவைப் பற்றி நம்மால் நிறைய தெரிந்துகொள்ள முடியும். நம்மைப் பற்றியும் நமக்கு என்ன தேவை என்பதைப் பற்றியும் அவர் எந்தளவு புரிந்துவைத்திருக்கிறார் என்று நம்மால் தெரிந்துகொள்ள முடியும். யெகோவாவின் ஞானத்துக்கும், நீதிக்கும், அன்புக்கும் பைபிள் எப்படி அத்தாட்சியாக இருக்கிறது என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். முதலில், பைபிள் எப்படி யெகோவாவின் ஞானத்துக்கு அத்தாட்சியாக இருக்கிறது என்று பார்க்கலாம்.

பைபிள், கடவுளுடைய ஞானத்துக்கு ஓர் அத்தாட்சி

5. கடவுளுடைய ஞானத்தை பைபிள் காட்டுகிற ஒரு வழி என்ன?

5 நமக்கு ஞானமான ஆலோசனைகள் தேவை என்று யெகோவாவுக்குத் தெரியும். பரிசாக அவர் நமக்குத் தந்திருக்கும் பைபிளில் அவருடைய ஞானம் கொட்டிக் கிடக்கிறது. பைபிளில் இருக்கும் ஆலோசனைகள் நிறைய மக்களுக்கு உதவி செய்திருக்கின்றன. நிறைய பேருடைய வாழ்க்கையை பைபிள் அடியோடு மாற்றியிருக்கிறது. மோசே பைபிளின் முதல் சில புத்தகங்களை எழுதியபோது கடவுளுடைய மக்களான இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொன்னார்: “இவையெல்லாம் வெற்று வார்த்தைகள் அல்ல, வாழ்வு தரும் வார்த்தைகள்.” (உபா. 32:47) பைபிள் சொல்வதுபோல் வாழ்ந்தவர்களுக்குச் சந்தோஷமான வாழ்க்கை கிடைத்தது. (சங். 1:2, 3) பைபிளை எழுதி பல காலம் ஆகிவிட்டதால் மனிதர்களுடைய வாழ்க்கையை மாற்றும் சக்தி அதற்குக் குறைந்துவிட்டதா? கிடையவே கிடையாது! இது எந்தளவு உண்மை என்பதை jw.org-ல் இருக்கிற “பைபிள் ஆளையே மாற்றும் சக்திபடைத்தது” என்ற தொடர் கட்டுரைகளில் உங்களால் பார்க்க முடியும். கிட்டத்தட்ட 40 நிஜ அனுபவங்கள் அதில் இருக்கின்றன. பைபிள் இன்றும் ‘விசுவாசிகளுக்குள் செயல்பட்டு வருகிறது’ என்பதற்கு இவை ஒரு பெரிய அத்தாட்சி!—1 தெ. 2:13.

6. பைபிள் மற்ற புத்தகங்களைப் போல கிடையாது என்று ஏன் சொல்லலாம்?

6 கடவுளுடைய வார்த்தையைப் போல வேறு எந்தப் புத்தகமுமே இல்லை. ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், அதன் நூலாசிரியரான யெகோவா, சர்வவல்லமையுள்ள கடவுள். அவர் என்றென்றும் இருக்கிறவர். அவரைப்போல் ஞானமானவர்கள் வேறு யாருமே இருக்க முடியாது. மற்ற புத்தகங்களின் நூலாசிரியர்கள் ஒரு கட்டத்தில் இறந்துவிடுவார்கள். அவர்கள் எழுதிய புத்தகங்கள், கொஞ்சக் காலம் நிலைத்திருந்தாலும் அவற்றில் இருக்கும் ஆலோசனைகள் எல்லா காலத்துக்கும் பொருந்துவதில்லை. ஆனால், பைபிளில் இருக்கும் ஞானமான ஆலோசனைகள் எப்போதுமே பிரயோஜனமாக இருக்கின்றன. எந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு உதவி செய்திருக்கின்றன. அதனால், பைபிளைப் படித்து அதை நாம் ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால், பைபிள் அறிவுரைகளை நம் வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று புரிந்துகொள்ள யெகோவா தன் சக்தியைக் கொடுத்து நமக்கு உதவி செய்வார். (சங். 119:27; மல். 3:16; எபி. 4:12) உங்களுக்கு உதவி செய்ய பைபிளின் நூலாசிரியரே ஆவலோடு காத்திருக்கிறார். பைபிளைத் தினமும் படிப்பதற்கு இதைவிட சிறந்த காரணம் வேறு என்ன வேண்டும்?!

யெகோவாவுடைய மக்கள் அன்றும் இன்றும் ஒற்றுமையாக இருப்பதற்கு பைபிள் எப்படி உதவி செய்திருக்கிறது? (பாராக்கள் 7-8)

7. அன்று கடவுளுடைய மக்கள் ஒற்றுமையாக இருக்க பைபிள் எப்படி உதவி செய்தது?

7 கடவுளுடைய ஞானத்தை பைபிள் காட்டும் இன்னொரு வழியைப் பார்க்கலாம். கடவுளுடைய மக்கள் ஒற்றுமையாக இருக்க பைபிள் உதவி செய்கிறது. வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்கு இஸ்ரவேலர்கள் போன பிறகு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு நகரத்தில் வாழ்ந்தார்கள், ஒவ்வொரு வேலையைச் செய்தார்கள். சிலர், மீனவர்களாக இருந்தார்கள். வேறு சிலர், மேய்ப்பர்களாக இருந்தார்கள். இன்னும் சிலர், விவசாயிகளாக இருந்தார்கள். அதனால், ஒரு நகரத்தில் வாழ்ந்தவர்கள், வேறு நகரத்தில் வாழ்ந்தவர்களைக் கண்டுகொள்ளாமல் போக வாய்ப்பு இருந்தது. கடவுளுடைய வார்த்தை வாசிக்கப்படுவதையும் விளக்கப்படுவதையும் கேட்பதற்கு இஸ்ரவேலர்கள் எல்லாரையும் யெகோவா நிறைய சமயங்களில் ஒன்றாகக் கூடிவரச் சொன்னார். (உபா. 31:10-13; நெ. 8:2, 8, 18) எருசலேமுக்கு வந்த ஒரு இஸ்ரவேலருக்கு, தேசத்தின் எல்லா மூலைமுடுக்கிலிருந்தும் வந்த இஸ்ரவேலர்களைப் பார்த்தபோது எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் யெகோவாவின் ஆசை என்பதை அந்த இஸ்ரவேலர் புரிந்திருப்பார். இப்படி, தொடர்ந்து அவர்கள் ஒற்றுமையாக இருக்க யெகோவா உதவி செய்தார். கிறிஸ்தவ சபை ஆரம்பிக்கப்பட்ட பிறகு, வித்தியாசமான மொழிகளையும் பின்னணிகளையும் கலாச்சாரங்களையும் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அதில் இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் கடவுளுடைய வார்த்தையை நேசித்ததால் உண்மைக் கடவுளை ஒற்றுமையாக வணங்கினார்கள். புதிதாகக் கிறிஸ்தவர்களாக ஆனவர்களுக்கு, கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள சக கிறிஸ்தவர்களின் உதவி தேவைப்பட்டது, அவர்களோடு ஒன்றாகக் கூடிவரவும் வேண்டியிருந்தது.—அப். 2:42; 8:30, 31.

8. இன்று யெகோவாவின் மக்கள் ஒற்றுமையாக இருக்க பைபிள் எப்படி உதவி செய்கிறது?

8 நம்முடைய ஞானமுள்ள கடவுள், இன்றும் பைபிளைப் பயன்படுத்தித்தான் நமக்குச் சொல்லித்தருகிறார், நாம் ஒற்றுமையாக இருக்க உதவியும் செய்கிறார். யெகோவாவைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய எல்லா விஷயங்களுமே பைபிளில்தான் இருக்கின்றன. பைபிள் வசனங்கள் வாசிக்கப்படுவதையும் விளக்கப்படுவதையும் கேட்பதற்காக நாம் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் தவறாமல் ஒன்றுகூடி வருகிறோம். இப்படி, தன் மக்கள் “தோளோடு தோள் சேர்ந்து [தனக்கு] சேவை” செய்வதற்கு யெகோவா பைபிளைத்தான் முக்கியமாகப் பயன்படுத்துகிறார்.—செப். 3:9.

9. பைபிளின் செய்தியைப் புரிந்துகொள்ள என்ன குணம் தேவை? (லூக்கா 10:21)

9 யெகோவாவின் ஞானத்துக்கு இன்னொரு அத்தாட்சியைப் பார்க்கலாம். பைபிளின் நிறைய பாகங்களை மனத்தாழ்மையானவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளும் விதத்தில் யெகோவா எழுதி வைத்திருக்கிறார். (லூக்கா 10:21-ஐ வாசியுங்கள்.) உலகம் முழுவதும் இன்று எத்தனையோ மக்கள் பைபிளை வாசிக்கிறார்கள். “இன்று இருக்கும் புத்தகங்களிலேயே பைபிளைத்தான் நிறைய பேர் அதிகமாக வாசிக்கிறார்கள். அதை ரொம்பக் கவனமாகவும் வாசிக்கிறார்கள்” என்று ஒரு அறிஞர் சொல்கிறார். ஆனால், மனத்தாழ்மையாக இருப்பவர்கள் மட்டும்தான் படிப்பதை உண்மையிலேயே புரிந்துகொள்கிறார்கள், அதன்படி நடக்கிறார்கள்.—2 கொ. 3:15, 16.

10. பைபிள், யெகோவாவின் ஞானத்தைக் காட்டும் இன்னொரு வழி என்ன?

10 யெகோவாவுக்கு எவ்வளவு ஞானம் இருக்கிறது என்பதை பைபிள் இன்னொரு வழியிலும் காட்டுகிறது. யெகோவா பைபிளைப் பயன்படுத்தி ஒரு தொகுதியாக நமக்குச் சொல்லிக்கொடுப்பது மட்டுமல்லாமல், நம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் சொல்லிக்கொடுக்கிறார், நம்மை ஆறுதல்படுத்தவும் செய்கிறார். பைபிளைப் படிக்கும்போது, ‘யெகோவா என்மேல் அன்பாக இருக்கிறார்’ என்ற உணர்வு நம் ஒவ்வொருவருக்குமே கிடைக்கும். (ஏசா. 30:21) பிரச்சினைகள் இருக்கிற சமயங்களில் பைபிளைப் படிக்கும்போது, சில வசனங்கள் உங்களுக்கென்றே சொன்னதுபோல் தோன்றியிருக்கிறதா? ஆச்சரியம் என்னவென்றால், பைபிளை எத்தனை லட்சம் பேர் படித்தாலும் அவர்கள் எல்லாருமே அதுபோல் உணருகிறார்கள்! ஒவ்வொருவருக்கும் தேவையான தகவல்களை, அதுவும் இந்தக் காலத்துக்குப் பொருந்தும் தகவல்களை, பைபிளால் எப்படித் தர முடிகிறது? அதற்கு என்ன காரணம்? ஒரே காரணம்தான்: பைபிளின் நூலாசிரியர்தான் இந்தப் பிரபஞ்சத்திலேயே ரொம்ப ஞானமுள்ளவர்!—2 தீ. 3:16, 17.

பைபிள், கடவுளுடைய நீதிக்கு ஓர் அத்தாட்சி

11. கடவுள் பாரபட்சம் காட்டுவதில்லை என்பதை எதை வைத்துச் சொல்லலாம்?

11 யெகோவாவிடம் இருக்கும் இன்னொரு குணம் நீதி. (உபா. 32:4) நீதியாக நடந்துகொள்ளும் ஒருவர் பாரபட்சம் காட்ட மாட்டார். யெகோவா அப்படித்தான்! (அப். 10:34, 35; ரோ. 2:11) அவர் பாரபட்சம் காட்டுவதில்லை என்பதை பைபிள் எழுதப்பட்ட மொழிகளை வைத்தே சொல்லலாம். பைபிளின் முதல் 39 புத்தகங்கள் பெரும்பாலும் எபிரெய மொழியில்தான் எழுதப்பட்டன. அந்தச் சமயத்தில் வாழ்ந்த கடவுளுடைய மக்கள் அந்த மொழியைத்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், முதல் நூற்றாண்டில் மக்கள் பொதுவாக கிரேக்க மொழியில் பேசினார்கள். அதனால், பைபிளின் மீதி 27 புத்தகங்கள் கிரேக்க மொழியில்தான் முக்கியமாக எழுதப்பட்டன. ஒரு மொழியில் மட்டும் பைபிள் எழுதப்பட வேண்டும் என்று யெகோவா நினைக்கவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. இன்று பூமியில் கிட்டத்தட்ட 800 கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவோ மொழிகளைப் பேசுகிறார்கள். அவர்கள் எல்லாரும் யெகோவாவைப் பற்றி எப்படிக் கற்றுக்கொள்ள முடியும்?

12. இந்த முடிவு காலத்தில் தானியேல் 12:4 நிறைவேறியிருக்கும் ஒரு வழி என்ன?

12 ‘முடிவு காலத்தில் . . . உண்மையான அறிவு பெருகும்,’ அதாவது நிறைய பேர் பைபிளில் இருக்கிற விஷயங்களைப் புரிந்துகொள்வார்கள் என்று தானியேல் தீர்க்கதரிசி மூலமாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (தானியேல் 12:4-ஐ வாசியுங்கள்.) அது நிறைவேறியிருக்கிற ஒரு வழியைப் பார்க்கலாம். பைபிளும் பைபிள் பிரசுரங்களும் மொழிபெயர்க்கப்பட்டு, வெளியிடப்பட்டு, எல்லாருடைய கைக்கும் போய்ச் சேர்ந்திருக்கின்றன. உலகத்திலேயே ரொம்ப அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வினியோகிக்கப்படுகிற புத்தகம் என்றால், அது பைபிள்தான். மற்ற அமைப்புகள் தயாரிக்கிற சில பைபிள் மொழிபெயர்ப்புகளின் விலை ரொம்ப அதிகம். ஆனால், யெகோவாவின் சாட்சிகள் தயாரிக்கும் பைபிள்கள் எல்லாருக்கும் இலவசமாகக் கிடைக்கின்றன. இதுவரை முழுமையாகவோ பகுதியாகவோ 240-க்கும் அதிகமான மொழிகளில் அவர்கள் பைபிளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். அதனால், முடிவு வருவதற்கு முன்பு எல்லா தேசத்தைச் சேர்ந்த மக்களாலும் ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை’ கற்றுக்கொள்ள முடிகிறது. (மத். 24:14) யெகோவா நீதியின் கடவுள். நம் எல்லார் மேலும் அவர் ரொம்ப அன்பு வைத்திருக்கிறார். அதனால், பைபிளைப் படித்து தன்னைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை அவர் எல்லாருக்கும் தருகிறார்.

பைபிள், கடவுளுடைய அன்புக்கு ஓர் அத்தாட்சி

13. பைபிள் எப்படி யெகோவாவின் அன்புக்கு அத்தாட்சியாக இருக்கிறது? (யோவான் 21:25)

13 யெகோவாவின் தலைசிறந்த குணமே அன்புதான். (1 யோ. 4:8) அந்த அன்புக்கு பைபிள் ஒரு அத்தாட்சி. பைபிளில் அவர் என்னென்ன விஷயங்களைச் சொல்லியிருக்கிறார், என்னென்ன விஷயங்களையெல்லாம் சொல்லவில்லை என்று யோசித்துப் பாருங்கள். அவரோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்கும்... இப்போதே சந்தோஷமாக வாழ்வதற்கும்... முடிவில்லாத வாழ்க்கை நமக்குக் கிடைப்பதற்கும்... நாம் எவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமோ அவற்றை மட்டுமே அவர் சொல்லியிருக்கிறார். தேவையில்லாத நிறைய விஷயங்களைச் சொல்லி நம்மை அவர் திணறடிக்கவில்லை. ஏனென்றால், அவர் நம்மை நேசிக்கிறார்.யோவான் 21:25-ஐ வாசியுங்கள்.

14. வேறென்ன விதத்தில் பைபிள் கடவுளுடைய அன்புக்கு அத்தாட்சியாக இருக்கிறது?

14 பைபிளை யெகோவா எழுதியிருக்கிற விதமே அவர் நம்மேல் அன்பு வைத்திருப்பதையும், நம்மைக் கண்ணியமாக நடத்துவதையும் காட்டுகிறது. சின்னச் சின்ன விஷயங்களிலெல்லாம் நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று எக்கச்சக்கமான சட்டங்களை அவர் பைபிளில் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, நல்ல தீர்மானங்களை எடுக்க நமக்கு உதவி செய்வதற்காக, நிஜமாகவே வாழ்ந்தவர்களுடைய அனுபவங்கள்... ஆர்வத்தைத் தூண்டும் தீர்க்கதரிசனங்கள்... நடைமுறையான ஆலோசனைகள்... ஆகியவற்றை அவர் தந்திருக்கிறார். அதனால், பைபிளில் அவர் எழுதியிருக்கும் விஷயங்களெல்லாம் நெஞ்சார அவரை நேசிக்கவும், மனதார அவருக்குக் கீழ்ப்படியவும் நம்மைத் தூண்டுகின்றன.

அந்தக் காலத்தில் யெகோவா அவருடைய மக்களிடம் எப்படி நடந்துகொண்டார் என்பதை நாம் ஏன் யோசித்துப் பார்க்க வேண்டும்? (பாரா 15)

15. (அ) யெகோவா நம்மேல் எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறார் என்பதை பைபிள் எப்படிக் காட்டுகிறது? (ஆ) படத்தில் பார்க்கும் ஒரு சின்னப் பெண்ணும், ஒரு சகோதரரும், வயதான ஒரு சகோதரியும் எந்த பைபிள் கதாபாத்திரங்களைப் பற்றி யோசித்துப் பார்க்கிறார்கள்? (ஆதி. 39:1, 10-12; 2 ரா. 5:1-3; லூக். 2:25-38)

15 யெகோவா நம்மேல் எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறார் என்பதை பைபிள் காட்டுகிறது. எப்படி? நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நம்மைப் போன்ற உணர்ச்சிகளோடு வாழ்ந்த நிறைய பேருடைய கதைகளை அவர் பைபிளில் எழுதி வைத்திருக்கிறார். (யாக். 5:17) அதைவிட முக்கியமாக, அவர்களிடமெல்லாம் யெகோவா எப்படி நடந்துகொண்டார் என்பதைப் படிக்கும்போது “[அவர்] கனிவான பாசமும் இரக்கமும் நிறைந்தவர்” என்பதை நம்மால் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது.—யாக். 5:11.

16. தப்பு செய்தவர்களைப் பற்றிய பைபிள் பதிவுகளிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஏசாயா 55:7)

16 யெகோவா நம்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை பைபிள் இன்னொரு விதத்திலும் காட்டுகிறது. நாம் தப்பு செய்துவிட்டோம் என்பதற்காகக் கடவுள் நம்மைக் கைவிட்டுவிட மாட்டார் என்று பைபிள் நமக்கு நம்பிக்கை கொடுக்கிறது. இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு விரோதமாகத் திரும்பத் திரும்ப பாவம் செய்தார்கள். ஆனாலும், அவர்கள் மனதார திருந்தியபோது யெகோவா அவர்களை மன்னித்தார். (ஏசாயா 55:7-ஐ வாசியுங்கள்.) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள்கூட, கடவுள் தங்கள்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டார்கள். எப்படி? பெரிய பாவத்தைச் செய்துகொண்டிருந்த ஒருவன் மனம் திருந்தியபோது அவனை “மன்னித்து ஆறுதல்படுத்த வேண்டும்” என்று அப்போஸ்தலன் பவுல் மூலமாக அவர்களிடம் யெகோவா சொன்னார். (2 கொ. 2:6, 7; 1 கொ. 5:1-5) தப்பு செய்தவர்களை யெகோவா ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளாதது எவ்வளவு பெரிய விஷயம், இல்லையா? அவர்களை அவர் அன்பாகக் கைப்பிடித்து தூக்கிவிட்டார், அவர்களுடைய வழியை மாற்றிக்கொள்ள உதவி செய்தார், திரும்ப அவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொண்டார். இன்றும் உண்மையிலேயே மனம் திருந்தும் எல்லாருக்கும் அப்படிச் செய்வதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்.—யாக். 4:8-10.

‘மிகச் சிறந்த அன்பளிப்பை’ பொக்கிஷமாகப் பாருங்கள்

17. பைபிளை ஏன் மிகச் சிறந்த அன்பளிப்பு என்று சொல்லலாம்?

17 யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் மிகச் சிறந்த அன்பளிப்புதான் பைபிள். ஏன் அப்படிச் சொல்லலாம்? நாம் இவ்வளவு நேரம் பார்த்த மாதிரி, அது யெகோவாவுடைய ஞானத்தையும் நீதியையும் அன்பையும் காட்டுகிறது. நாம் அவரைப் பற்றித் தெரிந்துகொண்டு அவருடைய நண்பராக ஆக அவர் விரும்புவதையும் காட்டுகிறது.

18. யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் ‘மிகச் சிறந்த அன்பளிப்புக்கு’ நாம் எப்படி நன்றி காட்டலாம்?

18 பைபிள், யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற “மிகச் சிறந்த அன்பளிப்பு” என்பதை நாம் மறக்கவே கூடாது. (யாக். 1:17) நாம் அதற்கு நன்றியோடு இருக்கிறோம் என்பதை எப்போதுமே காட்ட வேண்டும். எப்படி? அதைத் தொடர்ந்து படிக்க வேண்டும், படித்த விஷயங்களை ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, நம் முயற்சிகளை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார். ‘அவரைப் பற்றிய அறிவைக் கண்டடைய’ நமக்குக் கண்டிப்பாக உதவி செய்வார்.—நீதி. 2:5.

பாட்டு 98 வேதம்—நம் தேவன் தந்த பரிசு

a கடவுளிடம் நெருங்கிவர பைபிள் நமக்கு உதவி செய்கிறது. கடவுளுடைய ஞானத்தையும், நீதியையும், அன்பையும் பற்றி பைபிளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள், கடவுளுடைய வார்த்தையின்மேல் நமக்கு இருக்கும் மதிப்பை இன்னும் அதிகமாக்கும். அது உண்மையிலேயே கடவுள் தந்த பரிசுதான் என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும்.