Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 9

கடவுள் தந்திருக்கும் உயிர் என்ற பரிசை உயர்வாக மதியுங்கள்

கடவுள் தந்திருக்கும் உயிர் என்ற பரிசை உயர்வாக மதியுங்கள்

“அவரால்தான் நாம் உயிர் வாழ்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்.”—அப். 17:28.

பாட்டு 141 உயிர் ஓர் அற்புதமே

இந்தக் கட்டுரையில்... a

1. நம் உயிரை யெகோவா எந்தளவு பெரிதாக நினைக்கிறார்?

 உங்களுடைய நண்பர் ஒரு வீட்டையே உங்களுக்குப் பரிசாகக் கொடுப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். அந்த வீட்டில் அங்கங்கே பெயின்ட் உரிந்துவந்திருக்கிறது, பைப்புகளும் உடைந்திருக்கின்றன என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனாலும், அந்த வீட்டின் மதிப்பு பல கோடி ரூபாய்! அந்தப் பரிசை நீங்கள் எவ்வளவு உயர்வாக மதிப்பீர்கள்! எந்தளவு பத்திரமாகப் பார்த்துக்கொள்வீர்கள்! அதேபோலத்தான், யெகோவா நமக்கு விலைமதிக்க முடியாத ஒரு பரிசைக் கொடுத்திருக்கிறார். அதுதான் நம் உயிர்! நம் உயிரை யெகோவா ரொம்பப் பெரிதாக நினைப்பதால் நம்மை மீட்பதற்காகத் தன் மகனையே தந்திருக்கிறார்.—யோவா. 3:16.

2. நாம் என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பதாக 2 கொரிந்தியர் 7:1 சொல்கிறது?

2 உயிரின் ஊற்றே யெகோவாதான். (சங். 36:9) அப்போஸ்தலன் பவுல் இந்த உண்மையைப் புரிந்துகொண்டு, “அவரால்தான் நாம் உயிர் வாழ்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்” என்று சொன்னார். (அப். 17:25, 28) அப்படியென்றால், உயிர் என்பது உண்மையிலேயே கடவுள் நமக்குத் தந்திருக்கும் ஒரு பரிசு! உயிர்வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையுமே அவர் நமக்குத் தாராளமாகத் தருகிறார். (அப். 14:15-17) ஆனால், அற்புதமான விதத்தில் யெகோவா நம் உயிரைக் காப்பாற்றுவதில்லை. நாம்தான் நம் உடம்பை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். அவருக்குத் தொடர்ந்து சேவை செய்ய நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். (2 கொரிந்தியர் 7:1-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், நம் ஆரோக்கியத்தையும் உயிரையும் நாம் ஏன் பாதுகாக்க வேண்டும், அவற்றை எப்படிப் பாதுகாக்கலாம்?

உயிர் என்ற பரிசை மதியுங்கள்

3. நம் ஆரோக்கியத்தை நாம் பாதுகாக்க வேண்டியதற்கான ஒரு காரணம் என்ன?

3 நம் ஆரோக்கியத்தை நாம் பாதுகாக்க வேண்டியதற்கான ஒரு காரணம், யெகோவாவுக்கு நம்மால் முடிந்தளவுக்கு நிறைய சேவை செய்வதற்காகத்தான். (மாற். 12:30) நம் “உடலை உயிருள்ளதும் பரிசுத்தமுள்ளதும் கடவுளுக்குப் பிரியமுள்ளதுமான பலியாக” அர்ப்பணிக்க நாம் ஆசைப்படுகிறோம். அதனால், நம் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாக இருக்கும் எதையும் செய்யாமல் இருக்கிறோம். (ரோ. 12:1) நாம் எவ்வளவுதான் நம் உடம்பைப் பார்த்துக்கொண்டாலும் நமக்கு உடல்நலப் பிரச்சினைகளே வராது என்று சொல்ல முடியாதுதான். ஆனாலும், உயிர் என்ற பரிசுக்காக நம் அப்பா யெகோவாவுக்கு நன்றி காட்ட நாம் விரும்புவதால் நம்மால் முடிந்தளவுக்கு நம் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்கிறோம்.

4. தாவீது ராஜா எதில் உறுதியாக இருந்தார்?

4 கடவுள் தந்திருக்கும் உயிர் என்ற பரிசை தாவீது ராஜா ரொம்ப உயர்வாக மதித்தார். ஏன்? “நான் செத்துப்போவதால் என்ன பிரயோஜனம்? நான் சவக்குழிக்குள் போவதால் என்ன லாபம்? தூசியால் உங்களைப் புகழ முடியுமா? நீங்கள் எவ்வளவு நம்பகமானவர் என்பதைச் சொல்ல முடியுமா?” என்று அவர் எழுதினார். (சங். 30:9) இதை எழுதியபோது அவர் ரொம்ப வயதானவராக இருந்திருக்கலாம். ஆனாலும், யெகோவாவைப் புகழ்வதற்காக நிறைய காலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்... உயிரோடு இருக்க வேண்டும்... என்பதில் அவர் உறுதியாக இருந்தார். நாம் எல்லாரும்கூட அவரைப் போலவே உறுதியாக இருக்கிறோம் என்பதில் சந்தேகமே இல்லை.

5. நமக்கு எவ்வளவு வயதானாலும் சரி, நாம் எவ்வளவு முடியாமல் இருந்தாலும் சரி, நம்மால் என்ன செய்ய முடியும்?

5 நமக்கு உடம்பு சரியில்லாமல் போகும்போதும் வயதாகும்போதும், முன்பு செய்த நிறைய விஷயங்களைச் செய்ய முடியாமல் போய்விடும். அதனால், நாம் சோகத்திலும் விரக்தியிலும் மூழ்கிவிடலாம். ஆனாலும், நம்மால் முடிந்தளவுக்கு நம் ஆரோக்கியத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏன்? ஏனென்றால், நமக்கு எவ்வளவு வயதானாலும் சரி, நாம் எவ்வளவு முடியாமல் இருந்தாலும் சரி, தாவீது ராஜாவைப் போலவே நம்மாலும் யெகோவாவைப் புகழ முடியும். வயதாகியோ உடம்பு முடியாமலோ நாம் இருக்கும்போதுகூட யெகோவா நம்மை உயர்வாக மதிக்கிறார்; இதை நினைக்கும்போதே நமக்குப் புல்லரிக்கிறது, இல்லையா? (மத். 10:29-31) நாம் இறந்தாலும், யெகோவா நம்மை மறுபடியும் உயிரோடு கொண்டுவருவார். சொல்லப்போனால், நம்மை உயிரோடு கொண்டுவர அவர் ஏக்கமாக இருப்பார். (யோபு 14:14, 15) அதனால், நாம் உயிரோடு இருக்கும் இந்தச் சமயத்தில் நம் ஆரோக்கியத்தையும் உயிரையும் பாதுகாக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.

ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பழக்கங்களைத் தவிருங்கள்

6. சாப்பிடும் விஷயத்திலும் குடிக்கும் விஷயத்திலும் நாம் என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார்?

6 பைபிள், நாம் எப்படி ஆரோக்கியமாக இருக்கலாம்... எதைச் சாப்பிடலாம்... எதைச் சாப்பிடக் கூடாது... என்றெல்லாம் சொல்லும் ஒரு புத்தகம் கிடையாது. ஆனால், இந்த விஷயங்களைப் பற்றி யெகோவா என்ன யோசிக்கிறார் என்று அது சொல்கிறது. உதாரணத்துக்கு, நம் உடலைக் கெடுக்கும் “தீய காரியங்களை” நாம் விட்டொழிக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பதாக அது சொல்கிறது. (பிர. 11:10) அளவுக்கு அதிகமாகக் குடிக்கவோ சாப்பிடவோ கூடாதென்றும் பைபிள் சொல்கிறது; ஏனென்றால், அந்த இரண்டுமே நம் உயிருக்கு ஆபத்தானவை. (நீதி. 23:20) எதை... எவ்வளவு... சாப்பிட வேண்டும் அல்லது குடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் விஷயத்தில் நாம் சுயக்கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார்.—1 கொ. 6:12; 9:25.

7. ஆரோக்கியம் சம்பந்தமாக நல்ல முடிவுகளை எடுக்க நீதிமொழிகள் 2:11 நமக்கு எப்படி உதவி செய்யும்?

7 கடவுள் தந்திருக்கும் உயிர் என்ற பரிசுக்காக நாம் மனதார நன்றி காட்டுவதற்கு ஒரு வழி என்ன? நம்முடைய யோசிக்கும் திறனைப் பயன்படுத்தி நல்ல முடிவுகளை எடுப்பதுதான். (சங். 119:99, 100; நீதிமொழிகள் 2:11-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக் கூடாது என்பதையெல்லாம் நன்றாக யோசித்து முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை, நமக்கு ஏதாவது ஒரு சாப்பாடு ரொம்ப பிடிக்கும் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், அது நம் உடம்புக்குச் சேராது என்று நமக்குத் தெரிந்திருக்கலாம். அப்படியென்றால், அதைச் சாப்பிடாமல் இருப்பதுதானே புத்திசாலித்தனம்? அதேபோல், நம் உடம்புக்குத் தேவையான அளவுக்கு நன்றாகத் தூங்கும்போதும்... தவறாமல் உடற்பயிற்சி செய்யும்போதும்... நம்மை சுத்தமாக வைத்துக்கொள்ளும்போதும்... நம் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளும்போதும்... நாம் புத்திசாலிகள் என்று காட்டுவோம்.

பாதுகாப்பு உணர்வோடு இருங்கள்

8. நம்முடைய பாதுகாப்பை யெகோவா எந்தளவு முக்கியமாக நினைக்கிறார்?

8 பாதுகாப்பாக இருப்பது சம்பந்தமாக இஸ்ரவேலர்களுக்கு யெகோவா சில சட்டங்களைக் கொடுத்தார். வீட்டிலும் சரி, வேலை செய்யும் இடத்திலும் சரி, விபத்துகளைத் தவிர்க்க அவை உதவி செய்தன. (யாத். 21:28, 29; உபா. 22:8) ஒருவர் இன்னொருவரைத் தெரியாத்தனமாகக் கொலை செய்துவிட்டால்கூட, பெரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. (உபா. 19:4, 5) தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து வரும்படி யாராவது எதையாவது தெரியாத்தனமாகச் செய்துவிட்டால்கூட அவருக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமென்று கடவுளுடைய சட்டம் சொன்னது. (யாத். 21:22, 23) அப்படியென்றால், பைபிளிலிருந்து நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகத் தெரிந்துகொள்கிறோம்: நாம் எப்போதுமே பாதுகாப்பு உணர்வோடு இருக்க வேண்டும் என்றுதான் யெகோவா எதிர்பார்க்கிறார்.

இந்தச் சூழ்நிலைகளில் நாம் எப்படி உயிருக்கு மதிப்புக் காட்டலாம்? (பாரா 9)

9. விபத்துகளைத் தவிர்க்க நாம் என்னென்ன விதங்களில் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்? (படங்களையும் பாருங்கள்.)

9 கடவுள் தந்திருக்கும் உயிர் என்ற பரிசுக்காக நாம் மனதார நன்றி காட்டுவதற்கு இன்னொரு வழி என்ன? வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் பாதுகாப்பாக இருக்க முயற்சி எடுப்பதுதான். உதாரணத்துக்கு, கூர்மையான பொருள்களையும்... ஆபத்தான ரசாயனங்களையும்... மருந்து மாத்திரைகளையும்... சின்னப் பிள்ளைகளின் கைக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். அவற்றைத் தூக்கிப் போடுவதாக இருந்தால், மற்றவர்களுக்கு எந்த ஆபத்தும் வராதபடி பாதுகாப்பான முறையில் தூக்கிப் போட வேண்டும். நெருப்பைப் பற்ற வைத்து ஏதாவது வேலை செய்யும்போது... தண்ணீர், எண்ணெய் போன்ற எதையாவது கொதிக்க வைக்கும்போது... ஏதாவது கருவிகளைப் பயன்படுத்தும்போது... அதை அப்படியே விட்டுவிட்டு வந்துவிடக் கூடாது. இல்லையென்றால், யாருக்காவது அது ஆபத்தாகிவிடலாம். ஏதாவது மருந்து மாத்திரை சாப்பிட்டதாலோ... மதுபானம் குடித்ததாலோ... சரியாகத் தூங்காததாலோ... நம் மனம் தெளிவாக இல்லாதபோது நாம் எந்த வண்டியையும் ஓட்டக் கூடாது. அதேபோல், வண்டி ஓட்டும்போது ஃபோனைப் பயன்படுத்தக் கூடாது.

பேரழிவு தாக்கும்போது

10. பேரழிவு வரும்போதும் சரி, அதற்கு முன்பும் சரி, நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

10 சிலசமயம், உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளை நம்மால் தடுக்க முடிவதில்லை. இயற்கைப் பேரழிவு, கொள்ளைநோய், உள்ளூர் கலவரம், போர் போன்ற சம்பவங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த மாதிரி சமயங்களில் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போடலாம், அந்த இடத்தைவிட்டு நம்மை வெளியேறச் சொல்லலாம், அல்லது வேறு ஏதாவது கட்டுப்பாடுகளைப் போடலாம். ஆபத்துகளைக் குறைப்பதற்கும் நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கும் அதற்கெல்லாம் நாம் கீழ்ப்படிய வேண்டும். (ரோ. 13:1, 5-7) சிலசமயம், ஒரு பேரழிவு வருமென்று முன்பே நமக்குத் தெரியவரலாம். அந்தப் பேரழிவைச் சந்திக்க நாம் தயாராவதற்காக, அரசாங்கம் செய்யச் சொல்லும் எல்லாவற்றையும் நாம் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு தண்ணீர், கெட்டுப்போகாத உணவு, முதலுதவிப் பெட்டி போன்றவற்றை முன்கூட்டியே எடுத்து வைப்பது நல்லது.

11. நாம் இருக்கும் பகுதியில் ஒரு கொள்ளைநோய் பரவினால் என்ன செய்ய வேண்டும்?

11 நாம் வாழும் இடத்தில் ஒரு கொள்ளைநோய் பரவினால் என்ன செய்ய வேண்டும்? அரசாங்கம் செய்யச் சொல்வதையெல்லாம் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு, கைகளைக் கழுவுவது... சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது... மாஸ்க் போடுவது... தனிமைப்படுத்திக்கொள்வது... ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இதையெல்லாம் எந்தளவுக்குக் கண்ணும்கருத்துமாகச் செய்கிறோமோ அந்தளவுக்கு உயிரை மதிக்கிறோம் என்று காட்டுவோம்.

12. பேரழிவு சமயத்தில், நீதிமொழிகள் 14:15 சொல்வதுபோல் நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?

12 பேரழிவு சமயத்தில், நண்பர்களும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும் மீடியாவும் ஆளாளுக்கு ஒரு கதையைக் கட்டிவிடலாம். அதுபோன்ற சமயங்களில் “யார் எதைச் சொன்னாலும்” நம்பிவிடுவதற்குப் பதிலாக, அரசாங்கமும் டாக்டர்களும் தருகிற நம்பகமான தகவல்களை மட்டும்தான் நாம் கேட்க வேண்டும். (நீதிமொழிகள் 14:15-ஐ வாசியுங்கள்.) ஆளும் குழுவும் கிளை அலுவலகங்களும் மிக நம்பகமான தகவல்களைத் தேடிக் கண்டுபிடிக்க எல்லா முயற்சியும் எடுக்கிறார்கள். அதன் பிறகுதான் சபைக் கூட்டங்கள் சம்பந்தமாகவும் ஊழியம் சம்பந்தமாகவும் வழிநடத்துதலைக் கொடுக்கிறார்கள். (எபி. 13:17) அவர்களுடைய வழிநடத்துதலைக் கேட்டு நடக்கும்போது, நமக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி, எந்த ஆபத்தும் வராதபடி நம்மால் பார்த்துக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல, யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி மற்றவர்களுக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் வரும்.—1 பே. 2:12.

இரத்தத்துக்கு விலகியிருக்கத் தயாராயிருங்கள்

13. இரத்தம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நாம் உயிரை மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

13 யெகோவாவின் சாட்சிகள் இரத்தத்தை ரொம்பப் புனிதமாகப் பார்க்கிறார்கள் என்பது எல்லாருக்குமே தெரிந்த விஷயம். இரத்தம் சம்பந்தமாக யெகோவா கொடுத்திருக்கும் சட்டத்துக்கு நாம் கீழ்ப்படிகிறோம். அதனால், அவசரநிலை ஏற்படும்போதுகூட நாம் இரத்தத்தை ஏற்றிக்கொள்வதில்லை. (அப். 15:28, 29) அதற்காக நாம் சாக ஆசைப்படுகிறோம் என்று அர்த்தம் கிடையாது. உண்மையில், கடவுள் தந்திருக்கும் உயிர் என்ற பரிசை நாம் உயர்வாக மதிக்கிறோம். அதனால், இரத்தம் ஏற்றிக்கொள்வதற்குப் பதிலாக வேறு தரமான சிகிச்சைகளைத் தர முன்வரும் மருத்துவர்களைத் தேடிப்போகிறோம்.

14. பெரிய ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை வராதபடி நாம் எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்?

14 இந்தக் கட்டுரையில் பார்த்த ஆலோசனைகள்படி நடந்து நாம் ஆரோக்கியமாக இருந்தால், பெரிய ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை வராதபடி பார்த்துக்கொள்ளலாம். அப்படியே வந்தாலும், ஆபரேஷன் சமயத்தில் பெரிதாக எந்தப் பிரச்சினையும் வராது, ஆபரேஷன் முடிந்த பிறகும் நாம் சீக்கிரமாகக் குணமாகிவிடுவோம். அதேபோல், சாலை விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும்போதும்... வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் பாதுகாப்பாக இருக்கும்போதும்... விபத்துகள் நடக்காதபடி நம்மால் பார்த்துக்கொள்ள முடியும். அதனால், திடீரென்று ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை வராது.

உயிர் என்ற பரிசை நாம் உயர்வாக மதிப்பதால், டிபிஏ அட்டையைப் பூர்த்தி செய்து எப்போதும் நம்மோடு எடுத்துக்கொண்டு போகிறோம் (பாரா 15) d

15. (அ) டிபிஏ அட்டையில் நாம் எழுதியிருக்கும் விவரங்கள் லேட்டஸ்ட்டாக இருப்பது ஏன் முக்கியம்? (படத்தையும் பாருங்கள்.) (ஆ) வீடியோவில் நாம் பார்த்தபடி, மருத்துவ சிகிச்சைக்காக இரத்தத்தைப் பயன்படுத்துவது சம்பந்தமாக நாம் எப்படிச் சரியான முடிவுகளை எடுக்கலாம்?

15 உயிர் என்ற பரிசை நாம் உயர்வாக மதித்தால், மருத்துவ முன்கோரிக்கை அட்டையை (உடல்நலப் பராமரிப்பு முன்கோரிக்கை அட்டையை) பூர்த்தி செய்து எப்போதும் நம்மோடு எடுத்துக்கொண்டு போவோம். b இரத்தம் ஏற்றுவது சம்பந்தமாகவும் சில சிகிச்சைகள் சம்பந்தமாகவும் நாம் எடுத்திருக்கும் முடிவுகளை அந்த அட்டையில் நாம் எழுதியிருப்போம். உங்களுடைய டிபிஏ அட்டையில் இருக்கும் விவரங்கள் லேட்டஸ்ட்டாக இருக்கிறதா? நீங்கள் அந்த விவரங்களை அப்டேட் செய்ய வேண்டுமா அல்லது அவற்றைப் புதிதாகப் பூர்த்தி செய்ய வேண்டுமா? அப்படியென்றால், தயவுசெய்து அதைத் தள்ளிப்போடாதீர்கள்! நம் முடிவுகளை எழுத்தில் எழுதி வைத்துவிட்டால், அவசரநிலை வரும்போது நம் முடிவுகளைப் பற்றி டாக்டர்களிடம் விளக்கிக்கொண்டு நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக சிகிச்சையை ஆரம்பிக்க முடியும். அதுமட்டுமல்ல, நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாத சிகிச்சைகளையும் மருந்துகளையும் டாக்டர்கள் நமக்குக் கொடுத்துவிடாதபடி பார்த்துக்கொள்ள முடியும். c

16. டிபிஏ அட்டையை எப்படிப் பூர்த்தி செய்வதென்று தெரியாவிட்டால் என்ன செய்யலாம்?

16 நாம் எவ்வளவு இளமைத் துடிப்போடு இருந்தாலும் சரி, எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, நம் எல்லாருக்குமே எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம் அல்லது வியாதிகள் வரலாம். (பிர. 9:11) அதனால், நாம் டிபிஏ அட்டையைப் பூர்த்தி செய்து வைத்திருப்பது ரொம்ப முக்கியம். அதை எப்படிப் பூர்த்தி செய்வதென்று உங்களுக்குத் தெரியாவிட்டால் மூப்பர்களிடம் கேளுங்கள். அதைப் பற்றி அவர்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருப்பார்கள், உங்களுக்கு உதவியும் செய்வார்கள். ஆனால், சிகிச்சைகள் சம்பந்தமாக அவர்கள் உங்களுக்காக முடிவுகளை எடுக்க மாட்டார்கள். அது உங்கள் பொறுப்பு! (கலா. 6:4, 5) இருந்தாலும், அதில் இருக்கும் விஷயங்களைப் புரிந்துகொள்ளவும் உங்களுடைய முடிவுகளை எழுதி வைக்கவும் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

நியாயமாக நடந்துகொள்ளுங்கள்

17. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நாம் எப்படி நியாயமாக நடந்துகொள்ளலாம்?

17 பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட நம்முடைய மனசாட்சியின் அடிப்படையில்தான் ஆரோக்கியம் சம்பந்தமாகவும் சிகிச்சைகள் சம்பந்தமாகவும் நாம் நிறைய முடிவுகளை எடுக்கிறோம். (அப். 24:16; 1 தீ. 3:9) அந்த முடிவுகளை எடுக்கும்போதும், அவற்றைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போதும் பிலிப்பியர் 4:5 சொல்வதுபோல் நாம் நடந்துகொள்ள வேண்டும். “நீங்கள் நியாயமானவர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கட்டும்” என்று அது சொல்கிறது. நாம் நியாயமானவர்களாக இருந்தால் நம் ஆரோக்கியத்தைப் பற்றி அளவுக்கு அதிகமாகக் கவலைப்பட மாட்டோம், அது சம்பந்தமாக நமக்கு இருக்கும் கருத்துகளை மற்றவர்கள்மேல் திணிக்கவும் மாட்டோம். நம் சகோதர சகோதரிகள் எடுக்கும் முடிவுகள் நமக்குப் பிடிக்காவிட்டால்கூட அவர்களை நேசிப்போம், அவர்களை மதிப்போம்.—ரோ. 14:10-12.

18. உயிர் என்ற பரிசுக்காக நாம் எப்படி நன்றி காட்டலாம்?

18 உயிரின் ஊற்றாகிய யெகோவாவுக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்? நம் உயிரைப் பாதுகாப்பதன் மூலமாகவும், நம்மால் முடிந்ததையெல்லாம் யெகோவாவுக்காகச் செய்வதன் மூலமாகவும் நன்றி காட்டலாம். (வெளி. 4:11) இப்போதைக்கு நோய்களையும் பேரழிவுகளையும் நாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், நம் வாழ்க்கை இப்படி இருக்க வேண்டும் என்று நம் படைப்பாளர் நினைக்கவே இல்லை. சீக்கிரத்தில், வலியும் வேதனையும் சாவும் இல்லாத ஒரு வாழ்க்கையை அவர் நமக்குத் தரப்போகிறார். (வெளி. 21:4) அதுவரைக்கும், நாம் உயிரோடு இருப்பதை நினைத்தும், நம் அன்பான அப்பா யெகோவாவுக்குச் சேவை செய்வதை நினைத்தும் எவ்வளவு சந்தோஷப்படலாம், இல்லையா!

பாட்டு 140 முடிவில்லாத வாழ்வு, முடிவிலே!

a கடவுள் தந்திருக்கும் உயிர் என்ற பரிசை இன்னும் உயர்வாக மதிக்க இந்தக் கட்டுரை நமக்கு உதவும். ஏதாவது பேரழிவு ஏற்படும்போது நம்முடைய ஆரோக்கியத்தையும் உயிரையும் எப்படியெல்லாம் பாதுகாக்கலாம் என்று இந்தக் கட்டுரையில் நாம் பார்ப்போம். அதோடு, விபத்துகளைத் தவிர்ப்பதற்கும், ஒரு அவசரநிலை ஏற்படுவதற்கு முன்பே அதற்காகத் தயாராவதற்கும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்றும் பார்ப்போம்.

b இந்த அட்டையை டிபிஏ (DPA) அல்லது நோ பிளட் கார்டு (No Blood Card) என்றும் சொல்கிறோம்.

d பட விளக்கம்: ஒரு இளம் சகோதரர் டிபிஏ அட்டையைப் பூர்த்தி செய்து, மறக்காமல் அதை எடுத்துக்கொண்டு போகிறார்.