Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 43

யெகோவா “உங்களைப் பலப்படுத்துவார்”​—எப்படி?

யெகோவா “உங்களைப் பலப்படுத்துவார்”​—எப்படி?

“[யெகோவா] உங்களை உறுதிப்படுத்துவார், உங்களைப் பலப்படுத்துவார், உங்களை உறுதியான அஸ்திவாரத்தின் மேல் நிற்க வைப்பார்.”—1 பே. 5:10.

பாட்டு 38 அவர் உன்னைப் பலப்படுத்துவார்

இந்தக் கட்டுரையில்... a

1. அன்று வாழ்ந்த யெகோவாவின் ஊழியர்களுக்கு எப்படிப் பலம் கிடைத்தது?

 யெகோவாவுக்கு உண்மையாக இருந்தவர்கள் பலமுள்ளவர்களாக இருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. ஆனால், எப்போதுமே அவர்கள் அப்படி உணரவில்லை. சிலசமயம் அவர்கள் பலவீனமாகவும் உணர்ந்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, தாவீது ராஜா சில சூழ்நிலைகளில் தான் “மலைபோல் உறுதியாக” இருப்பதாக உணர்ந்தார். ஆனால், மற்ற சமயங்களில் “கதிகலங்கிப்போனேன்” என்று சொன்னார். (சங். 30:7) சிம்சோனுக்குக் கடவுளுடைய சக்தி கிடைத்தபோது அவர் பயங்கரமான ஒரு பலசாலியாக ஆனார். ஆனால், யெகோவாவின் சக்தி கிடைக்காவிட்டால், “நான் பலம் இழந்து மற்ற மனுஷர்களைப் போலாகிவிடுவேன்” என்று அவரே சொன்னார். (நியா. 14:5, 6; 16:17) கடவுள்பக்தியுள்ள இந்த ஆட்கள், யெகோவாவின் சக்தி கிடைத்ததால்தான் பலசாலிகளாக ஆனார்கள்.

2. பலவீனமாக இருக்கும்போது பலமுள்ளவனாக இருப்பதாக பவுல் ஏன் சொன்னார்? (2 கொரிந்தியர் 12:9, 10)

2 அப்போஸ்தலன் பவுலும்கூட, யெகோவாதான் தனக்குப் பலம் கொடுக்க வேண்டும் என்பதைப் புரிந்து வைத்திருந்தார். (2 கொரிந்தியர் 12:9, 10-ஐ வாசியுங்கள்.) நம்மைப் போலவே பவுலுக்கும் சில உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. (கலா. 4:13, 14) சிலசமயங்களில், சரியானதைச் செய்வதற்கு போராடினார். (ரோ. 7:18, 19) மற்ற சமயங்களில், பதட்டத்தோடும் தனக்கு என்ன ஆகுமோ என்ற பயத்தோடும் இருந்தார். (2 கொ. 1:8, 9) இருந்தாலும், பவுல் பலவீனமாக இருந்தபோது பலமுள்ளவராக ஆனார். எப்படி? பவுலிடம் இல்லாத பலத்தை யெகோவா கொடுத்தார். யெகோவா பவுலைப் பலசாலியாக்கினார்.

3. இந்தக் கட்டுரையில் என்னென்ன கேள்விகளுக்குப் பதில்களைப் பார்க்கப்போகிறோம்?

3 நமக்கும் கண்டிப்பாகப் பலம் கொடுப்பதாக யெகோவா சொல்லியிருக்கிறார். (1 பே. 5:10) ஆனால், அந்தப் பலத்தைப் பெற்றுக்கொள்ள நாம் முயற்சி எடுக்க வேண்டும். இந்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். ஒரு கார் ஓடுவதற்கான சக்தியை அதன் இன்ஜின் கொடுக்கும். ஆனால், அந்தக் கார் ஓட வேண்டுமென்றால் நாம்தான் அதை ஓட்ட வேண்டும். அதேபோல், யெகோவா நமக்குப் பலம் கொடுக்கத் தயாராக இருக்கிறார். ஆனால், அந்தப் பலத்தை பெற்றுக்கொள்ள நாம்தான் சில முயற்சிகள் எடுக்க வேண்டும். யெகோவா எப்படியெல்லாம் நமக்குப் பலம் கொடுக்கிறார்? அவர் கொடுக்கும் பலத்தைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இந்தக் கட்டுரையில் கிடைக்கும். யோனா தீர்க்கதரிசி, இயேசுவின் அம்மா மரியாள், அப்போஸ்தலன் பவுல் ஆகிய மூன்று பேரின் உதாரணங்களிலிருந்து பதில்களை கண்டுபிடிக்கலாம். அதோடு, தன்னுடைய ஊழியர்களுக்கு யெகோவா இன்று எப்படிப் பலம் கொடுக்கிறார் என்றும் பார்க்கலாம்.

ஜெபமும் தனிப்பட்ட படிப்பும் தரும் பலம்

4. யெகோவாவிடமிருந்து பலத்தைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

4 யெகோவாவிடமிருந்து பலத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், முதலில் அவரிடம் ஜெபம் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது, ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ அவர் தருவார். (2 கொ. 4:7) அவருடைய வார்த்தையைப் படித்து அதை ஆழமாக யோசித்துப் பார்க்கும்போதுகூட நமக்குப் பலம் கிடைக்கும். (சங். 86:11) ஏனென்றால், கடவுளுடைய வார்த்தைக்கு “வல்லமை இருக்கிறது.” (எபி. 4:12) இப்படி, ஜெபம் செய்யும்போதும் அவருடைய வார்த்தையைப் படிக்கும்போதும், நமக்குத் தேவையான பலத்தை யெகோவா தருவார். அந்தப் பலம் நமக்குக் கிடைத்தால், நாம் சகித்திருப்போம்... சந்தோஷத்தைத் தொலைத்துவிட மாட்டோம்... கஷ்டமான நியமிப்புக் கிடைத்தாலும் அதை நல்லபடியாகச் செய்வோம். யோனா தீர்க்கதரிசிக்கு யெகோவா எப்படிப் பலம் கொடுத்தார் என்று இப்போது பார்க்கலாம்.

5. யோனா தீர்க்கதரிசிக்கு ஏன் பலமும் தைரியமும் தேவைப்பட்டது?

5 யோனா தீர்க்கதரிசிக்குப் பலமும் தைரியமும் தேவைப்பட்டது. யெகோவா அவருக்கு ஒரு நியமிப்பைக் கொடுத்தார். ஆனால் யோனா, அந்த நியமிப்பைச் செய்ய முடியாது என்று நினைத்து யெகோவா சொன்ன இடத்துக்கு போகாமல் இன்னொரு இடத்துக்கு ஓடிப்போனார். அதனால், பயங்கரமான ஒரு புயலில் சிக்கி, செத்துப் பிழைத்தார். அவரோடு பயணம் செய்தவர்களும் சாவின் வாசலைப் பார்க்கும்படி செய்துவிட்டார். அதன் பிறகு, அவரைக் கப்பலிலிருந்து அவர்கள் தூக்கி வீசியபோது, இதுவரை பார்க்காத ஒரு பயங்கரமான இடத்துக்கு அவர் போனார். ஒரு பெரிய மீனின் வயிற்றுக்குள் போய்விட்டார்! மீனின் வயிற்றுக்குள் ஒரே இருட்டாக இருந்திருக்கும். யோனாவுக்குப் பயத்தில் படபடவென்று இருந்திருக்கும். ‘நான் செத்துவிடுவேனா? யெகோவா என்னை அம்போவென்று விட்டுவிட்டாரா?’ என்றெல்லாம் அவர் யோசித்திருக்கலாம். கண்டிப்பாக யோனா பதறிப்போயிருப்பார்.

யோனா தீர்க்கதரிசியைப் போல், பிரச்சினைகளைச் சமாளிக்க நாம் எப்படிப் பலத்தைப் பெற்றுக்கொள்ளலாம்? (பாராக்கள் 6-9)

6. யோனா 2:1, 2, 7 காட்டுவதுபோல், மீனின் வயிற்றில் இருந்தபோது யோனாவுக்கு எப்படிப் பலம் கிடைத்தது?

6 மீனின் வயிற்றில் தன்னந்தனியாக இருந்தபோது யோனாவுக்கு எப்படிப் பலம் கிடைத்தது? அவர் செய்த ஒரு விஷயம், ஜெபம். (யோனா 2:1, 2, 7-ஐ வாசியுங்கள்.) ஆரம்பத்தில் அவர் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை என்றாலும், பிற்பாடு மனம் திருந்தினார். மனத்தாழ்மையாக ஜெபம் செய்தால், தான் பேசுவதை யெகோவா கேட்பார் என்று யோனா நம்பினார். கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் விஷயங்களையும் அவர் ஆழமாக யோசித்துப் பார்த்தார். எப்படிச் சொல்கிறோம்? அவர் செய்த ஜெபம், யோனா 2-வது அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சங்கீதத்தில் இருக்கும் நிறைய வார்த்தைகளை அவர் தன்னுடைய ஜெபத்தில் பயன்படுத்தியிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. (உதாரணத்துக்கு, யோனா 2:2, 5-ஐ சங்கீதம் 69:1; 86:7-ளோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.) அப்படியென்றால், யோனா அந்த வசனங்களை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார். இந்தக் கஷ்டமான சூழ்நிலையில் அதைப் பற்றியெல்லாம் அவர் யோசித்துப் பார்த்ததால், யெகோவா கண்டிப்பாக உதவி செய்வார் என்ற நம்பிக்கை அவருக்குக் கிடைத்தது. யோனா கரை சேர்ந்த பிறகு, யெகோவா அடுத்ததாக கொடுக்கவிருந்த நியமிப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார்.—யோனா 2:10–3:4.

7-8. தைவானில் இருக்கும் ஒரு சகோதரருக்கு எப்படிப் பலம் கிடைத்தது?

7 நிறைய பிரச்சினைகளோடு போராடிக்கொண்டு இருக்கும்போது யோனாவின் உதாரணம் நமக்கு உதவும். தைவானில் இருக்கும் சிமிங் b என்ற சகோதரரைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவருக்குத் தீராத உடல்நலப் பிரச்சினைகள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, அவர் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருப்பதால் அவருடைய குடும்பம் அவரைப் பயங்கரமாக எதிர்க்கிறது. ஜெபம் செய்வதாலும் பைபிள் படிப்பதாலும் யெகோவா தருகிற பலத்தை சிமிங் பெற்றுக்கொள்கிறார். அவர் இப்படிச் சொல்கிறார்: “பிரச்சினைகள் வரும்போது நான் ரொம்பப் பதட்டமாகிவிடுவேன். அதனால், நிதானமாகப் படிக்கக்கூட என்னால் முடியாது.” இருந்தாலும், அவர் முயற்சியை விடுவதில்லை. “முதலில் நான் ஜெபம் செய்வேன். அதன் பிறகு, காதில் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு நம்முடைய பாடல்களைக் கேட்பேன். சிலசமயம், சத்தம் கம்மியாக நானே அந்தப் பாடல்களைப் பாடுவேன். அப்படிப் பாடும்போது என்னுடைய பதட்டம் கொஞ்சம் குறையும். அதன் பிறகு, படிக்க ஆரம்பிப்பேன்” என்று சொல்கிறார்.

8 தனிப்பட்ட படிப்பு படித்ததால், யோசித்தே பார்க்காத விதங்களில் சிமிங்குக்குப் பலன் கிடைத்தது. அவருக்கு ஒரு பெரிய ஆபரேஷன் நடந்தது. அதன் பிறகு, அவருடைய உடம்பில் சிவப்பணுக்கள் குறைவாக இருப்பதால் இரத்தம் ஏற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஒரு நர்ஸ் சொன்னார். ஆனால், ஆபரேஷன் நடப்பதற்கு முந்தைய நாள் ராத்திரி ஒரு சகோதரியின் அனுபவத்தை சிமிங் படித்திருந்தார். அந்தச் சகோதரிக்கும் இதே ஆபரேஷன்தான் நடந்திருந்தது. ஆனால், அவருடைய சிவப்பணுக்கள் இவருக்கு இருந்ததைவிட இன்னும் குறைவாக இருந்தன. இருந்தாலும், அந்தச் சகோதரி இரத்தத்தை ஏற்றிக்கொள்ளவில்லை, நல்லபடியாகக் குணமும் ஆனார். இந்த அனுபவத்தைப் படித்தது உண்மையாக இருக்க சிமிங்குக்குப் பலம் கொடுத்தது.

9. ஏதோவொரு பிரச்சினையால் நொந்துபோயிருக்கும்போது நீங்கள் என்ன செய்யலாம்? (படங்களையும் பாருங்கள்.)

9 கஷ்டத்துக்குமேல் கஷ்டம் வரும்போது, மனதில் ஓடுவதை யெகோவாவிடம் தெளிவாகச் சொல்ல முடியாமல் தவிக்கிறீர்களா? அல்லது, படிப்பதற்குக்கூடத் தெம்பில்லாததுபோல் உணர்கிறீர்களா? நீங்கள் என்ன சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்பது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். அதனால், நீங்கள் சின்ன ஜெபம் செய்தால்கூட, உங்களுக்கு என்ன தேவையோ அதைக் கண்டிப்பாக யெகோவா தருவார். (எபே. 3:20) உடம்பிலும் மனதிலும் தெம்பில்லாததால் படிப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால், பைபிள் அல்லது மற்ற பிரசுரங்களின் ஆடியோ பதிவை நீங்கள் கேட்கலாம். நம்முடைய பாடல்களைக்கூட நீங்கள் கேட்கலாம். அல்லது, jw.org வெப்சைட்டில் ஒரு வீடியோவைப் பார்க்கலாம். பலத்தைக் கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். பிறகு, பைபிள் மூலமாகவோ வேறு ஏதாவது கருவிகள் மூலமாகவோ யெகோவா உங்களுக்கு என்ன பதில் தருகிறார் என்று பாருங்கள். யெகோவா கண்டிப்பாக உங்களுக்குப் பலத்தைத் தருவார்!

சகோதர சகோதரிகள் தருகிற பலம்

10. நம் சகோதர சகோதரிகள் நம்மை எப்படிப் பலப்படுத்துகிறார்கள்?

10 யெகோவா நம் சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தி நமக்குப் பலம் தருகிறார். பிரச்சினைகளோடு போராடும்போது அல்லது ஒரு கஷ்டமான நியமிப்புக் கிடைக்கும்போது அவர்கள் நமக்கு “மிகவும் ஆறுதலாக” இருப்பார்கள். (கொலோ. 4:10, 11) “கஷ்ட காலங்களில்” இதுபோன்ற நண்பர்கள் நமக்குக் கண்டிப்பாகத் தேவை! (நீதி. 17:17) நாம் ரொம்ப சோர்ந்துபோயிருக்கும்போது, நமக்கு என்ன தேவையோ அதைச் சகோதர சகோதரிகள் செய்வார்கள். அவர்கள் நம்மை ஆறுதல்படுத்துவார்கள், யெகோவாவுக்கு எப்போதுமே உண்மையாக இருக்க உதவுவார்கள். இயேசுவின் அம்மா மரியாளுக்கு மற்றவர்களிடமிருந்து எப்படிப் பலம் கிடைத்தது என்பதை இப்போது பார்க்கலாம்.

11. மரியாளுக்கு ஏன் பலம் தேவைப்பட்டிருக்கும்?

11 யெகோவாவின் விருப்பத்தைச் செய்ய மரியாளுக்குக் கண்டிப்பாகப் பலம் தேவைப்பட்டிருக்கும். காபிரியேல் தேவதூதர் மூலமாக யெகோவா மரியாளுக்கு ஒரு பெரிய நியமிப்பைக் கொடுத்தபோது அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது மரியாளுக்குக் கல்யாணம் ஆகவில்லை. ஆனால், அவர் கர்ப்பமாவார் என்று தேவதூதர் சொன்னார். பிள்ளைகளை வளர்ப்பதில் அனுபவமே இல்லாத ஒரு பெண், மேசியாவாக ஆகப்போகிற குழந்தையை வளர்க்க வேண்டியிருந்தது. அதோடு, கன்னிப்பெண்ணாக இருந்த மரியாள், தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கல்யாணம் செய்துகொள்ளப்போகும் யோசேப்பிடம் சொல்ல வேண்டியிருந்தது. இதெல்லாம் அவருக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்!—லூக். 1:26-33.

12. லூக்கா 1:39-45 சொல்வதுபோல், மரியாளுக்கு எப்படிப் பலம் கிடைத்தது?

12 இந்த வித்தியாசமான, அதேசமயத்தில் ரொம்ப முக்கியமான நியமிப்பைச் செய்ய மரியாளுக்கு எப்படிப் பலம் கிடைத்தது? அவர் மற்றவர்களுடைய உதவியை எடுத்துக்கொண்டார். உதாரணத்துக்கு, இந்த நியமிப்பைப் பற்றி இன்னும் நிறைய தகவல்களைச் சொல்லச் சொல்லி காபிரியேலிடம் கேட்டார். (லூக். 1:34) அதுமட்டுமல்ல, சீக்கிரத்திலேயே தன்னுடைய சொந்தக்கார பெண் எலிசபெத்தைப் பார்ப்பதற்காக ‘மலைப்பகுதியில் இருந்த யூதாவுக்கு’ போனார். அவ்வளவு கஷ்டப்பட்டு அவர் பயணம் செய்தது நல்லதுதான்! ஏனென்றால், எலிசபெத் மரியாளைப் பாராட்டினார். அதோடு, மரியாளுக்குப் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி ஒரு தீர்க்கதரிசனத்தைச் சொல்ல எலிசபெத்தை யெகோவா தூண்டினார். (லூக்கா 1:39-45-ஐ வாசியுங்கள்.) அதைக் கேட்டபோது மரியாளுக்கு ரொம்ப உற்சாகமாக இருந்திருக்கும். ஏனென்றால், யெகோவா “தன்னுடைய கைகளால் வல்லமையான செயல்களைச் செய்திருக்கிறார்” என்று மரியாள் சொன்னார். (லூக். 1:46-51) அப்படியென்றால், காபிரியேலையும் எலிசபெத்தையும் பயன்படுத்தி யெகோவா மரியாளுக்குப் பலம் தந்தார்.

13. சகோதர சகோதரிகளிடம் உதவி கேட்டதால் பொலிவியாவில் இருந்த ஒரு சகோதரிக்கு எப்படிப் பலன் கிடைத்தது?

13 மரியாளுக்குக் கிடைத்தது போலவே, உங்களுக்கும் சகோதர சகோதரிகளிடமிருந்து பலம் கிடைக்கும். பொலிவியாவில் இருக்கும் டசூரீ என்ற சகோதரிக்குப் பலம் தேவைப்பட்டது. அவருடைய அப்பாவுக்கு ஒரு தீராத வியாதி வந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்பா கூடவே இருந்து அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று டசூரீ நினைத்தார். (1 தீ. 5:4) ஆனால், அப்படிச் செய்வது கஷ்டமாகத்தான் இருந்தது. “நிறைய சமயங்களில், ‘இதற்குமேல் என்னால் முடியாது’ என்று யோசித்தேன்” என்று அவர் சொல்கிறார். ஆனால், ஆரம்பத்தில் அவர் மற்றவர்களிடம் உதவி கேட்கவில்லை. அவர் சொல்கிறார்: “சகோதரர்களைத் தொல்லை பண்ண வேண்டாம் என்று நினைத்தேன். ‘யெகோவா எனக்கு உதவி செய்வார்’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஆனால், மற்றவர்களிடமிருந்து என்னையே நான் தனிமைப்படுத்திக்கொண்டால் என் பிரச்சினைகளை நானே தனியாக சமாளிக்க முயற்சி செய்வதுபோல் ஆகிவிடுமே என்று அப்புறம்தான் புரிந்தது.” (நீதி. 18:1) அதனால், அவர் தன்னுடைய நிலைமையைப் பற்றி நண்பர்களிடம் பேசினார். அதைப் பற்றி அவர் சொல்லும்போது, “என்னுடைய சகோதர சகோதரிகள் என்னைப் பயங்கரமாகத் தாங்கினார்கள். அது எனக்கு நன்றாக இருந்தது. ஆஸ்பத்திரிக்கு அவர்கள் சாப்பாடு கொண்டு வந்தார்கள், என்னை ஆறுதல்படுத்த பைபிள் வசனங்களைக் காட்டினார்கள். இனி நான் தனியாக இல்லை என்ற உணர்வே ரொம்ப சூப்பராக இருந்தது. யெகோவாவின் பெரிய குடும்பத்தில் நாம் இருக்கிறோம். அந்தக் குடும்பத்தில் இருப்பவர்கள், உதவி தேவைப்படும்போது கைகொடுப்பார்கள், சாய்ந்து அழுவதற்குத் தோள் கொடுப்பார்கள், நம்மோடு சேர்ந்து போராடுவார்கள்” என்று சொன்னார்.

14. மூப்பர்கள் தரும் உதவியை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

14 யெகோவா மூப்பர்களைப் பயன்படுத்தியும் நமக்குப் பலம் கொடுக்கிறார். மூப்பர்கள் யெகோவா தந்த பரிசுகள்; அவர்கள் மூலம் யெகோவா நமக்குப் புத்துணர்ச்சி தருவார். (ஏசா. 32:1, 2) அதனால், நீங்கள் பதட்டமாக இருக்கும்போது, உங்கள் மனதில் இருக்கும் எல்லா கவலைகளையும் அவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்யும்போது அதை ஏற்றுக்கொள்ளத் தயங்காதீர்கள். அவர்களைப் பயன்படுத்தி யெகோவா உங்களைப் பலசாலியாக்குவார்.

எதிர்கால நம்பிக்கை தரும் பலம்

15. கிறிஸ்தவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?

15 பைபிளில் யெகோவா கொடுத்திருக்கும் நம்பிக்கை நமக்குப் பலம் தரும். (ரோ. 4:3, 18-20) சில கிறிஸ்தவர்களுக்குப் பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையை யெகோவா கொடுத்திருக்கிறார், வேறு சிலருக்குப் பரலோகத்தில் என்றென்றும் வாழும் நம்பிக்கையைத் தந்திருக்கிறார். சோதனைகளைச் சமாளிப்பதற்கும், ஊழியத்தை நன்றாகச் செய்வதற்கும், சபையில் இருக்கும் மற்ற பொறுப்புகளைச் செய்வதற்கும் இந்த நம்பிக்கை நமக்குப் பலம் தருகிறது. (1 தெ. 1:3) இதே நம்பிக்கைதான் அப்போஸ்தலன் பவுலுக்கும் பலம் கொடுத்தது.

16. அப்போஸ்தலன் பவுலுக்கு ஏன் பலம் தேவைப்பட்டது?

16 பவுலுக்குப் பலம் தேவைப்பட்டது. கொரிந்தியர்களுக்கு எழுதிய கடிதத்தில், சுலபமாக உடைந்துபோகும் ஒரு மண்பாத்திரத்தைப் போல் தான் இருப்பதாகச் சொன்னார். அவர் ‘பயங்கரமாக நெருக்கப்பட்டார்,’ ‘குழம்பித் தவித்தார்,’ ‘கொடுமைப்படுத்தப்பட்டார்,’ ‘தள்ளப்பட்டார்.’ சாகும் நிலைமைக்குக்கூட போய்விட்டார். (2 கொ. 4:8-10) பவுல் இந்த வார்த்தைகளை அவருடைய மூன்றாவது மிஷனரிப் பயணத்தின்போது எழுதினார். ஆனால், அதன் பிறகும் அவர் நிறைய சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. உதாரணத்துக்கு, ஒரு கும்பல் அவரைத் தாக்கியது, கைது செய்யப்பட்டார், கப்பல் விபத்தில் சிக்கினார், சிறையிலும் அடைக்கப்பட்டார்.

17. 2 கொரிந்தியர் 4:16-18 சொல்வதுபோல், சோதனைகளைச் சமாளிக்க பவுலுக்கு எது பலம் கொடுத்தது?

17 பவுல் தன் நம்பிக்கையைப் பற்றி அடிக்கடி யோசித்துப் பார்த்துக்கொண்டே இருந்ததால், சகித்திருக்க பலம் கிடைத்தது. (2 கொரிந்தியர் 4:16-18-ஐ வாசியுங்கள்.) தன்னுடைய உடல் “அழிந்துவந்தாலும்” தான் சோர்ந்துவிட போவதில்லை என்று கொரிந்தியர்களிடம் அவர் சொன்னார். ஏனென்றால், பவுலின் கவனமெல்லாம் எதிர்கால ஆசீர்வாதங்களின் மேல்தான் இருந்தது. பரலோகத்தில் என்றென்றும் வாழும் நம்பிக்கை “மகத்தானது” என்று சொன்னார். அந்த நம்பிக்கைக்காக எந்த உபத்திரவத்தையும் சகித்துக்கொள்ள அவர் தயாராக இருந்தார். பவுல் அந்த நம்பிக்கையைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்த்ததால் ‘நாளுக்குநாள் புதுப்பிக்கப்பட்டதுபோல்’ உணர்ந்தார்.

18. எதிர்கால நம்பிக்கை ஒரு சகோதரருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் எப்படிப் பலம் கொடுத்தது?

18 பல்கேரியாவில் இருக்கும் டீஹோமிர் என்ற சகோதரருக்கு எதிர்கால நம்பிக்கையிலிருந்து பலம் கிடைக்கிறது. சில வருஷங்களுக்கு முன்பு அவருடைய தம்பி, ஸ்ட்ராவ்கோ ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அதன் பிறகு கொஞ்ச காலத்துக்கு, டீஹோமிர் பயங்கர வேதனையில் இருந்தார். அதைச் சமாளிப்பதற்கு அவரும் அவருடைய குடும்பத்தாரும், உயிர்த்தெழுதல் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறார்கள். அவர் இப்படிச் சொல்கிறார்: “நாங்கள் குடும்பமாக உட்கார்ந்து உயிர்த்தெழுதலைப் பற்றி நிறைய பேசுவோம். தம்பி உயிரோடு வரும்போது நாங்கள் அவனை எங்கே சந்திப்போம்... அவனுக்கு என்ன சாப்பாடு சமைத்து வைப்போம்... அவன் உயிர்த்தெழுந்து வரும் நாளில் நாங்கள் வைக்கும் பார்ட்டிக்கு யாரையெல்லாம் கூப்பிடலாம்... கடைசி நாட்களைப் பற்றி அவனுக்கு என்ன சொல்வோம்... என்றெல்லாம் நாங்கள் பேசிக்கொள்வோம்.” இப்படி, தங்களுடைய நம்பிக்கையைப் பற்றி யோசித்துப் பார்ப்பதால் அவர்களால் சகித்திருக்க முடிகிறது என்றும் தம்பி உயிரோடு வரும்வரை பொறுமையாகக் காத்திருக்க முடிகிறது என்றும் அவர் சொல்கிறார்.

புதிய உலகத்தில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? உங்கள் மனதில் ஓடும் கற்பனை என்ன?(பாரா 19) c

19. உங்களுடைய நம்பிக்கையைப் பலப்படுத்த நீங்கள் என்ன செய்யலாம்? (படத்தையும் பாருங்கள்.)

19 பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால், பூஞ்சோலையைப் பற்றி பைபிள் என்னவெல்லாம் சொல்கிறதோ அதையெல்லாம் படியுங்கள்; அதைப் பற்றி ஆழமாக யோசித்துப் பாருங்கள். (ஏசா. 25:8; 32:16-18) புதிய உலகத்தில் நீங்கள் இருப்பதுபோல் கற்பனை செய்யுங்கள். உங்களைச் சுற்றி யாரையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்? உங்களுக்கு என்ன சத்தமெல்லாம் கேட்கிறது? உங்கள் மனதுக்கு எப்படி இருக்கிறது? இதையெல்லாம் கற்பனை செய்ய உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நம் பிரசுரங்களில் இருக்கும் பூஞ்சோலை படங்களைப் பாருங்கள். அல்லது, சிறப்புப் பாடல்களின் வீடியோக்களைப் பாருங்கள். உதாரணத்துக்கு, புத்தம் புது பூமி வருமே!, பூஞ்சோலை நம் கண்ணெதிரே!, கனவு நனவாகுமே போன்ற வீடியோக்களை பார்க்கலாம். நம் நம்பிக்கையை மனதில் ஆழமாகப் பதிய வைத்திருந்தால், இன்று நமக்கு இருக்கும் எல்லா பிரச்சினைகளுமே ‘லேசானது’ என்பதும் அது ‘நொடிப்பொழுது’ மட்டுமே இருக்கும் என்பதும் தெரியும். (2 கொ. 4:17) எதிர்கால நம்பிக்கையின் மூலம் யெகோவா உங்களைப் பலசாலியாக்குவார்!

20. சோர்ந்துபோயிருக்கும் போதுகூட நமக்குப் பலம் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

20 நாம் சோர்ந்துபோயிருக்கும்போதுகூட ‘கடவுள் நமக்குப் பலம் கொடுப்பார்.’ (சங். 108:13) அவரிடமிருந்து நாம் பலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவர் நிறைய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். அதனால், ஒரு நியமிப்பைச் செய்ய... ஒரு பிரச்சினையோடு போராட... அல்லது சந்தோஷத்தைத் தக்க வைத்துக்கொள்ள... உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்யுங்கள். பிறகு, தனிப்பட்ட படிப்பின் மூலமாக யெகோவா என்ன வழிநடத்துதல் தருகிறார் என்பதைப் பாருங்கள். சகோதர சகோதரிகள் தரும் உதவியையும் உற்சாகத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் நம்பிக்கையை உங்களுடைய மனதில் ஆழமாகப் பதிய வையுங்கள்; அதைப் பற்றி அடிக்கடி யோசித்துப் பாருங்கள். இப்படியெல்லாம் செய்தால், “நீங்கள் பொறுமையோடும் சந்தோஷத்தோடும் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதற்காக, கடவுளுடைய மகா வல்லமையால் நீங்கள் எல்லா வல்லமையையும் பெற்று பலப்படுத்தப்படுவீர்கள்.”—கொலோ. 1:11.

பாட்டு 33 யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு

a சோதனையில் மூழ்கி தவித்துக்கொண்டு இருப்பவர்களுக்கும், கிடைத்த ஒரு நியமிப்பை செய்ய முடியுமா என்று யோசித்துக்கொண்டு இருப்பவர்களுக்கும் இந்தக் கட்டுரை உதவி செய்யும். யெகோவா நமக்கு எப்படிப் பலம் கொடுப்பார் என்றும், அவருடைய உதவியைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் பார்ப்போம்.

b சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

c படவிளக்கம்: காது கேட்காத ஒரு சகோதரி பைபிளில் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளைக் கற்பனை செய்கிறார். புதிய உலகத்தில் தன்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்க ஒரு இசை வீடியோவைப் போட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.