Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 44

கடவுளுடைய வார்த்தையை அலசி ஆராயுங்கள்

கடவுளுடைய வார்த்தையை அலசி ஆராயுங்கள்

‘அகலமும் நீளமும் உயரமும் ஆழமும் என்னவென்று நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.’—எபே. 3:18.

பாட்டு 95 வெளிச்சம் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிறது

இந்தக் கட்டுரையில்... a

1-2. பைபிளை எப்படிப் படிக்க வேண்டும்? உதாரணத்தோடு விளக்குங்கள்.

 நீங்கள் ஒரு வீடு வாங்கப்போவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்பதை எதை வைத்து முடிவு செய்வீர்கள்? வீட்டின் ஃபோட்டோவைப் பார்த்து முடிவு செய்துவிடுவீர்களா? அதுவும், வெளியிலிருந்து பார்க்க அந்த வீடு எப்படி இருக்கிறது என்பதை வைத்து மட்டுமே முடிவு செய்துவிடுவீர்களா? கண்டிப்பாக இல்லை! நேரில் போய் அந்த வீட்டைச் சுற்றிப் பார்ப்பீர்கள். ஒவ்வொரு ரூமும் எவ்வளவு அகலமாகவும் நீளமாகவும் இருக்கிறது... அந்த வீட்டின் பரப்பளவு என்ன... என்றெல்லாம் பார்ப்பீர்கள். அந்த வீட்டை எப்படிக் கட்டியிருக்கிறார்கள் என்றும் நுணுக்கமாகப் பார்ப்பீர்கள். ஏன் அப்படியெல்லாம் செய்வீர்கள்? ஒரு வீட்டை வாங்குவதற்கு முன்பு அந்த வீட்டைப் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்வதற்காகத்தான்!

2 இந்த விஷயத்தை பைபிள் படிப்பதோடு ஒப்பிட முடியும். பைபிளில் இருக்கும் தகவலை “பெரிய பெரிய கோபுரங்களும் ஆழமான அஸ்திவாரங்களும் இருக்கும் கட்டிடத்துக்கு” ஒரு பைபிள் அறிஞர் ஒப்பிட்டார். அப்படியென்றால், பைபிளை வெறுமனே மேலோட்டமாகப் படித்துக்கொண்டு போனால், “கடவுளுடைய பரிசுத்த வார்த்தைகளில் இருக்கிற அடிப்படை விஷயங்களை” மட்டும்தான் தெரிந்துகொள்ள முடியும். (எபி. 5:12) ஒரு வீட்டை வாங்குவதற்குமுன் எப்படி அந்த வீட்டுக்குள் போய் ஒவ்வொரு விஷயத்தையும் நன்றாகக் கவனிப்பீர்களோ, அதேபோல் பைபிளுக்கு “உள்ளே போய்” எல்லா விவரங்களையும் அலசிப் பாருங்கள். பைபிளில் இருக்கும் விஷயங்கள் எப்படி ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று பாருங்கள். பைபிளில் இருக்கும் எந்தெந்த உண்மைகளை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை மட்டுமல்ல, அவற்றை ஏன் நம்புகிறீர்கள் என்பதையும் ஆராய்ந்து பாருங்கள்.

3. அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களை என்ன செய்யச் சொன்னார், ஏன்? (எபேசியர் 3:14-19)

3 கடவுளுடைய வார்த்தையை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு ஆழமான சத்தியங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அப்போஸ்தலன் பவுல், அன்று வாழ்ந்த கிறிஸ்தவர்களை அப்படித்தான் செய்யச் சொன்னார். கடவுளுடைய வார்த்தையின் ‘அகலமும் நீளமும் உயரமும் ஆழமும் என்னவென்று நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்’ என்று சொன்னார். அப்படிச் செய்தால் விசுவாசத்தில் “வேரூன்றியவர்களாகவும் அஸ்திவாரத்தின்மேல் நிலையாய் நிற்கிறவர்களாகவும்” அவர்களால் இருக்க முடியும் என்று சொன்னார். (எபேசியர் 3:14-19-ஐ வாசியுங்கள்.) இன்று நாமும் அதைத்தான் செய்ய வேண்டும். கடவுளுடைய வார்த்தையை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு அதை எப்படி அலசி ஆராயலாம் என்று இப்போது பார்க்கலாம்.

ஆழமான பைபிள் சத்தியங்களை அலசிப் பாருங்கள்

4. யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? உதாரணங்களைச் சொல்லுங்கள்.

4 கிறிஸ்தவர்களாக நாம், அடிப்படை பைபிள் சத்தியங்களைத் தெரிந்துகொண்டாலே போதும் என்று நினைப்பதில்லை. கடவுளுடைய சக்தியின் உதவியோடு “கடவுளுடைய ஆழமான காரியங்களையும்கூட” ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் நமக்கு இருக்கிறது. (1 கொ. 2:9, 10) யெகோவாவிடம் இன்னும் நெருங்கிப் போவதற்கு நீங்கள் ஏன் ஒரு படிப்பு புராஜக்ட்டை ஆரம்பிக்கக் கூடாது? உதாரணத்துக்கு, அன்று வாழ்ந்த தன் ஊழியர்கள்மேல் யெகோவா எப்படியெல்லாம் அன்பு காட்டினார்? இன்று நம்மேலும் அவர் அன்பு காட்டுவார் என்பதை அது எப்படிக் காட்டுகிறது? இஸ்ரவேலர்களின் காலத்தில் தன்னை வணங்குவதற்காக யெகோவா என்னென்ன ஏற்பாடுகளைச் செய்திருந்தார்? அந்த ஏற்பாடுகளுக்கும் நம் காலத்தில் யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளுக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது? இயேசு பூமியில் வாழ்ந்த சமயத்தில் என்னென்ன தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார்? இதுபோன்ற விஷயங்களை உங்களுடைய தனிப்பட்ட படிப்பில் நீங்கள் ஆழமாகப் படித்துப் பார்க்கலாம்.

5. உங்களுடைய படிப்பு புராஜக்ட்டில் நீங்கள் எதைப் பற்றி ஆராய்ச்சி செய்யப்போகிறீர்கள்?

5 பைபிளை ஆழமாக ஆராய்ச்சி செய்து படிக்கும் சிலரிடம், “எதைப் பற்றியெல்லாம் படிப்பது உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?” என்று கேட்டபோது அவர்கள் சில விஷயங்களைச் சொன்னார்கள். “ படிப்பு புராஜக்ட்டுக்காக...” என்ற பெட்டியில் அவை கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள்கூட ஆராய்ச்சி செய்து பார்க்கலாம். அதற்காக, யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேட்டை நீங்கள் பயன்படுத்தலாம். பைபிளை இப்படி ஆழமாக ஆராய்ச்சி செய்து படிக்கும்போது உங்கள் விசுவாசம் பலமாகும், ‘கடவுளைப் பற்றிய அறிவையும் கண்டடைவீர்கள்.’ (நீதி. 2:4, 5) ஆழமான சில பைபிள் சத்தியங்களைப் பற்றி இப்போது நாம் அலசிப் பார்க்கலாம்.

கடவுளுடைய நோக்கத்தை அலசிப் பாருங்கள்

6. (அ) யெகோவாவின் நோக்கம் ஏன் கண்டிப்பாக நிறைவேறும் என்பதை விளக்குங்கள். (ஆ) யெகோவா மனுஷர்களுக்காகவும் இந்தப் பூமிக்காகவும் வைத்திருக்கும் நோக்கத்தை ‘நித்திய நோக்கம்’ என்று ஏன் சொல்கிறோம்? (எபேசியர் 3:11)

6 கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று இப்போது பார்க்கலாம். இந்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். ஒரு இடத்துக்குப் போகலாம் என்று நீங்கள் முடிவு செய்கிறீர்கள். அதுதான் உங்கள் நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு திட்டத்தைப் போடுகிறீர்கள். ஒரு குறிப்பிட்ட சாலையில் பயணம் செய்யலாம் என்று முடிவு செய்கிறீர்கள். ஆனால், நீங்கள் பயணம் செய்யும்போது அந்தச் சாலையில் சில தடைகள் வந்தால் நீங்கள் நினைத்த இடத்துக்கு உங்களால் போய்ச் சேர முடியாமல் போகலாம்; பயணமும் நின்றுவிடலாம். அதாவது உங்கள் நோக்கம் நிறைவேறாமல் போய்விடலாம். ஆனால், யெகோவாவுக்கு இப்படி நடக்க வாய்ப்பே இல்லை. தன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவர் தேர்ந்தெடுத்த பாதையில், ஏதாவது தடை வந்தாலும் அவர் தன் பயணத்தை நிறுத்தவே மாட்டார். ஒருவேளை, அவர் வேறு பாதையைக்கூடத் தேர்ந்தெடுக்கலாம். போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் போவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் யெகோவா செய்வார். இப்படி, தன்னுடைய நோக்கத்தை அவர் கண்டிப்பாக நிறைவேற்றுவார். அந்த ‘நித்திய நோக்கத்தை’ அவர் எப்படி நிறைவேற்றப்போகிறார் என்பதை பைபிளில் படிப்படியாகச் சொல்லியிருக்கிறார். (எபே. 3:11) தன்முன் என்ன தடை வந்தாலும் யெகோவா கண்டிப்பாக அதையெல்லாம் தாண்டி வருவார். ஏனென்றால், அவர் “எல்லாவற்றையும் தன்னுடைய நோக்கத்தின்படி நடக்க வைத்திருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 16:4) யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதால் கிடைக்கும் நன்மைகள் நித்தியத்துக்கும் நிலைத்திருக்கும். அப்படியென்றால், யெகோவாவின் நோக்கம் என்ன? அதை நிறைவேற்ற அவர் என்னென்ன மாற்றங்களைச் செய்திருக்கிறார்?

7. ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமல் போனபோது யெகோவா தன் நோக்கத்தை நிறைவேற்ற என்ன மாற்றத்தைச் செய்தார்? (மத்தேயு 25:34)

7 கடவுள் தன்னுடைய நோக்கத்தைப் பற்றி ஆதாம் ஏவாளிடம் ஆரம்பத்தில் சொன்னார். “நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்; அதைப் பண்படுத்துங்கள். . . . எல்லா உயிரினங்களும் உங்கள் அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்” என்றார். (ஆதி. 1:28) ஆனால், ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்கு எதிராகச் செயல்பட்டு, மனுஷர்கள் பாவிகளாக ஆவதற்குக் காரணமாகிவிட்டார்கள். அந்தச் சமயத்தில் யெகோவாவின் நோக்கம் தடைபட்டதுபோல் தெரிந்தது, சாலையில் ஒரு தடை வந்த மாதிரி! உடனடியாக யெகோவா வேறு சாலையைத் தேர்ந்தெடுத்தார். மனுஷர்களுக்காகவும் பூமிக்காகவும் அவர் என்ன நோக்கம் வைத்திருந்தாரோ அதை நிறைவேற்ற பரலோகத்தில் ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்தலாம் என்று அவர் அப்போதே முடிவெடுத்தார். (மத்தேயு 25:34-ஐ வாசியுங்கள்.) கொஞ்சக் காலத்துக்குப் பிறகு யெகோவா தன்னுடைய ஒரே மகனை இந்தப் பூமிக்கு அனுப்பி, அந்த அரசாங்கத்தைப் பற்றி மக்களுக்குச் சொல்லித்தந்தார். அதோடு, மனுஷர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்பதற்கு இயேசுவின் உயிரைப் பலியாகக் கொடுக்க ஏற்பாடு செய்தார். பிறகு, இயேசுவை உயிர்த்தெழுப்பினார். பரலோகத்திலிருந்து கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இயேசு ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஆனால், கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

பரலோகத்திலும் பூமியிலும் வாழும் யெகோவாவின் ஊழியர்கள் ஒரே குடும்பமாகக் கூட்டிச்சேர்க்கப்பட்டு யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்வார்கள். அந்தச் சமயம் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! (பாரா 8)

8. (அ) பைபிளின் முக்கியப் பொருள் என்ன? (ஆ) எபேசியர் 1:8-11 சொல்வதுபோல், யெகோவாவின் அடிப்படை நோக்கம் என்ன? (அட்டைப் படத்தைப் பாருங்கள்.)

8 பைபிளின் முக்கியப் பொருள் இதுதான்: இந்தப் பூமிக்கான தன் நோக்கத்தை யெகோவா நிறைவேற்றும்போது அவருடைய பெயர் பரிசுத்தப்படும். இயேசுவைத் தலைவராகக் கொண்ட தன் அரசாங்கத்தின் மூலம் இதை யெகோவா செய்வார். அவருடைய நோக்கம் மாறவே மாறாது. அது கண்டிப்பாக நிறைவேறும் என்று வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசா. 46:10, 11, அடிக்குறிப்புகள்; எபி. 6:17, 18) இந்தப் பூமி சீக்கிரத்தில் பூஞ்சோலையாக மாறும். ஆதாம் ஏவாளின் வம்சத்தில் வந்த நீதியானவர்கள், எந்தக் குறையும் இல்லாமல் ‘என்றென்றும் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வார்கள்.’ (சங். 22:26) ஆனால், யெகோவாவின் நோக்கம் அதோடு முடிந்துவிடாது. அவருடைய அடிப்படை நோக்கமே, பரலோகத்திலும் பூமியிலும் வாழ்கிற தன்னுடைய ஊழியர்களை ஒரே குடும்பமாகக் கூட்டிச்சேர்ப்பதுதான். அந்தச் சமயத்தில், யெகோவாவின் பேரரசாட்சிக்கு எல்லாருமே உண்மையோடு கட்டுப்பட்டு நடப்பார்கள். (எபேசியர் 1:8-11-ஐ வாசியுங்கள்.) யெகோவா இதையெல்லாம் எப்படிச் செய்யப்போகிறார் என்பதை நினைக்கும்போது உங்களுக்கு மெய்சிலிர்க்கிறதா?

எதிர்காலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள்

9. இனி நடக்கப்போகும் சம்பவங்களைப் பற்றி பைபிள் எப்படி விவரிக்கிறது?

9 ஏதேன் தோட்டத்தில் யெகோவா சொன்ன தீர்க்கதரிசனத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அது ஆதியாகமம் 3:15-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. b தன் நோக்கம் நிறைவேறுவதற்கு என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்பதை யெகோவா அதில் சொன்னார். அவர் சொல்லி ஆயிரக்கணக்கான வருஷங்களுக்குப் பிறகு அவை நடக்க ஆரம்பித்தன. ஆபிரகாமின் வம்சத்தில் மேசியா வருவார் என்றும், பல தலைமுறைகளுக்குப் பிறகு அவர் தோன்றுவார் என்றும் கடவுள் வெளிப்படுத்தினார். (ஆதி. 22:15-18) பிறகு கி.பி. 33-ல், முன்பு சொன்னபடியே இயேசுவின் குதிங்கால் நசுக்கப்பட்டது. (அப். 3:13-15) தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் கடைசி சம்பவம் நடப்பதற்கு, அதாவது சாத்தானின் தலை நசுக்கப்படுவதற்கு, இன்னும் 1,000 வருஷங்களுக்குமேல் ஆகும். (வெளி. 20:7-10) சாத்தானின் அமைப்புக்கும் யெகோவாவின் அமைப்புக்கும் இடையில் இருக்கும் பகை எப்படி உச்சக்கட்டத்துக்கு வரும் என்பதையும் பைபிள் விளக்குகிறது.

10. (அ) எதிர்காலத்தில் அடுத்தடுத்து என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகின்றன? (ஆ) அவற்றைச் சந்திக்க நாம் எப்படி இப்போதே தயாராகலாம்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

10 உலகத்தையே உலுக்கப்போகும் சம்பவங்கள் நடக்கும் என்று பைபிள் அன்றே சொன்னது. முதலில் தேசங்கள், “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்று அறிவிப்பார்கள். (1 தெ. 5:2, 3) அப்போது “திடீரென்று” மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும், அதாவது எல்லா பொய் மதங்களையும் தேசங்கள் தாக்கும். (வெளி. 17:16) அதன் பிறகு, ‘மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்து மேகங்கள்மேல் வரும்’ அசாதாரணமான காட்சி தெரியலாம். (மத். 24:30) அதன்பின் இயேசு மனுஷர்களை நியாயந்தீர்ப்பார்; செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பிரிப்பார். (மத். 25:31-33, 46) இதெல்லாம் நடக்கும்போது சாத்தான் சும்மா இருக்க மாட்டான்; அவனுடைய கோர முகத்தைக் காட்டுவான். அதாவது, யெகோவாவின் மக்கள்மேல் தாக்குதல் நடத்துவதற்கு மாகோகு தேசத்து கோகு என்று சொல்லப்படும் தேசங்களின் கூட்டணியை அவன் தூண்டிவிடுவான். (எசே. 38:2, 10, 11) அதன் பிறகு, ஒரு கட்டத்தில் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் பரலோகத்துக்குப் போவார்கள். கிறிஸ்துவோடும் அவருடைய பரலோகப் படையோடும் சேர்ந்து அர்மகெதோன் போரில் கலந்துகொள்வார்கள். அந்தப் போர் மிகுந்த உபத்திரவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும். c (மத். 24:31; வெளி. 16:14, 16) பிறகு, இயேசுவின் ஆயிர வருஷ ஆட்சி ஆரம்பிக்கும்.—வெளி. 20:6.

கோடிக்கணக்கான வருஷங்களாக யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொண்ட பிறகு அவரோடு நமக்கு இருக்கும் பந்தம் எப்படி இருக்கும்? (பாரா 11)

11. என்றென்றும் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? (படத்தையும் பாருங்கள்.)

11 ஆயிர வருஷ ஆட்சிக்குப் பிறகு நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். ‘என்றென்றும் வாழும் எண்ணத்தை மனுஷர்களின் இதயத்தில் [கடவுள்] வைத்திருக்கிறார்’ என்று பைபிள் சொல்கிறது. (பிர. 3:11) அப்படியென்றால், நம் வாழ்க்கை எப்படி இருக்கும்? யெகோவாவுக்கும் நமக்கும் இருக்கும் பந்தம் எப்படி இருக்கும்? இது சம்பந்தமாக, யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தில் பக்கம் 319-ல், அருமையான ஒரு குறிப்பு சொல்லப்பட்டிருக்கிறது: “நமக்கு முன் இருக்கும் வாய்ப்பை சற்று சிந்தித்துப் பாருங்கள். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, ஏன் கோடிக்கணக்கான ஆண்டுகள்கூட வாழ்ந்த பிறகு யெகோவா தேவனைப் பற்றி இப்போதைவிட மிக அதிகம் அறிந்திருப்போம். ஆனாலும் கற்றுக்கொள்வதற்கு எண்ணற்ற அருமையான காரியங்கள் இன்னும் உண்டு என்பதை உணர்ந்திருப்போம். . . . நித்திய வாழ்வு நம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு சுவாரஸ்யமாகவும் பல்சுவையூட்டுவதாகவும் இருக்கும்; யெகோவாவிடம் நெருங்கிச் செல்வதே எப்போதும் அதன் சிறப்பம்சமாக இருக்கும்.” சரி, இப்போது வேறு எதைப் பற்றிக்கூட நீங்கள் ஆராய்ச்சி செய்யலாம் என்று பார்க்கலாம்.

பரலோகத்தை அண்ணாந்து பாருங்கள்

12. நாம் எப்படிப் பரலோகத்தை அண்ணாந்து பார்க்கலாம்? ஒரு உதாரணம் சொல்லுங்கள்.

12 ‘உயர்ந்த இடத்தில் இருக்கும்’ யெகோவாவின் சிம்மாசனத்தைப் பற்றிய சில காட்சிகளை பைபிள் நம் கண்முன் நிறுத்துகிறது. (ஏசா. 33:5) யெகோவாவைப் பற்றியும் அவருடைய அமைப்பின் பரலோக பாகத்தைப் பற்றியும் அது நமக்கு அற்புதமான விஷயங்களை வெளிப்படுத்துகிறது. (ஏசா. 6:1-4; தானி. 7:9, 10; வெளி. 4:1-6) உதாரணத்துக்கு, பிரமிக்க வைக்கும் விஷயங்களைப் பார்த்ததாக எசேக்கியேல் சொன்னார். “வானம் திறந்தது. கடவுள் எனக்கு ஒரு தரிசனத்தைக் காட்டினார்” என்று அவர் எழுதினார்.—எசே. 1:1.

13. எபிரெயர் 4:14-16 சொல்வதுபோல் பரலோகத்திலிருந்து இயேசு உங்களுக்காகச் செய்யும் விஷயங்களைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?

13 முடிசூட்டப்பட்ட மன்னராக... கரிசனையுள்ள தலைமைக் குருவாக... இயேசு பரலோகத்திலிருந்து நமக்காக என்னவெல்லாம் செய்கிறார் என்பதை யோசித்துப் பாருங்கள். அவர் மூலமாகத்தான், “அளவற்ற கருணை காட்டுகிற கடவுளுடைய சிம்மாசனத்தை” ஜெபத்தின் மூலம் நம்மால் அணுக முடிகிறது. அதோடு, “சரியான சமயத்தில்” உதவியையும் இரக்கத்தையும் கேட்டுப் பெற்றுக்கொள்ள முடிகிறது. (எபிரெயர் 4:14-16-ஐ வாசியுங்கள்.) யெகோவாவும் இயேசுவும் நமக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்றும், இப்போது பரலோகத்திலிருந்து என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் நாம் ஒவ்வொரு நாளும் யோசித்துப் பார்க்க வேண்டும். அவர்கள் காட்டும் அன்பு நம் இதயத்தைத் தொட வேண்டும். அதோடு, யெகோவாவுக்குச் சுறுசுறுப்பாகச் சேவை செய்ய வேண்டும்... அவரை வணங்க வேண்டும்... என்ற துடிப்பு நமக்கு வர வேண்டும்.—2 கொ. 5:14, 15.

யெகோவாவின் நண்பராவதற்கும் இயேசுவின் சீஷராவதற்கும் நிறைய பேருக்கு உதவி செய்ததைப் பற்றி புதிய உலகத்தில் நீங்கள் யோசித்துப் பார்க்கும்போது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! (பாரா 14)

14. யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் நன்றி காட்ட ஒரு சிறந்த வழி என்ன? (படங்களையும் பாருங்கள்.)

14 யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் நன்றி காட்ட ஒரு சிறந்த வழி, யெகோவாவின் நண்பராவதற்கும் இயேசுவின் சீஷராவதற்கும் மக்களுக்கு உதவுவதுதான். (மத். 28:19, 20) கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் நன்றி காட்டுவதற்காக அப்போஸ்தலன் பவுலும் அந்த வேலையைத்தான் செய்தார். ‘எல்லா விதமான மக்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும்தான்’ யெகோவாவின் விருப்பம் என்பதை பவுல் புரிந்து வைத்திருந்தார். (1 தீ. 2:3, 4) “எப்படியாவது சிலரை மீட்புக்கு வழிநடத்த வேண்டும் என்பதற்காக” அவர் ஊழியத்தில் கடினமாக உழைத்தார்.—1 கொ. 9:22, 23.

கடவுளுடைய வார்த்தையை அலசிப் பார்ப்பது உங்களுக்குச் சந்தோஷம் தரட்டும்

15. சங்கீதம் 1:2 சொல்வதுபோல் நமக்கு எது சந்தோஷத்தைக் கொடுக்கும்?

15 வாழ்க்கையில் வெற்றி பெற்று சந்தோஷமாக இருக்க நினைக்கும் ஒரு நபர் ‘யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிப்பார்’ என்றும், ‘அதை ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் வாசிப்பார்’ என்றும் சங்கீதக்காரன் எழுதினார். (சங். 1:1-3, அடிக்குறிப்பு) இந்த சங்கீதத்தைப் பற்றி ஸ்டடீஸ் இன் த சாம்ஸ் என்ற தன்னுடைய புத்தகத்தில் பைபிள் மொழிபெயர்ப்பாளரான ஜோசஃப் ரோதர்ஹாம் சில குறிப்புகளைச் சொல்லியிருக்கிறார். “ஒரு நபருக்குக் கடவுளுடைய வழிநடத்துதல் ரொம்பப் பிடித்திருந்தால் அவர் அதற்காகத் தேடுவார், அதைக் கற்றுக்கொள்வார், அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருப்பார்.” அதுமட்டுமல்ல, “கடவுளுடைய வார்த்தையைப் படிக்காமல் ஒரு நாள் கடந்துபோகிறது என்றால், அந்த நாளே தொலைந்துபோன மாதிரிதான்” அந்த நபர் நினைப்பார் என்றும் அவர் எழுதியிருக்கிறார். அதனால், பைபிளில் இருக்கும் ஒவ்வொரு நுணுக்கமான விவரத்தையும் கவனித்து படியுங்கள்; அதில் இருக்கும் ஒவ்வொரு விஷயமும் எப்படி ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டிருக்கிறது என்றுகூட நீங்கள் ஆழமாக ஆராய்ச்சி செய்யுங்கள். கடவுளுடைய வார்த்தையின் ‘அகலத்தையும் நீளத்தையும் உயரத்தையும் ஆழத்தையும்’ ஆராய்ச்சி செய்து படிக்கும்போது எவ்வளவு சந்தோஷம் கிடைக்கிறது என்று அனுபவித்துப் பாருங்கள்!

16. அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

16 யெகோவா சொல்லித்தரும் அருமையான சத்தியங்களைப் புரிந்துகொள்வது முடியாத காரியம் கிடையாது. அடுத்த கட்டுரையில், ஒரு ஆழமான சத்தியத்தைப் பற்றி ஆராயப் போகிறோம். அதுதான், யெகோவாவின் ஆன்மீக ஆலயம். இந்த ஆலயத்தைப் பற்றி பவுல் தன் கடிதத்தில் எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எழுதினார். அதைப் பற்றிப் படிக்கும்போது உங்களுக்குச் சந்தோஷம் கிடைக்கும்.

பாட்டு 94 வேத வார்த்தைக்காக நன்றி!

a பைபிளைப் படிப்பது வாழ்நாள் முழுவதும் நமக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும். நம்முடைய பரலோக அப்பாவிடம் நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்ளவும் உதவி செய்யும். கடவுளுடைய வார்த்தையின் ‘அகலத்தையும் நீளத்தையும் உயரத்தையும் ஆழத்தையும்’ ஆராய நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று இந்தக் கட்டுரையில் கற்றுக்கொள்வீர்கள்.

b ஜூலை 2022 காவற்கோபுரத்தில் வந்த, “முதல் தீர்க்கதரிசனம்—நீங்கள் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

c சீக்கிரத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைச் சந்திக்க எப்படித் தயாராகலாம் என்று தெரிந்துகொள்ள, கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது! என்ற புத்தகத்தில் பக். 230-ஐப் பாருங்கள்.