Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 1

பாட்டு 38 அவர் உன்னைப் பலப்படுத்துவார்

யெகோவாவை நம்புங்கள், பயத்தை வெல்லுங்கள்!

யெகோவாவை நம்புங்கள், பயத்தை வெல்லுங்கள்!

2024-க்கான வருடாந்தர வசனம்: “எனக்குப் பயமாக இருக்கும்போது உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்.”சங். 56:3.

என்ன கற்றுக்கொள்வோம்?

யெகோவாமேல் நம்பிக்கை வைத்து பயத்தை எப்படி வெல்லலாம் என்று கற்றுக்கொள்வோம்.

1. எதையெல்லாம் நினைத்து நாம் பயப்படலாம்?

 பைபிளைப் படித்ததால் நிறைய விஷயங்களை நினைத்து நாம் பயப்படுவதில்லை. உதாரணத்துக்கு, இறந்தவர்களை நினைத்தோ, பேய் பிசாசை நினைத்தோ, எதிர்காலத்தை நினைத்தோ நாம் பயப்படுவதில்லை. ஆனாலும், நாம் எல்லாருமே ஏதோவொரு சமயத்தில் பயத்தில் உறைந்து போகிறோம். போர், குற்றச்செயல், கொள்ளைநோய் போன்ற “திகிலுண்டாக்கும்” சம்பவங்கள் நடக்கிற ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். (லூக். 21:11) சிலசமயங்களில், மனிதர்களைப் பார்த்தும் நாம் பயப்படுகிறோம். நம்மை எதிர்க்கும் அரசாங்கங்களையும் குடும்ப அங்கத்தினர்களையும் நினைத்து நாம் பயப்படலாம். வேறு சிலர், இப்போது வருகிற பிரச்சினைகளை அல்லது எதிர்காலத்தில் வரப்போகிற பிரச்சினைகளை நினைத்து பயப்படுகிறார்கள்.

2. காத் நகரத்தில் தாவீதுக்கு என்ன நடந்தது?

2 தாவீதும் சிலசமயங்களில் பயந்துபோயிருக்கிறார். ஒருசமயம், சவுல் ராஜா அவரைக் கொல்வதற்காக துரத்திக்கொண்டிருந்தார். அப்போது, உயிர் பிழைப்பதற்காக அவர் பெலிஸ்திய நகரமான காத்துக்குப் போய் ஒளிந்துகொண்டார். “பல்லாயிரம்” பெலிஸ்தியர்களைக் கொன்றுப்போட்ட மாவீரன் தாவீதுதான் என்பதை காத்தின் ராஜா ஆகீஸ் சீக்கிரத்திலேயே கண்டுப்பிடித்துவிடுகிறார். அதனால், தாவீது “ரொம்பவே பயந்துபோனார்.” (1 சா. 21:10-12) ஆகீஸ் தன்னை ஏதாவது செய்துவிடுவாரோ என்று நினைத்து தாவீது வெலவெலத்து போனார். இந்த சூழ்நிலையில் தாவீது எப்படிப் பயத்தை வென்றார்?

3. சங்கீதம் 56:1-3, 11 சொல்வதுபோல், தாவீது எப்படிப் பயத்தை வென்றார்?

3 காத்தில் இருந்தபோது தனக்கு எப்படி இருந்தது என்பதைப் பற்றி சங்கீதம் 56-ல் தாவீது சொல்கிறார். அந்த சங்கீதத்தைப் படிக்கும்போது தாவீது எந்தளவு பயந்தார் என்பதையும் அந்த பயத்தை எப்படி வென்றார் என்பதையும் பார்க்க முடியும். (சங்கீதம் 56:1-3, 11-ஐ வாசியுங்கள்.) பயமாக இருந்தபோது, தாவீது யெகோவாவை நம்பினார். அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை. யெகோவாவின் உதவியோடு, அங்கிருந்து தப்பிப்பதற்கு வித்தியாசமான ஒரு யுக்தியை தாவீது பயன்படுத்தினார்: ஒரு பைத்தியக்காரனைப் போல் நடித்தார்! அதற்குப் பிறகு, ஆகீஸ் ராஜா தாவீதை ஒரு எதிரியாக பார்க்கவில்லை. தாவீது அங்கிருந்து போனாலே போதும் என்று அவருக்குத் தோன்றியது. அதனால் தாவீதால் தப்பிக்க முடிந்தது.—1 சா. 21:13–22:1.

4. யெகோவாமேல் இருக்கும் நம்பிக்கையை நாம் எப்படி அதிகமாக்கலாம்? விளக்குங்கள்.

4 யெகோவாவை நம்பினால் நம்மாலும் பயத்தை வெல்ல முடியும். ஆனால், யெகோவாமேல் இருக்கும் நம்பிக்கையை எப்படி அதிகமாக்கலாம், அதுவும் பயந்துபோயிருக்கும் ஒரு சூழ்நிலையில்? இந்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு ஒரு நோய் இருப்பது தெரியவருகிறது. ஆரம்பத்தில் உங்களுக்குப் பயமாகத்தான் இருக்கும். நீங்கள் ஒரு டாக்டரைப் போய் பார்க்கிறீர்கள். இதேமாதிரி நோய் இருந்த நிறைய பேரை அவர் குணப்படுத்தியிருக்கிறார் என்று கேள்விப்படுகிறீர்கள். நீங்கள் சொல்வதை அவர் காதுகொடுத்துக் கேட்கிறார்; உங்களுக்கு இருக்கும் பயத்தைப் புரிந்துகொள்கிறார். நிறைய பேருக்குப் பலன் தந்த ஒரு சிகிச்சையைப் பற்றி உங்களுக்கு விளக்குகிறார். இதையெல்லாம் கேட்கும்போது, கண்டிப்பாக அந்த டாக்டர்மேல் உங்களுக்கு நம்பிக்கை வளரும். அதனால், உங்கள் பயம் குறையும். யெகோவாவும் அந்த டாக்டர் மாதிரிதான். யெகோவா ஏற்கெனவே என்னவெல்லாம் செய்திருக்கிறார், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார், எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்பதையெல்லாம் யோசித்துப் பார்த்தால், அவர்மேல் இருக்கும் நம்பிக்கை அதிகமாகும். தாவீதும் அதைத்தான் செய்தார். சங்கீதம் 56-ல் இருக்கும் வார்த்தைகளை இப்போது ஆராய்ந்து பார்க்கலாம். அப்படிச் செய்யும்போது, யெகோவாமேல் இருக்கும் நம்பிக்கையை நீங்கள் எப்படி அதிகமாக்கலாம் என்றும் பயத்தை எப்படி வெல்லலாம் என்றும் யோசித்துப் பாருங்கள்.

யெகோவா என்னவெல்லாம் செய்திருக்கிறார்?

5. பயத்தை வெல்ல தாவீது எதைப் பற்றியெல்லாம் யோசித்துப் பார்த்தார்? (சங்கீதம் 56:12, 13)

5 யெகோவா தனக்காக ஏற்கெனவே என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை தாவீது யோசித்துப் பார்த்தார்; அதுவும், ஆபத்தான சூழ்நிலையில் இருந்தபோது அப்படி செய்தார். (சங்கீதம் 56:12, 13-ஐ வாசியுங்கள்.) இப்படி யோசிப்பது தாவீதின் வழக்கமாகவே இருந்தது. உதாரணத்துக்கு, யெகோவாவின் படைப்புகளைப் பற்றி அவர் அடிக்கடி யோசித்தார். அப்படி செய்தது, யெகோவாவுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதையும், மனிதர்கள்மேல் அவருக்கு எவ்வளவு பாசம் இருக்கிறது என்பதையும் தாவீதுக்கு ஞாபகப்படுத்தியது. (சங். 65:6-9) மற்றவர்களுக்காக யெகோவா என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்றும் தாவீது ஆழமாக யோசித்தார். (சங். 31:19; 37:25, 26) அதோடு, தன்னுடைய வாழ்க்கையில் யெகோவா என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்றும் யோசித்தார். குழந்தையாக இருந்த சமயத்திலிருந்தே யெகோவா அவருக்குத் துணையாக இருந்தார், அவரைப் பாதுகாத்தார். (சங். 22:9, 10) இப்படியெல்லாம் யோசித்தது யெகோவாமேல் இருந்த நம்பிக்கையை அதிகமாக்க தாவீதுக்குக் கண்டிப்பாக உதவியிருக்கும்!

யெகோவாமேல் இருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்த, தனக்காக யெகோவா ஏற்கெனவே என்ன செய்திருக்கிறார், என்ன செய்துகொண்டிருக்கிறார், இனி என்ன செய்யப்போகிறார் என்பதைப் பற்றி தாவீது யோசித்துப் பார்த்தார் (பாராக்கள் 5, 8, 12) d


6. பயமாக இருக்கும்போது யெகோவாமேல் நம்பிக்கை வைக்க நமக்கு எது உதவும்?

6 பயமாக இருக்கும்போது, இதுவரைக்கும் யெகோவா உங்களுக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று யோசியுங்கள். அதோடு, அவருடைய படைப்புகளைப் பற்றியும் யோசியுங்கள். உதாரணத்துக்கு, பறவைகளையும் பூக்களையும் யெகோவா எப்படிக் கவனித்துக்கொள்கிறார் என்பதைக் “கூர்ந்து கவனியுங்கள்.” அவை யெகோவாவின் சாயலில் படைக்கப்படவில்லை. அவரை வணங்குகிற திறமையும் அவற்றுக்கு இல்லை. இருந்தாலும், அவர் அவற்றை நன்றாக பார்த்துக்கொள்கிறார். இதைப் பற்றியெல்லாம் யோசிக்கும்போது, யெகோவா உங்களையும் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை அதிகமாகும். (மத். 6:25-32) அதுமட்டுமல்ல, தன்னுடைய ஊழியர்களை யெகோவா எப்படியெல்லாம் கவனித்து வந்திருக்கிறார் என்றும் யோசித்துப் பாருங்கள். பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு நபரைப் பற்றியோ நம் காலத்தில் யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்யும் ஒருவரைப் பற்றியோ நீங்கள் படித்துப் பார்க்கலாம். a அதோடு, யெகோவா உங்களுக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்றும் யோசியுங்கள். சத்தியத்துக்கு வருவதற்கு உங்களுக்கு எப்படியெல்லாம் உதவியிருக்கிறார்? (யோவா. 6:44) உங்கள் ஜெபங்களுக்கு எப்படியெல்லாம் பதில் தந்திருக்கிறார்? (1 யோ. 5:14) இயேசுவின் பலியினால் ஒவ்வொரு நாளும் நீங்கள் எப்படிப் பயனடைகிறீர்கள்? என்றெல்லாம் யோசித்துப் பாருங்கள்.—எபே. 1:7; எபி. 4:14-16.

யெகோவாமேல் இருக்கும் நம்பிக்கையை பலப்படுத்துவதற்காக, அவர் ஏற்கெனவே என்ன செய்திருக்கிறார், இப்போது என்ன செய்கிறார், இனிமேல் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பற்றி நாம் யோசித்துப் பார்க்க வேண்டும் (பாராக்கள் 6, 9-10, 13-14) e


7. தானியேல் தீர்க்கதரிசியின் உதாரணம், பயத்தை வெல்ல வெனசாவுக்கு எப்படி உதவியது?

7 ஹெய்டியில் இருக்கிற வெனசா b என்ற சகோதரியைப் பற்றி இப்போது பார்க்கலாம். நடுநடுங்க வைக்கிற ஒரு சூழ்நிலையை அவர் சந்தித்தார். அவருடைய ஊரில் இருந்த ஒருவன், அந்த சகோதரிக்குத் தினமும் ஃபோன் செய்தான், மெஸேஜ் அனுப்பினான். தன்னோடு செக்ஸ் வைத்துக்கொள்ள சொல்லி வெனசாவை வற்புறுத்திக்கொண்டே இருந்தான். வெனசா முடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டார். அதற்குப் பிறகு, வெறிபிடித்த மாதிரி அவன் நடந்துகொண்டான்; வெனசாவை மிரட்டினான். “எனக்கு ரொம்ப பயமாக இருந்தது” என்று வெனசா சொல்கிறார். இந்தப் பயத்தை வெனசா எப்படி வென்றார்? பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை வெனசா செய்தார். போலீசிடம் உதவி கேட்க ஒரு மூப்பர் அவருக்கு உதவினார். யெகோவா தன்னுடைய ஊழியர்களை எப்படிப் பாதுகாத்திருக்கிறார் என்பதையும் வெனசா ஆழமாக யோசித்தார். அவர் இப்படி சொல்கிறார்: “முதலில் எனக்கு ஞாபகம் வந்தது தானியேல் தீர்க்கதரிசிதான். அவர் எந்த தப்புமே செய்யவில்லை. ஆனால் அவரைத் தூக்கி சிங்கக் குகையில் போட்டார்கள். அதுவும் அந்த சிங்கங்கள் பசிவெறியில் இருந்தன. இருந்தாலும், யெகோவா தானியேலைப் பாதுகாத்தார். அதனால், நான் யெகோவாவிடம் இப்படி சொன்னேன்: ‘என்னுடைய சூழ்நிலையை உங்கள் கையில் விட்டுவிடுகிறேன், நீங்கள்தான் இதை சரிசெய்ய வேண்டும்.’ அதற்குப் பிறகு, என்னுடைய பயம் காணாமல் போய்விட்டது.”—தானி. 6:12-22.

யெகோவா இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்?

8. தாவீது எதை உறுதியாக நம்பினார்? (சங்கீதம் 56:8)

8 காத்தில் இருந்தபோது தாவீதின் உயிருக்கு ஆபத்து இருந்தது உண்மைதான். இருந்தாலும், அவர் பயத்தில் அப்படியே முடங்கிப் போய்விடவில்லை. அந்த நேரத்தில் யெகோவா அவருக்கு எப்படியெல்லாம் உதவுகிறார் என்று யோசித்துப் பார்த்தார். யெகோவா தன்னை வழிநடத்துவதையும் பாதுகாப்பதையும் தன்னுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்வதையும் அவரால் பார்க்க முடிந்தது. (சங்கீதம் 56:8-ஐ வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, யோனத்தான் மற்றும் தலைமைக் குரு அகிமெலேக்கு மாதிரியான நண்பர்களையும் யெகோவா கொடுத்திருந்தார். அவர்கள் தாவீதுக்கு ஆதரவாக இருந்தார்கள், தேவையான உதவியை செய்தார்கள். (1 சா. 20:41, 42; 21:6, 8, 9) தன்னை வேட்டையாட சவுல் ராஜா துரத்திக்கொண்டே இருந்தாலும், தாவீதால் தப்பிக்க முடிந்தது. தனக்கு இருந்த கஷ்டங்களும், தன் மனதின் ரணங்களும் யெகோவாவுக்கு தெரியும் என்று தாவீது உறுதியாக நம்பினார்.

9. யெகோவா எதையெல்லாம் கவனிக்கிறார்?

9 கஷ்டங்கள் வரும்போது நாம் பயந்துவிட வாய்ப்பிருக்கிறது. அதுபோன்ற சமயங்களில் நமக்கு வரும் கஷ்டங்களையும் யெகோவா பார்க்கிறார், அந்தக் கஷ்டங்களால் நாம் மனதளவில் எப்படிப் பாதிக்கப்படுகிறோம் என்பதையும் புரிந்துகொள்கிறார். உதாரணத்துக்கு, எகிப்தில் இஸ்ரவேலர்கள் அநியாயமாக நடத்தப்பட்டபோது, அவர்கள் அனுபவித்த கஷ்டத்தை மட்டுமல்ல அவர்களுடைய ‘வலியையும் வேதனையையும்’ யெகோவா புரிந்துகொண்டார். (யாத். 3:7) இஸ்ரவேலர்கள், தாங்கள் செய்த தவறுகளால் வேதனைகளை அனுபவித்தபோதுகூட யெகோவா அதைப் பார்த்து “வேதனைப்பட்டார்.” (ஏசா. 63:9) தாவீதும், தான் “படுகிற கஷ்டத்தை” யெகோவா பார்க்கிறார் என்றும் தன் “அடிமனதிலுள்ள வேதனையை” அறிந்திருக்கிறார் என்றும் சொன்னார். (சங். 31:7) அதனால், உங்களுக்கு பயமாக இருக்கும்போது இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: உங்கள் உணர்வுகளை யெகோவா புரிந்துகொள்கிறார். அந்தப் பயத்திலிருந்து வெளியே வர அவர் கண்டிப்பாக உதவுவார்.

10. யெகோவா உங்கள்மேல் அக்கறை வைத்திருக்கிறார் என்று நீங்கள் ஏன் உறுதியாக நம்புகிறீர்கள்?

10 பயமுறுத்தும் ஒரு சூழ்நிலையில் யெகோவாவின் உதவியை உங்களால் உணர முடியாமல் போகலாம். அப்போது என்ன செய்வது? அவர் கொடுக்கும் உதவியை புரிந்துகொள்ள, அவரிடமே உதவி கேளுங்கள். (2 ரா. 6:15-17) இந்தக் கேள்விகளையும் யோசித்துப் பாருங்கள்: “கூட்டத்தில் கொடுக்கப்பட்ட பேச்சோ ஒருவர் சொன்ன பதிலோ என்னை பலப்படுத்தியதா? ஒரு பிரசுரமோ வீடியோவோ பிராட்காஸ்டிங் பாடலோ என்னை பலப்படுத்தியிருக்கிறதா? தூக்கி நிறுத்துவதுபோல் யாராவது என்னிடம் பேசினார்களா? ஆறுதலான பைபிள் வசனங்களை காட்டினார்களா?” சகோதர சகோதரிகள் காட்டும் அன்பையும் பைபிள் தருகிற உற்சாகத்தையும் நாம் லேசாக எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், இவையெல்லாமே யெகோவா கொடுக்கும் பெரிய பெரிய பரிசுகள். (ஏசா. 65:13; மாற். 10:29, 30) அவர் நம்மேல் அக்கறை வைத்திருக்கிறார் என்பதை இவை நிரூபிக்கின்றன. (ஏசா. 49:14-16) அவரை தாராளமாக நம்பலாம் என்பதையும் காட்டுகின்றன.

11. பயத்தை வெல்ல ஐடாவுக்கு எது உதவியது?

11 செனிகல் நாட்டில் இருக்கும் ஐடா என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். கஷ்டமான ஒரு சூழ்நிலையைத் தாக்குப்பிடிக்க யெகோவா அவருக்கு உதவினார். வீட்டுக்கு மூத்த பெண்ணாக இருந்ததால், தங்களையும் ஐடாதான் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அவருடைய அப்பா அம்மா எதிர்பார்த்தார்கள். ஆனால், பயனியர் சேவை செய்வதற்காக ஐடா தன்னுடைய வாழ்க்கையை எளிமையாக்கிய பிறகு அவருக்கு பணக் கஷ்டம் வந்தது. அதனால், அவருடைய குடும்பத்தில் இருந்தவர்கள் அவரை குறை சொன்னார்கள், கோபப்பட்டார்கள். “அப்பா அம்மாவுக்கு உதவ முடியாமல் போய்விடுமோ, எல்லாரும் என்னை வெறுத்துவிடுவார்களோ என்று நினைத்து பயந்துவிட்டேன். என் நிலைமை இவ்வளவு மோசமானதற்கு யெகோவாவை குறை சொன்னேன்” என்று ஐடா சொல்கிறார். பிறகு, கூட்டத்தில் ஒரு பேச்சை அவர் கேட்டார். “நம் இதயத்தில் ஏற்பட்ட காயங்கள் யெகோவாவுக்கு நன்றாக தெரியும் என்று அந்தப் பேச்சில் கேட்டேன். போகப் போக, மூப்பர்கள் கொடுத்த ஆலோசனையாலும் மற்றவர்கள் செய்த உதவியாலும் என்னால் யெகோவாவின் அன்பைப் புரிந்துகொள்ள முடிந்தது. நம்பிக்கையோடு நான் யெகோவாவிடம் ஜெபம் செய்தேன். என் ஜெபத்துக்குப் பதில் கிடைத்ததைப் பார்த்தபோது எனக்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது” என்கிறார் ஐடா. கொஞ்சம் நாளில் அவருக்கு ஒரு வேலை கிடைத்தது. அதனால் ஐடாவால் பயனியர் சேவையையும் செய்ய முடிந்தது, தன்னுடைய குடும்பத்துக்குத் தேவையான பண உதவியையும் செய்ய முடிந்தது. “நான் யெகோவாவை முழுமையாக நம்ப கற்றுக்கொண்டேன். இப்போதெல்லாம், நான் ஜெபம் செய்த பிறகு என்னுடைய பயம் காற்றோடு காற்றாக போய்விடுகிறது” என்று ஐடா சொல்கிறார்.

யெகோவா எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார்?

12. சங்கீதம் 56:9 சொல்வதுபோல், எந்த விஷயத்தை தாவீது உறுதியாக நம்பினார்?

12 சங்கீதம் 56:9-ஐ வாசியுங்கள். பயத்தை மேற்கொள்வதற்காக தாவீது செய்த இன்னொரு விஷயத்தைப் பற்றி இந்த சங்கீதம் சொல்கிறது. தன்னுடைய உயிர் ஆபத்தில் இருந்தபோதுகூட யெகோவா இனிமேல் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பற்றி அவர் யோசித்தார். சரியான நேரத்தில் யெகோவா தன்னைக் காப்பாற்றுவார் என்று தாவீது உறுதியாக நம்பினார். ஏனென்றால், இஸ்ரவேலுடைய அடுத்த ராஜா தாவீதுதான் என்று யெகோவா ஏற்கெனவே வாக்குக் கொடுத்திருந்தார். (1 சா. 16:1, 13) தாவீதைப் பொறுத்தவரை, யெகோவா ஒரு வாக்கைக் கொடுத்தால் அது ஏற்கெனவே நிறைவேறிவிட்டது போல் இருந்தது.

13. யெகோவா என்ன செய்வார் என்று நாம் உறுதியாக இருக்கலாம்?

13 உங்களுக்கு என்ன செய்யப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்? கஷ்டமே வராதபடி யெகோவா நம்மைப் பாதுகாப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. c ஆனால், இன்று நாம் படுகிற கஷ்டங்களைப் புதிய உலகத்தில் யெகோவா இல்லாமல் செய்துவிடுவார். (ஏசா. 25:7-9) இறந்தவர்களை உயிரோடு கொண்டுவருவதற்கும், நம்மைக் குணப்படுத்துவதற்கும், எதிரிகளை அழிப்பதற்கும் நம்மைப் படைத்தவருக்கு சக்தி இருக்கிறது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளலாம்.—1 யோ. 4:4.

14. எதைப் பற்றி நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்?

14 உங்களுக்குப் பயமாக இருக்கும்போது, எதிர்காலத்தில் யெகோவா என்ன செய்யப் போகிறார் என்பதைப் பற்றி யோசியுங்கள். சாத்தானோ கெட்டவர்களோ இல்லாத காலம் எவ்வளவு அருமையாக இருக்கும்! எங்கே பார்த்தாலும் நீதியான மக்கள் மட்டுமே இருப்பார்கள். நமக்குள் இருக்கும் பாவம் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். புதிய உலகத்தைப் பற்றி நாம் எப்படியெல்லாம் யோசித்துப் பார்க்கலாம் என்று 2014 மண்டல மாநாட்டில் ஒரு நடிப்பு இருந்தது. அதில் ஒரு அப்பா தன் குடும்பத்தோடு 2 தீமோத்தேயு 3:1-5-ல் இருப்பதைக் கலந்துபேசுவார். புதிய உலகத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றி அந்த வசனங்கள் சொல்லியிருந்தால், அது எப்படி இருந்திருக்கும் என்று அவர்கள் வாசிப்பார்கள்: “புதிய உலகத்தில் மிகவும் சந்தோஷமான காலம் வரும் என்று தெரிந்துகொள். ஏனென்றால், மனிதர்கள் மற்றவர்களை நேசிப்பவர்களாக, ஆன்மீக காரியங்களை விரும்புகிறவர்களாக, அடக்கமுள்ளவர்களாக, மனத்தாழ்மையுள்ளவர்களாக, கடவுளைத் துதிக்கிறவர்களாக, அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிகிறவர்களாக, நன்றியுள்ளவர்களாக, உண்மையுள்ளவர்களாக, பந்தபாசமுள்ளவர்களாக, ஒத்துப்போகிறவர்களாக, மற்றவர்களைப் பற்றி எப்போதும் நல்ல விதமாக பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களாக, மென்மையானவர்களாக, நல்ல காரியங்களை விரும்புகிறவர்களாக, நம்பகமானவர்களாக, வளைந்துகொடுப்பவர்களாக, தலைக்கனம் இல்லாதவர்களாக, சுகபோக வாழ்க்கையை நேசிக்காமல் கடவுளை நேசிக்கிறவர்களாக, கடவுள் பக்தியுள்ளவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களோடு நீ நெருங்கி இரு.” புதிய உலகத்தில் நம் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைப் பற்றிக் குடும்பத்தில் இருக்கிறவர்களிடமும் சகோதர சகோதரிகளிடமும் அடிக்கடி பேசுகிறீர்களா?

15. பயத்தை வெல்ல டான்யாவுக்கு எது உதவியது?

15 வடக்கு மாசிடோனியாவில் இருக்கும் டான்யா என்ற சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றி யோசித்ததால், அவரால் பயத்தை வெல்ல முடிந்தது. அவர் பைபிள் படித்ததை அவருடைய அப்பா அம்மா பயங்கரமாக எதிர்த்தார்கள். அதைப் பற்றி டான்யா சொல்கிறார்: “எதெல்லாம் நடக்கக் கூடாது என்று பயந்தேனோ அதெல்லாமே நடந்தது. ஒவ்வொரு தடவை கூட்டங்களுக்குப் போய்விட்டு வரும்போதும் அம்மா என்னை போட்டு அடிப்பார். ‘யெகோவாவின் சாட்சியாக மாறினால், உன்னை கொன்றுவிடுவோம்’ என்று அப்பா-அம்மா மிரட்டினார்கள்.” டான்யாவை அவருடைய பெற்றோர் வீட்டைவிட்டு துரத்தினார்கள். இந்த சூழ்நிலையில் டான்யாவுக்கு எப்படி இருந்தது? அவர் சொல்வதைப் பாருங்கள்: “இன்று நான் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால், என்னுடைய வாழ்க்கை என்றென்றைக்கும் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று யோசித்தேன். இன்று நான் இழக்கிற விஷயங்களைப் புதிய உலகத்தில் யெகோவா எனக்கு எப்படிக் கொடுப்பார் என்றும் யோசித்துப் பார்த்தேன். என் வாழ்க்கையில் நடக்கும் கெட்ட விஷயங்கள் அப்போது என் ஞாபகத்துக்கே வராது.” டான்யா தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். தங்குவதற்கு ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கவும் யெகோவா அவருக்கு உதவினார். இப்போது, யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்யும் ஒரு சகோதரரைக் கல்யாணம் செய்துகொண்டு, அவர்கள் இரண்டு பேரும் சந்தோஷமாக முழுநேர சேவை செய்கிறார்கள்.

யெகோவாமீது இருக்கும் நம்பிக்கையை இப்போதே பலப்படுத்துங்கள்

16. லூக்கா 21:26-28-ல் சொல்லியிருக்கிற விஷயங்கள் நடக்கும்போது தைரியமாக இருக்க எது நமக்கு உதவும்?

16 மிகுந்த உபத்திரவத்தின்போது “பயத்தில் மக்களுக்குத் தலைசுற்றும்.” ஆனால், கடவுளுடைய மக்கள் தைரியமாகவும் உறுதியாகவும் இருப்பார்கள். (லூக்கா 21:26-28-ஐ வாசியுங்கள்.) அவர்கள் ஏன் பயப்பட மாட்டார்கள்? ஏனென்றால், யெகோவாவை நம்பியிருக்க அவர்கள் ஏற்கெனவே பழகியிருப்பார்கள். வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்கள் கஷ்டங்களை சமாளிக்க உதவுகிறது என்று முந்தின பாராவில் பார்த்த டான்யா சொல்கிறார். “எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும், அதை நாம் சகித்து நிற்பதற்கு யெகோவாவால் கண்டிப்பாக உதவ முடியும். சில விஷயங்களை மற்றவர்கள் கட்டுப்படுத்துவதுபோல் நமக்குத் தோன்றலாம்; ஆனால் உண்மை என்னவென்றால், யெகோவாவை மீறி எதுவுமே நடக்காது. அதுமட்டுமல்ல, ஒரு கஷ்டம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதற்கும் ஒரு முடிவு இருக்கிறது” என்கிறார் டான்யா.

17. 2024-ன் வருடாந்தர வசனம் நமக்கு எப்படி உதவியாக இருக்கும்? (அட்டைப் படத்தைப் பாருங்கள்.)

17 பயப்படுவது சகஜம்தான்! பயம் எல்லாருக்குமே வரும். ஆனால், அது நம்மைக் கட்டிப்போட்டுவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். தாவீதும் அதைத்தான் செய்தார். தாவீதின் ஜெபத்தில் வரும் வார்த்தைகள்தான் 2024-ன் வருடாந்திர வசனம். “எனக்குப் பயமாக இருக்கும்போது உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்” என்று சொன்னார். (சங். 56:3) இதைப் பற்றி ஒரு பைபிள் அறிஞர் இப்படி சொல்கிறார்: “தன்னைப் பயமுறுத்தும் விஷயங்களைப் பற்றியோ தன்னுடைய பிரச்சினைகளைப் பற்றியோ தாவீது யோசித்துக்கொண்டே இல்லை. அதற்குப் பதிலாக, தன்னைக் காப்பாற்றுகிறவரைப் பற்றிதான் அதிகமாக யோசித்தார்.” இனிவரும் நாட்களில், வருடாந்திர வசனத்தை அதிகமாக யோசித்துப் பாருங்கள். முக்கியமாக, பயமுறுத்தும் சூழ்நிலைகளில் அதைப் பற்றி யோசியுங்கள். யெகோவா உங்களுக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார், எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதையெல்லாம் நேரம் எடுத்து யோசியுங்கள். அப்படி செய்யும்போது, தாவீதைப் போலவே உங்களாலும் சொல்ல முடியும்: “கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன்; அதனால் பயப்பட மாட்டேன்.”—சங். 56:4.

இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரி, வருடாந்தர வசனத்தைப் பற்றி யோசித்துப் பார்க்கிறார். (பாரா 17)

பயத்தை வெல்ல இவற்றைப் பற்றி யோசிப்பது எப்படி உதவும்?

  • யெகோவா ஏற்கெனவே செய்திருப்பது

  • யெகோவா இப்போது செய்துகொண்டிருப்பது

  • யெகோவா எதிர்காலத்தில் செய்யப்போவது

பாட்டு 33 யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு

a உங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தும் அனுபவங்களை jw.org வெப்சைட்டில் பார்க்க முடியும். “இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்” அல்லது “அனுபவங்கள்” என்று டைப் செய்து தேடுங்கள். JW லைப்ரரியில், “தொடர் கட்டுரைகள்” என்ற பகுதியில் “இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்” அல்லது “யெகோவாவின் சாட்சிகளுடைய அனுபவங்கள்” என்ற தலைப்புகளைப் பாருங்கள்.

b சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

d படவிளக்கம்: கரடியைக் கொல்ல யெகோவா எப்படி சக்தி கொடுத்தார்... அகிமெலேக்கு மூலமாக எப்படி உதவி செய்தார்... சீக்கிரத்தில் தன்னை எப்படி ராஜாவாக ஆக்கப்போகிறார்... என்பதையெல்லாம் தாவீது யோசித்தார்.

e படவிளக்கம்: விசுவாசத்துக்காக சிறையில் இருக்கும் ஒரு சகோதரர், யெகோவா தனக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார் என்று யோசித்துப் பார்க்கிறார். புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து வெளியே வர யெகோவா எப்படி உதவினார்... சகோதர சகோதரிகளிடம் இருந்து வரும் கடிதங்கள் மூலமாக எப்படி உற்சாகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்... எதிர்காலத்தில் பூஞ்சோலையில் எப்படி என்றென்றும் வாழ வைப்பார்... என்றெல்லாம் யோசிக்கிறார்.