Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 2

பாட்டு 19 எஜமானின் இரவு விருந்து

வருஷத்தின் முக்கியமான நாளுக்கு நீங்கள் தயாரா?

வருஷத்தின் முக்கியமான நாளுக்கு நீங்கள் தயாரா?

“என் நினைவாக இதைத் தொடர்ந்து செய்யுங்கள்.”லூக். 22:19.

என்ன கற்றுக்கொள்வோம்?

நினைவுநாள் நிகழ்ச்சி நமக்கு ஏன் ரொம்ப ஸ்பெஷல்? அதற்காக நாம் எப்படித் தயாராகலாம்? அதில் கலந்துகொள்ள மற்றவர்களுக்கு எப்படி உதவலாம்? இதற்கான பதில்களைத் தெரிந்துகொள்வோம்.

1. நினைவுநாள் ஏன் வருஷத்தின் மிக முக்கியமான நாள்? (லூக்கா 22:19, 20)

 யெகோவாவுடைய மக்களுக்கு இயேசுவின் நினைவுநாள்தான் வருஷத்திலேயே முக்கியமான நாள். ஏனென்றால், இந்த ஒரு நாளைத்தான் நினைத்துப் பார்க்க சொல்லி இயேசு தன்னுடைய சீஷர்களுக்குக் கட்டளையாகக் கொடுத்தார். (லூக்கா 22:19, 20-ஐ வாசியுங்கள்.) நினைவுநாள் நமக்கு ரொம்ப ஸ்பெஷல். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

2. நினைவுநாளுக்காக நாம் ஏன் ஆசையாகக் காத்திருக்கிறோம்?

2 மீட்புவிலை ஒரு விலைமதிக்க முடியாத பரிசு என்பதை நினைவுநாள் நிகழ்ச்சி நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இயேசுவின் பலிக்கு எப்படி நன்றியோடு இருக்கலாம் என்பதையும் அது நமக்கு சொல்லித்தருகிறது. (2 கொ. 5:14, 15) அதோடு, சகோதர சகோதரிகள் ‘ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்கும்’ அது வாய்ப்பு தருகிறது. (ரோ. 1:12) ஒவ்வொரு வருஷமும் செயலற்ற பிரஸ்தாபிகள் நிறைய பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். அங்கே அவர்களுக்கு நிறைய அன்பு கிடைப்பதால் யெகோவாவிடம் திரும்ப வர வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு வரலாம். அதுமட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியில் கேட்டதையும் பார்த்ததையும் வைத்து ஆர்வம் இருக்கிற நிறைய பேர் பைபிளைப் பற்றி கூடுதலாக தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நினைவுநாள் நிகழ்ச்சி உண்மையிலேயே நமக்கு ஸ்பெஷல்!

3. நினைவுநாள் எப்படி உலகம் முழுவதும் இருக்கிற சகோதரர்களை ஒன்றுசேர்க்கிறது? (படத்தையும் பாருங்கள்.)

3 உலகம் முழுவதும் இருக்கிற சகோதர சகோதரிகளை நினைவுநாள் எப்படி ஒன்றுசேர்க்கிறது என்று யோசித்துப் பாருங்கள். சூரியன் அஸ்தமனம் ஆக ஆக எல்லா யெகோவாவின் சாட்சிகளும் இந்த நிகழ்ச்சிக்காக கூடிவர ஆரம்பிப்பார்கள். இந்த நிகழ்ச்சியில், மீட்புவிலை எந்தளவுக்கு முக்கியம் என்பதை விளக்கும் ஒரு பேச்சை எல்லாரும் கேட்போம். யெகோவாவை புகழ்ந்து இரண்டு பாடல்களைப் பாடுவோம், நினைவுநாள் சின்னங்களைக் கடத்துவோம், நான்கு ஜெபங்களைக் கேட்டு அதற்கு மனதார “ஆமென்” என்று சொல்வோம். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், 24 மணிநேரத்துக்குள் எல்லா சபைகளிலும் இதேமாதிரி செய்திருப்பார்கள். இப்படி எல்லாரும் ஒன்றுசேர்ந்து யெகோவாவையும் இயேசுவையும் மகிமைப்படுத்துவதை பார்க்கும்போது, அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!

உலகம் முழுவதும் இருக்கிற சகோதரர்களை நினைவுநாள் ஒன்றுசேர்க்கிறது (பாரா 3) f


4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

4 நினைவுநாள் நிகழ்ச்சிக்காக நாம் எப்படித் தயாராகலாம்? அந்த நிகழ்ச்சியிலிருந்து பயனடைய மற்றவர்களுக்கு எப்படி உதவலாம்? செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு எப்படி உதவலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதிலை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இந்தப் பதில்களைத் தெரிந்துகொள்வது இந்த முக்கியமான நிகழ்ச்சிக்கு தயாராக உதவும்.

நினைவுநாள் நிகழ்ச்சிக்காக நாம் எப்படித் தயாராகலாம்?

5. (அ) மீட்புவிலையின் மதிப்பை யோசித்துப் பார்ப்பது ஏன் முக்கியம்? (சங்கீதம் 49:7, 8) (ஆ) இயேசு ஏன் இறந்தார்? என்ற வீடியோவிலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

5 இயேசு கிறிஸ்துவின் மீட்புவிலை எவ்வளவு மதிப்புள்ளது என்று யோசித்துப் பார்ப்பதன் மூலம், நினைவுநாள் நிகழ்ச்சிக்காக நம் மனதைத் தயார்படுத்தலாம். பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை நாமே மீட்க முடியாது. (சங்கீதம் 49:7, 8-ஐ வாசிக்கலாம்; இயேசு ஏன் இறந்தார்? என்ற வீடியோவையும் பாருங்கள்.) a அதனால், நம்மைக் காப்பாற்ற யெகோவாவும் இயேசுவும் ஒரு பெரிய தியாகத்தை செய்தார்கள். (ரோ. 6:23) யெகோவா தன்னுடைய அன்பு மகனை நமக்காகப் பலியாகக் கொடுத்தார். யெகோவாவும் இயேசுவும் நமக்காக செய்த தியாகங்களை ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது, மீட்புவிலைமேல் இருக்கும் மதிப்பு அதிகமாகும். அவர்கள் செய்த தியாகங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். அதற்கு முன்பு, மீட்புவிலை என்றால் என்ன என்று பார்க்கலாம்.

6. மீட்புவிலை என்றால் என்ன? அது ஏன் தேவைப்பட்டது?

6 ஒரு விஷயத்தைத் திரும்ப வாங்குவதற்காக கொடுக்கப்படும் விலைதான் மீட்புவிலை. முதல் மனிதனான ஆதாம் படைக்கப்பட்டபோது பரிபூரணமாக இருந்தான். ஆனால் பாவம் செய்த பிறகு என்றென்றும் வாழும் வாய்ப்பை இழந்தான். அவனுக்கு மட்டுமல்ல, அவனுடைய பிள்ளைகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காத மாதிரி செய்துவிட்டான். ஆதாம் இழந்ததை திரும்ப வாங்குவதற்காக இயேசு தன்னுடைய பரிபூரண உயிரை பலியாகக் கொடுத்தார். பூமியில் வாழ்ந்த காலம் முழுவதும் இயேசு “பாவம் செய்யவில்லை, அவருடைய பேச்சில் சூதுவாது இருக்கவில்லை.” (1 பே. 2:22) இப்படி அவர் கடைசிவரைக்கும் பரிபூரணமாக இருந்து தன்னுடைய உயிரைக் கொடுத்தார். அவர் கொடுத்த உயிர் ஆதாம் இழந்த பரிபூரண உயிருக்கு சரிசமமாக இருந்தது.—1 கொ. 15:45; 1 தீ. 2:6.

7. பூமியில் இருந்தபோது இயேசுவுக்கு என்ன மாதிரியான சோதனைகள் வந்தன?

7 இயேசு பூமியில் இருந்தபோது நிறைய சோதனைகளை சந்தித்தார். ஆனாலும் யெகோவாவுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தார். சின்ன வயதில், பாவ இயல்புள்ள தன்னுடைய அப்பா அம்மாவுக்குக் கட்டுப்பட்டு நடந்தார்; பரிபூரணமாக இருந்தபோதிலும் அப்படிச் செய்தார். (லூக். 2:51) டீனேஜ் வயதில், அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாமல் போவதற்கும் யெகோவாவுக்கு உண்மையில்லாமல் போவதற்கும் அவருக்கு சோதனைகள் வந்திருக்கலாம். வளர்ந்து பெரியவரான பிறகு, சாத்தானிடமிருந்து சோதனைகளை சந்தித்தார். சில சந்தர்ப்பங்களில், சாத்தான் அவரை நேரடியாகவே சோதித்தான். (மத். 4:1-11) இயேசுவைப் பாவம் செய்ய வைத்து மீட்புவிலையைக் கொடுக்க முடியாதபடி செய்துவிட வேண்டும் என்பதில் சாத்தான் தீவிரமாக இருந்தான்.

8. இயேசுவுக்கு வேறு என்ன சோதனைகள் வந்தன?

8 இயேசு பூமியில் ஊழியம் செய்த சமயத்தில் இன்னும் சில சோதனைகளை சந்தித்தார். அவருக்கு துன்புறுத்தல் வந்தது, அவரைக் கொலை செய்யக்கூட முயற்சி செய்தார்கள். (லூக். 4:28, 29; 13:31) அதுமட்டுமல்ல, தன்னுடைய சீஷர்களிடம் இருந்த குறைகளையும் அவர் பொறுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. (மாற். 9:33, 34) அவருடைய வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் அவரைக் கொடுமைப்படுத்தினார்கள், கேலி செய்தார்கள். ஒரு குற்றவாளிக்கு கொடுக்க வேண்டிய தண்டனையைக் கொடுத்து அவரை அவமானப்படுத்தினார்கள். ரொம்ப வேதனையான ஒரு மரணத்தை அவர் சந்தித்தார். (எபி. 12:1-3) சித்திரவதைக் கம்பத்தில் இருந்தபோது தன்னுடைய வலியையும் வேதனையையும் யெகோவாவுடைய பாதுகாப்பு இல்லாமல் அவரே சமாளிக்க வேண்டியிருந்தது. bமத். 27:46.

9. இயேசு செய்த தியாகத்தைப் பற்றி நினைக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது? (1 பேதுரு 1:8)

9 மீட்புவிலையைக் கொடுப்பதற்காக இயேசு எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்! நமக்காக அவர் எதையெல்லாம் தியாகம் செய்திருக்கிறார் என்று யோசிக்கும்போது, உங்கள் மனம் உருகுகிறதா?1 பேதுரு 1:8-ஐ வாசியுங்கள்.

10. மீட்புவிலைக்காக யெகோவா எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறார்?

10 சரி, யெகோவாவைப் பற்றி என்ன சொல்லலாம்? மீட்புவிலையைக் கொடுப்பதற்காக யெகோவா எதையெல்லாம் தியாகம் செய்திருக்கிறார்? இதை யோசித்துப் பாருங்கள்: பொதுவாக, ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் நெருக்கமான பந்தம் இருக்கும். ஆனால், யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் இருந்த பந்தம் அதைவிட ரொம்ப ரொம்ப நெருக்கமானது. (நீதி. 8:30) பூமியில் பல சோதனைகளை இயேசு சந்தித்துக்கொண்டிருக்கும்போது யெகோவாவுக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! மக்கள் தன்னுடைய மகனை அவமானப்படுத்தியபோது, வெறுத்து ஒதுக்கியபோது, கஷ்டப்படுத்தியபோது யெகோவாவுக்கு எப்படி இருந்திருக்கும்! இதெல்லாம் அவருடைய மனதை எந்தளவுக்குக் குத்திக் கிழித்திருக்கும்!

11. இயேசு கொல்லப்பட்டபோது யெகோவாவுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தைச் சொல்லுங்கள்.

11 கி.பி. 33, நிசான் 14 அன்று, தன்னுடைய செல்ல மகன் துடிதுடித்து இறந்துபோனதைப் பார்த்தபோது யெகோவாவுக்கு எவ்வளவு வலித்திருக்கும்! குழந்தையைப் பறிக்கொடுத்த அப்பா அம்மாவுக்கு மரணத்தின் வலி எவ்வளவு பெரியது என்று தெரியும். உயிர்த்தெழுதல்மேல் பலமான நம்பிக்கை இருந்தாலும் நமக்கு நெருக்கமானவர்கள் இறந்துபோகும்போது அந்த வலியை நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அப்படியொரு வலிதான் யெகோவாவுக்கு இருந்திருக்கும். cமத். 3:17.

12. நினைவுநாள் வரும்வரை நாம் என்ன செய்யலாம்?

12 இப்போதிருந்து நினைவுநாள் வரும்வரை உங்களுடைய தனிப்பட்ட படிப்பிலோ குடும்ப வழிபாட்டிலோ மீட்புவிலையைப் பற்றி நிறைய படியுங்கள். அதற்கு, யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேட்டை அல்லது வேறொரு பிரசுரத்தை பயன்படுத்தலாம். d அதுமட்டுமல்ல, நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகத்தில் இருக்கிற, நினைவுநாள் பைபிள் வாசிப்பு அட்டவணையைப் பின்பற்றுங்கள். நினைவுநாளுக்கான விசேஷ காலை வழிபாட்டு நிகழ்ச்சியை அன்று பார்க்க மறந்துவிடாதீர்கள். இப்படியெல்லாம் செய்யும்போது, நினைவுநாளுக்காக நம் மனதைத் தயார்படுத்த முடியும், அதிலிருந்து பயனடைய மற்றவர்களுக்கும் உதவ முடியும்.—எஸ்றா 7:10.

மற்றவர்களுக்கு உதவுங்கள்

13. மற்றவர்களுக்கு உதவ நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் என்ன?

13 நினைவுநாள் நிகழ்ச்சியிலிருந்து பயனடைய மற்றவர்களுக்கு எப்படி உதவலாம்? அதற்கு முதல் படி, அவர்களை அந்த நிகழ்ச்சிக்கு கூப்பிடுவது. ஊழியத்தில் பார்ப்பவர்களைக் கூப்பிடுவது மட்டுமல்லாமல், வேறு யாரையெல்லாம் கூப்பிடலாம் என்றும் நாம் லிஸ்ட் போடலாம். அதில் நம் சொந்தக்காரர்கள், கூடப் படிக்கிறவர்கள், கூட வேலை செய்கிறவர்கள் என்று நிறைய பேரை சேர்த்துக்கொள்ளலாம். ஒருவேளை, அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்கள் நம்மிடம் இல்லையென்றால், அதன் லிங்க்கை அனுப்பலாம். யாருக்குத் தெரியும், நீங்கள் கூப்பிட்ட நிறைய பேர் அதில் கலந்துகொள்ளலாம். அதைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!—பிர. 11:6.

14. ஒருவரை தனிப்பட்ட விதமாக நினைவுநாளுக்கு அழைப்பதால் என்ன பலன் கிடைக்கிறது?

14 ஒருவரைத் தனிப்பட்ட விதமாக அழைப்பது உண்மையிலேயே நல்ல பலன்களைக் கொடுக்கிறது. இந்த அனுபவத்தைக் கவனியுங்கள். ஒரு சகோதரியின் கணவர் சத்தியத்தில் இல்லை. ஒருநாள் அந்த கணவர் அவரிடம், அந்த வருஷம் நடக்கப்போகிற நினைவுநாள் நிகழ்ச்சியில் தானும் கலந்துகொள்ளப் போவதாக சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டு அந்த சகோதரிக்கு ஒரே ஆச்சரியம்! ஏனென்றால், இதற்கு முன்பு, நிறைய வருஷங்களாக நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அவர் தன் கணவரைக் கூப்பிட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறார். ஆனால் அவர் வரவே இல்லை. இப்போது ஏன் வரவேண்டும் என்று நினைத்தார்? “எனக்கு ஒருவர் அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார், என்னை வர சொன்னார்” என்று அந்த கணவர் சொல்லியிருக்கிறார். அவருக்குத் தெரிந்த ஒரு மூப்பர் அவரை நினைவுநாள் நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டிருக்கிறார். அதனால், அந்த நினைவுநாள் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார், அதற்கு பிறகும், நிறைய வருஷங்கள் அதில் கலந்துகொண்டார்.

15. நினைவுநாள் நிகழ்ச்சிக்கு மற்றவர்களைக் கூப்பிடும்போது அவர்களுக்கு என்னமாதிரி கேள்விகள் வரலாம்?

15 நாம் யாரையெல்லாம் கூப்பிடுகிறோமோ அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியைப் பற்றி சந்தேகங்கள் வரலாம். அதுவும் குறிப்பாக, நம் கூட்டங்களுக்கு அதுவரை வந்ததில்லை என்றால் அவர்களுக்குக் கண்டிப்பாகக் கேள்விகள் இருக்கும். அதனால், என்னமாதிரியான கேள்விகளைக் கேட்பார்கள்... அதற்கு எப்படி பதில் கொடுக்கலாம்... என்றெல்லாம் முன்கூட்டியே யோசியுங்கள். (கொலோ. 4:6) உதாரணத்துக்கு, ‘நிகழ்ச்சியில் என்ன நடக்கும்?’ ‘எவ்வளவு நேரத்துக்கு நடக்கும்?’ ‘எந்தமாதிரி உடை போட வேண்டும்?’ ‘அதில் கலந்துகொள்வதற்கு ஏதாவது கட்டணம் கொடுக்க வேண்டுமா?’ ‘காணிக்கை வாங்குவார்களா?’ என்றெல்லாம் சிலர் கேட்கலாம். ஒருவரை நினைவுநாள் நிகழ்ச்சிக்கு கூப்பிடும்போது “இந்த நிகழ்ச்சியைப் பற்றி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?” என்று நீங்களே கேட்டுப் பாருங்கள். சந்தேகம் இருந்தால் அதைத் தீர்த்து வையுங்கள். அதுமட்டுமல்ல, இயேசுவின் மரணத்தை நினைத்துப் பாருங்கள் என்ற வீடியோவையும், ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவையும் நீங்கள் போட்டுக் காட்டலாம். நம்முடைய கூட்டங்கள் எப்படி நடக்கும் என்பதை அந்த வீடியோக்கள் அவர்களுக்குப் புரிய வைக்கும். அதோடு, இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில் பாடம் 28-ல் இருக்கும் விஷயங்களையும் நீங்கள் சொல்லலாம்.

16. நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறவர்களுக்கு வேறு என்ன கேள்விகள் வரலாம்?

16 நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, புதிதாக வந்தவர்களுக்கு வேறு சில கேள்விகள் இருக்கும். ஒருவேளை, அப்பத்தையும் திராட்சமதுவையும் யாராவது சாப்பிட்டிருந்தால், ‘ஏன் அவர்கள் மட்டும் சாப்பிட்டார்கள், மற்றவர்கள் யாரும் சாப்பிடவில்லை?’ என்று அவர்கள் யோசிக்கலாம். அதுமட்டுமல்ல, எவ்வளவு அடிக்கடி இந்த நிகழ்ச்சி நடக்கும், யெகோவாவின் சாட்சிகளுடைய மற்ற கூட்டங்களும் இப்படித்தான் நடக்குமா என்றும் அவர்கள் யோசிக்கலாம். இதற்கெல்லாம் நினைவுநாள் பேச்சிலேயே பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், புதிதாக வருகிறவர்கள் இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள ஆசைப்படலாம். அவர்களுக்கு பதில் கொடுக்க, jw.org வெப்சைட்டில் இருக்கிற “யெகோவாவின் சாட்சிகள் ஏன் மற்ற கிறிஸ்தவர்களைப் போல இல்லாமல் வேறு விதமாக கர்த்தருடைய இராப் போஜனத்தை அனுசரிக்கிறார்கள்?” என்ற கட்டுரை நமக்கு உதவும். “முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு” இருக்கிறவர்கள் இந்த நிகழ்ச்சியிலிருந்து நன்மையடைய நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யலாம். (அப். 13:48) நினைவுநாள் நிகழ்ச்சிக்கு முன்பும், நிகழ்ச்சியின்போதும், நிகழ்ச்சிக்குப் பிறகும் அவர்களுக்கு உதவலாம்.

செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு உதவுங்கள்

17. செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு மூப்பர்கள் எப்படி உதவலாம்? (எசேக்கியேல் 34:12, 16)

17 நினைவுநாள் சமயத்தில் மூப்பர்கள் எப்படி செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு உதவலாம்? அவர்கள்மேல் அக்கறை வைத்திருப்பதைக் காட்டுவதன் மூலமாக உதவலாம். (எசேக்கியேல் 34:12, 16-ஐ வாசியுங்கள்.) நினைவுநாளுக்கு முன்பு, எவ்வளவு பேருக்கு முடியுமோ அவ்வளவு பேருக்கு ஃபோன் செய்து பேசுங்கள் அல்லது, நேரில் போய்ப் பாருங்கள். அவர்கள்மேல் நீங்கள் அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதையும் அவர்களுக்கு உதவ ஆசைப்படுகிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள். நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அவர்களைக் கூப்பிடுங்கள். அவர்கள் வந்தால், அவர்களை வரவேற்று அன்பாகப் பேசுங்கள். நினைவுநாளுக்குப் பிறகும் அந்த சகோதர சகோதரிகளிடம் அடிக்கடி பேசுங்கள். அவர்கள் யெகோவாவிடம் திரும்பி வருவதற்குத் தேவையான உதவிகளை செய்யுங்கள்.—1 பே. 2:25.

18. செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு நாம் எல்லாருமே எப்படி உதவலாம்? (ரோமர் 12:10)

18 சபையில் இருக்கிற எல்லாருமே செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு உதவ முடியும். எப்படி? அவர்களை அன்போடும் கரிசனையோடும் மரியாதையோடும் நடத்துவதன்மூலம்! (ரோமர் 12:10-ஐ வாசியுங்கள்.) ஒருவேளை, கூட்டங்களுக்கு மறுபடியும் வர அவர்கள் தயங்கியிருக்கலாம். அல்லது, சபையில் இருக்கிறவர்கள் தங்களிடம் என்ன சொல்வார்களோ, தங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் அவர்கள் யோசித்திருக்கலாம். e அதனால், அவர்களை சங்கடப்படுத்தும் கேள்விகளைக் கேட்காதீர்கள்; புண்படுத்துவதுபோல் பேசிவிடாதீர்கள். (1 தெ. 5:11) அவர்களும் நம்மோடு சேர்ந்து யெகோவாவை வணங்கும் சகோதர சகோதரிகள். அவர்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்குவது உண்மையிலேயே நமக்கு சந்தோஷம்.—சங். 119:176; அப். 20:35.

19. இயேசுவின் மரணத்தை நினைத்து பார்ப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன?

19 தன்னுடைய மரணத்தை இயேசு ஒவ்வொரு வருஷமும் நினைத்துப் பார்க்க சொன்னதற்கு நாம் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். அப்படி செய்வது ஏன் முக்கியம் என்பதையும் நாம் புரிந்துவைத்திருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது நமக்கும் மற்றவர்களுக்கும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. (ஏசா. 48:17, 18) இயேசுமேலும் யெகோவாமேலும் நாம் வைத்திருக்கும் அன்பு வளரும்... அவர்களுக்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம் என்பதைக் காட்ட முடியும்... நம் சகோதர சகோதரிகளோடு இன்னும் நெருக்கமாக முடியும்... மீட்புவிலையால் கிடைக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி மற்றவர்களுக்குப் புரியவைக்க முடியும். வருஷத்தின் மிக முக்கியமான நாளுக்காக, நினைவுநாளுக்காக, தயாராக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் நாம் செய்யலாம்!

நாம் எப்படி . . .

  • நினைவுநாளுக்காகத் தயாராகலாம்?

  • மற்றவர்களுக்கு உதவலாம்?

  • செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு உதவலாம்?

பாட்டு 18 மீட்புவிலைக்கு நன்றி!

a இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் மற்ற கட்டுரைகளையும் வீடியோக்களையும் பார்க்க, வெப்சைட்டில் இருக்கும் ‘தேடவும்’ பகுதியைப் பயன்படுத்துங்கள்.

b ஏப்ரல் 2021 காவற்கோபுரத்தில் வெளிவந்த “வாசகர் கேட்கும் கேள்விகள்” கட்டுரையைப் பாருங்கள்.

d ஆராய்ச்சி செய்ய டிப்ஸ்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

e படங்களையும், “ சபையில் இருந்தவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்?” என்ற பெட்டியையும் பாருங்கள்.செயலற்ற பிரஸ்தாபி ஒருவர் ராஜ்ய மன்றத்துக்குள் வர தயங்கி நிற்கிறார். ஆனால் அவர் உள்ளே வந்த பிறகு அவரை எல்லாரும் அன்பாக வரவேற்கிறார்கள், மற்றவர்களோடு சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கிறார்.

f படவிளக்கம்: உலகத்தின் ஒரு பகுதியில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் நினைவுநாளை அனுசரிக்கிற அதே சமயத்தில், மற்ற பகுதிகளில் இருக்கும் சகோதர சகோதரிகள் அந்த நிகழ்ச்சிக்காக தயாராகிறார்கள்.