Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா பெண்களை மதிக்கிறார்​—⁠நீங்கள்?

யெகோவா பெண்களை மதிக்கிறார்​—⁠நீங்கள்?

யெகோவாவை வணங்குகிற நிறைய சகோதரிகளோடு சேவை செய்கிற பாக்கியம் நமக்கு இருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவருமே யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறார்கள், கடினமாக உழைக்கிறார்கள். அவர்களை நமக்கு ரொம்பப் பிடிக்கும், அவர்களைப் பார்த்து நாம் சந்தோஷப்படுகிறோம்! a சகோதரர்களே, எப்போதும் அவர்களை அன்பாகவும் நியாயமாகவும் நடத்துங்கள். அவர்களுக்கு மரியாதை கொடுங்கள். நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், இதை செய்வது சிலசமயங்களில் கஷ்டமாக இருக்கலாம். சில சகோதரர்களுக்கு வேறொரு பிரச்சினையும் இருக்கிறது.

பெண்களைத் தாழ்வாக பார்க்கும் சமுதாயத்தில் சில ஆண்கள் வளர்ந்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, பொலிவியாவில் வட்டாரக் கண்காணியாக இருக்கிற ஹான்ஸ் என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “சில கலாச்சாரங்களில், ஆண்கள் எப்போதும் ‘கெத்தாக,’ பெருமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால், ஆண்கள்தான் பெண்களைவிட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களுடைய இரத்தத்தில் ஊறிப்போயிருக்கிறது. இப்படிப்பட்ட கலாச்சாரத்தில் வளர்வதால் அவர்கள் பெண்களை மரியாதையில்லாமல் நடத்துகிறார்கள்.” தைவானில் மூப்பராக இருக்கும் ஷெங்சியன் என்ற மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “நான் இருக்கிற இடத்தில், பொதுவாக ஆண்களுடைய விஷயத்தில் பெண்கள் தலையிடக் கூடாது என்று நினைப்பார்கள். ஒருவேளை, ஒரு பெண் சொல்வதைக் கேட்டு ஒரு ஆண் நடந்துகொண்டால் அவரை யாருமே மதிக்க மாட்டார்கள்.” இன்னும் சிலர், பெண்களைத் தாழ்வாக பார்ப்பதை வேறு விதங்களில் காட்டுகிறார்கள். பெண்களை இழிவுபடுத்துகிற ஜோக்குகளை சொல்கிறார்கள்.

ஒருவர் எந்த மாதிரி கலாச்சாரத்தில் வளர்ந்திருந்தாலும் சரி, அவரால் தன்னை மாற்றிக்கொள்ள முடியும்; ஆண்களையும் பெண்களையும் சரிசமமாக பார்க்க அவரால் கற்றுக்கொள்ள முடியும். (எபே. 4:22-24) எப்படி? யெகோவா மாதிரி நடந்துகொள்ள முயற்சி செய்வதன் மூலம்! இந்தக் கட்டுரையில், யெகோவா எப்படிப் பெண்களைப் பார்க்கிறார் என்றும், அவரைப் போலவே பெண்களை நடத்த சகோதரர்கள் எப்படிக் கற்றுக்கொள்ளலாம் என்றும், மூப்பர்கள் எப்படி சகோதரிகளுக்கு மரியாதை காட்டுகிறார்கள் என்றும் பார்ப்போம்.

பெண்களை யெகோவா எப்படி நடத்துகிறார்?

பெண்களை நடத்தும் விதத்தில் யெகோவா ஒரு சிறந்த முன்மாதிரி. ஒரு பாசமான அப்பாவாக, மனிதர்களைத் தன்னுடைய பிள்ளைகளாகப் பார்க்கிறார். (யோவா. 3:16) தனக்கு உண்மையாக சேவை செய்யும் பெண்களைத் தன்னுடைய செல்ல மகள்களாக பார்க்கிறார். அவர் பெண்களை எப்படி மரியாதையோடு நடத்துகிறார் என்று இப்போது பார்க்கலாம்.

பாரபட்சம் பார்ப்பதில்லை. ஆணையும் பெண்ணையும் யெகோவா தன்னுடைய சாயலில்தான் படைத்தார். (ஆதி. 1:27) பெண்களைவிட ஆண்களை புத்திசாலிகளாகவோ திறமைசாலிகளாகவோ அவர் படைக்கவில்லை. ஆண்களை மட்டும் விசேஷமாக நடத்த வேண்டும் என்று அவர் நினைப்பதில்லை. (2 நா. 19:7) பைபிள் சத்தியங்களைப் புரிந்துகொள்ளும் விதத்திலும், அவருடைய குணங்களைக் காட்டும் விதத்திலும்தான் அவர் ஆண்-பெண் இரண்டு பேரையுமே படைத்திருக்கிறார். இருவருடைய விசுவாசத்தையும் சமமாக பார்க்கிறார். அதனால்தான், பூமியில் வாழும் நம்பிக்கையையும், பரலோகத்தில் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் சேவை செய்யும் நம்பிக்கையையும், அவர் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கொடுத்திருக்கிறார். (2 பே. 1:1) இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, யெகோவா பெண்களைப் பாரபட்சம் இல்லாமல் நடத்துகிறார் என்று தெரிகிறது.

பெண்கள் சொல்வதைக் கவனித்துக் கேட்கிறார். பெண்களின் உணர்வுகளை யெகோவா மதிக்கிறார்; அவர்களுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொள்கிறார். உதாரணத்துக்கு, ராகேல் மற்றும் அன்னாள் செய்த ஜெபங்களைக் கேட்டு அவர்களுக்குப் பதில் கொடுத்தார். (ஆதி. 30:22; 1 சா. 1:10, 11, 19, 20) பெண்கள் சொன்னதை ஆண்கள் கேட்டு நடந்த சில பதிவுகளை யெகோவா பைபிளில் பதிவு செய்திருக்கிறார். ஒருசமயம், ஆபிரகாமிடம் ‘உன் மனைவி சொல்வதை கேள்’ என்று அவர் சொன்னார். (ஆதி. 21:12-14) தாவீது ராஜாவும் அபிகாயில் சொல்வதைக் கேட்டு நடந்தார். சொல்லப்போனால், தன்னிடம் பேசுவதற்காக யெகோவாதான் அபிகாயிலை அனுப்பினார் என்று தாவீது நம்பினார். (1 சா. 25:32-35) யெகோவாவின் குணங்களை அப்படியே வெளிக்காட்டிய இயேசுவும் தன்னுடைய அம்மா மரியாள் சொன்னதைக் கேட்டார். (யோவா. 2:3-10) இந்த உதாரணங்களைக் கவனிக்கும்போது, பெண்கள் சொல்வதை யெகோவா கவனித்துக் கேட்கிறார் என்றும் அவர்கள்மேல் மரியாதை வைத்திருக்கிறார் என்றும் புரிகிறது.

பெண்களை நம்புகிறார். இந்த முழு பூமியையும் பராமரிக்கும் பொறுப்பை யெகோவா ஏவாளுக்கும் கொடுத்தார்; அந்தளவு அவளை நம்பினார். (ஆதி. 1:28) இப்படி செய்வதன்மூலம், அவள் தன் கணவன் ஆதாமைவிட குறைந்தவள் அல்ல என்பதைக் காட்டினார். அவளை ஒரு பொருத்தமான துணையாகத்தான் ஆதாமுக்குக் கொடுத்தார். பெண் தீர்க்கதரிசிகளான தெபொராள் மற்றும் உல்தாளை யெகோவா நம்பினார். தன்னுடைய மக்களுக்கு, சொல்லப்போனால், ஒரு ராஜாவுக்கும் ஒரு நியாயாதிபதிக்கும் வழிநடத்துதலை கொடுக்க அவர்களைப் பயன்படுத்தினார். (நியா. 4:4-9; 2 ரா. 22:14-20) இன்றும் பெண்களை அவர் நம்புகிறார்; தன்னுடைய வேலையை செய்ய அவர்களைப் பயன்படுத்துகிறார். அவர்கள் பிரஸ்தாபிகளாக, பயனியர்களாக, மிஷனரிகளாக சேவை செய்கிறார்கள். ராஜ்ய மன்றங்களையும் கிளை அலுவலகங்களையும் வடிவமைக்கிறார்கள், கட்டுகிறார்கள், அவற்றைப் பராமரிக்கிறார்கள். சில சகோதரிகள், பெத்தேலிலும் மொழிபெயர்ப்பு அலுவலகங்களிலும் வேலை செய்கிறார்கள். இப்படிப்பட்ட பெண்களை ஒரு பெரிய படைபோல் பயன்படுத்தி தன்னுடைய விருப்பதை யெகோவா நிறைவேற்றுகிறார். (சங். 68:11) அப்படியென்றால், பெண்களைப் பலவீனமானவர்களாகவோ எதற்கும் லாயக்கில்லாதவர்களாகவோ யெகோவா பார்ப்பதில்லை என்று தெரிகிறது.

யெகோவாவைப் போலவே பெண்களை நடத்த சகோதரர்கள் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?

சகோதரர்களே, யெகோவாவைப் போலவே நீங்களும் சகோதரிகளை நடத்துகிறீர்களா? இதைத் தெரிந்துகொள்ள, உங்கள் யோசனைகளையும் செயல்களையும் கொஞ்சம் நேர்மையாக சோதித்துப்பாருங்கள். அப்படி செய்ய உங்களுக்கு உதவி தேவைப்படும். இதயத்தில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்று எக்ஸ்ரே எடுக்கும்போது தெரிய வரலாம். அதேபோல், நம்முடைய இதயத்தின் ஆழத்தில் பெண்களைப் பற்றிய தவறான எண்ணம் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள இரண்டு விஷயங்கள் உதவும்: (1) ஒரு நல்ல நண்பர் (2) பைபிள்.

நல்ல நண்பரிடம் கேளுங்கள். (நீதி. 18:17) அன்பாகவும் நியாயமாகவும் நடந்துகொள்கிற நம்பகமான நண்பர் ஒருவர் உங்களுக்கு இருந்தால், அவரிடம் இப்படிக் கேளுங்கள்: “நான் சகோதரிகளை எப்படி நடத்துகிறேன்? நான் நடந்துகொள்ளும் விதம் அவர்களை மதிக்கிறேன் என்பதைக் காட்டுகிறதா? நான் அவர்களோடு பேசிப் பழகும் விதத்தில் ஏதாவது மாற்றிக்கொள்ள வேண்டுமா?” இப்படி கேட்கும்போது, நீங்கள் திருத்திக்கொள்ள வேண்டிய சில விஷயங்களை அவர் சொன்னால், புண்பட்டுவிடாதீர்கள்; உங்களையே நியாயப்படுத்தாதீர்கள். அவர் சொல்வதை ஏற்றுக்கொண்டு தேவையான மாற்றங்களை செய்யுங்கள்.

பைபிளைப் படித்து யோசித்துப் பாருங்கள். பெண்களை நல்ல விதத்தில் நடத்துகிறீர்களா என்று தெரிந்துகொள்ள, உங்கள் செயல்களையும் யோசனைகளையும் பைபிளைப் பயன்படுத்தி ஆராயுங்கள். (எபி. 4:12) பெண்களை நன்றாக நடத்திய ஆண்களைப் பற்றியும், நன்றாக நடத்தாத ஆண்களைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. அவர்களைப் பற்றிப் படிக்கும்போது, நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அதுமட்டுமல்ல, பைபிள் வசனங்களை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப்பாருங்கள். அப்படி செய்யும்போது, நமக்கு இருக்கும் ஒரு தப்பான எண்ணத்தை பைபிள் ஆதரிக்கிறது என்ற முடிவுக்கு வந்துவிட மாட்டோம். உதாரணத்துக்கு, 1 பேதுரு 3:7-ஐ எடுத்துக்கொள்ளுங்கள். மனைவி ‘பலவீனமாக [பலவீனமான பாத்திரமாக, அடிக்குறிப்பு] இருப்பதால் . . . அவளுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுங்கள்’ என்று அது சொல்கிறது. b ‘பலவீன பாத்திரம்’ என்று சொல்வதால் பைபிள் பெண்களைத் தாழ்வாக பேசுகிறது என்று அர்த்தமா? ஆண்களைவிட அவர்களுக்கு அறிவோ திறமையோ குறைவு என்று அது சொல்கிறதா? இல்லவே இல்லை! பேதுரு சொன்ன இந்த வார்த்தைகளை கலாத்தியர் 3:26-29-தோடு ஒப்பிட்டுப்பாருங்கள். இயேசுவோடு பரலோகத்தில் ஆட்சி செய்வதற்கு ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று அந்த வசனங்கள் சொல்கின்றன. அப்படியென்றால், பெண்களைப் பைபிள் தரக்குறைவாகப் பேசுவதில்லை என்று தெரிகிறது. நல்ல நண்பரிடம் கேட்பதும் பைபிளைப் படித்து யோசித்துப் பார்ப்பதும் பெண்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்க உங்களுக்கு உதவும்.

மூப்பர்கள் எப்படி சகோதரிகளுக்கு மரியாதை காட்டுகிறார்கள்?

மூப்பர்களைப் பார்த்தும் சபையில் இருக்கிற சகோதரர்கள் கற்றுக்கொள்ளலாம். மூப்பர்கள் எப்படி சகோதரிகளை மரியாதையாக நடத்துகிறார்கள்?

சகோதரிகளைப் பாராட்டுகிறார்கள். இந்த விஷயத்தில் அப்போஸ்தலன் பவுல் ஒரு நல்ல முன்மாதிரி. ரோமில் இருந்த சபைக்கு அவர் எழுதிய கடிதத்தில் நிறைய சகோதரிகளைப் பாராட்டி எழுதியிருந்தார். (ரோ. 16:12) அந்தக் கடிதத்தை சபையில் சத்தமாக வாசித்தபோது அந்த சகோதரிகளுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! இன்றைக்கும் சகோதரிகள் காட்டுகிற நல்ல குணங்களையும் யெகோவாவுக்காக அவர்கள் உழைப்பதையும் பார்த்து மூப்பர்கள் அவர்களைத் தாராளமாகப் பாராட்டுகிறார்கள். இப்படிச் செய்வதால் சகோதரிகளை நாம் உயர்வாக பார்க்கிறோம், என்பதை அவர்களும் புரிந்துகொள்வார்கள். நிறைய சமயங்களில் மூப்பர்கள் சொல்கிற ஒரு உற்சாகமான வார்த்தை அந்த நேரத்தில் அவர்களுக்கு ரொம்ப தேவையானதாக இருக்கலாம்.—நீதி. 15:23.

பாராட்டுங்கள்

சகோதரிகளைப் பாராட்டும்போது மூப்பர்கள் மனதிலிருந்து உண்மையாகப் பாராட்டுகிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் செய்த ஏதோவொரு விஷயத்தைக் குறிப்பாகச் சொல்லிப் பாராட்டுகிறார்கள். ஏன் அப்படிச் செய்கிறார்கள்? ஜெசிக்கா என்ற சகோதரி இப்படி சொல்கிறார்: “‘சூப்பராக செய்திருக்கிறீர்கள்’ என்று ஒரு சகோதரர் பாராட்டும்போது எங்களுக்கு நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நாங்கள் செய்த ஏதோவொரு விஷயத்தைக் குறிப்பாகச் சொல்லிப் பாராட்டும்போது எங்களுக்கு இன்னும் சந்தோஷமாக இருக்கும். உதாரணத்துக்கு, ‘உங்கள் பிள்ளைகளைக் கூட்டங்களில் அமைதியாக உட்கார சொல்லிக்கொடுத்து இருக்கிறீர்கள் சிஸ்டர்’ என்று சொல்லும்போது, அல்லது ‘பைபிள் படிப்பவர்களைக் கூட்டங்களுக்குக் கூட்டிக்கொண்டுவர நிறைய முயற்சி எடுக்கிறீர்கள், சூப்பர் சிஸ்டர்!’ என்று சொல்லிப் பாராட்டும்போது எங்களுக்கு வானத்தைத் தொட்டதுபோல் இருக்கும்.” இந்தமாதிரி குறிப்பாகச் சொல்லி மூப்பர்கள் பாராட்டும்போது சபையில் அவர்களுக்கும் ஒரு இடம் இருக்கிறது என்பதையும் அவர்கள் செய்யும் வேலைகளை உயர்வாக மதிக்கிறோம் என்பதையும் சகோதரிகள் புரிந்துகொள்வார்கள்.

சகோதரிகள் சொல்வதைக் கேட்கிறார்கள். ஏதோவொரு விஷயத்தைத் தங்களுக்கு மட்டும்தான் நன்றாக செய்ய தெரியும் என்று மனத்தாழ்மையாக இருக்கிற மூப்பர்கள் நினைக்க மாட்டார்கள். அதனால், அவர்கள் சகோதரிகளிடமும் கருத்துகள் கேட்கிறார்கள். இப்படிச் செய்வது மூப்பர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும், சகோதரிகளையும் உற்சாகப்படுத்தும். எப்படி? பெத்தேலில் சேவை செய்கிற ஹரார்டோ என்ற மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “சகோதரிகளுடைய கருத்தைக் கேட்டது என்னுடைய வேலையை இன்னும் நன்றாக செய்ய உதவியிருக்கிறது. பெரும்பாலும், இங்கே சகோதரர்களைவிட ரொம்ப நாள் வேலை செய்தவர்கள் சகோதரிகள்தான்.” சபையில், நிறைய சகோதரிகள் பயனியர்களாக இருக்கிறார்கள். ஒரு பகுதியில் எப்படிப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இதைப் பற்றி பிரையன் என்ற மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “அமைப்புக்குத் தேவைப்படுகிற நிறைய திறமைகள் சகோதரிகளிடம் இருக்கிறது. அதனால், அவர்களுடைய அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்!”

கவனித்துக் கேளுங்கள்

ஞானமாக நடந்துகொள்ளும் ஒரு மூப்பர், ஒரு சகோதரி சொல்லும் கருத்தை எடுத்த எடுப்பில் தட்டிக்கழிக்க மாட்டார். ஏன்? இதைப் பற்றி எட்வர்ட் என்ற மூப்பர் சொல்கிறார்: “ஒரு சகோதரியின் அனுபவமோ அவர்கள் சொல்லும் கருத்தோ ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக புரிந்துகொள்ள உதவும். மற்றவர்களுடைய இடத்தில் இருந்து பார்ப்பதற்கும் உதவும்.” (நீதி. 1:5) ஒருவேளை, ஒரு சகோதரி சொன்ன கருத்தின்படி ஒரு மூப்பரால் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனாலும், அந்த சகோதரி அந்தளவு கவனித்து சொன்னதற்காக அந்த மூப்பர் அவரைப் பாராட்டலாம்.

சகோதரிகளுக்குப் பயிற்சிக் கொடுக்கிறார்கள். ஞானமாக நடந்துகொள்ளும் மூப்பர்கள் சகோதரிகளுக்கு எப்படிப் பயிற்சி கொடுக்கலாம் என்று பார்ப்பார்கள். உதாரணத்துக்கு, ஞானஸ்நானம் எடுத்த சகோதரர் இல்லாத சமயங்களில் வெளி ஊழிய கூட்டத்தை நடத்த ஒரு சகோதரிக்கு அவர்கள் சொல்லிக்கொடுக்கலாம். அமைப்பின் கட்டுமான வேலையிலும் பராமரிப்பு வேலையிலும் சில கருவிகளைப் பயன்படுத்துவதற்கு அல்லது மெஷின்களை இயக்குவதற்கு அவர்களுக்குப் பயிற்சிக் கொடுக்கலாம். பெத்தேலிலும் வித்தியாசமான வேலைகளை செய்வதற்குக் கண்காணிகள் சகோதரிகளுக்குப் பயிற்சிக் கொடுக்கிறார்கள். கட்டிடங்களைப் பராமரிப்பது, பொருள்களை வாங்குவது, அக்கவுண்ட்ஸ் பார்ப்பது, கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங் செய்வது போன்ற நிறைய வேலைகளை செய்ய சகோதரிகளுக்குப் பயிற்சி கிடைக்கிறது. இப்படி சகோதரிகளுக்குப் பயிற்சிக் கொடுக்கும்போது, மூப்பர்கள் அவர்களைத் திறமைசாலிகளாகவும் நம்பகமானவர்களாகவும் பார்ப்பதைக் காட்டுகிறார்கள்.

பயிற்சி கொடுங்கள்

மூப்பர்கள் கொடுக்கும் பயிற்சியைப் பயன்படுத்தி நிறைய சகோதரிகள் மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்கள். உதாரணத்துக்கு, சில சகோதரிகள் கட்டுமான வேலையில் கிடைத்த பயிற்சியை வைத்து, இயற்கை பேரழிவினால் பாதிக்கப்பட்டவர்களுடைய வீடுகளை மறுபடியும் கட்டி கொடுக்கிறார்கள். இன்னும் சில சகோதரிகள், பொது ஊழியம் செய்ய தங்களுக்குக் கிடைத்த பயிற்சியை வைத்து, மற்ற சகோதரிகளுக்கு உதவுகிறார்கள். பயிற்சிக் கொடுக்கும் மூப்பர்களைப் பற்றி யோசிக்கும்போது சகோதரிகளுக்கு எப்படி இருக்கிறது? ஜெனிஃபர் என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “நான் ஒரு ராஜ்ய மன்ற கட்டுமான வேலையை செய்தேன். அங்கே ஒரு கண்காணி, நேரம் எடுத்து எனக்குப் பயிற்சிக் கொடுத்தார். நான் செய்த வேலைகளைக் கவனித்து என்னைப் பாராட்டினார். என்னை மற்றவர்கள் நம்புகிறார்கள் என்ற உணர்வை அது கொடுத்தது. அதனால், அவரோடு வேலை செய்தது எனக்குப் பிடித்திருந்தது.”

சகோதரிகள்—நம் குடும்பம்

தனக்கு உண்மையாக சேவை செய்கிற சகோதரிகள்மேல் யெகோவா உயிரையே வைத்திருக்கிறார். நமக்கும் அவர்களை ரொம்ப பிடிக்கும். அதனால் அவர்களை நம் குடும்பம் போல் பார்க்கிறோம். (1 தீ. 5:1, 2) அவர்களோடு சேர்ந்து சேவை செய்வது நமக்குப் பெருமையாக இருக்கிறது. நாம் அவர்கள்மேல் அன்பும் அக்கறையும் வைத்திருப்பதை அவர்கள் உணருகிறார்கள் என்று பார்ப்பதும் நமக்கு சந்தோஷமாக இருக்கிறது. வெனிசா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “யெகோவாவின் அமைப்பில் நானும் ஒருத்தி என்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். மனதார உற்சாகப்படுத்துகிற ஏகப்பட்ட சகோதரர்கள் இந்த அமைப்பில்தான் இருக்கிறார்கள்.” தைவானில் இருக்கிற ஒரு சகோதரி இப்படிச் சொல்கிறார்: “யெகோவாவும் அவருடைய அமைப்பும், பெண்களுக்கும் அவர்களுடைய உணர்வுகளுக்கும் இவ்வளவு மதிப்பு கொடுப்பதைப் பார்ப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது; அது என் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. இப்படி ஒரு அமைப்பில் இருப்பது உண்மையிலேயே எனக்குக் கிடைத்த பெரிய பாக்கியம்.”

தன்னை மாதிரியே பெண்களை நடத்துவதற்கு முயற்சி எடுக்கும் சகோதரர்களைப் பார்த்து யெகோவா பெருமைப்படுகிறார். (நீதி. 27:11) ஸ்காட்லாந்தில் இருக்கும் பெஞ்சமின் என்ற மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “இன்றைக்கு உலகத்தில் பெண்களை ரொம்ப தரக்குறைவாகத்தான் நடத்துகிறார்கள். ஆனால், ராஜ்ய மன்றத்துக்குள் ஒரு பெண் நுழையும்போது அவர் வித்தியாசத்தைப் பார்க்க வேண்டும்; அந்த மாதிரி நாம் நடந்துகொள்ள வேண்டும்.” அதனால், நாம் எல்லாருமே யெகோவா மாதிரியே நம்முடைய சகோதரிகளை அன்பாக மரியாதையாக நடத்துவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்கலாம்.—ரோ. 12:10.

a இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் “சகோதரிகள்” என்ற வார்த்தை சபையில் இருக்கும் சகோதரிகளைக் குறிக்கிறது, கூடப்பிறந்த சகோதரிகளை அல்ல.

b ‘பலவீனமான பாத்திரம்’ என்ற வார்த்தையை சரியாக புரிந்துகொள்ள, மே 15, 2006 காவற்கோபுரத்தில் வந்த “’பலவீன பாத்திரத்தின்’ மதிப்பு” என்ற கட்டுரையையும், மார்ச் 1, 2005 காவற்கோபுரத்தில் வந்த “தம்பதியருக்கு ஞானமான அறிவுரை” என்ற கட்டுரையையும் பாருங்கள்.