Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சந்தோஷமாகக் காத்திருங்கள்!

சந்தோஷமாகக் காத்திருங்கள்!

யெகோவா இந்தப் பூமியைப் புத்தம்புதிதாக மாற்றப்போகிற காலத்துக்காகக் காத்திருக்கிறீர்களா? (வெளி. 21:1-5) கண்டிப்பாக என்று சொல்வீர்கள். ஆனால், யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்துக்கொண்டிருப்பது அவ்வளவு சுலபம் இல்லைதான். அதுவும், பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்கும்போது! நாம் எதிர்பார்த்த ஒரு விஷயம் நடப்பதற்கு ரொம்ப நாள் எடுத்தால் கண்டிப்பாக நொந்துவிடுவோம்.—நீதி. 13:12.

இருந்தாலும் நாம் அவருக்காகப் பொறுமையோடு காத்திருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். அவர் ஏன் எப்படி எதிர்பார்க்கிறார்? காத்திருக்கும் நேரத்தில் நாம் எப்படி சந்தோஷமாக இருக்கலாம்? பார்க்கலாம்!

நாம் காத்திருக்க வேண்டும் என்று யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார்?

பைபிள் இப்படிச் சொல்கிறது: “உங்களுக்குக் கருணை காட்ட யெகோவா பொறுமையோடு காத்திருக்கிறார். உங்களுக்கு இரக்கம் காட்டுவதற்காக எழுந்திருப்பார். ஏனென்றால், யெகோவா நியாயம் வழங்குகிற கடவுள். அவருக்காக ஆவலோடு காத்திருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.” (ஏசா. 30:18) இந்த வார்த்தைகளை, பிடிவாதம் பிடித்த யூதர்களிடம் ஏசாயா சொல்லியிருந்தார். (ஏசா. 30:1) ஆனால், அவர்கள் மத்தியிலும் யெகோவாவுக்காக உண்மையோடு காத்திருந்த சிலர் இருந்தார்கள். ஏசாயாவின் வார்த்தைகள் அவர்களுக்குக் கண்டிப்பாக நம்பிக்கை கொடுத்திருக்கும். இன்றும், யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்கிறவர்களுக்கு அது நம்பிக்கைத் தருகிறது.

இந்த உலகத்தை அழிப்பதற்காக யெகோவா ஒரு நாளையும் நேரத்தையும் முன்பே முடிவு செய்து வைத்திருக்கிறார். அந்த நேரத்துக்காக அவர் பொறுமையாகக் காத்திருக்கிறார். அதனால், நாமும் பொறுமையாக காத்திருக்க வேண்டும். (மத். 24:36) அந்த நேரம் வரும்போது, யெகோவாவுக்கும் அவருடைய ஊழியர்களுக்கும் எதிராக சாத்தான் சொன்ன எல்லா குற்றச்சாட்டுகளும் பொய் என்று வெட்டவெளிச்சமாகும். அப்போது, சாத்தானையும் அவன் பக்கம் இருப்பவர்களையும் யெகோவா இல்லாமல் செய்துவிடுவார்; ஆனால் நமக்கு “இரக்கம்” காட்டுவார்.

பொறுமையாகக் காத்திருக்கும் இந்த சமயத்தில், நம்முடைய எல்லா பிரச்சினைகளையும் யெகோவா நீக்கிப்போட மாட்டார். இருந்தாலும், நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார். நல்லது நடக்கும் என்று காத்திருக்கிறவர்களாலும் அதற்காக ஏங்குகிறவர்களாலும் சந்தோஷமாக இருக்க முடியும் என்று ஏசாயாவும் சொன்னார். (ஏசா. 30:18) a அப்படியென்றால், எப்படி சந்தோஷமாக இருப்பது? நான்கு வழிகளைப் பார்க்கலாம்.

காத்திருக்கும்போது எப்படி சந்தோஷமாக இருப்பது?

நல்ல விஷயங்களை யோசியுங்கள். தாவீது ராஜாவின் வாழ்க்கையில் நிறைய கெட்ட விஷயங்கள் நடந்தன. (சங். 37:35) இருந்தாலும், அவர் இப்படி எழுதினார்: “யெகோவாவுக்கு முன்னால் அமைதியாக இரு. அவருக்காக நம்பிக்கையோடு காத்திரு. சதித்திட்டங்கள் தீட்டி அவற்றைச் சாமர்த்தியமாக நடத்திக் காட்டுகிற மனுஷனைப் பார்த்து நீ எரிச்சலடையாதே.” (சங். 37:7) இந்த வார்த்தைகளை அவரும் கடைப்பிடித்தார். யெகோவா தன்னைக் காப்பாற்றுவார் என்பதில் நம்பிக்கையாக இருந்தார். யெகோவா தந்த ஆசீர்வாதங்கள் ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்து, அவற்றை மனதில் பதிய வைத்தார். (சங். 40:5) நாமும் நம்மை சுற்றி நடக்கும் கெட்ட விஷயங்களைப் பற்றி யோசிக்காமல், நல்லதைப் பற்றி யோசிக்கலாம். இப்படியெல்லாம் செய்தால் யெகோவாவுக்காகக் காத்திருப்பது சுலபமாக இருக்கும்.

யெகோவாவை எப்போதும் புகழுங்கள். சங்கீதம் 71-ஐ எழுதியவர், “நான் உங்களுக்காகக் காத்துக்கொண்டே இருப்பேன். உங்களுடைய புகழுக்குப் புகழ் சேர்ப்பேன்” என்று சொன்னார். (சங். 71:14) இந்த சங்கீதத்தை எழுதியது ஒருவேளை தாவீதாக இருந்திருக்கலாம். அவர் எப்படி யெகோவாவுக்குப் புகழ் சேர்த்தார்? அவர் மற்றவர்களிடம் யெகோவாவைப் பற்றி சொன்னார்; யெகோவாவைப் புகழ்ந்து பாடல்களைப் பாடினார். (சங். 71:16, 23) நாமும்கூட ஊழியம் செய்யும்போதும் மற்றவர்களிடம் பேசும்போதும் யெகோவாவைப் புகழ்ந்து பேசலாம். ராஜ்ய மன்றத்தில் பாடல்களைப் பாடும்போதும் நாம் யெகோவாவைப் புகழ்கிறோம். இப்படியெல்லாம் செய்யும்போது, யெகோவாவுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் சந்தோஷமாக இருக்க முடியும், தாவீது மாதிரி! அதனால், அடுத்த தடவை யெகோவாவைப் புகழ்ந்து ஒரு பாடலைப் பாடும்போது அதன் வரிகளை நன்றாகக் கவனியுங்கள். அவை உங்களுக்கு எப்படி சந்தோஷத்தைத் தருகிறது என்று யோசியுங்கள்.

சகோதர சகோதரிகளிடமிருந்து பலம் பெறுங்கள். நிறைய கஷ்டங்கள் வந்த சமயத்தில் தாவீது இப்படி எழுதினார்: “உங்களுக்கு உண்மையாக இருக்கிறவர்களுக்கு முன்பாக உங்கள் பெயரில் நான் நம்பிக்கையோடு இருப்பேன்.” (சங். 52:9) யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்கிற சகோதர சகோதரிகளிடமிருந்து நாமும் பலத்தைப் பெற முடியும். கூட்டங்களிலும் ஊழியத்திலும் இருக்கும்போது மட்டுமல்ல மற்ற சமயங்களிலும், அதாவது அவர்களோடு சந்தோஷமாக நேரம் செலவு செய்யும் சமயங்களிலும், நமக்கு உற்சாகம் கிடைக்கும்.—ரோ. 1:11, 12.

நம்பிக்கையை உறுதியாக வைத்துக்கொள்ளுங்கள். சங்கீதம் 62:5 இப்படி சொல்கிறது: “நான் கடவுளுக்காக அமைதியாய்க் காத்திருக்கிறேன். ஏனென்றால், எனக்கு நம்பிக்கை தருகிறவர் அவர்தான்.” இந்த உலகத்தின் முடிவுக்காக, நினைத்ததைவிட நாம் ரொம்ப நாள் காத்திருப்பதுபோல் தோன்றலாம். இந்தமாதிரி சமயங்களில் நம் நம்பிக்கை பலமாக இருந்தால், சந்தேகப்படாமல் யெகோவாவுக்காகக் காத்திருப்போம். அதனால், யெகோவாவின் வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேறும் என்பதில் உறுதியாக இருங்கள். பைபிளை ஆழமாக படிக்கும்போது நம் நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்ளலாம். அதற்கு, தீர்க்கதரிசனங்களைப் படிக்கலாம், பைபிள் புத்தகங்கள் எப்படி ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகிறது என்று பார்க்கலாம், தன்னைப் பற்றி யெகோவா சொல்லியிருக்கும் விஷயங்களை ஆழமாக ஆராய்ச்சி செய்யலாம். (சங். 1:2, 3) அதுமட்டுமல்ல, யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தைக் காத்துக்கொள்ள “கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலோடு” நாம் ஜெபம் செய்யலாம்.—யூ. 20, 21.

தனக்காகக் காத்திருக்கிறவர்களை யெகோவா கவனித்துக்கொள்கிறார், அவர்கள்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்று தாவீது நம்பினார். (சங். 33:18, 22) நீங்களும் அதே நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கிற நல்ல விஷயங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள், யெகோவாவைப் புகழுங்கள், சகோதர சகோதரிகளிடமிருந்து பலம் பெறுங்கள், உங்கள் நம்பிக்கையைப் பலமாக வைத்துக்கொள்ளுங்கள். இப்படியெல்லாம் செய்யும்போது, உங்களால் யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருக்க முடியும்.

a “ஆவலோடு காத்திருப்பது” என்பதற்கான எபிரெய வார்த்தை, ஏதோ ஒரு விஷயம் நடப்பதற்காக ஏங்குவதை அல்லது ஆசையாக காத்திருப்பதை அர்த்தப்படுத்தலாம். அப்படியென்றால், நம்முடைய கஷ்டங்களை யெகோவா முடிவுகட்டப்போகும் நாளுக்காக ஏங்குவதில் தவறில்லை என்று தெரிகிறது.