Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள யெகோவாவுக்கு இருக்கும் திறமையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

யெகோவாவுக்கு எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும் திறமை இருப்பதாக பைபிள் சொல்கிறது. (ஏசா. 45:21) ஆனால் எதிர்காலத்தைப் பற்றி அவர் எப்படி, எப்போது, எந்தளவு தெரிந்துகொள்கிறார் என்ற எல்லா விவரங்களையும் பைபிள் சொல்வதில்லை. அதனால், இந்த விஷயத்தைப் பற்றித் திட்டவட்டமாக நம்மால் எதையும் சொல்ல முடியாது. இருந்தாலும், சில விஷயங்களை இப்போது கவனிக்கலாம்.

யெகோவாவால் எல்லாவற்றையும் செய்ய முடியும்; ஆனால், சிலவற்றை செய்ய வேண்டாம் என்று அவர் நினைக்கிறார். யெகோவாவுக்கு எல்லையில்லாத ஞானம் இருக்கிறது. அதனால், எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்று அவரால் துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும். (ரோ. 11:33) இருந்தாலும் அவருக்கு சுயக்கட்டுப்பாடு இருப்பதால், சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டாம் என்று நினைக்கிறார்.—ஏசாயா 42:14-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.

யெகோவா தன் நோக்கத்தை நிறைவேற்றுகிறார். இதற்கும் எதிர்காலத்தைப் பற்றி சொல்லும் அவருடைய திறமைக்கும் என்ன சம்பந்தம்? அதைப் பற்றி ஏசாயா 46:10 இப்படி சொல்கிறது: “நடக்கப்போகும் விஷயங்களை நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன். அதை ரொம்பக் காலத்துக்கு முன்பிருந்தே சொல்லி வருகிறேன். ‘நான் நினைத்தது நிச்சயம் நிறைவேறும். விரும்புவதையெல்லாம் நான் செய்து முடிப்பேன்’ என்று சொல்கிறேன்.”

ஒரு படத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று நாம் தெரிந்துகொள்ள நினைத்தால், படத்தை ஓட்டி அதன் கடைசிக்குப் போய் பார்ப்போம். எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ள யெகோவா இந்த மாதிரி எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதாவது, எதிர்காலத்தில் நடக்கப்போகிற விஷயங்களைப் பார்த்துவிட்டு, பிறகு நம்மிடம் வந்து ‘இந்த-இந்த சம்பவங்கள், இப்படி-இப்படி நடக்கும்’ என்று யெகோவா சொல்வதில்லை. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் என்ன நடக்க வேண்டும் என்று யெகோவாவால் முடிவு செய்ய முடியும். அந்த சமயம் வரும்போது, அவர் அதை நடக்கும்படி செய்கிறார். எதிர்காலத்தைப் பற்றி அவரால் சொல்ல முடிவதற்கு இந்த சக்தி அவருக்கு இருப்பதும் ஒரு காரணம்.—யாத். 9:5, 6; மத். 24:36; அப். 17:31.

எதிர்காலத்தில் யெகோவா செய்யப்போகிற விஷயங்களைப் பற்றி சொல்லும்போது, “ஏற்பாடு செய்தேன்,” “உருவாக்கினேன்,” “தீர்மானித்தேன்” மாதிரியான வார்த்தைகளை பைபிள் பயன்படுத்துகிறது. (2 ரா. 19:25; ஏசா. 46:11) இந்த வார்த்தைகளுக்கு இணையான எபிரெய வார்த்தை ‘குயவன்’ என்ற வார்த்தையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. (எரே. 18:3, 4) திறமையான ஒரு குயவன் களிமண்ணை அழகான பாத்திரமாக வடிவமைப்பார். அதேபோல், எதிர்காலத்தில் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு யெகோவாவால் சில விஷயங்களை வடிவமைக்க முடியும், அதாவது, மாற்ற முடியும்.—எபே. 1:11.

மனிதர்களுக்கு இருக்கிற சுதந்திரத்தை யெகோவா மதிக்கிறார். ஒருவருடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யெகோவா முன்கூட்டியே தீர்மானிப்பதில்லை. நல்ல மக்கள் அழிந்துபோக வேண்டும் என்பதற்காக அவர்களை வேண்டுமென்றே தவறு செய்ய வைப்பதும் இல்லை. அதற்குப் பதிலாக, எல்லாருமே சொந்தமாக முடிவெடுப்பதற்கு யெகோவா அனுமதிக்கிறார். அதேசமயத்தில், மக்களுக்கு நல்ல வழியையும் அவர் சொல்லித் தருகிறார்.

இரண்டு உதாரணங்களைப் பாருங்கள். முதலில், நினிவே மக்களுடைய உதாரணத்தைக் கவனிக்கலாம். அந்த மக்கள் மோசமான பாவங்களை செய்ததால், அவர்களை அழிக்க வேண்டுமென்று யெகோவா முடிவெடுத்தார். ஆனால் அவர்கள் உண்மையிலேயே மனம் திருந்தியதை அவர் பார்த்தார். அதனால், “தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார்.” (யோனா 3:1-10) யெகோவா சொன்ன எச்சரிப்பைக் கேட்டு, மனம் திருந்த வேண்டும் என்று நினிவே மக்கள் தாங்களாகவே முடிவெடுத்தார்கள். அதனால், அவர்களைப் பற்றி ஏற்கெனவே எடுத்த முடிவை யெகோவா மாற்றிக்கொண்டார்.

அடுத்ததாக, பெர்சிய ராஜாவான கோரேசின் உதாரணத்தைப் பார்க்கலாம். அவர் யூதர்களை பாபிலோனில் இருந்து விடுதலை செய்வார் என்றும், யெகோவாவின் ஆலயத்தைத் திரும்ப கட்ட கட்டளை கொடுப்பார் என்றும் யெகோவா முன்பே சொன்னார். (ஏசா. 44:26–45:4) யெகோவா சொன்னது அப்படியே நிறைவேறியது. (எஸ்றா 1:1-4) கோரேசு ராஜா யெகோவாவை வணங்கவில்லை. யாரை வணங்குவது என்று முடிவு செய்கிற சுதந்திரம் கோரேசுக்கு இருந்தது. அந்த சுதந்திரத்தில் தலையிடாமல், தான் சொன்ன தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற யெகோவா அவரைப் பயன்படுத்தினார்.—நீதி. 21:1.

எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள யெகோவாவுக்கு இருக்கும் திறமையைப் பற்றி சில விஷயங்களை இதுவரை பார்த்தோம்; ஆனால், இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கலாம். யதார்த்தம் என்னவென்றால், யெகோவா எப்படி யோசிக்கிறார், எப்படி நடந்துகொள்கிறார் என்பதை எந்த மனிதனாலும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. (ஏசா. 55:8, 9) இருந்தாலும், யெகோவா நமக்கு சொல்லியிருக்கிற விஷயங்கள் நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன. அவர் எதை செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையை அது நமக்குக் கொடுக்கிறது—எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்கிற திறமையை அவர் பயன்படுத்தும் விதம் உட்பட!