Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

என்னுடைய பலவீனத்தில் கடவுளுடைய பலத்தைப் பார்த்தேன்

என்னுடைய பலவீனத்தில் கடவுளுடைய பலத்தைப் பார்த்தேன்

1985-ல் நானும் என்னுடைய மனைவியும் கொலம்பியாவுக்கு வந்தோம். அப்போது அது ஒரு வன்முறை பூமி! நகரத்தில் இருந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை எதிர்த்தும், மலைகளில் இருந்த கொரில்லா படையோடும் அந்த நாட்டு அரசாங்கம் போராடிக்கொண்டிருந்தது. மெடெலின் என்ற பகுதியில், எங்கே பார்த்தாலும் ஆயுதம் ஏந்திய இளைஞர்கள்தான் இருந்தார்கள்; நாங்கள் அந்த இடத்திலும் சேவை செய்தோம். அந்த இளைஞர்கள் போதைப்பொருளை விற்றார்கள், மக்களை மிரட்டி பணம் பறித்தார்கள், காசுக்காகக் கொலையும் செய்தார்கள். அவர்களில் யாருமே ரொம்ப நாள் உயிரோடு இல்லை. ஏதோ வித்தியாசமான ஒரு உலகத்தில் வாழ்வதுபோல் இருந்தது!

பூமியின் வடக்கு கோடியான பின்லாந்தில் இருந்த நாங்கள் எப்படி தென் அமெரிக்காவுக்கு வந்தோம்? இவ்வளவு வருஷங்களில் என்ன பாடங்களை நான் கற்றுக்கொண்டேன்? சொல்கிறேன்...

பின்லாந்தில் இளைஞராக இருந்தபோது

1955-ல் நான் பிறந்தேன். எனக்கு இரண்டு அண்ணன்கள். பின்லாந்தின் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்த வாண்டா என்ற ஒரு ஊரில்தான் வளர்ந்தேன்.

நான் பிறப்பதற்குக் கொஞ்சம் வருஷங்களுக்கு முன்பு, அம்மா ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனார். ஆனால், அப்பாவுக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அம்மா எங்களுக்கு பைபிளை சொல்லித்தரவோ கூட்டங்களுக்குக் கூட்டிக்கொண்டு போகவோ அவர் விடவே இல்லை. ஆனால், அப்பா வீட்டில் இல்லாதபோது அம்மா எங்களுக்கு பைபிள் உண்மைகளை சொல்லிக்கொடுத்தார்.

ஏழு வயதில், யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடிவெடுத்தேன்

சின்ன வயதிலிருந்தே யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு சந்தர்ப்பத்தை சொல்ல வேண்டுமென்றால், எனக்கு ஏழு வயது இருந்தபோது என்னுடைய ஸ்கூல் டீச்சர் என்மேல் ரொம்ப கோபப்பட்டார். ஏனென்றால், பின்லாந்தில் பிரபலமாக இருந்த, ரத்தத்தால் செய்யப்பட்ட பேன் கேக்கை (வெரீலாட்யா) நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அவர் ஒரு கையால் என்னுடைய இரண்டு கன்னத்தையும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் அந்த பேன் கேக்கை என் வாய்க்குள் திணிக்கப் பார்த்தார். ஆனால், எப்படியோ அவர் கையைத் தட்டி விட்டேன்.

எனக்கு 12 வயது இருந்தபோது, அப்பா இறந்துபோனார். அதற்குப் பிறகு என்னால் கூட்டங்களுக்குப் போக முடிந்தது. அங்கிருந்த சகோதரர்கள் என்மேல் ரொம்ப அக்கறை காட்டினார்கள். அதனால், யெகோவாவிடம் நெருங்கி வர வேண்டும் என்ற ஆசை அதிகமானது. தினமும் பைபிளைப் படித்தேன்; பிரசுரங்களையும் தவறாமல் படித்தேன். நன்றாகப் படிக்கும் பழக்கம் இருந்ததால், ஆகஸ்ட் 8, 1969-ல் ஞானஸ்நானம் எடுத்தேன். அப்போது எனக்கு 14 வயதுதான்!

பள்ளிப் படிப்பை முடித்ததும் ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பித்தேன். சில வாரங்களிலேயே, பின்லாந்தின் மையப் பகுதிக்குப் பக்கத்தில் இருந்த பைலவசி என்ற இடத்துக்குப் போய் சேவை செய்தேன்; அங்கே தேவை அதிகமாக இருந்தது.

நான் பைலவசியில், சிர்க்கா என்ற ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவள் மனத்தாழ்மையாக நடந்துகொண்டாள்; யெகோவாவை நேசித்தாள். அவள் தன்னையே பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ளவில்லை; சொகுசாக வாழ வேண்டும் என்றும் நினைக்கவில்லை. நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து யெகோவாவுக்கு எங்களுடைய ‘பெஸ்ட்டை’ கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அதனால், யெகோவா எங்களுக்கு எப்படிப்பட்ட நியமிப்பைக் கொடுத்தாலும் அதை செய்ய தயாராக இருந்தோம். மார்ச் 23, 1974-ல் நாங்கள் கல்யாணம் பண்ணிக்கொண்டோம். நாங்கள் ஹனிமூனுக்கு போவதற்குப் பதிலாக கர்ட்டுலாவுக்கு போனோம். ஏனென்றால், அங்கேதான் தேவை ரொம்ப அதிகமாக இருந்தது.

பின்லாந்தில் இருந்த கர்ட்டுலாவில், நாங்கள் தங்கியிருந்த வாடகை வீடு

யெகோவா எங்களைப் பாசமாகப் பார்த்துக்கொண்டார்

என்னுடைய அண்ணா எனக்குக் கொடுத்த கார்

யெகோவாவுக்கு முதலிடம் கொடுத்தால் அவர் நம்முடைய தேவைகள் எல்லாவற்றையும் நன்றாகக் கவனித்துக்கொள்வார். கல்யாணமான புதிதிலிருந்தே இது உண்மை என்பதை நாங்கள் தெளிவாகப் பார்த்தோம். (மத். 6:33) உதாரணத்துக்கு, நாங்கள் கர்ட்டுலா என்ற இடத்தில் இருந்த சமயத்தில் எங்களிடம் கார் இல்லை. சைக்கிளில்தான் எல்லா இடத்துக்கும் போய் வந்தோம். குளிர்காலத்தில் உறைய வைக்கிற அளவுக்குப் பனி இருக்கும். சபையின் ஊழியப் பகுதியும் ரொம்பப் பெரியது. ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சிலசமயம் யோசிப்போம். ஆனால் அதை வாங்க எங்களிடம் காசு இல்லை.

திடீரென்று ஒரு நாள் என்னுடைய அண்ணா எங்களைப் பார்க்க வந்தார். எங்களுக்காக அவருடைய காரையே கொடுத்துவிட்டார். நாங்கள் அதை எதிர்பார்க்கவே இல்லை. காரின் இன்சுரன்சையும் அவரே கட்டிவிட்டார். வெறுமனே பெட்ரோல் மட்டும்தான் நாங்கள் போட வேண்டியிருந்தது. ஆசைப்பட்ட மாதிரியே இப்போது எங்களுக்கு கார் கிடைத்துவிட்டது!

‘உங்களை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது என்னுடைய பொறுப்பு’ என்று யெகோவாவே எங்களிடம் சொன்ன மாதிரி இருந்தது. நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய சேவைக்கு முதலிடம் கொடுப்பது மட்டும்தான்.

கிலியட் பள்ளி

1978-ல் நாங்கள் கலந்துகொண்ட பயனியர் ஊழியப் பள்ளி

1978-ல் நாங்கள் பயனியர் ஊழியப் பள்ளியில் கலந்துகொண்டோம். எங்களுக்குப் போதகராக இருந்த ரைமோ க்வோகானன் a என்ற சகோதரர், கிலியட் பள்ளிக்கு விண்ணப்பிக்க சொல்லி எங்களை உற்சாகப்படுத்தினார். அதில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம். ஆனால், விண்ணப்பிப்பதற்கு முன்பே, 1980-ல் பின்லாந்து கிளை அலுவலகத்தில் சேவை செய்ய அழைப்பு வந்தது. அந்த சமயத்தில், பெத்தேலில் சேவை செய்கிறவர்களால் கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள முடியாது. ஆனாலும் நாங்கள் எங்கே ‘பெஸ்ட்டாக’ சேவை செய்வோம் என்பது எங்களைவிட யெகோவாவுக்குத்தான் தெரியும் என்பதைப் புரிந்துகொண்டோம். அதனால், பெத்தேலுக்குப் போனோம். இருந்தாலும் நாங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதை நிறுத்தவில்லை. ஒருவேளை, கிலியட் பள்ளியில் கலந்துகொள்வதற்கு என்றாவது ஒருநாள் வாய்ப்பு கிடைக்கலாம், இல்லையா!

சில வருஷங்களுக்குப் பிறகு, பெத்தேலில் சேவை செய்கிறவர்களும் கிலியட் பள்ளிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆளும் குழு சொன்னது. உடனே விண்ணப்பத்தைப் போட்டோம். பெத்தேல் சேவை பிடிக்கவில்லை என்பதால் அல்ல, தேவை இருக்கிற இடத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையால்தான். எங்கள் ஆசை நிறைவேறியது! செப்டம்பர் 1985-ல், 79-வது கிலியட் வகுப்பில் பட்டம் பெற்றோம். எங்களுக்கு கொலம்பியாவில் நியமிப்பு கிடைத்தது.

முதல் மிஷனரி நியமிப்பு

கொலம்பியாவில், கிளை அலுவலகத்தில் எங்களை சேவை செய்ய சொன்னார்கள். அதுதான் எங்களுடைய முதல் நியமிப்பு. என்னுடைய நியமிப்பை நன்றாக செய்வதற்கு என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுத்தேன். ஆனால் ஒரு வருஷத்துக்குப் பிறகு, வேறொரு நியமிப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் சகோதரர்களிடம் வேறு நியமிப்பு தரும்படி கேட்டேன். வாழ்க்கையிலேயே நான் அப்படிக் கேட்டது அதுதான் முதல் தடவையும், கடைசி தடவையும். அதற்குப் பிறகு எங்களை ஹுயிலா பகுதியிலிருந்த நேவா நகரத்தில் மிஷனரிகளாக நியமித்தார்கள்.

ஊழியம் செய்வது எனக்கு எப்போதுமே ரொம்ப பிடிக்கும். கல்யாணத்துக்கு முன்பு பின்லாந்தில் தனியாக பயனியர் சேவை செய்துகொண்டு இருந்தபோது, காலையிலிருந்து சாயங்காலம்வரை ஊழியம் செய்வேன். கல்யாணமான புதிதில் நானும் சிர்க்காவும் நாள் முழுவதும் ஊழியம் செய்வோம்; அதுவும் அடிக்கடி செய்வோம். தூரமான இடங்களுக்குப் போய் ஊழியம் செய்யும்போது காரிலேயே தூங்கிவிடுவோம். இப்படி செய்ததால், பயணம் செய்கிற நேரம் மிச்சமானது; அடுத்த நாள் ஊழியத்தையும் ரொம்ப சீக்கிரமாகவே ஆரம்பிக்க முடிந்தது.

முன்பு ஊழியத்தை நாங்கள் எவ்வளவு உற்சாகமாக செய்தோமோ அதேமாதிரி இப்போதும் செய்தோம், அதாவது மிஷனரிகளாக ஆன பிறகும் செய்தோம். கொலம்பியாவில் நாங்கள் இருந்த சபை வளர்ந்தது. அங்கே இருந்த சகோதர சகோதரிகள் ரொம்ப மரியாதையாக, அன்பாக நடந்துகொண்டார்கள். நாங்கள் செய்த வேலையைப் பார்த்து அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.

ஜெபத்துக்கு இருக்கும் சக்தி

நாங்கள் நேவா என்ற ஊரில் தங்கி ஊழியம் செய்துகொண்டு இருந்தோம். ஆனால் நேவாவுக்கு பக்கத்தில் இருந்த சில டவுன்களில் யெகோவாவின் சாட்சிகள் யாருமே இல்லை. அங்கே இருக்கிறவர்களுக்கு எப்படி நல்ல செய்தியை சொல்வது என்று யோசித்து ரொம்ப கவலைப்பட்டேன். ஏனென்றால், அங்கே கொரில்லா போர் நடந்துகொண்டு இருந்தது. வெளியூர்க்காரர்கள் அங்கே போவது ஆபத்தானது. அதனால் அந்த ஊரில் இருக்கிற ஒருவர் எங்கள் ஊருக்கு வந்து சத்தியத்தை கற்றுக்கொண்டு... ஞானஸ்நானம் எடுத்து... மறுபடியும் அந்த ஊருக்குப் போய் ஊழியம் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்தேன். அதற்காக ஜெபம்கூட பண்ணினேன். நானே இவ்வளவு யோசிக்கிறேன் என்றால் யெகோவா கண்டிப்பாக அந்த மக்களைப் பற்றி எவ்வளவு யோசித்திருப்பார்!

கொஞ்ச நாளிலேயே, ஃபெர்னாண்டோ கான்சலஸ் என்ற ஒரு இளைஞருக்கு நான் பைபிள் படிப்பு நடத்தினேன். அவர் அல்கிசிராஸ் என்ற டவுனை சேர்ந்தவர்; அங்கே யெகோவாவின் சாட்சிகள் யாருமே இல்லை. அவர் வேலைக்காக நான் தங்கியிருந்த நேவா என்ற டவுனுக்கு வருவார்; கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் பயணம் செய்து வருவார். ஒவ்வொரு பைபிள் படிப்புக்கும் அவர் நன்றாகத் தயாரித்தார்; எல்லா கூட்டங்களிலும் கலந்துகொண்டார். படிக்க ஆரம்பித்த முதல் வாரத்திலிருந்தே தன்னுடைய ஊரில் இருக்கிற சிலரை ஒன்றாக வர வைத்து, கற்றுக்கொண்ட விஷயங்களை அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்.

ஃபெர்னாண்டோவோடு, 1993

படிக்க ஆரம்பித்த ஆறே மாதத்தில், அதாவது ஜனவரி 1990-ல், அவர் ஞானஸ்நானம் எடுத்தார். அப்போதிலிருந்து ஒழுங்கான பயனியராக சேவை செய்ய ஆரம்பித்தார். அல்கிசிராஸில் இப்போது ஒரு யெகோவாவின் சாட்சி இருந்ததால் அமைப்பால் அங்கே விசேஷ பயனியர்களை நியமிக்க முடிந்தது. பிப்ரவரி 1992-ல் அந்த ஊரில் ஒரு சபை உருவானது.

ஃபெர்னாண்டோ அவருடைய சொந்த ஊரில் ஊழியம் செய்வதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. கல்யாணத்துக்குப் பிறகு அவரும் அவருடைய மனைவியும் இன்னொரு டவுனுக்குக் குடிமாறி போனார்கள். அங்கேயும் யெகோவாவின் சாட்சிகள் இல்லை. அந்த டவுனுடைய பெயர் சான் வின்சென்டே டெல் ககுவான். அங்கேயும் ஒரு சபை உருவாக அவர்கள் உதவி செய்தார்கள். 2002-ல் ஃபெர்னாண்டோ ஒரு வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டார். இன்றுவரை அவரும் அவருடைய மனைவி ஆல்காவும் வட்டார சேவை செய்கிறார்கள்.

நியமிப்பு சம்பந்தப்பட்ட சில விஷயங்களுக்காக குறிப்பாக ஜெபம் செய்ய வேண்டும் என்பதை இந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டேன். நம்மால் செய்ய முடியாததை யெகோவா கண்டிப்பாக செய்வார். சொல்லப்போனால், இது யெகோவாவுடைய அறுவடை வேலை, நம்முடையது அல்ல!—மத். 9:38.

யெகோவா “ஆர்வத்தையும் வல்லமையையும்” கொடுக்கிறார்

1990-ல், வட்டார சேவை செய்வதற்கான நியமிப்பு எங்களுக்குக் கிடைத்தது. எங்களுடைய முதல் வட்டாரம், தலைநகரமான போகோடா. அந்த நியமிப்பு எங்களுக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஏனென்றால், நானும் என்னுடைய மனைவியும் ரொம்ப சாதாரண ஆட்கள், பெரிதாக திறமைகள் எல்லாம் கிடையாது. ‘ஜே-ஜே’ என்றிருக்கிற நகரத்தில் வாழ்ந்து எங்களுக்குப் பழக்கம் இல்லை. இருந்தாலும், யெகோவா எங்களுக்கு உதவி செய்தார். பிலிப்பியர் 2:13-ல் அவர் கொடுத்திருக்கிற வாக்குறுதியை நிறைவேற்றினார். “கடவுள்தான் தனக்குப் பிரியமானதைச் செய்வதற்கான ஆர்வத்தையும் வல்லமையையும் உங்களுக்குக் கொடுத்து உங்களைப் பலப்படுத்துகிறார்” என்று அந்த வசனம் சொல்கிறது.

அதற்குப் பிறகு மெடெலின் என்ற வட்டாரத்துக்கு எங்களை நியமித்தார்கள். அந்த ஊரைப் பற்றித்தான் நான் ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன். அங்கே வன்முறை சர்வ சாதாரணமாக இருந்தது. ஊர் மக்களும் அதை நினைத்துப் பயப்படவே இல்லை. ஒருதடவை நான் ஒருவருக்கு பைபிள் படிப்பு நடத்திக்கொண்டு இருந்தேன். வீட்டுக்கு வெளியே துப்பாக்கி சுடுகிற சத்தம் எனக்குக் கேட்டது. உடனே தரையில் படுத்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் பைபிள் படித்துக்கொண்டு இருந்தவர் அந்த சத்தத்தைக் கேட்டும் அசரவே இல்லை; பாராவைத் தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்தார். படித்து முடித்தப் பிறகு, “ஒரு நிமிஷம் இருங்கள், நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு போனார். பிறகு, தன்னுடைய இரண்டு பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு உள்ளே வந்தார். வந்ததும் “சாரி, என்னுடைய பிள்ளைகள் வெளியே இருந்தார்கள். அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவதற்காக போனேன்” என்று ரொம்ப சாதாரணமாக சொன்னார்.

இன்னும் நிறைய ஆபத்தான சூழ்நிலைகளும் இருந்தன. ஒருதடவை நாங்கள் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டு இருந்தோம். அப்போது என்னுடைய மனைவி ரொம்ப பயந்துபோய் என்னிடம் ஓடி வந்தாள். அவள் ரொம்ப வெலவெலத்து போயிருந்தாள். யாரோ அவளைப் பார்த்து சுட்டதாக அவள் சொன்னாள். அதைக் கேட்டு அதிர்ச்சி ஆகிவிட்டேன். அப்புறம்தான் தெரிந்தது, சுட்டவன் சிர்க்காவைப் பார்த்து சுடவில்லை; அவள் பக்கத்தில் போய்க்கொண்டு இருந்த ஒருவனை சுட்டிருக்கிறான்.

போகப் போக, வன்முறையை சமாளித்து வாழ நாங்களும் கற்றுக்கொண்டோம். அந்த ஊரில் இருந்த சகோதர சகோதரிகள் இந்த மாதிரி சூழ்நிலைகளையும், இதைவிட மோசமான சூழ்நிலைகளையும்கூட ரொம்ப தைரியமாக சந்தித்தார்கள். அவர்களுக்கு யெகோவா உதவி செய்தார் என்றால் கண்டிப்பாக எங்களுக்கும் உதவி செய்வார் என்று புரிந்துகொண்டோம். உள்ளூர் மூப்பர்களிடமும் ஆலோசனை கேட்டோம். பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்தோம். மற்றதை யெகோவா கையில் விட்டுவிட்டோம்.

ஆனால் சிலசமயத்தில், நாங்கள் நினைத்த அளவுக்கு சூழ்நிலைமை ஆபத்தாக இல்லை. ஒருதடவை நான் ஒரு வீட்டுக்கு போயிருந்தேன். அப்போது அந்த வீட்டுக்கு வெளியே இரண்டு பெண்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்த மாதிரி எனக்கு கேட்டது. அந்த சண்டையைப் பார்க்க எனக்கு இஷ்டம் இல்லாததால் வீட்டுக்குள்ளேயே இருந்தேன். ஆனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் என்னை வெளியே வந்து பார்க்க சொன்னார்கள். போய் பார்த்த பிறகுதான் தெரிந்தது அது இரண்டு பெண்கள் அல்ல, இரண்டு கிளிகள்! மனிதர்களைப் போலவே அவை கத்திக்கொண்டு இருந்தன.

இன்னும் சில பொறுப்புகளும் சவால்களும்

1997-ல் என்னை ஊழியப் பயிற்சி பள்ளியை நடத்துவதற்கு போதகராக நியமித்தார்கள். b இந்த மாதிரி பள்ளிகளில் கலந்துகொள்வது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால், ஒரு பள்ளிக்கு நான் போதகராக இருப்பேன் என்று கற்பனைகூட செய்ததில்லை.

பிறகு நான் மாவட்டக் கண்காணியாக சேவை செய்தேன். அந்த ஏற்பாடு முடிவுக்கு வந்தப் பிறகு வட்டார சேவையை செய்தேன். 30 வருஷங்களுக்கும் மேல், பள்ளிகளில் போதகராகவும் பயணக் கண்காணியாகவும் சேவை செய்திருக்கிறேன். இதனால் நிறைய ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கின்றன. இருந்தாலும் சில சவால்களும் இருந்தன. அதைப் பற்றி இப்போது சொல்கிறேன்.

நான் பொதுவாக தைரியமாகவும் உறுதியாகவும் இருப்பேன். அதுதான் என் சுபாவம்! அதனால் நிறைய கஷ்டமான சூழ்நிலைகளை சமாளிக்க முடிந்தது உண்மைதான். இருந்தாலும் சில சமயங்களில், சபையில் நடக்கிற சில விஷயங்களை சரிசெய்ய வேண்டும் என்பதில் நான் ரொம்ப தீவிரமாக இருந்திருக்கிறேன். ‘அன்பாகவும், நியாயமாகவும் நடந்துகொள்ளுங்கள்’ என்று மற்றவர்களுக்கு உறுதியாக ஆலோசனை கொடுத்திருக்கிறேன். ஆனால் உண்மை என்னவென்றால், அந்த மாதிரி சமயங்களில் நானே அந்தக் குணங்களைக் காட்டாமல் போய்விட்டேன்.—ரோ. 7:21-23.

என்னுடைய பலவீனங்களை நினைத்து சிலசமயம் நான் ரொம்பவே சோர்ந்து போயிருக்கிறேன். (ரோ. 7:24) ஒரு சமயத்தில், ‘இந்த மிஷனரி சேவை வேண்டாம், திரும்பவும் பின்லாந்துக்கே போய்விடலாம்’ என்று யோசித்தேன். அதைப் பற்றி நான் யெகோவாவிடம் ஜெபத்தில்கூட சொன்னேன். ஆனால், அன்றைக்கு சாயங்காலமே எனக்குத் தேவையான உற்சாகம் கூட்டத்தில் கிடைத்தது. என்னுடைய நியமிப்பைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும், என்னுடைய குறைகளை சரிசெய்ய உழைக்க வேண்டும் என்றும் எனக்கு அப்போது தோன்றியது. இன்றைக்கு வரைக்கும் யெகோவா என்னுடைய ஜெபத்துக்குப் பதில் கொடுத்திருக்கிறார். பலவீனங்களைத் தாண்டி வரவும் அதை சரி செய்யவும் யெகோவா உதவி செய்திருக்கிறார். அதற்காக நான் அவருக்கு நன்றியோடு இருக்கிறேன்.

எதிர்காலத்துக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்

எங்களுடைய வாழ்க்கையில் பெரும்பாலான காலம் நாங்கள் முழுநேர சேவையில்தான் இருந்திருக்கிறோம். அதற்காக நானும் சிர்க்காவும் யெகோவாவுக்கு நன்றியோடு இருக்கிறோம். அதுமட்டுமல்ல, எனக்கு உண்மையாக இருக்கிற அன்பான ஒரு மனைவியைக் கொடுத்ததற்காகவும் நான் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன்.

சீக்கிரத்தில் எனக்கு 70 வயது ஆகிவிடும். அமைப்பு நடத்துகிற பள்ளிகளில் போதகராகவோ பயணக் கண்காணியாகவோ அதற்குமேல் என்னால் சேவை செய்ய முடியாது. ஆனால் அதை நினைத்து நான் கவலைப்படவில்லை. ஏனென்றால், யெகோவாவை மகிமைப்படுத்த ஒரு முக்கிய பொறுப்பில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை; அடக்கத்தோடு அவருக்குத் தொடர்ந்து சேவை செய்தால் போதும்! அன்பு பொங்குகிற மனதோடு அவரைப் புகழ்ந்தால் போதும்!—மீ. 6:8; மாற். 12:32-34.

நான் இதுவரைக்கும் செய்த நியமிப்புகளைப் பற்றி யோசிக்கும்போது ஒரு முக்கியமான விஷயம் என்னுடைய ஞாபகத்துக்கு வருகிறது: நான் ஏதோ மற்றவர்களைவிட அதிகமாக உழைத்ததாலோ அல்லது எனக்கு நிறைய திறமைகள் இருந்ததாலோ இந்தப் பொறுப்புகள் எனக்குக் கிடைக்கவில்லை; யெகோவாவுடைய கருணையால்தான் கிடைத்தது. எனக்குப் பலவீனங்கள் இருந்தாலும் இவற்றையெல்லாம் செய்ய யெகோவா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவருடைய உதவி இருந்ததால்தான் எல்லாவற்றையுமே நல்லபடியாக செய்ய முடிந்தது. அதனால், என்னுடைய பலவீனத்தில் யெகோவாவுடைய பலத்தை என்னால் பார்க்க முடிந்தது.—2 கொ. 12:9.

a சகோதரர் ரைமோ க்வோகானனின் வாழ்க்கை சரிதையை ஏப்ரல் 1, 2006 காவற்கோபுரத்தில் வந்த “யெகோவாவுக்கு சேவை செய்ய உறுதிபூண்டோம்” என்ற கட்டுரையில் பாருங்கள்.

b இந்தப் பள்ளிக்குப் பதிலாக, ‘ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி’ இப்போது நடக்கிறது.