Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 14

பாட்டு 56 யெகோவாவின் வழியில் நடப்போம்

‘முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறுங்கள்’

‘முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறுங்கள்’

“முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேற வேண்டும்.”எபி. 6:2.

என்ன கற்றுக்கொள்வோம்?

யெகோவாவின் விருப்பத்துக்கு ஏற்றபடி வாழ்கிற முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் எப்படி யோசிப்பார்... நடந்துகொள்வார்... முடிவுகளை எடுப்பார்... என்றெல்லாம் கற்றுக்கொள்வோம்.

1. நாம் எப்படி இருக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார்?

 ஒரு தம்பதிக்குக் குழந்தை பிறக்கும்போது அவர்களுடைய சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இருக்காது! அந்தச் செல்லக்குட்டியை அவர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அதேசமயத்தில், அந்தக் குழந்தை எப்போதுமே ஒரு குழந்தையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்க மாட்டார்கள். ஒருவேளை, அந்தக் குழந்தை வளரவில்லை என்றால் அவர்கள் ரொம்ப கவலைப்படுவார்கள். அதேமாதிரி நாமும் இயேசுவின் சீஷர்களாக முதல் படி எடுத்து வைக்கும்போது யெகோவா ரொம்ப சந்தோஷப்படுகிறார். ஆனால் நாம் குழந்தைகளாகவே இருக்க வேண்டும் என்று அவர் விரும்புவதில்லை. (1 கொ. 3:1) “முதிர்ச்சி அடைந்த” கிறிஸ்தவர்களாக ஆக வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார்.—1 கொ. 14:20.

2. இந்தக் கட்டுரையில் வேறு எதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்?

2 ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் எப்படி யோசிப்பார், எப்படி நடந்துகொள்வார்? நாம் எப்படி ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆகலாம்? முதிர்ச்சியுள்ளவர்களாக ஆவதற்கு திட உணவு எப்படி உதவும்? ‘நான் ஏற்கெனவே முதிர்ச்சியாகத்தான் இருக்கிறேன், இதற்குமேல் எதுவும் செய்யத் தேவையில்லை’ என்று நாம் ஏன் யோசிக்கக் கூடாது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் எப்படி யோசிப்பார், நடந்துகொள்வார்?

3. முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆவது என்றால் என்ன?

3 “முதிர்ச்சி” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற கிரேக்க வார்த்தைக்கு “பரிபூரணம்” அல்லது “முழுமை” என்ற அர்த்தம்கூட இருக்கிறது. a (1 கொ. 2:6) ஒரு குழந்தை வளர்ந்து பெரிய ஆளாக ஆகிறமாதிரி நாமும் யெகோவாவோடு இருக்கிற பந்தத்தில் வளர்ந்து முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆக வேண்டும். ஒருவேளை நாம் ஓரளவு முதிர்ச்சி உள்ளவர்களாக ஆகியிருந்தால்கூட, அதோடு நிறுத்திவிடக் கூடாது. (1 தீ. 4:15) நாம் எல்லாருமே, சொல்லப்போனால் இளம் பிள்ளைகள்கூட, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆக முடியும். ஆனால் நாம் ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக இருக்கிறோமா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

4. ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் எப்படி நடந்துகொள்வார்?

4 ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர், தனக்கு எது பிடிக்கிறதோ வசதியாக இருக்கிறதோ அதை மட்டும் செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டார். யெகோவா எதிர்பார்க்கிற எல்லாவற்றையுமே செய்வார். பாவ இயல்புள்ள நபராக இருப்பதால் அவர் சில தவறுகள் செய்வார்தான்! இருந்தாலும், யெகோவா மாதிரியே யோசிக்கவும் நடந்துகொள்ளவும் கடினமாக முயற்சி எடுப்பார். அதற்காக அவரால் முடிந்த எல்லாவற்றையும் செய்வார். அதோடு, புதிய சுபாவத்தை அணிந்திருப்பார். (எபே. 4:22-24) யெகோவா கொடுத்திருக்கிற நியமங்களை வைத்து நல்ல முடிவுகள் எடுப்பார்; வாழ்க்கையில் வருகிற ஒவ்வொரு சூழ்நிலைக்கும் சட்டங்களை எதிர்பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார். அதோடு, தான் எடுத்த முடிவின்படி செய்வதில் உறுதியாக இருப்பார்.—1 கொ. 9:26, 27.

5. ஒரு கிறிஸ்தவர் முதிர்ச்சியில்லாமல் இருந்தால் என்ன நடக்கலாம்? (எபேசியர் 4:14, 15)

5 ஆனால், முதிர்ச்சியாக இல்லாத ஒரு கிறிஸ்தவர் ‘தந்திரங்களையும்’ ‘ஏமாற்று வழிகளையும்’ சுலபமாக நம்பிவிடுவார். மற்றவர்கள் ஏதாவது தப்பான செய்தியை அல்லது வதந்தியைப் பரப்பினால், அதை அப்படியே நம்பி ஏமாந்து விடுவார். விசுவாசதுரோகிகள் சொல்வதைக்கூட அவர் நம்பிவிடுவார். b (எபேசியர் 4:14, 15-ஐ வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, அவர் மற்றவர்கள்மேல் பொறாமைப்படலாம்... மற்றவர்களிடம் பிரச்சினை பண்ணலாம்... அல்லது தொட்டதுக்கெல்லாம் புண்படலாம். தப்பு செய்கிற மாதிரி ஒரு சூழ்நிலை வந்தால் சுலபமாக விட்டுக்கொடுத்து விடலாம்.—1 கொ. 3:3.

6. முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆவதை எப்படி ஒரு உதாரணத்தோடு விளக்கலாம்? (படத்தையும் பாருங்கள்.)

6 நாம் ஏற்கெனவே பார்த்த மாதிரி, ஒரு நபர் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆவதை ஒரு குழந்தையின் வளர்ச்சியோடு பைபிள் ஒப்பிடுகிறது. பொதுவாக, குழந்தைகளுக்கு நிறைய விஷயம் தெரியாது. அதனால் அவர்களைப் பாதுகாக்க ஒரு பெரியவர் கூடவே இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, சாலையைக் கடக்கும் முன் ஒரு அம்மா தன்னுடைய குட்டி பிள்ளையின் கையைப் பிடித்துக்கொண்டு போவார். ஆனால், பிள்ளை வளர வளர அவள் தனியாகவே சாலையைக் கடக்க அவளுடைய அம்மா விடுவார்; கடப்பதற்கு முன் இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு போக வேண்டும் என்று மட்டும் ஞாபகப்படுத்துவார். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாக ஆன பிறகு, பத்திரமாக சாலையைக் கடந்து போவது எப்படி என்று அவளே தெரிந்துகொள்வாள். ஒரு குழந்தை ஆபத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பெரியவர்களின் உதவி தேவை. அதேமாதிரி, முதிர்ச்சியில்லாத கிறிஸ்தவர்களுக்கு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களின் உதவி தேவை. யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைக் கெடுக்கிற ஆபத்துகளில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவும் நல்ல தீர்மானங்களை எடுக்கவும் அவர்களுக்கு உதவி தேவை. முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்களும் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு, யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள பைபிள் நியமங்களை ஆராய்ச்சி செய்கிறார்கள். பிறகு, அதற்கேற்றபடி நடக்கிறார்கள்.

பைபிள் நியமங்களைப் பயன்படுத்தி நல்ல முடிவுகளை எடுக்க முதிர்ச்சியில்லாத கிறிஸ்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் (பாரா 6)


7. ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவருக்கு யாருடைய உதவியும் தேவைப்படாதா?

7 அப்படியென்றால் ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவருக்கு யாருடைய உதவியுமே தேவைப்படாதா? கண்டிப்பாக அப்படியில்லை. முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களுக்கும் சிலசமயங்களில் உதவி தேவைப்படும். ஆனால் முதிர்ச்சியில்லாத கிறிஸ்தவர், தான் என்ன செய்யவேண்டும் என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும்... தனக்காக மற்றவர்கள் முடிவெடுக்க வேண்டும்... என்று எதிர்பார்ப்பார். முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் அப்படி நடந்துக்கொள்ள மாட்டார். முடிவெடுப்பதற்கு முன்பு அனுபவமுள்ள ஒருவரிடம் ஆலோசனை கேட்டாலும், தான் எடுக்கிற முடிவுக்கு தான்தான் பொறுப்பு என்பதைப் புரிந்து வைத்திருப்பார். “ஒவ்வொருவனும் அவனவன் பாரத்தை சுமப்பான்” என்று அவருக்குத் தெரியும்.— கலா. 6:5.

8. முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் எப்படி ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமாக நடந்துகொள்வார்கள்?

8 நம் எல்லாருடைய தோற்றமும் ஒரேமாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறோம். அதேமாதிரி, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களுக்கும் வேறு வேறு குணங்கள் இருக்கும். சிலர் ரொம்ப ஞானமாக நடந்துகொள்வார்கள். ஒருசிலர் தைரியமாக இருப்பார்கள். சிலருக்குத் தாராள மனசு இருக்கும், இன்னும் சிலர் அனுதாபத்தோடு நடந்துகொள்வார்கள். அதுமட்டுமல்ல, ஒரே மாதிரியான சூழ்நிலையில் இரண்டு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் வெவ்வேறு முடிவுகளை எடுக்கலாம்; இரண்டுமே பைபிளின்படி சரியாகவும் இருக்கலாம். குறிப்பாக, மனசாட்சியின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் இப்படி நடக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், மற்றவர்கள் செய்வது சரி அல்லது தவறு என்று முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் நியாயந்தீர்க்க மாட்டார். அதற்குப் பதிலாக, ஒற்றுமையாக இருப்பதற்குக் கடினமாக முயற்சி செய்வார்.—ரோ. 14:10; 1 கொ. 1:10.

ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக எப்படி ஆகலாம்?

9. நாம் தானாகவே முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆகிவிடுவோமா? விளக்குங்கள்.

9 நாட்கள் போகப்போக, ஒரு குழந்தை தானாகவே வளர்ந்து பெரிய ஆளாக ஆகும். ஆனால், யெகோவாவோடு இருக்கிற பந்தத்தில் வளர்வது அப்படி கிடையாது; அதற்கு முயற்சி தேவை! உதாரணத்துக்கு, கொரிந்துவிலிருந்த சகோதர சகோதரிகளை எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் எடுத்தார்கள். அவர்களுக்குக் கடவுளுடைய சக்தியும் கிடைத்தது. அப்போஸ்தலன் பவுலிடமிருந்தும் அவர்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டார்கள். (அப். 18:8-11) ஆனால், ஞானஸ்நானம் எடுத்து சில வருஷங்கள் ஆன பிறகும் அவர்களில் நிறைய பேர் முதிர்ச்சி இல்லாதவர்களாகத்தான் இருந்தார்கள். (1 கொ. 3:2) இதிலிருந்து நமக்கு என்ன பாடம்?

10. முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (யூதா 20)

10 முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆக வேண்டுமென்றால், முதலில் அதற்கான ஆசையை வளர்த்துக்கொள்ள வேண்டும். ‘அனுபவமில்லாமல் இருக்க ஆசைப்படுகிற’ ஒருவர் எந்த முன்னேற்றமும் செய்ய மாட்டார். (நீதி. 1:22) யெகோவாவோடு இருக்கிற பந்தத்தில் ஒரு குழந்தை மாதிரிதான் இருப்பார். இதை யோசித்துப் பாருங்கள்: ஒரு நபர் வளர்ந்து பெரியவரான பிறகும், எந்த முடிவுகளும் எடுக்காமல் எல்லாவற்றுக்காகவும் அப்பா அம்மாவையே நம்பியிருந்தால் அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அப்படிப்பட்ட ஒருவரை மாதிரி இருக்க நீங்கள் ஆசைப்படுவீர்களா? கண்டிப்பாக இல்லை. ஆன்மீக வளர்ச்சியும் அப்படித்தான். உங்கள் முன்னேற்றத்துக்கு நீங்கள்தான் பொறுப்பு! (யூதா 20-ஐ வாசியுங்கள்.) முதிர்ச்சியை நோக்கி வளர வேண்டும் என்ற குறிக்கோளை நீங்கள் வைத்திருந்தால், அதற்குத் தேவையான “ஆர்வத்தையும் வல்லமையையும்” கொடுக்க சொல்லி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்.—பிலி. 2:13.

11. முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆவதற்கு யெகோவா நமக்கு எப்படியெல்லாம் உதவுகிறார்? (எபேசியர் 4:11-13)

11 நாம் தானாகவே ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆக வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பதில்லை. நமக்கு உதவ மேய்ப்பர்களையும் போதகர்களையும் கொடுத்திருக்கிறார். “கிறிஸ்து எந்தளவுக்கு முதிர்ச்சி நிறைந்தவராக இருக்கிறாரோ அந்தளவுக்கு முழு வளர்ச்சி” அடைய அவர்கள் நமக்கு உதவுகிறார்கள். (எபேசியர் 4:11-13-ஐ வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுக்கிறார்; ‘கிறிஸ்துவின் சிந்தையை’ வளர்த்துக்கொள்ள அது நமக்கு உதவுகிறது. (1 கொ. 2:14-16) யெகோவா நமக்கு நான்கு சுவிசேஷ புத்தகங்களையும் கொடுத்திருக்கிறார். இயேசு பூமியிலிருந்தபோது எப்படியெல்லாம் யோசித்தார், பேசினார், நடந்துகொண்டார் என்று அவற்றில் இருக்கிறது. இயேசுவை மாதிரியே யோசிக்கும்போதும் நடந்துகொள்ளும்போதும் நம்மால் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆக முடியும்.

திட உணவு எப்படி உதவும்?

12. ‘கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படை போதனைகள்’ என்னென்ன?

12 முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆக, “கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படை போதனைகளை” மட்டுமே, அதாவது அடிப்படை பைபிள் சத்தியங்களை மட்டுமே, கற்றுக்கொண்டால் போதாது. மனம் திருந்துதல், விசுவாசம், ஞானஸ்நானம், உயிர்த்தெழுதல் போன்றவை அடிப்படை சத்தியங்கள். (எபி. 6:1, 2) இந்த மாதிரியான சத்தியங்கள்தான் கிறிஸ்தவத்துக்கு அஸ்திவாரமாக இருக்கிறது. அதனால்தான், அப்போஸ்தலன் பேதுருவும் பெந்தெகோஸ்தே பண்டிகையின்போது மக்களிடம் இந்த விஷயங்களைப் பற்றி பேசினார். (அப். 2:32-35, 38) இயேசுவின் சீஷராக ஆக, நாமும் இந்த அடிப்படை சத்தியங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். சொல்லப்போனால், உயிர்த்தெழுதலை ஏற்றுக்கொள்ளாத ஒருவர் கிறிஸ்தவராக இருக்க முடியாது என்று பவுல் சொன்னார். (1 கொ. 15:12-14) ஆனால், இந்த அடிப்படை சத்தியங்கள் மட்டும் போதும் என்று நாம் இருந்துவிடக் கூடாது.

13. எபிரெயர் 5:14-ல் சொல்லப்பட்டிருக்கிற திட உணவிலிருந்து நன்மையடைய என்ன செய்ய வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)

13 திட உணவு என்பது அடிப்படை பைபிள் சத்தியங்களைப் போல் இல்லை. அதில் யெகோவாவுடைய சட்டங்கள் மட்டுமல்ல, அதற்கு அடிப்படையாக இருக்கிற நியமங்களும் உட்பட்டிருக்கிறது. அதை வைத்து யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். திட உணவிலிருந்து நாம் முழுமையாக நன்மையடைய, பைபிளைப் படிக்க வேண்டும், படித்ததை ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும்; அதன்படி நடக்க கடினமாக முயற்சி செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி முடிவெடுக்க நாம் கற்றுக்கொள்வோம். cஎபிரெயர் 5:14-ஐ வாசியுங்கள்.

யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி முடிவுகளை எடுக்க திட உணவு நமக்கு உதவுகிறது (பாரா 13) d


14. முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆக பவுல் எப்படி கொரிந்து சபையில் இருந்தவர்களுக்கு உதவினார்?

14 ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி பைபிளில் எந்தவொரு சட்டமும் இல்லையென்றால், நல்ல முடிவு எடுப்பது முதிர்ச்சியில்லாத கிறிஸ்தவர்களுக்கு கஷ்டமாக இருக்கும். அந்தமாதிரி சமயங்களில், தங்களுடைய இஷ்டத்துக்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர்கள் நினைக்கலாம். இன்னும் சிலர், எந்தவொரு சட்டமும் தேவைப்படாத சூழ்நிலைகளில்கூட சட்டத்தை எதிர்பார்க்கலாம். உதாரணத்துக்கு, சிலைக்குப் படைக்கப்பட்ட உணவை சாப்பிடலாமா வேண்டாமா என்பதற்கு ஒரு சட்டத்தைக் கொடுக்க சொல்லி கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்கள் பவுலிடம் கேட்டார்கள். அந்த சமயத்தில், அவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று பவுல் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, மனசாட்சியின் அடிப்படையில் அவர்கள் முடிவெடுக்க வேண்டும் என்றும் ஒவ்வொருவருக்கும் “தேர்ந்தெடுக்கிற உரிமை” இருக்கிறது என்றும் சொன்னார். நல்ல முடிவு எடுப்பதற்கு உதவும் சில பைபிள் நியமங்களை அவர்களுக்குக் காட்டினார். அந்த நியமங்களின்படி முடிவெடுக்கும்போது அவர்களுடைய மனசாட்சியும் உறுத்தாது மற்றவர்களுக்குத் தடைக்கல்லாகவும் இருக்க மாட்டார்கள். (1 கொ. 8:4, 7-9) தங்களுக்காக மற்றவர்களை முடிவெடுக்க சொல்லாமல்... எல்லாவற்றுக்கும் சட்டங்களை எதிர்பார்க்காமல்... தாங்களாகவே பகுத்தறிவைப் பயன்படுத்தி நல்ல முடிவு எடுப்பதற்கு பவுல் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தார். இப்படி, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆவதற்கு அவர்களுக்கு உதவினார்.

15. எபிரெய கிறிஸ்தவர்கள் முதிர்ச்சியுள்ளவர்களாக ஆவதற்கு பவுல் எப்படி உதவி செய்தார்?

15 எபிரெயர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்திலிருந்தும் நாம் நல்ல பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். அங்கே இருந்த சிலர் முதிர்ச்சியுள்ளவர்களாக ஆவதை நிறுத்திவிட்டார்கள். அவர்கள் “திட உணவு சாப்பிடுகிறவர்களாக அல்ல, திரும்பவும் பால் குடிக்கிறவர்களாக” ஆகிவிட்டார்கள். (எபி. 5:12) சபை மூலமாக சொல்லிக்கொடுக்கப்பட்ட புதுப்புது விஷயங்களை அவர்கள் கற்றுக்கொள்ளவும் இல்லை; ஏற்றுக்கொள்ளவும் இல்லை. (நீதி. 4:18) உதாரணத்துக்கு, கிட்டத்தட்ட 30 வருஷங்களுக்கு முன்பே இயேசுவின் பலி திருச்சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தது. ஆனாலும், அங்கிருந்த நிறைய யூத கிறிஸ்தவர்கள் திருச்சட்டத்தை இன்னும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். (ரோ. 10:4; தீத். 1:10) யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள அவர்களுக்கு 30 வருஷங்கள் இருந்தன. அது ஒரு பெரிய காலப்பகுதிதான்! இருந்தாலும் அவர்கள் அதை செய்யவில்லை. அதனால்தான் பவுல் இப்போது அவர்களுக்கு ஆழமான சத்தியங்களை சொல்லிக்கொடுத்தார். அதை ஏற்றுக்கொள்வதற்கு உதவியும் செய்தார். இயேசு மூலமாக யெகோவாவை வணங்குகிற இந்தப் புதிய ஏற்பாடு எவ்வளவு சிறந்தது என்பதை பவுல் அவர்களுக்குப் புரிய வைத்தார். அதுமட்டுமல்ல, யூதர்களிடமிருந்து வந்த எதிர்ப்பை சமாளிப்பதற்கும் தைரியமாக பிரசங்கிப்பதற்கும் அந்தக் கடிதம் அவர்களுக்கு உதவி செய்தது.—எபி. 10:19-23.

முதிர்ச்சியை அடைந்துவிட்டதாக நினைத்து உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்

16. நாம் முதிர்ச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிற அதேசமயத்தில் வேறு எதையும் செய்ய வேண்டும்?

16 நாம் முதிர்ச்சியுள்ளவர்களாக ஆவதற்கு மட்டுமல்ல, தொடர்ந்து அப்படியே இருப்பதற்கும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். ‘நான் ஏற்கெனவே முதிர்ச்சியாகத்தான் இருக்கிறேன், இதற்குமேல் நான் எதுவும் செய்யத் தேவையில்லை’ என்று நாம் யோசிக்கக் கூடாது. (1 கொ. 10:12) யெகோவாவோடு இருக்கிற பந்தத்தில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கிறோமா என்பதை நாம் ‘எப்போதும் சோதித்துப் பார்க்க’ வேண்டும்.—2 கொ. 13:5.

17. தொடர்ந்து முதிர்ச்சியுள்ளவர்களாக இருப்பது எந்தளவுக்கு முக்கியம் என்பதை கொலோசெயர்களுக்கு பவுல் எழுதிய கடிதம் எப்படிக் காட்டுகிறது?

17 கொலோசெயர்களுக்கு எழுதிய கடிதத்தில் தொடர்ந்து முதிர்ச்சியுள்ளவர்களாக இருப்பது எந்தளவுக்கு முக்கியம் என்பதை பவுல் காட்டினார். அங்கே இருந்த கிறிஸ்தவர்கள் ஏற்கெனவே முதிர்ச்சியுள்ளவர்களாகத்தான் இருந்தார்கள். இருந்தாலும், இந்த உலகத்தின் கருத்துக்களை நம்பி ஏமாந்துவிடாமல் இருக்க வேண்டும் என்று பவுல் அவர்களை எச்சரித்தார். (கொலோ. 2:6-10) அதுமட்டுமல்ல, எப்பாப்பிரா என்ற சகோதரரும், சபையிலிருந்த எல்லாரும் “கடைசிவரை நிலைத்து நிற்க வேண்டும்,” அதாவது முதிர்ச்சியோடு இருக்க வேண்டும் என்று தொடர்ந்து ஜெபம் செய்தார். இவர் சபையிலிருந்த சகோதர சகோதரிகளை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார். (கொலோ. 4:12) பவுல், எப்பாப்பிரா இரண்டு பேருமே ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்கள். அதாவது, ஒருவர் தொடர்ந்து முதிர்ச்சியுள்ளவராக இருப்பதற்கு கடவுளுடைய உதவி தேவைதான்; இருந்தாலும், அந்த நபரும் தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். கொலோசெயில் இருந்த கிறிஸ்தவர்கள் பிரச்சினைகள் மத்தியிலும் இதை செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

18. ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவருக்கு என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது? (படத்தையும் பாருங்கள்.)

18 ஜாக்கிரதையாக இல்லையென்றால் ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் யெகோவாவுடைய ஆதரவை நிரந்தரமாக இழந்துவிட வாய்ப்பிருக்கிறது என்று பவுல் எபிரெய கிறிஸ்தவர்களை எச்சரித்தார். ஒரு கிறிஸ்தவரின் இதயம் கடினமாகிவிட்டால், அவருக்கு யெகோவா சொல்வதைக் கேட்கவே விருப்பம் இருக்காது. அதற்குமேலும் அவரால் மனம் திருந்தவோ யெகோவாவின் மன்னிப்பைப் பெறவோ முடியாது. நல்லவேளை, எபிரெய கிறிஸ்தவர்கள் அந்த நிலைமைக்குப் போய்விடவில்லை! (எபி. 6:4-9) ஆனால், இன்றைக்கு இருக்கிற செயலற்றவர்கள் அல்லது சபை நீக்கம் செய்யப்பட்டவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்கள் மனம் திருந்தினால் யெகோவா அவர்களை ஏற்றுக்கொள்வாரா? கண்டிப்பாக. ஏனென்றால், பவுல் யாரைப் பற்றி எழுதினாரோ அவர்களைப் போல் இவர்கள் இல்லை. மனத்தாழ்மையோடு மனம் திருந்தியிருக்கிறார்கள்! இருந்தாலும் அவர்கள் யெகோவாவிடம் திரும்பி வரும்போது அவர் தருகிற உதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும். (எசே. 34:15, 16) ஒரு முதிர்ச்சியுள்ள சகோதரரோ சகோதரியோ அவர்களுக்கு உதவ மூப்பர்களும் ஏற்பாடு செய்யலாம்.

தன்னிடம் மறுபடியும் நெருங்கிவர விரும்புகிறவர்களுக்கு யெகோவா உதவுகிறார் (பாரா 18)


19. நாம் என்ன குறிக்கோளை வைக்க வேண்டும்?

19 முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆவதற்கு நீங்கள் முயற்சி செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்றால், உங்களால் நிச்சயமாக அந்தக் குறிக்கோளை அடைய முடியும். தொடர்ந்து திட உணவை எடுத்துக்கொள்ளுங்கள், அதாவது ஆழமான பைபிள் சத்தியங்களைப் படியுங்கள். யெகோவா யோசிக்கிற மாதிரியே யோசிக்க கடினமாக முயற்சி செய்யுங்கள். ஒருவேளை, நீங்கள் ஏற்கெனவே ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆகியிருந்தால், தொடர்ந்து அப்படியே இருக்க உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்.

உங்கள் பதில் என்ன?

  • முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் எப்படி யோசிப்பார், நடந்துகொள்வார்?

  • நாம் எப்படி ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆகலாம்?

  • முதிர்ச்சியை அடைந்துவிட்டோம் என்று நினைத்து ஏன் நம்மையே ஏமாற்றிக்கொள்ளக் கூடாது?

பாட்டு 65 முன்னே செல்வோமே!

a எபிரெய வேதாகமத்தில் “முதிர்ச்சி” மற்றும் “முதிர்ச்சியில்லாமல் இருப்பது” என்ற வார்த்தைகள் நேரடியாகப் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், அது வேறு வார்த்தைகளில் விளக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு நீதிமொழிகள் புத்தகம், அனுபவம் இல்லாதவர்களையும் இளைஞர்களையும் ஞானம் உள்ளவர்களோடும் புத்தி உள்ளவர்களோடும் ஒப்பிட்டுப் பேசுகிறது.—நீதி. 1:4, 5.

b jw.org மற்றும் JW லைப்ரரியில் இருக்கும் “வேறுசில தலைப்புகள்” என்ற தொடர் கட்டுரையில் இருக்கும் “பொய்யான செய்தியை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

c இந்த இதழில் இருக்கும் “படிப்பு ப்ராஜெக்ட்” பகுதியைப் பாருங்கள்.

d பட விளக்கம்: பொழுதுபோக்கை தேர்ந்தெடுக்கும்போது ஒரு சகோதரர் பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட நியமங்களைப் பயன்படுத்தி நல்ல முடிவை எடுக்கிறார்.