Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 15

பாட்டு 124 என்றும் உண்மையுள்ளோராய்

யெகோவாவுடைய அமைப்பை முழுமையாக நம்புங்கள்

யெகோவாவுடைய அமைப்பை முழுமையாக நம்புங்கள்

“உங்களுக்குக் கடவுளுடைய வார்த்தையைக் கற்றுக்கொடுத்து உங்களை வழிநடத்துகிறவர்களை நினைத்துப் பாருங்கள்.”எபி. 13:7.

என்ன கற்றுக்கொள்வோம்?

யெகோவாவுடைய அமைப்பின்மேல் இருக்கும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்வோம்.

1. முதல் நூற்றாண்டில், யெகோவாவுடைய மக்கள் எப்படி ஒழுங்கான விதத்தில் செயல்பட்டார்கள்?

 யெகோவா தன்னுடைய மக்களுக்கு வேலையைக் கொடுக்கும்போதெல்லாம், அதை அவர்கள் ஒழுங்கான விதத்தில் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். (1 கொ. 14:33) உதாரணத்துக்கு, உலகம் முழுவதும் நல்ல செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பது யெகோவாவுடைய விருப்பம். (மத். 24:14) இந்த வேலையை வழிநடத்துகிற பொறுப்பை இயேசுவின் கையில் யெகோவா கொடுத்திருக்கிறார். இந்த வேலை, ஒரு ஒழுங்கான விதத்தில் நடக்கிற மாதிரி இயேசு பார்த்துக்கொள்கிறார். முதல் நூற்றாண்டில், நிறைய இடங்களில் சபைகள் உருவானது. அந்த சபைகளில் இருந்தவர்களை வழிநடத்துவதற்காக மூப்பர்கள் நியமிக்கப்பட்டார்கள். (அப். 14:23) அதோடு, எருசலேமில் ஒரு குழு செயல்பட்டது. அதில் அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் இருந்தார்கள். அவர்கள் எடுத்த சில முக்கியமான முடிவுகளுக்கு எல்லா சபைகளும் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. (அப். 15:2; 16:4) அப்படிக் கீழ்ப்படிந்ததால், “சபையில் இருந்தவர்கள் விசுவாசத்தில் பலப்பட்டு வந்தார்கள், அவர்களுடைய எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வந்தது.”—அப். 16:5.

2. 1919-லிருந்து யெகோவா எப்படித் தன்னுடைய மக்களுக்கு வழிநடத்துதலையும் ஆன்மீக உணவையும் கொடுத்து வந்திருக்கிறார்?

2 இன்றும் தன்னுடைய மக்கள் ஒரு ஒழுங்கான விதத்தில் செயல்படுவதற்கு யெகோவா உதவுகிறார். 1919-லிருந்து, அபிஷேகம் செய்யப்பட்ட ஆண்கள் இருக்கிற ஒரு சின்ன தொகுதியைப் பயன்படுத்தி இயேசு ஊழிய வேலையை ஒழுங்கமைத்து வருகிறார். அவர்கள்மூலம் தன்னுடைய சீஷர்களுக்கு ஆன்மீக உணவையும் கொடுத்து வருகிறார். a (லூக். 12:42) இந்தத் தொகுதி செய்கிற வேலைகளை யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!—ஏசா. 60:22; 65:13, 14.

3-4. (அ) ஒழுங்கான விதத்தில் செயல்படுவதால் நமக்கு என்ன நன்மை என்பதை உதாரணத்தோடு விளக்குங்கள். (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்?

3 நாம் ஒரு ஒழுங்கான விதத்தில் செயல்படவில்லை என்றால், இயேசு கொடுத்த வேலையை செய்ய முடியாமல் போய்விடும். (மத். 28:19, 20) உதாரணத்துக்கு, எந்தெந்த சபை எந்தெந்த இடங்களில் ஊழியம் செய்ய வேண்டும் என்று எந்த ஒரு ஒழுங்கமைப்பும் இல்லையென்றால் என்ன ஆகும்? யாருக்கு எங்கே ஊழியம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அங்கே ஊழியம் செய்துகொண்டிருப்பார்கள். ஒரே இடத்தில், நிறைய சகோதர சகோதரிகள் திரும்பத் திரும்ப ஊழியம் செய்ய வாய்ப்பிருக்கிறது. அதேசமயத்தில், வேறு சில பகுதிகளில் ஊழியம் செய்யாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. ஒழுங்கான விதத்தில் செயல்படுவதால் வேறு என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்று நீங்களும் யோசித்துப் பாருங்கள்.

4 ஒழுங்கான விதத்தில் செயல்படுவதற்கு இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது ஒரு நல்ல முன்மாதிரியை வைத்துவிட்டுப் போனார். இந்தக் கட்டுரையில், அவர் என்ன முன்மாதிரியை வைத்தார் என்று பார்ப்போம். அவருடைய முன்மாதிரியை நம்முடைய அமைப்பு எப்படிப் பின்பற்றுகிறது என்றும், யெகோவாவின் அமைப்பை நம்புவதை எப்படிக் காட்டலாம் என்றும் பார்ப்போம்.

இயேசுவின் முன்மாதிரியை நம் அமைப்பு பின்பற்றுகிறது

5. இயேசுவின் முன்மாதிரியை நம் அமைப்பு பின்பற்றுகிற ஒரு வழி என்ன? (யோவான் 8:28)

5 என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்பதை இயேசு தன்னுடைய பரலோக அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டார். இயேசு மாதிரியே, இன்று யெகோவாவுடைய அமைப்பும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து நமக்கு வழிநடத்துதலை கொடுக்கிறது. எது சரி, எது தவறு என்று நாம் புரிந்துகொள்ள அதிலிருந்து நமக்கு சொல்லிக்கொடுக்கிறது. (யோவான் 8:28-ஐ வாசியுங்கள்; 2 தீ. 3:16, 17) கடவுளுடைய வார்த்தையைத் தினமும் படிக்க சொல்லியும், அதில் இருப்பதைக் கடைப்பிடிக்க சொல்லியும் நம்மை அடிக்கடி ஞாபகப்படுத்துகிறது. இந்த ஆலோசனைக்குக் கீழ்ப்படிவதால் நமக்கு என்ன நன்மை?

6. பைபிளை ஆழமாக படிக்கும்போது எதைப் புரிந்துகொள்ள முடியும்?

6 அமைப்பு வெளியிட்டிருக்கும் பிரசுரங்களை வைத்து பைபிளை ஆழமாக படிப்பது நமக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருக்கும். உதாரணத்துக்கு, பைபிள் போதனைகளை அமைப்பு கொடுக்கும் வழிநடத்துதலோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அப்படிப் பார்க்கும்போது, பைபிள் அடிப்படையில்தான் நம்முடைய அமைப்பு வழிநடத்துதலைக் கொடுக்கிறது என்று புரிந்துகொள்வீர்கள். இப்படி செய்வது, அமைப்புமேல் இருக்கும் நம்பிக்கையை இன்னும் பலமாக்கும்.—ரோ. 12:2.

7. இயேசு எதைப் பற்றி பிரசங்கித்தார், இன்று யெகோவாவுடைய அமைப்பு அவருடைய முன்மாதிரியை எப்படிப் பின்பற்றுகிறது?

7 இயேசு “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை” பிரசங்கித்தார். (லூக். 4:43, 44) அதோடு, அவருடைய சீஷர்களும் இந்த வேலையை செய்ய வேண்டும் என்று கட்டளை கொடுத்தார். (லூக். 9:1, 2; 10:8, 9) இன்றும் யெகோவாவுடைய அமைப்பில் இருக்கிற எல்லாரும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிக்கிறார்கள். அவர்கள் எங்கிருந்தாலும் சரி, அமைப்பில் அவர்களுக்கு எவ்வளவு பொறுப்புகள் இருந்தாலும் சரி!

8. நமக்கு என்ன பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது?

8 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிக்க நமக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது எவ்வளவு பெரிய விஷயம்! யார் வேண்டுமானாலும் இந்த வேலையை செய்துவிட முடியாது. இயேசு பூமியில் இருந்தபோது அவரைப் பற்றி பேசுவதற்கு பேய்கள் முயற்சி செய்தன. ஆனால், இயேசு அவற்றைப் பேசவிடாமல் தடுத்தார். (லூக். 4:41) இன்றைக்கும், ஒரு நபர் நம்முடன் சேர்ந்து ஊழியம் செய்ய வேண்டும் என்றால், அவர் அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். எங்கெல்லாம் முடியுமோ... எப்போதெல்லாம் முடியுமோ... அப்போதெல்லாம் நல்ல செய்தியை சொல்வதன் மூலம் இந்த வேலையைப் பெரிதாக நினைக்கிறோம் என்பதை நாம் காட்டலாம். இயேசு மாதிரியே நம்முடைய குறிக்கோளும், மக்களுடைய மனதில் சத்திய விதைகளை விதைத்து, அதற்கு தண்ணீர் ஊற்றுவதுதான்.—மத். 13:3, 23; 1 கொ. 3:6.

9. கடவுளுடைய பெயரை நம்முடைய அமைப்பு எப்படி மக்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறது?

9 இயேசு கடவுளுடைய பெயரை எல்லாருக்கும் சொன்னார். ஒருசமயம், தன்னுடைய அப்பாவிடம் ஜெபம் செய்தபோது, “உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன்” என்று இயேசு சொன்னார். (யோவா. 17:26) இன்றைக்கும் யெகோவாவின் அமைப்பு கடவுளுடைய பெயரை எல்லாருக்கும் தெரியப்படுத்த நிறைய முயற்சிகளை எடுக்கிறது. அதில் ஒன்றுதான் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள். ஆரம்பத்தில் பைபிள் எழுதப்பட்டபோது கடவுளுடைய பெயர் எங்கெல்லாம் இருந்ததோ, அந்த இடங்களில் எல்லாம் கடவுளுடைய பெயர் மறுபடியும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த பைபிள், முழுமையாகவோ பகுதியாகவோ இப்போது 270-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது. கடவுளுடைய பெயர் மறுபடியும் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பற்றிய சில விவரங்கள் இந்த பைபிளில் இணைப்பு A4 மற்றும் A5-ல் இருக்கின்றன. கிரேக்க வேதாகமத்தில் 237 தடவை கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்குக் கூடுதல் ஆதாரங்கள் இணைப்பு C-ல் (ஆங்கில ஆராய்ச்சி பைபிள்) இருக்கின்றன.

10. மியான்மரில் இருக்கும் பெண் சொன்னதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

10 கடவுளுடைய பெயரை எல்லாரும் தெரிந்துகொள்வதற்கு, நாமும் இயேசு மாதிரியே மற்றவர்களுக்கு உதவுகிறோம். மியான்மரில் இருக்கிற 67 வயது பெண் ஒருவர் கடவுளின் பெயரை முதன்முதலில் தெரிந்துகொண்டபோது அழுதுவிட்டார். “வாழ்க்கையிலேயே முதல் தடவையாக கடவுளுடைய பெயர் யெகோவா என்று தெரிந்துகொண்டேன். . . . நான் தெரிந்துகொள்ள வேண்டிய ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தை எனக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறீர்கள்” என்று அவர் சொன்னார். இந்த அனுபவம் காட்டுகிற மாதிரி, நல்ல மக்கள் கடவுளின் பெயரைத் தெரிந்துகொள்ளும்போது அவர்களுடைய வாழ்க்கையே மாறுகிறது.

யெகோவாவின் அமைப்புக்குத் தொடர்ந்து மதிப்பு கொடுங்கள்

11. யெகோவாவுடைய அமைப்பை உயர்வாக மதிப்பதை மூப்பர்கள் எப்படிக் காட்டலாம்? (படத்தையும் பாருங்கள்.)

11 கடவுளுடைய அமைப்பை உயர்வாக மதிப்பதை மூப்பர்கள் எப்படிக் காட்டலாம்? அமைப்பிடமிருந்து வழிநடத்துதல்கள் கிடைக்கும்போது மூப்பர்கள் அதைக் கவனமாகப் படிக்க வேண்டும். பிறகு, அதைக் கடைப்பிடிக்க அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். வெறுமனே கூட்டங்களை எப்படி நடத்த வேண்டும்... எப்படி ஜெபம் செய்ய வேண்டும்... என்பதைப் பற்றி மட்டும் அவர்களுக்கு வழிநடத்துதல்கள் கிடைப்பதில்லை. ஆடுகளை எப்படிக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைப்பு அவர்களுக்கு சொல்கிறது. மூப்பர்கள் அமைப்பின் வழிநடத்துதல்களை அப்படியே கடைப்பிடித்தால் சபையில் இருக்கிறவர்கள் யெகோவாவுடைய அன்பையும் பாதுகாப்பையும் உணர்வார்கள்.

யெகோவாவின் அமைப்பு தரும் வழிநடத்துதல்களை உயர்வாக மதிக்க மூப்பர்கள் உதவுகிறார்கள் (பாரா 11) b


12. (அ) நம்மை வழிநடத்துகிறவர்களுக்கு நாம் ஏன் ஒத்துழைக்க வேண்டும்? (எபிரெயர் 13:7, 17) (ஆ) நாம் ஏன் மூப்பர்களிடம் இருக்கிற நல்ல குணங்களை மட்டுமே பார்க்க வேண்டும்?

12 மூப்பர்களிடமிருந்து ஏதாவது வழிநடத்துதல் கிடைக்கும்போது நாம் அதற்கு மனதார கீழ்ப்படிய வேண்டும். அப்படி செய்யும்போது, அவர்களும் தங்களுடைய வேலைகளை சுலபமாக செய்வார்கள். சொல்லப்போனால், நம்மை வழிநடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடக்க வேண்டும் என்று பைபிள்கூட சொல்கிறது. (எபிரெயர் 13:7, 17-ஐ வாசியுங்கள்.) ஆனால் சிலசமயங்களில் இது கஷ்டமாக இருக்கலாம். ஏன்? ஏனென்றால் அவர்களும் பாவ இயல்புள்ள மனிதர்கள்தான். ஒருவேளை, அவர்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களைப் பார்க்காமல் குறைகளையே பார்க்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? ஒரு விதத்தில் நம் எதிரிகளுக்கு நாம் உதவுவது போல் ஆகிவிடும். எப்படி? யெகோவாவுடைய அமைப்புமேல் இருக்கிற நம்பிக்கையைக் கெடுத்துப்போட வேண்டும் என்றுதான் எதிரிகள் நினைக்கிறார்கள். அப்படியென்றால், எதிரிகள் பரப்புகிற பொய்களைக் கண்டுபிடிப்பதற்கும் அதையெல்லாம் ஒதுக்கித்தள்ளுவதற்கும் நாம் என்ன செய்யலாம்?

மற்றவர்கள் உங்கள் நம்பிக்கையை உடைக்க விடாதீர்கள்

13. கடவுளுடைய எதிரிகள் எப்படி அமைப்பின் நல்ல பெயரைக் கெடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள்?

13 அமைப்பு செய்கிற நல்ல விஷயங்களை எதிரிகள் கெட்டது போல் காட்ட முயற்சி செய்கிறார்கள். உதாரணத்துக்கு, உடலளவிலும், ஒழுக்க விஷயத்திலும், வணக்க விஷயத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. ஒருவேளை, யாராவது மனம் திருந்தாமல் தொடர்ந்து அருவருப்பான விஷயங்களை செய்துவந்தால், அந்த நபர் சபையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அது சொல்கிறது. (1 கொ. 5:11-13; 6:9, 10) பைபிள் சொல்கிற இந்தக் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிகிறோம். ஆனால், நம்முடைய எதிரிகள், நாம் மற்றவர்களோடு பொறுத்துப்போவதில்லை... மற்றவர்களை வெறுக்கிறோம்... அன்பு காட்டுவதில்லை... என்றெல்லாம் நம்மைக் குறை சொல்கிறார்கள்.

14. அமைப்பைப் பற்றி சொல்லப்படுகிற வதந்திகளுக்குப் பின்னால் இருப்பது யார்?

14 உண்மையான எதிரி யார் என்பதை மனதில் வையுங்கள். நம் அமைப்பைப் பற்றிய பொய்களையும் வதந்திகளையும் சாத்தான்தான் பரப்பி விடுகிறான். அவன் ‘பொய்க்குத் தகப்பன்’ என்று பைபிள் சொல்கிறது. (யோவா. 8:44; ஆதி. 3:1-5) அவன் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறவர்களைப் பயன்படுத்தி அமைப்பைப் பற்றிய கட்டுக்கதைகளைப் பரப்பி விடுகிறான். முதல் நூற்றாண்டிலும் இதுதான் நடந்தது.

15. மதத் தலைவர்கள் இயேசுவிடமும் அவருடைய சீஷர்களிடமும் எப்படி நடந்துகொண்டார்கள்?

15 கடவுளுடைய மகனாக இருந்த இயேசு, எந்தத் குறையும் இல்லாமல் பரிபூரணமாக இருந்தார்; பிரம்மாண்டமான அற்புதங்களை செய்தார். ஆனால், அப்படிப்பட்டவரை பற்றியே சாத்தான் பக்கம் இருந்தவர்கள் நிறையப் பொய்களைப் பரப்பினார்கள். உதாரணத்துக்கு, இயேசு பேய்களை விரட்டியபோது அவர் “பேய்களுடைய தலைவனின் உதவியால்தான்” அதை செய்கிறார் என்று மதத் தலைவர்கள் கதை கட்டினார்கள். (மாற். 3:22) பிறகு, இயேசு விசாரணை செய்யப்பட்ட சமயத்தில் அவர் கடவுளுடைய பெயரை நிந்தித்ததால் அவரைக் கொலை செய்ய வேண்டும் என்று சொல்லி மக்களைத் தூண்டிவிட்டார்கள். (மத். 27:20) இயேசுவின் சீஷர்கள் நல்ல செய்தியை சொன்னபோது, எதிரிகள் மக்களின் மனதைக் கெடுத்து அந்த சீஷர்களுக்கு “எதிராக அவர்களைத் தூண்டிவிட்டார்கள்,” அதனால் மக்கள் அவர்களைத் துன்புறுத்தினார்கள். (அப். 14:2, 19) டிசம்பர் 1, 1998-ல் வந்த காவற்கோபுரம் அப்போஸ்தலர் 14:2-ஐப் பற்றி இப்படி சொன்னது: “யூத எதிரிகள் அந்தச் செய்தியை தாங்கள் நிராகரித்ததோடு திருப்தியடைந்துவிடவில்லை. கிறிஸ்தவர்களுக்கு எதிராக மற்ற தேசத்து மக்களிடம் தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்தவும் முயற்சி செய்தார்கள். கிறிஸ்தவத்துக்கு எதிராக அவர்களுடைய பகைமை எந்தளவுக்கு இருந்திருக்க வேண்டும்!”

16. தவறான செய்திகளைக் கேள்விப்படும்போது நாம் எதை யோசித்துப் பார்க்க வேண்டும்?

16 சாத்தான் பொய் சொல்வதை நிறுத்தவே இல்லை. இன்றைக்கும் அவன் ‘உலகம் முழுவதையும் ஏமாற்றிக்கொண்டுதான்’ இருக்கிறான். (வெளி. 12:9) ஒருவேளை, அமைப்பைப் பற்றியோ நம்மை வழிநடத்துகிற சகோதரர்களைப் பற்றியோ நீங்கள் ஏதாவது தவறாக கேள்விப்பட்டால், முதல் நூற்றாண்டில் இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் எதிரிகள் எப்படி நடத்தினார்கள் என்று யோசியுங்கள். சொல்லப்போனால், யெகோவாவுடைய மக்கள் துன்புறுத்தப்படுவார்கள், அவர்களைப் பற்றி பொய்கள் பரப்பப்படும் என்று பைபிள் முன்பே சொன்னது. அதுதான் இன்றைக்கு நிறைவேறிக்கொண்டு வருகிறது. (மத். 5:11, 12) அதனால் இந்தப் பொய்களுக்குப் பின்னால் இருப்பவன் யார் என்பதைப் புரிந்துகொண்டு, தடுமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை உடனே செய்யுங்கள். அப்போது பொய்களை நம்பி ஏமாந்துவிட மாட்டீர்கள். அப்படியென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

17. கட்டுக்கதைகளை நம்பி மோசம்போய்விடாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்? (2 தீமோத்தேயு 1:13) (“ கட்டுக்கதைகள்—ஜாக்கிரதை!” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

17 கட்டுக்கதைகளை ஒதுக்கித்தள்ளுங்கள். கட்டுக்கதைகளை ஒதுக்கித்தள்ளுவதைப் பற்றி பவுல் தெளிவான அறிவுரையைக் கொடுத்தார். ‘கட்டுக்கதைகளுக்கு கவனம் செலுத்துகிறவர்களிடம்’ அப்படிச் ‘செய்யக் கூடாதென்று கட்டளையிட’ சொல்லி அவர் தீமோத்தேயுவிடம் சொன்னார். அதுமட்டுமல்ல, ‘கடவுளை அவமதிக்கிற கட்டுக்கதைகளை . . . ஒதுக்கித்தள்ளுங்கள்’ என்றும் சொல்ல சொன்னார். (1 தீ. 1:3, 4; 4:7) ஒரு குழந்தை தவழும்போது தன் கண்ணில் படுவதை எல்லாம் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். ஆனால் பெரியவர்கள் கண்டிப்பாக அப்படி செய்ய மாட்டார்கள். நாமும் கண்ணில் படும் கட்டுக்கதைகளைக் எல்லாம் மனதில் போட்டு மெல்லக் கூடாது. அதற்குப் பின்னால் இருப்பது யார் என்று புரிந்துகொண்டு அதை ஒதுக்கித்தள்ள வேண்டும். சத்தியத்தின் “பயனுள்ள வார்த்தைகளை” மட்டும்தான் நாம் கேட்க வேண்டும்.2 தீமோத்தேயு 1:13-ஐ வாசியுங்கள்.

18. யெகோவாவுடைய அமைப்பை உயர்வாக மதிக்கிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்?

18 இயேசுவுடைய முன்மாதிரியை அமைப்பு பின்பற்றும் மூன்று வழிகளை மட்டும்தான் இந்தக் கட்டுரையில் பார்த்தோம். பைபிளைப் படிக்கப் படிக்க இன்னும் நிறைய வழிகளைக் கண்டுபிடிக்க நீங்களே முயற்சி செய்யுங்கள். சபையில் இருக்கிற மற்றவர்களும் யெகோவாவுடைய அமைப்பை முழுமையாக நம்புவதற்கு உதவி செய்யுங்கள். அதேசமயத்தில், நீங்களும் யெகோவாவுக்கு உண்மையாக இருங்கள். யெகோவா தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்துகிற இந்த அமைப்போடு எப்போதும் சேர்ந்து செயல்படுங்கள். அப்படி செய்யும்போது நீங்கள் அமைப்பை உயர்வாக மதிக்கிறீர்கள் என்பதைக் காட்டுவீர்கள். (சங். 37:28) யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிற ஒரு குடும்பத்தில் நாமும் ஒருவராக இருப்பதை நினைத்து எப்போதும் சந்தோஷப்படலாம், பெருமைப்படலாம்!

உங்கள் பதில் என்ன?

  • கடவுளுடைய மக்கள் இன்றைக்கு எப்படி இயேசுவுடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள்?

  • யெகோவாவுடைய அமைப்பை உயர்வாக மதிப்பதை நாம் எப்படிக் காட்டலாம்?

  • கட்டுக்கதைகளைக் கேள்விப்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?

பாட்டு 103 மேய்ப்பர்கள்—கடவுள் தரும் பரிசு

a தூய வணக்கம்—பூமியெங்கும் என்ற புத்தகத்தில், பக்கங்கள் 102-103-ல் இருக்கிற, “1919 என்று எப்படிச் சொல்கிறோம்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.

b பட விளக்கம்: பொது ஊழியம் செய்வதற்கான ஏற்பாடுகளைப் பற்றி மூப்பர்கள் கலந்துபேசுகிறார்கள். தங்களுக்குப் பின்புறம் சுவர் இருப்பதுபோல் நிற்க சொல்லி கிடைத்த ஆலோசனையைத் தொகுதி கண்காணி பிரஸ்தாபிகளுக்கு சொல்கிறார்.