Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

தாவீது ராஜா தன்னுடைய படையில் ஏன் இஸ்ரவேலர்களாக இல்லாதவர்களை சேர்த்துக்கொண்டார்?

தாவீதின் படையில் வேறு தேசத்தை சேர்ந்த நிறைய வீரர்கள் இருந்தார்கள். அவர்களில் சிலர்: அம்மோனியனான சேலேக், ஏத்தியனான உரியா, மோவாபியனான இத்மா. a (1 நா. 11:39, 41, 46) அதுமட்டுமல்ல, “கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும் காத்” நகரத்தை சேர்ந்தவர்களும் அதில் இருந்தார்கள். (2 சா. 15:18) கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும், பெலிஸ்தியர்களுக்கு நெருங்கிய சொந்தக்காரர்களாக இருந்திருக்கலாம். (எசே. 25:16) காத் நகரமும் பெலிஸ்தியர்களின் ஒரு நகரம்தான்.—யோசு. 13:2, 3; 1 சா. 6:17, 18.

இஸ்ரவேலர்களாக இல்லாத இவர்களை தாவீது ஏன் தன்னுடைய படையில் சேர்த்திருந்தார்? ஏனென்றால், இவர்கள் எல்லாருமே தாவீதுக்கு விசுவாசமாக இருந்தார்கள்; முக்கியமாக, யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள். உதாரணத்துக்கு, கிரேத்தியர்களைப் பற்றியும் பிலேத்தியர்களைப் பற்றியும் தி நியூ இன்டர்பிரெட்டர்ஸ் டிக்ஷனரி ஆஃப் தி பைபிள் இப்படி சொல்கிறது: “இவர்கள், தாவீது ராஜாவாக ஆன பிறகு அவருடைய வாழ்க்கையில் வந்த ரொம்ப கஷ்டமான காலக்கட்டத்திலும் அவருக்கு உண்மையாக இருந்தார்கள்.” எப்படி சொல்லலாம்? சேபா என்ற “ஒரு கலகக்காரன்” தாவீது ராஜாவுக்கு எதிராக கலகம் செய்தபோது, “இஸ்ரவேல் ஆண்கள் எல்லாரும்” அவனோடு சேர்ந்துகொண்டு தாவீதை அம்போவென்று விட்டுவிட்டு போய்விட்டார்கள். ஆனாலும், கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும் தாவீதுக்கு உண்மையாக இருந்து அவனுடைய கலகத்துக்கு முடிவுகட்ட உதவி செய்தார்கள். (2 சா. 20:1, 2, 7) இன்னொரு சந்தர்ப்பத்தில், தாவீது ராஜாவுடைய மகன் அதோனியா ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்தான். அந்த சமயத்திலும், கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும் தாவீதுக்கு உண்மையாக இருந்தார்கள்; யெகோவா தேர்ந்தெடுத்த சாலொமோனை அடுத்த ராஜாவாக ஆக்க உதவினார்கள்.—1 ரா. 1:24-27, 38, 39.

காத் நகரத்தை சேர்ந்த ஈத்தாய் என்பவரும் தாவீதுக்கு உண்மையாக இருந்தார். தாவீது ராஜாவுக்கு எதிராக இஸ்ரவேலர்களை அப்சலோம் தூண்டிவிட்ட சமயத்தில் ஈத்தாயும் அவருடைய 600 வீரர்களும் தாவீதுக்கு ஆதரவு கொடுத்தார்கள். ஈத்தாய் வேறு தேசத்தை சேர்ந்தவராக இருந்ததால் இதில் தலையிட வேண்டாம் என்று தாவீது அவரிடம் ஆரம்பத்தில் சொன்னார். அதற்கு ஈத்தாய்: “ராஜாவே, எஜமானே, உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன். உங்கள் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன். வாழ்வோ சாவோ, நீங்கள் எங்கே இருந்தாலும் அடியேன் உங்களோடுதான் இருப்பேன்!” என்று சொன்னார்.—2 சா. 15:6, 18-21.

யெகோவாவால் நியமிக்கப்பட்ட ராஜாவான தாவீதுக்கு ஈத்தாய் உண்மையாக இருந்தார்

கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும் காத் நகரத்தை சேர்ந்தவர்களும் இஸ்ரவேலர்களாக இல்லாவிட்டாலும், அவர்கள் எல்லாருமே யெகோவாவை உண்மைக் கடவுளாக ஏற்றுக்கொண்டார்கள். தாவீதை யெகோவாதான் ராஜாவாக ஆக்கியிருக்கிறார் என்பதையும் அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். இப்படிப்பட்ட ஆட்கள் தன்னோடு இருந்ததை நினைத்து தாவீது எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்!

a அம்மோனியர்களும் மோவாபியர்களும் யெகோவாவின் சபையில் ஒருவராக இருக்கக் கூடாது, அதாவது இஸ்ரவேலர்களில் ஒருவராக இருக்கக் கூடாது, என்று சட்டம் சொன்னது. உபாகமம் 23:3-6-ல் அந்த சட்டம் இருக்கிறது. ஆனால், அந்த சட்டம் இஸ்ரவேல் தேசத்தில் சட்டப்பூர்வ அங்கத்தினராக ஆவதைப் பற்றித்தான் சொன்னது. கடவுளுடைய மக்களோடு வேறு தேசத்து மக்கள் பழகுவதையோ குடியிருப்பதையோ அது தடை செய்யவில்லை. வேதாகமங்களின் பேரில் உட்பார்வை, (ஆங்கிலம்) தொகுதி 1-ல் பக்கம் 95-ஐப் பாருங்கள்.