Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 22

பாட்டு 127 நான் எப்படிப்பட்ட நபராக இருக்க வேண்டும்

திருமணம் செய்ய நினைக்கிறவர்களுக்கு உதவி

திருமணம் செய்ய நினைக்கிறவர்களுக்கு உதவி

“இதயத்தில் மறைந்திருக்கிற . . . குணம்தான் . . . மிகவும் மதிப்புள்ளது.”1 பே. 3:4.

என்ன கற்றுக்கொள்வோம்?

டேட்டிங் செய்கிறவர்கள் எப்படி நல்ல முடிவுகளை எடுக்கலாம் என்றும் சபையில் இருக்கிற மற்றவர்கள் அவர்களுக்கு எப்படி உதவலாம் என்றும் கற்றுக்கொள்வோம்.

1-2. டேட்டிங் செய்தபோது எப்படி இருந்தது என்று சிலர் சொல்கிறார்கள்?

 டேட்டிங் செய்கிற காலம் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கும். சொல்லப்போனால், வானத்தில் பறக்கிற மாதிரி இருக்கும். நீங்களும் டேட்டிங் செய்துகொண்டு இருக்கிறீர்களா? அப்படியென்றால், இந்த சமயத்தில் எல்லாமே நல்லபடியாக போக வேண்டும் என்று நினைப்பீர்கள். நிறைய பேருக்கு அது நன்றாகவும் போயிருக்கிறது. எத்தியோப்பியாவில் இருக்கிற சியான் a என்ற சகோதரி இப்படி சொல்கிறார்: “கல்யாணத்துக்கு முன்பு நானும் என்னுடைய கணவரும் பழகியபோது ரொம்ப சந்தோஷமாக இருந்தோம். அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது. நாங்கள் முக்கியமான விஷயங்களைப் பேசினோம்; நிறைய சிரிக்கவும் செய்தோம். எனக்குப் பிடித்த ஒருவரை... என்மேல் அன்பு வைத்திருக்கிற ஒருவரை... கண்டுபிடித்ததை நினைத்து சந்தோஷப்பட்டேன்.”

2 அதேசமயத்தில், நெதர்லாந்தில் இருக்கிற அலெஸோ என்ற சகோதரர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்: “நானும் என் மனைவியும் டேட்டிங் செய்தபோது சந்தோஷமாக இருந்தது உண்மைதான். ஆனால் அதில் சில சவால்களும் இருந்தன.” டேட்டிங் செய்யும்போது வருகிற பிரச்சினைகளைப் பற்றியும் அதை சமாளிக்க உதவும் பைபிள் நியமங்களைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். டேட்டிங் செய்கிறவர்களுக்கு சபையில் இருக்கிறவர்கள் எப்படி உதவலாம் என்றும் பார்ப்போம்.

டேட்டிங் செய்வதன் நோக்கம்

3. டேட்டிங் செய்வதன் நோக்கம் என்ன? (நீதிமொழிகள் 20:25)

3 டேட்டிங் செய்யும் அந்தக் காலம் ரொம்ப சந்தோஷமாக இருந்தாலும், அது ரொம்ப முக்கியமான ஒரு காலம். ஏனென்றால், திருமணம் சம்பந்தப்பட்ட முடிவுகளை அந்த சமயத்தில் நீங்கள் எடுப்பீர்கள். கல்யாண நாள் அன்று, இந்தப் பூமியில் வாழ்கிற காலமெல்லாம் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டப் போவதாகவும், மரியாதை கொடுக்கப் போவதாகவும் யெகோவாவுக்கு முன்னால் வாக்குக் கொடுக்கப் போகிறீர்கள். பொதுவாக எந்தவொரு வாக்குறுதியையும் கொடுப்பதற்கு முன்பு நாம் ரொம்ப கவனமாக யோசித்துப் பார்க்க வேண்டும். (நீதிமொழிகள் 20:25-ஐ வாசியுங்கள்.) கல்யாணத்தின்போது கொடுக்கிற வாக்கும் அப்படித்தான். டேட்டிங் செய்கிற காலத்தில் அந்தத் தம்பதியால் ஒருவரை ஒருவர் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும்; நல்ல முடிவுகளையும் எடுக்க முடியும். அந்த சமயத்தில் அவர்கள் ஒருவேளை கல்யாணம் பண்ண முடிவு செய்யலாம். அல்லது, பிரிந்துபோகக்கூட முடிவு செய்யலாம். ஒரு பையனும் பொண்ணும் பிரிந்துபோக முடிவெடுத்தால் அவர்கள் டேட்டிங் செய்ததே வீண் என்றோ அவர்கள் ஏதோ தவறு செய்துவிட்டார்கள் என்றோ அர்த்தம் கிடையாது. அவர்கள் பழகிப் பார்த்ததால்தான் ஒரு நல்ல முடிவுக்கு வர முடிந்தது.

4. டேட்டிங் செய்வதைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்வது ஏன் முக்கியம்?

4 டேட்டிங்கைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்வது ரொம்ப முக்கியம். கல்யாணம் ஆகாதவர்கள் இதை சரியாக புரிந்துகொண்டால்தான், கல்யாணம் பண்ணுகிற எண்ணமே இல்லாமல் யாரையும் டேட்டிங் செய்ய மாட்டார்கள். கல்யாணம் ஆகாதவர்கள் மட்டுமல்ல, நாம் எல்லாருமே இதைப் பற்றி சரியாக புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், டேட்டிங் செய்யும் இரண்டு பேர் கண்டிப்பாக கல்யாணம் பண்ண வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். அவர்கள் அப்படி நினைப்பது, கல்யாணமாகாத சகோதர சகோதரிகளுக்குக் கஷ்டமாக இருக்கும். அமெரிக்காவில் இருக்கிற கல்யாணமாகாத சகோதரி மெலிசா இப்படி சொல்கிறார்: “ஒரு சகோதரரும் சகோதரியும் டேட்டிங் செய்தால் அவர்கள் கண்டிப்பாக கல்யாணம் பண்ண வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். இதனால், இரண்டு பேருக்கும் ஒத்துப்போகவில்லை என்றாலும் பிரிய வேண்டாம் என்று அவர்கள் நினைக்கலாம். வேறு சிலர், ‘எதற்கு வம்பு, டேட்டிங் பக்கமே போக வேண்டாம்!’ என்று யோசிக்கிறார்கள். இதனால் தேவையில்லாத கவலைதான் மிச்சம்!”

ஒருவரை ஒருவர் நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்

5-6. டேட்டிங் செய்கிற இரண்டு பேர் எதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்? (1 பேதுரு 3:4)

5 டேட்டிங் செய்துகொண்டிருக்கும் நபரைக் கல்யாணம் பண்ணலாமா வேண்டாமா என்ற முடிவை எப்படி எடுக்கலாம்? அதற்கு, ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாகத் தெரிந்துகொள்வது உதவும். நீங்கள் டேட்டிங் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பே அவரைப் பற்றி சில விஷயங்களைத் தெரிந்திருப்பீர்கள். ஆனால், இப்போது “இதயத்தில் மறைந்திருக்கிற” குணங்களைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். (1 பேதுரு 3:4-ஐ வாசியுங்கள்.) அவருக்கும் யெகோவாவுக்கும் எப்படிப்பட்ட பந்தம் இருக்கிறது... அவருடைய சுபாவம் என்ன... அவர் எப்படி யோசிக்கிறார்... போன்றவற்றையும் தெரிந்துகொள்ளுங்கள். கொஞ்ச காலம் போன பிறகு, இந்த மாதிரி கேள்விகளைக்கூட நீங்கள் யோசித்துப் பார்க்கலாம்: ‘இவர் உண்மையிலேயே எனக்குப் பொருத்தமான துணையாக இருப்பாரா?’ (நீதி. 31:26, 27, 30; எபே. 5:33; 1 தீ. 5:8) ‘நாங்கள் ஒருவரை ஒருவர் அன்பாகவும் அக்கறையாகவும் கவனித்துக்கொள்வோமா? எங்களுக்குள் இருக்கிற குறைகளையும் தாண்டி எங்களால் சந்தோஷமாக வாழ முடியுமா?’ b (ரோ. 3:23) இந்த முக்கியமான விஷயத்தையும் மறந்துவிடாதீர்கள்: நீங்கள் இரண்டு பேரும் பொருத்தமானவர்களா என்பது, எந்தளவுக்கு ஒத்துப்போகிறீர்கள் என்பதைப் பொறுத்து மட்டும் இல்லை; உங்களுக்குள் வித்தியாசங்கள் இருந்தாலும் எந்தளவுக்கு வளைந்து கொடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் இருக்கிறது.

6 டேட்டிங் செய்கிற சமயத்தில் நீங்கள் வேறு எதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்? உங்கள் இரண்டு பேருக்கு நடுவில் காதல் மலர்வதற்கு முன்பே முக்கியமான விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். உதாரணத்துக்கு, இரண்டு பேருக்கும் என்ன குறிக்கோள் இருக்கிறது என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம். ஆனால் சில தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி, அதாவது ஆரோக்கியம், பணம், வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்கள் போன்றவற்றைப் பற்றி என்ன சொல்லலாம்? இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் ஆரம்பத்திலேயே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. (யோவான் 16:12-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) இதையெல்லாம் சொல்வதற்கு உங்களுக்குக் கொஞ்சம் காலம் தேவைப்பட்டால், அதை அவரிடம் சொல்லுங்கள். ஆனால், ஏதோ ஒரு கட்டத்தில் இதைப் பற்றி நீங்கள் அவரிடம் கண்டிப்பாக சொல்ல வேண்டும். அப்போதுதான் அவரால் ஒரு நல்ல முடிவை எடுக்க முடியும்.

7. டேட்டிங் செய்கிறவர்கள் எப்படி ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாகத் தெரிந்துகொள்ளலாம்? (“ நீங்கள் விரும்புகிறவர் ரொம்ப தூரத்தில் வாழ்ந்தால்...” என்ற பெட்டியையும் பாருங்கள்.) (படங்களையும் பாருங்கள்.)

7 ஒருவர் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதை உங்களால் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? மனம்விட்டு நேர்மையாக பேசுவதன் மூலமாகவும், கேள்விகளைக் கேட்டு நன்றாகக் கவனிப்பதன் மூலமாகவும் தெரிந்துகொள்ள முடியும். (நீதி. 20:5; யாக். 1:19) நன்றாகப் பேசி பழகுகிற மாதிரி சூழ்நிலைகளை உருவாக்குங்கள். உதாரணத்துக்கு, நீங்கள் சேர்ந்து சாப்பிடலாம், பொது இடங்களில் வாக்கிங் போகலாம், சேர்ந்து ஊழியம் செய்யலாம், குடும்பத்தில் இருக்கிறவர்களோடும் நண்பர்களோடும் சேர்ந்து நேரம் செலவு செய்யலாம். வித்தியாசமான சூழ்நிலைகளில் வெவ்வேறு ஆட்களோடு அவர் எப்படிப் பழகுகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள சில வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள். நாம் ஏற்கெனவே பார்த்த எஷ்வினும் இதையெல்லாம் செய்தார். அலிசியாவோடு அவர் டேட்டிங் பண்ண சமயத்தில் என்ன செய்தார் என்று சொல்கிறார்: “ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாகத் தெரிந்துகொள்ள எவையெல்லாம் உதவி செய்யுமோ அந்த மாதிரி விஷயங்களை பிளான் பண்ணினோம். அதற்காக, பெரிதாக எதுவும் செய்யவில்லை. சேர்ந்து சமைத்தோம், சேர்ந்து வேலை செய்தோம். இப்படி செய்ததால், எங்களிடம் இருக்கிற பலம்-பலவீனம் போன்றவற்றை இரண்டு பேராலும் பார்க்க முடிந்தது.”

பேசிப் பழகுகிற மாதிரி சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அப்படி செய்தால், ஒருவரைப் பற்றி ஒருவர் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் (பாராக்கள் 7-8)


8. டேட்டிங் செய்கிற சமயத்தில் சேர்ந்து படிப்பது எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?

8 சேர்ந்து பைபிள் விஷயங்களைப் படிப்பதும் உங்களுக்கு உதவியாக இருக்கும். கல்யாணம் ஆன பிறகு, நீங்கள் சேர்ந்து குடும்ப வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்யும்போதுதான், கடவுளும் உங்களுடைய குடும்பத்தில் முக்கியமான ஒருவராக இருப்பார். (பிர. 4:12) அதனால் இப்போதே, அதாவது டேட்டிங் செய்துகொண்டிருக்கும்போதே, சேர்ந்து படிப்பதற்கு நேரம் ஒதுக்குவது நல்லது. அந்த சகோதரர், அந்த சகோதரிக்கு இன்னும் குடும்பத் தலைவராக ஆகவில்லைதான். ஏனென்றால், அவர்கள் இன்னும் குடும்பமாகவே ஆகவில்லை. இருந்தாலும், சேர்ந்து படிக்கும்போது யெகோவாவோடு எப்படிப்பட்ட பந்தம் இருக்கிறது என்பதை இரண்டு பேருமே பார்க்க முடியும். இப்படி செய்வது ரொம்பப் பிரயோஜனமாக இருந்ததாக அமெரிக்காவில் இருக்கும் மேக்ஸ்-லைசா தம்பதி சொல்கிறார்கள். மேக்ஸ் இப்படி சொல்கிறார்: “நாங்கள் பழக ஆரம்பித்த புதிதிலேயே டேட்டிங், திருமணம், குடும்ப வாழ்க்கை பற்றியெல்லாம் நிறைய படித்தோம். இப்படி செய்ததால், சில முக்கியமான விஷயங்களைப் பற்றி எங்களால் பேச முடிந்தது. ஒருவேளை, நாங்கள் படிக்காமல் இருந்திருந்தால், அந்த மாதிரி விஷயங்களைப் பேசியிருக்க வாய்ப்பில்லை.”

யோசித்துப் பார்க்க இன்னும் சில விஷயங்கள்

9. டேட்டிங் செய்வதைப் பற்றி யாரிடமெல்லாம் சொல்லலாம் என்று எப்படி முடிவெடுக்கலாம்?

9 டேட்டிங் செய்வதை யாரிடமெல்லாம் சொல்ல வேண்டும்? அதை நீங்கள் இரண்டு பேரும்தான் முடிவு செய்ய வேண்டும். பழக ஆரம்பித்த புதிதிலேயே நிறைய பேரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது. (நீதி. 17:27) அப்போதுதான், நிறைய பேருக்குப் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை வராது. அதேபோல், சீக்கிரமாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்குள் தள்ளப்பட மாட்டீர்கள். அதேசமயத்தில், யாரிடமும் சொல்லாமலும் இருந்துவிடாதீர்கள். அப்படி இருந்தால், யார் கண்ணிலும் படக்கூடாது என்ற பயத்தில் நீங்கள் இரண்டு பேரும் தனியாக இருக்க வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்துவிடலாம். அது ரொம்ப ஆபத்தானது! அதனால், யார் உங்களுக்கு நல்ல ஆலோசனை கொடுப்பார்களோ, யார் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்களோ அவர்களிடம் இதைப் பற்றி சொல்லலாம். (நீதி. 15:22) ஒருவேளை, குடும்பத்தில் இருக்கிறவர்கள், முதிர்ச்சியுள்ள நண்பர்கள் அல்லது மூப்பர்களிடம் இதைப் பற்றி சொல்லலாம்.

10. டேட்டிங் செய்யும்போது தம்பதிகள் எப்படி யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ளலாம்? (நீதிமொழிகள் 22:3)

10 டேட்டிங் செய்கிற சமயத்தில் நீங்கள் எப்படி யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ளலாம்? நீங்கள் பழகப் பழக ஒருவரோடு ஒருவர் ஈர்க்கப்படுவீர்கள். இது இயல்புதான். ஆனால், அந்த சமயத்தில் நீங்கள் எப்படி ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருக்கலாம்? (1 கொ. 6:18) ஆபாசமான தப்பான விஷயங்களைப் பற்றி பேசாதீர்கள், இரண்டு பேரும் தனியாக இருக்காதீர்கள், அதிகமாகக் குடிக்காதீர்கள். (எபே. 5:3) இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் செக்ஸ் சம்பந்தப்பட்ட ஆசைகளை அதிகப்படுத்தும், சரியானதைத்தான் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை ஆட்டங்காண வைத்துவிடும். டேட்டிங் செய்கிற சமயத்தில், யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி எப்படி நடந்துகொள்ளலாம் என்பதைப் பற்றி அடிக்கடி பேசுங்கள். (நீதிமொழிகள் 22:3-ஐ வாசியுங்கள்.) எத்தியோப்பியாவில் இருக்கும் தாவித்-அல்மாஸ் தம்பதி என்ன செய்தார்கள் என்று சொல்கிறார்கள்: “நிறைய மக்கள் இருக்கும் இடங்களில் நாங்கள் நேரம் செலவு செய்வோம். இல்லையென்றால், எங்களோடு எப்போதுமே நண்பர்கள் இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்வோம். காரிலோ வீட்டிலோ நாங்கள் தனியாக இருந்ததில்லை. இப்படியெல்லாம் செய்ததால், தப்பு செய்யத் தூண்டுகிற சூழ்நிலைகளைத் தவிர்க்க முடிந்தது.”

11. காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகிற விஷயத்தில் டேட்டிங் செய்கிற தம்பதி எதையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?

11 காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக செய்கிற சில விஷயங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? உங்கள் இரண்டு பேருக்கும் இடையில் அன்பு அதிகம் ஆக ஆக, அதை சரியான விதத்தில் நீங்கள் வெளிக்காட்டலாம். (உன். 1:2; 2:6) ஆனாலும், செக்ஸ் சம்பந்தப்பட்ட ஆசைகள் அதிகமானால் உங்களால் நிதானமாக யோசிக்க முடியாது, நல்ல முடிவுகளையும் எடுக்க முடியாது. காதலை வெளிப்படுத்துவதற்காக சில விஷயங்களை செய்யும்போது, சுயக்கட்டுப்பாட்டை இழந்து யெகோவாவுக்குப் பிடிக்காததை செய்துவிட வாய்ப்பிருக்கிறது. (நீதி. 6:27) அதனால், பழக ஆரம்பிக்கும்போதே, அன்பு காட்டுவதற்காக எதையெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்ய வேண்டாம் என்று முடிவெடுங்கள். இதைப் பற்றி பேசும்போது பைபிள் நியமங்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். c (1 தெ. 4:3-7) இந்தக் கேள்விகளைக்கூட நீங்கள் யோசித்துப் பார்க்கலாம்: ‘காதலை வெளிப்படுத்துவதற்காக செய்கிற விஷயங்களை எங்கள் ஊரில் இருக்கிற மக்கள் எப்படிப் பார்ப்பார்கள்? இந்த மாதிரி விஷயங்கள் செக்ஸ் சம்பந்தப்பட்ட ஆசைகளைத் தூண்டுமா?’

12. பிரச்சினைகளும் கருத்து வேறுபாடுகளும் வரும்போது எதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?

12 பிரச்சினைகளோ கருத்து வேறுபாடுகளோ வந்தால் என்ன செய்வது? உங்களுக்குள் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வரலாம். அப்படி வந்தால், உங்கள் இரண்டு பேருக்கும் ஒத்துப்போகாது என்றோ நீங்கள் பிரிந்துவிட வேண்டும் என்றோ அர்த்தமா? பொதுவாக தம்பதிகளுக்கு இடையில் பிரச்சினைகள் வரும், எல்லா விஷயத்திலும் அவர்கள் ஒத்துப்போவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், வித்தியாசங்களையும் தாண்டி தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் எப்படி அட்ஜஸ்ட் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் கல்யாண வாழ்க்கை நன்றாக இருக்கும். அதனால், இப்போது வருகிற பிரச்சினைகளை நீங்கள் எப்படி சரிசெய்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் உங்கள் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியும். டேட்டிங் செய்கிறவர்கள் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்: ‘பிரச்சினைகள் வரும்போது, எங்களால் நிதானமாகவும் மரியாதையாகவும் அதைப் பேசி தீர்த்துக்கொள்ள முடிகிறதா? குறைகளை எங்களால் சீக்கிரம் ஒத்துக்கொள்ள முடிகிறதா? அதை சரிசெய்வதற்கு நாங்கள் உழைக்கிறோமா? சீக்கிரமாக விட்டுக்கொடுக்கிறோமா, மன்னிப்பு கேட்கிறோமா, மன்னிக்கிறோமா?’ (எபே. 4:31, 32) இருந்தாலும், ஒத்துப்போக முடியாமல், எப்போதுமே சண்டையாகவே போய்க்கொண்டிருந்தால் என்ன செய்வது? இப்போதே ஒத்துப்போவது கஷ்டமாக இருந்தால், கல்யாணத்துக்குப் பிறகும் ஒத்துப்போவது கஷ்டமாக இருக்கலாம். அந்த நபர் உங்களுக்குப் பொருத்தமானவராக இருக்க மாட்டார் என்று உங்களுக்குத் தோன்றினால், பிரிந்துபோவது உங்கள் இரண்டு பேருக்குமே நல்லதாக இருக்கலாம். d

13. எவ்வளவு நாள் டேட்டிங் செய்ய வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்யலாம்?

13 எவ்வளவு நாளுக்கு டேட்டிங் செய்ய வேண்டும்? அவசரப்பட்டு முடிவெடுத்தால், மோசமான விளைவுகள் வரும். (நீதி. 21:5) அதனால், ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாகத் தெரிந்துகொள்ளும்வரை நீங்கள் டேட்டிங் செய்ய வேண்டும். அதற்காக, தேவையில்லாமல் இழுத்துக்கொண்டே போகக் கூடாது. ஏனென்றால், “எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்குத் தாமதமானால் நெஞ்சம் நொந்துபோகும்” என்று பைபிளும் சொல்கிறது. (நீதி. 13:12) அதுமட்டுமல்ல, நீங்கள் பழகப் பழக செக்ஸ் சம்பந்தப்பட்ட ஆசைகளைக் கட்டுப்படுத்துவதும் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். (1 கொ. 7:9) இன்னும் எவ்வளவு நாளுக்கு டேட்டிங் செய்ய வேண்டும் என்று யோசிப்பதைவிட, ‘முடிவெடுப்பதற்கு அந்த நபரை பற்றி இன்னும் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?’ என்று யோசிப்பது நல்லது.

மற்றவர்கள் எப்படி உதவலாம்?

14. டேட்டிங் செய்கிறவர்களுக்கு மற்றவர்கள் எப்படி உதவலாம்? (படத்தையும் பாருங்கள்.)

14 டேட்டிங் செய்கிறவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? அவர்களை சாப்பாட்டுக்கோ, குடும்ப வழிபாட்டுக்கோ கூப்பிடலாம். பொழுதுபோக்குக்காக ஏதாவது பிளான் பண்ணியிருந்தால் அதற்குக்கூட அவர்களைக் கூப்பிடலாம். (ரோ. 12:13) இந்த மாதிரி சூழ்நிலைகளில் அவர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். டேட்டிங் செய்கிற இரண்டு பேருக்கு, கூடப் போக யாராவது தேவைப்படுகிறார்களா? காரில் அவர்களைக் கூட்டிக்கொண்டு போக வேண்டியிருக்கிறதா? தனியாகப் பேசுவதற்கு அவர்களுக்கு ஒரு இடம் தேவைப்படுகிறதா? இந்த மாதிரி சூழ்நிலைகளில்கூட நாம் அவர்களுக்கு உதவ முடியும். (கலா. 6:10) முன்பு பார்த்த அலிசியாவும் எஷ்வினும், டேட்டிங் பண்ண சமயத்தில் நிறைய பேர் தங்களுக்கு உதவியதாக சொல்கிறார்கள். அதைப் பற்றி அலிசியா சொல்கிறார்: “சகோதரர்கள் எங்களுக்கு உதவி செய்தது நன்றாக இருந்தது. ‘உங்களுக்குத் தனியாக பேசுவதற்கு ஒரு இடம் வேண்டுமென்றால் எங்கள் வீட்டுக்கு வாங்கள்’ என்று அவர்கள் சொல்வார்கள். அவர்கள் அப்படி சொன்னது சந்தோஷமாக இருந்தது.” டேட்டிங் செய்கிற ஒரு தம்பதி உங்களைத் துணைக்குக் கூப்பிட்டால், அதை நண்பர்களுக்கு உதவி செய்ய ஒரு வாய்ப்பாக பாருங்கள். அப்படிப் போகும்போது, தனிப்பட்ட விஷயங்களைப் பேசுவதற்கு அவர்களுக்கு நேரமும் ஒரு நல்ல சூழலும் தேவை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதேசமயத்தில், அவர்கள் தனிமையில் இருக்கிற மாதிரி விட்டுவிடாதீர்கள்.—பிலி. 2:4.

டேட்டிங் செய்கிறவர்களுக்கு நாம் நிறைய விதங்களில் உதவலாம் (பாராக்கள் 14-15)


15. டேட்டிங் செய்துகொண்டிருக்கிறவர்களுக்கு வேறு எப்படியும் நாம் உதவலாம்? (நீதிமொழிகள் 12:18)

15 டேட்டிங் செய்கிறவர்களிடம் என்ன சொல்ல வேண்டும், என்ன சொல்லக் கூடாது என்பதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். சிலசமயம், நாம் சுயக்கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கும். (நீதிமொழிகள் 12:18-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, நமக்குத் தெரிந்த இரண்டு பேர் டேட்டிங் செய்ய ஆரம்பித்திருந்தால், அதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல நம் நாக்குத் துடிக்கலாம். ஆனால், அவர்களே அதை சொல்ல வேண்டும் என்று ஆசைப்படலாம். அவர்களைப் பற்றி நாம் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதையோ அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களைக் கிண்டல் செய்வதையோ தவிர்க்க வேண்டும். (நீதி. 20:19; ரோ. 14:10; 1 தெ. 4:11) அவர்களுடைய கல்யாணத்தைப் பற்றி ஏதாவது கேள்வி கேட்காமல் இருப்பதும் கருத்து சொல்லாமல் இருப்பதும் நல்லது. எலீஸ் என்ற சகோதரி தனக்கும் தன் கணவருக்கும் என்ன நடந்தது என்று சொல்கிறார்: “மற்றவர்கள் எங்களிடம் கல்யாணத்தைப் பற்றி கேட்கும்போது எங்களுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. ஏனென்றால், அதுவரைக்கும் நாங்களே அதைப் பற்றி எந்த பிளானும் பண்ணவில்லை.”

16. பழகிக்கொண்டிருக்கும் இரண்டு பேர் பிரிந்துபோக முடிவு செய்தால் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

16 டேட்டிங் செய்துகொண்டிருக்கும் இரண்டு பேர் பிரிந்துபோக முடிவெடுத்தால் என்ன செய்வது? அவர்களுடைய தனிப்பட்ட தீர்மானத்தைப் பற்றி நாம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது. யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்றும் யோசித்துக்கொண்டிருக்கக் கூடாது. (1 பே. 4:15) லேயா என்ற சகோதரி இப்படி சொல்கிறார்: “நானும் ஒரு சகோதரரும் பிரிந்தபோது நிறைய பேர் அவர்களாகவே கதைகளைக் கட்டினார்கள். அதைக் கேட்டபோது என் மனசு உடைந்துபோனது.” நாம் ஏற்கெனவே பார்த்த மாதிரி, டேட்டிங் செய்கிற இரண்டு பேர் பிரிந்துபோக முடிவெடுத்தால் அவர்கள் ஏதோ தவறான முடிவை எடுத்துவிட்டார்கள் என்று நினைத்துவிடக் கூடாது. சொல்லப்போனால், டேட்டிங் செய்ததால்தான் அவர்கள் இரண்டு பேருக்கும் எது நல்லதோ அந்த முடிவை அவர்களால் எடுக்க முடிந்தது. பிரிந்துபோகலாம் என்று அவர்கள் எடுத்திருக்கிற முடிவு, அவர்களுக்குக் கண்டிப்பாக வலியைக் கொடுக்கும். கொஞ்ச நாளுக்கு அவர்கள் தனிமையில்கூட தவிக்கலாம். அதனால், அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவலாம் என்று நாம் யோசிக்கலாம்.—நீதி. 17:17.

17. டேட்டிங் செய்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்?

17 நாம் இவ்வளவு நேரம் பார்த்த மாதிரி, டேட்டிங் செய்யும்போது சில சவால்கள் வரலாம். ஆனால், அது ஒரு சந்தோஷமான காலமும்கூட. அதைப் பற்றி ஜெசிக்கா இப்படி சொல்கிறார்: “உண்மை என்னவென்றால், அந்த சமயத்தில் நாங்கள் நிறைய முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், நாங்கள் செலவு செய்த சக்தி, நேரம் கொஞ்சம்கூட வீண்போகவில்லை.” நீங்களும் டேட்டிங் செய்துகொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாகத் தெரிந்துகொள்ள தொடர்ந்து முயற்சி எடுங்கள். அப்படி செய்யும்போது, உங்கள் இரண்டு பேருக்கும் பிரயோஜனமான ஒரு முடிவை உங்களால் எடுக்க முடியும்.

பாட்டு 49 யெகோவாவின் நெஞ்சத்தை மகிழ்விப்போம்

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b இந்த மாதிரி இன்னும் சில கேள்விகளை யோசித்துப் பார்க்க, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் பதில்கள், தொகுதி 2 ஆங்கில புத்தகத்தில், பக்கங்கள் 39-40-ஐப் பாருங்கள்.

c இன்னொருவருடைய பிறப்புறுப்புகளைத் தொடுவதோ கிளர்ச்சியடைய செய்வதோ பாலியல் முறைகேட்டில் ஒன்று. அதற்காக சபை மூப்பர்கள் நீதிவிசாரணை செய்ய வேண்டியிருக்கும். மார்பகங்களைத் தொடுவது, மெசேஜ் மூலமாகவோ ஃபோன் மூலமாகவோ ஆபாசமாக பேசுவது போன்றவற்றுக்கும்கூட, சூழ்நிலைகளைப் பொறுத்து நீதிவிசாரணை செய்ய வேண்டியிருக்கலாம்.

d கூடுதலாகத் தெரிந்துகொள்ள, ஆகஸ்ட் 15, 1999 காவற்கோபுரத்தில்வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியைப் பாருங்கள்.