Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 19

பாட்டு 22 கடவுளுடைய ஆட்சி வருக!

சீக்கிரத்தில் யெகோவா எப்படி மக்களை நியாயந்தீர்ப்பார்?

சீக்கிரத்தில் யெகோவா எப்படி மக்களை நியாயந்தீர்ப்பார்?

‘ஒருவரும் அழிந்துபோகக் கூடாது . . . என்று அவர் விரும்புகிறார்.’2 பே. 3:9.

என்ன கற்றுக்கொள்வோம்?

எதிர்காலத்தில் யெகோவா நீதியாகவும் நியாயமாகவும் நியாயந்தீர்ப்பார் என்று நாம் ஏன் நம்பலாம் என்பதைப் பற்றிக் கற்றுக்கொள்வோம்.

1. முக்கியமான ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம் என்று ஏன் சொல்கிறோம்?

 ஒரு முக்கியமான காலத்தில் நாம் வாழ்கிறோம்! ஒவ்வொரு நாளும் பைபிள் தீர்க்கதரிசனங்கள் நம் கண்முன் நிறைவேறிவருகின்றன. உதாரணத்துக்கு, ‘வடதிசை ராஜாவும்’ ‘தென்திசை ராஜாவும்’ தங்களில் யார் பெரியவர் என்பதைக் காட்டுவதற்காக முட்டிக்கொண்டு நிற்கிறார்கள். (தானி. 11:40) பெரிய அளவில் பிரசங்க வேலை நடந்துகொண்டிருக்கிறது; லட்சக்கணக்கான மக்கள் நல்ல செய்தியைக் கேட்டு யெகோவா பக்கம் வந்துகொண்டிருகிறார்கள். (ஏசா. 60:22; மத். 24:14) “ஏற்ற வேளையில்” எக்கச்சக்கமான ஆன்மீக உணவும் நமக்குக் கிடைத்துக்கொண்டிருக்கிறது.—மத். 24:45-47.

2. மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்குள் நமக்கு என்ன தெரிந்துவிடும், எதைப் புரிந்துகொள்ள வேண்டும்?

2 சீக்கிரத்தில் நடக்கப்போகிற முக்கியமான விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள யெகோவா நமக்கு உதவி செய்துகொண்டே இருக்கிறார். (நீதி. 4:18; தானி. 2:28) மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்குள், அந்தக் காலப்பகுதியில் அவருக்கு உண்மையாக இருப்பதற்கும் ஒற்றுமையாக இருப்பதற்கும் என்னவெல்லாம் தேவையோ அவையெல்லாம் நமக்கு தெரிந்துவிடும். இருந்தாலும், எதிர்காலத்தில் நடக்கப்போகிற சில விஷயங்களைப் பற்றி நமக்குத் தெரியாது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இந்தக் கட்டுரையில், அந்த விஷயங்களைப் பற்றி நாம் ஏற்கெனவே நம்பிக்கொண்டிருந்த கருத்துகளில் ஏன் மாற்றம் தேவைப்படுகிறது என்பதைப் பார்ப்போம். அதோடு, எதிர்காலத்தில் நடக்கப்போகிற சில விஷயங்களைப் பற்றியும், அந்த சமயத்தில் யெகோவா என்ன செய்வார் என்பதைப் பற்றியும் நமக்கு என்னவெல்லாம் தெரியும் என்றும் பார்ப்போம்.

நமக்கு என்ன தெரியாது

3. வாய்ப்பு என்ற கதவு எப்போது மூடப்படும் என்று நினைத்துக்கொண்டிருந்தோம், ஏன் அப்படி நினைத்தோம்?

3 மிகுந்த உபத்திரவம் ஆரம்பித்த பிறகு, மக்களால் யெகோவா பக்கம் வர முடியாது என்றும் அர்மகெதோனில் தப்பிக்க முடியாது என்றும் நாம் முன்பு நினைத்தோம். இந்த முடிவுக்கு நாம் ஏன் வந்தோம்? பெருவெள்ளம் சமயத்தில் நடந்த ஒவ்வொரு சம்பவமும் எதிர்காலத்தில் நடக்கப்போகிற சம்பவங்களுக்கு ‘நிழல்’ என்று நாம் நினைத்திருந்தோம். உதாரணத்துக்கு, பெருவெள்ளம் ஆரம்பித்ததற்கு முன்பு யெகோவா பேழையின் கதவை மூடினார். அதேபோல், மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு முன்பு வாய்ப்பு என்ற கதவை யெகோவா மூடிவிடுவார் என்றும், சாத்தானின் உலகத்தை சேர்ந்த யாரும் அதற்குப் பிறகு தப்பிக்க முடியாது என்றும் நினைத்தோம்.—மத். 24:37-39.

4. பெருவெள்ளத்தைப் பற்றிய பதிவுக்கு “நிழல்” “நிஜம்” மாதிரி ஏதாவது இருக்கிறதா? விளக்குங்கள்.

4 பெருவெள்ளத்தை எதிர்காலத்தில் நடக்கப்போகிற சம்பவங்களுக்கு ஒரு நிழலாக பார்க்க வேண்டுமா? இல்லை! பைபிளில் எங்கேயும் அப்படி சொல்லப்படவில்லை. a உண்மைதான், இயேசு தன்னுடைய பிரசன்னத்தின் காலப்பகுதியை ‘நோவாவின் நாட்களோடு’ ஒப்பிட்டார். ஆனால், அந்தப் பெருவெள்ளத்தோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபருக்கும்... ஒவ்வொரு சம்பவத்துக்கும்... “நிழல்” “நிஜம்” என்று ஒன்று இருப்பதாக இயேசு எங்கேயும் சொல்லவில்லை. அதேபோல், பேழையின் கதவு மூடப்படுவதற்கு எதிர்கால நிறைவேற்றம் இருப்பதாக அவர் சொல்லவில்லை. அதற்காக, நோவாவிடமிருந்தோ பெருவெள்ளம் பற்றிய பதிவில் இருந்தோ நாம் கற்றுக்கொள்வதற்கு எதுவும் இல்லை என்று அர்த்தம் கிடையாது.

5. (அ) பெருவெள்ளம் வருவதற்கு முன்பு நோவா என்ன செய்தார்? (எபிரெயர் 11:7; 1 பேதுரு 3:20) (ஆ) பிரசங்க வேலையைப் பொறுத்தவரை நம்முடைய சூழ்நிலை எப்படி நோவாவின் காலத்தில் இருந்த சூழ்நிலை மாதிரி இருக்கிறது?

5 யெகோவா சொன்ன எச்சரிப்பு செய்தியை நோவா கேட்டதும், பேழையைக் கட்டினார்; இப்படி, தன்னுடைய விசுவாசத்தை செயலில் காட்டினார். (எபிரெயர் 11:7-யும்; 1 பேதுரு 3:20-யும் வாசியுங்கள்.) அதேமாதிரி, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைக் கேட்கும் மக்களும் தங்களுடைய விசுவாசத்தை செயலில் காட்ட வேண்டும். (அப். 3:17-20) நோவா ‘நீதியைப் பிரசங்கித்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (2 பே. 2:5) ஆனாலும், போன கட்டுரையில் பார்த்த மாதிரி, நோவாவால் அந்த சமயத்தில் வாழ்ந்துகொண்டிருந்த ஒவ்வொருவருக்கும் அழிவைப் பற்றி சொல்லியிருக்க முடியுமா என்று நமக்குத் தெரியாது. இன்று நாம் சுறுசுறுப்பாக உலகம் முழுவதும் ஊழிய வேலை செய்கிறோம்; இருந்தாலும், உலகத்தில் இருக்கிற ஒவ்வொருவரிடமும் நல்ல செய்தியைக் கொண்டு போய் சேர்ப்பது சாத்தியம் இல்லை. ஏன் அப்படி சொல்கிறோம்?

6-7. முடிவு வருவதற்கு முன்பு இந்தப் பூமியில் இருக்கிற எல்லாருக்கும் நம்மால் ஏன் நல்ல செய்தியை சொல்ல முடியாது? விளக்குங்கள்.

6 பிரசங்க வேலை எந்தளவுக்கு செய்யப்படும் என்று இயேசு சொன்னார்? “உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும்” நல்ல செய்தி சொல்லப்படும் என்று சொன்னார். (மத். 24:14) அந்தத் தீர்க்கதரிசனம் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது நிறைவேறிவருகிறது. நல்ல செய்தி 1,000-க்கும் அதிகமான மொழிகளில் இன்று கிடைக்கிறது; jw.org வெப்சைட் மூலம் உலகத்தில் இருக்கிற பெரும்பாலான மக்களுக்கு அது போய் சேர்கிறது.

7 இருந்தாலும், மனிதகுமாரன் வருவதற்குள் “எல்லா நகரங்களிலும்,” அதாவது எல்லாரிடமும், பிரசங்கிக்க முடியாது என்பதை இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார். (மத். 10:23; 25:31-33) இயேசு சொன்ன வார்த்தைகள் உண்மை என்பதை இன்று பார்க்க முடிகிறது. ஊழிய வேலைக்குப் பயங்கரமான கட்டுப்பாடுகள் இருக்கிற நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு நிமிஷமும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறக்கிறார்கள். நல்ல செய்தியை “எல்லா தேசத்தினருக்கும் கோத்திரத்தினருக்கும் மொழியினருக்கும்” கொண்டுபோய் சேர்ப்பதற்கு நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். (வெளி. 14:6) இருந்தாலும், முடிவு வருவதற்கு முன்பு இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு நபரிடமும் நம்மால் நல்ல செய்தியை சொல்ல முடியாது.

8. எதிர்காலத்தில் யெகோவா மக்களை நியாயந்தீர்ப்பதைப் பற்றி நமக்கு என்ன கேள்வி வரலாம்? (படங்களையும் பாருங்கள்.)

8 ஒருவேளை, இந்தக் கேள்வி உங்கள் மனசுக்கு வரலாம்: ‘மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு முன்பு நல்ல செய்தியைக் கேட்க வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு என்ன ஆகும்? யெகோவாவும், நியாயந்தீர்ப்பதற்காக அவர் நியமித்திருக்கும் அவருடைய மகனும், அவர்களை எப்படி நியாயந்தீர்ப்பார்கள்?’ (யோவா. 5:19, 22, 27; அப். 17:31) இந்தக் கட்டுரையின் முக்கிய வசனம் சொல்வதுபோல், “ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும்” என்பதுதான் யெகோவாவின் விருப்பம். (2 பே. 3:9; 1 தீ. 2:4) அவருடைய விருப்பம் நமக்குத் தெரிந்திருந்தாலும், இந்தக் கேள்விக்கான நேரடியான பதிலை அவர் இன்னமும் நமக்குக் கொடுக்கவில்லை. அவர் செய்யப்போகும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் நமக்கு சொல்ல வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை.

மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு முன்பு நல்ல செய்தியைக் கேட்க வாய்ப்பு கிடைக்காதவர்களை யெகோவா எப்படி நியாயந்தீர்ப்பார்? (பாரா 8) c


9. யெகோவா பைபிளில் என்ன சொல்லியிருக்கிறார்?

9 தான் செய்யப்போகிற சில விஷயங்களைப் பற்றி பைபிள் மூலமாக யெகோவா சொல்லியிருக்கிறார். உதாரணத்துக்கு, நல்ல செய்தியைக் கேட்பதற்கோ வாழ்க்கையை மாற்றிக்கொள்வதற்கோ வாய்ப்பு கிடைக்காமல் இறந்துபோன ‘அநீதிமான்களை’ அவர் மறுபடியும் உயிரோடு கொண்டுவருவார் என்று பைபிள் சொல்கிறது. (அப். 24:15; லூக். 23:42, 43) ஆனால், இந்த விஷயம் சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.

10. வேறென்ன கேள்விகள் வருகிறது?

10 மிகுந்த உபத்திரவம் சமயத்தில் இறந்துபோகிறவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்களுக்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கை இல்லையா? யெகோவாவை எதிர்க்கிறவர்களை, யெகோவாவும் அவருடைய படையும் அர்மகெதோன் போரில் அழித்துவிடுவார்கள் என்று பைபிள் தெளிவாக சொல்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு, கண்டிப்பாக உயிர்த்தெழுதல் இல்லை. (2 தெ. 1:6-10) ஆனால், மிகுந்த உபத்திரவம் சமயத்தில் இறக்கிற மற்றவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? ஒருவேளை, விபத்தினாலோ, வியாதியினாலோ, கொலை செய்யப்படுவதாலோ சிலர் இறக்கலாம். (பிர. 9:11; சக. 14:13) இப்படிப்பட்டவர்களில் சிலரை கடவுள் ‘அநீதிமான்களாக’ பார்த்து புதிய உலகத்தில் உயிரோடு கொண்டுவருவாரா? அதைப் பற்றி நமக்குத் தெரியாது!

நமக்கு என்ன தெரியும்

11. அர்மகெதோன் போரில், மக்கள் எதன் அடிப்படையில் நியாயந்தீர்க்கப்படுவார்கள்?

11 எதிர்காலத்தில் நடக்கப்போகிற சில விஷயங்களைப் பற்றி நமக்குத் தெரியும். உதாரணத்துக்கு, அர்மகெதோன் போரில் மக்களுக்கு என்ன ஆகும் என்பது கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு அவர்கள் ஆதரவு கொடுத்ததைப் பொறுத்துதான் இருக்கிறது என்று நமக்குத் தெரியும். (மத். 25:40) செம்மறியாடுகளாக நியாயந்தீர்க்கப்படுகிறவர்கள் கிறிஸ்துவுக்கும் பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கும் ஆதரவு கொடுத்திருப்பார்கள். கிறிஸ்துவின் சகோதரர்களில் சிலர், மிகுந்த உபத்திரவம் ஆரம்பித்த பிறகும் நம்மோடு இருப்பார்கள்; அர்மகெதோன் போர் ஆரம்பிப்பதற்குக் கொஞ்சம் முன்புதான் பரலோகத்துக்குப் போவார்கள் என்றும் நமக்குத் தெரியும். கிறிஸ்துவின் சகோதரர்கள் பூமியில் இருக்கிறவரை அவர்களுக்கும் அவர்கள் செய்கிற வேலைக்கும் ஆதரவு கொடுக்க மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். (மத். 25:31, 32; வெளி. 12:17) இந்த உண்மைகளைத் தெரிந்துவைத்திருப்பது ஏன் ரொம்ப முக்கியம்?

12-13. “மகா பாபிலோன்” அழிவதைப் பார்க்கிற சிலர் என்ன செய்யலாம்? (படங்களையும் பாருங்கள்.)

12 மிகுந்த உபத்திரவம் ஆரம்பித்த பிறகு, “மகா பாபிலோன்” அழிவதை சிலர் பார்த்துவிட்டு, ‘யெகோவாவின் சாட்சிகள் இதைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்களே!’ என்று யோசிக்கலாம். அப்படி யோசிக்கிறவர்கள், யெகோவாமேல் விசுவாசம் வைக்க வாய்ப்பு இருக்கிறதா?—வெளி. 17:5; எசே. 33:33.

13 ஒருவேளை அப்படி நடந்தால், அது மோசே காலத்தில் நடந்த சம்பவத்தை மாதிரி இருக்கும். மோசேயும் இஸ்ரவேலர்களும் எகிப்தைவிட்டுக் கிளம்பியபோது “பலதரப்பட்ட ஜனங்களில் ஏராளமானோரும்” அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள். மோசே சொன்ன பத்து தண்டனைகளும் நிறைவேறியதைப் பார்த்த பிறகு, இவர்கள் யெகோவாமேல் விசுவாசத்தை வளர்த்திருக்கலாம். (யாத். 12:38) இவர்களை மாதிரியே, மகா பாபிலோனின் அழிவைப் பார்த்த பிறகு, சிலர் நம்மோடு சேர்ந்துகொள்ள நினைத்தால், நாம் அவர்களை எப்படிப் பார்ப்போம்? அழிவுக்குக் கொஞ்சம் முன்பு வந்து சேர்ந்துவிட்டார்களே என்று எரிச்சல்படுவோமா? கண்டிப்பாக இல்லை! நம் அப்பா யெகோவா மாதிரியே நாமும் அந்த சமயத்தில் நடந்துகொள்வோம். அவர் எப்படிப்பட்டவர் என்று யோசித்துப் பாருங்கள். அவர் “இரக்கமும் கரிசனையும் உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர், உண்மையுள்ளவர்!” bயாத். 34:6.

“மகா பாபிலோன்” அழிவதைப் பார்க்கிற சிலர், யெகோவாவின் சாட்சிகள் ரொம்பக் காலமாக சொல்லிவந்ததை யோசித்துப் பார்ப்பார்கள் (பாராக்கள் 12-13) d


14-15. ஒரு நபருக்கு முடிவில்லாத வாழ்வு கிடைப்பது அவர் எப்போது இறக்கிறார்... எங்கே வாழ்கிறார்... என்பதைப் பொறுத்து இருக்கிறதா? விளக்குங்கள். (சங்கீதம் 33:4, 5)

14 ‘என்னுடைய சொந்தக்காரர்கள் மிகுந்த உபத்திரவத்துக்கு முன்பே இறந்துவிட்டால் நன்றாக இருக்கும். அப்படி நடந்தால்தான், அவர்கள் உயிர்த்தெழுந்து வருவார்கள்!’ என்று சில சகோதர சகோதரிகள் சொல்வதை நாம் கேட்டிருக்கலாம். சொந்தக்காரர்கள்மேல் உண்மையிலேயே அன்பு இருப்பதால்தான் அவர்கள் அப்படி யோசிக்கிறார்கள். ஆனால், ஒரு நபருக்கு முடிவில்லாத வாழ்வு கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் அவர் எப்போது இறக்கிறார் என்பதைப் பொறுத்தது கிடையாது. யெகோவாதான் நீதிபதி! அவர் எடுக்கிற முடிவுகள் நியாயமாகவும் நீதியாகவும் இருக்கும். (சங்கீதம் 33:4, 5-ஐ வாசியுங்கள்.) “இந்த முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர்” கண்டிப்பாக சரியானதைத்தான் செய்வார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.—ஆதி. 18:25.

15 ஒரு நபருக்கு முடிவில்லாத வாழ்வு கிடைப்பதும் கிடைக்காததும் அவர் எங்கே வாழ்கிறார் என்பதைப் பொறுத்தும் கிடையாது. நல்ல செய்தி போய் சேர முடியாத நாடுகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களை ‘வெள்ளாடுகளாக’ யெகோவா கண்டிப்பாக முத்திரை குத்த மாட்டார். (மத். 25:46) அந்த இடங்களில் வாழ்கிறவர்களைப் பற்றி நம்மைவிட அதிகமாக யெகோவா யோசிப்பார்; அவர் இந்த உலகத்துக்கே நீதிபதி! மிகுந்த உபத்திரவம் சமயத்தில் நடக்கப்போகும் சம்பவங்களை யெகோவா எப்படியெல்லாம் கொண்டுபோகப் போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை, யெகோவா தன்னுடைய பெயரை எல்லா தேசங்களுக்கும் முன்பாக பரிசுத்தப்படுத்தும்போது, அவரைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும்... அவர்மேல் விசுவாசம் வைப்பதற்கும்... அவர் பக்கம் நிற்பதற்கும்... அப்படிப்பட்ட இடங்களில் வாழ்கிற சிலருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.—எசே. 38:16.

மிகுந்த உபத்திரவம் ஆரம்பித்த பிறகு, . . . சிலர் யெகோவாமேல் விசுவாசம் வைக்க வாய்ப்பு இருக்கிறதா?

16. யெகோவாவைப் பற்றி நாம் என்ன தெரிந்துவைத்திருக்கிறோம்? (படத்தையும் பாருங்கள்.)

16 மனிதர்களின் உயிரை யெகோவா உயர்வாக மதிக்கிறார் என்பதை பைபிளிலிருந்து நாம் தெரிந்துகொண்டோம். நாம் எல்லாருமே என்றென்றும் வாழ வேண்டும் என்பதற்காக அவர் தன்னுடைய சொந்த மகனின் உயிரையே கொடுத்திருக்கிறார். (யோவா. 3:16) அதோடு, அவருடைய அன்பை நாம் எல்லாருமே ருசித்திருக்கிறோம். (ஏசா. 49:15) நம் ஒவ்வொருவரையும் அவருக்கு நன்றாகத் தெரியும். எவ்வளவு நன்றாகத் தெரியும்? நாம் இறந்துவிட்டாலும்கூட, நம்முடைய எல்லா நினைவுகளையும் மறுபடியும் கொடுத்து, இப்போது நாம் எப்படி இருக்கிறோமோ அதேமாதிரி அச்சு அசல் நம்மை மறுபடியும் படைக்கும் அளவுக்கு அவருக்கு நம்மை நன்றாகத் தெரியும்! (மத். 10:29-31) இதையெல்லாம் யோசித்துப் பார்க்கும்போது, நம்முடைய பரலோக அப்பா ஒவ்வொரு நபரையும் நியாயமாகவும் நீதியாகவும் இரக்கத்தோடும் நியாயந்தீர்ப்பார் என்ற முடிவுக்கு வரலாம்.—யாக். 2:13.

யெகோவா ஒவ்வொரு நபரையும் நியாயமாகவும் நீதியாகவும் இரக்கத்தோடும் நியாயந்தீர்ப்பார் என்பதில் நாம் நம்பிக்கையாக இருக்கலாம் (பாரா 16)


17. அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

17 இந்த விஷயங்களை நாம் புரிந்துகொண்டதால், பிரசங்க வேலையை இன்னும் அவசர அவசரமாக செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏன் அப்படி சொல்கிறோம்? சோர்ந்துபோகாமல் தொடர்ந்து ஊழியம் செய்ய எது நம்மைத் தூண்டும்? இந்தக் கேள்விகளுக்கு அடுத்த கட்டுரையில் விளக்கமாகப் பதில் பார்க்கலாம்.

பாட்டு 76 உன் நெஞ்சம் துள்ளாதோ?

a கூடுதல் விளக்கத்துக்கு மார்ச் 15, 2015 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 7-11-ல் இருக்கும் கட்டுரையைப் பாருங்கள். அந்தக் கட்டுரையின் தலைப்பு: “அப்படிச் செய்வதே உங்களுடைய விருப்பமாக இருக்கிறது.”

b மகா பாபிலோனின் அழிவுக்குப் பிறகு, மாகோகு தேசத்தின் கோகு தாக்கும்போது யெகோவாவின் ஊழியர்கள் எல்லாருமே சோதிக்கப்படுவார்கள். கடவுளுடைய மக்களோடு சேர்ந்துகொள்கிறவர்களும் அப்போது சோதிக்கப்படுவார்கள்.

c படங்களின் விளக்கம் : நல்ல செய்தி போய் சேர முடியாத மூன்று சூழ்நிலைகளில் இருக்கும் நபர்கள் காட்டப்பட்டிருக்கிறார்கள்: (1) மத செல்வாக்கு அதிகமாக இருக்கும் பகுதியில் வாழும் ஒரு பெண். (2) பிரசங்க வேலை செய்வது ஆபத்தாகவும் சட்டவிரோதமாகவும் இருக்கிற நாட்டில் வாழும் ஒரு தம்பதி. (3) யாராலும் போகவே முடியாத இடத்தில் வாழும் ஒருவர்.

d படவிளக்கம்: சத்தியத்தை விட்டுப்போன ஒரு இளம்பெண் ‘மகா பாபிலோனின்’ அழிவைப் பற்றி முன்பு கற்றுக்கொண்ட விஷயங்களை யோசித்துப் பார்க்கிறார். அதனால், மனம் மாறுகிறார்; சாட்சிகளாக இருக்கும் தன்னுடைய அப்பா-அம்மாவிடம் திரும்பிப் போகிறார். எதிர்காலத்தில் இப்படி நடந்தால், இரக்கமும் கரிசனையும் உள்ள நம் அப்பா யெகோவா மாதிரியே நாம் நடந்துகொள்ள வேண்டும். தப்பு செய்த ஒருவர் திரும்பி வந்ததை நினைத்து நாம் சந்தோஷப்பட வேண்டும்.