Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 26

பாட்டு 8 நம் தஞ்சம் யெகோவா

யெகோவாவை உங்கள் கற்பாறையாக ஆக்கிக்கொள்ளுங்கள்

யெகோவாவை உங்கள் கற்பாறையாக ஆக்கிக்கொள்ளுங்கள்

“எங்கள் கடவுளே, உங்களைப் போல கற்பாறை யாரும் இல்லை.”1 சா. 2:2, அடிக்குறிப்பு.

என்ன கற்றுக்கொள்வோம்?

என்னென்ன குணங்களைக் காட்டுவதால் யெகோவா ஒரு கற்பாறை மாதிரி இருக்கிறார் என்றும், அந்தக் குணங்களை நாம் எப்படிக் காட்டலாம் என்றும் கற்றுக்கொள்வோம்.

1. சங்கீதம் 18:46 சொல்வதுபோல், தாவீது யெகோவாவை எதனோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்?

 நாம் ஒரு நிலையில்லாத உலகத்தில் வாழ்கிறோம். திடீரென்று பிரச்சினைகள் நம் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிடலாம். ஆனால், நமக்கு உதவி செய்ய யெகோவா இருக்கிறார் என்று நினைக்கும்போது நிம்மதியாக இருக்கிறது. யெகோவா உயிருள்ள கடவுள் என்றும் நமக்கு உதவி செய்ய அவர் எப்போதும் தயாராக இருக்கிறார் என்றும் முந்தின கட்டுரையில் பார்த்தோம். அவருடைய உதவியை அனுபவிக்கும்போது “யெகோவாதான் உயிருள்ள கடவுள்” என்ற நம்பிக்கை நமக்கு இன்னும் பலமாகிறது. (சங்கீதம் 18:46-ஐ வாசியுங்கள்.) ஆனால், கடவுள் உயிருள்ளவர் என்று சொன்ன உடனே, தாவீது உயிரில்லாத ஒரு பொருளோடு யெகோவாவை ஒப்பிட்டார். யெகோவா “என் கற்பாறை” என்று சொன்னார். ஏன் அப்படி சொன்னார்?

2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

2 இந்தக் கட்டுரையில், யெகோவா ஏன் கற்பாறை என்று சொல்லப்பட்டிருக்கிறார் என்றும், அவரைப் பற்றிய இந்த வர்ணிப்பிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம் என்றும் பார்ப்போம். அதுமட்டுமல்ல, யெகோவாவை எப்படி நம்முடைய கற்பாறையாக ஆக்கிக்கொள்ளலாம் என்றும், அவருடைய குணங்களை நாம் எப்படிக் காட்டலாம் என்றும் கற்றுக்கொள்வோம்.

யெகோவா எப்படி ஒரு கற்பாறையாக இருக்கிறார்?

3. எதற்காக பைபிள் “கற்பாறை” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது? (படத்தைப் பாருங்கள்.)

3 யெகோவாவுடைய குணங்களைப் புரிந்துகொள்ள உதவுவதற்காக பைபிள் “கற்பாறை” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. அவருக்குச் சமமானவர் வேறு யாரும் இல்லை என்று அவருடைய ஊழியர்கள் அவரைப் புகழ்ந்த சமயங்களில், இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். யெகோவா ஒரு “கற்பாறை” என்று முதல் தடவையாக உபாகமம் 32:4-ல் சொல்லப்பட்டிருக்கிறது. அன்னாள் ஜெபம் செய்தபோது, “உங்களைப் போல கற்பாறை யாரும் இல்லை” என்று சொன்னார். (1 சா. 2:2, அடிக்குறிப்பு.) ஆபகூக், யெகோவாவை “கற்பாறை போன்றவரே” என்று சொன்னார். (ஆப. 1:12) சங்கீதம் 73-ஐ எழுதியவர், யெகோவாவை “என் இதயத்தின் கற்பாறை” என்று சொன்னார். (சங். 73:26) சிலசமயங்களில் யெகோவாவே தன்னையே கற்பாறை என்றும் சொல்லியிருக்கிறார். (ஏசா. 44:8) யெகோவாவைக் கற்பாறை போல் ஆக்குகிற மூன்று குணங்களைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம். அவரை ‘நம்முடைய கற்பாறையாக’ எப்படி ஆக்கிக்கொள்ளலாம் என்றும் பார்க்கலாம்.—உபா. 32:31, அடிக்குறிப்பு.

யெகோவாவுடைய மக்கள் அவரைப் பாதுகாப்பு தருகிற ஒரு கற்பாறையாகப் பார்க்கிறார்கள் (பாரா 3)


4. யெகோவா எப்படிப் பாதுகாப்பான அடைக்கலமாக இருக்கிறார்? (சங்கீதம் 94:22)

4 யெகோவா பாதுகாப்பான அடைக்கலமாக இருப்பவர். ஒரு பயங்கரமான புயல் அடிக்கும்போது மலையில் இருக்கும் குகைகள் பாதுகாப்பு தரும். அதேமாதிரி, புயல் போன்ற பிரச்சினைகள் வரும்போது யெகோவா நம்மைப் பாதுகாப்பார். (சங்கீதம் 94:22-ஐ வாசியுங்கள்.) தன்னோடு இருக்கும் பந்தத்தைப் பாதுகாக்க அவர் நமக்கு உதவுகிறார், நமக்கு வருகிற கஷ்டங்கள் நம்மை நிரந்தரமாக பாதிக்காத மாதிரி அவர் பார்த்துக்கொள்கிறார். நம் சமாதானத்தைக் கெடுக்கிற விஷயங்களை ஒழிக்கப்போவதாகவும் அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார்.—எசே. 34:25, 26.

5. நாம் எப்படி யெகோவாவை நம்முடைய கற்பாறையாக ஆக்கிக்கொள்ளலாம்?

5 யெகோவாவை நம்முடைய கற்பாறையாக ஆக்கிக்கொள்வதற்கு ஒரு வழி, அவரிடம் ஜெபம் செய்வது. நாம் ஜெபம் செய்யும்போது ‘தேவசமாதானத்தை’ அவர் கொடுப்பார்; அது நம் இதயத்தையும் மனதையும் பாதுகாக்கும். (பிலி. 4:6, 7) ஆர்டெம் என்ற சகோதரருடைய உதாரணத்தை இப்போது பார்க்கலாம். விசுவாசத்துக்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் அடிக்கடி விசாரணை செய்யப்பட்டார். அவரை விசாரணை செய்த அதிகாரியும் அவரிடம் கடுமையாக நடந்துகொண்டார், அவமானப்படுத்தினார். அதைப் பற்றி ஆர்டெம் இப்படிச் சொன்னார்: “ஒவ்வொரு தடவை விசாரணைக்காகப் போகும்போதும் எனக்கு ரொம்பப் பயமாக இருந்தது. . . . நான் எப்போதுமே ஜெபம் செய்தேன்; மனசமாதானத்தையும் ஞானத்தையும் கேட்டேன். அந்த அதிகாரியின் யுக்திகள் என்னிடம் பலிக்கவில்லை. . . . யெகோவாவுடைய உதவி இருந்ததால், பாதுகாப்பான மதிலுக்குப் பின்னால் நிற்கிற மாதிரி உணர்ந்தேன்.”

6. நாம் ஏன் எப்போதுமே யெகோவாவை நம்பலாம்? (ஏசாயா 26:3, 4)

6 யெகோவா நம்பகமானவர். ஒரு பெரிய கற்பாறை எங்குமே நகராது; அது இருக்கிற இடத்திலேயே எப்போதும் இருக்கும். அதேமாதிரி, யெகோவாவும் எப்போதும் நம்மோடு இருப்பார். அவர் “என்றென்றுமுள்ள கற்பாறை” என்று பைபிள் சொல்கிறது. அதனால், அவரைத் தாராளமாக நம்பலாம். (ஏசாயா 26:3, 4-ஐ வாசியுங்கள்.) தன்னுடைய வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதற்கும்... நம்முடைய ஜெபங்களைக் கேட்பதற்கும்... நமக்கு உதவுவதற்கும்... அவர் என்றென்றும் இருப்பார். தன்னை வணங்குகிறவர்களுக்கு அவர் உண்மையாக இருக்கிறார்; அதனால் நாம் அவரை நம்பலாம். (2 சா. 22:26) நாம் செய்கிற வேலைகளை அவர் மறக்கவே மாட்டார், கண்டிப்பாக பலன் கொடுப்பார்.—எபி. 6:10; 11:6.

7. யெகோவாவை முழுமையாக நம்புவதால் என்ன நன்மை? (படத்தையும் பாருங்கள்.)

7 யெகோவாவை முழுமையாக நம்பும்போது அவரை நம் கற்பாறையாக ஆக்கிக்கொள்கிறோம். கஷ்டமான சமயங்களில்கூட அவருக்குக் கீழ்ப்படியும்போது நமக்குப் பலன் கிடைக்கும். (ஏசா. 48:17, 18) அவருடைய உதவியை அனுபவிக்க அனுபவிக்க அவர்மேல் இருக்கும் நம்பிக்கை வளரும். சில சூழ்நிலைகளில், யெகோவாவைத் தவிர வேறு யாராலுமே உதவி செய்ய முடியாமல் போகலாம்; அவர்மேல் இருக்கும் நம்பிக்கை அதிகமாகும்போது, அந்தமாதிரி சூழ்நிலைகளைக்கூட நாம் சந்திக்கத் தயாராக இருப்போம். அப்போதெல்லாம், யெகோவா எவ்வளவு நம்பகமானவர் என்பதை நம்மால் பார்க்க முடியும். விளாடிமர் என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “வாழ்க்கையிலேயே நான் யெகோவாவோடு ரொம்ப ரொம்ப நெருக்கமாக இருந்த காலம், ஜெயிலில் இருந்த காலம்தான்! அப்போது நான் மட்டும் தனியாக இருந்தேன். அந்தச் சூழ்நிலையை மாற்ற என்னால் எதுவும் செய்ய முடியாது என்று எனக்குத் தெரியும். அதனால், யெகோவாவை நான் இன்னும் அதிகமாக நம்ப கற்றுக்கொண்டேன்.”

யெகோவாவை நாம் முழுமையாக நம்பும்போது அவரை நம்முடைய கற்பாறையாக ஆக்கிக்கொள்கிறோம் (பாரா 7)


8. (அ) யெகோவா நிலையானவர் என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) யெகோவாவை நம்முடைய கற்பாறையாக ஆக்கிக்கொள்வதால் என்ன நன்மை? (சங்கீதம் 62:6, 7)

8 யெகோவா நிலையாகவும் உறுதியாகவும் இருப்பவர். ஒரு பிரமாண்டமான கற்பாறை உறுதியாக இருக்கும், எந்தவொரு சூழ்நிலையிலும் ஆட்டம்காணாது. அதேமாதிரி, யெகோவாவுடைய சுபாவமும் அவருடைய நோக்கமும் நிலையானது, அது என்றுமே மாறாது. (மல். 3:6) ஏதேன் தோட்டத்தில் கலகம் வெடித்தபோதுகூட மனிதர்களுக்காக வைத்திருந்த நோக்கத்தை அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை. யெகோவா “தன்னுடைய இயல்புக்கு மாறாகச் செயல்பட மாட்டார்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 தீ. 2:13) என்ன நடந்தாலும் சரி, மற்றவர்கள் என்ன செய்தாலும் சரி, யெகோவா மாற மாட்டார்; தன்னுடைய நோக்கத்தையும் நெறிமுறைகளையும் மாற்றிக்கொள்ள மாட்டார். எப்போதுமே உறுதியாக இருக்கும் நம்முடைய கடவுளை நாம் முழுமையாக நம்பலாம். அவர் நம்மைக் கண்டிப்பாகக் காப்பாற்றுவார், கொந்தளிப்பான சமயங்களைத் தாக்குப்பிடிக்கவும் உதவுவார்.—சங்கீதம் 62:6, 7-ஐ வாசியுங்கள்.

9. சகோதரி டாட்டியானாவின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

9 யெகோவாவைப் பற்றியும் அவருடைய நோக்கத்தைப் பற்றியும் நாம் ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது யெகோவாவை நம்முடைய கற்பாறையாக ஆக்கிக்கொள்ளலாம். அப்படிச் செய்யும்போது, என்னமாதிரி கஷ்டங்கள் வந்தாலும் நாம் மனதளவில் உறுதியாக இருப்போம், ஆட்டம்காண மாட்டோம். (சங். 16:8) டாட்டியானா என்ற சகோதரியும் அப்படித்தான் செய்தார். விசுவாசத்துக்காக அவர் வீட்டுக் காவலில் இருந்தார். “நான் வீட்டுக் காவலில் இருந்தபோது தனியாகத்தான் இருந்தேன். அது எனக்கு ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது, அடிக்கடி சோர்ந்துபோய்விட்டேன்” என்கிறார் டாட்டியானா. அவருக்கு வந்தச் சோதனை, யெகோவாவோடும் அவருடைய நோக்கத்தோடும் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று அவர் யோசித்துப் பார்த்தார். அதனால் அவரால் அதைச் சமாளிக்க முடிந்தது, மனதளவில் உடைந்துபோகாமல் இருக்கவும் முடிந்தது. அவர் தொடர்ந்து இப்படிச் சொல்கிறார்: “இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று யோசித்துப் பார்த்தேன். யெகோவாவுக்காகத்தான் இப்படி ஒரு சூழ்நிலையில் இருக்கிறேன் என்பது எனக்கு ஞாபகம் வந்தது. அதற்குப் பிறகு, நான் என்னைப் பற்றியே கவலைப்பட்டுக்கொண்டு இல்லை.”

10. யெகோவா நம்முடைய கற்பாறையாக இப்போது இருக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

10 ரொம்பச் சீக்கிரத்தில் பயங்கரமான சோதனைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். அப்போது, என்றுமே இல்லாத அளவுக்கு யெகோவாவை நாம் நம்ப வேண்டியிருக்கும். அதனால், இப்போதே அவர்மேல் இருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்துங்கள். தனக்கு உண்மையாக இருக்க அவர் உங்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். அதை எப்படிச் செய்வது? பைபிள் பதிவுகளையும், இன்று இருக்கிற சகோதர சகோதரிகளுடைய அனுபவங்களையும் படியுங்கள். தன்னுடைய ஊழியர்களுக்கு உதவி செய்ய யெகோவா எப்படிக் கற்பாறை மாதிரியான குணங்களைக் காட்டியிருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். இப்படியெல்லாம் செய்யும்போது, அவரை உங்களுடைய கற்பாறையாக ஆக்கிக்கொள்ள முடியும்.

யெகோவாவுடைய குணங்களைக் காட்டுங்கள்

11. நாம் ஏன் யெகோவாவுடைய குணங்களைக் காட்ட வேண்டும்? (“ இளம் சகோதரர்களுக்குச் சில குறிக்கோள்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

11 யெகோவா எப்படி ஒரு கற்பாறைபோல் இருக்கிறார் என்று இதுவரை பார்த்தோம். இப்போது, அவருடைய குணங்களை நாம் எப்படிக் காட்டலாம் என்று பார்க்கலாம். நாம் எந்தளவுக்கு அந்தக் குணங்களைக் காட்டுகிறோமோ அந்தளவுக்குச் சபையைப் பலப்படுத்த முடியும். உதாரணத்துக்கு, இயேசு சீமோனுக்கு “கேபா” (“பேதுரு” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது) என்ற பெயரைக் கொடுத்தார். அதன் அர்த்தம், “பாறாங்கல்.” (யோவா. 1:42) சபை உறுதியாக இருப்பதற்கு பேதுரு உதவுவார் என்றும் ஆறுதலின் ஊற்றாக இருப்பார் என்றும் இந்தப் பெயர் அர்த்தப்படுத்தியது. மூப்பர்களைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் “நிழல் தரும் பெரிய கற்பாறையாக இருப்பார்கள்” என்று பைபிள் சொல்கிறது. சபையில் இருக்கிறவர்களை அவர்கள் எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. (ஏசா. 32:2) சொல்லப்போனால், சகோதர சகோதரிகள் எல்லாரும் யெகோவாவுடைய குணங்களைக் காட்டும்போது முழு சபையும் நன்மையடையும்.—எபே. 5:1.

12. நாம் எப்படி மற்றவர்களுக்கு அடைக்கலமாக இருக்கலாம்?

12 அடைக்கலமாக இருங்கள். சில சமயங்களில், நம் சகோதர சகோதரிகளுக்கு நாம் உண்மையிலேயே ஒரு அடைக்கலம் போல் இருக்க வேண்டியிருக்கும். இயற்கை பேரழிவு, கலவரம், போர் போன்ற சமயங்களில் அப்படி இருக்க வேண்டியிருக்கலாம். இந்தக் “கடைசி நாட்களில்” நிலைமை மோசமாக ஆக ஆக, ஒருவருக்கு ஒருவர் உதவ நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். (2 தீ. 3:1) நம் சகோதர சகோதரிகளுக்குத் தேவைப்படும் அன்பையும் ஆறுதலையும் கொடுக்கும்போதும் நாம் அவர்களுக்கு அடைக்கலமாக இருக்கலாம். இதைச் செய்ய ஒரு வழி: ராஜ்ய மன்றத்தில் அவர்களோடு நன்றாகப் பேசிப் பழகுவதுதான். இப்படிச் செய்தால் சபையில் சந்தோஷம் நிறைந்திருக்கும். அன்பே இல்லாத வறண்ட பாலைவனமான உலகில் நாம் வாழ்கிறோம். கூட்டங்களுக்கு வரும்போது, அன்பு பூத்துக்குலுங்கும் சோலைவனத்துக்குள் வந்த உணர்வு சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்க வேண்டும்.

13. மூப்பர்கள் எப்படி மற்றவர்களுக்கு அடைக்கலமாக இருக்கலாம்? (படத்தையும் பாருங்கள்.)

13 சபையில் இருப்பவர்கள் உண்மையிலேயே புயலில் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி, புயல் மாதிரி பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி, மூப்பர்கள் அவர்களுக்கு அடைக்கலம் போல் இருக்கலாம். பேரழிவு சமயத்திலும் அவசர மருத்துவ உதவி தேவைப்படும் சமயத்திலும் மூப்பர்கள் உடனடியாகச் செயலில் இறங்குகிறார்கள். பைபிளில் இருந்தும் அவர்கள் ஆறுதல் கொடுக்கிறார்கள். ஒரு மூப்பர் மென்மையாக நடந்துகொள்ளும்போதும் காதுகொடுத்துக் கேட்கும்போதும் சகோதர சகோதரிகள் அவரிடம் தயக்கமில்லாமல் வந்து பேசுவார்கள். இப்படிப்பட்ட குணங்களை அவர்கள் காட்டும்போது, ‘அன்பு காட்ட மூப்பர்கள் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு சகோதர சகோதரிகளுக்கு வரும். அதோடு, மூப்பர்கள் பைபிளிலிருந்து ஆலோசனை கொடுக்கும்போதும் அதைக் கேட்டு நடப்பது சுலபமாக இருக்கும்.—1 தெ. 2:7, 8, 11.

புயல் அடித்தாலும் சரி, புயல் மாதிரி பிரச்சினைகள் வந்தாலும் சரி, மூப்பர்கள் அடைக்கலமாக இருக்கிறார்கள் (பாரா 13) a


14. நாம் எப்படி நம்பகமானவர் என்று பெயர் எடுக்கலாம்?

14 நம்பகமானவர்களாக இருங்கள். கஷ்டமான சமயங்களில், உதவி செய்ய நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கை நம் சகோதர சகோதரிகளுக்கு வர வேண்டும். (நீதி. 17:17) நம்பகமானவர் என்ற பெயரை எப்படிச் சம்பாதிப்பது? யெகோவாவின் குணங்களை எப்போதும் காட்டுவதன் மூலம் சம்பாதிக்கலாம். உதாரணத்துக்கு, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுங்கள்; சொன்ன நேரத்துக்கு எல்லாவற்றையும் செய்யுங்கள். (மத். 5:37) அதோடு, மற்றவர்களுக்கு தேவைப்படும் உதவியைத் தயங்காமல் செய்யுங்கள். உங்களுக்கு ஒரு நியமிப்பு கிடைத்தால், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று அறிவுரை கொடுக்கப்பட்டிருக்கிறதோ அப்படியே செய்யுங்கள்.

15. மூப்பர்கள் நம்பகமானவர்களாக இருக்கும்போது சபையில் இருப்பவர்கள் எப்படி நன்மையடைவார்கள்?

15 நம்பிக்கைக்குரிய மூப்பர்கள் சபைக்கு ஒரு ஆசீர்வாதம்! உதவி தேவைப்படும்போது தொகுதி கண்காணியிடமோ மற்ற மூப்பர்களிடமோ போகலாம் என்ற உணர்வு பிரஸ்தாபிகளுக்கு வந்தால் அவர்களுடைய கவலை குறையும். ஆலோசனை கொடுக்கும்போது, மூப்பர்கள் தங்கள் சொந்தக் கருத்துகளைச் சொல்லாமல் பைபிளில் இருந்தும் பிரசுரங்களில் இருந்தும் அதைக் கொடுக்கும்போது சபையில் இருப்பவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதிக்க முடியும். பிரஸ்தாபிகள் சொல்லும் தனிப்பட்ட விஷயங்களை மூப்பர்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளும்போதும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும்போதும் சகோதர சகோதரிகள் அவர்களை இன்னும் அதிகமாக நம்புவார்கள்.

16. நாம் உறுதியானவர்களாக இருக்கும்போது நமக்கும் மற்றவர்களுக்கும் என்ன நன்மை?

16 நிலையானவர்களாகவும் உறுதியானவர்களாகவும் இருங்கள். சரியானதைச் செய்ய உறுதியாக இருக்கும்போதும் பைபிள் நியமங்களின்படி முடிவுகளை எடுக்கும்போதும், மற்றவர்கள் நம்மிடமிருந்து கற்றுக்கொள்வார்கள். விசுவாசமும் யெகோவாவைப் பற்றிய அறிவும் வளர வளர சத்தியத்தில் நாம் இன்னும் உறுதியாக இருப்போம். பொய் போதனைகளாலோ இந்த உலகத்தின் யோசனைகளாலோ நாம் ஆட்டம்காண மாட்டோம், குழம்பிப் போக மாட்டோம். (எபே. 4:14; யாக். 1:6-8) யெகோவாமேலும் அவருடைய வாக்குறுதிகள்மேலும் நமக்கு விசுவாசம் இருப்பதால், கெட்ட செய்திகளைக் கேட்கும்போதும் நாம் நிதானம் இழந்துவிட மாட்டோம். (சங். 112:7, 8) சோதனைகளைச் சந்திப்பவர்களுக்கும் நாம் உதவுவோம்.—1 தெ. 3:2, 3.

17. சபையில் இருப்பவர்கள் உறுதியானவர்களாக இருப்பதற்கு மூப்பர்கள் எப்படி உதவலாம்?

17 மூப்பர்கள், பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாதவர்களாகவும், தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும், ஒழுங்குள்ளவர்களாகவும், நியாயமானவர்களாகவும் நடந்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மூப்பர்கள் உறுதியானவர்களாக இருப்பார்கள்; விசுவாசத்தில் உறுதியாக இருக்க மற்றவர்களுக்கும் உதவுவார்கள். “சத்திய வார்த்தையை உறுதியோடு” பிடித்துக்கொள்வதன் மூலம் சபையில் இருப்பவர்களைப் பலப்படுத்துவார்கள். (தீத். 1:9; 1 தீ. 3:1-3) தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும் ஊழியத்துக்குப் போவதற்கும் தனிப்பட்ட படிப்பு படிப்பதற்கும் மூப்பர்கள் பிரஸ்தாபிகளுக்கு உதவுகிறார்கள்; இந்த விஷயங்களில் அவர்களே ஒரு நல்ல முன்மாதிரியாகவும் இருக்கிறார்கள். மேய்ப்பு சந்திப்பின்போதும் இதையெல்லாம் செய்ய உற்சாகப்படுத்துகிறார்கள். பிரஸ்தாபிகளுக்குக் கஷ்டமான சூழ்நிலைகள் வரும்போது, யெகோவாமேலும் அவருடைய வாக்குறுதிகள்மேலும் கண்களைப் பதியவைக்க மூப்பர்கள் அவர்களை உற்சாகப்படுத்தலாம்.

18. நாம் ஏன் யெகோவாவைப் புகழவும் அவரிடம் நெருங்கிப் போகவும் ஆசைப்படுகிறோம்? (“ யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கு ஒரு வழி” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

18 “என் கற்பாறையாகிய யெகோவா புகழப்படட்டும்” என்று தாவீது ராஜா சொன்னார். யெகோவாவின் அருமையான குணங்களைப் பற்றி யோசித்துப் பார்த்தப் பிறகு, உங்களுக்கும் அப்படி சொல்ல தோன்றுகிறதா? (சங். 144:1) யெகோவா நம்மை என்றுமே கைவிட மாட்டார். வாழ்நாள் முழுக்க, நமக்கு வயதானாலும் சரி, அவரோடு நெருங்கி இருக்க அவர் உதவுவார். “அவரே என் கற்பாறை” என்று தைரியமாக நாம் சொல்லலாம்.—சங். 92:14, 15.

பாட்டு 150 மீட்புப் பெற கடவுளைத் தேடுங்கள்

a பட விளக்கம்: ராஜ்ய மன்றத்தில் ஒரு சகோதரி, இரண்டு மூப்பர்களிடம் தயக்கமில்லாமல் வந்து பேசுகிறார்.