Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 24

பாட்டு 24 வாருங்கள் யெகோவாவின் மலைக்கு!

என்றென்றும் யெகோவாவின் விருந்தாளியாக இருங்கள்!

என்றென்றும் யெகோவாவின் விருந்தாளியாக இருங்கள்!

“யெகோவாவே, யார் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருக்க முடியும்?”சங். 15:1.

என்ன கற்றுக்கொள்வோம்?

எப்போதுமே யெகோவாவின் நண்பர்களாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்... அவருடைய நண்பர்களை நாம் எப்படி நடத்த வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார்... என்றெல்லாம் கற்றுக்கொள்வோம்.

1. சங்கீதம் 15:1-5-லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்வோம்?

 யெகோவாவுக்குத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து அவருடைய நெருக்கமான நண்பர்களாக இருப்பவர்கள் அவருடைய கூடாரத்தில் விருந்தாளிகளாக இருக்க முடியும் என்பதைப் பற்றிப் போன கட்டுரையில் பார்த்தோம். ஆனால், யெகோவாவுடைய நெருக்கமான நண்பர்களாக இருக்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? இதைப் பற்றி சங்கீதம் 15 சொல்கிறது. (சங்கீதம் 15:1-5-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் நண்பர்களாவதற்கு உதவும் சில நடைமுறையான பாடங்களைப் பற்றி இந்தச் சங்கீதத்தில் நாம் கற்றுக்கொள்வோம்.

2. எதை மனதில் வைத்து யெகோவாவின் கூடாரத்தைப் பற்றி தாவீது ஒருவேளை சொல்லியிருக்கலாம்?

2 “யெகோவாவே, யார் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருக்க முடியும்? யார் உங்களுடைய பரிசுத்த மலையில் தங்க முடியும்?” என்ற கேள்விகளோடு சங்கீதம் 15 ஆரம்பிக்கிறது. (சங். 15:1) யெகோவாவின் ‘கூடாரம்’ என்று இங்கே தாவீது சொன்னபோது, அந்தச் சமயத்தில் கிபியோனில் இருந்த வழிபாட்டைக் கூடாரத்தை மனதில் வைத்துச் சொல்லியிருக்கலாம். கடவுளுடைய “பரிசுத்த மலை” என்று அவர் சொன்னபோது, எருசலேமில் இருந்த சீயோனை மனதில் வைத்து அவர் சொல்லியிருக்கலாம். கிபியோனுக்குத் தெற்கே கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரத்தில்தான் சீயோன் இருந்தது. அங்கேதான், ஒப்பந்தப் பெட்டியை வைப்பதற்காக தாவீது ஒரு கூடாரத்தை அமைத்தார். ஆலயம் கட்டப்படும்வரை அது அங்கேதான் இருந்தது.—2 சா. 6:17.

3. சங்கீதம் 15-ஐப் புரிந்துகொள்ள நாம் ஏன் ஆசைப்படுகிறோம்? (படத்தையும் பாருங்கள்.)

3 வழிபாட்டுக் கூடாரத்தில் சேவை செய்யும் வாய்ப்பு பெரும்பாலான இஸ்ரவேலர்களுக்குக் கிடைக்கவில்லை. ஒப்பந்தப் பெட்டி வைக்கப்பட்டிருந்த அந்தக் கூடாரத்துக்குள் ஒருசிலரால் மட்டும்தான் போக முடிந்தது. ஆனால், யெகோவாவின் அடையாள அர்த்தமுள்ள கூடாரத்தில் அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் எல்லாராலுமே விருந்தாளிகளாக இருக்க முடிந்தது. ஆனால், அதற்கு அவர்கள் எப்போதும் யெகோவாவின் நண்பர்களாக இருக்க வேண்டியிருந்தது. இன்று நாமும் யெகோவாவின் நண்பர்களாக இருக்கத்தான் ஆசைப்படுகிறோம். நாம் எப்போதும் யெகோவாவின் நண்பர்களாக இருக்க என்னென்ன குணங்கள் நமக்குத் தேவை என்று சங்கீதம் 15-ல் தாவீது சொல்லியிருக்கிறார்.

தாவீதின் நாளில் வாழ்ந்த இஸ்ரவேலர்களால், யெகோவாவின் கூடாரத்தில் விருந்தாளிகளாக இருப்பதென்றால் என்ன என்பதைச் சுலபமாகக் கற்பனை செய்து பார்க்க முடிந்தது (பாரா 3)


குற்றமில்லாமல் நடங்கள், எப்போதும் சரியானதைச் செய்யுங்கள்

4. நாம் ஞானஸ்நானம் எடுத்தால் மட்டும் போதும் என்று யெகோவா நினைக்கிறாரா? விளக்குங்கள். (ஏசாயா 48:1)

4 கடவுளுடைய நண்பராக இருக்கும் ஒருவர் ‘குற்றமில்லாமல் நடந்து, எப்போதும் சரியானதைச் செய்வார்’ என்று சங்கீதம் 15:2 சொல்கிறது. நாம் இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால், நம்மால் உண்மையிலேயே ‘குற்றமில்லாமல் நடக்க’ முடியுமா? கண்டிப்பாக முடியும்! மனிதர்கள் எல்லாருமே குறை உள்ளவர்கள்தான். ஆனால், யெகோவாவுக்குக் கீழ்ப்படிய நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்தால், நாம் ‘குற்றமில்லாமல் நடப்பதாக’ அவர் நினைப்பார். கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கும்போது, அவரோடு நடப்பதற்கு முதல் படியைத்தான் எடுத்து வைக்கிறோம். பைபிள் காலங்களில், ஒருவர் இஸ்ரவேல் தேசத்தில் பிறந்தார் என்பதற்காக அவர் யெகோவாவின் விருந்தாளியாக ஆகிவிட்டார் என்று சொல்ல முடியாது. அவர்களில் சிலர் அவரை வணங்கினார்கள், ஆனால் “உண்மையோடும் நீதியோடும்” வணங்கவில்லை. (ஏசாயா 48:1-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் நண்பர்களாக இருக்க வேண்டுமென்று மனதார ஆசைப்பட்ட இஸ்ரவேலர்கள், யெகோவா என்ன எதிர்பார்க்கிறார் என்று தெரிந்துகொண்டு அதன்படி நடக்க வேண்டியிருந்தது. அதேபோல் இன்றும், யெகோவாவின் நண்பர்களாக இருக்க ஆசைப்படுகிறவர்கள் வெறுமனே ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவின் சாட்சியாக மாறினால் மட்டும் போதாது. நாம் ‘எப்போதும் சரியானதைச் செய்ய’ வேண்டும். எப்படி?

5. நாம் எல்லா விஷயத்திலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறோம் என்று எப்போது சொல்ல முடியும்?

5 யெகோவாவின் பார்வையில், ‘குற்றமில்லாமல் நடந்து, எப்போதும் சரியானதைச் செய்வது’ என்றால், வெறுமனே ராஜ்ய மன்றத்துக்குப் போய்த் தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்வது மட்டும் கிடையாது. (1 சா. 15:22) நம் வாழ்க்கையில் என்ன செய்தாலும் சரி, கடவுளுக்குப் பிடித்த மாதிரி நடக்க முயற்சி செய்ய வேண்டும்; தனியாக இருக்கும்போதும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். (நீதி. 3:6; பிர. 12:13, 14) சின்னச் சின்ன விஷயங்களில்கூட நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய முயற்சி எடுப்பது ரொம்ப முக்கியம். அப்போதுதான், அவர்மேல் உண்மையான அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்ட முடியும், அவருக்கும் நம்மை ரொம்பப் பிடிக்கும்.—யோவா. 14:23; 1 யோ. 5:3.

6. எபிரெயர் 6:10-12 சொல்வதுபோல, இதுவரை நாம் செய்த நல்ல விஷயங்களைவிட எது ரொம்ப முக்கியம்?

6 இதுவரைக்கும் நாம் யெகோவாவுக்காகச் செய்த எல்லாவற்றையும் நினைத்து அவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார். ஆனால், இதுவரை நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறோம் என்பதற்காக இனி எப்போதுமே யெகோவாவின் கூடாரத்தில் விருந்தாளிகளாக இருப்போம் என்று அர்த்தம் கிடையாது. இதைத்தான் எபிரெயர் 6:10-12 சொல்கிறது. (வாசியுங்கள்.) நாம் இதுவரை செய்த நல்ல விஷயங்களை யெகோவா மறப்பதில்லை. ஆனால் “கடைசிவரை” முழு இதயத்தோடு நாம் அவருக்குச் சேவை செய்ய வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார். நாம் “சோர்ந்துபோகாமல் இருந்தால்,” என்றென்றும் அவருடைய நண்பராக இருக்கும் வாய்ப்பை அவர் நமக்குக் கொடுப்பார்.—கலா. 6:9.

இதயத்தில் உண்மையைப் பேசுங்கள்

7. இதயத்தில் உண்மையைப் பேசுவது என்றால் என்ன?

7 யெகோவாவின் கூடாரத்தில் விருந்தாளிகளாக இருக்க ஆசைப்படுகிறவர்கள் ‘இதயத்தில் உண்மையைப் பேச’ வேண்டும். (சங். 15:2) அதற்கு, நாம் பொய் பேசாமல் இருப்பது மட்டும் போதாது. நாம் என்ன சொன்னாலும் சரி, என்ன செய்தாலும் சரி, எல்லாவற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். (எபி. 13:18) இது ரொம்ப முக்கியம். ஏனென்றால், “ஏமாற்றுக்காரனை யெகோவா அருவருக்கிறார். ஆனால், நேர்மையானவனுக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார்.”—நீதி. 3:32.

8. நாம் எப்படி நடந்துகொள்ளக் கூடாது?

8 மற்றவர்கள் பார்க்கும்போது மட்டும் கடவுளுக்குக் கீழ்ப்படிவதுபோல் காட்டிக்கொண்டு, தனியாக இருக்கும்போது அவருக்குப் பிடிக்காததைச் செய்யும் ஒருவரை ‘இதயத்தில் உண்மையைப் பேசுகிறவர்’ என்று சொல்ல முடியாது. (ஏசா. 29:13) ‘இதயத்தில் உண்மையைப் பேசுகிறவர்’ ஏமாற்றுக்காரராக இருக்க மாட்டார். ஏமாற்றுக்காரராக இருக்கும் ஒருவர், யெகோவாவின் சட்டங்கள் எப்போதும் நல்லவைதானா என்று சந்தேகப்பட ஆரம்பிக்கலாம். (யாக். 1:5-8) பிறகு, அவ்வளவாக முக்கியமில்லை என்று அவர் நினைக்கும் விஷயங்களில் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போகலாம். அப்படிக் கீழ்ப்படியாமல் போனதால் எந்தப் பிரச்சினையும் வராததுபோல் அவருக்குத் தெரியும்போது, இன்னும் மோசமான விஷயங்களைச் செய்ய அவர் துணிந்துவிடலாம். அப்போது, அவருடைய வணக்கம் போலித்தனமாகிவிடும். (பிர. 8:11) ஆனால், நாம் எல்லா விஷயத்திலும் நேர்மையாக நடக்கத்தான் ஆசைப்படுகிறோம்.

9. நாத்தான்வேலை இயேசு முதன்முதலாகச் சந்தித்தபோது என்ன நடந்தது, அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (படத்தையும் பாருங்கள்.)

9 நாத்தான்வேலை இயேசு முதன்முதலாகச் சந்தித்த சம்பவத்திலிருந்து, ‘இதயத்தில் உண்மையைப் பேசுவது’ ரொம்ப முக்கியம் என்று தெரிந்துகொள்கிறோம். பிலிப்பு தன் நண்பரான நாத்தான்வேலை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு வந்தபோது ஆச்சரியமான ஒரு விஷயம் நடந்தது. அதுவரை நாத்தான்வேலை இயேசு சந்தித்ததே இல்லை என்றாலும், “இதோ! கள்ளம்கபடமில்லாத உத்தம இஸ்ரவேலன்” என்று சொன்னார். (யோவா. 1:47) மற்ற சீஷர்களும் நேர்மையானவர்கள் என்று இயேசுவுக்குத் தெரியும், ஆனால் நாத்தான்வேல் கள்ளம்கபடமில்லாமல் ரொம்பவே நேர்மையாக இருந்ததை இயேசு பார்த்தார். நாத்தான்வேலுக்கும் நம்மைப் போலவே குறைகள் இருந்தது உண்மைதான். ஆனால், அவரிடம் எந்தப் போலித்தனமும் சூதுவாதும் இல்லை. அது இயேசுவுக்கு ரொம்பப் பிடித்திருந்தது, அதனால் நாத்தான்வேலைப் பாராட்டினார். நம்மைப் பார்த்தும் இயேசு அப்படிப் பாராட்டினால் நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!

நாத்தான்வேலை பிலிப்பு இயேசுவிடம் கூட்டிக்கொண்டு போனபோது, “இதோ! கள்ளம்கபடமில்லாத உத்தம இஸ்ரவேலன்” என்று இயேசு சொன்னார். நம்மைப் பார்த்தும் அவர் அப்படிச் சொல்வாரா? (பாரா 9)


10. நாம் ஏன் மற்றவர்களைப் பற்றித் தப்பாகப் பேசக் கூடாது? (யாக்கோபு 1:26)

10 யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கும் வேறு சில விஷயங்களைப் பற்றியும் சங்கீதம் 15-ல் சொல்லப்பட்டிருக்கிறது. மற்றவர்களை நாம் நடத்தும் விதம் எவ்வளவு முக்கியம் என்று அதிலிருந்து தெரிந்துகொள்கிறோம். உதாரணத்துக்கு, யெகோவாவின் கூடாரத்தில் விருந்தாளியாக இருக்கும் ஒருவர், ‘மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேச மாட்டார். மற்றவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டார். நண்பர்களைப் பற்றிக் கேவலமாகப் பேச மாட்டார்’ என்றெல்லாம் சங்கீதம் 15:3 சொல்கிறது. மற்றவர்களைப் பற்றி நாம் தப்பாகப் பேசினால் அது அவர்களை ரொம்பவே பாதிக்கும், நம்மாலும் யெகோவாவின் கூடாரத்தில் விருந்தாளியாக இருக்க முடியாது.—யாக்கோபு 1:26-ஐ வாசியுங்கள்.

11. இல்லாததையும் பொல்லாததையும் பேசுவது என்றால் என்ன, அப்படிப் பேசுகிறவர்கள் மனம் திருந்தாவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

11 இல்லாததையும் பொல்லாததையும் பேசுவதைப் பற்றி சங்கீதக்காரர் குறிப்பாகச் சொல்கிறார். இல்லாததையும் பொல்லாததையும் பேசுவது என்றால், பொய்யான விஷயங்களைச் சொல்லி ஒருவருடைய பெயரைக் கெடுத்துவிடுவது. அப்படிப் பேசுகிறவர்கள் மனம் திருந்தாவிட்டால் யெகோவாவின் சாட்சிகளுடைய சபையிலிருந்து நீக்கப்படுவார்கள்.—எரே. 17:10.

12-13. என்னென்ன சூழ்நிலைகளில் நமக்கே தெரியாமல் நம் நண்பர்களைப் பற்றி நாம் கேவலமாகப் பேசிவிடலாம்? (படத்தையும் பாருங்கள்.)

12 யெகோவாவின் கூடாரத்தில் விருந்தாளிகளாக இருப்பவர்கள் மற்றவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டார்கள் என்றும், தங்கள் நண்பர்களைப் பற்றிக் கேவலமாகப் பேச மாட்டார்கள் என்றும் சங்கீதம் 15:3 சொல்கிறது. நம் நண்பர்களைப் பற்றிக் கேவலமாகப் பேச என்ன வாய்ப்புகள் இருக்கின்றன?

13 நமக்கே தெரியாமல் நாம் மற்றவர்களைப் பற்றித் தப்பான தகவல்களைப் பரப்பிவிடலாம். உதாரணத்துக்கு, (1) ஒரு சகோதரி முழுநேர சேவையை விட்டிருக்கலாம், (2) ஒரு தம்பதி பெத்தேலைவிட்டு வந்திருக்கலாம், அல்லது (3) ஒரு சகோதரர் இனியும் ஒரு மூப்பராக அல்லது உதவி ஊழியராக சேவை செய்யாமல் இருக்கலாம். இந்தச் சகோதர சகோதரிகள் ஏதோ தப்பு செய்ததால்தான் இப்படி நடந்திருக்கும் என்று நாம் மற்றவர்களிடம் சொல்வது சரியாக இருக்குமா? உண்மையில், நமக்குத் தெரியாத நிறைய காரணங்களுக்காக இந்த மாற்றங்கள் நடந்திருக்கலாம். அதுமட்டுமல்ல, யெகோவாவின் கூடாரத்தில் விருந்தாளியாக இருக்கும் ஒருவர் ‘மற்றவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டார். நண்பர்களைப் பற்றிக் கேவலமாகப் பேச மாட்டார்.’

மற்றவர்களைப் பற்றித் தேவையில்லாத விஷயங்களைப் பரப்புவது சுலபம், ஆனால் அது இல்லாததையும் பொல்லாததையும் பேசும் அளவுக்குப் போய்விடலாம் (பாராக்கள் 12-13)


யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு மதிப்பு மரியாதை காட்டுங்கள்

14. ஒருவர் கீழ்த்தரமாக நடக்கிறாரா இல்லையா என்று எதை வைத்துச் சொல்லலாம்?

14 யெகோவாவின் நண்பர்கள் ‘கீழ்த்தரமாக நடக்கிறவர்களோடு சேர மாட்டார்கள்’ என்று சங்கீதம் 15:4 சொல்கிறது. ஒருவர் கீழ்த்தரமாக நடக்கிறாரா இல்லையா என்று நமக்கு எப்படித் தெரியும்? உண்மையில், அதை முடிவு செய்யும் தகுதி நமக்கு இல்லை. ஏனென்றால், நாம் பாவ இயல்புள்ளவர்கள். சிலருடைய சுபாவம் நமக்குப் பிடித்திருப்பதால் அவர்களோடு நாம் நன்றாக ஒத்துப்போகலாம்; அதேசமயத்தில், சிலருடைய சுபாவம் நமக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனாலும், யார் ‘கீழ்த்தரமாக நடப்பதாக’ யெகோவா நினைக்கிறாரோ அவர்களோடு மட்டும்தான் நாம் பழகக் கூடாது. (1 கொ. 5:11) மனம் திருந்தாமல் தவறு செய்துகொண்டே இருப்பவர்கள்... நம் நம்பிக்கைகளை அவமதிக்கிறவர்கள்... யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்பைக் கெடுக்க நினைப்பவர்கள்... போன்றவர்கள்தான் யெகோவாவின் பார்வையில் கீழ்த்தரமாக நடக்கிறார்கள்.—நீதி. 13:20.

15. “யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு” மதிப்பு மரியாதை காட்டுவதற்கான ஒரு வழி என்ன?

15 அடுத்ததாக, “யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு” மதிப்பு மரியாதை காட்டும்படி சங்கீதம் 15:4 சொல்கிறது. அதனால், யெகோவாவின் நண்பர்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்ள நாம் வாய்ப்புகளைத் தேட வேண்டும். (ரோ. 12:10) அதை எப்படிச் செய்யலாம்? அதற்கு ஒரு வழியைப் பற்றி சங்கீதம் 15:4 சொல்கிறது. யெகோவாவின் கூடாரத்தில் விருந்தாளிகளாக இருப்பவர்கள் ‘எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் கொடுத்த வாக்கை மீற மாட்டார்கள்’ என்று அது சொல்கிறது. கொடுத்த வாக்கை நாம் மீறும்போது அது மற்றவர்களைக் கண்டிப்பாகக் கஷ்டப்படுத்தும். (மத். 5:37) உதாரணமாக, தன்னுடைய விருந்தாளிகள் தங்களுடைய திருமண உறுதிமொழியைக் காப்பாற்ற வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். அதோடு, பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சியைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுகிறார். யெகோவாமேலும் மற்றவர்கள்மேலும் நமக்கு அன்பு இருந்தால், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்.

16. யெகோவாவின் நண்பர்களுக்கு மதிப்பு மரியாதை காட்ட இன்னொரு வழி என்ன?

16 யெகோவாவின் நண்பர்களுக்கு மதிப்பு மரியாதை காட்டுவதற்கான இன்னொரு வழி, அவர்களைத் தாராளமாக உபசரிப்பதுதான். (ரோ. 12:13) கூட்டங்களின்போதும் ஊழியத்தின்போதும் மட்டுமல்ல, மற்ற சமயங்களிலும் சகோதர சகோதரிகளோடு நாம் நேரம் செலவழித்தால், அவர்களோடும் யெகோவாவோடும் இன்னும் நெருக்கமாக முடியும். அதுமட்டுமல்ல, உபசரிக்கும் குணத்தை நாம் காட்டும்போது யெகோவாவைப் போல நடந்துகொள்ள முடியும்.

பண ஆசை இல்லாமல் வாழுங்கள்

17. சங்கீதம் 15 ஏன் பணத்தைப் பற்றிச் சொல்கிறது?

17 யெகோவாவின் கூடாரத்தில் விருந்தாளிகளாக இருப்பவர்கள் ‘வட்டிக்குக் கடன் கொடுக்க மாட்டார்கள். அப்பாவிகள்மேல் குற்றம் சுமத்துவதற்காக லஞ்சம் வாங்க மாட்டார்கள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. (சங். 15:5) ஏன் இந்தச் சின்ன சங்கீதத்தில்கூட பணத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது? பணத்துக்கு நாம் அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்துவிட்டால் மற்றவர்களைக் கஷ்டப்படுத்திவிடுவோம், யெகோவாவோடு இருக்கும் நட்பையும் இழந்துவிடுவோம். (1 தீ. 6:10) பைபிள் காலங்களில் வாழ்ந்த சிலர், ஏழைகளாக இருந்த தங்கள் சகோதரர்களிடம் வட்டிக்குக் கடன் கொடுத்தார்கள். அதோடு, சில நீதிபதிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு அப்பாவிகளுக்கு அநியாயமாகத் தீர்ப்பு கொடுத்தார்கள். இப்படியெல்லாம் செய்வதை யெகோவா அடியோடு வெறுக்கிறார்.—எசே. 22:12.

18. பணத்துக்கு நாம் எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்? (எபிரெயர் 13:5)

18 பணத்துக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று நாம் யோசித்துப் பார்ப்பது ரொம்ப முக்கியம். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் அடிக்கடி பணத்தைப் பற்றியும் என்ன வாங்கலாம் என்பதைப் பற்றியுமே யோசித்துக்கொண்டிருக்கிறேனா? நான் கடன் வாங்கியிருந்தால், கடன் கொடுத்தவருக்குப் பணம் தேவைப்படாது என்று நினைத்துக்கொண்டு அதைத் திருப்பித் தராமல் இழுத்தடிக்கிறேனா? பணம் இருப்பதால் என்னை நானே பெரிய ஆளாக நினைத்துக்கொள்கிறேனா, மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்கத் தயங்குகிறேனா? சில சகோதர சகோதரிகளுக்குப் பணம் இருக்கிறது என்பதற்காக அவர்கள் பண ஆசைபிடித்தவர்கள் என்று முடிவுகட்டிவிடுகிறேனா? நிறைய பணம் வைத்திருப்பவர்களிடம் மட்டும் நான் நெருங்கிப் பழகிவிட்டு, வசதி இல்லாதவர்களைவிட்டு ஒதுங்கியிருக்கிறேனா?’ இந்தக் கேள்விகளை நாம் யோசித்துப் பார்ப்பது முக்கியம். ஏனென்றால், யெகோவாவின் கூடாரத்தில் விருந்தாளிகளாக இருக்கும் பெரிய ஆசீர்வாதம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதை இழக்காமல் இருப்பதற்கு, பண ஆசை இல்லாமல் நாம் வாழ வேண்டும். அப்படிச் செய்தால், யெகோவா ஒருபோதும் நம்மைக் கைவிட மாட்டார்!எபிரெயர் 13:5-ஐ வாசியுங்கள்.

யெகோவா தன் நண்பர்களை நேசிக்கிறார்

19. சங்கீதம் 15-ல் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களையெல்லாம் நாம் செய்ய வேண்டுமென்று யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார்?

19 “இப்படிப்பட்டவன் அசைக்கப்படவே மாட்டான்” என்ற வாக்குறுதியோடு சங்கீதம் 15 முடிவடைகிறது. (சங். 15:5) இந்தச் சங்கீதத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களையெல்லாம் யெகோவா நம்மிடம் ஏன் எதிர்பார்க்கிறார் என்று இப்போது நமக்குப் புரிகிறது, இல்லையா? நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார். அதனால், நமக்கு நல்ல நல்ல ஆலோசனைகளைக் கொடுக்கிறார். அதன்படி நடக்கும்போது அவருடைய ஆசீர்வாதமும் பாதுகாப்பும் நமக்குக் கிடைக்கும்.—ஏசா. 48:17.

20. யெகோவாவின் விருந்தாளிகளுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கிறது?

20 யெகோவாவின் கூடாரத்தில் விருந்தாளிகளாக இருப்பவர்களுக்கு அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது. உண்மையுள்ள பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்குப் பரலோகத்தில் சந்தோஷமான எதிர்காலம் காத்திருக்கிறது. ஏனென்றால், அவர்கள் ‘தங்குவதற்கு நிறைய இடங்களை’ இயேசு அங்கே தயார்படுத்தியிருக்கிறார். (யோவா. 14:2) பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்கள் வெளிப்படுத்துதல் 21:3-ல் கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் நிறைவேறுவதற்காகக் காத்திருக்கிறார்கள். யெகோவா தன்னுடைய கூடாரத்தில் என்றென்றும் விருந்தாளிகளாக இருக்க நம்மை அன்போடு அழைத்திருப்பது நமக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட கௌரவம்!

பாட்டு 39 யெகோவாவிடம் நல்ல பெயர் எடுப்போம்!