Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகளாவிய அறிக்கை

உலகளாவிய அறிக்கை

உலகளாவிய அறிக்கை

ஆப்பிரிக்கா

நாடுகளின் எண்ணிக்கை: 56

மக்கள் தொகை: 77,03,01,093

பிரஸ்தாபிகள்: 9,83,057

பைபிள் படிப்புகள்: 17,69,182

சஹாரா பாலைவனத்திலும் நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நாஃபிஸாட்டூ என்ற இளம் பெண்ணுக்கு 17 வயது. நைஜர் நாட்டின் வடக்கே சுரங்கத் தொழில் நடைபெறும் நகரத்தில் அவள் வசிக்கிறாள். ஒருமுறை, பள்ளியில் அவளுடன் படிக்கும் சில பெண்கள் ஆபாசத்தைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன் அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டாள். ஒரு பெண் மட்டும் அவளுக்குப் பின்னால் சென்று, ஏன் போகிறாள் என்பதாகக் கேட்டாள். அவர்கள் பேசிய பேச்சு தனக்குப் பிடிக்கவில்லை என நாஃபிஸாட்டூ சொன்னாள். அதைக் கேட்டவுடன் அந்தப் பெண் கேலி செய்ய ஆரம்பித்தாள்; ஆபாச படங்களைப் பார்ப்பதால் கெட்டுப் போகப் போவதில்லை என சொன்னாள். கடவுளுக்கு அதெல்லாம் பிடிக்காது என்பதால் அதை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது என நாஃபிஸாட்டூ விளக்கினாள். பிறகு, இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தை தன்னுடைய ஸ்கூல் பையிலிருந்து எடுத்து, ஆபாசத்தின் ஆபத்துக்களை விளக்கும் பகுதியை அந்தப் பெண்ணுக்குக் காட்டினாள். அதன்பின் பைபிளை எடுத்து, 2 கொரிந்தியர் 7:1-ஐ வாசித்துக் காட்டினாள். ஒழுக்கக்கேடான வீடியோக்களைப் பார்க்கும்போது தனக்குள் இனம்புரியாத கிளர்ச்சி ஏற்படுவதாக அந்தப் பெண் ஒத்துக்கொண்டாள். இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம் ஒன்றை தனக்கும் தருமாறு கேட்டாள். நாஃபிஸாட்டூவும் ஒரு புத்தகத்தைக் கொடுத்தாள். அதன்பின் நடந்ததை அவளே சொல்கிறாள்: “அடுத்த முறை அவளைப் பார்த்தபோது, தனியாக இருந்தாள். ஆகவே அவளுடைய ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் எங்கே என்று கேட்டேன். ‘இந்தப் புத்தகம்தான் இப்போது என்னுடைய ஃபிரெண்ட்’ என அவள் சொன்னாள். நான் அவளுக்கு பைபிளைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். நினைவு ஆசரிப்புக்கும்கூட வந்திருந்தாள்.”

15 ஆண்டுகளுக்கு முன்பு, டான்ஜானியா நாட்டில் ஒரு மிஷனரி சகோதரி ஒரு பெண்ணுக்குப் பைபிள் படிப்பு நடத்தி வந்தார். அநேக வருடங்களுக்குப் படிப்பு நடந்தது. ஆனால் குடும்பத்தார் எதிர்த்ததால் அவள் முன்னேற்றமே செய்யாமல், கடைசியில் படிப்பதையே நிறுத்திவிட்டாள். அவளுக்கு பைபிள் படிப்பு நடத்தப்பட்டபோது அவளது இரண்டு மகள்களும் அமைதலாக உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். மூத்த மகளுக்கு 18 வயது ஆனபோது தனியே வசிக்க ஆரம்பித்தாள். உடனடியாக ராஜ்ய மன்றத்திற்குச் சென்று தனக்கு பைபிள் படிப்பு நடத்துமாறு கேட்டுக்கொண்டாள். வேகமாக முன்னேற்றம் செய்து முழுக்காட்டுதல் பெற்றாள். அவளுடைய தங்கையும் பைபிள் படிப்பு நடத்துமாறு கேட்டு, படித்து, முழுக்காட்டுதல் பெற்றாள். மகள்கள் இருவரும் சத்தியத்திற்காக உறுதியான நிலைநிற்கை எடுத்ததைப் பார்த்த தாய், மறுபடியும் பைபிள் படிப்பைத் தொடர தீர்மானித்தாள். இம்முறையோ, மனித பயத்திற்கு இடங்கொடுக்காமல், மே 2004-⁠ல் நடந்த வட்டார மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றாள்.

‘திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்க’ வேண்டுமென்ற கட்டளைக்கு ஒரு சபை கீழ்ப்படியும்போது நிச்சயம் யெகோவாவின் ஆசீர்வாதம் கிடைக்கிறது. (யாக். 1:27) லெசோதோ நாட்டிலுள்ள ஒரு சபை இதை அனுபவத்தில் கண்டது. அச்சபையிலிருந்த ஒரு சகோதரியின் பெயர் மாபோலோ; தனிமரமான இவருக்கு நான்கு மகன்கள்; எல்லாரும் சிறியவர்கள். அவருக்குத் தீராத நோய் இருப்பதும், வெகு நாட்களுக்கு உயிருடன் இருக்கப்போவதில்லை என்பதும் தெரிந்திருந்தது. ஆகவே தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வதற்குப் பிள்ளைகளைத் தயார்படுத்தினார். அவர்களோடு பைபிளைப் படித்தார், அவர்களைக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றார், துடைப்பம் செய்வது எப்படி என்றும் கற்றுக்கொடுத்தார். அவர்கள் துடைப்பங்களை எடுத்துச் சென்று தெருவோரம் விற்றார்கள். 1998-⁠ல் மாபோலோ இறந்துவிட்டார். அநாதையாகிவிட்ட அந்தப் பிள்ளைகளை அவர்களுடைய பாட்டி கவனித்துக்கொள்ள ஆரம்பித்தார். முழுக்காட்டுதல் எடுக்குமளவுக்கு மாபோலோவுக்கு உதவிய மிஷனரி சகோதரி, சமூக நல அமைப்பு ஒன்றுக்குச் சென்று, அந்தப் பிள்ளைகளுடைய படிப்புச் செலவுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். மற்ற சாட்சிகள் அவர்களுக்குத் தேவையான உடைகளை அளித்தனர். பிறகு அவர்களுடைய பாட்டியும் இறந்துவிட்டார். அவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்தும் சகோதரர் அவர்களுடைய வீட்டு வாடகையைக் கொடுத்து உதவினார். அந்த நான்கு சிறுவர்களும் தவறாமல் கூட்டங்களுக்கு வந்தார்கள். இப்போது அவர்களில் இருவர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள்; மூத்த பையன் ரான்ட்ஸோவுக்கு 20 வயது. மார்ச் 2004-⁠ல் நடந்த வட்டார மாநாட்டில் அவன் முழுக்காட்டுதல் பெற்றான். ரிட்சிடிஸிட்ஸ்வே என்ற அவனுடைய சித்தி பையனுக்கு பைபிள் படிப்பு நடத்தினான். இருவரும் ஒரேநாளில் முழுக்காட்டுதல் எடுத்தார்கள். தன்னையும் தன் தம்பிகளையும் சபையிலுள்ள சகோதரர்கள் இவ்வளவு வருடங்களாக அன்புடன் பராமரித்து வந்ததற்கு ரான்ட்ஸோ மிகுந்த நன்றி தெரிவிக்கிறான்.

கேமரூன் நாட்டிலுள்ள ஒரு மிஷனரி இவ்வாறு அறிக்கை செய்கிறார்: “நான் ஓர் இளைஞருக்கு பைபிள் படிப்பு நடத்தி வந்தேன். ஒவ்வொரு வாரமும் அவருடன் படிக்கும்போது, வீட்டிற்குள்ளே யாரோ பக்திப் பாடல்கள் பாடுவதைக் கேட்டேன். ‘யார் பாடுவது?’ என்று அந்த இளைஞரிடம் கேட்டேன். பார்வையற்ற தன் தம்பி ஸ்டீஃபன்தான் பாடுவதாக சொன்னார். கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டின் ஆடியோகேஸட்டை பயன்படுத்தி ஸ்டீஃபனுக்கும் பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தேன். ஒவ்வொரு பாடத்திலும் ஒரு பைபிள் வசனத்தை மனப்பாடம் செய்வதுதான் எங்கள் குறிக்கோளாக இருந்தது. ஸ்டீஃபனுக்கு அபார ஞாபக சக்தி, அநேக வசனங்களைக் கற்றுக்கொண்டார். இப்போது கூட்டங்களுக்கு வருகிறார், நிறைய பதிலும் சொல்கிறார். சமீபத்தில் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் முதன்முதலாகப் பேச்சு கொடுத்தார். அது பைபிள் வாசிப்பு பகுதியாக இருந்தது; அவருக்கு பிரெய்ல் வாசிக்கத் தெரியாததால் வாசிப்புப் பகுதி முழுவதையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டியிருந்தது. சீக்கிரத்தில், அவரைக் கூட்டிக்கொண்டு ஊழியத்திற்குப் போகவிருக்கும் சமயத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். அவருக்கு மிகவும் பிடித்த பைபிள் வசனங்களில் ஒன்று ஏசாயா 35:5; ‘குருடரின் கண்கள் திறக்கப்படும்’ என அது சொல்கிறது. தனது ஆன்மீக கண்கள் ஏற்கெனவே திறக்கப்பட்டுவிட்டதைக் குறித்து ஸ்டீஃபனுக்கு ரொம்ப சந்தோஷம்; இப்போது யெகோவாவுக்குத் துதிப் பாடல்களைப் பாடி, எதிர்காலத்தில் தனக்குப் பார்வையளிக்கப் போவதற்காக நன்றி சொல்கிறார்.”

போரினால் பாதிக்கப்பட்ட லைபீரியா நாட்டில் நான்ஸி என்ற பெண் ஒரு சாட்சியை அணுகி தனக்கு பைபிள் படிப்பு நடத்துமாறு கேட்டாள். யெகோவாவின் சாட்சிகள் பொய்க் கிறிஸ்தவர்கள் என்பதால் அவர்களை நரகத்திற்கு கடவுள் அனுப்புவார் என அவளது சர்ச் பாஸ்டர் சொல்லியிருந்தாராம். ஆனால் அவள் வசித்த இடத்தில் சில சாட்சிகளும் வசித்தார்கள். துப்பாக்கிச் சூடு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சமயங்களில் சாட்சிகளுடைய சபையின் மூப்பர்கள் தங்கள் சகோதரர்களை எப்போதும் சந்தித்து நலம் விசாரித்தார்களாம். அதோடு, சற்று அமைதி நிலவியபோதெல்லாம் சாட்சிகள் மற்றவர்களுக்குப் பிரசங்கித்ததையும் இவள் கவனித்தாளாம். உடனடியாக தேவைப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் கிளை அலுவலகத்தின் வாகனம் எல்லையைக் கடந்து முதலாவதாக வந்து சேர்ந்ததைப் பார்த்து நான்ஸியும் அங்கிருந்த இன்னும் அநேகரும் நெகிழ்ந்து போனார்களாம். அந்த நிவாரணப் பொருட்களை பிரான்சிலும் பெல்ஜியத்திலும் இருந்த சாட்சிகள் நன்கொடையாகத் தந்திருந்தார்கள். “உங்களிடம்தான் சத்தியம் இருக்கிறது என்று நினைக்கிறேன்” என அவள் சொன்னாள். இப்போது நன்கு படித்து முன்னேறி வருகிறாள்.

உகாண்டா நாட்டிலுள்ள ஒரு கிராமத்தில் சகோதரர்கள் கூட்டங்கள் நடத்திய வீட்டில் கொத்தனார் வேலை செய்ய ஓர் இளைஞர் வந்தார். அவரிடம் ஒரு பயனியர் சாட்சி கொடுத்தார், அவர் ஆர்வத்தோடு கேட்டார். ஆனால் கொஞ்ச காலத்திற்குள், மலை மேலிருந்த தன் கிராமத்திற்கு அவர் திரும்ப வேண்டியிருந்தது. அங்கே எந்தச் சாட்சிகளும் இல்லாததால், அருகேயிருந்த ராஜ்ய மன்றத்தின் விலாசத்தைப் பயனியர் கொடுத்தார். அந்த இளைஞர் குறுகலான மண் சாலைகள் வழியாகச் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்குச் சைக்கிளில் போய் சகோதரர்களைத் தேடிச் சென்றார். ராஜ்ய மன்றத்தில் ஒருவரையும் பார்க்க முடியாததால், தனக்கு பைபிள் படிப்பு நடத்த வேண்டும் என்று காகிதத்தில் எழுதி கதவுக்குக் கீழே போட்டுவிட்டுத் திரும்பினார். ஒரு பயனியர் சகோதரர் அவரைச் சந்திக்க அவரது கிராமத்திற்குச் சென்றார். பார்த்தால் ஒரே ஆச்சரியம். ஏனென்றால் பைபிளைப் பற்றி தெரிந்துகொள்ள கிட்டத்தட்ட 200 பேர் அங்குக் காத்திருந்தார்கள்! பைபிளைப் படிப்பதில் அநேகர் உண்மையான ஆர்வம் காட்டினார்கள். இந்த ஒதுக்குப்புற கிராமத்தில் இப்போது கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

தென்கிழக்கு நைஜீரியா நாட்டில் சுமார் 600 பேர் வசிக்கும் ஒரு சிறிய கிராமம் உண்டு. ஒரு நாள் சாயங்காலம், வானத்திலிருந்து பிரகாசித்த பேரொளி ஆற்றில் பட்டு பிரதிபலித்ததைக் கிராமத்துவாசிகள் பார்த்தார்கள். அது தங்கள் திசையை நோக்கி மெல்ல மெல்ல நகருவதாகத் தெரிந்தது, ஆகவே அவர்கள் பாதுகாப்புக்காக தலைதெறிக்க ஓடினார்கள். யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கித்து வந்த அழிவுதான் வந்துவிட்டதாக அநேகர் நினைத்தார்கள். ஆகவே ராஜ்ய மன்றத்திற்கு ஓடிப்போனார்கள். “இந்தக் கட்டிடம் அர்மகெதோனில் அழியாது” என சொல்லிக் கொண்டார்கள். கடைசியாக, ராத்திரி சுமார் 10:00 மணிக்கு அவர்களுக்கு உண்மை புரிந்தது. மிகப் பெரிய காட்டுத் தீதான் அந்த வெளிச்சத்திற்குக் காரணம் என்று. அவர்கள் ஏன் பக்கத்திலிருந்த சர்ச்சுகளுக்கு ஓடிப்போகவில்லை என சகோதரர்கள் கேட்டபோது, ஒருவர் இவ்வாறு பதிலளித்தார்: “அதெல்லாம் உதவாக்கரை சர்ச்சுகள். அர்மகெதோனில் அதெல்லாம் அழிந்துவிடும், ஆனால் ராஜ்ய மன்றம் அழியாது.”

கினி நாட்டிலுள்ள அகதிகள் முகாமில் ஒழுங்கான பயனியர் செய்யும் சகோதரி ஒருவர் இவ்வாறு விவரிக்கிறார்: “வீட்டுக்கு வீடு ஊழியத்தில் எட்டு வயது சிறுமி ஒருத்தியைப் பார்த்தேன். அவளுக்கு கால் ஊனம். அவளுடைய பெற்றோர் நாள் முழுக்க அவளை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிச் சென்றுவிடுவார்கள் என சொன்னாள். அவளுடைய ஃபிரண்டாக ஆவதற்கு எனக்கு ஆசை என சொன்னேன். பிறகு, ‘கடவுள் உனக்கு என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறாய்?’ என கேட்டேன். கடவுள் தன்னை நடக்க வைக்க வேண்டுமென விரும்புவதாக சொன்னாள். பைபிளை ஏசாயா 35:5, 6-⁠க்குத் திருப்பி, முடவர்களை நடக்க வைக்கப்போவதாக யெகோவா வாக்குறுதி கொடுத்திருப்பதைக் காண்பித்தேன். அதன்பின், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்ந்து அனுபவியுங்கள்! என்ற சிற்றேட்டைத் திறந்து, வியாதியஸ்தர்களை இயேசு குணப்படுத்தும் படத்தைக் காட்டினேன். மேலும், பைபிளைப் படித்து, யெகோவா சொல்கிறபடி நடந்துகொண்டால் அவளுக்கும் அந்த ஆசீர்வாதங்கள் கிடைக்குமென சொன்னேன். அவள் பைபிள் படிக்க சம்மதித்தாள். பூமியில் வாழ்க்கை சிற்றேட்டை நாங்கள் படித்துவிட்டோம். நீங்கள் கடவுளுடைய நண்பராகலாம்! என்ற சிற்றேட்டையும்கூட கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். மூன்று வாரங்கள் படித்த பிறகு, கூட்டங்களுக்கு வர ஆசைப்படுவதாகச் சொன்னாள். அவளால் நடக்க முடியாததால், நான் அவளுடைய வீட்டிற்குப் போய் அவளை முதுகில் தூக்கிக்கொண்டு வருவேன். அவளுக்குக் கூட்டங்களென்றால் கொள்ளைப் பிரியம். அதனால் நான் போய் கூட்டிக்கொண்டு வராவிட்டால், என்னிடம் கோபித்துக்கொள்வாள், அழவும் ஆரம்பித்துவிடுவாள்.”

வட, மத்திப, தென் அமெரிக்கா

நாடுகளின் எண்ணிக்கை: 56

மக்கள் தொகை: 86,88,71,739

பிரஸ்தாபிகள்: 31,65,925

பைபிள் படிப்புகள்: 30,89,453

குவாடலூப் நாட்டைச் சேர்ந்த மாரி என்ற சகோதரி இவ்வாறு கூறுகிறார்: “நான் வேலை செய்யும் ஹோட்டலைத் தொட்டாற்போல் உள்ள கடற்கரையில், இரண்டு நாட்களாக சில உடைகளும் ஷூக்களும் ஒரு பாறைமீது கிடப்பதாக வாடிக்கையாளர்கள் சிலர் என்னிடம் சொன்னார்கள். அவற்றின் சொந்தக்காரரைப் பற்றி ஏதாவது தகவல் கிடைக்கலாம் என நினைத்து அவற்றை எடுத்துப் பார்த்தேன். ஒரு பர்ஸ் அகப்பட்டது; அதில் 1,067 யூரோ [1,372 அமெரிக்க டாலர்] இருந்தது! அதில் கொஞ்சத்தை நான் வைத்துக்கொண்டு மீதியை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு அங்கிருந்தவர்களில் அநேகர் சொன்னார்கள். உடனடியாக, நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதையும் மனசாட்சிப்படி நேர்மையாக மட்டுமே என்னால் நடக்க முடியும் என்பதையும் அவர்களிடம் சொன்னேன். பிறகு, அந்தப் பொருட்களையெல்லாம் ஹோட்டலின் ரிசெப்ஷனுக்கு எடுத்துச் சென்றேன். அந்தப் பணத்தை நானே வைத்துக் கொள்ளாததைப் பார்த்து அங்கு வேலை செய்தவர்களுக்கும் ஆச்சரியம். மறுபடியும் என் மத நம்பிக்கையை விளக்கினேன். கடற்கரைக்குத் திரும்பிச் சென்றபோது அங்கிருந்த சிலர் என் மத நம்பிக்கைகளைப் பற்றி இன்னுமதிகம் தெரிந்துகொள்ள விரும்பினார்கள். பைபிளைப் பயன்படுத்தி அவர்களுக்குச் சாட்சி கொடுத்தேன். அவர்களில் ஒரு பெண், ‘நான் யெகோவாவின் சாட்சிகளை மட்டும்தான் வேலைக்கு வைப்பேன்’ என்று கூறினாள். அதன்பின், அந்தப் பொருட்களின் சொந்தக்காரர் கண்டுபிடிக்கப்பட்டார். சகோதரி காட்டிய நேர்மையை போலீஸார் பாராட்டினர்.

ஆன்டோன்யோ என்ற சகோதரர் மெக்சிகோ நாட்டு பெத்தேலில் சேவை செய்கிறார். சத்தியத்தைப் பற்றி பேசுவதற்குக் கிடைக்கும் எல்லா வாய்ப்பையும் அவர் பயன்படுத்திக் கொள்கிறார். சமீபத்தில் சபை கூட்டத்திற்குச் செல்ல பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, கண்ணியமாக உடை அணிந்திருந்த ஓர் இளம் ஆணையும் பெண்ணையும் சந்தித்தார். அவர்களுக்கு ஒரு துண்டுப்பிரதியைக் கொடுத்தார். அவர்களிடம் நிறைய விஷயங்களைப் பற்றி பேச முடிந்தது. ஆன்டோன்யோ சொல்வதாவது: “என்னுடைய ஸ்டாப் வந்ததும் அவர்களுக்குக் குட்பை சொன்னேன். ஆனால், வேறு ஸ்டாப்பில் இறங்க வேண்டிய அவர்கள் என்னுடன் இன்னும் உரையாடுவதற்காக நான் இறங்கவிருந்த ஸ்டாப்பிலேயே இறங்கினார்கள். எனக்கு ஒரே ஆச்சரியம். பஸ்ஸை விட்டு இறங்கிய பிறகு இன்னும் கொஞ்ச நேரம் பேசினோம். மறுபடியும் குட்பை சொன்னேன். ‘நீங்கள் எங்கே போகிறீர்கள்?’ என அவர்கள் கேட்டார்கள். ‘சபை கூட்டத்திற்குப் போகிறேன்’ என சொன்னேன். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு, ‘நாங்களும் உங்களுடன் வரலாமா?’ என கேட்டார்கள். ‘ஓ, தாராளமாக!’ என்றேன்.” அந்த இளம் பெண் ஒரு வக்கீல், அவருடைய அண்ணன் மகன் யுனிவர்ஸிட்டியில் படிக்கிறார். இருவருமே சில வருடங்களுக்கு முன்பு சத்தியத்தைப் பற்றி கேட்டிருந்தார்கள். ஆனால் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் தொடர்ந்து படிக்கவில்லை. ஆன்டோன்யோவுடன் கூட்டத்திற்குச் செல்லும் வழியில், தங்களை முதன்முதலாக சந்தித்து பைபிளைப் பற்றி பேசிய சகோதரியைச் சந்திக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என அவர்கள் சொன்னார்கள். என்ன ஆச்சரியம், அந்தச் சகோதரியைச் சபையில் சந்தித்தார்கள்! கூட்டத்திற்கு வந்ததற்காக மிகவும் சந்தோஷப்பட்டார்கள், பைபிளைப் படிக்க விரும்புவதாகவும் சொன்னார்கள். “யெகோவாதான் எங்களை இங்கே அழைத்து வந்திருக்கிறார், இனி தொடர்ந்து வருவோம்” என அந்த இளம் பெண் சொன்னார். பைபிள் படிப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது, இப்போது வாரம் இருமுறை நடத்தப்படுகிறது.

ஹெய்டி நாட்டில் வட்டாரக் கண்காணியின் மனைவியான ஜாக்லின் ஒரு பயனியர் சகோதரியுடன் ஊழியம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஓர் இளம் பெண் தெருவோரம் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்ததைப் பார்த்தார்கள். அவளிடம் போய், ஏன் அழுகிறாள் என்பதாகக் கேட்டார்கள். முதலில் அந்தப் பெண் வாயே திறக்கவில்லை. ஆனால் அன்பாகத் திரும்பத் திரும்ப கேட்ட பிறகு, “நினைத்ததை செய்துவிட்டேன்” என்றாள். அவள் விஷம் குடித்துவிட்டாள் என்பதை ஜாக்லின் உடனே புரிந்துகொண்டு, அவளிடம் நேரடியாகவே கேட்டு விட்டார். அவள் ஆமாம் என தலை ஆட்டினாள். அந்தச் சகோதரிகள் அவளை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள். அதற்கடுத்த வாரம், பயனியர் சகோதரி மறுபடியும் அவளைச் சந்தித்து உற்சாகப்படுத்தினார். அவளுடன் பைபிள் படிப்பை ஆரம்பித்தார்.

பராகுவே நாட்டில் லூர்டெஸ் என்ற சகோதரி ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பில்லுக்குப் பணம் செலுத்தினார்; ஆனால் அந்தப் பணம் கள்ளநோட்டு என தெரிந்தவுடன் அதிர்ச்சியடைந்தார். காஷியர் உடனடியாக செக்யூரிட்டி கார்டை வரவழைத்தார். போலீஸ் வரும்வரை லூர்டெஸும் அவருடைய ஐந்து வயது மகள் இங்கிரிட்டும் ஒரு சிறிய ரூமில் வைக்கப்பட்டார்கள். அந்தக் கள்ளநோட்டு எப்படிக் கிடைத்ததென்று சொல்லும்படி சூப்பர் மார்க்கெட் மானேஜரும் செக்யூரிட்டி கார்டும் சகோதரியை அதட்டினார்கள். அது எப்படிக் கிடைத்ததென சகோதரிக்கு ஞாபகமே இல்லை, அது கள்ளநோட்டு என்பதுகூட தனக்குத் தெரியாது என அவர்களிடம் சொன்னார். அவரது மகள் இங்கிரிட்டுக்குக் கஷ்டமாகப் போய்விட்டது, மானேஜரையும் செக்யூரிட்டி கார்டையும் பார்த்து, “நீங்கள் எங்களைத் திருடிகள் என நினைத்துக் கேள்வி கேட்கிறீர்கள். என் அம்மா ஒன்றும் திருடி இல்லை. நாங்கள் யெகோவாவின் சாட்சிகள், பொய் சொல்ல மாட்டோம்” என்றாள். மானேஜர் லூர்டெஸைப் பார்த்து, ‘நீங்கள் யெகோவாவின் சாட்சியா?’ என கேட்டார். “ஆமாம்” என லூர்டெஸ் பதிலளித்தார். யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்குப் போன் செய்த பிறகுதான் லூர்டெஸ் உண்மையில் ஒரு சாட்சி என்பதை அந்த ஆட்கள் நம்பினார்கள். தொந்தரவு கொடுத்ததற்காக மன்னிப்புக் கேட்டு கொண்டு, அங்கிருந்து செல்ல இருவரையும் அனுமதித்தார்கள். எல்லாவற்றையும்விட, ஆசை ஆசையாக வாங்க நினைத்த பாப்கார்னை வாங்க முடியாமல் போனதுதான் வருத்தமாக இருந்ததென சிறுமி இங்கிரிட் பிற்பாடு சொன்னாள்.

கோஸ்டா ரிகா நாட்டில் ஒரு சகோதரர் பிரசங்கித்து வந்தார். ஒருமுறை, பக்கத்து வீட்டிலிருந்த ஒரு கத்தோலிக்கரைச் சந்தித்து சாட்சி கொடுக்கத் தீர்மானித்தார். ஆனால் அந்த நபருக்குச் சாட்சிகளைக் கண்டாலே பிடிக்காது, அவர்களைக் கண்டபடி திட்டியும் விட்டிருக்கிறார். அதனால் சகோதரர் பயப்பட்டார். ஆனால் அந்த நபரோ அவரை உள்ளே அழைத்து, தான் முன்புபோல் இல்லை என்பதை விளக்கினார். சகோதரருக்கு ஒரே ஆச்சரியம். அந்தப் பக்கத்து வீட்டுக்காரரின் நண்பர் தூரத்திலிருந்த ஓர் இவான்ஜலிக்கல் சர்ச்சுக்கு இவரை அழைத்துச் சென்றாராம். அங்கே போனவுடன் “சாட்சி” கொடுக்கும்படி இவர் அழைக்கப்பட்டாராம். தான் ஒரு கத்தோலிக்கர் என்று மட்டும்தான் சொன்னாராம். உடனே அங்கிருந்தவர்களுக்குக் கோபம் வந்து அவரை சர்ச்சை விட்டு வெளியேறும்படி சொன்னார்களாம். ஒரு கத்தோலிக்கருடன் பழகுவதற்காக அவரது நண்பரையும் கண்டனம் செய்தார்களாம். பிறகு அவர் சர்ச்சை விட்டு வெளியேறினாராம். வெகு தூரத்தில் பழக்கமில்லாத இடத்தில் இருந்ததால் அன்று இரவு எங்குத் தங்குவதென்று அவருக்குத் தெரியவில்லையாம். ஒரு வீட்டைத் தட்டி, நடந்ததை விளக்கினாராம். அந்த வீட்டார் அவரை உள்ளே அழைத்து, உணவளித்து, இரவு தங்குவதற்கு இடமும் தந்தார்களாம். அதோடு இவரிடம் பைபிளைப் பற்றியும் பேசினார்களாம். ஆம், அவர்கள் யெகோவாவின் சாட்சிகள். உண்மையிலேயே மற்றவர்களை நேசிக்கிறவர்கள்தான் சாட்சிகள் என்பதைக் கண்ணாரக் கண்ட அவர் நெகிழ்ந்துபோனாராம்! இப்போது அவர் சாட்சிகளுடன் பைபிளைப் படித்து வருகிறார்.

ட்ரினிடாட் தீவைச் சேர்ந்த ஒரு சகோதரி இவ்வாறு எழுதுகிறார்: “நான் தெரு ஊழியம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு பெண் என்னை அணுகி லேட்டஸ்ட் பத்திரிகைகளைக் கொடுக்குமாறு கேட்டாள். அவளுக்கு அநேக பத்திரிகைகளைக் கொடுத்தேன், பிறகு, இலவச பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி சொன்னேன். அந்தப் பெண் முன்பு யெகோவாவின் சாட்சிகளுடன் படித்து வந்ததாகவும் இப்போது இந்தப் பகுதிக்குப் புதிதாகக் குடிமாறி வந்திருப்பதாகவும் சொன்னாள். அவளுடைய பெயரையும் விலாசத்தையும் கேட்டபோது தர மறுத்துவிட்டாள். நாங்கள் நிஜமாகவே உண்மைக் கடவுளைச் சேவிக்கிறோம் என்றால் எங்களுக்கு அவளுடைய வீட்டை அவரே காட்டுவார் என சொல்லிவிட்டாள். அடுத்த நாள் நாங்கள் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தபோது ஒரு வீட்டின் கதவைத் தட்டினோம். அதே பெண் கதவைத் திறந்தாள். எங்களைப் பார்த்தவுடன் ஆச்சரியத்தில் சிரித்துக்கொண்டே, ‘எப்படி இவ்வளவு சீக்கிரம் என்னைக் கண்டுபிடித்தீர்கள்?’ என கேட்டாள். முந்தின நாள் அவள் சொன்னது ஞாபகம் இருக்கிறதா என அவளிடம் கேட்டேன். எங்களை வீட்டிற்குள் அழைத்தாள். பைபிள் படிப்பை ஆரம்பித்தோம். இப்போது அவள் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி.”

ஆசியாவும் மத்திய கிழக்கு நாடுகளும்

நாடுகளின் எண்ணிக்கை: 47

மக்கள் தொகை: 397,17,03,969

பிரஸ்தாபிகள்: 5,74,927

பைபிள் படிப்புகள்: 4,44,717

கெங்ஷ்யாம் என்பவர் நேப்பாள நாட்டில் ஒழுங்கான பயனியராக இருக்கிறார். அவர் டாக்ஸி ஓட்டி பிழைப்பு நடத்துகிறார். இதனால் பலதரப்பட்ட ஆட்களை சந்திக்கிறார். அவர்களில் அநேகர் ராத்திரி நேரத்திலும்கூட அவசர கதியில் ஓடுகிறார்கள். ஆகவே அதிகம் பேச முடிவதில்லை. இருந்தாலும் அவர்களிடம் பேச்சுக் கொடுக்க கெங்ஷ்யாம் ஊக்கமான முயற்சி எடுக்கிறார். முடிந்தவரை, அவர்களுக்குப் பொருத்தமான ஒரு துண்டுப்பிரதியையும் அருகிலுள்ள ராஜ்ய மன்றத்தின் விலாசத்தையும் தருகிறார். அநேகர் அதற்காக நன்றி தெரிவித்திருக்கிறார்கள். இப்போது அவர்களில் ஐந்து பேருக்கு அவர் பைபிள் படிப்பு நடத்துகிறார்.

தைவானில் ஒரு சகோதரியின் கணவருக்குக் கணீரென்ற குரல். அவர் எப்போது பார்த்தாலும் சகோதரியிடம் காட்டுக் கத்தல் கத்துவார், அதுவும் சகோதரி கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் புறப்படும்போது ரொம்பவே கத்துவார். திடீரென ஒருநாள் அவருக்கு ஸ்ட்ரோக் வந்துவிட்டது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சகோதரி பக்கத்திலிருந்து அவரைப் பொறுமையோடு கவனித்துக் கொண்டார். அவர் உடல் தேற ஆரம்பித்த சமயத்தில் சாதுர்யமாக அவருக்கு பைபிள் சத்தியத்தைப் புரிய வைத்தார். “உங்கள் மூளைக்குப் பயிற்சி தேவை, அதனால் நான் சில விஷயங்களைச் சொல்கிறேன், அதையெல்லாம் உங்களால் ஞாபகம் வைக்க முடிகிறதாவென பாருங்கள், சரியா?” என அவரிடம் சொன்னார். தன் மூளைக்கு யோசிக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும் என அவருக்குத் தெரிந்திருந்ததால் அதற்குச் சம்மதித்தார். சகோதரி பல்வேறு சிற்றேடுகளைப் பயன்படுத்தி அவருக்கு முக்கிய சத்தியங்களைக் கற்பித்தார்; உதாரணத்திற்குக் கடவுளுடைய பெயர், அவருடைய குணங்கள், பைபிளின் மையப்பொருள் போன்றவற்றைக் கற்பித்தார். அதோடு, அநேக சகோதரர்கள் அவரைச் சந்தித்தார்கள், கனிவோடு நடந்துகொண்டார்கள். இது அவர் மனதைத் தொட்டது. ஆகவே வீடு திரும்பியதும் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார். இப்போது அவர் சக்கரநாற்காலியில் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்திருக்கிறார்; கணீரென்ற குரலில் கத்துவதற்கு மாறாக கூட்டங்களில் பதில்கள் சொல்கிறார்.

ரோஹானா என்ற சகோதரர் ஒரு விசேஷ பயனியராக இருக்கிறார். இலங்கையில் ஒரு கிராமப்பகுதியில் ஊழியம் செய்கிறார். ஒரு ரிக்‍ஷாக்காரன் அவருக்கு எப்போதும் தொல்லை கொடுத்து வந்தான். அவர் ஊழியம் செய்வதைப் பார்த்தாலே போதும், கண்டபடி திட்ட ஆரம்பித்துவிடுவான். ஒருமுறை, பிரசங்கிப்பதை நிறுத்தாவிட்டால் குத்திக் கொலை செய்துவிடுவதாக அவரை மிரட்டினான். ஆனால் அவர் சாந்தமாக நடந்துகொண்டார். பிற்பாடு அந்த ரிக்‍ஷாக்காரனுக்கு விபத்து ஏற்பட்டது, பயங்கர காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். ரோஹானா அவனை ஆஸ்பத்திரியில் சந்தித்து ஒரு அன்பளிப்பு கொடுத்தார். அவரைப் பார்த்தவுடன் அந்த ரிக்‍ஷாக்காரன் அழத் தொடங்கினான்; இவ்வளவு நாட்களாக அவருக்குத் தொல்லை கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டான். “சார், நான் உங்களுக்குக் கொடுத்த கஷ்டத்திற்கு நீங்கள் இப்போது என்னை தடியால் அடிப்பதுதான் சரி, ஆனால் நீங்களோ இவ்வளவு தூரம் வந்து எனக்கு ஆறுதல் சொல்கிறீர்களே” என்றான். இப்போது அவன் குணமாகி மறுபடியும் ரிக்‍ஷா ஓட்டுகிறான். அதுமட்டுமல்ல, நம் பத்திரிகைகளைத் தவறாமல் படிக்கிறான்.

அநேக வெளிநாட்டவர்கள் வீட்டு வேலை செய்வதற்கு ஹாங்காங்கில் குடியேறுகிறார்கள். அப்படி பிலிப்பைன்ஸிலிருந்து வந்திருந்த ஒரு பெண் அங்கிருக்கும்போது கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டிலிருந்து பைபிள் படிக்க ஆரம்பித்திருந்தாள். ஹாங்காங்கிற்கு வந்த பிறகும் அப்படித் தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டாள். இருந்தாலும், சாட்சிகளை எப்படிக் கண்டுபிடிப்பது என அவளுக்குத் தெரியவில்லை. எனவே அதற்கு உதவும்படி கடவுளிடம் ஜெபம் செய்தாள். விடுமுறையின்போது ஒருநாள் துறைமுகத்தை அடுத்திருந்த முக்கிய வர்த்தக மாவட்டத்திற்கும் சென்ட்ரல் பார்க்கிற்கும் சென்றாள். வாரயிறுதி நாட்களில் அநேக பிலிப்பைன்ஸ் நாட்டவர் அங்குச் செல்வது வழக்கம். யெகோவாவின் சாட்சிகள் பொதுவாக அந்தப் பார்க்கில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாமல் சாட்சி கொடுப்பார்கள். ஆனால் அங்கு அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும் அவள் ஒரு குப்பைத் தொட்டியில் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டைப் பார்த்தாள். அதில் ஒரு ஃபோன் நம்பர் எழுதப்பட்டிருந்தது. அந்தச் சிற்றேட்டை ஊழியத்தில் வினியோகித்த சகோதரியின் நம்பர்தான் அது. அவர் இந்தப் பெண் வேலை பார்த்த அதே ஹௌசிங் காம்ப்ளெக்ஸில்தான் வேலை செய்து வந்தார். இதை அறிந்த அப்பெண்ணிற்கு ஒரே ஆச்சரியம், பயங்கர குஷி. மறுபடியும் பைபிளைப் படிக்க ஆரம்பித்து இப்போது கூட்டங்களுக்கு வருகிறாள்.

கொரியா குடியரசில் ஒரு வட்டாரக் கண்காணியும் இன்னொரு மூப்பரும் மிகச் சரியான நேரத்தில் மேய்ப்பு சந்திப்பு செய்தார்கள். பத்து வருடங்களாகச் செயலற்றிருந்த ஒரு சகோதரியைச் சந்தித்தார்கள். அவரது கணவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் அவரது ஆபரேஷனுக்குப் பின் சர்ச்சுக்குச் செல்ல தீர்மானித்திருந்தார். சகோதரர்கள் சென்றபோது அந்தக் கணவரை சந்தித்தார்கள், அவர் நன்கு பேசினார், தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை ஏற்றுக்கொண்டார். மூப்பர் அவருடன் பைபிள் படிப்பை நடத்தியபோதெல்லாம், அந்தச் சகோதரியையும் உற்சாகப்படுத்தினார். பிறகு அந்தக் கணவர் மாவட்ட மாநாட்டிற்கு வந்திருந்தார். அதன்பின் சர்ச்சுக்குச் செல்வதை நிறுத்திவிட்டு கூட்டங்களுக்குத் தவறாமல் வர ஆரம்பித்தார். அந்தச் சகோதரியும் முன்னேற்றம் செய்து, வேறொரு நகரில் வசித்த தனது நான்கு மகன்களையும் மகள்களையும் சாட்சிகள் போய் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார். அதனால், அந்தச் சகோதரியின் கணவர், மூத்த மகள், அவளது கணவர், இளைய மகள் ஆகியோர் முழுக்காட்டுதல் பெற்றார்கள். பிற்பாடு அவரது மூத்த மகனும் அவரது மனைவியும்கூட முழுக்காட்டுதல் பெற்றார்கள். ஆக மொத்தம், புதிதாக ஆறு பேர் சாட்சிகளானார்கள்.

யூக்கி என்பவள் ஜப்பானில் வசிக்கும் மேல்நிலைப் பள்ளி மாணவி. தான் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை மற்ற மாணவிகளிடம் சொல்ல மிகவும் சிரமப்பட்டாள். ஆனால் கட்டாயம் தான் சாட்சி கொடுக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தாள். மற்ற மாணவிகள் மதத்தைப் பற்றி பேசவே மாட்டார்கள் என்பதால் தான்தான் முதலில் பேசுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை உணர்ந்தாள். ஆகவே மதிய உணவு வேளையின்போது தன் தோழிகள் கண்ணில் படும்படி ஜெபம் செய்யத் தீர்மானித்தாள். அதற்குத் தைரியம் தருமாறு காலை முழுவதும் ஊக்கமாக ஜெபித்தாள். பிறகு, மற்றவர்கள் பார்க்காதபடி சீக்கிரமாக ஜெபம் செய்துவிட்டு சாப்பிடுவதற்கு பதிலாக, தலை குனிந்து சற்று அதிக நேரம் ஜெபித்தாள். அவள் தலை நிமிர்ந்தபோது, ‘உடம்பு சரியில்லையா?’ என ஒரு மாணவி கேட்டாள். ஆனால் அப்போதும் யூக்கியால் சாட்சி கொடுக்க முடியவில்லை. அவளுக்கே பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. பிற்பாடு, மன்னிக்கும்படி யெகோவாவிடம் கேட்டு ஜெபம் செய்தாள், மறுபடியும் தைரியம் தரும்படி ஊக்கமாக மன்றாடினாள். மறுநாள் அவள் ஜெபம் செய்து முடித்தவுடன், ‘இப்போது உடம்பு எப்படி இருக்கு?’ என அதே மாணவி கேட்டாள். ‘இம்முறை கட்டாயம் சாட்சி கொடுத்துவிட வேண்டும்!’ என யூக்கி மனதில் நினைத்துக்கொண்டு, தான் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை விளக்கினாள். முதலில் அந்த மாணவி ஆச்சரியப்பட்டாள், அதன் பிறகோ பல கேள்விகளைக் கேட்டாள்; எதற்காக ஜெபிக்கிறாய்? கடவுளுடைய பெயர் என்ன? இயேசு யார்? என கேள்வி மேல் கேள்வி கேட்டாள். யூக்கி பூரித்துப்போனாள்.

இந்தோனேஷியாவில் கூலாங் நகரில் வசிப்பவர் க்ளென். குடிகாரர் என்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் அவர் பெயரெடுத்திருந்தார். யாரையேனும் மிரட்ட வேண்டும், அடிக்க வேண்டும் என்றால் மக்கள் அவரைத்தான் அடியாளாக பயன்படுத்தினார்கள். அவர் தன் பெற்றோருடன் தங்கியிருந்தபோது இரண்டு யெகோவாவின் சாட்சிகள் அவர்களைச் சந்தித்து பைபிளைப் பற்றி பேசினார்கள். சீக்கிரத்திலேயே க்ளென் பைபிள் படிக்க ஒப்புக்கொண்டார். பிறகு கடும் முயற்சியெடுத்து தனது கெட்ட பழக்கவழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு வந்தார். ஒரு நாள் ஒரு கடைக்காரர் ஓர் ஆளை அடிப்பதற்காக அவரிடம் கத்தைக் கத்தையாக பணத்தைக் கொடுத்தார். க்ளென் சற்று யோசித்தார், இனியும் அது போன்ற வேலைகளைச் செய்யாதிருக்கத் தீர்மானித்தார். உடனே அவர் அந்த வேலையைச் செய்ய முடியாதென்று சொல்லி பணத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். பிற்பாடு க்ளென் வேறொரு கடைக்குச் சென்றபோது, அந்தக் கடைக்காரர் இவரைப் பார்த்து பயந்துவிட்டார்; ஏனென்றால் தன்னை அடிக்கத்தான் வந்திருக்கிறார் என நினைத்துவிட்டார். இப்போது தான் பைபிளைப் படிப்பதாகவும் சமாதானமாக வாழ்வதாகவும் அவரிடம் க்ளென் விளக்கினார். கடைக்காரரும் பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டு, அவருக்குத் தன் கடையிலேயே வேலை போட்டுக் கொடுத்தார். சென்ற வருட மாவட்ட மாநாட்டில் க்ளென் முழுக்காட்டுதல் பெற்றார், அதைக் காண அந்தக் கடைக்காரரும் அங்கு வந்திருந்தார்.

ஐரோப்பா

நாடுகளின் எண்ணிக்கை: 46

மக்கள் தொகை: 72,83,73,014

பிரஸ்தாபிகள்: 14,90,345

பைபிள் படிப்புகள்: 7,33,728

நெதர்லாந்தில் வசித்து வந்த 88 வயது சகோதரி யாக்கோபா இறந்தபோது, அவரது உறவினர்களுக்கு அந்த ஊர் போலீஸாரிமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்று வந்தது. அந்தச் சகோதரி அவர்களுக்கு அநேக வருடங்களாகத் தவறாமல் பத்திரிகைகளைக் கொடுத்து வந்திருந்தார். அந்தக் கடிதத்தின் ஒரு பகுதி இவ்வாறு குறிப்பிட்டது: “அவர் எங்களுடைய விசேஷ மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர். அவர் தவறாமல் வந்து எங்களைச் சந்தித்தார். அவரோடு சேர்ந்து டீ அருந்திய நேரங்கள் மறக்க முடியாதவை. அவருடைய தைரியத்தைக் கண்டு மெச்சினோம்; வயதான காலத்தில், வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் சைக்கிளில் சென்று மக்களைச் சந்தித்து தன் மத நம்பிக்கைகளைப் பற்றி அவர் பேசிய விதம் எங்களை வெகுவாகக் கவர்ந்தது. அவருடைய இறப்பு எங்களுக்குப் பெரும் இழப்பு.”

சுவிட்சர்லாந்திலிருந்து வந்திருக்கும் ஓர் அனுபவத்தைக் கவனியுங்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு குடும்பத்தார் விடுமுறைக்காக வெளியூர் சென்றார்கள்; ஆனால் அந்தச் சமயத்தில் தங்கள் மீன்களுக்கு உணவு போடுவதற்காக தங்கள் அப்பார்ட்மென்ட் சாவியை வேறொரு குடும்பத்தாரின் மகனிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். அந்தக் குடும்பத்தாரும்கூட யெகோவாவின் சாட்சிகள்தான். அந்தப் பையன் முதலில் அவர்களுடைய வீட்டிற்குப் போனபோது கதவைத் திறக்க ரொம்ப சிரமப்பட்டான். எதிர் அப்பார்ட்மென்ட்டில் வசித்த ஒரு பெண் என்ன சத்தமென அறிய நைசாக எட்டிப் பார்த்தாள். அந்தப் பையன் கதவைத் திறக்க முயலுவதைப் பார்த்து அவன் திருடன் என நினைத்தாள்; போலீஸை வரவழைத்தாள். அந்தப் பையனோ மீன்களுக்கு உணவு போட்டுவிட்டு வெளியே வந்தபோது இரண்டு போலீஸார் ஆயுதத்தோடு நின்றுகொண்டிருந்தார்கள்! “இங்கே என்ன செய்கிறாய்?” என கேட்டார்கள். “இந்த வீட்டுக்காரர்கள் மீன்களுக்கு உணவு போடச் சொல்லியிருந்தார்கள், அதைத்தான் செய்தேன்” என்றான். ஆனால் போலீஸார் அவனை நம்பவில்லை. “நான் ஒரு யெகோவாவின் சாட்சி, இந்த வீட்டுக்காரர்களும் யெகோவாவின் சாட்சிகள்தான். அவர்கள் வெளியூர் போவதால் மீன்களைக் கவனித்துக்கொள்ள சாவியைக் கொடுத்துவிட்டுப் போனார்கள்” என்றான். அப்போதும் போலீஸார் நம்பவில்லை. காவல் நிலையத்திற்கு அவனை அழைத்துச் செல்ல முடிவு செய்தார்கள். “ஒரு நிமிடம் பொறுங்கள். இந்த வீட்டுக்காரர்கள் அவர்களுடைய மொபைல் போன் நம்பரை எழுதிக் கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள்; நீங்கள் வேண்டுமென்றால் அவர்களுக்கு போன் செய்து, நான் சொல்வது உண்மையா இல்லையாவென தெரிந்துகொள்ளுங்கள்” என்றான் அவன். போலீஸார் அவ்வாறே போன் செய்து உண்மையைத் தெரிந்துகொண்டார்கள். பிறகு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, போய்விட்டார்கள். அந்தக் குடும்பத்தார் வீடு திரும்பியபோது எதிர்வீட்டுப் பெண்ணை சந்தித்துப் பேசினார்கள். அவள் அங்குப் புதிதாக குடிவந்திருந்தாள். கரிசனையுடன் நடந்துகொண்டதற்கு நன்றி சொன்னார்கள். தங்களைப் போலவே அந்தப் பையனும் ஒரு யெகோவாவின் சாட்சிதான் என்றும் முழுக்க முழுக்க நம்பகமானவன் என்றும் விளக்கினார்கள். அந்தப் பெண்ணிற்கு யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அதிகம் தெரியவில்லை; ஆகவே அவளிடம் பல விஷயங்களைப் பேச முடிந்தது, அவள் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டாள்.

இத்தாலியில் ஒரு சகோதரி வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தபோது, ஓர் இளம் பெண்ணை சந்தித்தார். அவளுக்கு பிள்ளைகள் இருந்தார்கள், முழுநேர வேலையில் மிகப் பிஸியாகவும் இருந்தாள். சகோதரி அவளை சந்திக்க பல முறை முயற்சி செய்தும் முடியாமல் போனது. ஆகவே அவளுக்குப் போன் செய்ய முடிவு செய்தார். அப்போது அந்தப் பெண், தனக்கு பைபிளைப் பற்றி பேசுவதற்குத் துளிகூட நேரமில்லை என விளக்கினாள். அதற்கு அந்தச் சகோதரி, “போனில் பேச 10 அல்லது 15 நிமிடம் மாத்திரம் கொடுத்தால்கூட போதும், புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்வீர்கள்” என்றார். “போனில் பேசுவதென்றால் சரி, எனக்குப் பிரச்சினையில்லை!” என அப்பெண் சொன்னாள். சமீபத்தில் சகோதரி, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தை அவளுக்குக் கொடுத்து, போனில் படிப்பை ஆரம்பித்தார். பொதுவாக சனிக்கிழமை காலையில் படிப்பு நடக்கிறது. ஆனால் 10-15 நிமிடம் நீடித்த அந்தப் படிப்பு இப்போது 30 நிமிடம் நீடிக்கிறது.

பிரிட்டனில் வசிக்கும் அநேக வெளிநாட்டவரிடம் சாட்சி கொடுக்கும் சவாலை சந்திக்க அங்குள்ள பிரஸ்தாபிகளில் அதிகமானோர் முன்வருகின்றனர்; இவர்களில் ஒருவர் பெயர் ஆன்ஜலா. இவர் உணவுப்பண்டங்களை விற்கும் ஒரு சீனக் கடைக்கு சாட்சி கொடுக்க சென்றபோது, அங்கு வேலை செய்த ஒருவர் ‘போ, போ’ என சைகை காட்டினார். அவர் அங்கிருந்து புறப்படும் சமயத்தில், ஒரு சீனப்பெண் தனது மொழியில் கடவுளுடைய பெயரை சப்தமாகச் சொல்லிக் கொண்டு கடையின் பின்புறத்திலிருந்து ஓடி வந்தாள். அவர்கள் சிறிது நேரம் பேசினார்கள்; பிறகு ஆன்ஜலா அவளுக்குத் தவறாமல் பத்திரிகைகளைக் கொடுத்து வந்தார். அந்தப் பெண்ணிற்கு பத்திரிகைகள் பிடித்திருந்தபோதிலும், இந்தச் சர்வலோகத்தை கடவுள்தான் படைத்தார் என நம்புவது கஷ்டமாக இருந்ததாய் விளக்கினாள். எல்லாமே தற்செயலாக உண்டானதாக அவள் நம்பினாள்.

அந்தக் கடையில் முட்டை போண்டாக்களை தயாரிப்பது அவளது வேலையாகும். அதைத் தயாரிக்க எத்தனை பொருட்களை அவள் பயன்படுத்துவாள் என ஆன்ஜலா கேட்டார். “ஐந்து” என அவள் பதிலளித்தாள். அடுத்த முறை அதைத் தயாரிக்கும்போது, அந்த ஐந்து பொருட்களையும் மேலே தூக்கி வீசும்படியும் அவை எத்தனை போண்டாக்களாக மாறுகின்றனவென பார்க்கும்படியும் ஆன்ஜலா சொன்னார். அடுத்த வாரம் அவர் கடைக்குப் போனபோது, அப்பெண் சுடச்சுட முட்டை போண்டாவைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, கடவுள்தான் சர்வலோகத்தைப் படைத்தார் என இப்போது நம்புவதாகச் சொன்னாள். அதுமுதல் அவள் தவறாமல் பைபிளைப் படித்து வருகிறாள். கடவுளுடைய வார்த்தையிலிருந்து சத்தியத்தைக் கற்றுக்கொள்வதில் அவள் நன்கு முன்னேறுகிறாள்.

ஜெர்மனியில், அணுமின் நிலையங்களின் கதிரியக்கக் கழிவுகள் ரயில் மூலம் அப்புறப்படுத்தப்படும்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்க்கிறார்கள். ஆகவே போலீஸ் பந்தோபஸ்தோடு இவ்வேலை நடைபெறுகிறது. ரயில் வருவதற்கு முன்பு அதன் பாதையில் எந்த இடையூறுகளும் ஏற்படாதவாறு போலீஸார் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நவம்பர் 2003-⁠ல் அப்படிப்பட்ட ஒரு பணி, கூட்ரூன் என்ற சகோதரி பயனியர் ஊழியம் செய்துவந்த இடத்திற்கு அருகில் நடந்தது. “போலீஸார் மணிக்கணக்காக சும்மா உட்கார்ந்து காத்துக்கொண்டிருப்பதை நினைத்துப் பார்த்தேன். அவர்களுக்கு எதையாவது படிக்கக் கொடுத்தால் என்னவென நினைத்தேன்” என்கிறார் கூட்ரூன். போலீஸார் மிகவும் அன்பாக பேசினார்களாம். பிரம்பு கூடையில் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை நிரப்பி எடுத்துச் சென்றாராம்; அவர்களிடம் பேச சுலபமாக அனுமதி கிடைத்ததாம். பவாரியா நகரைச் சேர்ந்த போலீஸ் வாகனத்திடம் சென்று விழித்தெழு! பத்திரிகையைக் கொடுத்து அவர்களிடம் பேசியபோது அவரைப் போட்டோ எடுத்தார்களாம். இரண்டு நாட்களில் 120 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் பயணித்தாராம். வழியெல்லாம் 100-⁠க்கும் அதிகமான போலீஸாரிடம் பேசினாராம். 184 பத்திரிகைகளை அளித்தாராம். “அந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது!” என உற்சாகம் பொங்க சொல்கிறார்.

ஸ்பெயினில் வசிக்கும் ஆனா மாரியா ஒருநாள் வேலை முடிந்து பஸ் ஸ்டாப்பிற்குச் சென்றார். பஸ்ஸுக்காக காத்திருக்கும்போது அங்கிருந்த சில சுவரொட்டிகளை வாசிக்க ஆரம்பித்தார். அதில் ஒன்று சட்டென்று அவரது கவனத்தை ஈர்த்தது. “தொடர்ந்து பைபிளைப் படிக்க ஆசைப்படுகிறேன், யெகோவாவின் சாட்சிகளுடன் உடனடியாக தொடர்புகொள்ள விரும்புகிறேன்” என்று அதில் எழுதப்பட்டிருந்தது. ஆனா மாரியா அப்போதே அந்த நம்பருக்குப் போன் செய்து, அந்தப் பெண்ணைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அவளது பெயர் ஃபேலிதிடாஸ். அவள் சமீபத்தில் ஈக்வடாரிலிருந்து குடிமாறி வந்திருந்தாள். அங்கே அவள் இரண்டு வருடங்கள் பைபிளைப் படித்து வந்திருந்தாள். இப்போது மீண்டும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தாள். அவளும் அவளது மகனும் அதுமுதல் எல்லா கூட்டங்களுக்கும் வந்திருக்கிறார்கள். ஆன்மீக ரீதியில் தொடர்ந்து முன்னேறுவதற்கு வந்த தடை சீக்கிரத்தில் நீங்கியதைக் குறித்து அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

பல்கேரியாவில் ஒரு பெண்மணி, தன் பேரனோடு சேர்ந்து சாட்சிகளுடன் பைபிளைப் படித்து வந்தார். கடவுளுடைய பெயர் யெகோவா என்பதைக் கற்றபோது பூரித்துப்போனார். அவருடைய பைபிளில் கடவுளுடைய பெயர் இல்லாததால், வேறு பைபிளை வாங்குவதற்கு ஒரு புத்தகக் கடைக்குச் சென்றார். என்ன வேண்டுமென கடைக்காரர் கேட்டார். பதில் சொன்னவுடன், “நீங்கள் அந்தப் பிரிவைச் சேர்ந்தவரா!” என சத்தம்போட ஆரம்பித்தார். அப்போது பார்த்து ஒரு பாதிரி அக்கடைக்கு வந்தார். “கடவுளுடைய பெயர் என்ன?” என்று அவரிடம் கடைக்காரர் கேட்டபோது, “யெகோவாதான், இதில் என்ன சந்தேகம். இந்த அம்மாவிடம் கத்துவதை முதலில் நிறுத்து” என்றார். கடைக்காரர் வாயடைத்துப்போய் நின்றார். இப்போது அந்தப் பெண்மணியும் அவரது குடும்பத்தினர் மூவரும் ஆன்மீக ரீதியில் நல்ல முன்னேற்றம் செய்து வருகிறார்கள்.

ரஷ்யாவில் ஒரு குடும்பத்தினர் கடும் துயரத்தைச் சந்தித்தார்கள். அந்தப் பெற்றோர் தங்கள் அருமை மகனைப் பறிகொடுத்துத் தவித்தார்கள். அவனது சவ அடக்கத்திற்கு முந்தைய நாள், அவனது தாய் அவனது நோட்புக்கைப் பார்த்து அவனுடைய எல்லா நண்பர்களுக்கும் போன் செய்து தெரிவித்தார். யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் ஒரு குடும்பத்தாரின் நம்பரும் அதில் இருந்தது. அவர்களையும் அவர் சவ அடக்கத்திற்கு அழைத்தார். அவர்களுக்கு அந்தப் பெற்றோரைத் தெரியாது. ஆனாலும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்களுக்கு ஆறுதல் அளிக்க தீர்மானித்தார்கள். இறந்த பையனின் தகப்பனிடம் உயிர்த்தெழுதல் நம்பிக்கை பற்றி சகோதரர் பேசினார். நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டையும் கொடுத்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மறுபடியும் அவர்களைப் போய் சந்தித்தார். அப்போது தகப்பன் இவ்வாறு சொன்னார்: “அந்தப் புத்தகம் எங்கள் மனதைத் தொட்டுவிட்டது. பைபிளைப் படிப்பதற்காக நேரம் ஒதுக்க நாங்கள் முடிவு செய்துவிட்டோம்.” இப்போது அந்தத் தாய் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார், முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக ஆவதற்கு தயாராகி வருகிறார்.

ஓசியானியா

நாடுகளின் எண்ணிக்கை: 30

மக்கள் தொகை: 3,48,20,382

பிரஸ்தாபிகள்: 94,087

பைபிள் படிப்புகள்: 48,307

ஹவாய் தீவில் வசிக்கும் ஆலினா, டிசம்பர் 2003-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றாள்; அப்போது அவளுக்கு வெறும் 12 வயதுதான். பொழுதுபோக்கிலும் விளையாட்டிலுமே நாட்டமுள்ள இளைஞர்களைப் போல் இல்லாமல் அவள் சிறந்த ஆன்மீக இலக்குகளை வைத்திருக்கிறாள். அவள் சொல்வதாவது: “நான் மார்ச் மாதத்திலும் மே மாதத்திலும் துணைப் பயனியர் ஊழியம் செய்தேன். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பயனியர்களோடும் பெரியவர்களோடும் சேர்ந்து ஊழியம் செய்தது மிக நன்றாக இருந்தது. உதாரணத்திற்கு, முன்பு மிஷனரியாக இருந்த சகோதரியோடு சேர்ந்து சனிக்கிழமை மதிய வேளையில் அவரது மறுசந்திப்புகளுக்காகவும் பைபிள் படிப்புகளுக்காகவும் சென்று சீனர்களைச் சந்தித்தோம். அது எனக்குக் கிடைத்த பாக்கியம். சீன மொழி எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அந்நிய மொழி சபையில் ஒழுங்கான பயனியராக ஊழியம் செய்ய வேண்டும் என்பதுதான் என் எதிர்கால இலக்கு. அதை அடைவதற்காக, புதன்கிழமைகளில் பள்ளி முடிந்த பிறகும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊழியம் செய்கிறேன். அதோடு, எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் துணைப் பயனியர் ஊழியம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன்.” தனது இலக்குகளை அடைய வேறு எதுவும்கூட உதவுமென அவள் நம்புகிறாள்? “என் இருதயத்தைக் காத்துக்கொள்வதற்கு யெகோவாவைப் பிரியப்படுத்துவதுதான் முக்கியம் என்பதைச் செயல்களில் காட்ட வேண்டும். என்னைப் போலவே யெகோவாவிடம் நெருங்கியிருப்பவர்களுடன் பழகுவதும்கூட, நீதியின் பாதையில் நிலைத்திருக்க எனக்கு உதவும். யெகோவாவின் சேவையில் அதிக நேரம் செலவழிக்கையில், உலகப்பிரகாரமாக சிந்திப்பவர்களுடன் பழகுவதற்கு நேரம் இருப்பதில்லை. இதனால், பணமும் பொருளும் நெறிகெட்ட பொழுதுபோக்கும் என்னை சந்தோஷப்படுத்தும் என்று நினைப்பதில்லை, சொல்லப்போனால், இவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறேன்.”

சாலமன் தீவுகளில், பெற்றோர் தங்கள் சிறு பிள்ளைகளில் ஓரிருவரை உறவினர்களுக்குத் தத்துக்கொடுப்பது வழக்கம். ஆனால் யெகோவா எதை பெற்றோரிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்பதை ஒரு தம்பதியர் கற்றுக்கொண்டனர்; அதன் பிறகு தங்கள் மகள் டெபராவை திரும்ப தங்களிடமே அனுப்பிவிடும்படி உறவினரிடம் கேட்டுக்கொண்டனர். டெபராவோ அப்போது டீனேஜில் இருந்தாள். யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் குடும்பத்தில் திடீரென வாழ்வது அவளுக்கு எப்படி இருந்தது? கூட்டங்களிலும் ஊழியத்திலும் குடும்ப பைபிள் படிப்பிலும் மும்முரமாக ஈடுபட்டவர்களோடு திடீரென சேர்ந்து வாழ்வது எப்படி இருந்தது? டெபரா சொல்கிறாள்: “முதன்முதலாகக் கூட்டத்திற்குப் போனபோது எல்லாரும் நான் வந்ததைக் குறித்து ரொம்ப சந்தோஷப்பட்டதைப் பார்க்க முடிந்தது. விசேஷ அங்கிகள் அணிந்த சில பாதிரிமார் இருப்பார்கள் என நினைத்து போனேன், ஆனால் அப்படி யாரும் இருக்கவில்லை. சிறு பிள்ளைகள்கூட கூட்டங்களில் பதில் சொன்னார்கள்.” சீக்கிரத்தில் டெபராவும் அவ்வாறு பதில் சொல்ல ஆரம்பித்தாள். அவளுடைய அப்பா அவளுக்கும் அவள் கூடப் பிறந்தவர்களுக்கும் கற்பிக்கிற முறைகூட அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவள் சொல்வதாவது: “பைபிள் கதாபாத்திரங்களைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க அப்பா எங்களுக்கு உதவுகிறார். எனக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது சமாளிக்க இது மிகவும் உதவியாய் இருக்கிறது.” இப்போது டெபரா முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக இருக்கிறாள்; தன்னை மீண்டும் குடும்பத்திடமும் ஜீவபாதையிடமும் அழைத்துவர கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியம் தன் பெற்றோரைத் தூண்டியதை எண்ணி மிகவும் சந்தோஷப்படுகிறாள்.

பாப்புவா-நியூ கினியின் சில பகுதிகள் மலைப்பாங்கானவை; அநேக கிராமங்களுக்குச் செல்ல சாலை வசதியே இல்லை. இவற்றில் சில கிராமங்கள் உலகிற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததுபோல் எங்கோ மூலையில் ஒதுங்கியிருக்கின்றன. ஆனால் இப்படிப்பட்ட இடங்களில்கூட ராஜ்ய நற்செய்தி சென்றெட்டியிருக்கிறது. தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் நடந்த சபைக் கூட்டத்திற்கு லியான்னா என்றவர் வந்திருந்தார். அவர் உயரமான மலைகளில் அமைந்துள்ள ஓர் ஒதுக்குப்புற கிராமத்தின் தலைவர் என்பதைச் சகோதரர்கள் அறிந்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அந்தக் கிராமத்தில் எந்த நவீன வசதிகளும் கிடையாது. புதரையெல்லாம் தாண்டி நெடுஞ்சாலைக்கு வருவதற்கே லியான்னாவுக்கு ஐந்து நாட்கள் எடுத்தன. அதன் பிறகு அங்கிருந்து டிரக் மூலம் தலைநகருக்கு வந்து சேர்ந்தார். சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு, அவர் அந்நகருக்கு வந்திருந்தபோது தெருவில் ஒரு சகோதரரைச் சந்தித்தாராம். அவர் காவற்கோபுரம் பத்திரிகையைக் கொடுத்திருந்தாராம். லியான்னா அப்பத்திரிகையை தன் கிராமத்திற்கு எடுத்துப் போய் வாசித்தப் பிறகு அதிலிருந்த விஷயங்களை தன் கிராமத்து மக்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்தாராம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பல ஆண்டுகளாக அப்படிக் கற்பித்து வந்தாராம்; பத்திரிகையை ஒரு ப்ளாஸ்டிக் கவரில் போட்டு பத்திரமாக வைத்துக்கொண்டாராம். கடைசியாக, பத்திரிகையைப் பிரசுரித்தவர்களைக் கண்டுபிடிக்கும்படி கிராமத்துவாசிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் மீண்டும் நகரத்திற்கு வந்து சகோதரர்களை சந்தித்தாராம். அவரோடு பைபிளைப் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் ஒரு குடும்பத்தாரோடு லியான்னா சுமார் இரண்டு வாரங்கள் தங்கி, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை படித்து முடித்தார். அவரது கிராமத்திற்குக் கொஞ்சம் தூரத்திலுள்ள நகரில் ஒரு சபை இருப்பது அவரிடம் சொல்லப்பட்டபோது அவர் மிகவும் பூரித்துப்போய், “அது வசதியாக இருக்குமே! என் கிராமத்திலிருந்து இரண்டு நாட்கள் நடந்தால் போதுமே!” என்றார். ஒரு பை நிறைய பிரசுரங்களை எடுத்துக்கொண்டு, கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை இன்னுமதிகம் புரிந்துகொண்டு, தன் கிராமத்திற்கு நீண்ட பயணத்தை ஆரம்பித்தார். கூடிய விரைவில் அந்தக் கிராம மக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவர்களும் பைபிளை திருத்தமாக கற்றுக்கொள்ளவே இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

கிரிபடி என்ற தீவு தேசத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய மொழிபெயர்ப்பு அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சகோதரி இந்த அனுபவத்தைச் சொல்கிறார்: “நரகம் பற்றி விவரித்த ஒரு காவற்கோபுரம் பத்திரிகையை ஒருநாள் காலை நான் எடுத்துச் சென்றேன். அது பழைய பத்திரிகையாக இருந்தாலும் யாருக்காவது கொடுக்கலாமென நினைத்தேன். நானும் என்னுடைய பார்ட்னரும் ஒரு நபரைச் சந்தித்தோம். எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, நரகத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறதென சுருக்கமாகப் பேசிவிட்டு இந்தப் பத்திரிகையைக் காட்டினோம். அவர் தன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு சிறிது நேரம் அமைதலாக இருந்தார். ஏதாவது பிரச்சினையா என கேட்டேன். அவர் தலை நிமிர்ந்தபோதுதான், அழுவது தெரிந்தது. அந்தப் பத்திரிகையின் தலைப்பு தன் மனதை மிகவும் பாதித்துவிட்டதாக சொன்னார். அவரது மகன் சில வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும் அவரும் அவரது மனைவியும் இன்னும் அவனை நினைத்துத் துக்கிப்பதாகவும் சொன்னார். அவர்களது மகன் எரிநரகத்தில் இருப்பதாக நினைத்ததால் தங்கள் மன சாந்திக்காக இருவரும் கடவுளிடம் ஜெபித்துக்கொண்டே இருந்தார்களாம். இறந்தவர்களைப் பற்றி உண்மையில் பைபிள் சொல்வதை அறிந்துகொண்டபோது அவருக்கு ஆச்சரியமும் சந்தோஷமும் தாளவில்லை. மறுசந்திப்பின்போது பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. சத்தியத்தைக் காட்டும்படி கடவுளிடம் ஜெபித்து வந்ததாக அவர் அடிக்கடி சொல்கிறார். உண்மையிலேயே பைபிளைக் கற்பிக்கும் மதத்தைக் கண்டுபிடிக்கவும் அவர் ஏங்கிக்கொண்டிருந்தாராம். இப்போது கூட்டங்களுக்கு வர ஆரம்பித்திருக்கிறார். காவற்கோபுர படிப்பின்போது மனதிலிருந்து பதில் சொல்வதற்கு நன்கு தயாரித்தும் வருகிறார்.”

டிசம்பர் 2003-⁠ல், ஆஸ்திரேலியாவில் யெகோவாவின் சாட்சிகளால் இதுவரை நடத்தப்பட்டதிலேயே மிகப் பெரிய மாநாட்டிற்கு 60,000-⁠க்கும் அதிகமானவர்கள் வந்திருந்தார்கள். சிட்னியில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்குப் பிறகு வீடு திரும்பிய ஆறு வயது ஆலிஸ்யா, பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புதிய புத்தகத்தை தன் ஸ்கூல் பிள்ளைகளுக்குக் காட்டத் துடித்தாள். மதியவேளையில் அவளை ஸ்கூலிலிருந்து அழைத்துச் செல்ல அவளது அம்மா வந்தபோது, வகுப்பின் கரும்பலகையில் “தேவனை மகிமைப்படுத்துங்கள்” என்ற வார்த்தைகள் கொட்டை எழுத்துக்களில் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார். அன்று காலை ஆலிஸ்யா மூன்று ஆசிரியைகளோடும் 24 மாணவிகளோடும் மாநாட்டு விஷயங்களைப் பற்றி பேசியிருந்தாள். அந்தப் புதிய புத்தகமும் அவள் உற்சாகமாகச் சொன்ன மாநாட்டு சிறப்புக் குறிப்புகளும் எல்லாருக்குமே பிடித்துவிட்டது. அன்றைய நாள் முழுவதும் “தேவனை மகிமைப்படுத்துங்கள்” என்ற வார்த்தைகள் கரும்பலகையில் அப்படியே இருந்தன.

[பக்கம் 43-ன் படம்]

நாஃபிஸாட்டூ, நைஜர்

[பக்கம் 43-ன் படம்]

சித்தி பையனுடனும் தன் சகோதரர்களுடனும் ரான்ட்ஸோ (வலமிருந்து இரண்டாவது), லெசோதோ

[[பக்கம் 48-ன் படம்]

மாரி, குவாடலூப்

[பக்கம் 48-ன் படம்]

ஆன்டோன்யோ, மெக்சிகோ

[பக்கம் 52-ன் படம்]

கெங்ஷ்யாம், நேப்பாளம்

[பக்கம் 56-ன் படம்]

யாக்கோபா, நெதர்லாந்து

[பக்கம் 58-ன் படம்]

ஆன்ஜலா, பிரிட்டன்

[பக்கம் 61-ன் படம்]

ஆலினா, ஹவாய்