Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழிப்புடன் இருங்கள்!

தஞ்சம் தேடும் அகதிகள்—லட்சக்கணக்கானோர் உக்ரைனைவிட்டு வெளியேறுகிறார்கள்

தஞ்சம் தேடும் அகதிகள்—லட்சக்கணக்கானோர் உக்ரைனைவிட்டு வெளியேறுகிறார்கள்

 பிப்ரவரி 24, 2022 அன்று, உக்ரைன்மீது ரஷ்யா படையெடுத்ததால் அங்கே ரொம்ப மோசமான ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. மக்களுடைய உயிர் ஆபத்தில் இருப்பதால் லட்சக்கணக்கானவர்கள் நாட்டைவிட்டே வெளியேறுகிறார்கள். a

 “திரும்புன பக்கமெல்லாம் குண்டு வெடிச்சுட்டு இருந்துது. அந்த பயங்கரமான சூழ்நிலைய என்னால வார்த்தைகள்ல விவரிக்கவே முடியாது. தப்பிச்சு போக ட்ரெயின் இருக்குனு கேள்விப்பட்ட உடனே இங்கிருந்து கிளம்ப முடிவு பண்ணுனோம். எங்க வாழ்க்கையே ஒரு சின்ன பையில அடங்குன மாதிரி இருந்துச்சு. ஆளுக்கு ஒரு பைதான் எடுத்துட்டு போக முடிஞ்சுது. முக்கியமான ஆவணங்கள், மருந்து மாத்திரை, தண்ணி, நொறுக்குத்தீனி... இத மட்டும்தான் எடுத்துட்டு போக முடிஞ்சுது. ஒருபக்கம் குண்டு மழை பொழிஞ்சுட்டே இருந்துது, இன்னொரு பக்கம் நாங்க எல்லாத்தயும் விட்டுட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடுனோம்.”—நட்டாலியா, கார்கீவ், உக்ரைன்.

 “போரே நடக்காதுனுதான் கடைசி நிமிஷம் வரைக்கும் நாங்க நெனைச்சோம். அங்கங்க குண்டு வெடிக்கிற சத்தம் கேட்டுச்சு. ஜன்னலெல்லாம் அதிர்ந்துச்சு. உண்மைலயே எது தேவையோ அத மட்டும் எடுத்துட்டு அங்கிருந்து கிளம்பலாம்னு முடிவு பண்ணுனேன். காலைல எட்டு மணிக்கு வீட்டைவிட்டு கிளம்புனேன். அப்புறம் ஒரு ட்ரெயினை பிடிச்சு லிவிவுக்கு போனேன். அங்கிருந்து பஸ் பிடிச்சு போலந்துக்கு போனேன்.”—நாடியா, கார்கீவ், உக்ரைன்.

இந்தக் கட்டுரையில்

 அகதிகள் பிரச்சினை இன்று உருவானதற்கு உண்மையான காரணங்கள் என்ன?

 உக்ரைன்மீது ரஷ்யா படையெடுத்ததால்தான் அகதிகள் பிரச்சினை இப்போது உருவாகியிருக்கிறது. ஆனால், உலகத்தில் அகதிகள் பிரச்சினை ஏற்படுவதற்கு உண்மையான காரணங்கள் என்னவென்று பைபிள் சொல்கிறது:

  •   மனித அரசாங்கங்கள்: உலகத்தில் இருக்கும் எந்த அரசாங்கத்தாலும் மக்களுடைய பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியவில்லை. நிறைய சமயங்களில், ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அடக்கி ஒடுக்குகிறார்கள்.—பிரசங்கி 4:1; 8:9.

  •   பிசாசாகிய சாத்தான்: “இந்த உலகத்தை ஆளுகிற” பிசாசாகிய சாத்தான் மனிதர்களைத் தவறு செய்யத் தூண்டுகிறான். அதனால்தான், “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது.—யோவான் 14:30; 1 யோவான் 5:19.

  •   கடைசி நாட்கள்: காலங்காலமாகவே மனிதர்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. ஆனால், நாம் வாழும் காலத்தைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “கடைசி நாட்களில், சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்.” (2 தீமோத்தேயு 3:1) அதுமட்டுமல்ல, இந்தக் கடைசி காலத்தில் போர்களும், இயற்கைப் பேரழிவுகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் வரும் என்றுகூட பைபிள் சொல்கிறது. (லூக்கா 21:10, 11) அதனால், மக்கள் நிறைய இடங்களுக்குச் சிதறிப்போகிறார்கள்.

 அகதிகள் பிரச்சினைக்கு யாரால் உண்மையான தீர்வைக் கொடுக்க முடியும்?

 நம்மைப் படைத்த கடவுளாகிய யெகோவா, b அகதிகளாக அவதிப்படுகிறவர்கள் மீதும் வீடுகளைவிட்டுச் சிதறிப்போனவர்கள் மீதும் அன்பையும் கரிசனையையும் காட்டுகிறார் என்று பைபிள் சொல்கிறது. (உபாகமம் 10:18) தன்னுடைய அரசாங்கத்தின் மூலமாக அகதிகளுடைய எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கப்போவதாகக் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். கடவுளுடைய இந்த அரசாங்கம், மனிதர்களுடைய எல்லா அரசாங்கங்களையும் ஒழித்துக்கட்டிவிட்டு இந்த உலகத்தை ஆட்சி செய்யும். (தானியேல் 2:44; மத்தேயு 6:10) இந்த அரசாங்கத்தின் மூலமாக யெகோவா பிசாசாகிய சாத்தானை அழித்துவிடுவார். (ரோமர் 16:20) இது உலகம் முழுவதும் ஆட்சி செய்யும் ஒரே அரசாங்கமாக இருக்கும். நாடுகளைப் பிரிக்கும் கோடுகள் இனிமேலும் இருக்காது. ஏனென்றால், உலகம் முழுவதும் எல்லாருமே ஒரே குடும்பமாக வாழ்வார்கள். யாரும் தங்களுடைய வீட்டைவிட்டுச் சிதறிப்போக வேண்டிய நிலைமை வராது. ஏனென்றால், பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஒவ்வொருவரும் தங்கள் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள். பரலோகப் படைகளின் யெகோவா இதைச் சொல்லியிருக்கிறார்.”—மீகா 4:4.

 இன்று அகதிகள் எதிர்ப்படும் பிரச்சினைகள் எல்லாவற்றுக்குமே கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டும்தான் நிரந்தரமான தீர்வைக் கொடுக்க முடியும். எந்தப் பிரச்சினைகளால் இன்று ஜனங்கள் அகதிகளாகத் தவிக்கிறார்களோ அந்தப் பிரச்சினைகளையே யெகோவா நீக்கிவிடுவார். அதில் சில பிரச்சினைகளைக் கவனியுங்கள்:

  •   போர்கள். “[யெகோவா] போர்களுக்கு முடிவுகட்டுகிறார்.” (சங்கீதம் 46:9) அவர் இதை எப்படிச் செய்வார் என்று தெரிந்துகொள்ள, “பூமியில் சமாதானம்—எப்படி வரும்?” என்ற கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

  •   கொடுங்கோல் ஆட்சியும் வன்முறையும். “கொடுங்கோல் ஆட்சியிலிருந்தும் வன்முறையிலிருந்தும் [யெகோவா] அவர்களை விடுவிப்பார்.” (சங்கீதம் 72:14) இன்று மக்களுடைய மனதில் ஊறிப்போயிருக்கும் சில எண்ணங்களை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிந்துகொள்ள, “வெறுப்பு சங்கிலியை உடைத்து எறியுங்கள்” என்ற தலைப்பில் வந்த தொடர்கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள்.

  •   வறுமை. “ஏழைகளின் கூக்குரலைக் கேட்டு [யெகோவா] உதவி செய்வார்.” (சங்கீதம் 72:12) வறுமைக்கு ஆணிவேராக இருக்கும் பிரச்சினைகளைக் கடவுள் எப்படிச் சரிசெய்வார் என்று தெரிந்துகொள்ள, “எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கும் நிலை வருமா?” என்ற கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

  •   உணவுப் பற்றாக்குறை. “பூமியில் ஏராளமாகத் தானியம் விளையும்.” (சங்கீதம் 72:16) பசி பட்டினியால் யாருமே வாடாமல் இருக்க கடவுள் என்ன செய்யப்போகிறார் என்று தெரிந்துகொள்ள, “பசி-பட்டினியே இல்லாத காலம் வருமா?” என்ற கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

 பிரச்சினைகளைச் சமாளிக்க அகதிகளுக்கு பைபிள் உதவுமா?

 நிச்சயமாக உதவும். அகதிகளின் பிரச்சினை எதிர்காலத்தில் சரியாகும் என்ற நம்பிக்கையைக் கொடுப்பது மட்டுமல்லாமல், இப்போதே அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பதைப் பற்றியும் பைபிள் சொல்கிறது.

 பைபிள் ஆலோசனை: “விவரம் தெரியாதவன் யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடுகிறான். ஆனால், சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்.”—நீதிமொழிகள் 14:15.

 அர்த்தம்: என்னென்ன ஆபத்துகளில் நீங்கள் மாட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்றும், அதிலிருந்து உங்களை எப்படிக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்றும் யோசித்துப் பாருங்கள். ஒரு அகதியாக, உங்களுக்குப் பழக்கமில்லாத ஒரு இடத்தில் நீங்கள் இருப்பீர்கள். உங்களுக்குப் பாதுகாப்பும் குறைவாக இருக்கலாம். இதைச் சாதகமாகப் பயன்படுத்தி உங்களை ஏமாற்ற நினைக்கும் ஆட்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்!

 பைபிள் ஆலோசனை: “நமக்கு உணவும் உடையும் இருந்தால் அதுவே போதும் என்று திருப்தியோடு வாழ வேண்டும்.”—1 தீமோத்தேயு 6:8.

 அர்த்தம்: பணம் பொருளைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருக்காதீர்கள். உங்களிடம் இருப்பதே போதும் என்று திருப்தியாக இருந்தீர்கள் என்றால், சந்தோஷமாக இருப்பீர்கள்.

 பைபிள் ஆலோசனை: “மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.”—மத்தேயு 7:12.

 அர்த்தம்: பொறுமையாகவும் அன்பாகவும் நடந்துகொள்ளுங்கள். அப்படி நடந்துகொண்டால், உள்ளூர் மக்கள் உங்களை மதிப்பார்கள், உங்களை ஏற்றுக்கொள்வார்கள்.

 பைபிள் ஆலோசனை: “யாருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்.”—ரோமர் 12:17.

 அர்த்தம்: யாராவது உங்களை அநியாயமாக நடத்தினால் பதிலுக்கு நீங்களும் கோபப்பட்டு எதையாவது செய்துவிடாதீர்கள். அது பிரச்சினைகளை இன்னும் மோசமாகத்தான் ஆக்கும்.

 பைபிள் ஆலோசனை: “என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது.”—பிலிப்பியர் 4:13.

 அர்த்தம்: உங்கள் வாழ்க்கையில் கடவுளை முக்கியமாக நினையுங்கள், அவரிடம் ஜெபம் பண்ணுங்கள். பிரச்சினைகளைச் சமாளிக்கத் தேவையான பலத்தை அவர் உங்களுக்குக் கொடுப்பார்.

 பைபிள் ஆலோசனை: “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் நன்றியோடுகூடிய ஜெபத்தின் மூலமும் மன்றாட்டின் மூலமும் கடவுளிடம் சொல்லுங்கள். அப்போது, எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இதயத்தையும் மனதையும் . . . பாதுகாக்கும்.”—பிலிப்பியர் 4:6, 7.

 அர்த்தம்: நீங்கள் என்ன சூழ்நிலையில் இருந்தாலும், உங்களுக்கு மன அமைதியைத் தரச் சொல்லி கடவுளிடம் கேளுங்கள். “பிலிப்பியர் 4:6, 7—‘நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

a உக்ரைன்மீது ரஷ்யா படையெடுத்த அடுத்த நாளே, அகதிகள் பிரச்சினை ஒரு படுபயங்கரமான அவசரநிலையை உருவாக்கியிருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) அறிவித்தது. வெறும் 12 நாளில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உக்ரைனிலிருந்து மற்ற நாடுகளுக்கு அகதிகளாகப் போயிருக்கிறார்கள். இன்னும் 10 லட்ச மக்கள் சொந்த நாட்டிலேயே பல இடங்களுக்குச் சிதறிப்போய்விட்டார்கள்.

b யெகோவா என்பது கடவுளுடைய பெயர். (சங்கீதம் 83:18) “யெகோவா யார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.