Skip to content

பரிணாமத்தைப் பயன்படுத்திதான் ஒவ்வொரு விதமான உயிரினத்தையும் கடவுள் படைத்தாரா?

பரிணாமத்தைப் பயன்படுத்திதான் ஒவ்வொரு விதமான உயிரினத்தையும் கடவுள் படைத்தாரா?

பைபிள் தரும் பதில்

 இல்லை. கடவுள் மனிதர்களையும் வெவ்வேறு ‘இன’ மிருகங்களையும் பறவைகளையும் செடி கொடிகளையும் படைத்தார் என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. a (ஆதியாகமம் 1:12, 21, 25, 27; வெளிப்படுத்துதல் 4:11) மனிதர்கள் எல்லாருமே முதல் பெற்றோரான ஆதாம் ஏவாளிலிருந்து வந்தவர்கள் என்று அது சொல்கிறது. (ஆதியாகமம் 3:20; 4:1) பரிணாமத்தைப் பயன்படுத்தி வெவ்வேறு இன உயிர் வகைளைக் கடவுள் படைத்தார் என்ற கோட்பாட்டை (theistic evolution) பைபிள் ஆதரிப்பது இல்லை. ஆனால், ஒவ்வொரு இனத்துக்குள்ளும் சில மாற்றங்கள் நிகழ்வதாக விஞ்ஞானிகள் சொல்வதை பைபிள் ஒத்துக்கொள்கிறது.

 கடவுள் பரிணாமத்தைப் பயன்படுத்தினாரா?

 பரிணாமத்தைப் பயன்படுத்திதான் கடவுள் உயிரினங்களைப் படைத்தார் என்று நம்புகிற மக்கள் மத்தியிலேயே, அதை அவர் எப்படிச் செய்தார் என்பதைப் பற்றி வித்தியாசமான கருத்துக்கள் இருக்கின்றன. இதைப் பற்றி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இப்படிச் சொல்கிறது: “இயற்கை உலகை இயங்க வைப்பதற்கு, இயற்கை தேர்வையும் b கடவுள் பயன்படுத்தியிருக்கிறார்.”

 பரிணாமத்தைப் பயன்படுத்திதான் கடவுள் உயிரினங்களைப் படைத்தார் என்ற கோட்பாட்டில் இந்த விஷயங்களும் அடங்கும்:

  •   ஆண்டாண்டு காலங்களுக்கு முன்பிருந்த ஒரே பொதுவான உயிரினத்திலிருந்து எல்லா உயிரினங்களும் வந்தன.

  •   ஒரு வகையான இனத்தால் முற்றிலும் வித்தியாசமான இன்னொரு இனமாகப் பரிணமிக்க முடியும்.

  •   இந்த எல்லா செயல்பாடுகளுக்கும் ஏதோவொரு விதத்தில் கடவுள்தான் காரணமாக இருக்கிறார்.

 பரிணாமம் பைபிளோடு ஒத்துப்போகிறதா?

 பரிணாமத்தைப் பயன்படுத்திதான் கடவுள் உயிரினங்களைப் படைத்தார் என்ற கோட்பாடு, படைப்பைப் பற்றி ஆதியாகமத்தில் சொல்லப்பட்டுள்ள பைபிள் பதிவு துல்லியமானது கிடையாது என்று மறைமுகமாகக் காட்டுகிறது. ஆனால், ஆதியாகமத்தில் இருக்கிற பதிவு உண்மையானது என்பதை இயேசுவின் வார்த்தைகள் காட்டுகின்றன. (ஆதியாகமம் 1:26, 27; 2:18-24; மத்தேயு 19:4-6) இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பு, கடவுளோடு பரலோகத்தில் வாழ்ந்தார் என்றும், ‘எல்லாவற்றையும்’ படைப்பதற்கு கடவுளுக்கு உதவி செய்தார் என்றும் பைபிள் சொல்கிறது. (யோவான் 1:3) இதிலிருந்து, பரிணாமத்தைப் பயன்படுத்திதான் வித்தியாசமான உயிரினங்களைக் கடவுள் படைத்தார் என்ற கோட்பாடு பைபிளோடு ஒத்துப்போகவில்லை என்பது தெரிகிறது.

 செடி கொடிகளும் மிருகங்களும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றபடி மாறுவதை பரிணாமம் என்று சொல்ல முடியுமா?

 ஒரு இனத்துக்குள் எத்தனை மாற்றங்கள் ஏற்படும் என்று பைபிள் விளக்கமாகச் சொல்வதில்லை. அதேசமயத்தில், கடவுள் படைத்த வெவ்வேறு இன மிருகங்களும் தாவரங்களும் இனப்பெருக்கம் செய்யும்போதோ, ஒரு புதிய சுற்றுச்சூழலுக்கு ஏற்றபடி அவை மாறும்போதோ சில வேறுபாடுகள் ஏற்படும் என்ற உண்மையை பைபிள் மறுப்பதில்லை. இதை ஒரு வகையான பரிணாம வளர்ச்சி என்று சிலர் நினைத்தாலும் இந்த மாற்றங்களால் ஒரு புதிய இனம் உருவாவதில்லை.

a விஞ்ஞானிகள் பயன்படுத்துகிற “சிற்றினம்” என்ற வார்த்தைக்குப் பதிலாக, விரிவான அர்த்தத்தைத் தரும் “இனம்” என்ற வார்த்தையை பைபிள் பயன்படுத்துகிறது. இந்த இனத்துக்குள் நடக்கிற மாற்றங்களைத்தான் புதிதாகப் பரிணமித்திருக்கும் சிற்றினங்கள் என்பதாக விஞ்ஞானிகள் பெரும்பாலும் சொல்கிறார்கள்.

b ஒரு விலங்கோ தாவரமோ அதனுடைய சுற்றுச்சூழலுக்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக்கொண்டு உயிர் வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்கிறது. இதைத்தான் இயற்கை தேர்வு (natural selection) என்று சொல்கிறார்கள்.