Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

என் அப்பா அம்மா விவாகரத்து செய்ய நினைத்தால் என்ன செய்வது?

என் அப்பா அம்மா விவாகரத்து செய்ய நினைத்தால் என்ன செய்வது?

 இளைஞர்களுடைய வாழ்க்கையில் ரொம்ப ஸ்ட்ரெஸைக் கொடுக்கிற ஒரு விஷயம் என்னவென்றால், அவர்களுடைய அப்பா-அம்மா விவாகரத்து செய்வதுதான். அந்தப் பிரச்சினையை நீங்கள் எப்படி சமாளிக்கலாம்?

இந்தக் கட்டுரையில்

 நீங்கள் செய்யக் கூடாத மூன்று விஷயங்கள்

 1. உங்கள்மேல் பழி போட்டுக்கொள்வது

 ”நீ பிறந்த அப்புறம்தான் எங்களுக்குள்ளே பிரச்சினையே வர ஆரம்பித்தது என்று என்னுடைய அம்மா ஒரு தடவை என்னிடம் சொன்னார். அதனால் அவர்களுடைய கல்யாண வாழ்க்கை முடிந்து போனதற்கு நான்தான் காரணம் என்று நினைத்துக்கொண்டேன்.“—டயானா.

 இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்: உங்கள் அப்பா-அம்மா விவாகரத்து செய்ததற்கு காரணம் அவர்கள்தான், நீங்கள் கிடையாது. அவர்களுக்கு இடையே வந்த பிரச்சினைதான் அதற்கு காரணம். அந்தப் பிரச்சினையை நீங்கள் உருவாக்கவில்லை. உங்களால் அதை சரிசெய்யவும் முடியாது. அதை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு அவர்களுடையது.

 “ஒவ்வொருவனும் அவனவன் பாரத்தை சுமப்பான்.”—கலாத்தியர் 6:5.

 2. மனதில் வெறுப்பை வளர்த்துக்கொள்வது

 ”என் அப்பா, என் அம்மாவுக்கு துரோகம் செய்ததை நினைச்சு என் அப்பாமேல் எனக்கு ரொம்ப கோபம் வந்தது. திரும்பவும் அவர்மேல் எனக்கு நம்பிக்கை வர வேண்டுமென்றால் அதற்கு ரொம்ப காலம் எடுக்கும்.“—ரியானா.

 இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்: உங்கள் அப்பா-அம்மாவுக்கு இடையே நடக்கிற பிரச்சினைகளை பார்க்கும்போது உங்களுக்கு கோபம் வரலாம், நீங்கள் நொந்தும் போகலாம். அது நியாயம்தான். ஆனால் மனதுக்குள்ளே வெறுப்பை வளர்த்துக்கொள்வது உங்களுக்கு நல்லது கிடையாது. அது உங்கள் உடம்பையும் மனதையும் ரொம்ப பாதிக்கும். மனதில் வெறுப்பை வளர்த்துக்கொள்வது, ‘நீங்கள் விஷத்தை சாப்பிட்டுவிட்டு இன்னொருவர் சாக வேண்டுமென்று எதிர்பார்க்கிற மாதிரி’ என்று பொதுவாக சொல்லப்படுகிறது. a

 “கோபத்தையும் ஆத்திரத்தையும் விட்டுவிடு.”—சங்கீதம் 37:8.

 3. ‘எதிர்காலத்தில் என்னுடைய கல்யாண வாழ்க்கையும் விவாகரத்தில் போய் முடியுமோ...’ என்று நினைப்பது

 ”என் அப்பா மாதிரியே நானும் செய்து விடுவேனோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. என்னோட அப்பா-அம்மா எந்தப் பிரச்சினையால் விவாகரத்து செய்தார்களோ அதே பிரச்சினை, எனக்கு கல்யாணமாகி குழந்தைகள் பிறந்த அப்புறம் என்னால் வந்துவிடுமோ என்று நினைத்து பயப்படுகிறேன்.“—ஜெசிக்கா.

 இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்: உங்கள் அப்பா அம்மாவுடைய கல்யாணம் தோற்றுப் போனதால் உங்களுடைய கல்யாண வாழ்க்கையும் தோற்றுப் போய்விடும் என்று நினைக்காதீர்கள். சொல்லப்போனால், உங்கள் அப்பா அம்மாவுடைய வாழ்க்கை பாடத்திலிருந்து நீங்கள் நிறைய அனுபவ பாடங்களை கற்றுக்கொள்ளலாம். நீங்கள் கல்யாணம் செய்ய போகிற நபரிடம் என்னென்ன குணங்களை பார்க்க வேண்டும் என்பதில் நீங்கள் இப்போது கவனமாக இருப்பீர்கள். அதுமட்டுமல்ல, நீங்கள் ஒரு நல்ல கணவனாகவோ மனைவியாகவோ இருப்பதற்கு தேவைப்படுகிற குணங்களை வளர்த்துக்கொள்ள ஆசைப்படுவீர்கள்.

 “ஒவ்வொருவனும் தன்னுடைய செயல்களை ஆராய்ந்து பார்க்கட்டும்.”—கலாத்தியர் 6:4.

அப்பா அம்மாவுடைய விவாகரத்தை சமாளிப்பது எலும்பு முறிவிலிருந்து குணமடைவது மாதிரி. வலி இருக்கும் என்பது உண்மைதான், ஆனால் கடைசியில் குணமாகிவிடுவீர்கள்

 நீங்கள் செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள்

 1. மனம்விட்டு பேசுங்கள். மனதுக்குள்ளே நெகட்டிவான உணர்ச்சிகளை அடக்கி அடக்கி வைத்துக்கொள்கிற நபர்கள் குடிப்பழக்கம், போதைப் பொருள் எடுப்பது என்று தங்களையே கொஞ்சம் கொஞ்சமாக சீரழிக்கிற பழக்கங்களில் விழுந்துவிட வாய்ப்பிருக்கிறது. தப்பித்தவறிக் கூட அந்த வழியில் போய்விடாதீர்கள். அதற்குப் பதிலாக இப்படி செய்து பாருங்கள்:

 உங்கள் அப்பா அம்மாவிடம் பேசுங்கள். உங்கள் அப்பாவோ அம்மாவோ அல்லது இரண்டு பேரும் ‘எனக்குத்தான் நீ சப்போர்ட் பண்ண வேண்டும்’ என்று அவர்களுடைய பிரச்சினையில் உங்களை இழுத்துவிட பார்க்கிறார்களா? அப்படியென்றால், அது உங்களை எவ்வளவு பாதிக்கிறது என்று அவர்களிடம் அமைதியாக அதே சமயத்தில் உறுதியாக சொல்லுங்கள். அவர்கள் முகத்துக்கு நேராக சொல்வது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் என்ன நினைக்கிறீர்கள் என்பதை ஒரு கடிதம் மூலமாக சொல்லலாம்.

 நீங்கள் ரொம்ப நம்புகிற ஒரு நண்பரிடம் பேசுங்கள். காதுகொடுத்து கேட்கிற ஒரு நண்பரிடம் நீங்கள் மனசுவிட்டு பேசினால் உங்கள் மனபாரம் குறையும். “உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்”என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 17:17.

 படைத்த கடவுளிடம் பேசுங்கள். நீங்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்க யெகோவா தேவன் எப்போதுமே தயாராக இருக்கிறார். ஏனென்றால் அவர் ‘ஜெபத்தை கேட்கிறவர்.’ (சங்கீதம் 65:2) “அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—1 பேதுரு 5:7.

  •   அப்பா-அம்மா இரண்டு பேரில், யாரிடம் உங்களால் பொறுமையாக நிதானமாக பேச முடியும்?

  •   இந்த சமயத்தில் எந்த ஃப்ரெண்ட் (உங்களுடைய வயதுள்ளவர் அல்லது உங்களைவிட பெரியவர்) உங்களை தாங்கிப் பிடிக்கிற தூணாக இருப்பார்?

  •   நீங்கள் குறிப்பாக எந்தெந்த விஷயங்களுக்காக ஜெபம் செய்யலாம்?

 2. மாற்றத்துக்கு ஏற்ற மாதிரி மாறுங்கள்

 உங்கள் அப்பா-அம்மா விவாகரத்து செய்த பின்பு, நீங்கள் புதிய வீட்டுக்கு மாறிப்போக வேண்டியிருக்கலாம்... புதிய ஸ்கூலில் சேர வேண்டியிருக்கலாம்... வருகிற பணத்தை வைத்து உங்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருக்கலாம்... புது நண்பர்களைக் கூட கண்டுபிடிக்க வேண்டியிருக்கலாம். இதனால் உங்களுக்கு எரிச்சல் வரலாம், ஸ்ட்ரெஸும் வரலாம். அது இயல்புதான். உங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்ட மாதிரி இருக்கும். ‘இதையெல்லாம் நான் எப்படித்தான் சமாளிக்கப் போகிறோனோ?’ என்று நினைத்து கவலைப்படுகிறீர்களா? அப்படியென்றால், புதிய சூழ்நிலைமைகளுக்கு ஏற்ற மாதிரி நீங்கள் எப்படி மாறலாம் என்பதை பற்றி யோசித்து பாருங்கள்.

  •   உங்கள் அப்பா-அம்மா விவாகரத்து செய்ததால் நீங்கள் செய்ய வேண்டியிருந்த மிகப் பெரிய மாற்றம் எது?

  •   இந்த மாற்றத்துக்கு ஏற்ற மாதிரி மாறுவதற்கு நீங்கள் என்னவெல்லாம் பண்ணலாம்?

 “எந்தச் சூழ்நிலையிலும் நான் மனநிறைவோடு இருப்பதற்குக் கற்றுக்கொண்டேன்.”—பிலிப்பியர் 4:11.

 3. உங்களிடம் இருக்கிற நல்ல குணங்களை தெரிந்துகொள்ளுங்கள்

 உங்கள் அப்பா-அம்மா விவாகரத்து செய்ததால் உங்களுக்கு ரொம்ப கவலையாக இருக்கும்தான். இருந்தாலும், இந்த சமயத்தில் உங்களிடம் என்னென்ன நல்ல குணங்கள் இருக்கிறது என்பதையும் உங்களால் தெரிந்துகொள்ள முடியும். இன்னும் சில நல்ல குணங்களைக் கூட வளர்த்துக்கொள்ள முடியும். ஜெரேமிக்கு 13 வயது இருக்கும்போது அவனுடைய அப்பா-அம்மா விவாகரத்து செய்துகொண்டார்கள். அவன் இப்படி சொல்கிறான்: “நான்தான் என் வீட்டில் மூத்த பையன். என் அப்பா-அம்மா விவாகரத்து செய்ததால் நான் இன்னும் ரொம்ப பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டியதாகிவிட்டது. என்னுடைய அம்மாவுக்கும் உதவிசெய்ய வேண்டியிருந்தது, குட்டி தம்பியையும் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது.”

உங்கள் அப்பா-அம்மா விவாகரத்து செய்ததால் நீங்கள் வீட்டில் இன்னும் பொறுப்பாக நடந்துகொள்வீர்கள்

  •   உங்கள் அப்பா-அம்மா விவாகரத்து செய்ததால் உங்களிடம் இருக்கிற என்ன நல்ல குணங்களை நீங்கள் தெரிந்துகொண்டீர்கள்?

  •   வேறு என்ன நல்ல குணங்களை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும்?

 “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை . . . காரியங்களைச் சரிசெய்வதற்கும், . . . பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன.”—2 தீமோத்தேயு 3:16.

a அதிகம் தெரிந்துகொள்ள “என் கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?“ என்ற கட்டுரையை பாருங்கள்.