Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“நான் கருவாக இருந்தபோதே உங்கள் கண்கள் என்னைப் பார்த்தன.”—சங்கீதம் 139:16

கடவுள் உங்களைப் புரிந்துகொள்கிறாரா?

கடவுள் உங்களைப் புரிந்துகொள்கிறாரா?

படைப்பு என்ன சொல்லித்தருகிறது?

இரட்டைக் குழந்தைகள்—மனிதர்களுக்கு இடையே இருக்கிற மிகமிக நெருக்கமான பந்தங்களில் ஒன்று! இரட்டைக் குழந்தைகளுக்கு இடையே ரொம்பவும் அன்னியோன்னியமான பந்தம் இருக்கும். சில இரட்டையர்கள் “ஒருவருக்கொருவர் என்ன பேசிக்கொண்டாலும் சரி, நூறு சதவீதம் அதை முழுமையாகப் புரிந்துகொள்வார்கள்” என்று இரட்டையர்களில் ஒருவரான நான்ஸி ஸீகல் (இரட்டையர் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர்) சொல்கிறார். இரட்டையர்களில் ஒருவரான வேறொரு பெண்ணும் அதேபோல் சொல்கிறார்: “எங்களைப் பற்றிய ஒவ்வொரு விஷயமும் எங்கள் இருவருக்கும் அத்துப்படியாகத் தெரியும்.”

இரட்டையர்கள் எப்படி ஒருவரை ஒருவர் இந்தளவு புரிந்துவைத்திருக்கிறார்கள்? சுற்றுச்சூழலும் வளர்ப்பும் இதற்குக் காரணங்களாக இருந்தாலும், மரபணு அமைப்புதான் முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதை ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

சிந்தியுங்கள்: அதிசயமான இந்த மரபணு அமைப்பை நம் படைப்பாளர் உண்டாக்கியிருக்கிறார் என்றால், நம் ஒவ்வொருவரைப் பற்றியும் அவர் துல்லியமாகப் புரிந்துவைத்திருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. சங்கீதக்காரனாகிய தாவீதும்கூட இப்படிச் சொன்னார்: ‘என் தாயின் கர்ப்பத்தில் என்னைத் திரைபோட்டு மறைத்தீர்கள். நான் மறைவான இடத்தில் உண்டாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உங்கள் கண்களுக்கு மறைவாக இருக்கவில்லை. நான் கருவாக இருந்தபோதே உங்கள் கண்கள் என்னைப் பார்த்தன. என்னுடைய உறுப்புகள் எதுவும் உருவாவதற்கு முன்பே, அவை ஒவ்வொன்றைப் பற்றியும், உங்களுடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது.’ (சங்கீதம் 139:13, 15, 16) நம் மரபணு அமைப்பைப் பற்றி மட்டுமல்ல, நம் வாழ்க்கையை வடிவமைத்த ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் கடவுள் மட்டுமே நுணுக்கமாகத் தெரிந்துவைத்திருக்கிறார். அப்படியென்றால், நம்மைப் பற்றிய ஒவ்வொரு விஷயத்தையும் அவர் நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

கடவுளுடைய ஆழமான புரிந்துகொள்ளுதலைப் பற்றி பைபிள் என்ன சொல்லித்தருகிறது?

தாவீது இப்படி ஜெபம் செய்தார்: “யெகோவாவே, நீங்கள் என்னை ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்கள். என்னைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். நான் எப்போது உட்காருகிறேன், எப்போது எழுந்திருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் தூரத்தில் இருந்தாலும் என் யோசனைகள்கூட உங்களுக்குத் தெரியும். யெகோவாவே, என் வாயிலிருந்து ஒரு வார்த்தை வருவதற்கு முன்பே, நான் என்ன சொல்லப்போகிறேன் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்.” (சங்கீதம் 139:1, 2, 4) யெகோவாவுக்கு நம்முடைய உள்ளத்தின் உணர்ச்சிகளைப் பற்றியும், ஏன், ‘மனதில் இருக்கிற ஒவ்வொரு யோசனையை’ பற்றியும்கூட நன்றாகத் தெரியும். (1 நாளாகமம் 28:9; 1 சாமுவேல் 16:6, 7) இதிலிருந்து கடவுளைப் பற்றி என்ன தெரிந்துகொள்ளலாம்?

ஜெபத்தில் நம்முடைய எல்லா யோசனைகளையும் உணர்ச்சிகளையும் நாம் வெளிப்படுத்தவில்லை என்றாலும், நாம் என்ன செய்கிறோம் என்பதை மட்டுமல்ல, நாம் ஏன் அதைச் செய்கிறோம் என்பதையும் நம்முடைய படைப்பாளர் புரிந்துகொள்கிறார். அதுமட்டுமல்ல, நல்லது செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்தும், நம்முடைய வரம்புகளின் காரணமாக அதை நம்மால் செய்ய முடியாமல்போனால்கூட அவர் அதைப் புரிந்துகொள்கிறார். அன்பு என்ற குணத்தை கடவுள் நமக்குக் கொடுத்திருப்பதால், அன்பு நிறைந்த நம்முடைய யோசனைகள் மற்றும் உள்ளெண்ணங்களைக் கவனிக்கவும் அவற்றைப் புரிந்துகொள்ளவும் அவருக்கு விருப்பம் இருக்கிறது, ஏன் ஆர்வமும் இருக்கிறது என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.—1 யோவான் 4:7-10.

கடவுளுடைய பார்வையிலிருந்து எதுவுமே தப்ப முடியாது. நாம் படுகிற வேதனைகளை மற்றவர்கள் கவனிக்காவிட்டாலும் சரி, முழுமையாகப் புரிந்துகொள்ளாவிட்டாலும் சரி, கடவுள் அவற்றை நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறார்

பைபிள் வசனங்கள் இப்படி உறுதியளிக்கின்றன:

  • “யெகோவாவின் கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன, அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்கின்றன.”—1 பேதுரு 3:12.

  • கடவுள் வாக்குக் கொடுக்கிறார்: “நான் உனக்கு விவேகத்தை தந்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு அறிவுரை சொல்வேன்.”—சங்கீதம் 32:8.

கடவுள் மிகவும் கரிசனையுள்ளவர்

கடவுள் நம்முடைய சூழ்நிலையையும் உணர்ச்சிகளையும் புரிந்துவைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வது கஷ்டங்களைச் சமாளிக்க நமக்கு உதவுமா? நைஜீரியாவைச் சேர்ந்த ஆன்னா என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள். “நான் தாங்க முடியாத கஷ்டத்துல தவிச்சிட்டு இருந்தப்போ, இனி வாழ்ந்து என்ன பிரயோஜனம்னு யோசிச்சேன். அந்த சமயத்துல என் கணவர் உயிரோட இல்ல; என் பொண்ணு மூளை நீர்க்கோவை நோயால (hydrocephalus) பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில இருந்தா. அதுமட்டுமில்ல, எனக்கும் மார்பகப் புற்றுநோய் வந்துடுச்சு; அதனால கீமோதெரப்பி, ரேடியோதெரப்பி, அறுவை சிகிச்சை எல்லாம் செய்ய வேண்டியிருந்துச்சு. ஆஸ்பத்திரியில இருந்த என் பொண்ணையும் கவனிச்சுக்கிட்டு, என்னையும் கவனிச்சுக்குறது எனக்கு ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு.”

இந்தக் கஷ்டமான சூழ்நிலையைச் சமாளிக்க ஆன்னாவுக்கு எது உதவியது? அவர் இப்படிச் சொல்கிறார்: “நிறைய வசனங்கள ஆழமா யோசிச்சு பார்த்தேன்; உதாரணத்துக்கு, பிலிப்பியர் 4:6, 7. ‘எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகப் பாதுகாக்கும்’னு இந்த வசனம் சொல்லுது. இந்த வசனம் என் ஞாபகத்துக்கு வர்ற ஒவ்வொரு முறையும், யெகோவாவோடு நான் ரொம்ப நெருக்கமா உணர்ந்தேன்; ஏன்னா, என்னை பத்தி என்னைவிட அவர்தான் நல்லா புரிஞ்சு வைச்சிருக்காருங்கறத இந்த வசனத்திலிருந்து தெரிஞ்சுக்கிட்டேன். அதோட, சபையில இருக்குற அன்பான சகோதர சகோதரிகள் எனக்கு ரொம்பவே ஆதரவா இருந்தாங்க.”

“என் உடல்நிலையோட நான் இப்பவும் போராடிட்டு இருந்தாலும், என்னோட சூழ்நிலையும் என் மகளோட சூழ்நிலையும் இப்போ ரொம்பவே முன்னேறியிருக்கு. யெகோவா எங்களுக்கு துணையா இருக்குறதுனால, கஷ்டமான சூழ்நிலைகள எதிர்ப்படும்போது நாங்க எதிர்மறையா யோசிக்குறதில்ல. யாக்கோபு 5:11 நமக்கு இப்படி நம்பிக்கை தருது: ‘சகிப்புத்தன்மை காட்டியவர்களைச் சந்தோஷமானவர்கள் என்று கருதுகிறோம். யோபுவின் சகிப்புத்தன்மையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், முடிவில் யெகோவா அவரை ஆசீர்வதித்ததைப் பற்றியும் தெரிந்திருக்கிறீர்கள்; யெகோவா கனிவான பாசமும் [வே.வா., “மிகுந்த கரிசனையும்,” அடிக்குறிப்பு] இரக்கமும் நிறைந்தவர்’” என்று ஆன்னா சொல்லி முடிக்கிறார். யோபுவின் சூழ்நிலையையும் அவர் பட்ட வேதனைகளையும் யெகோவா முழுமையாகப் புரிந்துகொண்டார்; அதனால், நாம் படுகிற வேதனைகளையும் அவர் புரிந்துகொள்கிறார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.