Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யார்தான் காரணம்?

யார்தான் காரணம்?

வேதனைகளுக்குக் கடவுள் காரணம் இல்லையென்றால், கடும் பஞ்சமும், தீரா வறுமையும், பயங்கர போர்களும், கொடிய நோய்களும், இயற்கைப் பேரழிவுகளும் ஏன் ஏற்படுகின்றன? மனிதர்கள் படுகிற வேதனைகளுக்கு மூன்று முக்கியக் காரணங்கள் இருப்பதாகக் கடவுளுடைய வார்த்தையான பைபிள் சொல்கிறது. அவை:

  1. சுயநலம், பேராசை, வெறுப்பு. “மனுஷனை மனுஷன் அடக்கி ஆண்டிருப்பதால் அவனுக்குக் கேடுதான் வந்திருக்கிறது.” (பிரசங்கி 8:9) பாவ இயல்புள்ள, சுயநலமிக்க, அல்லது கொடூரமான ஆட்களுடைய செயல்களின் காரணமாக மக்கள் பெரும்பாலும் வேதனைகளை அனுபவிக்கிறார்கள்.

  2. எதிர்பாராத நேரத்தில் நடக்கிற எதிர்பாராத சம்பவங்கள். ‘எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதால்தான்’ மனிதர்கள் பெரும்பாலும் வேதனைகளை அனுபவிக்கிறார்கள். (பிரசங்கி 9:11) அதாவது, அவர்கள் தவறான இடத்தில் தவறான நேரத்தில் இருப்பதால் விபத்துகளில் சிக்கிக்கொள்கிறார்கள். அதோடு, கவனக்குறைவாக இருப்பதால் அல்லது சில தவறுகளைச் செய்துவிடுவதால் வேதனைகளை அனுபவிக்கிறார்கள்.

  3. இந்த உலகத்தின் பொல்லாத ஆட்சியாளன். மனிதர்கள் வேதனைகளை அனுபவிப்பதற்கான முக்கியக் காரணத்தை பைபிள் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்று அது சொல்கிறது. (1 யோவான் 5:19) பிசாசாகிய சாத்தான்தான் அந்த ‘பொல்லாதவன்.’ ஆரம்பத்தில் வல்லமையுள்ள தேவதூதனாக இருந்த அவன் பிற்பாடு, ‘சத்தியத்தில் நிலைத்திருக்கவில்லை.’ (யோவான் 8:44) இன்னும் பல தேவதூதர்கள் தங்களுடைய சுயநல ஆசைகளைத் திருப்தி செய்துகொள்வதற்காக, அவனோடு சேர்ந்துகொண்டு கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்; இப்படி, பேய்களாக மாறினார்கள். (ஆதியாகமம் 6:1-5) அந்தச் சமயம் தொடங்கி, சாத்தானும் அவனுடைய பேய்களும் உலக விவகாரங்களில் தலையிட்டு, மனிதர்கள்மேல் தங்களுடைய தீய செல்வாக்கை செலுத்தி வந்திருக்கிறார்கள். அதுவும் நாம் வாழ்கிற இந்தக் காலத்தில் ரொம்பவே செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள். பிசாசாகிய சாத்தான் இப்போது பயங்கர கோபமாக இருப்பதால், அவன் ‘உலகம் முழுவதையும் ஏமாற்றி’ வருகிறான்; இதனால் ‘பூமிக்கு கேடு’ வந்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:9, 12) சாத்தான் மூர்க்கத்தனமான சர்வாதிகாரி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மனிதர்கள் வேதனைப்படுவதைப் பார்ப்பது அவனுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது. முடிவாக என்ன சொல்லலாம்? மனிதர்கள் வேதனைகளை அனுபவிப்பதற்குச் சாத்தான்தான் காரணம், கடவுள் அல்ல!

சிந்தியுங்கள்: ஈவிரக்கம் இல்லாத, பேய்த்தனமான ஒருவன்தான் அப்பாவி மக்களுக்கு வேதனைகளைக் கொடுப்பான். ஆனால் அதற்கு நேர்மாறாக, “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 4:8) கடவுள் அன்பானவராக இருப்பதால், அவர் “ஒருபோதும் கெட்டது செய்ய மாட்டார். சர்வவல்லமையுள்ளவர் ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டார்.”—யோபு 34:10.

ஆனால், ‘சர்வவல்லமையுள்ள கடவுள் இன்னும் எவ்ளோ நாளைக்கு சாத்தானோட கொடுங்கோல் ஆட்சிய அனுமதிப்பார்?’ என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். கடவுள் அக்கிரமங்களை வெறுக்கிறார் என்றும், நாம் வேதனைப்படுவதைப் பார்த்து அவர் ரொம்பவே வேதனைப்படுகிறார் என்றும் முந்தின கட்டுரைகளில் பார்த்தோம். அதுமட்டுமல்ல, “அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்” என்று அவருடைய வார்த்தையும் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (1 பேதுரு 5:7) கடவுளுக்கு நம்மேல் அன்பு இருக்கிறது என்பதைப் பற்றியும், வேதனைகளையும் அநியாயங்களையும் சரிசெய்வதற்கு அவருக்குச் சக்தி இருக்கிறது என்பதைப் பற்றியும் அடுத்த கட்டுரை விளக்கும். a

a கடவுள் ஏன் வேதனைகளை விட்டுவைத்திருக்கிறார் என்பதைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள, இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில் பாடம் 26-ஐ பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம். www.pr418.com வெப்சைட்டிலிருந்து இதை இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.