Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முடிவில்லாமல் வாழ்வதற்கு வழி

முடிவில்லாமல் வாழ்வதற்கு வழி

இன்று மனிதர்களுடைய வாழ்க்கை கடவுள் நினைத்தபடி இல்லை. பூமியிலுள்ள எல்லாரும் அவருடைய ஆட்சியை மதிக்க வேண்டும்... அவர் காட்டும் வழியில் நடக்க வேண்டும்... அவருடைய அருமையான குணங்களை வெளிக்காட்ட வேண்டும்... என்றெல்லாம் கடவுள் நினைத்தார். அதோடு, அவர்கள் சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் இருந்து குடும்பங்களை உருவாக்க வேண்டும், புதுப்புது விஷயங்களைக் கண்டுபிடிக்க வேண்டும், பூமி முழுவதையும் பூஞ்சோலையாக மாற்ற வேண்டும் என்று கடவுள் நினைத்தார்.

பூமியிலுள்ள நிலைமைகளை மாற்றப்போவதாகக் கடவுள் வாக்குறுதி

  • “அவர் பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுகிறார்.”​சங்கீதம் 46:9.

  • “பூமியை நாசமாக்குகிறவர்களை நாசமாக்குவதற்கான காலமும் வந்துவிட்டது.”​வெளிப்படுத்துதல் 11:18.

  • “‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.”​ஏசாயா 33:24.

  • “நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தங்கள் உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிப்பார்கள்.”​ஏசாயா 65:22.

இந்த வாக்குறுதிகள் எப்படி நிறைவேறும்? கடவுள், எந்தக் குறையும் இல்லாத தன்னுடைய அரசாங்கத்தின் அரசராகத் தன் மகன் இயேசுவை நியமித்திருக்கிறார். பரலோகத்திலிருந்து பூமியை ஆட்சி செய்யப்போகும் அந்த அரசாங்கத்தைக் கடவுளுடைய ராஜ்யம் என்று பைபிள் அழைக்கிறது. (தானியேல் 2:44) இயேசுவுக்குக் கடவுள் “சிம்மாசனத்தைக் . . . கொடுப்பார். [இயேசு] ராஜாவாக . . . ஆட்சி செய்வார்” என்று பைபிள் சொல்கிறது.​—லூக்கா 1:32, 33.

இயேசு, தன்னுடைய ஆட்சியில் மனிதர்களை எவ்வளவு அருமையாக வாழ வைக்கப்போகிறார் என்பதைக் காட்டுவதற்காக, இந்தப் பூமியில் இருந்தபோது நிறைய அற்புதங்களைச் செய்தார்.

கடவுளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு இயேசு தரப்போகும் ஆசீர்வாதங்கள்

  • அவர் எல்லா விதமான நோய்களையும் குணப்படுத்தினார்; இப்படி, நோய்நொடிகளே இல்லாத வாழ்க்கையைத் தரப்போவதைக் காட்டினார்.​மத்தேயு 9:35.

  • அவர் கடல் கொந்தளிப்பை அடக்கினார்; இப்படி, இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களைப் பாதுகாக்கப்போவதைக் காட்டினார்.​மாற்கு 4:36-39.

  • அவர் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உணவு தந்தார்; இப்படி, மக்களுடைய அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யப்போவதைக் காட்டினார்.​மாற்கு 6:41-44.

  • அவர் ஒரு திருமண விருந்தில் தண்ணீரைத் திராட்சமதுவாக மாற்றினார்; இப்படி, வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க உதவி செய்யப்போவதைக் காட்டினார்.​யோவான் 2:7-11.

கடவுள் தன்னை நேசிக்கிறவர்களுக்குக் கொடுக்க விரும்பும் வாழ்க்கையை நீங்கள் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம்? நீங்கள் ஒரு ‘பாதையில்’ அடியெடுத்து வைக்க வேண்டும். அது ‘முடிவில்லாத வாழ்வுக்குப் போகிற . . . பாதை’ என்றும், “சிலர்தான் அதைக் கண்டுபிடிக்கிறார்கள்” என்றும் பைபிள் சொல்கிறது.​—மத்தேயு 7:14.

முடிவில்லாத வாழ்வுக்கு வழிநடத்தும் பாதையைக் கண்டுபிடிப்பது

வாழ்வுக்கு வழிநடத்தும் பாதை என்றால் என்ன? “யெகோவாவாகிய நானே உங்கள் கடவுள். உங்களுக்குப் பிரயோஜனமானதை நான் கற்றுக்கொடுக்கிறேன். நீங்கள் நடக்க வேண்டிய வழியில் உங்களை நடத்துகிறேன்” என்று கடவுள் சொல்கிறார். (ஏசாயா 48:17) அவர் காட்டும் வழியில் நடந்தால் உங்களுக்கு அருமையான வாழ்க்கை கிடைக்கும்.

“நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன்” என்று இயேசு சொன்னார். (யோவான் 14:6) இயேசு சொன்னபடி செய்யும்போதும், அவரைப் போலவே நடந்துகொள்ளும்போதும் நாம் கடவுளிடம் நெருங்கிப்போவோம். அப்போது, நம் வாழ்க்கை அருமையாக இருக்கும்.

வாழ்வுக்கு வழிநடத்தும் பாதையை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? இன்று நிறைய மதங்கள் இருக்கின்றன. ஆனால், இயேசு இப்படி எச்சரித்தார்: “என்னைப் பார்த்து, ‘கர்த்தாவே, கர்த்தாவே’ என்று சொல்கிற எல்லாரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள்.” (மத்தேயு 7:21) அதோடு, “அவர்களுடைய கனிகளை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துகொள்வீர்கள்” என்றும் அவர் சொன்னார். (மத்தேயு 7:16) எது உண்மையான மதம் என்று கண்டுபிடிக்க பைபிள் உங்களுக்கு உதவும்.—யோவான் 17:17.

வாழ்வுக்கு வழிநடத்தும் பாதையில் நீங்கள் எப்படி நடக்கலாம்? எல்லாருக்கும் உயிர் கொடுத்தவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் யார்? அவருடைய பெயர் என்ன? அவர் எப்படிப்பட்டவர்? அவர் நமக்காக என்ன செய்கிறார்? நாம் என்ன செய்ய வேண்டுமென்று அவர் நினைக்கிறார்? *

நாம் வெறுமனே சாப்பாடு, வேலை, விளையாட்டு, குடும்பம் என்றிருக்க வேண்டுமென்று கடவுள் நினைப்பதில்லை. அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், அவருடைய நண்பராக ஆகவும் வேண்டுமென்று நினைக்கிறார். கடவுளுடைய விருப்பப்படி நடப்பதன் மூலம் அவர்மேல் அன்பு வைத்திருப்பதை நாம் காட்டலாம். “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களை . . . பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்” என்று இயேசு சொன்னார்.—யோவான் 17:3.

பைபிளின் மூலம், “உங்களுக்குப் பிரயோஜனமானதை” கடவுள் கற்றுக்கொடுப்பார்.​—ஏசாயா 48:17

பயணத்தில் நீங்கள் எடுத்துவைக்கும் முதல் அடி

ஒரே உண்மையான கடவுளுக்குப் பிரியமாக நடக்க வேண்டுமென்றால், நாம் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். அது ஒருவேளை கஷ்டமாகத் தெரியலாம். ஆனால் உண்மையில், சந்தோஷத்தை அள்ளித்தரும் பயணத்தில் நீங்கள் எடுத்துவைக்கும் முதல் அடி அதுதான். கடவுளைப் பற்றி நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினால், உங்களுக்கு வசதியான நேரத்திலும் இடத்திலும் யெகோவாவின் சாட்சிகள் உங்களைச் சந்தித்து, பைபிளிலிருந்து இலவசமாகக் கற்றுக்கொடுப்பார்கள். www.pr418.com வெப்சைட்டிலும் நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.