Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என்றென்றும் வாழும் நம்பிக்கையைத் தருகிற மீட்புவிலைதான் நமக்குக் கிடைத்த பரிசுகளிலேயே மிகச் சிறந்த பரிசு!

அட்டைப்படக் கட்டுரை | மிகச் சிறந்த பரிசு!

மனிதர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு!

மனிதர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு!

“நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், மிகச் சிறந்த அன்பளிப்புகள் ஒவ்வொன்றும் பரலோகத்திலிருந்து வருகின்றன, ஆம், ஒளியின் தகப்பனிடமிருந்து வருகின்றன.” (யாக்கோபு 1:17) இந்த வசனம், நம் பரலோக தகப்பனான யெகோவா தேவனின் தாராள குணத்தைக் காட்டுகிறது. கடவுள் மனிதர்களுக்கு ஏராளமான பரிசுகளைக் கொடுத்திருக்கிறார்; அதில் மிகச் சிறந்த பரிசு ஒன்று இருக்கிறது! அந்தப் பரிசைப் பற்றி யோவான் 3:16-ல் இயேசு இப்படிச் சொல்கிறார்: “கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்.”

கடவுள் தன்னுடைய ஒரே மகனை நமக்காகக் கொடுத்திருக்கிறார்; அதுதான், நமக்குக் கிடைத்த பரிசுகளிலேயே மிகச் சிறந்த பரிசு! இதன் மூலம், பாவம், முதுமை மற்றும் மரணத்தின் பிடியிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கப்போகிறது. (சங்கீதம் 51:5; யோவான் 8:34) நாம் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், இவற்றின் பிடியிலிருந்து நம்மை நாமே விடுவித்துக்கொள்ள முடியாது. ஆனால், கடவுளுக்கு நம்மீது அளவுகடந்த அன்பு இருப்பதால், நம்மை விடுவிப்பதற்குத் தேவையான ஏற்பாட்டை அவர் செய்திருக்கிறார். தன்னுடைய ஒரே மகனான இயேசு கிறிஸ்துவை மீட்புவிலையாகக் கொடுத்ததன் மூலம், முடிவில்லாமல் வாழும் நம்பிக்கையை கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் எல்லாருக்கும் கடவுள் கொடுத்திருக்கிறார். ஆனால், மீட்புவிலை என்றால் என்ன? அது நமக்கு ஏன் தேவை? அதிலிருந்து நன்மையடைய நாம் என்ன செய்யலாம்?

மீட்புவிலை என்பது இழந்ததைத் திரும்ப பெறுவதற்கு, அல்லது, அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெறுவதற்கு கொடுக்கப்படும் ஒரு தொகையைக் குறிக்கிறது. நம் முதல் பெற்றோரான ஆதாம் ஏவாள் எந்தக் குறையும் இல்லாமல் படைக்கப்பட்டிருந்தார்கள் என்றும், அவர்களுக்கும் அவர்களுடைய சந்ததிக்கும் பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பு இருந்தது என்றும் பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 1:26-28) ஆனால், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதன் மூலம் அவர்கள் எல்லாவற்றையும் இழந்தார்கள்; பாவிகளாக ஆனார்கள். இதனால் என்ன ஆனது என்பதைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது. இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.” (ரோமர் 5:12) அதனால்தான், ஆதாமுடைய சந்ததியில் வந்த எல்லாரும் அபூரணர்களாகப் பிறந்தார்கள்; பாவமும் மரணமும் அவர்களுக்குக் கடத்தப்பட்டது.

மீட்புவிலையைப் பொறுத்தவரை, இழந்துபோனதை ஈடுகட்ட அதற்குச் சரிசமமான ஒரு தொகை செலுத்தப்பட வேண்டும். ஆதாம் வேண்டுமென்றே கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதன் மூலம் பாவம் செய்தான். அதன் விளைவாக, பரிபூரண மனித உயிர், அதாவது ஆதாமின் உயிர், இழக்கப்பட்டது. ஆதாம் தன்னுடைய சந்ததியில் வந்த எல்லாரையும் பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமையாக்கினான் என்று பைபிள் சொல்கிறது. அதனால்தான், இவற்றிலிருந்து விடுபடுவதற்கு இன்னொரு பரிபூரண மனித உயிர், அதாவது இயேசுவின் உயிர், தேவைப்பட்டது. (ரோமர் 5:19; எபேசியர் 1:7) கடவுள் இந்த மீட்புவிலையைக் கொடுத்ததால்தான், ஆதாம் ஏவாள் இழந்த அந்த வாழ்க்கையை, அதாவது பூஞ்சோலை பூமியில் என்றென்றும் சந்தோஷமாக வாழும் வாழ்க்கையை, திரும்பவும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு மனிதர்களுக்குக் கிடைத்தது.—வெளிப்படுத்துதல் 21:3-5.

கடவுள் கொடுத்திருக்கும் மீட்புவிலை என்ற பரிசு, என்றென்றும் வாழும் நம்பிக்கையை நமக்குத் தருகிறது. மீட்புவிலையால் கிடைக்கப்போகும் நன்மைகளைப் பார்க்கும்போது, மீட்புவிலைதான், நமக்குக் கிடைத்த பரிசுகளிலேயே மிகச் சிறந்த பரிசு என்பதைப் புரிந்துகொள்வோம். மீட்புவிலை என்ற இந்த ‘மிகச் சிறந்த அன்பளிப்பை’ நாம் உயர்வாக மதிக்க வேண்டும். அதற்கு, போன கட்டுரையில் பார்த்த அந்த 4 விஷயங்களை மீட்புவிலை எப்படிப் பெரியளவில் பூர்த்தி செய்கிறது என்று இப்போது கவனிக்கலாம்.

நம் ஆசையைப் பூர்த்தி செய்கிறது. இயல்பாகவே, என்றென்றும் வாழ வேண்டும் என்ற ஆசை நம் எல்லாருக்கும் இருக்கிறது. (பிரசங்கி 3:11) இந்த ஆசையை நாமாகவே திருப்தி செய்துகொள்ள முடியாவிட்டாலும், என்றென்றும் வாழ்வதற்கான வாய்ப்பை மீட்புவிலை நமக்கு ஏற்படுத்தி தருகிறது. அதனால்தான், “பாவத்தின் சம்பளம் மரணம்; நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் தரும் அன்பளிப்போ முடிவில்லாத வாழ்வு” என்று பைபிள் சொல்கிறது.—ரோமர் 6:23.

நம் தேவையைப் பூர்த்தி செய்கிறது. மனிதர்களால் மீட்புவிலையைக் கொடுக்க முடியாது. அதைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “அவர்களுடைய உயிருக்கான மீட்புவிலை ரொம்பவே பெரிது. அதை அவர்களால் கொடுக்கவே முடியாது.” (சங்கீதம் 49:8) அதனால்தான், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுபட கடவுளுடைய உதவி தேவைப்பட்டது. ‘கிறிஸ்து இயேசு செலுத்திய மீட்புவிலையின்’ மூலம் கடவுள் நம் தேவையைப் பூர்த்தி செய்திருக்கிறார்.—ரோமர் 3:23, 24.

சரியான சமயத்தில் கொடுக்கப்பட்டது. “நாம் பாவிகளாக இருந்தபோதே நமக்காக உயிரைக் கொடுக்க கிறிஸ்துவைக் கடவுள் அனுப்பினார்” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 5:8) “நாம் பாவிகளாக இருந்தபோதே” மீட்புவிலை கொடுக்கப்பட்டதாக இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், நாம் பாவ நிலையில் இருந்தபோதே கடவுள் நம்மீது எந்தளவு அன்பு வைத்திருந்தார் என்பதை மீட்புவிலை காட்டுகிறது. பாவத்தின் விளைவுகளை நாம் சகித்திருக்க வேண்டியிருந்தாலும், மீட்புவிலை நமக்கு எதிர்கால நம்பிக்கையைத் தருகிறது.

உயர்ந்த, சுயநலமில்லாத நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. தன்னுடைய ஒரே மகனை மீட்புவிலையாகக் கொடுக்க, கடவுளை எது தூண்டியது? “தன்னுடைய ஒரே மகன் மூலம் நமக்கு வாழ்வு கிடைப்பதற்காகக் கடவுள் அவரை இந்த உலகத்துக்கு அனுப்பினார்; இதன் மூலம் கடவுள் நம்மேல் வைத்திருக்கிற அன்பு தெரியவந்தது. நாம் கடவுள்மேல் அன்பு காட்டியதால் அல்ல, அவர் நம்மேல் அன்பு காட்டியதால்தான்” என்று பைபிள் சொல்கிறது.—1 யோவான் 4:9, 10.

இந்த மிகச் சிறந்த பரிசுக்கு நீங்கள் எப்படி நன்றி காட்டலாம்? யோவான் 3:16-ல் இருக்கும் இயேசுவின் வார்த்தைகளை ஞாபகப்படுத்தி பாருங்கள். இயேசுமேல் ‘விசுவாசம் வைக்கிறவர்கள்’ மட்டும்தான் காப்பாற்றப்படுவார்கள் என்று அது சொல்கிறது. பைபிளின்படி, “விசுவாசம் என்பது எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயம் நடக்கும் என்று உறுதியாக நம்புவதாகும்.” (எபிரெயர் 11:1) இந்த உறுதியான நம்பிக்கை வேண்டுமென்றால், நமக்குத் திருத்தமான அறிவு தேவை. அதற்கு, ‘மிகச் சிறந்த அன்பளிப்பை’ தந்த யெகோவாவைப் பற்றி நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதோடு, இயேசுவுடைய மீட்புப் பலியால் கிடைக்கப்போகிற முடிவில்லாத வாழ்க்கையைப் பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இவற்றைப் பற்றியெல்லாம் பைபிள் என்ன சொல்கிறது என்பதை www.pr418.com-ல் தெரிந்துகொள்ளலாம். யெகோவாவின் சாட்சிகளும் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறார்கள். மிகச் சிறந்த பரிசைப் பற்றி தெரிந்துகொண்டு, அதிலிருந்து நன்மை அடையும்போது, “நம்முடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளுக்கு நன்றி” என்று நீங்களும் சொல்வீர்கள்.—ரோமர் 7:25. ▪