Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | மிகச் சிறந்த பரிசு!

ஒரு சிறந்த பரிசை எப்படிக் கொடுக்கலாம்?

ஒரு சிறந்த பரிசை எப்படிக் கொடுக்கலாம்?

ஒருவருக்கு என்ன பரிசு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. சொல்லப்போனால், அந்தப் பரிசின் மதிப்பை அதைப் பெற்றுக்கொள்ளும் ஒருவர்தான் தீர்மானிக்கிறார். ‘இதுதான் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு’ என்று ஒருவர் நினைக்கலாம். அதற்காக, இன்னொருவரும் அதேபோல் நினைப்பார் என்று சொல்லிவிட முடியாது.

உதாரணத்துக்கு, அதிநவீன எலக்ட்ரானிக் சாதனங்கள் டீனேஜர்களுக்கு ஒரு சிறந்த பரிசாக இருக்கலாம். பெரியவர்களுக்கோ, தங்களுக்குக் கிடைக்கும் பரம்பரை சொத்து ஒரு சிறந்த பரிசாக இருக்கலாம். சில கலாச்சாரங்களில், பெரியவர்களும் சிறியவர்களும் பணத்தைப் பரிசாகப் பெற விரும்பலாம்; அதை அவர்கள் தங்கள் விருப்பப்படி செலவு செய்யலாம்.

ஒரு சிறந்த பரிசைக் கொடுப்பது அவ்வளவு சுலபம் இல்லைதான்! இருந்தாலும், நன்றாக யோசிக்கும் நிறைய பேர் தாங்கள் நேசிக்கும் ஒருவருக்குப் பொருத்தமான ஒரு பரிசைக் கொடுக்க ரொம்பவே முயற்சி செய்கிறார்கள். ஆனால், அப்படிப்பட்ட ஒரு பரிசைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும், சில விஷயங்களை மனதில் வைப்பது, நீங்கள் நேசிக்கும் ஒருவருக்கு மிகச் சிறந்த பரிசைக் கொடுக்க உங்களுக்கு உதவும். பரிசைப் பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கு என்ன 4 விஷயங்கள் சந்தோஷத்தைத் தரும் என்று இப்போது பார்க்கலாம்.

பரிசைப் பெற்றுக்கொள்ளும் ஒருவரின் ஆசைக்கு இசைய இருக்க வேண்டும். 10 அல்லது 11 வயது இருந்தபோது, வட அயர்லாந்திலுள்ள பெல்ஃபாஸ்ட் (Belfast) என்ற இடத்தில் இருக்கும் ஒருவருக்கு ரேஸ் சைக்கிள் ஒன்று பரிசாகக் கிடைத்தது. இதுதான் தனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு என்பதாக அவர் சொன்னார். ஏனென்றால், அதை வாங்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு ரொம்ப நாளாகவே இருந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒரு நபரின் விருப்பத்தைப் பொறுத்துதான் ஒரு பரிசை அவர் உயர்வாக மதிக்கிறாரா இல்லையா என்பது தெரிகிறது. நீங்கள் பரிசு கொடுக்க நினைக்கும் அந்த நபரைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அந்த நபர் எதை உயர்வாக மதிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், ஒருவர் எதை உயர்வாக மதிக்கிறாரோ அதன் அடிப்படையில்தான் அவருடைய ஆசைகளும் இருக்கும். உதாரணத்துக்கு, தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களோடு செலவிடும் நேரத்தை தாத்தா பாட்டி உயர்வாக மதிப்பார்கள். தங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் அடிக்கடி பார்க்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுவார்கள். வேறெந்த பரிசையும்விட குடும்பமாகச் சுற்றுலா போவதற்குத்தான் அவர்கள் விரும்புவார்கள்.

ஒருவருடைய விருப்பத்தைத் தெரிந்துகொள்வதற்குக் காதுகொடுத்துக் கேட்பது ரொம்ப முக்கியம்! நாம் “நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:19) உங்கள் நண்பர்களிடமோ சொந்தக்காரர்களிடமோ அன்றாடம் பேசும்போது, அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேளுங்கள். அப்போதுதான், அவர்களுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பரிசையும் உங்களால் கொடுக்க முடியும்.

பரிசைப் பெற்றுக்கொள்ளும் ஒருவரின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். நீங்கள் கொடுக்கும் பரிசு சின்னதாக இருந்தாலும் சரி, விலை குறைவானதாக இருந்தாலும் சரி, அதைப் பெற்றுக்கொள்ளும் ஒருவருடைய தேவையை அது பூர்த்தி செய்தால், அந்தப் பரிசை அவர் உயர்வாக மதிப்பார். ஆனால், ஒருவருக்கு என்ன தேவை என்பதை நீங்கள் எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

ஒருவருடைய தேவையையும் விருப்பத்தையும் பற்றி அவரிடமே கேட்டு தெரிந்துகொள்வது சுலபமாக இருந்தாலும், அப்படிச் செய்வதற்கு நிறைய பேர் விரும்புவதில்லை. ஏனென்றால், தாங்கள் நேசிக்கும் ஒருவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு பரிசைக் கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புகிறார்கள். சிலர், தங்களுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்பதைப் பற்றியெல்லாம் பேசினாலும், தங்களுடைய தேவையைப் பற்றி வெளிப்படையாகப் பேச அவர்கள் பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள்.

அதனால், கூர்ந்து கவனியுங்கள், ஒருவருடைய சூழ்நிலையை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். அவர் ஓர் இளைஞரா, வயதானவரா, கல்யாணமானவரா, கல்யாணமாகாதவரா, விவாகரத்தானவரா, துணையை இழந்தவரா, வேலை செய்பவரா அல்லது ஓய்வு பெற்றவரா என்றெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். பிறகு, அவருடைய தேவைக்கேற்ப என்ன பரிசைக் கொடுக்கலாம் என்று யோசியுங்கள்.

நீங்கள் பரிசு கொடுக்க விரும்பும் ஒருவருடைய தேவையைப் புரிந்துகொள்ள, அவருடைய சூழ்நிலையில் இருந்த வேறு சிலரிடம் அதைப் பற்றி பேசுங்கள். மற்றவர்களுக்குத் தெரியாத, சில முக்கியமான தேவைகளைப் பற்றி அவர்கள் உங்களிடம் சொல்லலாம். அப்போது, யாருமே யோசித்துப் பார்த்திராத விதத்தில், அவருடைய தேவையைப் பூர்த்தி செய்கிற ஒரு சிறந்த பரிசை உங்களால் கொடுக்க முடியும்.

சரியான சமயத்தில் கொடுக்க வேண்டும். “சரியான சமயத்தில் சொல்லப்படுகிற வார்த்தை எவ்வளவு அருமையானது!” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 15:23) சரியான சமயத்தில் சொல்லப்படும் நம் வார்த்தைகள் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரலாம் என்பதை இந்த வசனம் காட்டுகிறது. இது நம் செயல்களுக்கும் பொருந்தும். சரியான சமயத்தில் சொல்லப்படும் வார்த்தைகள் கேட்பவருக்கு எப்படிச் சந்தோஷத்தைத் தருகிறதோ, அதேபோல சரியான சமயத்தில் அல்லது பொருத்தமான சந்தர்ப்பத்தில் கொடுக்கப்படும் பரிசும் அதைப் பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கு சந்தோஷத்தைத் தரும்.

பரிசு கொடுப்பதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, உங்கள் நண்பருக்குத் திருமணமாகலாம், ஓர் இளைஞர் பள்ளிப் படிப்பை முடிக்கலாம், ஒரு தம்பதிக்குக் குழந்தைப் பிறக்கலாம். ஒரு வருஷத்தில், இது போன்ற என்னென்ன விசேஷ சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்பதைச் சிலர் முன்கூட்டியே தெரிந்துவைத்திருக்கிறார்கள். இப்படிச் செய்வதால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற மாதிரி ஒரு சிறந்த பரிசைக் கொடுக்க அவர்களால் முன்கூட்டியே திட்டமிட முடிகிறது. *

விசேஷ சந்தர்ப்பங்களில் மட்டும்தான் பரிசு கொடுக்க வேண்டும் என்று கிடையாது. எப்போது வேண்டுமானாலும் பரிசு கொடுக்கலாம், கொடுப்பதால் வரும் சந்தோஷத்தையும் அனுபவிக்கலாம். ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை ஞாபகத்தில் வைக்க வேண்டும். உதாரணத்துக்கு, காரணமே இல்லாமல் ஓர் ஆண் ஒரு பெண்ணுக்குப் பரிசு கொடுக்கிறார் என்றால், அந்த ஆணுக்கு தன்மீது விருப்பம் இருப்பதாக அந்தப் பெண் நினைத்துக்கொள்ளலாம். ஒருவேளை, அப்படிப்பட்ட எண்ணத்தில் அவர் அந்தப் பரிசை கொடுக்கவில்லை என்றால், தேவையில்லாத மனஸ்தாபங்களும் பிரச்சினைகளும் வந்துவிடலாம். அதனால், ஒருவர் என்ன நோக்கத்தோடு பரிசு கொடுக்கிறார் என்பதை ஞாபகத்தில் வைப்பது ரொம்ப முக்கியம்.

சரியான நோக்கத்தோடு கொடுக்க வேண்டும். மேலே சொல்லப்பட்டிருக்கும் உதாரணம் காட்டுகிறபடி, பரிசைப் பெற்றுக்கொள்ளும் ஒருவர் அந்தப் பரிசைக் கொடுப்பவரின் நோக்கத்தைத் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதேசமயத்தில், பரிசைக் கொடுப்பவரும் தான் என்ன நோக்கத்தோடு அந்தப் பரிசைக் கொடுக்கிறார் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். பெரும்பாலோர், சரியான நோக்கத்தோடு பரிசு கொடுக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் சில சந்தர்ப்பங்களில், கட்டாயத்தின்பேரில் பரிசு கொடுக்க வேண்டிய நிலைமை நிறைய பேருக்கு வந்துவிடுகிறது. இன்னும் சிலர், மற்றவர்கள் தங்களை விசேஷமானவர்களாக நடத்த வேண்டும் என்பதற்காகவோ, தங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ பரிசு கொடுக்கிறார்கள்.

சரியான நோக்கத்தோடு பரிசு கொடுக்க நீங்கள் என்ன செய்யலாம்? “எல்லாவற்றையும் அன்போடு செய்யுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 16:14) நீங்கள் உண்மையான அன்போடும் அக்கறையோடும் பரிசு கொடுத்தால், அந்தப் பரிசைப் பெற்றுக்கொள்பவர் நிச்சயம் சந்தோஷப்படுவார். அதுமட்டுமல்ல, தாராள குணத்தைக் காட்டுவதால் வரும் சந்தோஷத்தை நீங்களும் அனுபவிப்பீர்கள். எதையும் உண்மை மனதோடு கொடுக்கும்போது, நம் பரலோக தகப்பனும் சந்தோஷப்படுவார். யூதேயாவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு நிவாரண பொருள்கள் தேவைப்பட்டபோது, கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்கள் தாராளமாகவும் சந்தோஷமாகவும் கொடுத்தார்கள். அதற்காக, அப்போஸ்தலன் பவுல் அவர்களைப் பாராட்டினார். “சந்தோஷமாகக் கொடுப்பவரைத்தான் கடவுள் நேசிக்கிறார்” என்றும் சொன்னார்.—2 கொரிந்தியர் 9:7.

இந்த எல்லா விஷயங்களையும் மனதில் வைத்து ஒருவருக்குப் பரிசு கொடுக்கும்போது, அந்தப் பரிசைப் பெற்றுக்கொள்பவர் ரொம்பவே சந்தோஷப்படுவார். இது போன்ற இன்னும் பல விஷயங்களின் அடிப்படையில், மிகச் சிறந்த ஒரு பரிசை கடவுள் மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார். இந்த மிகச் சிறந்த பரிசு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள அடுத்த கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

^ பாரா. 13 பிறந்தநாள் மற்றும் பண்டிகை சமயங்களில் நிறைய பேர் பரிசு கொடுக்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட சமயங்களில், பெரும்பாலும் பைபிளுக்கு முரணான பழக்கவழக்கங்களே கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்தப் பத்திரிகையில் இருக்கும் “வாசகரின் கேள்வி-கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடலாமா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.