Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பலமுறை விழுந்து எழுந்த பாலம்

பலமுறை விழுந்து எழுந்த பாலம்

பலமுறை விழுந்து எழுந்த பாலம்

பல்கேரியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

பல்கேரியாவின் வடமத்திப பகுதியில் சலசலவென ஓடுகிற ஆசும் நதிமீது மேற்கூரையுள்ள லோவெக் பாலம் செல்கிறது. அப்பகுதி மக்களைப் போலவே, பிரமாண்டமான இந்தக் கட்டமைப்பிற்குப் பின்னும் சுவாரஸ்யமான சரித்திரம் இருக்கிறது.

இந்தப் பாலத்தை, மக்களின் கவனத்திற்குக் கொண்டுவந்த முதல் நபர்களில் ஆமி ப்வேவும் ஒருவர். 1830-களில் லோவெக் பட்டணத்திற்குச் சென்ற இவர் “மேற்கூரையையும் கவர்ந்திழுக்கும் குட்டி குட்டிக் கடைகளையும் உடைய ஒரு கற்பாலத்தைக் குறித்து” எழுதினார். ஆம், பிரத்தியேக முறையில் கட்டப்பட்டிருந்த இந்தப் பாலம், இரு பாகங்களாகப் பிரிந்திருந்த லோவெக் பட்டணத்தை இணைத்து, மக்களுடைய போக்குவரத்துக்கு வழிதிறந்ததோடு வியாபாரச் சந்தையாகவும் விளங்கியது! இதனால் அந்த ஊர் மக்களுக்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பாலமாக அது மாறியது.

மேற்கூரையுள்ள இந்தப் பாலம் முதன்முதலில் கட்டப்பட்டபோது கற்பாலமாக அல்லாமல் மரப்பாலமாக இருந்தது. எப்படியிருந்தாலும், காலப்போக்கில் வெள்ளப்பெருக்கு காரணமாக இந்தப் பாலம் அடிக்கடி சேதமடைந்தது. அதனால், மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது. இறுதியாக, 1872-ல் வந்த ஒரு வெள்ளப்பெருக்கு இந்தப் பாலத்தைச் சுவடு தெரியாமல் அழித்துவிட்டது. இரு பாகங்களாகப் பிரிந்திருந்த பட்டணத்தை இணைத்த இந்த முக்கிய பாலத்தை இழந்த அந்தச் சமயத்தில், கயிறு அறுந்த காற்றாடி போல் மக்கள் அல்லாடினார்கள்.

இந்தப் பாலத்தைத் திரும்பக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதனால், பல்கேரியாவின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரான கோல்யோ ஃபிச்சிடோ இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு புதிய, அதேசமயம் ஏற்கெனவே இருந்ததைவிட உறுதியான பாலத்தை அமைக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுமையான வடிவமைப்பு

இந்தப் பாலம் முதன்முதலில் எந்தப் பாணியில் கட்டப்பட்டதோ அதே பாணியில் அதாவது, மேற்கூரையுடனும், குட்டி கடைகளுடனும் அதைத் திரும்பவும் கட்ட ஃபிச்சிடோ தீர்மானித்தார். 84 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் உடைய இந்தப் பாலத்திற்கு நீள்வட்ட வடிவிலான தூண்களை ஆதாரமாகக் கொடுத்தார். ஐந்து மீட்டர் உயரமான இந்தத் தூண்களின் குறுகிய பக்கங்கள் நீரோட்டத்தின் எதிர்திசையை நோக்கி இருந்தன. இந்தத் தூண்கள் சற்று வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. எப்படியெனில், இந்தத் தூண்களின் நடுப்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட மேல் பகுதிவரை ஒரு துவாரம் போடப்பட்டது. வெள்ளம் பெருக்கெடுக்கையில் இந்தத் துவாரங்கள் வழியே நீர் பாய்ந்துசெல்வதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் தூண்கள்மீது இடுவதற்காக உறுதியான ஒருவகை கருவாலிமர உத்திரங்களையும் பலகைகளையும் ஃபிச்சிடோ பயன்படுத்தினார். மற்றபடி, பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த 64 கடைகள் உட்பட பாலத்தின் மற்ற எல்லா பாகங்களுமே புங்கமரத்தால் ஆனவை. பாலத்தின் மேற்கூரையும்கூட புங்கமரத்தால் ஆனது. கூரையின் உட்புறத்தில் மட்டும் மெல்லிய இரும்பு தகடுகள் பயன்படுத்தப்பட்டன.

ஃபிச்சிடோவின் வடிவமைப்பில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், பாலத்தின் ஆதார உத்திரங்களை இணைப்பதற்கு அவர் இரும்பு பொருத்திகளையோ ஆணிகளையோ பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, மரத்தாலான ‘ப்ளக்குகளையே’ அதாவது, அடைப்பான்களையே பயன்படுத்தினார். பாலத்தில் நேர்த்தியான பாதையை அமைப்பதற்காக மரத்தாலான அடித்தளத்திற்கு மேல் கற்கள் பாவிய சாலை போடப்பட்டது. பின்னர், அதன் மேற்பரப்பில் சரளைக் கற்கள் போடப்பட்டன. காலை நேரங்களில் சுவர்களில் இருந்த ஜன்னல்கள் வழியாகவும் கூரையில் விடப்பட்டிருந்த துவாரங்கள் வழியாகவும் சூரிய ஒளி உள்ளே பிரகாசித்தது. மாலை நேரங்களில், கியாஸ் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. இந்தப் புதிய பாலத்தை வடிவமைத்து கட்டி முடிப்பதற்குள் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டன [1].

பாலத்தில் வாழ்க்கை

பாலத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைக் கண்கண்ட சாட்சி ஒருவர் விவரிப்பதைக் கவனியுங்கள்: “அந்தச் சாலையில் எப்போதாவது ஒருமுறைதான் ‘காரோ’, குதிரை வண்டியோ, பொதி சுமத்தப்பட்ட கழுதையோ வரும் என்பதால் வாகன நெரிசல் போன்ற எந்தத் தொல்லையும் அங்கு இருக்கவில்லை. அந்தச் சாலைக்கு வரும் விற்பனையாளர்கள், பார்வையாளர்கள், சாலையில் நடந்துசெல்பவர்கள் என இவர்களுடைய பேச்சு சத்தம் ஒரு பக்கம் கேட்க, இன்னொரு பக்கம், தகர வேலை செய்பவர்களின் சத்தமும் . . . கூவி கூவி விற்கும் வியாபாரிகளின் சத்தமும் சேர்ந்து தெருவே கலகலவென இருந்தது. அந்தப் பாலத்து வாழ்க்கை அதற்கே உரிய தனி சுவாரஸ்யத்துடன் விளங்கியது. சாலை நெடுக இருந்த குட்டி குட்டி கடைகளில் கம்பளிப் பின்னல்களும் மணிகளும், இன்னும் பல பொருள்களும் நிரம்பி வழிந்து பல வண்ணங்களில் காட்சியளித்தன. இந்தச் சரக்குகள் அனைத்தும், அவற்றுக்கே உரிய தனித்துவத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலித்தன.”

இந்தப் பாலத்திலிருந்த கடைக்காரர்களில் அநேகர் இசைக் கலைஞர்களாகவும் திகழ்ந்தார்கள். எனவே, சந்தைக்கு வந்த மக்கள், சங்கீதம் கேட்டும் சென்றார்கள். மேற்சொன்ன அதே கண்கண்ட சாட்சி மேலும் சொன்னதாவது: “முடிதிருத்தம் செய்யப்படும் கடைகளில் ஐந்து அல்லது ஆறு பணியாட்கள் இருந்தார்கள். இவர்கள், முடிதிருத்துபவர்களாக இருப்பதோடு இசைக் கலைஞர்களாகவும் திகழ்ந்தார்கள். முக்கியமாக, நரம்பிசைக் கருவிகளை மீட்டுவதில் வல்லவர்களாக இருந்தார்கள். இப்படி இசை மீட்டுவதற்கு எப்படியாவது ஓய்வு நேரம் கிடைக்கும்படி இவர்கள் பார்த்துக்கொள்வார்கள். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் இவர்கள் இசை மீட்டி முடிக்கும்வரை சந்தோஷமாகவே காத்திருப்பார்கள்.” முடிதிருத்தம் செய்த இவர்களில் சிலர் முதல் உலகப் போர் முடிந்த பிறகு முடிதிருத்துவோர் இசைக் குழு (Barber’s Orchestra) என்று அழைக்கப்படும் குழுவை ஆரம்பித்து வைத்தார்கள்.

சோக சம்பவம்

ஃபிச்சிடோ அமைத்த பாலம், கிட்டத்தட்ட 50 வருடங்களாக வெள்ளப்பெருக்குகளையும், போர்களையும், மற்ற பேரழிவுகளையும் தாக்குப்பிடித்தது. ஆனால், 1925-ஆம் வருடம் ஆகஸ்ட் 2/3 இரவன்று, பாலம் தீ பிடித்தபோது, கொழுந்துவிட்டு எரிந்த தீயின் வெளிச்சம் இரவை பகலாக்கியது. அந்த அழகிய லோவெக் பாலம் சாம்பலானது. ஆனால், எப்படித் தீ பிடித்தது? அது சதியா அல்லது அஜாக்கிரதையா என்பதைக் குறித்து இதுவரை யாருக்குமே திட்டவட்டமாகத் தெரியவில்லை. காரணம் என்னவாக இருந்தாலும் சரி, லோவெக் பட்டணத்தின் கரைகளை இணைப்பதற்கு மறுபடியும் பாலம் இல்லாமல் போய்விட்டது.

1931-ல் புதிதாக ஒரு பாலம் அமைக்கப்பட்டது. அந்தப் பாலத்தின் பாதை நெடுக, சிறு கடைகளும் பட்டறைகளும் கட்டப்பட்டன [2]. ஆனால், இந்தப் பாலத்தைப் புதிதாய் கட்டியவர் மரத்தையும் கல்லையும் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஸ்டீலையும் கான்கிரீட்டையும் பயன்படுத்தினார். இவருடைய வடிவமைப்பு, ஃபிச்சிடோவின் வடிவமைப்பிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. பாலத்தின் மேற்கூரையோ கண்ணாடியால் செய்யப்பட்டிருந்தது. பாலத்தின் நடுவே ஒரு பகுதி மட்டும் பக்கச் சுவர்கள் இல்லாமல் கட்டப்பட்டிருந்தது. இருப்பினும், 1981/82-ல் கோல்யோ ஃபிச்சிடோ கட்டிய விதத்திலேயே இந்தப் பாலம் திரும்பக் கட்டப்பட்டது [3].

மேற்கூரையுள்ள இந்தப் பாலம் லோவெக் பட்டணத்தின் அடையாளச் சின்னமாகவும் தேர்ந்த கட்டடக் கலைஞர் ஒருவரின் கைவண்ணமாகவும் திகழ்கிறது. இன்றும்கூட, அந்த ஊர் மக்களும் சரி அந்த ஊருக்கு வருகை தருபவர்களும் சரி, வழி நெடுக கடைகள் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலத்தின் மீது நடந்து செல்கையில் அதன் அழகை கண்டு வியந்துபோகிறார்கள். (g 1/08)

[பக்கம் 22-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

பல்கேரியா

சோஃபியா

லோவெக்

[பக்கம் 23-ன் படத்திற்கான நன்றி]

படம் 2: From the book Lovech and the Area of Lovech