Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெண்களுக்கு எதிரான வன்முறை உலகளாவிய பிரச்சினை

பெண்களுக்கு எதிரான வன்முறை உலகளாவிய பிரச்சினை

பெண்களுக்கு எதிரான வன்முறை உலகளாவிய பிரச்சினை

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 25-ஆம் தேதி, பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை ஒழிக்கும் சர்வதேச தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினம், 1999-ல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களின் உரிமைகள் மீறப்படுவது சம்பந்தமாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இப்படி ஒரு தினத்தை உருவாக்குவது அவசியம் என ஏன் கருதப்பட்டது?

அநேக சமுதாயங்களில் பெண்கள் கேவலமாய், அல்லது இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். இத்தகைய போக்கு காலங்காலமாக இருந்து வருகிறது. எல்லா விதங்களிலும் பெண்களைக் கொடுமைப்படுத்துவது தொடர்கதையாய் இருந்து வருகிறது. முன்னேறிய நாடுகளிலும்கூட இதே நிலைதான். “பெண்களுக்கு எதிரான வன்முறை உலகெங்கும் நடக்கிறது; இது, எல்லா சமுதாயங்களிலும் கலாச்சாரங்களிலும் நடக்கிறது. அவர்களுடைய குலம், இனம், சமுதாயம், பிறப்பு, அந்தஸ்து எதுவாக இருந்தாலும்சரி, இந்த வன்முறையிலிருந்து அவர்கள் தப்பமுடிவதில்லை” என ஐ.நா.-வின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அனான் சொன்னார்.

பெரும்பாலான பெண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை என்பது “வெளியே சொல்லக்கூடாத விஷயம், சமுதாயத்தில் மறைந்திருக்கிற பிரச்சினை; வெட்கப்பட வேண்டிய, தவிர்க்க முடியாத நிஜமாக” இருக்கிறது என்று ராதிகா குமாரசுவாமி சொல்கிறார்; பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையைப்பற்றி இவர் ஆய்வு செய்கிறார். இவர், ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழுமத்தின் முன்னாள் சிறப்பு நிருபராக இருந்திருக்கிறார். தென் அமெரிக்க நாடு ஒன்றிலுள்ள 23 சதவீத பெண்கள், அதாவது சுமார் நான்கு பேரில் ஒருவர், ஏதோவொரு விதத்தில் குடும்பத்தாரின் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று ஹாலந்து நாட்டில் குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டோரைக் குறித்து ஆய்வுசெய்கிற ஓர் அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதேபோல், ஐரோப்பிய பெண்களில் நான்கில் ஒருவர் தன் வாழ்நாளில் குடும்பத்தாரால் தாக்கப்படுகிறார் என்று ஐரோப்பிய கவுன்சிலின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. சமீப வருடம் ஒன்றில், தற்போதைய துணையால் அல்லது முன்னாள் துணையால் ஒவ்வொரு வாரமும் சராசரியாக இரண்டு பெண்கள் கொல்லப்பட்டார்கள் என்று இங்கிலாந்திலும் வேல்ஸ் நாட்டிலுமுள்ள பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. “இந்தியப் பெண்கள் பயந்து பயந்து வாழ்கிறார்கள். எந்த மூலையிலும், எந்தச் சாலையிலும், எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் கற்பழிக்கப்படும் ஆபத்தை அவர்கள் எதிர்ப்படலாம்” என்று இண்டியா டுடே இன்டர்நேஷனல் என்ற பத்திரிகை அறிக்கை செய்தது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு, பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் இழைக்கப்படும் கொடுமையை, இன்று “மனித உரிமைகளுக்குச் சவால்விடுகிற மிகப் பரவலான பிரச்சினை” என்று விவரிக்கிறது.

மேற்குறிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்கள் பெண்களை கடவுள் எப்படிக் கருதுகிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனவா? இந்தக் கேள்விக்கு அடுத்த கட்டுரை பதில் அளிக்கும். (g 1/08)