Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உறைபனியின் கதகதப்பில்

உறைபனியின் கதகதப்பில்

உறைபனியின் கதகதப்பில்

பின்லாந்திலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

உலகின் வடகோடியில் கடுங்குளிர் நிலவும் மாதங்களில் கதகதப்பான உடை, காலுறை, காலணி என்று எல்லாவற்றையும் மக்கள் அணிந்துகொள்ள வேண்டும்; இல்லையென்றால் அவர்களின் கதி அதோகதிதான். குளிர் தாங்காமல் உறைந்தே போய்விடுவார்கள். அங்கு வாழும் எண்ணற்ற விலங்கினங்களின் விஷயமே வேறு. வருடத்தின் எந்தப் பருவமாக இருந்தாலும் சரி, அவை சிறிதும் கவலைப்படுவதில்லை. அவற்றின் இறகுகள் அல்லது மென்மையான ரோமம் அவற்றுக்கு ‘ஸ்வெட்டர்’ போல் இருக்கின்றன. அது போதாதென்று, உறைபனியின் அற்புதமான தன்மையால் குளிரிலிருந்தும் காப்பாற்றப்படுகின்றன.

உறைபனி என்பது ஐஸ் படிகங்களால் ஆனது. நீராவி நேரடியாக உறைந்து இந்தப் படிகங்கள் உருவாகின்றன. 25 சென்டிமீட்டர் உயரத்திற்குப் படிந்திருக்கும் பனிக்கட்டி உருகினால் 2.5 சென்டிமீட்டர் அளவான நீர் கிடைக்கும்; அப்படியென்றால் இந்தப் படிகங்களின் எஞ்சிய கனஅளவுக்குக் காரணம் அவற்றில் அடைந்துகிடக்கும் காற்றுதான். உறைபனியின் வியப்பூட்டும் இந்த வடிவமைப்பின் காரணமாகவே, கோடைக்காலம் வரும்வரை மரம்செடிகொடிகளும் அவற்றின் விதைகளும் கடுங்குளிரிலிருந்து காப்பாற்றப்பட்டு, கதகதப்பாக வைக்கப்படுகின்றன. சூரியன் முகங்காட்டிச் சிரிக்கையில், நிலத்தில் ஏராளமாய்ப் படிந்திருக்கும் உறைபனி மெல்ல கரைய ஆரம்பிக்கிறது. அப்போது மண்ணிற்கு நீர் கிடைக்கிறது; நீரோடைகளில் நீர்மட்டம் உயருகிறது.

‘போர்வைக்குள்ளே’ உயிர்கள்

ரோமமுள்ள எண்ணற்ற விலங்குகள், பனிப்போர்வைக்கு உள்ளே பல சுரங்கங்களை உருவாக்கித் துருதுருவென்று ஓடிக்கொண்டிருக்கின்றன. தினசரி வேலைகள் ஒருபக்கம் இருக்க இவை, இரைதேடி இங்குமங்கும் வெறிபிடித்து அலைகின்றன. எலி வகையைச் சேர்ந்த லெம்மிங், வோல், மூஞ்சுறு ஆகியவை இப்படிப்பட்ட விலங்கினங்களே. உருவத்தில் சிறிதான இந்த மூஞ்சுறு இரவில் இரைதேடச் செல்கிறது, பூச்சிகளைப் பிடித்துத் தின்கிறது. இது மோல் என்னப்படும் குருட்டெலிக் குடும்பத்தைச் சேர்ந்தது. மறுபட்சத்தில் சுண்டெலி, பனிப்போர்வையின் மேற்பரப்பிலேயே பெரும்பாலும் இரைதேடிச் செல்கிறது. இது பெர்ரி பழங்கள், கொட்டைகள், விதைகள், இளமரங்களின் மிருதுவான வெளிப்பட்டை ஆகியவற்றை உண்டு பசியாறுகிறது.

உருவத்தில் சிறியவையான இந்தப் பாலூட்டிகள் தங்களது உடலை எவ்வாறு கதகதப்பாய் வைத்துக்கொள்கின்றன? இவற்றில் பலவற்றுக்கு ஸ்வெட்டர் போன்ற அடர்த்தியான ரோமம் இருப்பதுடன், உடலுக்குள்ளேயே ஒரு ஹீட்டரும் இருக்கிறது. எப்படியெனில், இவை உண்ணும் உணவு வேகமாக ஜீரணமாகி எரிசக்தியை அளிப்பதால் உடலின் வெப்பநிலை இயல்பாகவே அதிகரிக்கிறது. ‘உயிருள்ள ஹீட்டர்களாகிய’ இவற்றுக்கு நிறைய எரிபொருள் தேவைப்படுமென்பதை உங்களால் ஊகிக்க முடிகிறது, அல்லவா? உதாரணத்திற்கு, மூஞ்சுறுகள் ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட அவற்றின் எடை அளவுக்கு பூச்சிகளையும் கம்பளிப்புழுக்களையும் கூட்டுப்புழுக்களையும் சாப்பிடுகின்றன. மூஞ்சுறுகளிலேயே மிகச் சிறிய வகையான குட்டை மூஞ்சுறு, தன் எடையைக் காட்டிலும் அதிகளவு உணவைச் சாப்பிடுகிறது! ஆகவே, தூங்கும் நேரம்தவிர மற்ற சமயங்களில் இந்தப் பிராணிகள் ஓயாமல் இரைதேடி சுற்றித் திரிகின்றன எனலாம்.

மறுபட்சத்தில், இதுபோன்ற மிகச் சிறிய பாலூட்டிகளில் சிலவற்றை, கொன்று தின்னும் பிராணிகள் விரும்பிச் சாப்பிடுகின்றன. இவற்றை ஆந்தைகளும் மரநாய்க் குடும்பமான வீஸல் குடும்பத்தைச் சேர்ந்த அர்மெனும் லீஸ்ட் வீஸலும் வேட்டையாடி உண்ணுகின்றன. ஒல்லியான உடல் வாகுடைய இந்த வீஸல்கள் விசுக்கென்று வேகமாக ஓடும் திறன் பெற்றவை. எனவே, உறைபனிக்கு அடியில் அமைந்துள்ள சுரங்கப் பாதைகளின் வழியே உணவு தேடிச் செல்வதில் இவற்றுக்கு ஒரு பிரச்சினையும் இருப்பதில்லை. இந்த வீஸல்கள், உருவத்தில் தங்களைவிடப் பெரியவையாக உள்ள முயல்களையும் வேட்டையாடி உண்ணுகின்றன.

ஆந்தைகளும் இரைதேடும் வேட்டையில் சளைத்தவை அல்ல. சாம்பல்நிறப் பெரிய ஆந்தைக்குக் கூர்மையான செவித்திறன் உண்டு. உறைபனி ஆழமாக இல்லாத பட்சத்தில், கீழே ஓடித்திரியும் வோல் எலியின் நடமாட்டத்தைக்கூட இது கண்டுபிடித்துவிடும். இரையைக் கண்டதும் இந்த ஆந்தை, உறைபனி உலகிற்குள் தடாலென்று குதித்து, நிர்க்கதியாய் நிற்கும் இரைப் பிராணியைத் தன் கால் நகங்களால் இறுகப் பற்றிக்கொண்டு வெளி உலகுக்கு வந்துவிடுகிறது. ஆனால், உறைபனி ஆழமாக இருக்கும்பட்சத்தில் கொன்று தின்னும் பிராணிகள் பட்டினி கிடக்க வேண்டியதுதான்; சில சமயங்களில் பசி தாங்காமல் அவை செத்துமடிகின்றன. அதேசமயம் அவற்றுக்கு இரையாக வேண்டிய விலங்குகளின் எண்ணிக்கை மளமளவென்று அதிகரிக்கிறது.

அநேக விலங்குகள் வெயில் காலங்களில் தங்கள் உடம்பில் சேர்த்து வைக்கும் கொழுப்பைப் பயன்படுத்திக்கொண்டு பனிக்காலங்களைச் சமாளிக்கின்றன. என்றாலும், உணவுப் பொருள்களில் சில வகைகள் எப்போதுமே அவற்றுக்குக் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு, காட்டு மான் வகைகள் மரங்களின் இளங்கிளைகளை, முக்கியமாக ஊசியிலை மரங்களின் இளங்கிளைகளைக் கொறித்துத் தின்கின்றன. அணில்களோ, தங்கள் ‘களஞ்சியங்களில்’ சேர்த்துவைத்திருக்கும் சத்துள்ள விதைகளைச் சப்புக்கொட்டித் தின்கின்றன. முயல்கள், இளசான மரப்பட்டைகளையும், குச்சிகளையும், இளந்தளிர்களையும் கொறித்துத் தின்கின்றன. சில வகைப் பறவைகள், உறைந்துபோன பெர்ரி பழங்களையும் ஊசியிலை மரங்களின் இளந்தண்டுகளையும் கொத்தித் தின்கின்றன.

விண்ணில் வட்டமிடுபவை உறங்குவது உறைபனிக்குள்!

எண்ணற்ற பறவைகள், பகல் பொழுதில் ஓய்வெடுக்கும்போதும் இரவில் தூங்கும்போதும் தங்கள் உடலை கதகதப்பாய் வைத்துக்கொள்வதற்காக உறைபனிக்குள் குளிர்காய்கின்றன. ஹேஸல் கோழி, க்ராஸ் என்ற காட்டுப் பறவை, டார்மிகன் என்ற காட்டுக்கோழி, அதோடு சிறிய பறவையினங்களான பழுப்புநிறப் பாடும் பறவை, புல்ஃபின்ச், சிட்டுக்குருவி போன்றவை அவ்வாறு குளிர்காயும் பறவைகளில் சில. உறைபனி ஆழமாகவும் மிருதுவாகவும் இருந்தால், சில பறவைகள் உறைபனிக்குள்ளேயே டைவ் அடிக்கின்றன, கடல் பறவைகள் நீரில் டைவ் அடிப்பதுபோலவே. இவை தங்கள் நடமாட்டத்தை எதிரி விலங்குகள் மோப்பத்தால் கண்டுபிடிக்க முடியாதபடி தந்திரமாகத் தப்பித்துக்கொள்வதற்கு இவ்வாறு செய்கின்றன.

பனித்திரளுக்குள் புகுந்த பிறகு இந்தப் பறவைகள் மூன்று அடி நீளத்திற்கு ஒரு சுரங்கப்பாதையை அமைக்கின்றன. ஃபின்னிஷ் மொழியில் இதற்கு கையெப்பி என்று பெயர். இரவில் அடிக்கும் காற்று, உறைபனியின் மேற்பரப்பில் இந்தப் பறவைகள் விட்டுச் சென்ற கொஞ்சநஞ்ச அச்சுகளையும் சுத்தமாக அழித்துவிடுகிறது. இவ்வாறு, உறைபனிக்குக் கீழே உயிரினங்கள் இருப்பதற்கான எல்லாத் தடயங்களையும் முற்றிலுமாக அகற்றிவிடுகிறது. உறைபனியில் நடப்பவர்கள் அதற்குக் கீழே வாழும் இந்தப் பறவைகளின் கூடுகளுக்கு மேலே வருகையில், அவர்களுடைய நடையை உணரும் இந்தப் பறவைகள் எச்சரிக்கையாகிவிடுகின்றன. எனவே, உறைபனியை உடைத்துக்கொண்டு படபடவென்று சிறகடித்து வெளியே பறந்து வருகின்றன. இப்படிச் சற்றே தூரத்தில் திடீரெனப் பறக்கும் பறவைகளைச் சற்றும் எதிர்பார்க்காத பயணிக்கு ஒருகணம் இதயமே உறைந்துவிடலாம்!

குளிர்கால உடைக்கு மாறுகின்றன

பருவங்கள் மாறுகையில், ஆர்க்டிக் பிரதேசத்தில் வாழும் சில விலங்குகள் தங்கள் உடையை மாற்றிக்கொள்கின்றன. ஆம், கோடைக்கால உடையைக் களைந்துவிட்டு குளிர்கால உடையை அணிந்துகொள்கின்றன. பனி மழையாகப் பொழியும் இந்தக் காலத்தில் இவற்றின் உடையும் வெண்பனி நிறத்தில் இருப்பதால் இவை எளிதில் மற்றவர் கண்ணில் படுவதில்லை. பின்லாந்தில், ஆர்க்டிக் நரிகள், நீலநிற முயல்கள், வீஸல் குடும்பத்தைச் சேர்ந்த பல விலங்குகள் ஆகியவற்றுக்கு இலையுதிர் காலத்தில் வெண்ணிறத்தில் அல்லது பழுப்பு வெண்ணிறத்தில் ரோமம் அடர்த்தியாக வளர்கிறது. a

அவ்வாறே, டார்மிகன் என்ற காட்டுக்கோழியின் சிறகுகளின் வண்ணமும் பருவத்திற்கேற்ப மாறிவிடுகிறது. கோடைக்காலத்தில் புள்ளிபுள்ளியாக இருக்கும் இவற்றின் சிறகுகள் குளிர்காலத்தில் வெண்ணிறமாக மாறிவிடுகின்றன. அதேவிதமாக அவற்றின் கால்விரல்களிலும்கூட கோடைக்காலத்தில் ரோமம் குறைவாக இருக்கிறது. குளிர்காலத்திலோ ரோமம் அடர்த்தியாக வளர்ந்துவிடுகிறது. இது பனியிலிருந்து அவற்றைக் காப்பாற்றும் காலணியாகச் செயல்படுகிறது. சில விலங்கினங்களும் பறவைகளும் குளிர்கால உடைகளுக்குப் படிப்படியாக மாறும்போதும் அவை போதுமான பாதுகாப்பைப் பெறுகின்றன. எப்படியெனில், இவற்றின் உடலும் சரி, தரையும் சரி இங்குமங்குமாக வெண்ணிறமாய் இருப்பதால் இவை தரையின் நிறத்தோடு ஒன்றிவிடுகின்றன.

பனிபோர்த்திய தரையில் அநேக பறவைகள் எப்படி வெறுங்காலில் நடக்கின்றன? அவற்றுக்குத் தீங்கு விளையாதா? அவற்றின் பாதங்கள் விறைத்துப் போகாதா? என்றெல்லாம் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பார்க்கப்போனால், அவற்றின் பாதங்களைக் கதகதப்பாய் வைத்துக்கொள்ளும் வகையில் அவற்றின் கால்கள் அற்புதமாய் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. எப்படியெனில், இருதயத்திலிருந்து சூடான இரத்தம் கால்களுக்குச் செல்கிறது; அதேசமயம், பாதங்களிலிருந்து இருதயத்திற்குத் திரும்புகிற குளிர்ந்த இரத்தம் மீண்டும் சூடாகிறது.

ஆகவே, துருவப் பிரதேசங்களிலும் சரி வெப்ப மண்டலப் பிரதேசங்களிலும் சரி, மிதமிஞ்சிய குளிரையும் மிதமிஞ்சிய உஷ்ணத்தையும் உயிரினங்கள் தாக்குப்பிடிப்பதாக மட்டுமே சொல்ல முடியாது; மாறாக, அச்சூழல்களில் அவை வளம் கொழிக்கின்றன என்றே சொல்ல வேண்டும். இந்த உயிரினங்களைக் கண்டுபிடித்து உலகிற்குப் படம்பிடித்துக் காட்டும் ஆண்களும் பெண்களும் பொதுவாகத் தங்களுடைய முயற்சிகளுக்காகப் பெரிதும் பாராட்டப்படுகிறார்கள். அந்தப் பாராட்டுகளைப் பெற அவர்கள் தகுதியுள்ளவர்களே! அப்படியானால், பூமியில் வாழும் வியப்பூட்டும் உயிரினங்களின் படைப்பாளரை நாம் இன்னும் அதிகமாய்ப் போற்றித் துதிக்க வேண்டுமல்லவா! பைபிளில், வெளிப்படுத்துதல் 4:11 இவ்வாறு சொல்கிறது: “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.” (g 2/08)

[அடிக்குறிப்பு]

a இந்த முயல்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக அழைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, நீலநிற முயலுக்குப் பல பெயர்கள் உள்ளன. மலைவாழ் முயல், தூந்திரப்பிரதேச முயல், நிறம் மாறும் முயல் போன்றவை அவற்றில் சிலவாகும்.

[பக்கம் 14-ன் பெட்டி/படம்]

குளிர்காலத்திலும் சுறுசுறுப்பான கிறிஸ்தவர்கள்

பின்லாந்திலுள்ள யெகோவாவின் சாட்சிகள் குளிர்காலங்களுக்கு ஏற்றவாறு கதகதப்பான உடையை அணிந்துகொண்டு கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்திற்கும் செல்கிறார்கள். அவர்களில் சிலர் கூட்டங்களுக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தாலும் விரும்பிச் செல்கிறார்கள். பார்க்கப்போனால், மாதக்கணக்கில் குளிர் வாட்டியெடுத்தாலும் கிராமப்புறங்களில்கூட சபைக் கூட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை குறைவதில்லை. அதுபோக, யெகோவாவின் சாட்சிகள் வெளி ஊழியத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். தங்களுடைய படைப்பாளராகிய யெகோவா தேவனைக் குறித்துச் சாட்சி கொடுப்பதை அரும்பெரும் பாக்கியமாக அவர்கள் கருதுகிறார்கள். எனவே, வீட்டுக்குள் சொகுசாக இருப்பதற்குப் பதிலாக வீதியிறங்கி ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பதில் மனமுவந்து ஈடுபடுகிறார்கள்.—மத்தேயு 24:14.

[பக்கம் 12, 13-ன் படம்]

ஒரு சுரங்கத்திற்குள் கடல் பறவைகள்

[படத்திற்கான நன்றி]

By courtesy of John R. Peiniger

[பக்கம் 12, 13-ன் படம்]

அர்மென்

[படத்திற்கான நன்றி]

Mikko Pöllänen/Kuvaliiteri

[பக்கம் 13-ன் படம்]

அன்னப்பறவைகள்

[பக்கம் 13-ன் படம்]

முயல்

[பக்கம் 13-ன் படம்]

ஆர்க்டிக் நரி