Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கெட்ட வார்த்தைகளைப் பேசுவது பெரிய குற்றமா?

கெட்ட வார்த்தைகளைப் பேசுவது பெரிய குற்றமா?

இளைஞர் கேட்கின்றனர்

கெட்ட வார்த்தைகளைப் பேசுவது பெரிய குற்றமா?

“என்னுடைய ஸ்கூல் பிள்ளைகளைப் போலவே இருக்க ஆசைப்பட்டேன். அப்படித்தான் கெட்ட வார்த்தைகளைப் பேசும் பழக்கம் என்னையும் தொற்றிவிட்டது.” —மெலானி. a

“கெட்ட வார்த்தை பேசுவது அப்படியொன்றும் பெரிய தவறாக எனக்குப் படவில்லை. ஏனென்றால், ஸ்கூலிலும்சரி வீட்டிலும்சரி, நாள் முழுக்க அதுதான் என் காதில் விழுந்தது.”—டேவிட்.

கெட்ட வார்த்தைகளை பெரியவர்கள் பேசினால் எல்லாரும் சகஜமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதுவே, இளைஞர்கள் பேசினால் மட்டும் ஏன் அதிர்ச்சி அடைகிறார்கள்? கெட்ட வார்த்தை பேசுவதற்கென்று வயது வரம்பு ஏதாவது இருக்கிறதா? நிறைய பேர் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதாலும், பெரியவர்கள் பேசினால் தவறில்லை, சிறியவர்கள் பேசினால்தான் தவறு என்ற இரட்டைத் தராதரம் இருப்பதாகத் தெரிவதாலும், நீங்கள் இவ்வாறு கேட்பது நியாயமானதே: “கெட்ட வார்த்தைகளைப் பேசுவது பெரிய குற்றமா?”

இப்பழக்கம் தொற்றிக்கொள்வது எப்படி?

கெட்ட வார்த்தைகள் எங்கும் பரவலாகப் பேசப்படுகிறது என்பது உண்மைதான். சொல்லப்போனால், பள்ளியில் கேட்கிற ஒவ்வொரு கெட்ட வார்த்தைக்கும் ஒரு ரூபாய் கிடைக்கிறதென்றால், தாங்கள் வேலை செய்ய வேண்டிய அவசியமே இருக்காது என்றும் தங்கள் பெற்றோர்கூட வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்றும் சில இளைஞர்கள் சொல்வார்கள். அந்தளவுக்கு கெட்ட வார்த்தைக்குப் பஞ்சமே இல்லாமல் போய்விட்டது. “என்னுடைய ஸ்கூல் பிள்ளைகள் சாதாரணமாக வாயைத் திறந்தாலே போதும் கெட்ட வார்த்தைகள் இயல்பாக வரும். நாள் முழுக்க அப்படிப்பட்ட வார்த்தைகளே உங்கள் காதில் விழுகிறது என்றால், உங்களை அறியாமலேயே கெட்ட வார்த்தைகளைப் பேச ஆரம்பித்துவிடுவீர்கள்” என்று 15 வயது ஈவ் சொல்கிறாள்.

ஈவ் சொல்வது போல, உங்களைச் சுற்றியும் கெட்ட வார்த்தைப் பேசுகிறவர்கள்தான் நிறைந்திருக்கிறார்களா? இப்பழக்கம் உங்களையும் தொற்றிவிட்டதா? b அப்படியானால், நீங்கள் ஏன் கெட்ட வார்த்தைகளைப் பேசுகிறீர்கள் என்பதற்கான காரணத்தை சற்று நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். அந்தக் காரணத்தை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், இப்பழக்கத்தை விட்டொழிப்பது ரொம்பவே சுலபமாக இருக்கும்.

இவ்விஷயத்தை மனதில் வைத்து, பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முயலுங்கள்.

பெரும்பாலான சமயங்களில், நீங்கள் ஏன் கெட்ட வார்த்தை பேசுகிறீர்கள்?

கோபத்தை அல்லது எரிச்சலை வெளிக்காட்ட

கவனத்தை ஈர்க்க

சகாக்களோடு ஒத்துப்போக

தைரியசாலியாக காட்டிக்கொள்ள

அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்க்க

பிற ....................................

எந்தெந்த சந்தர்ப்பங்களில் கெட்ட வார்த்தை பேச வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படுகிறது?

பள்ளியில்

வேலை செய்யுமிடத்தில்

ஈ-மெயில் அனுப்புகையில், உடனுக்குடன் மெஸேஜ் அனுப்புகையில்

தனிமையில்

கெட்ட வார்த்தை பேசுவதற்கு என்ன சாக்குபோக்கு சொல்கிறீர்கள்?

சகாக்கள் பேசுவதால்

பெற்றோர் பேசுவதால்

ஆசிரியர்கள் பேசுவதால்

டிவி, சினிமா, கதை புத்தகங்கள் ஆகியவற்றில் முழுக்க முழுக்க அதுவே இருப்பதால்

எல்லா வார்த்தைகளையும் போலவே அதுவும் ஒரு வார்த்தை தானே என்பதால்

கெட்ட வார்த்தை பேசுவதைக் கண்டுகொள்ளாதவர்களிடம் மட்டுமே நான் பேசுவதால்

வேறு காரணத்தால் .......................................

இப்பழக்கத்தை ஏன் விட்டொழிக்க வேண்டும்? கெட்ட வார்த்தை பேசுவது அந்தளவுக்கு மோசமானதா? பின்வருவனவற்றைக் கவனியுங்கள்.

அவை வெறும் வார்த்தைகள் அல்ல. “உங்கள் இருதயத்தில் இருப்பதையே உங்கள் பேச்சு வெளிப்படுத்துகிறது” என்று இயேசு சொன்னார். (லூக்கா 6:45, காண்டெம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன்) நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நாம் எப்படிப்பட்ட நபராக இருக்க விரும்புகிறோம் என்பதை அல்ல, ஆனால் நாம் எப்படிப்பட்ட நபராக இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. ஒருவேளை, மற்றவர்கள் பேசுகிறார்கள் என்பதற்காக நீங்களும் கெட்ட வார்த்தைகளைப் பேசலாம்; இப்படி மற்றவர்களைப் பார்த்து காப்பியடிப்பது நீங்கள் ‘கும்பலைப் பின்பற்றுகிறீர்கள்’ என்பதையும் உங்களுடைய நெறிகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டீர்கள் என்பதையும் காட்டுகிறது.—யாத்திராகமம் 23:2, பொ.மொ.

அது மட்டுமே அல்ல. மொழி வல்லுநர் ஜேம்ஸ் வி. ஓக்கானர் இவ்வாறு கூறுகிறார்: “கெட்ட வார்த்தைகளைப் பேசுவோர் பெரும்பாலும் சிடுசிடுப்பவர்களாக, குறை காண்பவர்களாக, எரிந்துவிழுகிறவர்களாக, கோபக்காரர்களாக, குதர்க்கமாய் பேசுகிறவர்களாக, அங்கலாய்ப்பவர்களாக இருப்பார்கள்.” உதாரணமாக, தாங்கள் நினைத்தபடி ஏதாவது நடக்காமல் போகையில் வாய்க்கு வந்தபடி பேசுபவர்கள், எல்லாமே தாங்கள் எதிர்பார்த்தபடிதான் நடக்க வேண்டுமென்ற பொதுவான அபிப்பிராயம் தங்களுக்கு இருப்பதை வெளிக்காட்டுகிறார்கள். தவறுகள் ஏற்படுவதைத் தங்களால் பொறுத்துக்கொள்ளவே முடியாது என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள். மறுபட்சத்தில், கெட்ட வார்த்தைகளைப் பேசாதவர்களோ பெரும்பாலும் அமைதியாக இருக்கிறார்கள், . . . அன்றாடப் பிரச்சினைகளைச் சமாளிக்குமளவுக்கு முதிர்ச்சியுள்ளவர்களாக இருக்கிறார்கள்” என ஓக்கானர் குறிப்பிடுகிறார். எப்படிப்பட்ட நபராக இருக்க நீங்கள் விரும்புவீர்கள்?

கெட்ட வார்த்தை பேசுவது உங்களுடைய நற்பெயரைக் கெடுக்கிறது. பெரும்பாலான இளைஞரைப் போல நீங்களும் உங்களுடைய தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம். மற்றவர்களிடம் நல்ல பெயரெடுக்க வேண்டுமென நீங்கள் விரும்பலாம். உங்களுடைய தோற்றத்தைவிட நீங்கள் பேசும் விதமே மற்றவர்களிடம் உங்களை மிகவும் கவர்ந்திழுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையைச் சொன்னால், நீங்கள் பேசும் விதம் பின்வரும் காரியங்களைத் தீர்மானிக்கலாம்:

யார் உங்களுடைய நண்பர்களாக இருப்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட வேலைக்கு நீங்கள் அமர்த்தப்படுவீர்களா, மாட்டீர்களா.

உங்களுக்கு எந்தளவு மதிப்பு மரியாதை கிடைக்கும்.

ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் ஏற்படும் அபிப்பிராயமெல்லாம், அவர்களிடம் பேச ஆரம்பிக்கும்போது பெரும்பாலும் மாயமாய் மறைந்துவிடுவது உண்மைதான். “முன்பின் யோசிக்காமல் கெட்ட வார்த்தை பேசியதால் ஒரு புதிய நண்பரோடு பழகுவதற்கான வாய்ப்பை நீங்கள் எத்தனை முறை தவற விட்டிருப்பீர்கள் என்றோ எத்தனை முறை உங்களைப் பார்த்து யாரேனும் ஒருவர் ஒதுங்கிப் போயிருப்பார் என்றோ உங்களுடைய மதிப்பு மரியாதையை ஓரளவுக்கு இழந்திருப்பீர்கள் என்றோ உங்களுக்கு தெரியவே தெரியாது” என்று ஓக்கானர் கூறுகிறார். இதிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடம்? அசிங்கமாக பேசுவதால் உங்கள்மீதே சேற்றை வாரிப் பூசிக்கொள்கிறீர்கள்.

கெட்ட வார்த்தை பேசுவது பேச்சாற்றலைத் தந்த படைப்பாளரை அவமதிக்கிறது. உங்களுடைய நண்பருக்கு ஒரு ஷர்ட்டையோ புடவையையோ பரிசாகக் கொடுத்தீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய நண்பர் அதை வீடு துடைக்கும் துணியாகவோ கால்மிதியாகவோ பயன்படுத்தினால் உங்களுக்கு எப்படியிருக்கும்? அப்படியானால், படைப்பாளர் தந்த பேச்சாற்றலை நாம் தவறாகப் பயன்படுத்தினால் அவருக்கு எப்படி இருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது” என கடவுளுடைய வார்த்தை சொல்வதில் ஆச்சரியமில்லை.—எபேசியர் 4:31.

ஆகவே, கெட்ட வார்த்தை பேசுவதை நிறுத்துவதற்கு நல்ல காரணம் இருப்பதை இப்போது புரிந்திருப்பீர்கள். அப்படிப் பேசுவது உங்களுடைய இரத்தத்தில் ஊறிப்போன குணமாக இருந்தால், அதை நீங்கள் எப்படி மாற்றிக்கொள்ள முடியும்?

முதலாவது: மாற்றம் செய்யவேண்டிய அவசியத்தை உணர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் பேசும் விதத்தை மாற்றிக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை புரிந்துகொண்டீர்கள் என்றால் கெட்ட வார்த்தை பேசுவதை நீங்கள் நிறுத்திவிடுவீர்கள். கெட்ட வார்த்தை பேசுவதை நிறுத்துவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்தெந்த விஷயங்கள் உங்களைத் தூண்டலாம்?

பேச்சாற்றலைத் தந்த படைப்பாளரைப் பிரியப்படுத்துவது

மற்றவர்களிடமிருந்து அதிக மரியாதையைச் சம்பாதிப்பது

புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது

என்னுடைய சுபாவத்தை மாற்றிக்கொள்வது

இரண்டாவது: கெட்ட வார்த்தை பேசுவதற்குக் காரணமாயிருப்பது எது என்பதைக் கண்டறியுங்கள். மெலானி இவ்வாறு சொல்கிறாள்: “கெட்ட வார்த்தை பேசும்போது பெரிய தைரியசாலியாக உணர்ந்தேன். சுற்றியிருந்தவர்கள் என்னை ஆட்டிப்படைக்க நான் விரும்பவில்லை. மற்றவர்கள் எனக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும், என்னுடைய ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் செய்வதுபோல் மற்றவர்களைத் திட்ட வேண்டும் என்று விரும்பினேன்.”

உங்களைப்பற்றி என்ன சொல்லலாம்? நீங்கள் ஏன் கெட்ட வார்த்தை பேசுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வது, இந்தப் பிரச்சினையை எப்படிச் சரிசெய்வீர்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கு அவசியம். உதாரணத்திற்கு, எல்லாரும் கெட்ட வார்த்தை பேசுவதால் நீங்களும் அப்படிப் பேசுகிறீர்கள் என்றால், உங்களிடமிருக்கும் நல்ல குணங்கள்மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது அவசியம். எது சரியென நீங்கள் நம்புகிறீர்களோ அதில் உறுதியாய் இருப்பதை நினைத்து பெருமைப்படுவது உங்களுடைய முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம்; அதோடு, கெட்ட வார்த்தை பேசும் பழக்கத்தை ஒழித்துக்கட்டுவதற்கும் அது பேருதவியாக இருக்கும்.

மூன்றாவது: உங்களுடைய மனதிலுள்ளதை வேறு விதமாகச் சொல்வதற்குக் கற்றுக்கொள்ளுங்கள். கெட்ட வார்த்தை பேச வேண்டுமென்ற எண்ணத்தைக் கட்டுப்படுத்துவதால் மட்டுமே அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட முடியாது. அதை விட்டொழிப்பதற்கு “புதிய மனிதருக்குரிய இயல்பை” அணிந்துகொள்வது அவசியம். (எபேசியர் 4:22-24, பொ.மொ.) தன்னடக்கத்தையும் சுயமரியாதையையும் அதிகமாக வளர்த்துக்கொள்வதற்கும், அதே சமயத்தில் மற்றவர்கள்மீது மரியாதை காட்டுவதற்கும் இது உங்களுக்கு உதவும்.

புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்வதற்கும் அதைக் காத்துக்கொள்வதற்கும் பின்வரும் பைபிள் வசனங்கள் உங்களுக்கு உதவும்.

கொலோசெயர் 3:2 (பொ.மொ.): “மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்.”

கற்றுக்கொள்ளும் பாடம்: நல்ல காரியங்களை உயர்வாய் மதிக்க உங்களுடைய மனதை பயிற்றுவியுங்கள். நீங்கள் எதை யோசிக்கிறீர்களோ அதையே பேசுவீர்கள்.

நீதிமொழிகள் 13:20: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.”

கற்றுக்கொள்ளும் பாடம்: உங்களுடைய தோழர்கள் கெட்ட வார்த்தைகளைப் பேசுவார்களானால் அது உங்களையும் தொற்றிக்கொள்ளலாம்.

சங்கீதம் 19:14: “கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.”

கற்றுக்கொள்ளும் பாடம்: பேச்சாற்றல் எனும் பரிசை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதை யெகோவா கவனிக்கிறார்.

உங்களுக்கு இன்னும் உதவி தேவையா? நீங்கள் எத்தனை முறை கெட்ட வார்த்தைகளைப் பேசினீர்கள் என்பதை மேலேயுள்ள அட்டவணையில் குறித்துவைத்து உங்கள் முன்னேற்றத்தை அளவிடலாம், அல்லவா? கெட்ட வார்த்தை பேசுவதை எந்தளவுக்கு குறைத்திருக்கிறீர்கள் என்பதைப் பார்த்து நீங்களே அசந்துபோய்விடுவீர்கள்! (g 3/08)

www.watchtower.org/ype என்ற வெப்சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . . ” தொடரின் கூடுதலான கட்டுரைகளைக் காண்க

சிந்திப்பதற்கு

கெட்ட வார்த்தை பேசுவது இவற்றை எப்படிப் பாதிக்கலாம்

◼ யார் உங்களுடைய நண்பர்களாக இருப்பார்கள்?

◼ ஒரு வேலைக்கு நீங்கள் அமர்த்தப்படுவீர்களா, மாட்டீர்களா?

◼ மற்றவர்கள் உங்களை எப்படிக் கருதுவார்கள்?

[அடிக்குறிப்புகள்]

a இந்தக் கட்டுரையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b கிறிஸ்தவர்கள் கெட்ட வார்த்தை பேசுவதைத் தவிர்ப்பதற்கு பலமான காரணம் இருக்கிறது. ஏனென்றால், “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்” என்றும் “உங்கள் பேச்சு எப்பொழுதும் இனியதாயும் சுவையுடையதாயும் இருப்பதாக” என்றும் பைபிள் சொல்கிறது.— எபேசியர் 4:29; கொலோசெயர் 4:6, பொது மொழிபெயர்ப்பு.

[பக்கம் 21-ன் அட்டவணை]

உங்கள் முன்னேற்றத்தை அளவிடுங்கள்

திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு

வாரம் 1 .... .... .... .... .... .... ....

வாரம் 2 .... .... .... .... .... .... ....

வாரம் 3 .... .... .... .... .... .... ....

வாரம் 4 .... .... .... .... .... .... ....

[பக்கம் 20-ன் படம்]

அருமையான ஒரு பரிசை நீங்கள் பாழாக்க மாட்டீர்கள். அப்படியானால், பேச்சாற்றலை மட்டும் ஏன் தவறாகப் பயன்படுத்த வேண்டும்?