Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பணம் பிரச்சினைகளைத் தீர்த்துவிடுமா?

பணம் பிரச்சினைகளைத் தீர்த்துவிடுமா?

பணம் பிரச்சினைகளைத் தீர்த்துவிடுமா?

இயற்கை பேரழிவுகள், வறுமை, பசிக்கொடுமை, வியாதி, சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற செய்திகளையே நாம் அதிகமாய்க் கேட்கிறோம். ஆனால், இப்போதெல்லாம் ஒரு நல்ல செய்தியையும் கேள்விப்படுகிறோம்; அதுதான், வள்ளல்கள் பற்றிய செய்திகள். ஆம், பணக்காரர்கள் சமூக நலனுக்காக லட்சக்கணக்கான, ஏன், கோடிக்கணக்கான டாலர்களையும் தானமாய் வழங்குவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன. பிரபலங்கள் தங்களுடைய புகழைப் பயன்படுத்தி மக்கள் படும் அவலங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார்கள். நடுத்தரவர்க்கத்தினர்கூட சமூகத்துக்காக அநேக உதவிகளைச் செய்கிறார்கள். ஆனால், இப்படிப் பண உதவி அளிப்பதால் மட்டுமே ஏதேனும் பயன் உண்டா? அவர்களுக்கு நல்லதோர் எதிர்காலம் கிடைத்துவிடுமா?

இது வள்ளல்களின் பொற்காலமா?

தானதர்மம் செய்பவர்களின் எண்ணிக்கை சில நாடுகளில் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. “21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏராளமான நாடுகளிலுள்ள அநேக [தர்ம] ஸ்தாபனங்களின் கையிருப்பில் எப்போதையும்விட இப்போது நிதி புரண்டோடுவதாக” ஒரு புத்தகம் குறிப்பிட்டது. செல்வந்தர்களின் கூட்டம் பெருகப்பெருக அவர்கள் கொடுக்கும் நன்கொடைகளும் அதிகரிக்குமென நாம் எதிர்பார்க்கலாம். எப்படியெனில், உயிரோடு இருக்கும்வரை இவர்கள் நன்கொடைகளை வாரிவழங்குகிறார்கள்; தாங்கள் இறந்தபிறகு தங்களுடைய சொத்துக்களில் ஒரு குறிப்பிட்ட பாகம் தர்ம ஸ்தாபனங்களுக்கு சேரவேண்டுமென எழுதிவைக்கிறார்கள். அதனால்தான், நாம் ‘வள்ளல்களின் பொற்காலத்தில்’ அடியெடுத்து வைத்திருப்பதாக பிரிட்டன் நாட்டு பத்திரிகையான எக்கானமிஸ்ட் கூறியிருக்கலாம்.

மக்கள் படும் கஷ்டங்களுக்கு அரசாங்கங்கள் பாராமுகம் காட்டுவதாலேயே அநேகர் இப்படி கொடை வள்ளல்களாக மாறியிருக்கிறார்கள். உலக சுகாதார விவகாரங்களில் பிரபலங்கள் அதிகமாய் ஈடுபடுவதற்கு ஒரு காரணம், “அரசியல் தலைவர்களின் பொறுப்பற்ற தன்மை” என்றார் ஐநா-வின் ஒரு விசேஷ தூதர்; இவர் ஆப்பிரிக்காவில் எச்ஐவி/எய்ட்ஸ்-க்கான விழிப்புணர்வை ஏற்படுத்த அனுப்பப்பட்டவர். வறுமை, சுகாதாரம், கல்வி, சமூகத்தில் நடக்கும் அநியாயங்கள் இப்படிப் பிரச்சினை என்னவாக இருந்தாலும் சரி, “அரசாங்கமோ சர்வதேச அமைப்புகளோ அவற்றைத் தீர்ப்பதற்கு அல்லது குறைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் [முக்கியமாகப் பணக்காரர்கள்] பொறுமையிழந்து” நன்கொடைகளை வழங்குவதாக ஜோயல் ஃபிளிஷ்மன் தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டார்; அஸ்திபாரம்: அமெரிக்காவின் பரம ரகசியம்​—⁠தனிநபர்களின் ஆஸ்தி உலகை மாற்றும் காட்சி (ஆங்கிலம்) என்பது அவருடைய புத்தகத்தின் பெயர். சில பணக்காரர்கள் தங்கள் தொழிலில் வெற்றியடைந்ததற்கு உதவியாக இருந்த அதே வழிகளைப் பயன்படுத்தி இன்றுள்ள நிலைமைகளைச் சரிசெய்யப் பார்க்கிறார்கள்.

வள்ளல்கள் சாதித்தவை

20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும்கூட வள்ளல்களின் பொற்காலம் நிலவியது. பிரபல தொழிலதிபர்களான அன்ட்ரு கர்னிகி, ஜான். டி. ராகிஃபெல்லர் ஆகியோர் தங்களுடைய பணத்தை ஏழை எளியோருக்குக் கொடுத்து உதவ தீர்மானித்தார்கள். காலங்காலமாக இருந்துவரும் தர்ம ஸ்தாபனங்கள் பசியில் வாடுபவர்களுக்கு உணவளித்து, நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைக் கவனித்து வந்தாலும் பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டுபிடித்து அதைத் தீர்க்கவில்லை என்பதை இந்த வள்ளல்கள் கண்டார்கள். எனவே, தாங்கள் கொடுக்கும் நன்கொடைகள் பயனுள்ளதாய் இருக்க வேண்டுமென்பதற்காக, சமூகத்தை மேம்படுத்தவும் பிரச்சினைகளின் ஆணிவேரை நீக்கவும் உதவுகிற ஆய்வுகளைச் செய்கிற நிறுவனங்களை உருவாக்கினார்கள். அப்போதுமுதல் உலகமுழுவதிலும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன; அவற்றில் 50-க்கும் அதிகமானவை 100 கோடி டாலருக்கும் அதிக மதிப்புள்ள சொத்தை வைத்திருக்கின்றன.

இதுபோன்ற ஸ்தாபனங்களால் பல நன்மைகள் விளைந்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. எண்ணற்ற பள்ளிக்கூடங்களும், நூலகங்களும், மருத்துவமனைகளும், பூங்காக்களும், அருங்காட்சியகங்களும் இதற்குச் சான்றளிக்கின்றன. அதோடு, வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பயிர்களின் விளைச்சலையும் உணவு உற்பத்தியையும் அதிகரிப்பதற்காகப் போடப்பட்ட திட்டங்கள் நல்ல பலன்களை அளித்திருக்கின்றன. மருத்துவ ஆய்வுகளுக்காக அளிக்கப்பட்ட நன்கொடைகளால் சுகாதாரத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, மஞ்சள் காய்ச்சல் போன்ற குறிப்பிட்ட சில நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன.

உலகத்தை பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க எப்போதையும்விட இப்போது அநேகர் தீவிரமாகச் செயல்பட்டு, அதிக பணத்தை செலவழிப்பதால் அநேகரின் மனதில் நம்பிக்கை சுடர் வீசுகிறது. “தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் நன்கொடைகள் பொதுமக்கள் வாழும் சூழ்நிலையை பெருமளவு மேம்படுத்தும் என்பதை மறுக்க முடியாது” என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி சில வள்ளல்களிடம் 2006-ல் கூறினார்.

என்றாலும், அநேகர் அப்படிச் சொல்ல யோசிக்கிறார்கள். உலக சுகாதார துறை நிபுணரான லாரி கரட் எழுதினதாவது: “தற்போது இருக்கிற ஏராளமான நன்கொடைகளை வைத்து உலகிலுள்ள பல நோய்களைத் தீர்த்துவிட முடியும் என்று ஒருவர் நினைக்கலாம். ஆனால், அப்படி நினைப்பது தவறு.” ஏன் அப்படிச் சொல்கிறார்? மந்தமான அரசாங்கம், ஊழல், ஒருங்கிணைந்த முயற்சி இல்லாதது ஆகியவை அதற்குத் தடைக்கற்களாய் இருப்பதாக அவர் கூறுகிறார். அதோடு, எய்ட்ஸ் போன்ற குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமே தங்கள் நிதிகளைப் பயன்படுத்தும்படி நன்கொடை அளிப்பவர்கள் சொல்வதும் இதற்கு ஒரு தடைக்கல்.

போதுமான ஒருங்கிணைப்பு இல்லாததாலும் “பொதுவான வியாதிகளுக்கு அல்லாமல் குறிப்பிட்ட சில வியாதிகளுக்கே [நன்கொடைகள்] செலவழிக்கப்படுவதாலும் வள்ளல்களுடைய நன்கொடைகள் நம் எதிர்பார்ப்பை நிறைவேற்றாது; சொல்லப்போனால் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்” என்கிறார் கரட்.

ஏன் பணத்தால் சாதிக்க முடிவதில்லை?

நன்கொடைகள் நல்ல காரணங்களுக்காக அளிக்கப்பட்டாலும் அதிக பலன் கிடைக்காது. ஏன்? ஏனென்றால், பணத்தாலோ சிறந்த கல்வியாலோ பேராசை, விரோதம், தப்பெண்ணம், தேசாபிமானம், ஜாதிப்பற்று, பொய்மத நம்பிக்கைகள் போன்ற பிரச்சினைகளை நீக்க முடியாது. இவையெல்லாம் மனிதர் படும் கஷ்டங்களை அதிகரிப்பது உண்மைதான்; இருந்தாலும், இவையே அதற்குக் காரணம் அல்ல. பைபிள் குறிப்பிடுகிறபடி, அதற்கு பல முக்கியமான விஷயங்களும் காரணமாய் இருக்கின்றன.

ஒன்று, பாவத்தின் காரணமாக மனிதன் குறைபாடுள்ளவனாய் இருக்கிறான். (ரோமர் 3:23; 5:12) இதனால், தவறான காரியங்களைச் சிந்திக்கவும் தவறான வழியில் செல்லவும் தூண்டப்படுகிறோம். “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது” என்று ஆதியாகமம் 8:21 சொல்கிறது. இந்தத் தவறான சிந்தனைகளுக்கு இடங்கொடுப்பதால்தான் லட்சக்கணக்கானோர் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகிறார்கள், போதை பொருளுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். எய்ட்ஸ் உட்பட பல நோய்களுக்கு இவையே காரணமாய் இருக்கின்றன.—ரோமர் 1:26, 27.

மனிதர் படும் கஷ்டங்களுக்கு இரண்டாவது காரணம், நம்மை நாமே நல்ல முறையில் ஆட்சி செய்துகொள்ளும் திறன் நமக்கு இல்லாததே. “தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல” என்கிறது எரேமியா 10:23. நன்கொடை வழங்கும் நிறுவனங்கள் அரசாங்கத்தின் ஆதரவின்றி மக்களுக்கு உதவுவதற்குக் காரணம், ஏற்கெனவே குறிப்பிடப்பட்டதுபோல் ‘அரசியல் தலைவர்களின் பொறுப்பற்ற தன்மையே.’ மனிதர், சக மனிதனை அல்ல, மாறாக கடவுளையே ஆட்சியாளராக ஏற்றுக்கொள்ள வேண்டுமென பைபிள் விளக்குகிறது.​—ஏசாயா 33:22.

அதுமட்டுமா, நம்மைப் படைத்த யெகோவா தேவன் நம்முடைய எல்லா கஷ்டங்களையும் நீக்கப்போவதாக பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. அதை நிறைவேற்றுவதற்கான முக்கிய ஏற்பாடுகளையும் அவர் ஏற்கெனவே செய்துவிட்டார்.

மிகப் பெரிய வள்ளல்

“கொடைக் குணம்” என்ற வார்த்தை, “மனிதர்மீது அன்பு” என்று பொருள்படும் கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. மனிதகுலத்தின் மீது நம் படைப்பாளருக்கு இருக்குமளவு அன்பு வேறு யாருக்கும் இல்லை. “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்கிறது யோவான் 3:16. எனவே, மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்க பணத்தைவிட அதிக மதிப்புவாய்ந்த ஒன்றை யெகோவா அளித்தார். “அநேகரை மீட்கும் பொருளாக” தம் பிரியமான மகனை அவர் அளித்தார். (மத்தேயு 20:28) இயேசுவைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.”—1 பேதுரு 2:24.

ஒரு நல்ல அரசாங்கத்திற்காகவும் யெகோவா ஏற்பாடு செய்திருக்கிறார். இந்தப் பூமியை ஆட்சிசெய்ய பரலோகத்தில் ஓர் அரசாங்கத்தை ஸ்தாபித்திருக்கிறார். பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யப்போகும் அந்த அரசாங்கம், எல்லா கெட்ட ஜனங்களையும் அழித்துவிட்டு பூமியில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் நிலைநாட்டும்.—சங்கீதம் 37:10, 11; தானியேல் 2:44; 7:13, 14.

மனிதரின் துன்பங்களுக்கான ஆணிவேரைக் கண்டுபிடித்து அதை முற்றிலுமாக நீக்குவதன்மூலம் எந்தத் தனிநபர்களாலோ குழுக்களாலோ சாதிக்க முடியாததை கடவுள் சாதிப்பார். எனவேதான், யெகோவாவின் சாட்சிகள், தர்ம ஸ்தாபனங்களை ஆரம்பிப்பதற்குப் பதிலாக இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி கடவுளுடைய ‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷத்தை’ அறிவிக்கிறார்கள். தங்கள் நேரத்தையும் பணத்தையும் அதற்காக செலவழிக்கவே விரும்புகிறார்கள்.—மத்தேயு 24:14; லூக்கா 4:43. (g  5/08)

[பக்கம் 17-ன் பெட்டி/படம்]

“மகிழ்ச்சியோடு கொடுப்பவனையே தேவன் அதிகமாக நேசிக்கிறார்”

பைபிளில் 2 கொரிந்தியர் 9:7-ல் (ஈஸி டு ரீட் வர்ஷன்) காணப்படும் இந்தக் கூற்றுக்கு இசைவாகவே யெகோவாவின் சாட்சிகள் செயல்படுகிறார்கள். மற்றவர்களுக்காக தங்கள் நேரத்தையும், சக்தியையும், பொருள் வளங்களையும் செலவழிக்கையில் பின்வரும் இந்த ஆலோசனையைப் பின்பற்ற முயற்சி செய்கிறார்கள்: “சொல்லினால் மட்டுமல்ல செயலினாலும், நாவினால் மட்டுமல்ல உண்மை மனதினாலும் அன்புகூரக்கடவோம்.”—1 யோவான் 3:18.

இயற்கை பேரழிவுகள் போன்ற ஏதாவதொரு அவசரநிலை ஏற்படுகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதை அவர்கள் பாக்கியமாய்க் கருதுகிறார்கள். உதாரணத்திற்கு, கட்ரீனா, ரீட்டா, வில்மா ஆகிய சூறாவளிகள் அமெரிக்காவின் தென் பகுதிகளைப் பாதித்தபோது நிவாரண பணியில் ஈடுபடுவதற்காக ஆயிரக்கணக்கான சாட்சிகள் திரண்டுவந்தார்கள். பாதிக்கப்பட்ட இடங்களில் நிறுவப்பட்ட நிவாரண குழுக்களின் மேற்பார்வையில், யெகோவாவின் சாட்சிகளுடைய 5,600-க்கும் அதிகமான வீடுகளையும் 90 ராஜ்ய மன்றங்களையும் பழுதுபார்த்து புதுப்பித்தார்கள். இவ்வாறு, சேதமடைந்திருந்த கட்டிடங்களில் பெரும்பாலானவற்றை புதுப்பித்தார்கள்.

யெகோவாவின் சாட்சிகள் தசமபாகம் கொடுப்பதுமில்லை, நன்கொடை கேட்பதுமில்லை. அவர்களுடைய வேலை மனமுவந்து கொடுக்கும் நன்கொடைகளாலேயே நடைபெறுகிறது.—மத்தேயு 6:3, 4; 2 கொரிந்தியர் 8:12.

[பக்கம் 16-ன் படங்கள்]

வியாதிக்கும் கஷ்டங்களுக்கும் பின் இருக்கும் முக்கியப் பிரச்சினைகளைப் பணத்தால் நீக்க முடியாது

[படத்திற்கான நன்றி]

© Chris de Bode/Panos Pictures