Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”—எப்போது வரும்?

“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”—எப்போது வரும்?

“இவையெல்லாம் நடப்பதை நீங்கள் பார்க்கும்போது, அவர் கதவருகிலேயே வந்துவிட்டார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.”—மத். 24:33.

1, 2. (அ) ஒருவித குருட்டுத்தன்மைக்கு எது காரணம்? (ஆ) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி நாம் என்ன அறிந்திருக்கிறோம்?

பொதுவாக, ஒரு சம்பவத்தைக் கண்ணாரப் பார்த்தவர்கள் அதைப் பற்றி ஆளுக்கொரு விதமாகச் சொல்வார்கள். சிலர், தங்களுடைய நோயைப் பற்றி டாக்டர் சொன்ன எல்லா விஷயங்களையும் அப்படியே நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். இன்னும் சிலர், சாவியையோ மூக்குக்கண்ணாடியையோ கண்ணெதிரே வைத்துக்கொண்டு அதைத் தேடிக்கொண்டே இருப்பார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்? ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடுவதால் ஏற்படும் ஒருவித குருட்டுத்தன்மையே என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நம் மூளையால், ஒரு சமயத்தில் ஒரு விஷயத்தின் மீதே முழுமையாகக் கவனம் செலுத்த முடியும் என்பதை இது காட்டுகிறது.

2 இன்று உலகில் நடந்துவருகிற சம்பவங்களின் முக்கியத்துவத்தை அநேகர் உணராதிருப்பதற்கு இது போன்ற ஒரு குருட்டுத்தன்மையே காரணம். 1914 முதற்கொண்டு உலகில் பெரும் மாற்றங்கள் நடந்து வருவதை அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்; ஆனால், அவற்றின் அர்த்தத்தை அவர்கள் உணர்வதில்லை. 1914-ல் இயேசு பரலோகத்தில் ராஜாவாக அரியணையேறியபோது, ஒரு கருத்தில் கடவுளுடைய அரசாங்கம் வந்துவிட்டது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்பட வேண்டும்” என்ற ஜெபத்திற்கான பதில் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. (மத். 6:10) இந்தப் பொல்லாத உலகம் அழிக்கப்படும்போதே அதற்கான பதில் கிடைக்கும்.  அப்போதுதான், கடவுளுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்படும்.

3. கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதால் நாம் எப்படிப் பயனடைகிறோம்?

3 கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் படிப்பதால், கடைசி நாட்களைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் இப்போது நிறைவேறி வருவதை நாம் கண்ணாரக் காண்கிறோம். நமக்கும் உலக மக்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்! அவர்கள் தங்களுடைய சொந்த வேலைகளிலேயே மூழ்கியிருக்கிறார்கள். அதனால், 1914 முதற்கொண்டு கிறிஸ்து ஆட்சி செய்து வருவதற்கான தெளிவான அத்தாட்சியை அவர்கள் காண்பதில்லை; பொல்லாதவர்களை அவர் சீக்கிரத்தில் அழிக்கப்போகிறார் என்பதையும் அவர்கள் உணருவதில்லை. ஆனால், உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பல ஆண்டுகளாக கடவுளைச் சேவித்து வரும் நான், காலத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து இப்போதும் அதிக விழிப்பாக, கவனமாக இருக்கிறேனா? ஒருவேளை சமீபத்தில் சத்தியத்திற்கு வந்திருந்தாலும், வாழ்க்கையில் நான் எதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்?’ இக்கேள்விகளுக்கு நம்முடைய பதில் எதுவாக இருந்தாலும் சரி, கடவுளுடைய சித்தத்தை பூமியில் முழுமையாக நிறைவேற்றுவதற்கு கிறிஸ்து சீக்கிரத்தில் நடவடிக்கை எடுக்கத்தான் போகிறார். இதை நாம் ஏன் முழுமையாய் நம்பலாம் என்பதற்கு மூன்று முக்கிய காரணங்களை இப்போது பார்க்கலாம்.

குதிரை வீரர்களின் சவாரி

4, 5. (அ) 1914 முதற்கொண்டு இயேசு என்ன செய்து வருகிறார்? (கட்டுரையின் முதல் படத்தைப் பாருங்கள்.) (ஆ) இயேசுவைப் பின்தொடர்ந்து வரும் மூன்று குதிரை வீரர்களின் சவாரி எவற்றை அர்த்தப்படுத்துகின்றன, இவை எவ்வாறு நிறைவேறி வருகின்றன?

4 பரலோகத்தில் ராஜாவாக இருக்கும் இயேசு கிறிஸ்து, 1914 முதற்கொண்டு வெள்ளைக் குதிரையில் சவாரி செய்கிறவராகச் சித்தரிக்கப்படுகிறார். சாத்தானுடைய உலகத்தை ஜெயித்து முடிப்பதற்காக அவர் உடனடியாகப் புறப்பட்டார். (வெளிப்படுத்துதல் 6:1, 2-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டவுடன் போர், பஞ்சம், கொள்ளை நோய்கள், மரணத்தை விளைவிக்கும் பிற சம்பவங்கள் முன்னொருபோதும் இல்லாதளவுக்கு நடக்கும் என்று வெளிப்படுத்துதல் 6-ஆம் அதிகாரம் விவரிக்கிறது. இயேசு கிறிஸ்துவைப் பின்தொடர்ந்துவரும் குதிரை வீரர்களின் சவாரி இதையே சித்தரித்துக் காட்டுகிறது.—வெளி. 6:3-8.

5 தேசங்கள் ஒன்றுசேர்ந்து சமாதானத்திற்கான அறைகூவலை விடுத்தபோதிலும், முன்னறிவிக்கப்பட்டபடியே ‘பூமியிலிருந்து சமாதானம் எடுத்துப்போடப்பட்டது.’ முதல் உலகப்போர் இதற்கு ஓர் ஆரம்பமே! அதைத் தொடர்ந்து நடந்த பயங்கரமான போர்களும் பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போட்டன. 1914 முதற்கொண்டு பொருளாதாரத்திலும் அறிவியலிலும் உலகம் சிகரத்தைத் தொட்டிருக்கிறது. இருந்தாலும், உணவு தட்டுப்பாடு பூமியின் சமாதானத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், கொள்ளைநோய்களும், இயற்கை சீற்றங்களும், பிற அவலங்களும் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோரின் உயிரைப் பறித்து வருவதை யார்தான் மறுப்பர்? இந்தச் சம்பவங்கள் வரலாறு காணாதளவுக்கு உலகளவில்... தீவிரமாக... அடிக்கடி... நடந்து வருகின்றன. அப்படியென்றால், இவற்றின் அர்த்தத்தை நீங்கள் உணர்ந்துகொள்கிறீர்களா?

குதிரை வீரர்களின் சவாரியால் உலக நிலைமைகள் தொடர்ந்து மோசமடைந்து வருகின்றன (பாராக்கள் 4, 5)

6. பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைக் கவனித்தவர்கள் யார், அது அவர்களை என்ன செய்யத் தூண்டியது?

6 முதல் உலகப் போரும், ஸ்பானிஷ் ஃப்ளூவும் அநேகருடைய கவனத்தைச் சிதறடித்தன. ஆனால், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள், 1914-ல், “புறதேசத்தாருக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” முடிவடையுமென ஆவலுடன் காத்திருந்தார்கள். (லூக். 21:24) அந்த பைபிள் தீர்க்கதரிசனம் எவ்விதத்தில் நிறைவேறப்போகிறதென அவர்களுக்குத் தெரியாதிருந்தாலும், 1914-ல் கடவுளுடைய அரசாங்கத்தில் ஒரு முக்கிய சம்பவம் நடக்கப் போகிறதென தெரிந்திருந்தது. பைபிள் தீர்க்கதரிசனத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவுடன் கடவுளுடைய ஆட்சி பரலோகத்தில் ஆரம்பித்து விட்டதென தைரியமாக அறிவித்தார்கள். இதனால், எதிரிகள் அவர்களைக் கடுமையாகத் துன்புறுத்தினார்கள். இதுவும் மற்றொரு தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமே. அதைத் தொடர்ந்துவந்த ஆண்டுகளில், எதிரிகள் “தீமையைக் கட்டளையினால்” பிறப்பித்திருக்கிறார்கள். நம் சகோதரர்களை நேரடியாகத் தாக்கியிருக்கிறார்கள், சிறையில் தள்ளியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தூக்கிலிட்டும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றிருக்கிறார்கள் அல்லது சிரச்சேதம் செய்திருக்கிறார்கள்.—சங். 94:20; வெளி. 12:15.

7. உலக சம்பவங்களின் உண்மையான அர்த்தத்தை ஏன் அநேகரால் உணர முடிவதில்லை?

 7 கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் ஆரம்பித்துவிட்டதற்கு இத்தனை அத்தாட்சிகள் இருந்தும், ஏன் பெரும்பாலோர் அதை ஏற்க மறுக்கிறார்கள்? கடவுளுடைய மக்கள் வெகு காலமாக அறிவித்துவரும் பைபிள் தீர்க்கதரிசனத்திற்கும், உலகத்தில் நடந்து வரும் சம்பவங்களுக்கும் சம்பந்தம் இருப்பதை ஏன் அவர்களால் உணர முடிவதில்லை? கண்ணால் பார்ப்பதை மட்டுமே நம்புவதாலா? (2 கொ. 5:7) கடவுள் செய்து வருவதைப் பார்க்காமல், சொந்த வேலையிலேயே மூழ்கியிருப்பதாலா? (மத். 24:37-39) சாத்தானின் பொய்ப்பிரச்சாரத்திற்குச் செவி சாய்ப்பதாலா? (2 கொ. 4:4) கடவுளுடைய அரசாங்கம் செய்து வருவதைப் புரிந்துகொள்வதற்கு விசுவாசமும், ஆன்மீகப் பகுத்துணர்வும் அவசியம். இதையெல்லாம் பார்க்க முடிவதால் நாம் எவ்வளவு சந்தோஷமானவர்களாக இருக்கிறோம்!

பொல்லாதவர்கள் மேன்மேலும் மோசமாவார்கள்

8-10. (அ) 2 தீமோத்தேயு 3:1-5-லுள்ள தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறி வருகிறது? (ஆ) பொல்லாதவர்கள் மேன்மேலும் மோசமாகி வருகிறார்கள் என ஏன் சொல்லலாம்?

8 கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் பூமியில் ஆட்சியைத் தொடங்கும் என நம்புவதற்கு இன்னொரு காரணம், பொல்லாதவர்கள் மேன்மேலும் மோசமாகி வருவதே. 2 தீமோத்தேயு 3:1-5-ல் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் நிறைவேறி வருவதை கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள குணங்கள் உலகெங்குமுள்ள மக்களிடம் அதிகரித்து வருவதை உங்களால் பார்க்க முடிகிறதா? இதற்கு சில உதாரணங்களை இப்போது கவனிக்கலாம்.2 தீமோத்தேயு 3:1, 13-ஐ வாசியுங்கள்.

9 ஐம்பது அல்லது அறுபது வருடங்களுக்குமுன் அதிர்ச்சியூட்டுபவையாகக் கருதப்பட்ட காரியங்கள், இன்று வேலையிடங்களிலும், பொழுதுபோக்குத் துறையிலும், போட்டி விளையாட்டுகளிலும் ஆடை அலங்காரத்திலும் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. வன்முறையும் ஒழுக்கக்கேடும் எங்கும் மலிந்து கிடக்கின்றன. மக்கள் கோபாவேசம் உள்ளவர்களாக, காமவெறி பிடித்தவர்களாக, அரக்க குணமுள்ளவர்களாக தங்களைக் காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். 1950-களில், கீழ்த்தரமானதாகக் கருதப்பட்ட நிகழ்ச்சிகளை, இன்று குடும்பமாக உட்கார்ந்து டிவி-யில் பார்த்து மகிழ்கிறார்கள். ஓரினச்சேர்க்கையாளர்கள், பொழுதுபோக்கு துறையில்... ஆடை அலங்கார நிகழ்ச்சிகளில்... கொடிகட்டிப் பறப்பதன் மூலம், தங்கள் வாழ்க்கைப் பாணியைப் பின்பற்ற மற்றவர்களை ஊக்குவிக்கிறார்கள். இவற்றையெல்லாம் கடவுள் எவ்வாறு கருதுகிறார் என்பதை அறிந்திருக்கிற நாம் அவருக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!—யூதா 14, 15-ஐ வாசியுங்கள்.

 10 ஐம்பது அல்லது அறுபது வருடங்களுக்குமுன் அடங்காத பிள்ளைகள் என சொல்லப்பட்டவர்களின் செயல்களோடு, இன்றைய பிள்ளைகளின் செயல்களை ஒப்பிட்டுப் பாருங்கள். முன்பெல்லாம், பிள்ளைகள் புகைபிடித்துவிடுவார்களோ, மதுவுக்கு அடிமையாகிவிடுவார்களோ, ஆபாச நடனம் பழகிவிடுவார்களோ என பெற்றோர்கள் கவலைப்பட்டார்கள். ஆனால், இன்று? 15 வயது மாணவன் வகுப்பிலுள்ள மாணவர்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டதில் இருவர் பலியானார்கள், 13 பேர் காயமடைந்தார்கள். குடிபோதையில் இருந்த பருவ வயது பிள்ளைகள், 9 வயது சிறுமியைக் கொடூரமாகக் கொலை செய்ததோடு, அவளுடைய அப்பாவையும், உறவினர் ஒருவரையும் தாக்கினார்கள். அதிர்ச்சியூட்டும் இதுபோன்ற சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன. கடந்த பத்து வருடங்களில் நடந்த பாதி குற்றங்களுக்கு இளம் பிள்ளைகளே காரணம் என்பதாக ஆசிய நாடுகள் ஒன்றிலிருந்து வந்த அறிக்கை குறிப்பிட்டது. நிலைமைகள் மேன்மேலும் மோசமாகிவருவதை யாரால்தான் மறுக்க முடியும்?

11. நிலைமைகள் மேன்மேலும் மோசமாவதை ஏன் அநேகரால் உணர முடிவதில்லை?

11 அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு சொன்னார்: “கடைசி நாட்களில், கேலி செய்கிறவர்கள் மக்களிடையே தோன்றுவார்கள்; அவர்கள் தங்களுடைய ஆசைகளின்படி நடந்து, ‘அவர் வருவதாகச் சொல்லியிருந்தாரே, எங்கே காணோம்? நம் முன்னோர்களும் போய்ச்சேர்ந்துவிட்டார்கள். உலகம் தோன்றிய காலத்திலிருந்தே எல்லாம் இருந்தபடிதான் இருக்கிறது’ என்று சொல்லிக் கேலி செய்வார்கள்.” (2 பே. 3:3, 4) அவர்கள் இப்படிச் சொல்வதற்குக் காரணம் என்ன? ஒரு சம்பவம் அடிக்கடி நடக்கும்போது அது அவர்களுக்கு ஒரு பெரிய விஷயமாகத் தெரியாததே. உதாரணத்திற்கு, நெருங்கிய நண்பர் ஒருவருடைய ஒழுக்கத்தில் திடீரென மாற்றங்கள் தெரிந்தால், அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், மக்களுடைய ஒழுக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் தெரிந்தால் அந்தளவு அதிர்ச்சியாக இருக்காது. என்றாலும் ஒழுக்க விஷயத்தில் இந்த உலகம் படிப்படியாக சீர்கெட்டு வருவதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது, இது மிக ஆபத்தானது.

12, 13. (அ) உலக நிலைமைகளைப் பார்த்து நாம் ஏன் சோர்வடைய வேண்டியதில்லை? (ஆ) “சமாளிப்பதற்குக் கடினமான” நிலைமைகளைத் தாக்குப்பிடிக்க எது நமக்கு உதவும்?

12 ‘கடைசி நாட்கள்,’ ‘சமாளிப்பதற்குக் கடினமாக’ இருக்குமென்று அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். (2 தீ. 3:1) அதற்காக, நாம் இந்த உலகத்தை விட்டு ஓடிவிட முடியாது; நிச்சயம் நம்மால் நிலைமைகளைச் சமாளிக்க முடியும். யெகோவா தரும் உதவி, அவருடைய சக்தி, கிறிஸ்தவ சபை ஆகியவற்றின் மூலம் எந்தவொரு ஏமாற்றத்தையும் பயத்தையும் நம்மால் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும், விசுவாசத்திலும் நிலைத்திருக்க முடியும். ஆம், “இயல்புக்கு மிஞ்சிய சக்தி” நம்முடையது அல்ல, கடவுளுடையது.—2 கொ. 4:7-10.

13 கடைசி நாட்களைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை “அறிந்துகொள்” என்ற அறிமுக வார்த்தையுடன் பவுல் குறிப்பிடுகிறார். அந்தத் தீர்க்கதரிசனம் நிச்சயம் நடக்கும் என்ற உறுதியை இந்த வார்த்தை அளிக்கிறது. யெகோவா இந்த பொல்லாத உலகத்திற்கு முடிவுகட்டும்வரை, தேவபக்தியற்ற மனித சமுதாயத்தின் நிலைமை மேன்மேலும் மோசமாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஒழுக்கத்தில் சீர்கெட்டுப் போனதால் சரிந்து தரைமட்டமான சில சமுதாயங்களை அல்லது தேசங்களைப் பற்றி சரித்திராசிரியர்கள் எழுதியிருப்பதை நாம் வாசித்திருக்கலாம். முன்னொருபோதும் இல்லாதளவுக்கு முழு உலகமும் இன்று ஒழுக்கத்தில் சீர்கெட்டுக் கிடக்கிறது. இதன் அர்த்தத்தை மக்கள் உணர்வதில்லை. ஆனால், 1914 முதல் நடந்து வரும் சம்பவங்கள், கடவுளுடைய அரசாங்கம் எல்லா அக்கிரமங்களையும் சீக்கிரத்தில் துடைத்தழிக்கும் என்பதை நமக்கு உறுதிப்படுத்துகிறது.

இந்தத் தலைமுறை ஒருபோதும் ஒழிந்துபோகாது

14-16. கடவுளுடைய அரசாங்கம் வெகு விரைவில் ‘வரும்’ என நாம் நம்புவதற்கு மூன்றாவது காரணம் என்ன?

14 முடிவு வெகு அருகில் இருக்கிறது என்று நாம் நம்புவதற்கு மூன்றாவது காரணம், கடவுளுடைய மக்களின் நவீனகால சரித்திரத்தில் நடந்திருக்கிற சம்பவங்கள் ஆகும். உதாரணத்திற்கு, கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன், பரலோக நம்பிக்கையுள்ள சிலர் சுறுசுறுப்புடன் கடவுளுக்குச் சேவை செய்து வந்தார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பு, 1914-ல் நிறைவேறாமல் போனபோது அவர்கள் என்ன செய்தார்கள்? பெரும்பாலோர், கடுமையான சோதனைகள் மற்றும் துன்புறுத்தல்கள் மத்தியிலும் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை  செய்து வந்தார்கள். அதோடு, தங்கள் பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்கும்வரை உண்மையோடு நிலைத்திருந்தார்கள்.

15 இந்த உலகின் முடிவைப் பற்றிய விலாவாரியான தீர்க்கதரிசனத்தில், “இவையெல்லாம் நடப்பதற்குமுன் இந்தத் தலைமுறை ஒருபோதும் ஒழிந்துபோகாது” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:33-35-ஐ வாசியுங்கள்.) “இந்தத் தலைமுறை” என்று அவர் சொன்னது, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களின் இரண்டு தொகுதிகளைக் குறிக்கிறது. முதல் தொகுதியினர், 1914-ல் வாழ்ந்துகொண்டிருந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள்; இவர்கள், அந்த வருடத்தில் கிறிஸ்து பரலோகத்தில் ராஜாவாக ஆளத்தொடங்கிவிட்டார் என்பதைப் புரிந்திருந்தார்கள். இவர்கள், வெறுமனே 1914-ல் வாழ்ந்துகொண்டிருந்தவர்கள் அல்ல, மாறாக, அந்த வருடத்திலோ அதற்கு முன்போ கடவுளுடைய சக்தியினால் அவருடைய மகன்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.—ரோ. 8:14-17.

16 ‘இந்தத் தலைமுறையை’ சேர்ந்த இரண்டாம் தொகுதியினர், முதல் தொகுதியினருடைய வாழ்நாட்காலத்தில் வாழ்ந்த பரலோக நம்பிக்கையுள்ளவர்கள். இவர்கள் முதல் தொகுதியினரின் காலத்தில் வாழ்ந்ததோடு, முதல் தொகுதியினரில் சிலர் உயிரோடு இருந்தபோதே கடவுளுடைய சக்தியினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆகவே, இயேசு குறிப்பிட்ட “இந்தத் தலைமுறை”, இன்று பூமியில் வாழும் பரலோக நம்பிக்கையுள்ள எல்லா கிறிஸ்தவர்களையும் குறிப்பதில்லை. ‘இந்தத் தலைமுறையை’ சேர்ந்த இரண்டாம் தொகுதியினருக்கு இப்போது வயதாகிக்கொண்டே போகிறது. இருந்தாலும், “இந்தத் தலைமுறை ஒருபோதும் ஒழிந்துபோகாது” என்று மத்தேயு 24:34-ல் இயேசு சொன்ன வார்த்தைகள், இவர்களில் சிலராவது, மிகுந்த உபத்திரவம் தொடங்கும்போது உயிரோடு இருப்பார்கள் என்ற உறுதியை நமக்கு அளிக்கிறது. கடவுளுடைய அரசாங்கம் அக்கிரமங்களுக்கு முடிவுகட்டி நீதியுள்ள புதிய உலகத்தை ஸ்தாபிப்பதற்கு இன்னும் கொஞ்ச காலமே இருக்கிறது என்ற நம் நம்பிக்கைக்கு இது நங்கூரமாக இருக்கிறது.—2 பே. 3:13.

கிறிஸ்து வெகு விரைவில் ஜெயிப்பார்

17. இப்போது சிந்தித்த மூன்று தீர்க்கதரிசனங்களிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்?

17 இதுவரை நாம் சிந்தித்த மூன்று தீர்க்கதரிசனங்களிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்? உலக முடிவுக்கான அந்த நாளும் அந்த நேரமும் நமக்குத் தெரியாது என்று இயேசு எச்சரித்தார். (மத். 24:36; 25:13) ஆனால், பவுல் குறிப்பிட்டிருக்கிற “காலத்தில்” நாம் வாழ்கிறோம் என்பது நமக்குத் தெரியும். (ரோமர் 13:11-ஐ வாசியுங்கள்.) ஆம், பவுல் குறிப்பிட்டிருக்கும் அந்தக் காலத்தில்தான், அந்தக் கடைசி நாட்களில்தான் நாம் வாழ்கிறோம். பைபிள் தீர்க்கதரிசனங்களுக்கும், யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் செய்து வருகிற காரியங்களுக்கும் நாம் கூர்ந்த கவனம் செலுத்தும்போது, சாத்தானுடைய இந்தச் சீர்கெட்ட உலகம் வெகு விரைவில் முடிவடையப் போவதை நம் மனக்கண்களால் தெளிவாகப் பார்க்க முடியும்.

18. இயேசு கிறிஸ்துவின் அரசதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுக்கு என்ன நடக்கும்?

18 வெள்ளைக் குதிரையின்மேல் சவாரி செய்யும் வெற்றிவீரரான இயேசு கிறிஸ்துவின் அரசதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அனைவரும் தங்கள் தவறை ஒப்புக்கொள்ளும் காலம் சீக்கிரத்தில் வரும். வரவிருக்கும் நியாயத்தீர்ப்பிலிருந்து அவர்கள் எங்கும் தப்பியோட முடியாது. அநேகர், மரண பயத்தில் “அதை எதிர்த்துநிற்க யாரால் முடியும்?” என்று கேட்பார்கள். (வெளி. 6:15-17) இக்கேள்விக்கு வெளிப்படுத்துதல் ஏழாம் அதிகாரம் பதிலளிக்கிறது. பரலோக நம்பிக்கையுள்ளவர்களாலும், பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்களாலும் கடவுளுடைய அங்கீகாரத்தோடு ‘நிற்க முடியும்.’ பின்பு, வேறே ஆடுகளான ‘திரள் கூட்டத்தார்’, மிகுந்த உபத்திரவத்தில் தப்பிப்பிழைத்து, கடவுளுடைய புதிய உலகத்தில் காலடி எடுத்துவைப்பார்கள்.—வெளி. 7:9, 13-15.

19. கடைசி நாட்கள் வெகு சீக்கிரத்தில் முடிவடையும் என்பதை நம்புகிற நீங்கள், எதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள்?

19 இப்போது நிறைவேறிவரும் தீர்க்கதரிசனங்களுக்கு நாம் கூர்ந்த கவனம் செலுத்தும்போது, சாத்தானுடைய உலகத்தால் திசை திரும்பிவிட மாட்டோம், உலக சம்பவங்களின் உண்மையான அர்த்தத்தைப் பார்க்காதவாறு நம் கண்களை மறைத்துக்கொள்ள மாட்டோம். நீதியாய்ப் போர் செய்கிறவரான கிறிஸ்து தம்முடைய இறுதி தாக்குதல்மூலம் தேவபக்தியற்ற இந்த உலகை வெகு விரைவில் ஜெயிப்பார். (வெளி. 19:11, 19-21) அதற்குப் பின்பு, நாம் அனுபவிக்கப்போகும் ஆசீர்வாதங்கள் எத்தனை எத்தனை!—வெளி. 20:1-3, 6; 21:3, 4.