Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளமையில் ஞானமான தீர்மானங்கள் எடுங்கள்

இளமையில் ஞானமான தீர்மானங்கள் எடுங்கள்

“வாலிபரே, கன்னிகைகளே, . . . கர்த்தரைத் [“யெகோவாவை,” NW] துதியுங்கள்.”—சங். 148:12.

1. இளம் சகோதர சகோதரிகள் என்ன அனுபவங்களை ருசித்து மகிழ்கிறார்கள்?

முக்கியமான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். சரித்திரம் காணாதளவுக்கு பல நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் யெகோவாவை வழிபட ஆரம்பித்திருக்கிறார்கள். (வெளி. 7:9, 10) இளம் சகோதர சகோதரிகள் பலர், உயிர்காக்கும் பைபிள் சத்தியங்களை அறிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவும்போது புதுப் புது அனுபவங்களை ருசிக்கிறார்கள். (வெளி. 22:17) இளைஞர்கள் சிலர், பைபிள் படிப்புகளை நடத்துவதன் மூலம் சிறந்த வாழ்க்கை வாழ மற்றவர்களுக்கு உதவுகிறார்கள். இன்னும் சிலர், வேற்று மொழி பிராந்தியங்களில் நற்செய்தியை மிகுந்த ஆர்வத்தோடு அறிவிக்கிறார்கள். (சங். 110:3; ஏசா. 52:7) சந்தோஷத்தை அள்ளித்தரும் இந்த வேலையில் மிகுந்த திருப்தி காண நீங்கள் என்ன செய்யலாம்?

2. இளைஞர்களுக்கு பொறுப்புகளைக் கொடுக்க யெகோவா மனமுள்ளவராய் இருக்கிறார் என்பதை தீமோத்தேயுவின் உதாரணம் எப்படிக் காட்டுகிறது? (இப்பக்கத்திலுள்ள படத்தைப் பாருங்கள்.)

2 ஓர் இளம் சகோதரராக, சகோதரியாக நீங்கள் இப்போது எடுக்கும் தீர்மானங்கள், யெகோவாவின் சேவையில் அதிகம் செய்வதற்கான வாய்ப்புகளை உங்களுக்குத் திறந்து வைக்கும். உதாரணமாக, லீஸ்திராவைச் சேர்ந்த தீமோத்தேயு ஞானமான தீர்மானங்களை எடுத்தார். அதனால், சுமார் 20 வயதிலேயே மிஷனரியாக நியமிக்கப்பட்டார். (அப். 16:1-3) கடும் துன்புறுத்துதல் காரணமாக அப்போஸ்தலன் பவுல் சில மாதங்களிலேயே தெசலோனிக்கே சபையைவிட்டு போக வேண்டியிருந்தது. அதனால், அந்தப் புதிய சபைக்குப் போய் அங்குள்ள சகோதரர்களைப் பலப்படுத்தும் பொறுப்பை தீமோத்தேயுவிடம் பவுல் ஒப்படைத்தார். தீமோத்தேயுமீது அந்தளவு நம்பிக்கை இருந்ததால் அப்படிச் செய்தார். (அப். 17:5-15; 1 தெ. 3:1, 2, 6) அந்த நியமிப்பைப் பெற்றபோது தீமோத்தேயு எவ்வளவாய் சந்தோஷப்பட்டிருப்பார்!

 மிக முக்கியமான தீர்மானம்

3. வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் தீர்மானங்களிலேயே மிக முக்கியமானது எது, அதை நீங்கள் எப்போது எடுக்க வேண்டும்?

3 இளமைப் பருவமே முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கான தகுந்த சமயம். ஆனால், யெகோவாவைச் சேவிப்பதற்கு நீங்கள் எடுக்கும் தீர்மானம்தான் அவையெல்லாவற்றிலும் மிக மிக முக்கியமானது. இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கான சிறந்த சமயம் எது? “உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என்று யெகோவா சொல்கிறார். (பிர. 12:1) யெகோவாவை ‘நினைப்பதற்கு’ ஒரே வழி, அவரை முழுமையாகச் சேவிப்பதுதான். (உபா. 10:12) ஆம், முழு இருதயத்தோடு அவரைச் சேவிப்பதற்கு நீங்கள் எடுக்கும் தீர்மானமே மிக முக்கியமான தீர்மானம். அது உங்கள் எதிர்கால வாழ்க்கையைச் செதுக்கி சீராக்கும்.—சங். 71:5.

4. முக்கியமான என்ன தீர்மானங்கள் யெகோவாவுக்கு நீங்கள் செய்யும் சேவையைப் பாதிக்கும்?

4 யெகோவாவைச் சேவிப்பதற்கு நீங்கள் எடுக்கும் தீர்மானத்தோடு மற்ற தீர்மானங்களும் உங்கள் எதிர்காலத்தைப் பாதிக்கும். உதாரணமாக, திருமணம் செய்வதா, யாரைத் திருமணம் செய்வது, என்ன வேலையைத் தேர்ந்தெடுப்பது போன்ற விஷயங்களில் தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கலாம். அவை முக்கியமான தீர்மானங்கள்தான், ஆனாலும், முதலில் யெகோவாவுக்கு முழுமையாய்ச் சேவை செய்வது பற்றி தீர்மானம் எடுப்பதே ஞானமானது. (உபா. 30:19, 20) ஏனென்றால், நீங்கள் எடுக்கும் தீர்மானங்களெல்லாம் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருக்கிறது. திருமணம், வேலை சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் யெகோவாவுக்குச் செய்யும் சேவையைப் பாதிக்கும். (லூக்கா 14:16-20-ஐ ஒப்பிடுங்கள்.) அதேபோல், யெகோவாவைச் சேவிக்க வேண்டுமென்ற ஆசையும் திருமணம், வேலை சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் தீர்மானங்களைப் பாதிக்கும். ஆகவே, உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானது எது என்பதை முதலில் தீர்மானியுங்கள்.—பிலி. 1:10.

இளமைக் காலத்தில் என்ன செய்வீர்கள்?

5, 6. சரியான தீர்மானங்கள் எடுப்பதால் கிடைக்கும் சிறந்த அனுபவங்களைப் பற்றி உதாரணத்துடன் விளக்குங்கள். (இந்த இதழிலுள்ள, “சிறு வயதில் நான் எடுத்த தீர்மானம்” என்ற கட்டுரையையும் பாருங்கள்.)

5 கடவுளுக்குச் சேவை செய்ய நீங்கள் தீர்மானித்த பிறகு, அவர் உங்களிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்; அப்போது அவரை எப்படிச் சேவிக்கலாமென தீர்மானிக்க முடியும். ஜப்பானிலுள்ள ஒரு சகோதரர் இப்படி எழுதுகிறார்: “14 வயதில் ஒரு மூப்பருடன் ஊழியத்திற்குப் போனபோது, நான் ஏனோதானோ என்று ஊழியம் செய்வதை அவர் கவனித்தார். அவர் என்னிடம் கனிவோடு, ‘யூயிச்சிரோ, நீ வீட்டுக்குப் போய், உனக்காக யெகோவா என்னெல்லாம் செய்திருக்காருனு நல்லா யோசிச்சுப்பாரு’ என்றார். அவர் சொன்னபடியே செய்தேன். அதைப் பற்றி சில நாட்களுக்கு யோசித்துப் பார்த்ததோடு, ஜெபமும் செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய மனப்பான்மை மாறியது. பிறகு, சந்தோஷமாக ஊழியத்தில் ஈடுபட்டேன். மிஷனரிகளுடைய அனுபவங்களை ஆர்வமாக படித்தபோது, இன்னும் அதிகமாக சேவை செய்வதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.”

6 யூயிச்சிரோ தொடர்கிறார்: “வெளிநாட்டில் சேவை செய்வதற்கு உதவும் சில தீர்மானங்களை எடுக்க ஆரம்பித்தேன். அதற்காக, ஆங்கில பாடத்தைத் தேர்ந்தெடுத்து படித்தேன். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, பயனியர் ஊழியத்திற்கு உதவியாக ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் பகுதிநேர வேலையைத் தேர்ந்தெடுத்தேன். 20 வயதில், மங்கோலியன் மொழியைப் படிக்க ஆரம்பித்தேன்; அதோடு மங்கோலியன் மொழித் தொகுதியைச் சந்திப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, 2007-ல், மங்கோலியாவுக்குப் போனேன். அங்கு சில பயனியர்களோடு ஊழியம் செய்தபோது நிறையப் பேர் சத்தியத்தில் ஆர்வம் காட்டியதால், அங்கேயே குடிமாற விரும்பினேன். ஜப்பானுக்குத் திரும்பி வந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். ஏப்ரல் 2008 முதற்கொண்டு, மங்கோலியாவில் பயனியர் ஊழியம் செய்து வருகிறேன். இங்கு வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை. ஆனாலும், மக்கள் ஆர்வம் காட்டுவதால், அவர்கள் யெகோவாவிடம் நெருங்கி வர உதவுகிறேன். மிகச் சிறந்த தீர்மானம்தான் எடுத்திருக்கிறேன் என்பதை என்னால் இப்போது உணர முடிகிறது.”

7. நாம் என்ன தீர்மானங்களை எடுக்க வேண்டும், மோசே என்ன முன்மாதிரி வைத்தார்?

7 யெகோவாவின் சாட்சிகளான நாம் ஒவ்வொருவருமே அவரை எப்படிச் சேவிப்பதென தீர்மானம் எடுப்பது அவசியம். (யோசு. 24:15) நீங்கள் திருமணம் செய்யலாமா, யாரைத் திருமணம் செய்யலாம், எப்படிப்பட்ட வேலையைச் செய்யலாம் என்றெல்லாம் எங்களால் சொல்ல முடியாது. வேலை சம்பந்தப்பட்டதில், அதிகமான பயிற்சி எதுவும் தேவைப்படாத வேலையைத் தேர்ந்தெடுக்கலாம், அல்லவா? இளம் கிறிஸ்தவர்களான உங்களில் சிலர் வசதிவாய்ப்புகள் இல்லாத கிராமங்களில் வாழ்கிறீர்கள், இன்னும் சிலர் வளமான நகரங்களில் வாழ்கிறீர்கள். சுபாவத்தில், திறமையில், அனுபவத்தில், விருப்பங்களில்,  விசுவாசத்தில் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகிறீர்கள். ஒருவேளை பூர்வ எகிப்திலிருந்த எபிரெய இளைஞர்களிலிருந்து இளம் மோசே வித்தியாசப்பட்டிருந்தது போலவே நீங்களும் மற்றவர்களிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கலாம். இளம் மோசே அரச மாளிகையில் சகல வசதிவாய்ப்புகளோடு வளர்ந்தார். ஆனால், மற்ற எபிரெயர்களோ அடிமைகளாக இருந்தார்கள். (யாத். 1:13, 14; அப். 7:21, 22) உங்களைப் போலவே அவர்களும் முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்தார்கள். (யாத். 19:4-6) வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அவர்கள் ஒவ்வொருவரும் தீர்மானிக்க வேண்டியிருந்தது. மோசே சரியான தீர்மானம் எடுத்தார்.எபிரெயர் 11:24-27-ஐ வாசியுங்கள்.

8. தீர்மானங்கள் எடுப்பது பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு என்ன உதவி இருக்கிறது?

8 இளமையில் ஞானமான தீர்மானங்களை எடுக்க யெகோவா உங்களுக்கு உதவுகிறார். எப்படி? பைபிள் நியமங்கள் மூலம் உங்களுடைய சூழ்நிலைகளுக்கு ஏற்ற ஆலோசனைகளை வழங்குகிறார். (சங். 32:8) இந்த நியமங்களைப் பின்பற்றுவதற்கு சத்தியத்திலுள்ள உங்கள் பெற்றோரும் சபை மூப்பர்களும் உதவலாம். (நீதி. 1:8, 9) இளம் பருவத்திலேயே ஞானமான தீர்மானங்கள் எடுப்பதற்கு உதவும் மூன்று பைபிள் நியமங்களை இப்போது பார்க்கலாம்.

முத்தான மூன்று நியமங்கள்

9. (அ) தீர்மானம் எடுக்கும் சுதந்திரத்தைத் தந்து யெகோவா நம்மை எப்படி கௌரவித்திருக்கிறார்? (ஆ) ‘முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தை நாடும்போது’ என்ன வாய்ப்புகள் கிடைக்கும்?

9 முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடுங்கள். (மத்தேயு 6:19-21, 24-26, 31-34-ஐ வாசியுங்கள்.) தீர்மானம் எடுப்பதற்கான சுதந்திரத்தைத் தந்து யெகோவா உங்களைக் கௌரவித்திருக்கிறார். உங்களுடைய இளமைக் காலத்தை முழுக்க முழுக்க ஊழியத்திலேயே செலவிட வேண்டுமென அவர் சொல்வதில்லை. ஆனாலும், முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தை நாடுவதன் முக்கியத்துவத்தை இயேசு கற்றுக்கொடுத்தார். அதை முதலில் நாடும்போது, யெகோவாமீதும் மற்றவர்கள்மீதும் உள்ள அன்பை வெளிக்காட்டவும் முடிவில்லா வாழ்வு எனும் நம்பிக்கைக்கான நன்றியை வெளிக்காட்டவும் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம், வேலை சம்பந்தமாக தீர்மானம் எடுக்கையில் உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய தீர்மானம் முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடுவதை’ காட்டுகிறதா அல்லது பொருளாதாரத் தேவைகளைப் பற்றி கவலைப்படுவதைக் காட்டுகிறதா?

10. இயேசுவுக்கு எது சந்தோஷத்தை அளித்தது, எப்படிப்பட்ட தீர்மானங்கள் உங்களுக்குச் சந்தோஷத்தை அளிக்கும்?

10 மற்றவர்களுக்கு உதவுவதில் சந்தோஷம் காணுங்கள். (அப்போஸ்தலர் 20:20, 21, 24, 35-ஐ வாசியுங்கள்.) வாழ்க்கைக்கு அடிப்படையான இந்த நியமத்தை இயேசு கற்பித்தார். அவர் தம்முடைய சித்தத்தைச் செய்வதற்குப் பதிலாக, தம் தகப்பனின் சித்தத்தைச் செய்ததால் சந்தோஷமானவராக இருந்தார். தாழ்மையுள்ளம் படைத்த மக்கள் நற்செய்திக்கு செவிசாய்ப்பதைப் பார்த்து அவர் மனமகிழ்ந்தார். (லூக். 10:21; யோவா. 4:34) மற்றவர்களுக்கு உதவுவதில் கிடைக்கும் சந்தோஷத்தை நீங்களும் ருசித்திருப்பீர்கள். ஆகவே, இயேசு கற்பித்த நியமங்களின் அடிப்படையில் தீர்மானம் எடுங்கள். இது உங்களுக்கு சந்தோஷத்தை அளிப்பதோடு யெகோவாவின் மனதையும் குளிர்விக்கும்.—நீதி. 27:11.

11. பாருக் ஏன் சந்தோஷத்தை இழந்தார், அவருக்கு யெகோவா என்ன ஆலோசனை கொடுத்தார்?

11 யெகோவாவுக்குச் சேவை செய்வதே நமக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கும். (நீதி. 16:20) எரேமியாவின் செயலரான பாருக் இதை உணரத் தவறினார். ஒருசமயம், யெகோவாவின் சேவையில் அவருடைய சந்தோஷம் குறைந்தபோது, யெகோவா அவரிடம், “நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே; இதோ, மாம்சமான யாவர்மேலும் தீங்கை வரப்பண்ணுகிறேன் . . . ஆனாலும், நீ போகும் சகல ஸ்தலங்களிலும் உன் பிராணனை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப்பொருளாகத் தருகிறேன்” என்றார். (எரே. 45:3, 5) நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பாருக்கிற்கு எது சந்தோஷத்தை அளித்திருக்கும்—பெரிய காரியங்களைத் தேடுவதா, அல்லது கடவுளுடைய உண்மை ஊழியனாக எருசலேமின் அழிவிலிருந்து தப்பிப்பிழைப்பதா?—யாக். 1:12.

12. வாழ்க்கையில் சந்தோஷம் காண என்ன தீர்மானம் ரமீரோவுக்குக் கைகொடுத்தது?

12 மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் மகிழ்ச்சி கண்டவர்தான் சகோதரர் ரமீரோ. அவர் சொல்கிறார்: “ஆண்டிஸ் மலைத்தொடர் அருகே ஒரு கிராமத்திலுள்ள ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். என்னுடைய காலேஜ் படிப்பிற்கு பண உதவி செய்வதாக என் அண்ணன் சொன்னபோது அதை ஒரு பெரிய வாய்ப்பாக நினைத்தேன். அதே சமயம்,  சமீபத்தில் ஞானஸ்நானம் எடுத்திருந்த எனக்கு, ஒரு பயனியர் சகோதரரோடு சேர்ந்து ஒரு சிறிய டவுனில் ஊழியம் செய்யும் இன்னொரு வாய்ப்பும் இருந்தது. அங்கு போன பிறகு, முடிவெட்டும் வேலையைக் கற்றுக்கொண்டேன்; என் தேவைகளைக் கவனித்துக்கொள்ள பார்பர்ஷாப்பை ஆரம்பித்தேன். நாங்கள் பைபிளிலிருந்து ஆட்களுக்கு கற்றுக்கொடுப்பதாக சொன்னபோது நிறையப் பேர் அதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள். சமீபத்தில், உள்ளூர் மொழியில் ஒரு சபை உருவானபோது அங்கு செல்ல ஆரம்பித்தேன். இப்போது, பத்து வருடங்களாக முழுநேர ஊழியம் செய்துவருகிறேன். நற்செய்தியை மக்களுடைய தாய்மொழியிலேயே சொல்லிக்கொடுக்கும்போது, எந்தவொரு வேலையிலும் கிடைக்காத சந்தோஷத்தை அனுபவிக்கிறேன்.”

இளமையிலிருந்தே யெகோவாவின் சேவையில் ரமீரோ மகிழ்ச்சி காண்கிறார் (பாரா 12)

13. முழு இருதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்ய இளமைக் காலமே சிறந்த சமயம் என்று ஏன் சொல்லலாம்?

13 இளமையில் யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள். (பிரசங்கி 12:1-ஐ வாசியுங்கள்.) முதலில் நல்ல வேலை கிடைத்தால்தான் பிற்பாடு யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியும் என்று நினைக்க வேண்டியதில்லை. முழு இருதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்ய இளமைக் காலமே சிறந்த சமயம். அநேக இளைஞர்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அவ்வளவாக இருக்காது; அதுமட்டுமல்ல, கஷ்டமான நியமிப்புகளைச் செய்வதற்கு ஏற்ற ஆரோக்கியமும் பலமும் அவர்களுக்கு இருக்கும். இளைஞர்களே, உங்களுடைய இளமைக் காலத்தில் யெகோவாவுக்காக என்ன செய்ய விரும்புகிறீர்கள்? ஒருவேளை, பயனியர் ஊழியம் செய்வது, வேற்று மொழி பிராந்தியத்தில் சேவை செய்வது, அல்லது உங்களுடைய சபையிலேயே இன்னும் நிறைய பொறுப்புகளைப் பார்த்துக்கொள்வது உங்கள் இலக்காக இருக்கலாம். உங்களுடைய இலக்கு எதுவாக இருந்தாலும், அடிப்படைத் தேவைகளுக்காக உழைப்பது அவசியம். அப்படியானால், உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: என்ன வேலையைத் தேர்ந்தெடுப்பது? அதற்கு எந்தளவு பயிற்சி தேவைப்படும்?

பைபிள் நியமங்களைப் பயன்படுத்தி ஞானமாகத் தீர்மானம் எடுங்கள்

14. வேலை தேடும் விஷயத்தில் எதைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?

14 நாம் இப்போது கவனித்த மூன்று பைபிள் நியமங்கள் உங்களுக்கு ஏற்ற ஒரு வேலையைத்  தேர்ந்தெடுக்க உதவும். உங்களுடைய பள்ளி ஆலோசகர்கள், உள்ளூரிலுள்ள வேலை வாய்ப்புகளைப் பற்றி ஆலோசனை வழங்கலாம். அல்லது நீங்கள் ஆசைப்படும் வேலை எங்கே கிடைக்கும் என்பதைப் பற்றி அரசாங்க வேலைவாய்ப்பு நிறுவனங்கள் உங்களுக்குச் சொல்லலாம். இதுபோன்ற ஆலோசனைகள் உங்களுக்கு உதவினாலும், நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால், யெகோவாவை நேசிக்காத இந்த மக்கள் உலகத்தின் ஆசையை உங்கள் இருதயத்தில் விதைத்து விடலாம். (1 யோ. 2:15-17) இந்த உலகத்தின் கவர்ச்சி நம்மைச் சுண்டி இழுக்க அனுமதித்தால், நம் இருதயம் நம்மை தவறாக வழிநடத்திவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.நீதிமொழிகள் 14:15-ஐ வாசியுங்கள்; எரே. 17:9.

15, 16. வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் யார் உங்களுக்கு சிறந்த ஆலோசனை அளிக்க முடியும்?

15 வேலை வாய்ப்புகளைப் பற்றி அறிந்தவுடன் ஆலோசனையை நாடுங்கள். (நீதி. 1:5) பைபிள் நியமங்களின் அடிப்படையில் தீர்மானம் எடுக்க யாரிடம் உதவி கேட்கலாம்? யெகோவாவையும் உங்களையும் நேசிப்பவர்களிடம்... உங்களையும் உங்களுடைய சூழ்நிலையையும் நன்கு அறிந்தவர்களிடம்... ஆலோசனை கேளுங்கள். உங்களுடைய திறமைகளையும் உள்ளெண்ணங்களையும் ஆராய்ந்து பார்க்கவும் உங்களுடைய இலக்குகளை மறுபடியும் சீர்தூக்கிப் பார்க்கவும் அவர்களுடைய ஆலோசனைகள் உதவலாம். யெகோவாவை நேசிக்கும் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் உங்களுக்கு பேருதவியாக இருப்பார்கள். அனுபவமுள்ள சபை மூப்பர்களும் நல்ல ஆலோசனைகளை வழங்கலாம். அதோடு, பயனியர்களிடமும் வட்டாரக் கண்காணிகளிடமும் இதைப் பற்றி பேசுங்கள். முழுநேர சேவையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? அதைச் செய்ய எது அவர்களைத் தூண்டியது, அவர்களுடைய தேவைகளை எப்படிக் கவனித்துக்கொண்டார்கள்? ஊழியத்தில் என்ன ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறார்கள்? என்று கேளுங்கள்.—நீதி. 15:22.

16 உங்களைப் பற்றி உண்மையிலேயே நன்கு அறிந்தவர்களால்தான் உங்களுக்குச் சரியான ஆலோசனைகளைக் கொடுக்க முடியும். உதாரணத்திற்கு, பள்ளிப் படிப்பு கஷ்டமாக இருப்பதால் படிப்பை நிறுத்திவிட்டு பயனியர் ஊழியம் செய்யத் தீர்மானிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களை நேசிக்கும் ஒருவரால்தான், நீங்கள் ஏன் பயனியர் ஊழியம் செய்யத் தீர்மானித்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பள்ளிப் படிப்பு விடா முயற்சியைக் கற்றுத்தரும் என்பதைப் புரிந்துகொள்ள அவர் உங்களுக்கு உதவுவார். இந்தப் பண்பு யெகோவாவுக்கு முழுமையாக சேவை செய்ய மிகவும் அவசியம்.—சங். 141:5; நீதி. 6:6-10.

17. எப்படிப்பட்ட தீர்மானங்கள் எடுப்பதை நாம் தவிர்க்க வேண்டும்?

17 யெகோவாவை விட்டு நம்மைத் தூர விலக்கும் ஆபத்துகளை நாம் ஒவ்வொருவரும் எதிர்ப்படுகிறோம். (1 கொ. 15:33; கொலோ. 2:8) மற்றெந்த ஆபத்தையும்விட, நாம் தேர்ந்தெடுக்கும் சில வேலைகளால் வரும் ஆபத்துகள் நம்முடைய விசுவாசத்திற்கு உலை வைக்கலாம். ஒரு குறிப்பிட்ட வேலையைத் தேர்ந்தெடுத்ததால், சிலர் ‘தங்களுடைய விசுவாசம் எனும் கப்பலை மூழ்கடித்திருக்கிறார்கள்.’ (1 தீ. 1:19) ஆகவே, யெகோவாவோடுள்ள உங்கள் பந்தத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு வேலையையும் தேர்ந்தெடுக்காமல் இருப்பதே ஞானமானது.—நீதி. 22:3.

இளம் கிறிஸ்தவராக வாழ்க்கையை அனுபவித்து மகிழுங்கள்!

18, 19. யெகோவாவைச் சேவிக்க உங்களுக்கு அந்தளவு விருப்பமில்லை என்றால் என்ன செய்யலாம்?

18 யெகோவாவுக்குச் சேவை செய்ய நீங்கள் உள்ளப்பூர்வமாக விரும்பினால், அவர் தரும் எல்லா நல்வாய்ப்புகளையும் இந்த இளம் வயதிலேயே நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆம், சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்ய உதவும் தீர்மானங்களை துடிப்புமிக்க இந்த இளமைக் காலத்திலேயே எடுங்கள்.—சங். 148:12, 13.

19 மறுபட்சத்தில், யெகோவாவைச் சேவிக்க உங்களுக்கு அந்தளவு விருப்பமில்லை என்றால் என்ன செய்யலாம்? உங்களுடைய விசுவாசத்தைத் தொடர்ந்து பலப்படுத்துங்கள். யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற தான் என்ன செய்தார் என்பதை விளக்கிய பின் பவுல் இப்படிச் சொன்னார்: “எதிலாவது உங்களுக்கு மாறுபட்ட சிந்தை இருந்தால், சரியான சிந்தை எதுவென்று கடவுள் உங்களுக்கு வெளிப்படுத்துவார். முன்னேற்றப் பாதையில் நாம் எதுவரை சென்றிருந்தாலும் சரி, அதே பாதையில் தொடர்ந்து சீராக நடப்போமாக.” (பிலி. 3:15, 16) யெகோவா உங்களை நேசிக்கிறார் என்பதை மனதில் பதியுங்கள். அவருடைய ஆலோசனையே மிகச் சிறந்தது. உங்கள் இளமையில் ஞானமான தீர்மானங்கள் எடுப்பதற்கு, யெகோவாவால் சிறந்த விதத்தில் உதவ முடியும்.