Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தீங்குநாட்கள் வரும்முன் யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்!

தீங்குநாட்கள் வரும்முன் யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்!

“உன் [“மகத்தான,” NW] சிருஷ்டிகரை நினை.”—பிர. 12:1.

1, 2. (அ) இளைஞர்களுக்கு என்ன அறிவுரையை எழுத சாலொமோன் தூண்டப்பட்டார்? (ஆ) ஐம்பது அல்லது அறுபது வயதைக் கடந்த கிறிஸ்தவர்களுக்கும் இந்த அறிவுரை ஏன் பொருந்துகிறது?

கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்ட சாலொமோன் ராஜா, இளைஞர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “தீங்குநாட்கள் வராததற்குமுன்,” “உன் வாலிபப்பிராயத்திலே உன் [“மகத்தான,” NW] சிருஷ்டிகரை நினை.” “தீங்குநாட்கள்” என்று அவர் எதைப் பற்றிச் சொன்னார்? தளர்ந்த கைகள், தள்ளாடும் கால்கள், பற்களற்ற வாய், மங்கிய கண்கள், மந்தமான செவிகள், நரைத்த முடி, கூன் விழுந்த உடல் என முதுமையால் வரும் சில கஷ்டங்களைப் பற்றித்தான் அவர் கவிதை நடையில் குறிப்பிட்டார். இப்படியிருக்க, இளமையிலேயே சிருஷ்டிகரை நினைக்கும்படி சாலொமோன் சொன்னதில் வியப்பேதுமில்லை!—பிரசங்கி 12:1-5-ஐ வாசியுங்கள்.

2 ஐம்பது அல்லது அறுபது வயதைக் கடந்த கிறிஸ்தவர்கள் பலர் இன்னும் துடிப்போடு இருக்கிறார்கள். ஒருவேளை அவர்களுடைய தலைமுடி கொஞ்சம் நரைத்திருந்தாலும், சாலொமோன் குறிப்பிடுகிற அளவுக்கு உடல் உபாதைகள் இல்லாதிருக்கலாம். “உன் மகத்தான சிருஷ்டிகரை நினை” என்று இளைஞர்களுக்கு சாலொமோன் கொடுத்த அறிவுரையிலிருந்து அனுபவமிக்க இந்த கிறிஸ்தவர்கள் பயன்பெற முடியுமா? இந்த அறிவுரை எதை அர்த்தப்படுத்துகிறது?

3. நம்முடைய மகத்தான சிருஷ்டிகரை எவ்விதங்களில் நினைத்துப் பார்க்கலாம்?

 3 பல வருடங்களாக நாம் யெகோவாவுக்குச் சேவை செய்து வந்திருந்தாலும், நம்முடைய சிருஷ்டிகர் எவ்வளவு மகத்தானவர் என்பதை அவ்வப்போது சிந்தித்துப் பார்ப்பது நல்லது. உயிர் படைக்கப்பட்டிருக்கும் விதம் நம்மை மலைக்க வைக்கிறது, அல்லவா? அதன் சிக்கலான அமைப்பு நம்முடைய அறிவுக் கண்களுக்குப் புலப்படாதது. வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதற்கு யெகோவா அளித்திருப்பவை ஏராளம், ஏராளம்! யெகோவாவின் படைப்பைப் பற்றி சிந்திக்க சிந்திக்க அவருடைய அன்பு, ஞானம், வல்லமை ஆகியவற்றின் மீதுள்ள நம் நன்றியுணர்வு அதிகரிக்கும். (சங். 143:5) அதுமட்டுமல்ல, நம்முடைய மகத்தான சிருஷ்டிகரைப் பற்றி நினைக்கும்போது, நாம் அவருக்கு என்னவெல்லாம் செய்ய கடமைப்பட்டிருக்கிறோம் என்பதையும் சிந்தித்துப் பார்ப்போம். அப்போது, உயிருள்ளவரை முடிந்தளவு முழுமையாக சேவை செய்வதன் மூலம் அவருக்கு நன்றிக்கடனைச் செலுத்தத் தூண்டப்படுவோம்.—பிர. 12:13.

அனுபவம் தரும் விசேஷ வாய்ப்புகள்

4. அனுபவமுள்ள கிறிஸ்தவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி என்ன, ஏன்?

4 நீங்கள் பல வருட அனுபவம் பெற்றவரா? அப்படியென்றால், இந்த முக்கியமான கேள்வியை உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எனக்கிருக்கும் ஓரளவு பலத்தையும் தெம்பையும் வைத்து இப்போது நான் என்ன செய்யலாம்?’ மற்றவர்களுக்குத் திறக்காத வாய்ப்பெனும் கதவு, அனுபவமிக்க கிறிஸ்தவரான உங்களுக்குத் திறக்கலாம். யெகோவாவிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை இளைய தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுக்கலாம். அவருடைய சேவையில் பெற்ற சுவாரஸ்யமான அனுபவங்களைச் சொல்லி மற்றவர்களைப் பலப்படுத்தலாம். இது போன்ற வாய்ப்புகளுக்காக தாவீது ராஜா இவ்வாறு ஜெபித்தார்: “தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர் . . . இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.”—சங். 71:17, 18.

5. அனுபவமுள்ள கிறிஸ்தவர்கள் தாங்கள் கற்றுக்கொண்டவற்றை எப்படி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்?

5 பல வருட அனுபவத்தில் பெற்ற ஞானத்தை நீங்கள் எப்படி மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம்? இளம் சகோதர சகோதரிகள் உற்சாகமூட்டும் தோழமையை அனுபவிப்பதற்காக அவர்களை உங்கள் வீட்டுக்கு அழைக்கலாம். அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்வதன் மூலம் யெகோவாவின் சேவையில் நீங்கள் அனுபவிக்கும் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். பூர்வ காலத்தில் வாழ்ந்த எலிகூ, “முதியோர் பேசட்டும், வயதுசென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும்” என்று எழுதினார். (யோபு 32:7) அனுபவம் வாய்ந்த கிறிஸ்தவ சகோதரிகள், சொல்லாலும் செயலாலும் மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென அப்போஸ்தலன் பவுல் அறிவுறுத்தினார். ‘முதிர்வயதான பெண்கள் . . . நல்லதைக் கற்பிக்கிறவர்களாக இருக்க வேண்டும்’ என்று அவர் எழுதினார்.—தீத். 2:3.

உங்களுடைய திறமையைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு உதவுங்கள்

6. பல வருட அனுபவம் பெற்ற கிறிஸ்தவர்கள் ஏன் தங்கள் திறமைகளை குறைத்து மதிப்பிடக்கூடாது?

6 நீங்கள் அனுபவமுள்ள கிறிஸ்தவராக இருந்தால், உங்களுக்கு அபார திறமைகள் இருப்பதை மறந்து விடாதீர்கள். 30 அல்லது 40 வருடங்களுக்குமுன் தெரிந்திராத விஷயங்களை இப்போது தெரிந்து வைத்திருக்கிறீர்கள். வாழ்க்கையில் பைபிள் நியமங்களைப் பொருத்துவது இப்போது உங்களுக்கு கைவந்த கலையாகியிருக்கும். பைபிள் சத்தியங்களைக் கொண்டு மற்றவர்களுடைய மனதைத் தொடுவதில் கைதேர்ந்த ஆளாகியிருப்பீர்கள். நீங்கள் ஒரு மூப்பராக இருந்தால், தவறு செய்பவருக்கு எப்படி உதவிக்கரம் நீட்டுவதென அறிந்திருப்பீர்கள். (கலா. 6:1) சபைக் காரியங்களை, மாநாட்டு இலாகாக்களை, ராஜ்ய மன்ற கட்டுமானப் பணியை எப்படிக் கண்காணிப்பதென கற்றிருப்பீர்கள். இரத்தமில்லா சிகிச்சையைப் பற்றி மருத்துவர்களிடம் திறமையாகப் பேசுவது எப்படி என அறிந்திருப்பீர்கள். ஒருவேளை நீங்கள் சமீபத்தில் ஞானஸ்நானம் பெற்றவராக இருந்தால் என்ன செய்வது? உங்களிடமும் மதிப்புமிக்க ஒன்று இருக்கிறது; வாழ்க்கையில் பெற்ற அனுபவமே அது. உதாரணத்திற்கு, நீங்கள் பெற்றோராக இருந்தால் குழந்தைகளை வளர்ப்பதில் நடைமுறையான ஞானத்தைச் சம்பாதித்திருப்பீர்கள். சத்தியத்தில் பல வருட அனுபவமுள்ளவராக இருந்தால், யெகோவாவின் மக்களுக்குப் போதிப்பதில், அவர்களை வழிநடத்துவதில், சகோதர சகோதரிகளைப் பலப்படுத்துவதில் அபார திறமை பெற்றிருப்பீர்கள்.—யோபு 12:12-ஐ வாசியுங்கள்.

7. அனுபவமுள்ள கிறிஸ்தவர்கள், இளையோருக்கு எவ்விதங்களில் பயிற்சி அளிக்கலாம்?

 7 உங்கள் திறமைகளை இன்னும் முழுமையாக எப்படிப் பயன்படுத்தலாம்? பைபிள் படிப்பை ஆரம்பிக்கவும், தொடர்ந்து நடத்தவும் இளையோருக்குக் கற்பிக்கலாம். சகோதரிகளாக இருந்தால், சிறு பிள்ளைகளைக் கவனித்துக்கொண்டே ஆன்மீகக் காரியங்களைத் தவறவிடாதிருப்பது பற்றி இளம் தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்கலாம். சகோதரர்களாக இருந்தால், உற்சாகம்பொங்க பேச்சு கொடுக்கவும் திறம்பட ஊழியம் செய்யவும் இளம் சகோதரர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம். அதோடு, முதிர்வயதான சகோதர சகோதரிகளைச் சந்தித்து ஆன்மீக ரீதியில் உற்சாகப்படுத்துவது பற்றி அவர்களுக்குக் கற்றுத்தரலாம். ஒருகாலத்தில் இருந்த தெம்பும் பலமும் உங்களுக்கு இப்போது இல்லாவிட்டாலும், இளையோரைப் பயிற்றுவிக்கும் அருமையான வாய்ப்புகள் இருக்கின்றன. “வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை” என்பதாக பைபிள் சொல்கிறது.—நீதி. 20:29.

தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை

8. வயதான காலத்தில் அப்போஸ்தலன் பவுல் என்ன செய்தார்?

8 வயதான காலத்திலும் கடவுளுடைய சேவையில் அப்போஸ்தலன் பவுல் சுறுசுறுப்பாக இருந்தார். கி.பி. 61-ல் ரோமச் சிறையிலிருந்து விடுதலையானபோது, அவர் ஏற்கெனவே மிஷனரி சேவையில் பல வருடங்கள் கடுமையாக உழைத்திருந்தார்; பல்வேறு கஷ்டங்களை அனுபவித்திருந்தார். அவர் நினைத்திருந்தால் ரோமிலேயே தங்கி ஊழியம் செய்திருக்கலாம். (2 கொ. 11:23-27) அங்கிருந்த சகோதரர்களுக்கும் அது சந்தோஷமாக இருந்திருக்கும். ஆனால், மற்ற நாடுகளில் தேவை அதிகம் இருப்பதை அவர் உணர்ந்தார். அதனால், தீமோத்தேயுவோடும் தீத்துவோடும் சேர்ந்து மிஷனரி ஊழியத்தைத் தொடர்ந்தார்; எபேசுவுக்கும், அங்கிருந்து கிரேத்தா தீவுக்கும் போனார். அதன் பிறகு, ஒருவேளை மக்கெதோனியாவுக்கும் போயிருக்கலாம். (1 தீ. 1:3; தீத். 1:5) ஸ்பெயினுக்குப் போகவும் திட்டமிட்டிருந்தார், ஆனால் அங்கே சென்றாரா என நமக்குத் தெரியாது.—ரோ. 15:24, 28.

9. தேவை அதிகமுள்ள இடத்திற்கு பேதுரு சென்றபோது அவருக்கு எத்தனை வயது இருந்திருக்கும்? (கட்டுரையின் முதல் படத்தைப் பாருங்கள்.)

9 அப்போஸ்தலன் பேதுருவும் தேவை அதிகமுள்ள இடத்திற்குச் சென்றார். அப்போது அவருக்கு 50 வயதுக்குமேல் இருந்திருக்கும். இதை எப்படிச் சொல்கிறோம்? அவர் இயேசுவின் அதே வயதுடையவராக அல்லது சிறிது மூத்தவராக இருந்திருந்தால், கி.பி. 49-ல் எருசலேமில் இருந்த அப்போஸ்தலர்களை அவர் சந்தித்தபோது, அவருக்கு 50 வயதுக்குமேல் இருந்திருக்கும். (அப். 15:7) அதற்குச் சில காலத்திற்குப் பிறகு, பாபிலோனுக்குச் சென்றார். அங்கே அதிகமாகக் குடியிருந்த யூதர்களுக்குப் பிரசங்கிப்பதற்காக அவர் சென்றிருக்க வேண்டும். (கலா. 2:9) கி.பி. 62-ல், கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு முதல் கடிதத்தை எழுதியபோது, அவர் அங்குதான் இருந்தார். (1 பே. 5:13) வயதான காலத்தில் அந்நிய தேசத்தில் வாழ்வது பேதுருவுக்குச் சவாலாக இருந்திருக்கலாம்; ஆனாலும், கடவுளுடைய சேவையில் கிடைக்கும் சந்தோஷத்திற்கு வயது ஒரு தடைக்கல்லாக இருக்க அவர் அனுமதிக்கவில்லை.

10, 11. வயதானபின் தேவை அதிகமுள்ள இடத்திற்குச் சேவை செய்வதற்குச் சென்ற ஒருவரின் அனுபவத்தைச் சொல்லுங்கள்.

10 இன்று, ஐம்பது அல்லது அறுபது வயதைக் கடந்த கிறிஸ்தவர்கள் பலருடைய சூழ்நிலைமைகள் மாறியிருப்பதால், புதுப் புது வழிகளில் அவர்களால் யெகோவாவுக்குச் சேவை செய்ய முடிகிறது. சிலர், தேவை அதிகமுள்ள இடங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, ராபர்ட் என்பவர் இவ்வாறு எழுதுகிறார்: “எனக்கும் என்னுடைய மனைவிக்கும் கிட்டத்தட்ட 55 வயது இருக்கும்போது, யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்ய நிறைய வாய்ப்புகள் இருப்பது பற்றி யோசித்தோம். எங்களுடைய ஒரே மகன் ஏற்கெனவே வேறு இடத்தில் இருந்தார். வயதான பெற்றோர்களும் எங்களுக்கு இல்லை, அதோடு எங்களுக்குக் கொஞ்சம் சொத்தும் இருந்தது. அதை விற்றால், எங்கள் கடனையும் அடைக்க முடியும், பென்ஷன் கிடைக்கும்வரை சமாளிப்பதற்குத் தேவையான பணமும் கையில் இருக்குமென கணக்கிட்டேன். அந்தச் சமயத்தில், பொலிவியா நாட்டில் அநேக பைபிள் படிப்பு கிடைப்பதாகவும், அங்கு வாழ்க்கைச் செலவு குறைவாக இருப்பதாகவும் கேள்விப்பட்டோம். எனவே, அங்கு செல்லத் தீர்மானித்தோம். புது இடம், புதிய வீடு என அந்த வாழ்க்கை எங்களுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. வட அமெரிக்காவில் வாழ்ந்து பழக்கப்பட்ட எங்களுக்கு எல்லாமே புதிதாகத் தெரிந்தது. ஆனால், எங்கள் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது.”

11 மேலும் அவர் இவ்வாறு தொடர்கிறார்: “எங்களுடைய  வாழ்க்கையே இப்போது சபை நடவடிக்கைகளைச் சுற்றித்தான் சுழல்கிறது. நாங்கள் பைபிள் படிப்பு நடத்திய சிலர் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள். ரொம்ப தூரத்தில் வசித்துவந்த ஒரு ஏழ்மையான குடும்பத்தாருக்கும் நாங்கள் படிப்பு நடத்தி வந்தோம். கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக, ஒவ்வொரு வாரமும் அவர்கள் அந்தக் கிராமத்திலிருந்து கஷ்டப்பட்டு பயணம் செய்து டவுனுக்கு வருவார்கள். அந்தக் குடும்பம் முன்னேறி வந்ததையும், மூத்த பையன் பயனியரானதையும் பார்த்தபோது, நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.”

வேற்று மொழி பிராந்தியங்களில் சேவை

12, 13. ஒய்வு பெற்ற பிறகு ப்ரையனும் அவருடைய மனைவியும் என்ன செய்தார்கள்?

12 வேற்று மொழி பேசும் சபைகளும் தொகுதிகளும், வயதான சகோதர சகோதரிகளின் முன்மாதிரியிலிருந்து எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். வேற்று மொழி பேசும் பிராந்தியங்களில் ஊழியம் செய்வதே ஒரு தனி சந்தோஷம்தான். பிரிட்டனைச் சேர்ந்த ப்ரையன் இவ்வாறு எழுதுகிறார்: “வேலையிலிருந்து ஓய்வு பெறும் வயதை, அதாவது 65 வயதை அடைந்தபோது எனக்கும் என் மனைவிக்கும் வாழ்க்கை மந்தகதியானது. பிள்ளைகளும் எங்களோடு இல்லை, பைபிள் படிப்புகள் கிடைப்பதும் அரிதாக இருந்தது. பின்னர், எங்கள் ஊரில் இருந்த பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து வந்த ஒரு சீன இளைஞரைச் சந்தித்தேன். கூட்டங்களுக்கு வர அவர் சம்மதித்ததோடு பைபிள் படிப்புக்கும் ஒத்துக்கொண்டார். சில வாரங்களுக்குப்பின், அவரோடு சேர்ந்து ஆய்வு செய்யும் ஒருவரை அழைத்து வந்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, வேறொருவரையும், பின்பு இன்னொருவரையும் அழைத்து வந்தார்.

13 “ஐந்தாவதாக இன்னொரு ஆய்வாளர் பைபிள் படிப்பு நடத்துமாறு என்னிடம் கேட்டபோது, ‘65 வயசு ஆயிடுச்சுங்கறதுக்காக யெகோவாவோட சேவையில் இருந்து ஒய்வு பெறணும்னு அவசியமில்ல’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அதனால், என்னைவிட இரண்டு வயது இளையவளான என் மனைவியிடம் சீன மொழியைக் கற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்டேன். ஒரு கேசட்டின் மூலம் அதைக் கற்றுக்கொண்டோம். இது நடந்து பத்து வருடங்களாகி விட்டது. வேற்று மொழி பேசும் பிராந்தியங்களில் சேவை செய்தபோது, எங்களுக்கு இளமை திரும்பிவிட்டதுபோல் உணர்ந்தோம். இதுவரையில், 112 சீனர்களுக்கு நாங்கள் பைபிள் படிப்பு நடத்தியிருக்கிறோம்! அவர்களில் பெரும்பாலோர் கூட்டங்களுக்கு வந்திருக்கிறார்கள். ஒருவர், எங்களோடு பயனியராகச் சேவை செய்கிறார்.”

 இயன்றதைச் செய்வதில் இன்பம் காணுங்கள்

14. வயதான கிறிஸ்தவர்கள் எதைக் குறித்துச் சந்தோஷப்படலாம், பவுலின் முன்மாதிரியால் அவர்கள் எப்படி உற்சாகமடையலாம்?

14 ஐம்பது வயதைக் கடந்த கிறிஸ்தவர்கள் அநேகருக்கு யெகோவாவின் சேவையில் ஈடுபடுவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும், அந்த வயதிலிருக்கும் அனைவருக்கும் அப்படிக் கிடைப்பதில்லை. ஒருவேளை, உங்களில் சிலருக்கு உடல்நலக் குறைவு இருக்கலாம். மற்றவர்களுக்கு வயதான பெற்றோர்களை அல்லது தங்களை நம்பியிருக்கும் பிள்ளைகளை கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். இவற்றின் மத்தியிலும் நீங்கள் செய்யும் சேவையை யெகோவா உயர்வாக மதிக்கிறார் என்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள். செய்ய முடியாததை நினைத்து இடிந்துபோவதைவிட உங்களால் முடிந்ததைச் சந்தோஷமாகச் செய்யுங்கள். அப்போஸ்தலன் பவுலின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். மிஷனரி பயணத்தைத் தொடர முடியாமல் பல வருடங்கள் அவர் வீட்டுக்காவலில் இருந்தார். ஆனாலும், அவரைப் பார்க்க வந்த எல்லோரிடமும் வேதவசனங்களை எடுத்துக்கூறி அவர்களுடைய விசுவாசத்தைத் திடப்படுத்தினார்.—அப். 28:16, 30, 31.

15. முதிர்வயதான கிறிஸ்தவர்கள் ஏன் உண்மையிலேயே மதிப்புக்குரியவர்கள்?

15 முதிர்வயதானவர்கள் செய்யும் சேவையையும் யெகோவா மதிக்கிறார். சாலொமோன் சொன்ன தீங்குநாட்கள், அதாவது உடல் நலிவடையும் காலம், ஒரு சாதகமான காலம் இல்லைதான். என்றாலும், முதிர்வயதானவர்கள் தங்களால் இயன்றதைச் செய்யும்போது யெகோவா அதை மெச்சுகிறார். (லூக். 21:2-4) நீண்டகாலமாக யெகோவாவின் சேவையில் விசுவாசத்தோடு நிலைத்திருப்போரின் முன்மாதிரியைச் சபையாரும் பொன்னெனப் போற்றுகிறார்கள்.

16. முதிர்வயதான அன்னாளுக்கு என்ன வாய்ப்புகள் கிடைக்கவில்லை? கடவுளுடைய வழிபாட்டில் அவரால் என்ன செய்ய முடிந்தது?

16 வயதான பின்பும் யெகோவாவுக்கு சேவை செய்துவந்த அன்னாளைப் பற்றி பைபிள் சொல்கிறது. இயேசு பிறந்தபோது, அவர் 84 வயது விதவையாக இருந்தார். இயேசுவின் சீடராவதற்கோ, கடவுளுடைய சக்தியால் ஞானஸ்நானம் பெறுவதற்கோ, பிரசங்க வேலையை மகிழ்ந்து அனுபவிப்பதற்கோ அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும், இயன்றதைச் செய்வதில் அவர் மனமகிழ்ந்தார். “அந்த விதவை ஆலயத்திற்கு வரத் தவறியதே இல்லை . . . இரவும் பகலும் பரிசுத்த சேவை செய்து வந்தார்.” (லூக். 2:36, 37) ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் ஆலய குரு தூபம் காட்டியபோது, ஆலய முற்றத்தில் மற்ற மக்களோடு அன்னாளும் கூடிவந்து அரை மணிநேரமாவது மனதிற்குள் ஜெபம் செய்திருப்பார். குழந்தையாக இருந்த இயேசுவைப் பார்த்தபோது, “எருசலேமின் விடுதலைக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அந்தப் பிள்ளையைப் பற்றிப் பேசினார்.”—லூக். 2:38.

17. யெகோவாவை வழிபட முதிர்வயதான, உடல் நலிவுற்ற கிறிஸ்தவர்களுக்கு சில சபைகள் எப்படி உதவுகின்றன?

17 முதிர்வயதான, உடல் நலிவுற்ற கிறிஸ்தவர்களுக்கு உதவ நாம் தயாராக இருக்கவேண்டும். சிலருக்கு நம்மோடு சேர்ந்து கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்துகொள்ள ஆசை இருந்தாலும் அவர்களால் வர முடிவதில்லை. அதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஃபோன் மூலம் கூட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கேட்க சில சபைகள் ஏற்பாடு செய்கின்றன. சில இடங்களில் இது சாத்தியப்படுவதில்லை. அப்படிக் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாமல் போனாலும், உண்மை வழிபாட்டை அவர்களால் ஆதரிக்க முடியும். உதாரணத்திற்கு, சபையின் வளர்ச்சிக்காக ஜெபம் செய்ய முடியும்.சங்கீதம் 92:13, 15-ஐ வாசியுங்கள்.

18, 19. (அ) மற்றவர்களுக்கு தாங்கள் உற்சாகத்தின் ஊற்றாக இருப்பதை முதிர்வயதான கிறிஸ்தவர்கள் ஏன் உணராமல் இருக்கலாம்? (ஆ) “உன் சிருஷ்டிகரை நினை” என்ற அறிவுரையை யார் பின்பற்றலாம்?

18 முதிர்வயதான கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு எந்தளவு உற்சாகத்தின் ஊற்றாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் ஒருவேளை உணராமல் இருக்கலாம். உதாரணத்திற்கு, பல வருடங்கள் ஆலயத்தில் உண்மையோடு சேவை செய்துவந்த அன்னாள், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தன்னுடைய முன்மாதிரியிலிருந்து மற்றவர்கள் உற்சாகம் பெறுவார்கள் என்பதை நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார். யெகோவாமீது அவர் வைத்திருந்த அன்பு பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் யெகோவாமீது வைத்துள்ள அன்பும் உங்கள் சகோதர சகோதரிகளின் நெஞ்சில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆம், “நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்” என்று பைபிள் சொல்வதில் ஆச்சரியமில்லை.—நீதி. 16:31.

19 யெகோவாவின் சேவையில் எல்லோராலும் ஒரே அளவுக்கு ஈடுபட முடியாது என்பது உண்மைதான். ஆனால், ஓரளவுக்குத் தெம்பும் பலமும் இருப்பவர்கள், “தீங்குநாட்கள் வராததற்குமுன்” “உன் [“மகத்தான,” NW] சிருஷ்டிகரை நினை” என்ற வார்த்தையை இதயம் எனும் ஏட்டில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.—பிர. 12:1.