Skip to content

அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா?

அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா?

அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா?

இருந்தால்-

அக்கிரமத்தை அவர் ஏன் அனுமதித்திருக்கிறார்?

வாழ்க்கை என்றாவது துன்பத்திலிருந்து விடுபட்டதாக இருக்குமா?

டவுள் இருந்தால், இவ்வளவு காலங்களாக மக்களுக்கு இத்தனையனேக பயங்கரமான காரியங்கள் ஏற்படும்படியாக அவர் ஏன் அனுமதிக்கிறார்? நம் பேரில் அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் அக்கிரமமும் துயரமும் தொடர்ந்து இருக்கும்படியாக அவர் ஏன் அனுமதிக்கிறார்?

2 எங்குமுள்ள சிந்திக்கும் ஆட்கள் இக்கேள்விகளைக் கேட்பதுண்டு. அவர்கள் கேட்பதற்கும் நல்ல காரணம் உண்டு. ஏனெனில் பல நூற்றாண்டுகளாக மனித குடும்பம் பயங்கர யுத்தங்கள், உணவு பற்றாக்குறை, ஏழ்மை, குற்றச்செயல், வியாதி ஆகியவற்றினால் அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறது. அநீதியும் ஒடுக்குதலும் அதிக வேதனையை உண்டு பண்ணியிருக்கிறது. அதேவிதமாக வெள்ளங்கள் மற்றும் பூமியதிர்ச்சிகளுங்கூட. தங்களுடைய சொந்த தவறாக இல்லாதபோதிலும் அநேக சமயங்களில் குற்றமற்ற ஆட்கள் கஷ்டப்படுகிறார்கள். நமக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கடவுள் அக்கறையுள்ளவராக இல்லை என்பதை இவை யாவும் நிரூபிக்கின்றனவா? ஒரு மேலான உலகத்திற்கான, இந்த எல்லா தொல்லைகளிலிருந்தும் விடுபட்டு பூமியில் வாழ்க்கையை முற்றிலுமாக அனுபவித்துக் களிக்கக்கூடிய ஓர் உலகத்திற்கான மெய்யான நம்பிக்கை இருக்கிறதா?

3 இப்பேர்ப்பட்ட கேள்விகளுக்கு மெய்யான திருப்தியளிக்கும் விடைகள் தேவை. “நாம் கஷ்டப்பட வேண்டுமென்பது கடவுளுடைய சித்தம்” அல்லது “இவை நம்மால் புரிந்துகொள்ள முடியாத காரியங்கள்” என்று சொல்வது மெய்யானதாகவோ திருப்தியளிப்பதாகவோ இல்லை. மிக அதிசயிக்கத்தக்க விதத்தில் ஒழங்காக அமைந்திருக்கும் இந்த வியப்பூட்டும் சர்வலோகத்தை கடவுள் சிருஷ்டித்தாரென்றால், மனிதர் இவ்வளவு ஒழுங்கற்றவர்களாக ஆகிவிட அவர் அனுமதித்திருப்பதற்கு நிச்சயமாகவே நல்ல காரணம் அவருக்கு இருக்க வேண்டும். மேலுமாக அப்பேர்ப்பட்ட சிருஷ்டிகர் துன்மார்க்கத்தை ஏன் அனுமதிக்கிறார் என்று நமக்குச்சொல்ல, தம்முடைய சொந்த மனித சிருஷ்டிகளில் போதுமான அளவு அக்கறையுள்ளவராக இருக்கமாட்டாரா? அவருக்கு வல்லமை இருந்தால், ஏற்ற காலத்தில் இந்த நிலைமைகளைத் திருத்துவது பொருத்தமாக இருக்குமல்லவா? அன்புள்ள எந்தத் தகப்பனும், தன்னால் கூடுமானால் தன்னுடைய பிள்ளைகளுக்காக அதை நிச்சயமாகவே செய்வான். கட்டாயமாகவே, சர்வ வல்லமையும், எல்லா ஞானமும் உடைய அன்புள்ள சிருஷ்டிகர் தம்முடைய பூமிக்குரிய பிள்ளைகளுக்கு அதைவிட குறைவாக செய்யமாட்டார்.

விடையளிக்க மிகச்சிறந்த நிலையில் இருப்பது யார்

4கடவுள் துன்மார்க்கத்தை அனுமதித்திருப்பதன் சம்பந்தமான கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு மிகச் சிறந்த நிலையில் இருப்பது யார்? உங்கள் பேரில் ஒரு குற்றம் சாட்டப்பட்டால், மற்றவர்கள் அதைப்பற்றி சொல்வதைமட்டுமே ஜனங்கள் கேட்கவேண்டுமென்று நீங்கள் விரும்புவீர்களா? அல்லது அதைப்பற்றி உண்மையில் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு அந்த விஷயத்தை தெளிவாக்க உங்களுக்காக நீங்களே பேச விரும்புவீர்களா? துன்மார்க்கத்தை அனுமதித்திருப்பதாக இன்று கடவுள் தாமே குற்றஞ்சாட்டப்படுகிறார். அதை ஏன் அனுமதித்திருக்கிறார் என்று அவருக்கு நன்றாக தெரிந்திருப்பதனால், அவருக்காக அவரையே பேச விடுவது நியாயமல்லவா? விடைகளுக்காக மனிதரை நோக்கியிருப்பது ஒருபோதும் திருப்தியளிக்காது. ஏனெனில் இவற்றின் பேரில் அவர்கள் பெரும்பாலும் முரண்பாடான எண்ணங்களையுடையவர்களாக இருக்கிறார்கள்.

5 கடவுள் விடைகளை எங்கே அளித்திருக்கிறார்? என்ன நடந்தது, ஏன் அவ்வாறு நடந்தது என்பதை நமக்கு அறிவிக்க தாம் அதிகாரமளித்திருப்பதாக சிருஷ்டிகர் உரிமைபாராட்டும் ஒரே ஒரு மூலம் மட்டுமே இருக்கிறது. அதுதான் பைபிள். அது கூறுவதாவது: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16) இது ஆச்சரியமூட்டுவதாய் இருக்கக்கூடாது, ஏனெனில் இந்த மிக அதிசயிக்கத்தக்க சர்வலோகத்தைக் கடவுள் சிருஷ்டிக்க வல்லவராய் இருந்தால், நிச்சயமாகவே ஒரு புத்தகத்தின் ஆசிரியராகவும் அவர் இருக்கக்கூடும். அற்ப மனிதரே குரல்களையும் எண்ணங்களையும், படங்களையுங்கூட உங்கள் ரேடியோ அல்லது டெலிவிஷனுக்குக் காணக்கூடாத வானலைகள் மூலம் கொண்டுவர முடிகிறது. ஆகையால் சர்வ வல்லமையுள்ள சிருஷ்டிகர் தம்முடைய எண்ணங்களை உண்மையுள்ள மானிட எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும்படி செய்வதும் திருத்தமாக அவர்கள் அவற்றை எழுதி வைக்கும்படி செய்வதும் அவருக்கு மிகப் பெரிய காரியமல்ல. ஆகவேதான் பவுல் அப்போஸ்தலன் திடநம்பிக்கையுடன் பின்வருமாறு கூறமுடிந்தது: “நீங்கள் தேவ வசனத்தை எங்களால் கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டீர்கள். அது மெய்யாகவே தேவ வசனந்தான்.”—1 தெசலோனிக்கேயர் 2:13, NW. a

6ஒருவேளை நீங்கள் பைபிளை ஒருபோதும் ஆராய்ந்திருக்கமாட்டீர்கள். ஆகிலும் இன்று இருக்கும் மிகத் தீர்வான தேதிகளோடுகூடிய சரித்திரப் பதிவை அது கொண்டிருக்கிறது என்பதை அறிய நீங்கள் அக்கறையுள்ளவர்களாக இருப்பீர்கள். உண்மையில், முதல் நூற்றாண்டு சரித்திராசிரியனும் மருத்துவனுமான லூக்கா, நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் முன்னோர்களைப் படிப்படியாக, பெயர் பெயராக முதல் மனிதன் வரையாகவும் நான்காயிரம் ஆண்டுகள் சரித்திரத்தைக் கணிக்கக்கூடியவனாய் இருந்தான். மனிதனின் வாழ்கையின் ஆரம்பம் வரை பைபிள் செல்வதனால், துன்மார்க்கத்திற்குக் காரணம் யார், கடவுள் அதை ஏன் அனுமதித்தார், அது எப்படி திருத்தப்படும் என்பதையெல்லாம் பைபிள் நமக்குச் சொல்லக்கூடும்.

கடவுள் செய்த குற்றமா?

7வேறொருவர் செய்த குற்றத்திற்கு நீங்கள் பழி சுமத்தப்பட்டால், நீங்கள் எப்படி உணருவீர்கள்? அதை பெரிய அநியாயமாக கருதுவீர்கள். குற்றமுள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் குற்றமற்றவர்கள் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென்றும் நீதி கேட்கிறது. அதிக போக்குவரத்து இருக்கும் ஒரு சாலை சந்தியில் மோட்டார் வண்டி ஓட்டும் ஒருவர் “நில்” என்று காட்டும் அறிகுறியை அசட்டை செய்து, அதன் விளைவாக ஒரு மோசமான விபத்தில் அகப்பட்டுக் கொண்டால், பழி சட்டத்தின் பேரில் சுமத்தப்பட முடியாது. ஒருவர் பெருந்திண்டியாக இருந்து, பெருந்தீனி உண்பதனால் வியாதிப்பட்டால், அது உணவு பொருட்களை விளையச் செய்த விவசாயியின் குற்றமல்ல. சிறந்த வளர்ப்பைப் பெற்றும், ஒரு வாலிபன் தன் வீட்டை விட்டு வெளியே சென்று, தன் தகப்பனின் புத்திமதியை அசட்டை செய்து, தொந்தரவுக்குள்மாட்டிக்கொண்டால், அதற்காக தகப்பனை குற்றப்படுத்தமுடியாது. அப்படியானால், மனிதவர்க்கம் தவறுகள் செய்யும் போது பரம தகப்பனாகிய கடவுள் ஏன் குற்றஞ்சாட்டப்படவேண்டும்? குற்றம் சுமத்தப்படவேண்டிய இடத்தில்—குற்றம் செய்த நபரின் பேரில்—சுமத்தப்பட வேண்டாமா?

8 மேலுமாக சிந்திக்க வேண்டிய வேறொரு காரியமும் இருக்கிறது. உணவு பற்றாக்குறையின் காரணமாக ஏற்படும் பசி, பட்டினி போன்ற காரியங்களுக்கு நாம் கடவுளைக் குற்றஞ்சாட்டுவோமானால், அநேக நாடுகளில் ஏராளமான விளைச்சலைத்தரும் செழிப்பான வயல்வெளிகளையும் பழத் தோட்டங்களையும் கொடுத்ததற்காக நாம் யாரை பாராட்டுவோம்? வியாதிக்குக் கடவுள் மீது பழி சுமத்துவோமானால், நம்முடைய உடலின் அதிசயிக்கத்தக்க சுகப்படுத்தும் செயல் முறைக்காக நாம் யாரை புகழுவோம்? பட்டணங்களிலுள்ள சேரிகளுக்கு நாம் கடவுளைக் குற்றப்படுத்துவோமானால், கம்பீரமான மலைகளுக்கும், தெளிவான நீருள்ள ஏரிகளுக்கும், மகிழ்ச்சியூட்டும் மலர்களுக்கும் அழகான மரங்களுக்கும் யாரை பாராட்டுவோம்? உலக தொல்லைகளுக்குக் கடவுளைக் காரணமாக நாம் குற்றப்படுத்திவிட்டு, பின்பு பூமியிலுள்ள நல்ல காரியங்களுக்காகவும் அவரைப் புகழுவோமானால், வெகு தெளிவாகவே அது முரண்பாடாக இருக்கும். அன்புள்ள ஒரு கடவுள், நல்லதையும் கெட்டதையும் ஒரே நேரத்தில் ஆதரிக்க மாட்டார்.

9 கடவுள் இல்லை என்று சொல்வது பிரச்னையை இன்னும் மோசமாகத்தான் ஆக்குகிறது. இந்தப் பூமியும் அதன் அதிசயமான உயிர் வகைகளும் தற்செயலாக நிகழ்ந்தன என்று நம்புவதானது உண்மைகளை அசட்டை செய்வதாகும். உண்மையென்னவெனில், எந்த ஒரு வீட்டைப் பார்க்கிலும் இந்தப் பூமியானது உயிரைக் காத்து பராமரிக்க மிகச் சிறந்த விதத்தில் முன் ஏற்பாடு செய்து வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் புத்திக் கூர்மையுள்ள திட்டமிடுபவர் ஒருவர் இருக்கிறார். அப்படியானால் காற்று, நிலம், நீர் ஆகிய உயிரைக்காக்கும் மிக மகத்தான ஏற்பாடுகளைக் கொண்ட இந்தக் கிரகத்தைப் பற்றியதென்ன? பைபிள் கூறுகிறதாவது: “எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்: எல்லாவற்றையும் உண்டு பண்ணினவர் தேவன்.” (எபிரெயர் 3:4) மனிதர் கெட்ட காரியங்களைச் செய்வதனால் கடவுள் இல்லை என்ற முடிவுக்குச் சிலர் வருகிறார்கள். ஆகிலும் இது, வீடுகளில் வாழும் ஆட்கள் கெட்ட காரியங்களைச் செய்வதனால் அந்த வீடுகளைத் திட்டமிட்டவர்கள் அல்லது கட்டினவர்கள் ஒருவரும் இல்லை என்று சொல்வதற்கும் மேலும் ஒருவர் தவறான காரியம் செய்வதனால் அவருக்குத் தகப்பன் இல்லையென்று சொல்வதற்கும் ஒப்பாக இருக்கிறது.

10 அப்படியானால் மனித குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும் இந்தப் பயங்கர காரியங்களுக்கு யார் பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஜனங்கள் தானே அதிகப்படியான பழியைத் தாங்க வேண்டும். மனிதனின் நேர்மையற்ற தன்மையும் ஏமாற்றமும் குற்றச் செயல்களுக்கு வழிநடத்துகின்றன. மனிதனின் மேட்டிமையும், தன்னலமும், முறிந்துபோன விவாக உறவுகளையும், விரோதங்களையும், ஜாதி வேற்றுமைகளையும் உண்டுபண்ணுகின்றன. மனிதனின் தவறுகளும் கவலையீனமும், அசுத்தத்திற்கும் குப்பை கூளங்களுக்கும் காரணமாயிருக்கின்றன. மனிதனின் இறுமாப்பும் முட்டாள்தனமும் யுத்தங்களை உண்டுபண்ணுகின்றன; மேலுமாக அந்த யுத்தங்களில் பங்குகொள்ள நாடுமுழுவதும் குருட்டுத்தனமாக அரசியல் அதிகாரிகளை பின்பற்றுமிடத்து, அதனால் விளையும் வேதனைகளுக்கு பொதுமக்களும் பழியைச் சுமக்க வேண்டும். மனிதனின் அசட்டை மனப்பான்மையும் பேராசையுமே பட்டினிக்கும் வறுமைக்கும் மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இதை சிந்தித்துப்பாருங்கள்: இன்று உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,600 கோடி ரூபாய் போராயுதங்களின் பேரில் செலவு செய்யப்படுகிறது. இந்தப் பணம் உணவை உற்பத்தி செய்வதற்கும் அதை சமமாக பகிர்ந்தளிப்பதற்கும் மேலும் நல்ல வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கும் சரியான முறையில் செலவு செய்யப்பட்டால், என்ன சாதிக்கப்படக்கூடும் என்பதை எண்ணிப்பாருங்கள்!

11 மதத்தின் பெயரில் செய்யப்படும் குற்றங்களுக்கும் கடவுள் பழி சுமத்தப்பட முடியாது. உதாரணமாக, குருமார் தங்கள் நாட்டின் யுத்தங்களின் பேரில் கடவுளுடைய ஆசீர்வாதத்திற்காக ஜெபிக்கிறார்கள். ஆகிலும், அதே சமயத்தில் எதிர் பக்கங்களில் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் போர் சேவகர்கள் ஒரே மதத்தை சேர்ந்தவர்களாய் இருக்கிறார்கள்! இந்நிலைக்கு கடவுளை நாம் குற்றப்படுத்தமுடியாது, ஏனெனில் அவர் அவர்கள் செய்வதைக் கண்டனம் செய்கிறார். தம்மை உண்மையிலேயே சேவிப்பவர்கள் ‘ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருக்க வேண்டும்’ என்று அவர் கூறுகிறார். (யோவான் 13:34, 35) இப்பேர்ப்பட்ட அன்பு அவர்களுக்கு இல்லாவிட்டால், அவர்கள் “பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்த காயீனை போலிருக்”கிறார்கள் என்று கடவுள் சொல்லுகிறார். (1 யோவான் 3:10-12) சிலுவைப் போர்களிலானாலுஞ் சரி, யுத்தங்களிலானாலுஞ் சரி, கடவுளுடைய பெயரைச் சொல்லி ஆட்களைக் கொலை செய்வதானது, பொய் கடவுட்களுக்குப் பிள்ளைகளை பலியாக கொடுக்கும் பூர்வகால பழக்கத்துக்கு ஒப்பாக இருக்கிறது. இதைக்குறித்து சர்வவல்லமையுள்ள கடவுள், “அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை,” என்பதாக கூறுகிறார்.—எரேமியா 7:31.

12 குருமார் அரசியலில் தலையிடுவதும், யுத்தங்களை ஆதரிப்பதும், மேலுமாக உலக தொல்லைகளுக்கு கடவுள் தான் காரணர், அவர் நித்தியமாக ஜனங்களை சொல்லர்த்தமான நரக அக்கினியில் எரிக்கிறார் என்பதைப் போன்ற பொய்ப் போதனைகளைக் கற்பிப்பதும், சிந்திக்கும் ஆட்களுக்கும் கடவுளுக்கும் வெறுப்பூட்டுவதாக இருக்கின்றன. கடவுளுக்கு எதிரான காரியங்களை கற்பித்து அவற்றைத் தொடர்ந்து செய்கிற மதத் தலைவர்களை “மாயக்காரர்” என்பதாக கடவுளுடைய வார்த்தை அழைக்கிறது. “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள். அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்,” என்பதாகவும் அவர்களைப் பற்றி சொல்லுகிறது. (மத்தேயு 23:27, 28) உண்மையில், இயேசு இந்த மாய்மால மதத் தலைவர்களை, “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்,” என்றார்.—யோவான் 8:44.

13 மனிதர் தாங்களே செய்திருக்கும் தவறுகளுக்கு கடவுளைக் குற்றப்படுத்த முடியாது. குருமாரால் ஆசீர்வதிக்கப்படும் தவறுகளுக்கும் கடவுள் உத்திரவாதமுள்ளவரல்ல. குருமார் கடவுளைச் சேவிப்பதாக உரிமைப் பாராட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் சத்தியத்தைப் பேசுவதுமில்லை, அதை நடைமுறையில் பின்பற்றுவதுமில்லை. அப்படியானால் கடவுள் மனிதவர்க்கத்தைச் சிருஷ்டித்திருக்கும் விதத்தில் ஏதாவது தவறு இருக்கிறதா? மனித குலத்திற்கு அவர் ஒரு கேடான ஆரம்பத்தைக் கொடுத்தாரா?

ஒரு பரிபூரண ஆரம்பம்

14 ஆதியாகமம் புத்தகத்தில் முதல் இரண்டு அத்தியாயங்களை ஒருவர் வாசிக்கும்போது, கடவுள் மனிதனையும் மனுஷியையும் சிருஷ்டித்தபோது அவர்களுக்கு ஒரு பரிபூரண துவக்கத்தைக் கொடுத்தார் என்பது வெகு தெளிவாக இருக்கிறது. வியாதியும் மரணமும் அவர்களை ஒருபோதும் வாதிக்காதபடிக்கு பரிபூரண உடலோடும் மனதோடும் அவர் அவர்களை சிருஷ்டித்தார். அவர்களுடைய வீடு ஓர் அழகான பூங்காவனம் போன்ற தோட்டமாக இருந்தது. அதில் மகிழ்ச்சி தரும் மலர்களும், செழிப்பான தாவரங்களும், கனிதரும் விருட்சங்களும் இருந்தன. அங்கே ஒரு குறைவும் இல்லை. அதற்கு எதிர்மாறாக, எல்லாம் ஏராளமாக இருந்தது. மேலும் நம்முடைய முதற் பெற்றோருக்கு முன்பாக அக்கறையூட்டும் வேலையையும் தூண்டுவிக்கும் இலக்குகளையும் கடவுள் வைத்தார். அந்த பரதீஸின் பூங்காவனம் போன்ற நிலைமைகளை பூமியெங்கும் விரிவாக்கவும் அவர்களுக்கு கட்டளையிட்டார். காலாகாலத்தில் இந்த வேலையில் அவர்கள் பிறப்பிக்கும் அநேக பரிபூரண பிள்ளைகள் அவர்களுக்கு உதவி செய்வார்கள். இப்படியாக, முடிவில், மனித குடும்பமானது ஒரு பரிபூரண மானிட குலமாகும். அவர்கள் பூமிக்குரிய பரதீஸை சுதந்தரித்து, ஜீவனை நித்தியமாக அனுபவிப்பார்கள். மிருகங்களுங்கூட அன்பான விதத்தில் இவர்களுக்குக் கீழ் அடங்கியிருக்கும்.

15 ஆனால் காரியங்கள் ஏன் இவ்வளவு கேடான விதத்தில் முடிவடைந்தன? ஆரம்பத்தில் கடவுள் மனிதரை உண்மையிலேயே பரிபூரணமாக சிருஷ்டிக்காததனாலா? இல்லை, அதனால் அல்ல. ஏனெனில் உபாகமம் 32:4 கடவுளைப்பற்றி, “அவருடைய கிரியை உத்தமம்,” என்பதாக சொல்லுகிறது. ஆகிலும் மானிட பரிபூரணம் என்றால், முதல் மனித ஜோடி எல்லாம் அறிந்திருந்தார்கள், அல்லது எல்லாவற்றையும் செய்யத் திறமையுள்ளவர்களாய் இருந்தார்கள் அல்லது அவர்கள் தவறிழைக்க முடியாது என்றர்த்தங்கொள்ளவில்லை. பரிபூரண சிருஷ்டிகளுங்கூட வரம்புடையவர்களாய் இருந்தனர். உதாரணமாக, சரீரப்பிரகாரமான வரம்புகள் இருந்தன. அவர்கள் உணவு உண்ணாமலும், பானம் பருகாமலும், காற்றை சுவாசியாமலும் இருந்தால், மரித்துப் போவார்கள். உயரமான இடத்திலிருந்து கீழே குதிப்பதன் மூலம் அவர்கள் புவியீர்ப்புச் சட்டத்தை மீறிவிட்டு, அதே சமயத்தில் காயப்படாமல் இருக்கவும் எதிர்பார்க்க முடியாது. மேலுமாக, அவர்களுக்கு மனது சம்பந்தமான வரம்புகளும் இருந்தன. ஆதாமும் ஏவாளும் அனுபவமற்றவர்களாய் இருந்ததனால் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருந்தனர். ஆகிலும் அவர்கள் எவ்வளவு கற்றாலும், தங்களுடைய சிருஷ்டிகர் அறிந்திருக்கும் அளவுக்கு ஒருபோதும் அறிந்திருக்க முடியாது. ஆகையால், பரிபூரணராக இருந்த போதிலும், மானிட உலகில் இருப்பதனால் அவர்கள் வரம்புக்குட்பட்டவர்களாய் இருந்தனர். பரிபூரணம் என்பது அவர்கள் பூர்த்தியாக இருந்தார்கள், அவர்களுடைய சரீரம் மற்றும் மனது சம்பந்தமான உருவமைப்பில் குறையற்றவர்களாய் இருந்தனர் என்பதை மட்டுமே குறித்தது.

16 மேலுமாக, கடவுள் மனிதரை சுயதீர்மானம் செய்ய சுயாதீனமுள்ளவர்களாய் சிருஷ்டித்தார். மிருகங்களைப்போல் இயல்புணர்ச்சியால் வழிநடத்தப்பட அவர்கள் சிருஷ்டிக்கப்படவில்லை. அந்த சுயாதீனத்தை நிச்சயமாகவே நீங்கள் மதித்துணருவீர்கள். நீங்கள் என்ன செய்யவேண்டுமென்று உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் உங்களுக்கு கட்டளையிட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். ஆகிலும் மனிதனுக்கு அளிக்கப்பட்ட இந்தச் சுயாதீனம் முழுமையானதாக, அதாவது வரம்பற்றதாக இராது. சம்பந்தப்பட்ட சுயாதீனமாகவே அது இருக்கும். கடவுளுடைய சட்டங்களின் எல்லைகளுக்குள் அந்த சுயாதீனம் பிரயோகிக்கப்பட வேண்டும். அந்த சிறந்த சட்டங்கள் சொற்பமானவையாகவும் எளிதானவையாகவும், மானிட குடும்பம் முழுவதன் மிக அதிக சந்தோஷத்தை மனதில் கொண்டு அமைக்கப்பட்டவையாகவும் இருக்கும். அந்த சட்டங்களை மதிப்பதானது மனிதருக்கு முடிவில்லா நன்மைகளை கொண்டு வரும் என்பதை கடவுள் அறிந்திருந்ததனால் மனிதன் அவற்றிற்குக் கீழ்ப்படியும்படி கேட்பதில் மனிதன் பேரில் கடவுளுடைய அன்பு வெளிக்காட்டப்பட்டது. கடவுளையும் அவருடைய சட்டங்களையும் அவமதிப்பதானது அவர்களுடைய சந்தோஷத்தைக் கெடுக்கும். எவ்வித நன்மையும் தராது. உண்மையில் அவர்களுக்கு கெடுதியைத்தான் விளைவிக்கும். தம்மைவிட்டு விலகினால் அவர்கள் ‘சாகவே சாவார்கள்’ என்பதாக கடவுள் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் எச்சரித்திருந்தார். (ஆதியாகமம் 2:17) ஆகையால், தொடர்ந்து உயிரோடிருக்க, அவர்கள் உணவு அருந்தி, நீர் பருகி, காற்றை சுவாசிப்பது மட்டுமல்லாமல், கடவுளாலும் அவருடைய சட்டங்களாலும் வழிநடத்தப்பட வேண்டும்.

17 நம்முடைய முதற் பெற்றோர் கடவுள் பேரில் சார்ந்தவர்களாய் இருக்க வேண்டியதற்கு மற்றொரு மிக முக்கியமான காரணம் உண்டு. அது என்னவெனில் மனிதர் தங்களுடைய விவகாரங்களை கடவுள் துணையின்றி தனித்து தாங்களாகவே வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கு உண்டாக்கப்படவில்லை. அவ்வாறு செய்வதற்குக் கடவுள் அவர்களுக்கு உரிமையும் கொடுக்கவில்லை, திறமையும் கொடுக்கவில்லை. பைபிள் சொல்லுகிறபடி, “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல . . . தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.” (எரேமியா 10:23) அதன் காரணமாகவே, “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்,” என்பதாக பைபிள் கூறுகிறது.—நீதிமொழிகள் 28:26.

துன்மார்க்கம் எப்படி துவங்கினது?

18 இவ்வளவு சிறந்த ஆரம்பம் இருந்திருக்கையில், தவறு எப்படி ஏற்பட்டது? இப்படி: நம்முடைய முதற் பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் தங்களுடைய போக்கை தெரிந்து கொள்வதற்குத் தங்களுக்கிருந்த சுயாதீனத்தைத் தவறாக உபயோகித்தனர். கடவுளுடைய ஆட்சிக்கு தங்களைக் கீழ்ப்படுத்துவதற்குப் பதிலாக, சொந்த வழியில் போக தீர்மானித்தார்கள், அவர்கள் “நன்மை தீமை அறிந்து” தேவனைப்போல் இருப்பார்கள் என்று ஸ்திரீயானவள் எண்ணினாள். (ஆதியாகமம் 3:5) தங்களுடைய சொந்த சிந்தனையின் பேரில் சார்ந்து எது சரி எது தவறு என்பதை தாங்களாகவே தீர்மானித்துக்கொள்ள முடிவு செய்தனர். அப்பேர்ப்பட்ட சிந்தனையின் விளைவாக எவ்வளவு கெடுதி ஏற்படும் என்பதைக் குறித்து அவர்கள் முன்யோசனை செய்யவில்லை. ஆனால் அதே கெடுதியே விளைந்தது, ஏனெனில், ‘கடவுள் பொய் சொல்லக் கூடாதவராய்’ இருக்கிறார். (தீத்து 1:3, NW) அவர்கள் கடவுளுடைய ஆட்சியிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டபோது, ஒரு மின்விசிறியின் பிளக் இழுத்து விடப்பட்டால் என்ன நேரிடுகிறதோ, அதே போன்ற காரியம் ஒரு விரிவான அர்த்தத்தில் ஏற்பட்டது. மின் விசிறி அதைச் சுழலச் செய்யும் மூல சக்தியின் தொடர்பறுக்கப்பட்டு, சுழலும் வேகம் குறைந்து, கடைசியில் முற்றிலும் நின்றுவிடுகிறது. அதே விதமாக முதல் மானிட ஜோடி தங்கள் உயிரின் ஊற்றாகிய யெகோவா தேவனிடமிருந்து தங்களை பிரித்துக் கொண்டபோது, கடவுள் முன் எச்சரித்தபடி, படிப்படியாக சீரழிந்து முடிவில் மரித்தனர்.

19 பிள்ளைகள் பிறவாததற்கு முன்பே நம்முடைய முதற்பெற்றோர் கடவுளுக்கு விரோதமாக கலகஞ் செய்ததனால், அவர்களுடைய முதல் பிள்ளையின் பிறப்புக்கு முன்பே அபூரணம் அவர்களில் அமைந்துவிட்டது. ஆதாமும் ஏவாளும் குறைவுடன்கூடிய ஒரு வார்ப்பு போல் ஆனார்கள். அவர்களால் உற்பத்தி செய்யப்பட்டதெல்லாம் குறைபாடுள்ளதாக இருந்தது. தங்களிடம் இருந்ததையே—அபூரண சரீரத்தையும் மனதையுமே—அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு கடத்த முடியும். பரிபூரணத்தையும் உயிரையும் பேணிக் காத்து வருவதற்கு ஊற்றாக விளங்கும் யெகோவா தேவனிடமிருந்து தங்களை பிரித்துக்கொண்டதனால் அவர்கள் இனிமேலும் பரிபூரணராக இல்லை. ஆகையால் ரோமர் 5:12-ல் பைபிள் சொல்வதற்கு இசைய, அதுமுதற்கொண்டு பிறந்தவர்கள் யாவரும் அபூரணத்தில் பிறந்திருக்கிறார்கள், ஆகவே அவர்கள் வியாதிப்பட்டு, முதிர்வயதடைந்து மரிக்கும் நிலைக்குள்ளாகி விடுகின்றனர். ஆனால் இதற்குக் கடவுள் குற்றமுள்ளவரல்ல. உபாகமம் 32:5 (NW) பின்வருமாறு கூறுகிறது: “அவர்களோ தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; குறைபாடு அவர்களுடையதே.”மேலுமாக, பிரசங்கி 7:29 குறிப்பிடுவதாவது: “தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார், அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்.”

20 ஆனால் இரண்டுபேர் மட்டுமே கீழ்ப்படியாமற் போனதன் காரணமாக எல்லோருக்கும் இப்பேர்ப்பட்ட ஆபத்தான விளைவு எற்படுவது நியாயமா? சரி, ஒரு கட்டிடத்தைக் கட்டும்போது ஒரே ஓர் ஆள் ஒரு சிறு பாதுகாப்பான அம்சத்தை கவலையீனமாக கையாண்டதனால், அநேக உயிர்கள் பலியாகும் ஒரு பேராபத்து ஏற்படக்கூடும் என்பதை நாம் அறிவோம். அதே விதமாக, ஓர் அணைக்கட்டு கட்டுகையிலும் அதே போன்ற ஓர் அம்சத்தில் கவலையீனமாக இருப்பதானது, அணைக்கட்டில் பிளவு ஏற்பட்டு வெள்ளம் வந்து பேரளவான சேதத்தை உண்டு பண்ணக்கூடும். ஓர் அரசனின் ஒரே ஒரு ஊழலான செயல், தவறான செயல்களின் ஒரு சங்கிலித்தொடர்பை அரசாங்கத்தில் துவக்கி வைக்க வழியைத் திறந்து வைக்கக்கூடும். ஒரு குடும்பத்தில், தந்தையும் தாயும் ஒரு தவறான தெரிவை செய்யும்போது, அவர்களுடைய பிள்ளைகள் கவலைக்கிடமான விளைவுகளை அனுபவிக்கக்கூடும். நம்முடைய முதற் பெற்றோர் தவறான தெரிவை செய்தார்கள். அதன் விளைவாக, முழு மானிட குடும்பமும் அபூரணத்திற்குள்ளும் பேரழிவுக்குள்ளும் அமிழ்த்தப்பட்டது.

21 இதில் கடவுளுடைய சட்டமும் அவருடைய உத்தமத்தன்மையும் உட்பட்டிருந்ததனால், தம்முடைய சட்டத்தை அமுல் படுத்தாமல் இருப்பதன் மூலம் சட்ட மீறுதலைத் தண்டியாமல் அவர் விடமுடியாது. அதைப்பற்றி அவர் ஒன்றும் செய்யவில்லையென்றால், ஜனங்கள் அவரிலும் அவருடைய சட்டங்களிலும் என்ன மரியாதையுடையவர்களாய் இருப்பார்கள்? தங்களுடைய சொந்த சட்டங்களுக்கு கீழ்ப்படியாத அல்லது வேண்டுமென்றே அந்த சட்டங்களை மீறி நடக்கும் ஆட்களைத் தண்டியாமல் விடும் அரசர்களை நாம் இன்று மதிக்கிறோமா? ஆகையால், கீழ்ப்படியாமைக்கு தாம் கூறியிருந்த தண்டனையை கடவுள் நிறைவேற்றினார், அது மரணமாகும். ஆனால் அந்த முதல் ஜோடி பிள்ளைகளைக் கொண்டிருக்க கடவுள் தயவுடன் அனுமதித்தார். அதை நாம் மதித்துணர வேண்டும். இல்லாவிடில் நாம் ஒருபோதும் பிறந்திருக்க மாட்டோம். மேலுமாக, ஆதாம் ஏவாள் செய்த தவறின் காரணமாக நாம் அபூரணராக இருந்தபோதிலும், மரித்தவர்களாய் இருப்பதைப் பார்க்கிலும் உயிருடன் இருப்பதையே நாம் விரும்புகிறோம் அல்லவா?

22 துன்மார்க்கம் முற்றிலுமாக மனிதவர்க்கத்திடம் ஆரம்பமாயிற்று என்று இது அர்த்தங்கொள்ளுகிறதா? இல்லை, காரணம் இதைவிட ஆழமாக செல்லுகிறது. மனிதரை மட்டுமே கடவுள் புத்திகூர்மையுள்ள சிருஷ்டிகளாக உண்டாக்கவில்லை. ஏற்கெனவே பரலோகங்களில் எண்ணற்ற வேறு புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகளை, ஆவி சிருஷ்டிகளை அவர் உண்டாக்கி இருந்தார், அவர்களும் சுய தெரிவை செய்ய சுயாதீனமுள்ள ஆட்களாக இருந்த போதிலும், தொடர்ந்து உயிரோடிருக்க, கடவுளுடைய நன்மையும் நியாயமுமான சட்டங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும். ஆகிலும், இந்த ஆவி சிருஷ்டிகளில் ஒருவன் தவறான எண்ணங்களின் பேரில் தியானித்தான். தவறான காரியத்தின் பேரில் ஒருவன் தியானிக்கும்போது, தான் சிந்தித்துக்கொண்டிருக்கும் அந்தத் தவறான காரியத்தை செய்வதில் விளைவடையக்கூடும். அதே விதமாகவே இந்த ஆவி சிருஷ்டியின் விஷயத்தில் நடந்தது. கடவுளுடைய செயல்களுக்கு எதிராக சவாலிடும்படி தன்னைத் தூண்டும் அளவுக்கு அவன் தன்னில் பேராசையை வளர்த்தான். ஆதாமின் மனைவியாகிய ஏவாளிடம், அவர்கள், கடவுளுக்கு கீழ்ப்படியாமல் இருக்கலாமென்றும் “நீங்கள் சாகவே சாவதில்லை” என்றும் கூறினான். (ஆதியாகமம் 3:4) தொடர்ந்து உயிர் வாழவும் சந்தோஷமாக இருக்கவும் அவர்கள் சிருஷ்டிகர் பேரில் சார்ந்திருப்பது அவசியமா என்ற சந்தேகத்தை எழுப்பினான். கீழ்ப்படியாமை அவர்களுடைய நிலையை அபிவிருத்தி செய்யும், மேலும் அவர்கள் கடவுளைப் போல இருப்பார்கள் என்பதாகவும் அவன் சொன்னான். இதன் மூலம் அவன் கடவுளின் உத்தமத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தினான். கடவுளுடைய சட்டங்களை கேள்விக்குட்படுத்துவதன் மூலம் அவன் கடவுளின் ஆட்சி செய்யும் முறையின் பேரில்—உண்மையில், ஆட்சி செய்ய கடவுளின் உரிமையின் பேரிலேயே—அவன் சந்தேகத்தை எழுப்பினான். இதற்காக அவன் சாத்தான் என்றழைக்கப்பட்டான், அதன் அர்த்தம் எதிர்ப்பவன். பிசாசு என்றும் அழைக்கப்பட்டான், பிசாசு என்றால் பழிதூற்றுபவன்.

இவ்வளவு நீண்டகாலம் ஏன் அனுமதிக்கப்பட்டிருக்கிறது

23 கடவுள் அவர்களைவிட மிக அதிக பலமுள்ளவராக இருப்பதனால், ஆரம்பத்திலேயே கலகம் செய்த இந்த மனிதர்களையும் ஆவிகளையும் ஒழித்துவிட்டிருக்கலாம். ஆனால் அப்படி செய்வது காரியங்களை திருப்திகரமாக தீர்த்திருக்காது. ஏன்? ஏனெனில் கடவுளுடைய பலம் இங்கே சவாலுக்குட்படுத்தப்படவில்லை. எழுப்பப்பட்ட பிரச்னைகள் ஒழுக்க சம்பந்தமானவை. மேலும் அதில் முக்கியமான பிரச்னை இதுவாக இருந்தது: கலக மார்க்கம் வெற்றியுள்ளதாக நிரூபிக்குமா? கடவுளைஅசட்டை செய்யும் ஆட்சி மானிட குடும்பம் முழுவதற்கும் நிரந்தரமான நன்மைகளைக் கொண்டு வருமா? ஜனங்கள் மீது கடவுளுடைய ஆட்சி இருப்பது அவர்களுக்கு சிறந்ததாக இருக்குமா அல்லது மனிதனின் ஆட்சி சிறந்ததாக இருக்குமா? எழுப்பப்பட்ட இந்த அதி முக்கிய பிரச்னையும் வேறு பிரச்னைகளும் தீர்க்கப்படுவதற்கு காலம் எடுக்கும் என்பதை கடவுள் ஞானமுள்ள ஒருவராக அறிந்திருந்தார். ஆகையால், மானிடர் தங்களுடைய அரசியல், சமூக, தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான சாதனைகளின் உச்ச நிலையை எட்டுவதற்கு போதுமான வாய்ப்பு அளிக்கும் ஒரு குறித்த காலப்பகுதியை கடவுள் அனுமதித்தார்.

24 அந்த காலப்பகுதி வெறும் ஒரு சில நாட்களோ அல்லது ஒரு சில வருடங்களோ மட்டும் நீடிக்காது. விடை நியாயமான சந்தேகத்திற்கப்பால் நிரூபிக்கப்படுவதற்கு அநேக தலைமுறைகள் எடுக்கும். இரண்டு பேர் மட்டுமே உட்பட்டிருக்கையிலுங்கூட நீதிமன்ற வழக்குகள் பல வாரங்கள் அல்லது மாதங்கள் நீடிக்கக்கூடும். கடவுளுடைய ஆட்சி சம்பந்தப்பட்ட இந்தப் பெரிய பிரச்னைகளுக்கு முழு விடையும் தேவைப்படுகிறது, விட்டுக்கொடுத்து வழக்கைத் தீர்ப்பது போதாது. முழுவதுமாக தீர்க்கப்பட்டால், எதிர் காலத்தில் இந்தப் பிரச்னைகள் மறுபடியும் தீர்க்கப்படவேண்டிய அவசியம் ஒருபோதும் எழும்பாது. அன்புள்ள ஒரு கடவுள் வழக்கு பூரணமாக தீர்க்கப்படுவதையே விரும்புவார். அதற்காக நாம் சந்தோஷப்படலாம். ஏனெனில் அப்பேர்ப்பட்ட தீர்ப்பானது மட்டுமே பரலோகத்திலும் பூமியிலும் உள்ள கடவுளுடைய சர்வலோக குடும்பம் முழுவதற்கும் முடிவில்லா சமாதானமும் பாதுகாப்பும் பெறுவதற்கான வழியைத் திறந்து வைக்கும்.

25 அந்த பிரச்னைகள் எழுப்பப்பட்டு இப்பொழுது சுமார் 6,000 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடவுளுடைய ஆட்சியிலிருந்து மனிதன் தன்னைப் பிரித்துக் கொண்டதன் விளைவு என்ன? எல்லா விதமான அரசாங்கங்களை, எல்லா விதமான சமூக ஒழுங்கு முறைகளை, எல்லா விதமான பொருளாதாரமுறைகளை, மேலும் எல்லா மதப்பிரிவுகளையும் மனிதன் உபயோகித்து பார்த்திருக்கிறான். ஆனால் எதுவுமே மெய் சமாதானத்தையும் பாதுகாப்பையும் மற்றும் நிரந்தரமான சுகத்தையும் சந்தோஷத்தையும் கொண்டுவரவில்லை. இரண்டாம் உலக யுத்தம் மட்டுமே ஐந்து கோடி உயிர்களைப் பறி கொண்டிருக்கையில், பொருளாதார முன்னேற்றத்தைப் பற்றி எவராவது பெருமை பாராட்டிக் கொள்ள முடியுமா? சந்திர மண்டலத்துக்கு மனிதன் அனுப்பும் அதே ராக்கட்டுகளின் அணுகுண்டுப் போர் முனைகள் மனிதவர்க்கத்தை அழிக்கக்கூடியதாக இருக்கையிலும், மனிதர் சந்திரன் மேல் நடந்து கொண்டிருக்கும் அதே சமயத்தில் பூமியிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் பசியினாலும் வறுமையினாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையிலும், மனிதனை சந்திரமண்டலத்துக்கு அனுப்புவது முன்னேற்றம் என்று சொல்லப்படமுடியுமா? குடும்பங்கள் வாக்குவாதங்களால் முறிக்கப்பட்டிருக்கையிலும் விவாக ரத்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கையிலும், சமுதாயத்தில் குற்றச் செயலின் பயம் அதிகரிக்கையிலும், அசுத்தமும் சேரிகளும் அதிகரிக்கையிலும், பொருளாதார நெருக்கடியானது இலட்சக்கணக்கான ஆட்களுக்கு வேலையில்லா நிலையை உண்டுபண்ணுகையிலும், ஒரு மனிதனின் குடும்பத்தையும் அவனுடைய வாழ்க்கை முறையையும் பயமுறுத்தும் கலகங்களும் உள்நாட்டு சண்டைகளும் அரசாங்கங்களைக் கவிழ்ப்பதும் ஆண்டுதோறும் நடைபெறும் சம்பவங்களாக இருக்கையிலும், அநேக வசதிகளைக் கொண்ட ஒரு நல்ல வீட்டைக் கொண்டிருப்பதில் என்ன பயன்?

26 உண்மையான நிலை ஐக்கிய நாட்டு சங்கத்தின் பொது காரியதரிசியாகிய கேர்ட் வால்ட்ஹிம் கூறினபடியே இருக்கிறது: “பொருளாதார முன்னேற்றம் இருந்தபோதிலும், மானிடர் இன்று அனுபவிப்பதைவிட அதிக பாதுகாப்பற்ற உணர்ச்சியை முன்பு ஒருபோதும் அனுபவித்தது கிடையாது.” b சுற்றுப்புறச் சூழமைவியல் (Environmental Ethics) என்ற புத்தகம் பின்வருமாறு கூறுகிறது: “தூய்மையான காற்றை சுவாசிக்கவும், சுத்தமான தண்ணீர் குடித்து மகிழவும், தன்னுடைய இயற்கை சுற்றுப்புறத்தை ஆய்வு செய்வதன் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் தன் சுற்றுப்புறத்தையே மாற்றிவிட்டு, அதற்கேற்றபடி தான் வாழ முடியாதவனாய் இருப்பதாக காண்கிறான். மனிதன் தன் சொந்த வர்க்கத்தின் மொத்த அழிவை ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறான்.” c இவ்வளவு நீண்ட காலம் துன்மார்க்கம் அனுமதிக்கப்பட்டிருப்பதானது, கடவுளுடைய வழிநடத்துதல் இல்லாமல் மனிதர் தங்களுடைய விவகாரங்களை சொந்தத்தில் வெற்றிகரமாக நடத்திக்கொள்ள திறமையுள்ளவர்களாக உண்டாக்கப்படவில்லை என்பதை நியாயமாக சிந்திக்கும் யாவருக்கும் எடுத்துக் காட்ட வேண்டும். மேலுமாக, மனித தோல்வியின் ஆறாயிரம் ஆண்டு அத்தாட்சி இருக்கையில், மனிதர் சொந்தமாக முயன்று பார்ப்பதற்கு போதுமான நேரம் கொடுக்கப்படவில்லையென்று ஒருவரும் கடவுளை நியாயமாக, குற்றஞ்சாட்டமுடியாது. அனுமதிக்கப்பட்ட காலம், கடவுளுக்கு விரோதமான கலகத்தன இந்தப் போக்கு முற்றிலும் அழிவுக்கேதுவான ஒன்று என்பதை நிரூபிக்க போதுமானதாக இருந்திருக்கிறது.

துன்மார்க்கம் சீக்கிரத்தில் முடிவடையும்

27 மானிட குடும்பத்திற்கு நன்மையான மாறுதல் அதிக அவசரமாக தேவை. உண்மையில், முற்றிலும் புதிதான ஓர் ஒழுங்குமுறை நமக்குத் தேவை. எரிக் ஃபிராம் என்ற சமுதாய நிபுணர் ஒத்துக்கொண்ட பிரகாரம், “கடந்த 6,000 ஆண்டுகால சரித்திரத்தின்போது இருந்து வந்திருக்கும் இந்த ஒழுங்குமுறைக்குப் பதிலாக, அடிப்படையில் வித்தியாசப்பட்ட ஓர் ஒழுங்குமுறை அமைக்கப்பட்டாலொழிய” d இந்தச் சமுதாயத்தின் தீங்குகள் சரி செய்யப்பட முடியாது. அந்தக் காரியத்தை நிறைவேற்றிடவே கடவுள் நினைத்திருக்கிறார்! அவர் அனுமதித்திருக்கும் காலம் முடிவடையும்போது, இந்தத் துன்மார்க்க ஒழுங்குமுறை முழுவதையும், அதோடு அதை விரும்புகிறவர்களையும் இனி இராதபடி அழித்துப் போடுவதாக உறுதியளித்திருக்கிறார்: “துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.”—சங்கீதம் 145:20.

28 இது எப்பொழுது நடக்கும்? வெகு சீக்கிரத்தில், ஏனெனில் 1914-ல் முதல் உலக யுத்தம் துவங்கினது முதற்கொண்டு முன்னொருபோதுமில்லாத அளவில் மனித குடும்பத்தைத் தாக்கியிருக்கும் தொல்லைகள்,“கடைசி நாட்கள்” என்று பைபிள் அழைக்கும் அந்தக் காலப்பகுதியை கண்டுகொள்ள உதவும் ஓர் அடையாளத்தின் பாகமாக இருக்கிறதென்று கடவுளுடைய வார்த்தை காட்டுகிறது. இந்தக் “கடைசி நாட்களில்” உலக யுத்தங்கள், அதிகரிக்கும் குற்றச் செயல்கள், பசி, கொள்ளை நோய்கள், பெரும்பான்மையினர் மத்தியில் இன்பத்தை நாடும் சுபாவம், கடவுள் நம்பிக்கையிலிருந்து விலகுதல், மதமாய்மாலம், சீர்கேடு, மற்றும் வேறு அநேக சம்பவங்களும் நடக்கும் என்பதாக பைபிள் முன்னறிவித்தது. இவை நம்முடைய விரல் அடையாளம்போல் இருக்கும். இந்தப் பயங்கர நிலைமைகளை கடவுள் அனுமதிக்கும் இந்தச் சந்ததியானது முடிவான ஒன்று என்பதை அவை நிச்சயமாக சுட்டிக் காட்டுகின்றன. நம்முடைய காலம், இன்று பூமியை ஆட்சி செய்துவரும் இந்த ஒழுங்குமுறையின் முடிவை நிச்சயமாக காணும் என்று இயேசு தீர்க்கதரிசனமாக முன்னுரைத்தார்.

29 1914-ல்“கடைசி நாட்களின்” ஆரம்பத்தைக் கண்ட மக்களின் சந்ததியைக் குறித்து “இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்பதாகவும் இயேசு கூறினார். (மத்தேயு 24:34) 1914-ல் முதல் உலக யுத்தம் ஆரம்பிக்கையில் வாழ்ந்து வந்த ஆட்களில் சிலர் தற்போதைய ஒழுங்குமுறையின் முடிவைக் காண இன்னும் உயிரோடிருப்பார்கள் என்பதை இது குறிக்கும். அந்த முதல் உலக யுத்தத்தின்போது இருந்த சந்ததியினர் இப்போது அதிக முதிர்வயதடைந்து கொண்டிருக்கிறார்கள், இது துன்மார்க்கத்தின் முடிவு அதிக விரைவில் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு பலத்த ஆதாரமாக இருக்கிறது.

30 முடிவு வரும்போது, கடவுள் தம்முடைய வல்லமை வாய்ந்த சக்தியை வெளிக்காட்டி, மனிதனின் விவகாரங்களில் தலையிடுவார். தமக்கு விரோதமான எல்லா மானிட ஒழுங்குகளும் நொறுக்கப்படும். தானியேல் 2, வசனம் 44 இதைக்குறித்து பின்வருமாறு கூறுகிறது: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் கடவுள் என்றென்றும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி அழித்துவிடும்; தானோ என்றென்றுமாக நிலைநிற்கும்.” (தி.மொ.) தீங்குண்டாக்கும் மனித முறைகளெல்லாம் நீக்கப்பட்ட பிறகு, பூமியின்மீது கடவுளுடைய ஆட்சி முழு ஆதிக்கங்கொள்ளும்.

31 இப்படியாக, கடவுளுடைய ஆட்சியானது ஒரு புதிய அரசாங்கத்தால், கடவுளுடைய ராஜ்யத்தால் செயற்படுத்தப்படும். இந்த அரசாங்கத்தையே இயேசு தம்முடைய போதனையின் முக்கிய குறிப்பாக்கினார். ஏற்ற காலத்தில் அந்த அரசாங்கம் மட்டுமே பூமி முழுவதையும் ஆட்சி செய்யும் என்று அவர் முன்னறிவித்தார். இந்த ராஜ்யம் கடவுளால் வழிநடத்தப்பட்டு பரலோகத்திலிருந்து ஆட்சி செய்வதனால், தன்னலமுள்ள மனிதரால் அது கெடுக்கப்பட வாய்ப்பு இருக்காது. ஆகையால் ஆளுகை செய்யும் வல்லமை, முதலில் இருக்க வேண்டிய உரிய இடத்தில் பரலோகத்தில் கடவுளிடம் இருக்கும். கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கையில் “பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.” (ஏசாயா 26:9) ஒருவரும் பொய் மதத்தால் ஏமாற்றப்பட மாட்டார்கள், ஏனெனில் பொய் மதமே இருக்காது. உயிரோடிருப்பவர்கள் யாவருக்கும் கடவுளைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் கற்பிக்கப்படும். அப்பொழுது அதன் முழு அர்த்தத்தில், சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை (யெகோவா, NW) அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”—ஏசாயா 11:9.

ஒரு நீதியான புதிய ஒழுங்குமுறை

32 கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் கீழ் முற்றிலும் புதிதான ஒரு மானிட சமுதாயம், கடவுள் பக்தியுள்ள ஆட்களாலான ஒரு சமுதாயம் செழித்தோங்கும். இந்தப் புதிய ஒழுங்கில் கடவுள் செய்யும் காரியங்கள் மூலம், அவர் நம்மேல் கொண்டுள்ள அக்கறை வெளிக்காட்டப்படும். இனிமேலும் யுத்தங்கள் மனிதரின் சந்தோஷத்தைக் குலைக்கமாட்டாது. ஏன்? ஏனெனில் இந்தத் துன்மார்க்க உலகத்தைத் தப்பிப்பிழைப்பவர்கள் யாவரும் ஏற்கெனவே சமாதானத்தின் வழிகளில் பயிற்றுவிக்கப்பட்டிருப்பவர்கள், ஆகையால் புதிய சமுதாயம் சமாதானத்துடன் ஆரம்பமாகும். பின்பு, அந்தப் புதிய ஒழுங்கில் ஜீவனை அடைபவர்கள் யாவரும் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் அதே கல்வியைத் தொடர்ந்து பெறுவார்கள். அதன் காரணமாகவே கடவுள் “பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப் பண்ணுகிறார்” என்ற பைபிள் வாக்கின் நிறைவேற்றம் நிச்சயமாக இருக்கும். (சங்கீதம் 46:8, 9) அந்த சமாதானம் எவ்வளவு முழுமையானதாக இருக்கும்? கடவுளுடைய தீர்க்கத்தரிசன வார்த்தை பின்வருமாறு கூறுகிறது: “சாந்த குணமுள்ளவர்கள் பூமியை சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”சங்கீதம் 37:11.

33 அதுமட்டுமல்லாமல், அந்தப் புதிய ஒழுங்கில் வாழ்பவர்கள் கடவுள் இந்தப் பூமிக்காக ஆரம்பத்தில் நோக்கங்கொண்டிருந்த அதே பூங்காவன நிலைமைக்கு பூமியை மாற்றுவார்கள். மனிதவர்க்கத்திற்கு அது எத்தகைய திருப்தியளிக்கும் வேலையாக இருக்கும்! மேலும் பரதீஸ் திரும்பவும் புதுப்பிக்கப்பட்டிருக்கையில், மக்கள் ஏரிகளையும் நதிகளையும் சமுத்திரங்களையும் குன்றுகளையும் மலைகளையும் சமவெளிகளையும் பள்ளத்தாக்குகளையும்; அழகான பூக்கள், செடிகள், மரங்கள் ஆகியவற்றையும் அக்கறைத்தூண்டும் மிருகங்களையும் முற்றிலுமாக அனுபவித்து மகிழ்வார்கள். ஒருபோதும் உணவு பற்றாக்குறை ஏற்படாது, ஏனெனில், “பூமி தன் பலனைத்தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.” ஆம், “தேசத்தில், மலையின் உச்சியிலும், திரள்தானியமிருக்கும்.”—சங்கீதம் 67:6; 72:16, தி.மொ.

34 நிரந்தரமான சமாதானத்தோடும் ஏராளமான உணவோடும்கூட உற்சாகமான உடல் நலமும் இருக்கும். கடவுள் மனிதனை சிருஷ்டித்திருப்பதனால் ஊனமானவர்களை சுகப்படுத்துவதெப்படி என்றும் குருடருக்கு பார்வையளிப்பதெப்படி என்றும் மேலுமாக வியாதி, முதிர்வயது, மரணம் ஆகியவற்றை எவ்வாறு நீக்குவதென்றும் வேறு எந்த வைத்தியனைப் பார்க்கிலும் நன்கு அறிந்திருக்கிறார். இதை செய்வதற்கு கடவுளுக்கு வல்லமை உண்டு என்பதை இயேசு கிறிஸ்து பூமியில் இருக்கையில் ஒரு சிறிய அளவில் செய்து காட்டினார். பைபிள் நமக்கு இவ்வாறு சொல்லுகிறது:“அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை திரளான ஜனங்கள் கூட்டிக் கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார். ஊமையர் பேசுகிறதையும் ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டார்கள்.”—மத்தேயு 15:30, 31.

35 தன் பக்கத்தில் மரத்தில் அறையப்பட்ட மனிதனிடம், “நீ என்னுடனே கூட பரதீஸில் இருப்பாய்,” என்று சொன்ன போது, இயேசு இந்தப் பூமிக்குரிய பரதீஸையே குறிப்பிட்டார். (லூக்கா 23:43) ஆனால் அந்த மனிதன் மரித்துப்போனான். அவன் எப்படி பரதீஸுக்குள் செல்ல முடியும்? கடவுள் மனிதரில் எவ்வளவு அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்று காட்டும் மற்றொரு மகத்தான ஏற்பாட்டின் மூலம்—மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்புவதன் மூலம். அப்போஸ்தலர் 24:15-ல் பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டு.” தம்முடைய ராஜ்ய ஆட்சியின் கீழ் அதைச் செய்ய கடவுள் வல்லவராய் இருக்கிறார் என்பதை நிரூபித்து காட்டுவதற்கு, பூமியில் இருக்கையில் இயேசு மரித்தோரை உயிரோடு எழுப்பினார்.

36 உயிர்த்தெழுதல் என்ற எண்ணம் உங்களுக்கு நம்புவதற்கு கடினமாக இருக்கிறதா? ஆனால் வெகு காலத்திற்கு முன்பு மரித்த ஆட்களை இன்றுங்கூட நீங்கள் டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் பார்க்க முடிகிறது. அவர்களுடைய குரல்களை கேட்கிறீர்கள், செயல்களைக் காண்கிறீர்கள். மேலும் அவர்களுடைய தனிச் சுபாவங்களைக் கவனிக்கிறீர்கள். டெலிவிஷன் நாடாவில் இப்பேர்ப்பட்ட காரியங்களை அற்ப மனிதர் பத்திரப்படுத்தி வைக்கக்கூடுமானால், சகல ஞானமுள்ள கடவுளுக்கு, தாம் மறுபடியும் சிருஷ்டிக்க விரும்பும் ஒவ்வொரு தனி ஆளின் தனிச்சிறப்பான பண்புகளையும் சுபாவங்களையும் பற்றிய விவரமான ஒரு பதிவைத் தம்முடைய ஞாபகத்தில் வைப்பது அதிக கடினமாக இருக்காது. அவ்வாறு அவர் பதிவு செய்திருக்கிறார், அப்பேர்ப்பட்ட மரித்த ஆட்களை அவர் மறுபடியும் உயிருக்கு கொண்டு வருவார். இந்த விதத்தில் அவர்களும் கடவுளுடைய புதிய ஒழுங்கில் வாழும் வாய்ப்பைப் பெறுவார்கள். மேலுமாக, கல்லறைகளை வெறுமையாக்குவதன் மூலமும், சுதந்தரிக்கப்பட்ட வியாதி, முதிர்வயது, மரணம் ஆகியவற்றிலிருந்து ஆட்களை சுகப்படுத்துவதன் மூலமும், கடவுள் உண்மையில் என்றுமாக “மரணத்தை ஜெயமாக விழுங்குவார்.” (ஏசாயா 25:8) இப்படியாக, ஜனங்கள் நித்தியமாக வாழ முடியும்!

37 இவ்வளவுகாலமாக இருந்து வந்திருக்கும் கெட்ட நிலைமைகளை கடவுள் தம்முடைய ராஜ்யத்தின் மூலம் முழுவதுமாக மாற்றுவார்! கடந்த காலத்தில் நாம் அனுபவித்திருக்கும் எந்தத் தீங்கையும் ஈடு செய்வதற்கும் பெரிதான ஆசீர்வாதங்களை நம்மேல் பொழிவதன் மூலம் எவ்வளவாக நம்மில் அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்று நித்திய காலத்திற்கும் காட்டுவார். நாம் முன்பு இந்த ஒழுங்கு முறையில் அனுபவித்த கஷ்டங்கள், நம் நினைவிலிருந்து மங்கிவிடும். கடவுளுடைய வாக்கு என்னவெனில், “நான் புதிய வானத்தையும் [மனிதவர்க்கத்தின் மீது ஒரு புதிய பரலோக அரசாங்கம்] புதிய பூமியையும் [ஒரு நீதியான மானிட சமுதாயம்] சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்.” (ஏசாயா 65:17, 18) நமக்கு முன் வெகு அருகில் இப்பேர்ப்பட்ட மகத்தான ஆசீர்வாதங்கள் இருக்கையில், “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்,” என்று பைபிள் ஏன் சொல்லுகிறது என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள முடியும். இது நியாயமல்லவா? ஏனெனில் “இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:4.

கடவுளுக்கு அக்கறை உண்டு—நமக்கு உண்டா?

38 சீக்கிரத்தில் கடவுள் துன்மார்க்கத்திற்கு ஒரு முடிவு கொண்டு வந்து ஒரு மகிழ்ச்சிகரமான புதிய ஒழுங்கை கொண்டு வருவார் என்ற உண்மை, அவர் நம்மைப் பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதை காட்டுகிறது. ஆனால் நாம் அவரில் அக்கறையுள்ளவராக இருக்கிறோமா? அப்படியானால், நாம் அதைக் காட்டவேண்டும். நாம் என்ன செய்யவேண்டும்? பைபிள் இவ்வாறு சொல்லுகிறது: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம், தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” (1 யோவான் 2:17) தம்முடைய புதிய ஒழுங்கில் வாழும் மக்கள் தம்முடைய சித்தத்தை செய்து, தம்முடைய நீதியான அரசாட்சிக்கு கீழ்ப்படிந்து “புதிய பூமியை” வசிப்பதற்கு ஒரு நேர்த்தியான இடமாக்க உதவுவார்கள். கடவுளுடைய ஆட்சியை எதிர்ப்பவர்கள் தொந்தரவு செய்பவர்களாகவே இருப்பார்கள், ஆகையால் அவர்கள் அங்கு வாழ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

39 கடவுளுடைய நீதியான ஒழுங்கு முறையில் நீங்கள் வாழ விரும்புகிறீர்களா? ஜீவனைப் பெறுவதற்கு கடவுளுடைய தேவைகள் என்னவென்பதை நீங்கள் முதலாவது கற்றுக்கொள்ள வேண்டும். அது உங்களிடம் அதிகம் கேட்பதாய் இருக்குமா? பூங்காவனம் போன்ற சுற்றுப்புறத்தில் ஓர் அழகான வீடு உங்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டால், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள உங்களை எப்படி தகுதியுள்ளவர்களாக்கிக் கொள்ளலாமென்று கண்டுபிடிக்க நேரம் செலவிட மாட்டீர்களா? அவருடைய சித்தம் என்னவென்று நாம் தேடி கண்டுபிடித்து அதைச் செய்தோமானால், கடவுளுடைய வார்த்தை அதைவிட மிக அதிகத்தைபரதீஸான பூமியில் நித்திய ஜீவனைநமக்கு அளிக்கிறது. “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்,” என்பதாக பைபிள் கூறுகிறது.—யோவான் 17:3.

40 பைபிளைக் கற்றுக்கொள்வதானது, இந்தத் தொல்லை நிறைந்த காலங்களில் அன்றாட வாழ்க்கையை நடத்த மிக அவசியமாக இருக்கும் நடைமுறையான வழிகாட்டுதலை நமக்கும் நம்முடைய குடும்பத்துக்கும் கொடுக்கும். கூடுதலாக, நிலைமைகள் ஏன் இவ்வளவு மோசமாக இருக்கின்றன, எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை சொல்வதனால், மெய்யான மன சமாதானத்தை அது நமக்கு அளிக்கிறது. எல்லாவற்றையும்விட முக்கியமாக, கடவுள் “தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர்” என்பதைக் கண்டு அவர் பேரில் மெய்யான அன்பை வளர்க்க அது உங்களுக்கு உதவும்—எபிரெயர் 11:6.

41 கடவுளுடைய புதிய ஒழுங்கில் ஜீவனைப்பெறுவதற்கான ஏற்பாடுகளைப் பற்றி மேலும் அதிகம் கற்றுக்கொள்ள உங்களுக்கு உதவி செய்ய யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய நேரத்தை இலவசமாகவும் மகிழ்ச்சியோடும் கொடுப்பார்கள். கடவுளைப் பற்றியும் பைபிளைப் பற்றியும் கேட்பதற்கு உங்களுக்கு இன்னும் அநேக கேள்விகள் இருக்கலாம். உங்களுடைய வீட்டிலேயே உங்களுடைய சொந்த பைபிளிலிருந்து அவற்றை கலந்தாலோசிக்க யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷப்படுவார்கள். பின்பு, வாழ்க்கையில் ஒரு சொந்தமான போக்கைப் பின்பற்றுவதற்கு பதிலாக, அல்லது அபூரண மனிதரின் எண்ணங்களின் பேரில் சார்ந்திருப்பதற்கு பதிலாக, இன்று கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த அறிவால் நீங்கள் வழிநடத்தப்படுவீர்கள். ஆகையால் இன்னும் நேரம் இருக்கும் போதே, கடவுளுடைய வார்த்தையில் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்திமதி சொல்லுகிறபடி செய்ய நீங்கள் உற்சாகப்படுத்தப்படுகிறீர்கள்: “கடவுளுடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் . . . ஏனெனில் அவர் உங்கள் பேரில் அக்கறையுள்ளவராக இருக்கிறார்.”—1 பேதுரு 5:6, 7, NW.

[அடிக்குறிப்புகள்]

a Unless otherwise indicated, the Bible translation used is the modern-language NW என்றால் New world Translation of Holy Scriptures என்ற ஆங்கில பைபிளாகும்.

b நியூ யார்க் டைம்ஸ், நவம்பர் 6, 1972, பக். 5.

c டான்ல்ட் ஆர். ஸ்காபி என்பவரால் பதிப்பு செய்யப்பட்ட சுற்றுப்புற சூழமைவியல் என்ற ஆங்கில புத்தகம். 1971, பக். 17.

d நியூ யார்க் போஸ்ட், மார்ச் 30, 1974, பக். 35.

[கேள்விகள்]

1, 2. (எ) முதற் பாராவிலுள்ள கேள்விகளை நீங்கள் கேட்டதுண்டா? (பி) என்ன நிலைமைகள் ஜனங்கள் அப்பேர்ப்பட்ட கேள்விகளைக் கேட்கும்படி செய்கின்றன?

3. அந்த கேள்விகளுக்கு விடைகளைக் கண்டுபிடிக்கக்கூடியவர்களாய் இருப்பது ஏன் நியாயம்?

4. கடவுள் துன்மார்க்கத்தை ஏன் அனுமதிக்கிறார் என்பதற்கு பதில் சொல்ல மிகச்சிறந்த நிலையில் இருப்பது யார்?

5. பைபிளின் ஆசிரியர் கடவுள் என்று நம்புவது நியாயமா? (2 பேதுரு 1:21; ஆபகூக் 2:2)

6. பைபிள் சரித்திரம் எவ்வளவு பழமையானது? அது நமக்கு என்ன விவரங்களை அளிக்கக்கூடும்? (லூக்கா 1:1-4; லூக்கா 3:23-38-ஐக் கவனிக்கவும்.)

7. தவறுகள் செய்யப்படும்போது, யார் மீது பழிசுமத்தப்பட வேண்டும்?

8. தீங்கானவற்றிற்குக் கடவுளைக் குற்றப்படுத்தினால் என்ன காரியம் முரண்பாடானதாகத் தோன்றுகிறது?

9. மனிதர் தவறான காரியங்கள் செய்வதன் காரணமாக கடவுள் இல்லை என்று சொல்லுவது நியாயமா? (ஏசாயா 45:18)

10. துன்மார்க்கத்துக்கு பெரும்பான்மையான பழியை நாம் யார் மேல் சுமத்த வேண்டும்?

11. குருமார் தங்களுடைய தேசத்து சேனைகளுக்காக ஜெபிப்பதனால் அந்த சேனைகள் செய்யும் யுத்தங்களுக்கு கடவுள் குற்றமுள்ளவரா? (ஏசாயா 1:15; நீதிமொழிகள் 28:9)

12. மதகுருமாரை பைபிள் ஏன் “மாயக்காரர்” என்றழைக்கிறது? (மத்தேயு 15:7-9)

13. (எ) ஆகையால், மனிதர், ஆம் மதத்தலைவர்களுங்கூட தவறுகள் செய்யும்போது கடவுள் மீது பழியைச் சுமத்தலாமா? (பி) ஆகிலும், என்ன கேள்விகள் மேலுமாகக் கேட்கப்படக்கூடும்?

14. நம்முடைய முதற் பெற்றோருக்கு கடவுள் கொடுத்த ஆரம்பத்தை விவரியுங்கள். (ஆதியாகமம் 1:26-31; 2:7-9, 15)

15. மானிட பரிபூரணம் என்பதன் அர்த்தம் என்ன? அது எதை அர்த்தப்படுத்துவதில்லை?

16. எந்த வரம்புகளுக்குள் மனித சுயாதீனம் சிறந்த விதத்தில் செயல்படும்படியாக அமைக்கப்பட்டிருந்தது? (1 பேதுரு 2:16)

17. மனிதர் கடவுள் மீது சார்ந்திருக்க வேண்டியதாக இருப்பதற்கு மற்றொரு முக்கியமான காரணம் என்ன? (சங்கீதம் 146:3; எரேமியா 17:5-9.)

18. நம்முடைய முதற் பெற்றோரில் தவறு எப்படி ஏற்பட்டது? (யாக்கோபு 1:14, 15; சங்கீதம் 36:9)

19. மனித குலம் முழுவதும் ஏன் அபூரணத்தில் பிறந்தது? (ரோமர் 5:12)

20. ஒரு சிலர் செய்யும் தவறு இத்தனை அநேகருக்கு எப்படி தீங்கு விளைவிக்கக்கூடும்?

21. மரண தண்டனையை கடவுள் ஏன் நிறைவேற்றினார், அதே சமயத்தில் அவருடைய இரக்கம் எவ்வாறு காட்டப்பட்டது?

22. துன்மார்க்கத்துக்கு வேறு யாருங்கூட பெரும் அளவான உத்தரவாதத்தை தாங்க வேண்டும்? (மத்தேயு 4:1-11; எபேசியர் 6:12)

23, 24. பிரச்னைகள் தீர்க்கப்படுவதற்கு ஏன் நேரம் எடுக்கும்?

25. பொருளாதார முன்னேற்றம் இருந்தபோதிலும், கடவுளிடமிருந்து மனிதன் தன்னைப் பிரித்துக்கொண்டது மெய் சமாதானமும் பாதுகாப்பும் கொடுத்திருக்கிறதா?

26. அனுமதிக்கப்பட்ட காலம் மனிதன் கடவுளிடமிருந்து தன்னைத் தனியே பிரித்துக் கொண்டிருப்பதைப்பற்றி என்ன வெளிக்காட்டுகிறது? (சங்கீதம் 127:1)

27. கடவுள் எவ்வளவு விரிவான மாற்றத்தை நோக்கங் கொண்டிருக்கிறார்? (நீதிமொழிகள் 2:21, 22; ரோமர் 16:20)

28. நாம் வாழும் காலத்தை பைபிள் என்னவென்று அழைக்கிறது? ஏன்? (2 தீமோத்தேயு 3:1-5, 12, 13; மத்தேயு 24:3-14)

29. இந்த ஒழுங்குமுறையின் முடிவு நெருங்கிவிட்டதென்று நமக்கு எப்படித்தெரியும்?

30. இப்போது பூமியை ஆதிக்கஞ்செய்துகொண்டிருக்கும் மனித ஆட்சியின் எல்லா ஒழுங்கு முறைகளுக்கும் என்ன நேரிடும்? (செப்பனியா 3:8; ஏசாயா 1:28)

31. மனிதவர்க்கம் முழுவதற்கும் என்ன அரசாங்கத்தைக் கடவுள் ஏற்பாடு செய்வார்? (மத்தேயு 6:9, 10)

32. கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் கீழ், சமாதானம் எவ்வளவு விரிவாக இருக்கும்? (ஏசாயா 2:2-4)

33. பூமி எவ்வாறு மாற்றியமைக்கப்படும்?

34. எவ்வித சரீர சுகப்படுத்துதல் நடக்கும்?

35, 36. மரித்த ஆட்களுக்கு கடவுளுடைய புதிய ஒழுங்கில் வாழும் வாய்ப்பு எவ்வாறு அளிக்கப்படும்? (யோவான் 5:28, 29; லூக்கா 7:11-15)

37. அநியாயமாய் மக்கள் அனுபவித்திருக்கும் எந்தத் தீங்கையும் கடவுள் பெரிதான அளவில் ஈடு செய்வார் என்று ஏன் சொல்லப்படக்கூடும்?

38. தம்முடைய புதிய ஒழுங்கில் கடவுள் எத்தகைய மக்களையே விரும்புகிறார்? (சங்கீதம் 37:37, 38)

39. உங்களுக்கு நித்திய ஜீவன் வேண்டுமானால், நீங்கள் எதைத்தேடி கண்டுபிடிக்க வேண்டும்? (நீதிமொழிகள் 2:1-6)

40. பைபிள் நமக்கு இப்போது என்ன கூடுதலான நன்மைகளை அளிக்கிறது? (2 தீமோத்தேயு 3:16, 17)

41. யெகோவாவின் சாட்சிகள் இலவசமாக உங்களுக்கு என்ன உதவியை ஏற்பாடு செய்வார்கள்?

[பக்கம் 22-ன் அட்டவணை]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

எல்லாம் ஒரே தலைமறையில்

1914

உலக யுத்தங்கள்

மாபெரும் பஞ்சங்கள்

கொள்ளை நோய்கள்

வன்முறை குற்றச் செயல்கள்

பூகோள அளவான அசுத்தம்

இந்த ஒழுங்கு முறையின் முடிவு

[பக்கம் 6-ன் படம்]

மனிதனின் ஏழ்மைக்கும் குப்பைக்கூளங்களுக்கும் கடவுளைக் குற்றப்படுத்தினோமானால் . . .

[பக்கம் 7-ன் படம்]

. . . பூமியின் அழகுக்கும் அதன் செழிப்பான வயல்வெளிகளுக்கும் நாம் யாரைப் பாராட்டுவோம்?

[பக்கம் 9-ன் படம்]

இந்தப் பூமியானது எந்த வீட்டைப் பார்க்கிலும் உயிரை ஆதரித்துக் காப்பாற்ற சிறந்த விதத்தில் முன் ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறது

[பக்கம் 9-ன் படம்]

ஒவ்வொரு வீட்டிற்கும் அதைக் கட்டினவர் ஒருவர் இருப்பதனால், கட்டாயமாகவே பூமியை உண்டாக்கினவர் ஒருவரும் இருக்கிறார்!

[பக்கம் 13-ன் படம்]

இந்தப் பூமி முழுவதையும் மனிதன் என்றுமாக மகிழ்ச்சியுடன் அனுபவிக்கக்கூடிய ஓர் அழகான பூங்காவனமாக, ஒரு பரதீஸாக மாற்ற வேண்டுமென்பது கடவுளுடைய நோக்கம் என்று பைபிள் காட்டுகிறது

[பக்கம் 14-ன் படம்]

ஒரு மின்விசிறி அதை இயக்கும் சக்தி மூலத்திலிருந்து தொடர்பறுக்கப் படுகையில் அதன் வேகம் குறைந்து, நின்றுவிடுகிறது. அதே விதமாக மனிதவர்க்கம் கடவுளிடமிருந்து விலகினபோது சீரழிவு விளைந்தது

[பக்கம் 16-ன் படம்]

ஒரு சிறு பாதுகாப்பு அம்சம் அசட்டை செய்யப்பட்டால் ஒரு பெரிய அணைக்கட்டும் இடிந்துவிழக்கூடும், நம்முடைய முதற்பெற்றோர் கடவுளுடைய சட்டத்தை மீறின போது, துன்மார்க்கமும் கஷ்டமும் வெள்ளம் போல் வர ஆரம்பித்தன

[பக்கம் 19-ன் படம்]

இரண்டு பேர் மட்டுமே உட்பட்டிருக்கையிலும் ஒரு நீதிமன்ற வழக்கு பல வாரங்கள் நீடிக்கக்கூடும். கடவுளுடைய ஆட்சி சம்பந்தப்பட்ட பிரச்னைகள் முழுவதுமாகவும் நித்திய காலத்துக்கும் தீர்க்கப்பட வேண்டும், இதற்கு போதுமான காலம் தேவை

[பக்கம் 24-ன் படம்]

கடவுளுடைய புதிய ஒழுங்கில் யுத்தம் இராது, ஏனெனில் அவர் “யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்”

[பக்கம் 25-ன் படம்]

மனிதவர்க்கம் இனி ஒருபோதும் பசி பட்டினியால் கஷ்டப்படாது

[பக்கம் 25-ன் படம்]

கடவுளுடைய ஆசீர்வாதத்துடன் பூமி ஏராளமாக பலன்தரும்

[பக்கம் 26-ன் படம்]

முதிர் வயதினர் இளமையுடனும் பரிபூரண ஆரோக்கியத்துடனும் சம்பந்தப்பட்ட ஊக்கமான நிலைக்கு மறுபடியும் கொண்டுவரப்படுவார்கள்

[பக்கம் 27-ன் படம்]

கடவுளுடைய ஞாபகத்திலுள்ள மரித்தோர் யாவரும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, தங்கள் நேசமானவர்களுடன் இணைக்கப்படுவார்கள்

[பக்கம் 29-ன் படம்]

கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் கீழ், வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கப்போவதனால், நாம் இப்போது அனுபவிக்கும் எந்த கஷ்டத்தையும் பெரிய அளவில் ஈடு செய்யும்

[பக்கம் 31-ன் படம்]

மனிதவர்க்கம் இனி ஒருபோதும் பசி பட்டினியால் கஷ்டப்படாது அழகான சூழலில் உள்ள வாழ்க்கை கொடுக்கப்பட்டால் நீங்கள் அதற்கு உங்களை தகுதியாக்கிக்கொள்ள விரும்பமாட்டீர்களா? கடவுளுடைய புதிய ஒழுங்குமுறை அதைவிட மிக அதிகத்தை அளிக்கிறது, ஆனால் நாம் எப்படி தகுதியாக்கிக்கொள்வது என்பதை கற்றுக்கொள்ளுவதற்கு நேரத்தைச் செலவிடவேண்டும்