Skip to content

அட்டைப்படக் கட்டுரை

ஆபாசம்—விளையாட்டா விஷமா?

ஆபாசம்—விளையாட்டா விஷமா?

இன்றைக்கு உலகம் ஆபாசத்தால் * நிறைந்திருக்கிறது என்றே சொல்லலாம். விளம்பரங்கள், ஃபேஷன் பத்திரிகைகள், மற்ற பத்திரிகைகள், திரைப்படங்கள், இசை, டிவி நிகழ்ச்சிகள், வீடியோ கேம்ஸ், வெப்சைட்கள், மொபைல் ஃ­­­­­போன்கள், போட்டோக்களைப் பகிர்கிற அப்ளிகேஷன்கள் என எல்லாவற்றிலுமே ஆபாசம் இருக்கிறது. முன்பைவிட இப்போதெல்லாம் ஆபாசத்தைப் பார்ப்பதும் கேட்பதும் மக்கள் மத்தியில் ரொம்ப சகஜமாக ஆகிக்கொண்டே வருகிறது. நிறைய கலாச்சாரங்களிலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.—“ ஆபாசத்தைப் பற்றிய உண்மைகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

ஆபாசத்தைப் பற்றிய பார்வை மாறிக்கொண்டே இருக்கிறது. “அப்பட்டமான, ரொம்பவே அசிங்கமான படங்களாக பார்க்கப்பட்டவை இப்போது ரொம்ப சாதாரணமாகிவிட்டது” என்று பேராசிரியர் கெயில் டைன்ஸ் எழுதுகிறார்.

ஆபாசத்தைப் பற்றிய உங்களுடைய கருத்து என்ன? டைம் பாஸ் பண்ணுவதற்காக அதைப் பார்ப்பதில் தவறில்லை என்று நினைக்கிறீர்களா? அல்லது, அது விஷம் என்று நினைக்கிறீர்களா? இயேசு சொன்னதைக் கொஞ்சம் யோசித்துபாருங்கள்: ”நல்ல மரமெல்லாம் நல்ல கனியைக் கொடுக்கும், கெட்ட மரமெல்லாம் கெட்ட கனியைக் கொடுக்கும்.” (மத்தேயு 7:17) ஆபாசம் எப்படிப்பட்ட கனியைக் கொடுக்கிறது என்று நினைக்கிறீர்கள்? இதற்குப் பதில் தெரிந்துகொள்ள சில கேள்விகளை இப்போது பார்க்கலாம்.

ஆபாசம் எப்படி ஒருவரைப் பாதிக்கிறது?

ஆராய்ச்சியாளர்களின் கருத்து: ஆபாசத்தைப் பார்க்கிறவர்கள் அதற்கு அடிமையாகவே ஆகிவிடுவார்கள். போதைப்பொருளைப் போல ஆபாசம் மக்களை அடிமையாக்கிவிடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

இன்டர்நெட்டில் வருகிற ஆபாசத்துக்கு அடிமையாக இருந்த ப்ரெயன் * இப்படிச் சொல்கிறார்: ”என்னால அத பாக்காம இருக்கவே முடியாது. ஆபாசம்ங்குற போதையில நான் மூழ்கியிருந்தேன். நான் பண்றது தப்புணு எனக்கு தோணும். அப்போல்லாம் எனக்கு தலையே வெடிக்கிற மாதிரி இருக்கும். இந்த பழக்கத்த நிறுத்துறதுக்காக பல வருஷம் போராடுனேன். ஆனாலும் முடியல!“

ஆபாசத்தைப் பார்க்கிறவர்கள், தங்களுக்கு அந்தப் பழக்கம் இருக்கிறது என்பதை வெளியே சொல்ல மாட்டார்கள்; அதை மூடி மறைப்பார்கள். அதனால், இந்தப் பழக்கம் இருக்கிறவர்கள் தங்களையே தனிமைப்படுத்திக் கொள்வார்கள்; கூனிக்குறுகி போவார்கள். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு மனச்சோர்வு, மன பதற்றம், கோபம் இவையெல்லாம்கூட இருக்கும். சிலருக்குத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணங்கள்கூட இருக்கும். செர்கே என்பவருக்கு தினமும் தன்னுடைய ­ஃபோனில் ஆபாசத்தை டவுன்லோட் செய்கிற பழக்கம் இருந்தது. அவர் இப்படிச் சொல்கிறார், ”நான் எப்பவும் என்னைப் பத்தியே யோசிச்சிட்டு இருப்பேன். ஆபாசத்தை எப்படியாச்சும் பாத்தே ஆகணுங்குற வெறி எனக்குள்ள இருந்துச்சு. சிலசமயத்துல ஏன்தான் வாழ்றோனுகூட தோணும், குற்றவுணர்வு வாட்டி எடுக்கும். ரொம்ப தனியா இருக்குற மாதிரி இருக்கும். எதுலயோ மாட்டிக்கிட்டோன்ற மாதிரி எனக்கு தோணும். மத்தவங்ககிட்ட உதவி கேட்கக்கூட ரொம்ப சங்கடமா, பயமா இருக்கும்.“

திடீரென்று ஒரு சில நொடிக்கு கண் முன்பு வந்து போகிற ஆபாச படங்கள்கூட ரொம்ப மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆபாச படங்கள் மூளையில் அப்படியே பதிந்துவிடும். அதை அவ்வளவு சுலபமாக மறந்துவிடவே முடியாது என்று ஆபாசத்தின் ஆபத்துகளைப் பற்றி ஆராய்ச்சி செய்கிற டாக்டர் ஜுடித் ரேய்ஸ்மன் சொல்லியிருக்கிறார். ஆபாச வெப்சைட்டைப் பார்க்கிற பழக்கம் இருந்த சூசன் இப்படிச் சொல்கிறார், ”நான் பாத்த படங்கள் பசுமரத்தாணி மாதிரி என் மனசுல அப்படியே பதிஞ்சுடுச்சு. கொஞ்சம்கூட எதிர்பாக்காத நேரத்துல திடீர்னு அந்தக் காட்சிகள் எனக்கு ஞாபகம் வந்திடும். இது என் மனசுல இருந்து போகவே போகாது போலனு எனக்கு தோணும்.“

சுருக்கமாகச் சொன்னால்: ஆபாசம் ஒருவரை அடிமையாக்கி அவருக்கு நிறைய பாதிப்புகளைக் கொண்டுவரும்.—2 பேதுரு 2:19.

ஆபாசம் குடும்பங்களை எப்படிப் பாதிக்கிறது?

ஆராய்ச்சியாளர்களின் கருத்து: ”தம்பதிகளையும் குடும்பங்களையும் ஆபாசம் பிரிக்கிறது.“—வென்டி மற்றும் லாரி மால்ட்ஸ் எழுதிய தி பார்ன் ட்ரப்.

ஆபாசம் திருமண பந்தத்தையும் குடும்ப உறவுகளையும் நாசமாக்குகிறது. எப்படி?

  • கணவன் மனைவிக்கு இடையில் இருக்கிற பந்தம்... நம்பிக்கை... அன்பு... இவை எல்லாவற்றையும் ஆபாசம் சுக்குநூறாக உடைத்துவிடும்.—நீதிமொழிகள் 2:12-17.

  • ஆபாசம் ஒருவரை சுயநலமாக நடந்துகொள்ள வைக்கும், உணர்ச்சிகளே காட்டாத ஒரு ‘ஜடமாக’ மாற்றிவிடும். துணைமேல் திருப்தி இல்லாமலும் செய்துவிடும்.—எபேசியர் 5:28, 29.

  • ஆபாசத்தைப் பார்ப்பது, செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடுவதைப் போல பகல்கனவு காண வைக்கும். அது சம்பந்தப்பட்ட ஆசைகளையும் தூண்டிவிடும்.—2 பேதுரு 2:14.

  • ஆபாசத்தைப் பார்க்கிற பழக்கம் இருப்பவர்கள், இயல்புக்கு மாறாக, தப்பான விதத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ளச் சொல்லி அவர்களின் துணையைக் கட்டாயப்படுத்துவார்கள்.—எபேசியர் 5:3, 4.

  • ஆபாசத்தைப் பார்ப்பது, தங்களுடைய கணவனுக்கோ மனைவிக்கோ துரோகம் செய்ய வைக்கலாம். இது மனதளவில்கூட நடக்கலாம்.—மத்தேயு 5:28.

திருமணமான தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் ‘துரோகம் செய்யக்கூடாது’ என்று பைபிள் சொல்கிறது. (மல்கியா 2:16) இப்படித் துரோகம் செய்தால் அது குடும்ப வாழ்க்கையைச் சின்னாபின்னமாகிவிடும். கடைசியில், விவாகரத்தில் போய் முடிந்துவிடலாம். இதனால் அவர்களுடைய குழந்தைகள்கூட பாதிக்கப்படலாம்.

ஆபாசம் பிள்ளைகளுடைய கண்ணில் பட்டுவிட்டால், அது அவர்களுடைய மனதில் நஞ்சை விதைத்துவிடலாம். நாம் முன்பு பார்த்த ப்ரெயன் இப்படிச் சொல்கிறார், ”எனக்கு பத்து வயசு இருந்தப்போ, நான் கண்ணாமூச்சி விளையாடிட்டு இருந்த சமயத்துல எங்க அப்பா வைச்சிருந்த ஆபாச பத்திரிகைகள் என் கண்ல பட்டுச்சு. அதுல இருக்குற படங்கள நானும் ரகசியமா பாக்க ஆரம்பிச்சேன். எனக்கு ஏன் அது அவ்வளவு பிடிச்சுதுனெல்லாம் தெரியல. ஆனா நான் ரகசியமா அத தொடர்ந்து பாத்துட்டே இருந்தேன். அந்த மோசமான பழக்கம் அப்போ ஆரம்பிச்சு, நான் பெரியவன் ஆகுற வரைக்கும் இருந்துச்சு.“ ஆபாசத்துக்கு அடிமையான பிள்ளைகள் சின்ன வயதிலேயே செக்ஸ் வைத்துக்கொள்ள ஆரம்பிக்கலாம், நிறைய பேரிடம் செக்ஸ் வைத்துக்கொள்ளவும் ஆரம்பிக்கலாம் என்று ஒரு ஆராய்ச்சி காட்டுகிறது. அதுமட்டுமல்ல, செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்கள் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளலாம் அல்லது செக்ஸ் சம்பந்தப்பட்ட குற்றங்களையும்கூட செய்துவிடலாம். பிள்ளைகள் உணர்ச்சி ரீதியிலும், மன ரீதியிலும் நிலையில்லாமல் போய்விடலாம் என்றும் அந்த ஆராய்ச்சி சொல்கிறது.

சுருக்கமாகச் சொன்னால்: ஆபாசம் ஒரு விஷம். அன்பான குடும்பத்தையே அது சிதைத்துவிடும். இதயத்தைச் சுக்குநூறாக உடைத்துவிடும்.—நீதிமொழிகள் 6:27.

ஆபாசத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

பைபிளின் கருத்து: “பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, கட்டுக்கடங்காத காமப்பசி, கெட்ட ஆசை, சிலை வழிபாட்டுக்குச் சமமான பேராசை ஆகியவற்றைத் தூண்டுகிற உங்களுடைய உடல் உறுப்புகளை அழித்துப்போடுங்கள்.”—கொலோசெயர் 3:5.

யெகோவா * ஆபாசத்தை வெறுக்கிறார். ஆனால், செக்ஸை அவர் எதிர்ப்பதில்லை. ஏனென்றால், மனிதர்களைப் படைக்கும்போதே செக்ஸ் வைத்துக்கொள்ளும் திறனை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், திருமணமான ஆணும் பெண்ணும் மட்டும்தான் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். தம்பதிகள் ஒருவரைவொருவர் சந்தோஷப்படுத்திக்கொள்வதற்கும், உணர்ச்சி ரீதியில் நெருக்கமாவதற்கும், பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்கும் செக்ஸை ஒரு பரிசாக யெகோவா கொடுத்திருக்கிறார்.—யாக்கோபு 1:17.

அப்படியென்றால், யெகோவா ஏன் ஆபாசத்தை இந்தளவுக்கு வெறுக்கிறார்? சில காரணங்களைப் இப்போது பார்க்கலாம்.

  • ஆபாசம் நம்முடைய வாழ்க்கையை நாசமாகிவிடும் என்று அவருக்குத் தெரியும்.—எபேசியர் 4:17-19.

  • அவருக்கு நம்மேல் அன்பு இருக்கிறது. நம்மை ஆபத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறார்.—ஏசாயா 48:17, 18.

  • திருமண பந்தத்துக்கும் குடும்ப உறவுகளுக்கும் ஆபத்து வந்துவிட கூடாது என்று யெகோவா நினைக்கிறார்.—மத்தேயு 19:4-6.

  • ஒழுக்க விஷயத்தில் நாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். மற்றவர்களுக்கு இருக்கிற உரிமைகளை நாம் மதிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்.—1 தெசலோனிக்கேயர் 4:3-6.

  • செக்ஸ் என்ற பரிசை நாம் மதிக்க வேண்டும் என்றும், அதனுடைய புனிதத்தன்மையை நாம் கெடுத்துவிடக் கூடாது என்றும் அவர் நினைக்கிறார்.—எபிரெயர் 13:4.

  • ஆபாசம் இயற்கைக்கு மாறானது, சுயநலமானது என்று யெகோவா நினைக்கிறார். அதுமட்டுமல்ல, சாத்தான் செக்ஸை எவ்வளவு கேவலப்படுத்தி இருக்கிறான் என்பதற்கு ஆபாசம் ஒரு எடுத்துக்காட்டு.—ஆதியாகமம் 6:2; யூதா 6, 7.

சுருக்கமாகச் சொன்னால்: கடவுளோடு ஒருவருக்கு இருக்கிற நட்பையே ஆபாசம் கெடுத்துவிடும்.—ரோமர் 1:24.

ஆபாசம் என்ற படுகுழியில் இருந்து வெளியே வர நினைப்பவர்களுக்கு யெகோவா உதவி செய்ய தயாராக இருக்கிறார். ”யெகோவா இரக்கமும் கரிசனையும் உள்ளவர். அவர் சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர். நாம் எப்படி உருவாக்கப்பட்டோம் என்பதை அவர் நன்றாக அறிந்திருக்கிறார். நாம் மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 103:8, 14) மனத்தாழ்மையாக இருக்கிறவர்கள் யெகோவாவிடம் உதவி கேட்டால் ”சரியான சமயத்தில் இரக்கத்தையும் அளவற்ற கருணையையும்“ பெற்றுக்கொள்வார்கள்.—எபிரெயர் 4:16; ” ஆபாசம் என்ற படுகுழியில் இருந்து வெளியே வர...“ என்ற பெட்டியைப் பாருங்கள்.

எக்கச்சக்கமான பேர் கடவுளுடைய உதவியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். கடவுள் கொடுத்த உதவி அவர்களுக்கு உண்மையிலேயே பிரயோஜனமாக இருந்ததா? கெட்ட பழக்கங்களில் இருந்து வெளியே வந்த சிலரைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: ”நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பெயராலும் கடவுளுடைய சக்தியாலும் சுத்தமாகக் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டீர்கள்.” (1 கொரிந்தியர் 6:11) “என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது” என்று அப்போஸ்தலன் பவுலைப் போலவே இவர்களும் சொல்கிறார்கள்.—பிலிப்பியர் 4:13.

ஒருகாலத்தில் ஆபாசத்துக்கு அடிமையாக இருந்து, பிறகு அதிலிருந்து வெளியே வந்த சூசன் இப்படிச் சொல்கிறார்: ”அந்த பழக்கத்த ஒரேடியா விடுறதுக்கு யெகோவானால மட்டும்தான் நமக்கு உதவி செய்ய முடியும். நாம அவர்கிட்ட உதவிக்காக கேட்டா, அவர் கண்டிப்பா உதவி செய்வார். அவரோட பார்வையில சுத்தமா இருக்குறதுக்கும் உதவி செய்வாரு. அவரு நம்மள கைவிடவே மாட்டாரு.“

^ ‘ஆபாசம்’ என்ற வார்த்தை அப்பட்டமான இழிவான செக்ஸையும் செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சித்தரிப்பதையும் குறிக்கிறது. படங்கள், அச்சிடப்பட்ட தகவல்கள், பதிவுசெய்யப்பட்ட அல்லது நேரடியான இசை, பாடல்கள், ஆபாச பேச்சுகள் போன்றவை இதில் அடங்கும். இவற்றைப் பார்ப்பவர், படிப்பவர் அல்லது கேட்பவரின் செக்ஸ் ஆசைகள் தூண்டிவிடப்படுகின்றன.

^ இந்தக் கட்டுரையில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன.

^ பைபிளில் கடவுளுடைய பெயர் யெகோவா என்று சொல்லப்பட்டிருக்கிறது.