Skip to content

நரக தண்டனை தேவ நீதியா?

நரக தண்டனை தேவ நீதியா?

நரக தண்டனை தேவ நீதியா?

யாராவது சித்திரவதை செய்யப்படுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இப்படியொரு நிலைமை உங்களுக்கு ஒருபோதும் வரவே கூடாது. வேண்டுமென்றே ஒருவரை வாட்டி வதைப்பதை கண்ணால் பார்த்து சகித்துக்கொள்ளவே முடியாது, அது நமக்கே வெறுப்புண்டாக்கும். ஆனால், மனிதர்களை கடவுள் சித்திரவதை செய்கிறார் என்று சொல்லப்படுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதை உங்களால் கற்பனையாவது செய்ய முடிகிறதா? ஆனால் எரிநரக போதனை இதைத்தான் அர்த்தப்படுத்துகிறது. அநேக மதங்களில் இது அதிகாரப்பூர்வமான ஒரு கோட்பாடு.

இந்தப் பயங்கர காட்சியை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள்: பழுக்க காய்ச்சப்பட்ட ஓர் இரும்பு சட்டி. அதில் ஒருவர் வறுக்கப்படுகிறார். அப்படியே வேதனையில் துடிதுடிக்கிறார், இரக்கம் காட்டும்படி கதறுகிறார், ஆனால் யாருமே கண்டுகொள்வதில்லை. இந்தச் சித்திரவதை வினாடிக்கு வினாடி, நிமிடத்திற்கு நிமிடம், மணிக்கு மணி, நாளுக்கு நாள் என மேலும் மேலும் தொடர்கிறது​—⁠இடைவெளியே இல்லை!

இவர் எப்பேர்ப்பட்ட குற்றம் செய்திருந்தாலும்சரி, இவருக்காக உங்கள் உள்ளம் உருகாதா? இந்தச் சித்திரவதையை கட்டளையிட்ட மனிதரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? அவர் அன்புள்ளம் கொண்டவராக இருக்க முடியுமா? இருக்கவே முடியாது! அன்பு கருணையுடையது, இரக்கம் படைத்தது. ஓர் அன்பான தகப்பன் தன்னுடைய பிள்ளைகளை தண்டிக்கலாம், ஆனால் அவர்களை ஒருபோதும் சித்திரவதை செய்யமாட்டார்!

ஆனால், பாவிகளை எரிநரகத்தில் கடவுள் நித்திய காலமாய் சித்திரவதை செய்கிறார் என்றே அநேக மதங்கள் போதிக்கின்றன. இதுவே தேவ நீதி என வாதாடுகின்றன. இது உண்மையானால், நித்திய காலமாய் வதைக்கப்படும் படுபயங்கரமான இடத்தை யார் படைத்தார்? அங்கே இழைக்கப்படும் தாங்க முடியா வேதனைகளுக்கு யார் பொறுப்பு? பதில் பளிச்சென்று தெரியலாம். உண்மையிலேயே இப்படிப்பட்ட ஓர் இடம் இருந்தால், கடவுளே அதை படைத்தவராக இருக்க வேண்டும், ஆகவே அங்கு நடக்கும் எல்லாவற்றிற்கும் அவரே பொறுப்பாளராகவும் இருப்பார்.

இதை உங்களால் ஜீரணிக்க முடிகிறதா? பைபிள்  a சொல்கிறது: “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:⁠8) ஓரளவு பண்புள்ள மனுஷனே மிகக் கொடுமை என கருதும் சித்திரவதையை அன்பின் கடவுள் செய்வாரா? நிச்சயமாகவே மாட்டார்!

நியாயமற்ற போதனை

இருப்பினும், பொல்லாதவர்கள் எரிகிற நரகத்திற்குப் போவார்கள், அங்கே என்றென்றும் வதைக்கப்படுவார்கள் என்றே அநேகர் நம்புகிறார்கள். இந்தப் போதனை பகுத்தறிவுக்கு ஏற்றதாக இருக்கிறதா? மனிதனின் வாழ்நாள் 70 அல்லது 80 ஆண்டுகளே. வாழ்க்கை பூராவும் ஒருவர் மிகவும் கொடிய செயல்கள் செய்திருந்தாலும், நித்திய காலமாக வதைப்பது நியாயமான தண்டனையாக இருக்குமா? இருக்காது. வாழ்நாளில் செய்த சில பாவங்களுக்காக ஒரு மனிதனை என்றென்றும் வதைப்பது பெருத்த அநியாயமாகவே இருக்கும்.

நாம் இறந்தபின் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி யாருக்குத் தெரியும்? கடவுள் மாத்திரமே இந்தத் தகவலை கொடுக்க முடியும், மேற்குறிப்பிடப்பட்ட அவருடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளில் இத்தகவலை கொடுத்திருக்கிறார். இதோ, பைபிள் என்ன சொல்கிறது என்பதை வாசியுங்கள்: ‘[மிருகங்கள்] சாகிறது போலவே [மனுஷனும்] சாகிறான்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; . . . எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்கே திரும்புகிறது.’ (பிரசங்கி 3:19, 20) இங்கே எரிநரகத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. மனிதர்கள் மாளும்போது மண்ணுக்குத் திரும்புகிறார்கள், அதாவது இல்லாமல் போகிறார்கள்.

ஒருவர் வதைக்கப்பட வேண்டுமாகில், அவர் உணர்வுள்ளவராக இருக்க வேண்டும். இறந்தவர்கள் உணர்வுடன் இருக்கிறார்களா? இல்லை. “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.” (பிரசங்கி 9:⁠5) மரித்தவர்கள், அதாவது ‘ஒன்றும் அறியாதவர்கள்’ எரிநரகத்தின் வேதனைகளை அனுபவிப்பது சாத்தியமற்றது.

தீங்கிழைக்கும் கோட்பாடு

உண்மையோ பொய்யோ, எரிநரக கோட்பாடு பயனுள்ளது என சிலர் நம்புகிறார்கள். ஏன்? அது தப்பு பண்ணுவதை தடுக்கும் என சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையா? மற்ற இடங்களைவிட எரிநரகத்தை நம்புகிற மக்கள் வாழும் பகுதியில் குற்றச்செயலின் அளவு குறைவாக இருக்கிறதா? நிச்சயமாகவே இல்லை! சொல்லப்போனால், இந்த எரிநரக கோட்பாடு மிகவும் தீங்கிழைக்கக்கூடியது. மக்களை கடவுள் வதைக்கிறார் என நம்புகிற ஒருவர் வதைப்பதை வெறுப்பூட்டுவதாக கருதுவாரா? அப்படி கருத மாட்டார். ஏனெனில் மூர்க்கமான கடவுளை நம்புகிறவர்கள் பெரும்பாலும் அவர்களுடைய கடவுளைப் போல மூர்க்கமானவர்களாகவே ஆகிறார்கள்.

நியாயமான ஒரு நபர் இந்த விஷயத்தை எந்தக் கோணத்தில் பார்த்தாலும்சரி, வதைக்கப்படும் ஒரு நரகத்தை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது நியாயத்திற்கு முரணாக இருக்கிறது. மனித இயல்பு இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மிக முக்கியமாக, இப்படிப்பட்ட ஓர் இடம் இருப்பதாக கடவுளுடைய வார்த்தை சொல்வதில்லை. ஒருவன் மரிக்கையில், “அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.”​—சங்கீதம் 146:⁠4.

பாவத்திற்கு தண்டனை என்ன?

நம்முடைய பாவங்களுக்கு நாம் தண்டிக்கப்பட மாட்டோம் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? அப்படியில்லை. பரிசுத்தமான நம் கடவுள் பாவிகளை தண்டிக்கிறார், ஆனால் அவர்களை வதைப்பதில்லை. பாவிகள் மனந்திரும்புகையில், அவர்களை மன்னிக்கிறார். பாவத்திற்கு தண்டனை என்ன? பைபிள் நேரடியான பதிலை தருகிறது: “பாவத்தின் சம்பளம் மரணம்.” (ரோமர் 6:23) உயிர்​—⁠இது கடவுளிடமிருந்து வரும் பரிசு. நாம் பாவம் செய்கையில் அந்தப் பரிசுக்குத் தகுதியானவர்கள் அல்ல, அதனால் மரிக்கிறோம்.

‘அது எப்படி நியாயம்? ஏன், எல்லாருந்தான் சாகிறார்களே!’ என்று நீங்கள் கேட்கலாம். அது உண்மைதான், ஏனென்றால் நாம் எல்லாருமே பாவிகள். சொல்லப்போனால், ஒருவரும் ஜீவனைப் பெற தகுதியானவர்கள் அல்ல. “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.”​—ரோமர் 5:⁠12.

இப்பொழுது நீங்கள் ஒருவேளை இப்படி சிந்திக்கலாம்: ‘நாம் எல்லாருமே பாவம் செய்கிறோம், அதனால் சாகிறோம் என்றால், நாம் ஏன் நல்லவர்களாக இருக்க முயற்சி பண்ணனும்? கடவுள் சொல்கிறபடி நடக்க முயற்சிக்கிற மனுஷனுக்கும் தப்புதண்டா செய்கிற மனுஷனுக்கும் ஒரேமாதிரியான தீர்ப்பு மாதிரி தோன்றுகிறதே.’ ஆனால் அது உண்மை அல்ல. நாம் அனைவரும் பாவிகளாக இருக்கிறபோதிலும், மனப்பூர்வமாக மனந்திரும்பி தங்களுடைய வழிகளை மாற்றிக்கொள்ள முயற்சி செய்பவர்களை கடவுள் மன்னிக்கிறார். ‘மனதை புதிதாக்குவதற்கும்’ நல்லது செய்வதற்கும் நாம் எடுக்கிற முயற்சிகளுக்கு அவர் பலனளிக்கிறார். (ரோமர் 12:2) இந்த உண்மைகளே மகத்தான நம்பிக்கைக்கு ஆதாரமாக விளங்குகின்றன.

நல்லவர்களுக்கு பலன்

நாம் மரிக்கையில் இல்லாமல் போகிறோம். ஆனால் அத்தோடு கதை முடிந்தது, இனிமேல் எந்த நம்பிக்கையுமே இல்லை என்பதை இது அர்த்தப்படுத்தாது. தான் மரிக்கையில் மண்ணுக்கு (ஷியோல்) போவார் என்பதை உண்மையுள்ள மனிதனாகிய யோபு அறிந்திருந்தார். ஆனால் அவர் கடவுளிடம் செய்த ஜெபத்தைக் கேளுங்கள்: “நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? . . . என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்.”​—யோபு 14:13-15.

மரணம்வரை உண்மையுடன் இருந்தால், கடவுள் தன்னை நினைவுகூர்ந்து உயிர்த்தெழுப்புவார் என யோபு நம்பினார். பூர்வ காலங்களில் வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்கள் அனைவரின் நம்பிக்கையும் இதுவே. பின்வருமாறு சொன்னபோது இயேசுதாமே இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தினார்: “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.”—யோவான் 5:28, 29.

இந்த உயிர்த்தெழுதல் எப்பொழுது ஆரம்பிக்கும்? பைபிள் சொல்கிறபடி, வெகு விரைவிலேயே. 1914-⁠ல் இந்த உலகம் ‘கடைசி நாட்களுக்குள்’ நுழைந்தது என்பதை பைபிள் தீர்க்கதரிசனம் சுட்டிக்காட்டுகிறது. (2 தீமோத்தேயு 3:1) இதைத்தான் ‘உலகத்தின் முடிவு’ என பலர் விவரிக்கின்றனர். வெகு சீக்கிரத்திலேயே கடவுள் இந்தப் பொல்லாப்பை நீக்கி, பரலோக ஆட்சியின்கீழ் புதியதோர் உலகை ஸ்தாபிப்பார்.—மத்தேயு, அதிகாரம் 24; மாற்கு, அதிகாரம் 13; லூக்கா, அதிகாரம் 21; வெளிப்படுத்துதல் 16:14.

இதன் பலனாக இந்த முழு பூமியும் பூங்காவனம் போன்று மாறும்; கடவுளுடைய வழியில் நடப்பதற்கு மனப்பூர்வமாய் முயற்சி செய்திருப்போர் அங்கே குடியிருப்பார்கள். பொல்லாதவர்கள் நரகத்தில் வதைக்கப்பட மாட்டார்கள், ஆனால் வரக்கூடிய அந்தப் புதிய பூமியில் அவர்களுக்கு எந்தப் பங்குமில்லை. சங்கீதம் 37:10, 11-⁠ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”

இவையனைத்தும் வெறும் கனவா? இல்லை, இது கடவுளுடைய வாக்குறுதி. பைபிளில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”​—வெளிப்படுத்துதல் 21:3, 4.

இந்த வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்களா? நம்ப வேண்டும். எப்போதுமே கடவுளுடைய வார்த்தை நிறைவேறுகிறது. (ஏசாயா 55:11) மனிதவர்க்கத்திற்கான கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி இன்னும் அதிகம் கற்றுக்கொள்ளும்படி உங்களை உந்துவிக்கிறோம். யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ ஆவலாய் இருக்கிறார்கள். அவர்களுடைய உதவியைப் பெற விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசங்களில் ஒன்றிற்கு எழுதும்படி உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

மொழிபெயர்ப்பு இன்னதென்று குறிப்பிடப்பட்டிராத வேதவசன மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. NW என்பது நவீன ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன்.

[அடிக்குறிப்புகள்]

a தோரா, சங்கீதங்கள், சுவிசேஷகங்கள் (தவ்ராத், ஜபூர், இன்ஜீல்கள்) என இஸ்லாமிய மதத்தில் அறியப்பட்டுள்ள புத்தகங்கள் பைபிளில் உள்ளன. குர்ஆனில் குறைந்தபட்சம் 64 வசனங்களாவது இந்தப் புத்தகங்களை கடவுளுடைய வார்த்தை என அழைக்கின்றன; அவற்றை வாசித்து, அவற்றின் கட்டளைகளின்படி நடப்பதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறுகின்றன. தோரா, சங்கீதங்கள், சுவிசேஷகங்கள் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன என சிலர் அடித்துக் கூறுகின்றனர். ஆனால், இப்படி வாதாடுபவர்கள் கடவுளால் அவருடைய வார்த்தையை பாதுகாக்க முடியவில்லை என்று சொல்வதற்கு சமமாகும்.