இயேசு கடவுளா?
”கிறிஸ்தவ மதத்தின் முக்கியமான போதனையே திரித்துவம் தான்“ என்று நிறையபேர் நினைக்கிறார்கள். திரித்துவத்தை நம்புகிறவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஒரே கடவுளாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். கத்தோலிக்க மதத்தில் பெரிய பொறுப்பில் இருக்கும் (Cardinal) ஜான் ஓ கானர் திரித்துவத்தைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: ”இது ஒரு புரியாத புதிர் என்று நமக்குத் தெரியும். அதனால் இதை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.“ திரித்துவத்தை புரிந்துகொள்வது ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது?
”இது ஒரு பைபிள் போதனை இல்லை. பைபிளில் எந்த வசனத்திலும் இதைப் பற்றி சொல்லவில்லை“ என்று தி இல்லஸ்ட்ரேட்டட் பைபிள் டிக்ஷ்னரி இதற்கான காரணத்தை சொல்கிறது. திரித்துவம் ”ஒரு பைபிள் போதனை இல்லை.“ அதனால் திரித்துவத்தை நம்புகிறவர்கள் மற்றவர்களையும் நம்ப வைப்பதற்காக வசனங்களை அவர்களுடைய இஷ்டத்துக்கு மாற்றிக்கொள்கிறார்கள், ‘பைபிளும் இப்படித்தான் சொல்கிறது’ என்று தப்பான விளக்கத்தையும் கொடுக்கிறார்கள்.
யோவான் 1:1 திரித்துவத்தைப் பற்றி சொல்கிறதா?
இப்படி அவர்கள் தவறாக புரிந்துகொள்கிற ஒரு வசனம் யோவான் 1:1. தமிழ் BSI பைபிளில் இந்த வசனத்தை பார்க்கலாம்: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது [கிரேக்கில், டோன் தேயான்], அந்த வார்த்தை தேவனாயிருந்தது [கிரேக்கில், தேயாஸ்].” இந்த வசனத்தில் தேயாஸ் அதாவது கடவுள் என்ற கிரேக்க வார்த்தை இரண்டு விதமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முதலில் சொல்லும்போது தேயான் என்ற வார்த்தைக்கு முன்பு டோன் என்ற கிரேக்க நிச்சயச் சுட்டிடைச்சொல் (definite article) பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் இந்த வசனத்தில் வரும் தேயான் என்ற வார்த்தைக்கு சர்வ வல்லமையுள்ள கடவுள் என்று அர்த்தம். ஆனால், இரண்டாவதாக வரும் தேயாஸ் என்ற வார்த்தைக்கு முன்பு எந்த வார்த்தையும் இல்லை. அப்படியென்றால் தெரியாமல் அந்த வார்த்தையை விட்டுவிட்டார்களா?
திரித்துவத்தை புரிந்துகொள்வது ஏன் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது?
யோவான் புத்தகம் கொய்னி கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்தது. அந்த மொழியில் நிச்சயச் சுட்டிடைச்சொல்லை பயன்படுத்துவதற்கு சில இலக்கண விதிமுறைகள் இருந்தன. எதையாவது அல்லது யாரையாவது (Subject) பற்றி சொல்லிவிட்டு, தொடர்ந்து அதைப் பற்றி விளக்கும்போது (Predicate, அதாவது பயனிலை) ஒரே விதமான சுட்டிடைச்சொல்லை பயன்படுத்தியிருந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று பைபிள் அறிஞர் A.T.ராபர்ட்ஸன் சொல்கிறார்: ”இரண்டும் ஒரே விஷயத்தைப் பற்றித்தான் சொல்கிறது. ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகிறது. ஒரே விதமான அர்த்தத்தைத்தான் கொடுக்கிறது“ என்று அர்த்தம். இதற்கு அவர் ஒரு உதாரணத்தையும் சொல்கிறார். மத்தேயு 13:38-ல், “நிலம் [கிரேக்கில் ஆ அக்ராஸ்], உலகம் [கிரேக்கில் ஆ காஸ்மோஸ்]” என்ற இரண்டு வார்த்தைக்கும் முன்பு ஆ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இலக்கண விதிகளை வைத்து பார்க்கும்போது இந்த வசனத்தில் உலகம் என்ற வார்த்தையும் நிலத்தைத்தான் குறிக்கிறது.
யோவான் 1:1-ல் இருப்பது போல் யாரையாவது பற்றி சொல்லும்போது சுட்டிடைச்சொல்லை பயன்படுத்திவிட்டு அவரைப் பற்றி விளக்கும்போது அதை பயன்படுத்தவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்? ”அப்படி பயன்படுத்தவில்லை என்றால் அவை இரண்டும் வித்தியாசமானது, ஒன்றல்ல, எந்த விதத்திலும் ஒன்றுக்கொன்று சமம் கிடையாது“ என்று ஜேம்ஸ் ஆலன் ஹியூவட் என்ற அறிஞர் சொல்கிறார்.
இதற்கு உதாரணமாக 1 யோவான் 1:5-ஐ பற்றி ஹியூவட் சொல்கிறார். “தேவன் ஒளியாயிருக்கிறார்” என்று அந்த வசனம் சொல்கிறது. கிரேக்கில் தேவன் என்ற வார்த்தைக்கு ஆ தேயாஸ் என்று வருகிறது. தேயாஸ் என்ற வார்த்தைக்கு முன்பு ஆ என்ற வார்த்தை வருகிறது. ஆனால், ஒளி அதாவது ஃபாஸ் என்ற வார்த்தைக்கு முன்னால் எந்த வார்த்தையும் வரவில்லை. அப்படியென்றால், ”கடவுளிடம் ஒளி இருக்கிறது என்றுதான் இங்கு சொல்லியிருக்கிறதே தவிர ஒளிதான் கடவுள் என்று இங்கு சொல்லவில்லை” என்று ஹியூவட் சொல்கிறார். இதே மாதிரி யோவான் 4:24, “தேவன் ஆவியாயிருக்கிறார் (அதாவது பார்க்க முடியாத உருவத்தில் இருக்கிறார்)” என்றும் 1 யோவான் 4:16 “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்றும் சொல்கிறது. இந்த இரண்டு வசனங்களிலும் கடவுளைப் பற்றி சொல்லும்போது அதற்கு முன்பு நிச்சயச் சுட்டிடைச்சொல் இருக்கிறது. ஆனால், அவரைப் பற்றி, ஆவி என்றும் அன்பு என்றும் விளக்கும்போது இதே சொல் வரவில்லை. அப்படியென்றால் ஆவிதான் கடவுள் என்றோ அன்புதான் கடவுள் என்றோ அர்த்தமில்லை.
“வார்த்தை“ யார்?
யோவான் 1:1-ல் ‘வார்த்தையைப்’ பற்றி விளக்கும்போது அவர் யார் என்று சொல்லவில்லை, அவர் எப்படிப்பட்டவர் என்றுதான் சொல்கிறது என நிறைய கிரேக்க அறிஞர்களும் பைபிள் மொழிபெயர்ப்பாளர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். பைபிள் மொழிபெயர்ப்பாளர் வில்லியம் பார்க்லே இப்படிச் சொல்கிறார்: ”யோவான், இந்த வசனத்தில் தேயாஸ் என்ற வார்த்தைக்கு முன்பு எந்த நிச்சயச் சுட்டிடைச்சொல்லையும் பயன்படுத்தாததால் அந்த ”வார்த்தை“ எப்படிப்பட்டவர் என்றுதான் சொல்லியிருக்கிறாரே தவிர . . . அவர்தான் கடவுள் என்று சொல்லவில்லை. எளிமையாக சொன்னால், இயேசு தான் கடவுள் என்று அவர் சொல்லவில்லை.“ ஜேசன் டேவிட் பெட்யூன் என்ற அறிஞர் இப்படிச் சொல்கிறார்: ”கிரேக்கில், யோவான் 1:1-ல் தேயாஸ் என்ற வார்த்தைக்கு முன்பு எந்த நிச்சயச் சுட்டிடைச்சொல்லையும் பயன்படுத்தவில்லை அதனால் அதைப் படிப்பவர்கள் அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி இங்கு சொல்கிறது என்றுதான் புரிந்துகொள்வார்கள். . . . கடவுளைப் போல் இருக்கிறார் என்று சொல்வதற்கும் அவர்தான் கடவுள் என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருப்பதுபோல் தேயாஸ்-க்கும் ஆ தேயாஸ்-க்கும் வித்தியாசம் இருக்கிறது. யோவான் 1:1-ல் அந்த ‘வார்த்தைதான்’ ஒரே கடவுள் என்று சொல்லவில்லை. அவர் கடவுளைப் போல் இருக்கிறவர் என்றுதான் சொல்கிறது.“ அமெரிக்கன் ஸ்டான்டர்ட் வர்ஷன் பைபிளை தயாரிக்க உதவி செய்த ஜோசப் ஹென்றி தயர் இப்படிச் சொல்கிறார்: ”லோகோஸ் [அதாவது வார்த்தை] கடவுள்தன்மை உள்ளவராக இருந்தார். அவரே கடவுள் கிடையாது.“
இயேசுவும் அவருடைய அப்பாவும் வேறு வேறு நபர்கள் என்பதை இயேசுவே தெளிவாகச் சொல்கிறார்
அப்படியென்றால் கடவுள் யார் என்று புரிந்துகொள்ளவே முடியாத அளவுக்கு அவர் ”ஒரு புரியாத புதிரா“? இயேசுவுக்கு அது ஒரு புதிராக இல்லை. இயேசு தன்னுடைய அப்பாவிடம் ஜெபம் செய்யும்போது அவருக்கும் அவருடைய அப்பாவுக்கும் இருக்கிற வித்தியாசத்தைப் பற்றி தெளிவாகச் சொன்னார். “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்.” (யோவான் 17:3) இயேசுவை நம்பினால், பைபிள் சொல்கிற உண்மைகளை புரிந்துகொண்டால், இயேசு கடவுளுடைய மகன் என்பதை நாம் ஏற்றுக்கொள்வோம். யெகோவா மட்டும்தான் ”ஒரே உண்மையான கடவுள்“ என்பதை புரிந்துகொண்டு அவரை வணங்குவோம்.