ஜனங்கள் எல்லாரும் ஒருவரையொருவர் நேசிக்கும் காலம் வருமா?
ராஜ்ய செய்தி No. 35
ஜனங்கள் எல்லாரும் ஒருவரையொருவர் நேசிக்கும் காலம் வருமா?
பிறரிடம் காட்டும் அன்பு தணிந்திருக்கிறது
எங்குத் திரும்பினாலும் உதவி கிடைக்காததால், லட்சக்கணக்கானவர்கள் ஆதரவற்று இருக்கின்றனர்; பரிதாபமாய் தவிக்கின்றனர். ‘ஒரு நாள் சாயங்காலம், எங்கள் மாடியில் குடியிருந்த ஒரு விதவை என் வீட்டுக் கதவைத் தட்டி, தான் தனிமையாக உணருவதாய் என்னிடம் சொன்னார்கள். நானோ, எனக்கு அதிக வேலையிருந்ததாக பண்போடுதான் ஆனால் நேரடியாக சொல்லிவிட்டேன். என்னைத் தொந்தரவு செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு போய்விட்டார்கள்’ என்று ஓய்வுபெற்ற ஒரு பெண் தொழில் நிர்வாகி குறிப்பிட்டார்.
விசனகரமாக, அதே இரவில், அந்த விதவை தற்கொலை செய்துகொண்டார்கள். அதற்குப் பிறகு, ஒரு “முக்கியமான பாடத்தை” தான் கற்றுக்கொண்டதாக அந்தத் தொழில் நிர்வாகி சொன்னார்.
பிறரிடம் அன்பில்லாமல் நடந்துகொள்வது பெரும்பாலும் துக்கத்தையே தருகிறது. முன்பு யுகோஸ்லாவியாவின் பாகமாய் இருந்த பாஸ்னியாவிலும் ஹெர்ட்ஸகோவினாவிலும் இனப் போராட்டங்கள் நடந்தபோது, பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், தங்கள் வீட்டை விட்டு ஓடிப்போகும்படி வற்புறுத்தப்பட்டனர்; பத்தாயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டனர். யாரால்? “எங்கள் அக்கம்பக்கத்தாரால்” என்று தன் கிராமத்திலிருந்து விரட்டப்பட்டிருந்த ஒரு பெண் புலம்பினாள். “அவர்கள் எங்களுக்குத் தெரிந்தவர்கள்.”
ருவாண்டாவில், லட்சக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டனர். பெரும்பாலும் தங்கள் சொந்த அக்கம்பக்கத்தாரால் கொலை செய்யப்பட்டனர். “ஹூட்டு இனத்தவரும் டூட்ஸி இனத்தவரும் ஒன்றாக [குடி] இருந்தனர். பெண் எடுத்து, பெண் கொடுத்தனர். ஹூட்டு இனத்தவர் யாரென்றும் டூட்ஸி இனத்தவர் யாரென்றும் கவலையில்லாமல், அதைப்பற்றி தெரியாதளவுக்கும்கூட ஒன்றாய்க் கலந்திருந்தனர். பிறகு, திடீரென்று நிலைமை மாறிவிட்டது; குத்து, வெட்டு என்று ஆரம்பித்துவிட்டன” என்று த நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை செய்தது.
அதைப் போலவே, இஸ்ரேல் நாட்டில் வாழும் யூதர்களும் அராபியர்களும் ஒன்றுசேர்ந்து வாழ்ந்துவருகின்றனர்; ஆனால் அவர்களில் பலர் ஒருவரையொருவர் பகைக்கின்றனர். அயர்லாந்தில் வாழும் பல கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்டண்ட்டுகளுக்கும் இடையிலும், மற்ற நாடுகளிலுள்ள பற்பல மக்களுக்கு இடையிலும்கூட சூழ்நிலை அப்படித்தான் இருக்கிறது. இந்த உலகில், சரித்திரத்திலேயே முன்பு ஒருபோதும் இந்தளவுக்கு அன்பில்லாத நிலை இருக்கவில்லை.
பிறரிடம் காட்டும் அன்பு தணிந்திருப்பது ஏன்?
நம்மைப் படைத்தவர் பதிலளிக்கிறார். அவருடைய வார்த்தையாகிய பைபிள், நாம் வாழ்ந்துவரும் காலத்தை ‘கடைசி நாட்கள்’ என்று அழைக்கிறது. ஜனங்கள் ‘சுபாவ அன்பில்லாதவர்களாய்’ இருக்கும் ஒரு காலப்பகுதியே இந்த நாட்கள் என பைபிள் தீர்க்கதரிசனம் கூறுகிறது. “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு” என்றும் வேதாகமத்தில் அழைக்கப்படுகின்ற ‘கையாளுவதற்குக் கடினமான [இந்தக்] கொடிய காலங்களைப்’ பற்றி, “அநேகருடைய அன்பு தணிந்துபோம்” என்று இயேசு கிறிஸ்து முன்கூட்டியே சொல்லிவிட்டார்.—2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 24:3, 12, NW.
இன்றைய அன்பற்ற நிலை, இந்த உலகத்தின் கடைசி நாட்களில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதற்கான அத்தாட்சியின் பாகமாய் இருக்கிறது. சந்தோஷகரமாக, தேவபக்தியற்ற ஜனங்கள் நிறைந்த இந்த உலகம், அன்பால் ஆளப்படும் ஒரு நீதியான புதிய உலகத்தால் சீக்கிரம் மாற்றியமைக்கப்படும் என்பதையும் இது அர்த்தப்படுத்தும்.—மத்தேயு 24:3-14; 2 பேதுரு 2:5; 3:7, 13.
ஆனால், ஜனங்கள் எல்லாரும் ஒருவரையொருவர் நேசிக்கவும், ஒருவரோடு ஒருவர் சமாதானமாய் சேர்ந்து வாழவும் கற்றுக்கொள்ள முடியும் என்ற, அப்படிப்பட்ட ஒரு மாற்றத்தில் நாம் நம்பிக்கை வைப்பதற்கு உண்மையிலேயே காரணம் இருக்கிறதா?
பிறரிடம் காட்டும் அன்பு—ஒரு நனவு
“எனக்குப் பிறன் யார்?” என்று முதல் நூற்றாண்டு நியாயசாஸ்திரி ஒருவன் இயேசுவிடம் கேட்டான். ‘உன் உடன் யூதர்கள்’ என்றுதான் அவர் சொல்லப்போகிறார் என்று அவன் எதிர்பார்த்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நல்ல சமாரியன் ஒருவனைப் பற்றிய கதையில், வேறு தேசத்தைச் சேர்ந்த ஜனங்களும்கூட நம் அயலாராகவே இருக்கிறார்கள் என்று இயேசு விளக்கமாய்ச் சொன்னார்.—லூக்கா 10:29-37; யோவான் 4:7-9.
கடவுளிடம் காட்டும் அன்புக்கு அடுத்ததாக, பிறரிடம் காட்டும் அன்பு நம் வாழ்க்கையில் முக்கியமாய் இருக்க வேண்டும் என்று இயேசு அழுத்திச் சொன்னார். (மத்தேயு 22:34-40) ஆனால், எந்தவொரு மக்கள் தொகுதியினராவது தங்கள் அயலாரை உண்மையில் எப்பொழுதாவது நேசித்திருக்கிறார்களா? ஆரம்பக் கிறிஸ்தவர்கள் நேசித்திருக்கிறார்கள்! அவர்கள் மற்றவர்களிடம் காட்டும் அன்புக்குப் பிரசித்திபெற்றவர்களாய் இருந்தனர்.—யோவான் 13:34, 35.
இன்றைய நிலை என்ன? கிறிஸ்துவைப் போன்றே எவராவது அன்பு காட்டுகின்றனரா? என்ஸைக்ளோப்பீடியா கனடியானா குறிப்பிட்டுக் காட்டுவதாவது: “இயேசுவும் அவருடைய சீஷர்களும் . . . கடைப்பிடித்து வந்த ஆரம்பக் கிறிஸ்தவம் மீண்டும் உயிரடைந்திருப்பதும், மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதுமே யெகோவாவின் சாட்சிகள் செய்துவரும் வேலை. எல்லாரும் சகோதரர்கள்.”
அதன் அர்த்தமென்ன? யெகோவாவின் சாட்சிகள், ஜாதி, தேசம், இனப் பின்னணி ஆகியவற்றின் காரணமாகவோ, அல்லது வேறெந்தக் காரணமாகவோ, தங்கள் அயலாரைப் பகைப்பதில்லை என்பதே அதன் அர்த்தம். எவரையுமே அவர்கள் கொலை செய்யமாட்டார்கள்; ஏனென்றால், அவர்கள் அடையாள அர்த்தத்தில் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடித்திருக்கிறார்கள். (ஏசாயா 2:4) சாட்சிகள், உண்மையில், தாங்களாகவே முன்வந்து தங்கள் அயலாருக்கு உதவுவதற்குப் பிரசித்திபெற்றவர்கள்.—கலாத்தியர் 6:10.
கலிபோர்னியாவின் சேக்ரமென்ட்டோ யூனியன் என்ற செய்தித்தாளின் தலையங்கம் குறிப்பிட்டதாவது: “உலகமுழுவதிலும் யெகோவா சாட்சிகளின் மதக்கொள்கையே இருந்தால், கொலையும் பகைமையும் இராது; அன்பே செழித்தோங்கும். இது உறுதி.” ஹங்கேரியின் ரிங் பத்திரிகையில் ஓர் எழுத்தாளர் குறிப்பிட்டதாவது: “இந்தப் பூமியில் யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே வாழ்ந்தால், போர்கள் முடிவடையும்; போலீஸ்காரர்கள் செய்யப்போகும் வேலையெல்லாம், போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதும் பாஸ்போர்ட்டைக் கொடுப்பதுமே என்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன்.”
என்றாலும், ஜனங்கள் எல்லாரும் ஒருவரையொருவர் நேசிப்பதற்கு, பெரிய, உலகளாவிய ஒரு மாற்றம் தேவைப்படும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த மாற்றம் எப்படி வரும்? (தயவுசெய்து பின்பக்கத்தைப் பார்க்கவும்.)
ஜனங்கள் எல்லாரும் ஒருவரையொருவர் நேசிக்கும் காலம்
சீக்கிரத்தில் ஒரு மிகப் பெரிய மாற்றம் வரப்போவதாக இயேசு கிறிஸ்து கற்றுத்தந்த ஒரு ஜெபம் காட்டுகிறது. தம்முடைய பிரசித்திபெற்ற மலைப்பிரசங்கத்தில், “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று ஜெபிக்க இயேசு நமக்குக் கற்றுத்தந்தார்.—மத்தேயு 6:10.
கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன? அது ஓர் உண்மையான அரசாங்கம்; அது பரலோகத்திலிருந்து ஆட்சி செய்வது. அதனால்தான் அது “பரலோக ராஜ்யம்” என்று அழைக்கப்படுகிறது. ‘சமாதானப் பிரபுவான’ இயேசு, அதை ஆட்சி செய்பவராக அவருடைய பிதாவால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.—மத்தேயு 10:7; ஏசாயா 9:6, 7; சங்கீதம் 72:1-8.
கடவுளுடைய ராஜ்யம் வருகையில், பகைமை நிறைந்திருக்கும் இந்த உலகத்துக்கு என்ன சம்பவிக்கும்? “அந்த ராஜ்யம்” இந்த உலகத்தின் ஊழல் நிறைந்த அரசாங்கங்களையெல்லாம் ‘நொறுக்கி நிர்மூலமாக்கும்.’ (தானியேல் 2:44) பைபிள் விவரிப்பதாவது: “உலகமும் . . . ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:17.
கடவுளுடைய புதிய உலகத்தைப் பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:9-11, 29; நீதிமொழிகள் 2:21, 22) அது எப்பேர்ப்பட்ட ஓர் இனிய நன்னாளாய் இருக்கும்! “இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.” (வெளிப்படுத்துதல் 21:4) இறந்தவர்களும்கூட மீண்டும் உயிர்பெற்று வாழ்வார்கள்; முழு பூமியும் சொல்லர்த்தமாகவே ஒரு பரதீஸ் தோட்டமாக மாறும்.—ஏசாயா 11:6-9; 35:1, 2; லூக்கா 23:43; அப்போஸ்தலர் 24:15.
கடவுளுடைய புதிய உலகத்தில் வாழ்வதற்கு, கடவுள் நமக்குக் கற்பிக்கும் விதமாகவே, நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். (1 தெசலோனிக்கேயர் 4:9) “பைபிள் வாக்களிக்கிறபடி, அனைவரும் ஒருவரையொருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ளும் காலத்துக்காக ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்று கிழக்கத்தி நாட்டைச் சேர்ந்த பைபிள் மாணவர் ஒருவர் சொன்னார். கடவுள் தாம் வாக்கு கொடுத்ததை நிறைவேற்றுவார் என்று நாமும் நிச்சயமாய் இருக்கலாம்! “அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்” என்று அவர் கூறுகிறார்.—ஏசாயா 46:11.
ஆனால், கடவுளுடைய ராஜ்யத்தில் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு, உலகமுழுவதிலுமுள்ள லட்சக்கணக்கானவர்கள் செய்து வருவதைப் போலவே, நீங்களும் பைபிள் அறிவைப் பெற வேண்டும். (யோவான் 17:3) கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற 32-பக்க சிற்றேடு உங்களுக்கு உதவும். முந்தின பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கூப்பனைப் பூர்த்தி செய்து, உங்களுடைய இருப்பிடத்துக்கு வெகு அருகில் இருக்கும் விலாசத்துக்கு அதை அனுப்பி வைப்பதன் மூலம் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Sniper and funeraln Bosnia:Reuters/Corbis-Bettmann