பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
இளம் பெண் ஒருவர் நல்ல வேலையில் இருந்தார். ஆரம்பத்தில், கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள அவருக்கு ஆர்வமே இல்லை. ஆனால் பிற்பாடு, வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை அவர் கண்டுபிடித்தார். எப்படி என்று அவரே சொல்வதைக் கேளுங்கள்.
“‘நாம் ஏன் பிறந்தோம்?’ என்று பல வருஷங்களாக யோசித்தேன்”—ரோசலிண்டு ஜான்
பிறந்த வருஷம்: 1963
பிறந்த நாடு: பிரிட்டன்
என்னைப் பற்றி: ரொம்ப கவுரவமான வேலையில் இருந்தேன்
என் கடந்தகால வாழ்க்கை:
தெற்கு லண்டனில் இருக்கும் குராய்டன் என்ற இடத்தில்தான் நான் பிறந்தேன். ஒன்பது பிள்ளைகளில் நான் ஆறாவது. என் அம்மா அப்பா, செ. வின்சென்ட் என்ற கரீபியன் தீவைச் சேர்ந்தவர்கள். அம்மா ஒரு மெத்தெடிஸ்ட் சர்ச்சுக்குப் போய்க்கொண்டிருந்தார். எனக்குக் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமே இல்லை. ஆனால், புதுப் புது விஷயங்களைக் கற்றுக்கொண்டு என் அறிவை வளர்த்துக்கொள்ள எனக்கு ரொம்ப ஆர்வம் இருந்தது. ஸ்கூல் விடுமுறை என்றாலே, லைப்ரரியிலிருந்து நிறைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்துவிடுவேன். என் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஒரு ஏரிக்கரையில் உட்கார்ந்து அதையெல்லாம் படிப்பேன்.
ஸ்கூல் படிப்பை முடித்து சில வருஷங்களுக்குப் பிறகு, வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்த மக்களுக்கு உதவி செய்ய ஆசைப்பட்டேன். வீடுவாசல் இல்லாதவர்களுக்கும், உடல்நலக் குறைபாடு அல்லது மனநலக் குறைபாடு இருந்தவர்களுக்கும் உதவ ஆரம்பித்தேன். அதன்பின் யூனிவர்சிட்டியில் சேர்ந்து மருத்துவத் துறை சம்பந்தப்பட்ட படிப்பைப் படித்தேன். பட்டம் வாங்கிய பிறகு, நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத கவுரவமான பெரிய வேலைகள் கிடைத்தன. நான் ரொம்ப வசதியாகவும் ஆடம்பரமாகவும் வாழ்ந்தேன். ஒரு ஃப்ரீலான்ஸ் ஆலோசகராக வீட்டிலிருந்தே வேலை பார்த்ததால் லேப்டாப்பும் இன்டர்நெட்டும்தான் தேவைப்பட்டது. அவ்வப்போது சில வாரங்களுக்கு வெளிநாடு போய்விடுவேன், எனக்குப் பிடித்த ஓட்டலில் தங்குவேன், அங்குள்ள இயற்கைக் காட்சிகளை ரசிப்பேன், என் உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஸ்பாவுக்கும் ஜிம்முக்கும் போவேன். இப்படி, வாழ்க்கையை நன்றாக அனுபவித்துக்கொண்டிருந்தேன். அதேசமயத்தில், ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் எப்போதுமே எனக்கு இருந்தது.
பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது:
‘நாம் ஏன் பிறந்தோம்?’ என்று பல வருஷங்களாக யோசித்தேன். ‘நாம் எதற்காக வாழ்கிறோம்? வாழ்க்கையின் அர்த்தம் என்ன?’ என்றெல்லாம் யோசித்தேன். இதற்கெல்லாம் நான் பைபிளில் பதில் தேடவே இல்லை. என் கடைசி தங்கை மார்கரெட் யெகோவாவின் சாட்சியாக மாறியிருந்தாள். 1999-ல் ஒருநாள், ஒரு ஃப்ரெண்டைக் கூட்டிக்கொண்டு அவள் என்னைப் பார்க்க வந்தாள். அந்தப் பெண்ணும் ஒரு யெகோவாவின் சாட்சிதான். அவர் என்மேல் ரொம்ப அக்கறை காட்டினார். எனக்கு பைபிளைச் சொல்லிக்கொடுப்பதாகச் சொன்னார். நானும் ஒத்துக்கொண்டேன். ஆனால், நான் ரொம்ப மெதுவாகத்தான் முன்னேற்றம் செய்தேன். ஏனென்றால் வேலை, அது, இது என்று நான் ரொம்ப பிஸியாக இருந்தேன்.
2002-ல் இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதிக்குக் குடிமாறிப் போனேன். டாக்டர் பட்டம் வாங்குவதற்காக அங்கே யூனிவர்சிட்டியில் இன்னொரு டிகிரி படிப்பைப் படிக்க ஆரம்பித்தேன். அதேசமயம், என்னுடைய சின்னப் பையனைக் கூட்டிக்கொண்டு பக்கத்திலிருந்த ராஜ்ய மன்றத்துக்கும் அடிக்கடி போனேன். யூனிவர்சிட்டி படிப்பு எனக்குப் பிடித்திருந்ததுதான். ஆனால், பைபிளைப் படித்ததால்தான் வாழ்க்கையில் ஏன் பிரச்சினை வருகிறது, அது எப்படித் தீரப்போகிறது என்றெல்லாம் நான் தெரிந்துகொண்டேன். மத்தேயு 6:24-ல் சொல்லப்பட்டிருப்பது எவ்வளவு உண்மை என்றும் புரிந்துகொண்டேன். இரண்டு எஜமான்களுக்கு நாம் சேவை செய்ய முடியாது, ஒன்று கடவுளுக்கு அடிமையாக இருக்க வேண்டும் அல்லது செல்வத்துக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று புரிந்தது. அதனால், வாழ்க்கையில் எது முக்கியம் என்று நான் முடிவெடுக்க வேண்டியிருந்தது.
அதற்கு முந்தின வருஷம்தான், யெகோவாவின் சாட்சிகள் வாராவாரம் நடத்திய ஒரு கூட்டத்தில் நான் அடிக்கடி கலந்துகொண்டேன். அந்தக் கூட்டத்தில் உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரா? * என்ற புத்தகத்திலிருந்து படித்தோம். அதனால், நம்மை யெகோவாதான் படைத்திருக்கிறார் என்றும், நம் பிரச்சினைகளையெல்லாம் அவர்தான் தீர்க்கப்போகிறார் என்றும் எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. ஆனால் நம்மை யாரும் படைக்கவில்லை, கடவுள் என்று ஒருவர் இல்லை என்றெல்லாம் யூனிவர்சிட்டியில் சொல்லிக்கொடுத்தார்கள். அதனால், எனக்குப் பயங்கர கோபம் வந்துவிட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு நான் யூனிவர்சிட்டி படிப்பை விட்டுவிட்டு, கடவுளைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள நேரம் செலவழித்தேன்.
என் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள என்னைத் தூண்டிய வசனம் நீதிமொழிகள் 3:5, 6. “யெகோவாவை முழு இதயத்தோடு நம்பு. உன்னுடைய சொந்த புத்தியை நம்பாதே. எதைச் செய்தாலும் அவரை மனதில் வைத்துச் செய். அப்போது, உன் வழியில் இருக்கும் தடைகளையெல்லாம் அவர் நீக்கிவிடுவார்” என்று அது சொல்கிறது. கை நிறைய காசும் கவுரவமான வேலையும் தந்த சந்தோஷத்தைவிட கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டபோது கிடைத்த சந்தோஷம்தான் ரொம்ப அதிகம். யெகோவா ஏன் இந்தப் பூமியையும் மனிதர்களையும் படைத்தார் என்றும், இயேசு ஏன் தன்னுடைய உயிரையே கொடுத்தார் என்றும் தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள, கடவுளுக்காக என் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற ஆசை அதிகமானது. ஏப்ரல் 2003-ல் நான் ஞானஸ்நானம் எடுத்தேன். அதன் பிறகு, கடவுளுடைய வேலைகளுக்கு நிறைய நேரம் கொடுப்பதற்காக என் வாழ்க்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக எளிமையாக்கிக்கொண்டேன்.
எனக்குக் கிடைத்த நன்மைகள்:
யெகோவாவோடு எனக்கு இருக்கும் பந்தம் விலைமதிக்க முடியாதது. அவரைப் பற்றித் தெரிந்துகொண்டதால் எனக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்திருக்கிறது. அவரை நேசிக்கிறவர்களோடு நட்பு கிடைத்திருப்பதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
இப்போதும் புதுப் புது விஷயங்களைப் படித்துத் தெரிந்துகொள்ள எனக்குப் பிடிக்கும். பைபிளிலிருந்தும் கிறிஸ்தவக் கூட்டங்களிலிருந்தும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வது சந்தோஷமாக இருக்கிறது. என் நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதும் சந்தோஷமாக இருக்கிறது. இப்போது இதுதான் என் வாழ்க்கையிலேயே ரொம்ப முக்கியமான வேலை. ஏனென்றால், நல்லபடியாக வாழ மக்களுக்கு உதவி செய்ய முடிகிறது. வரப்போகும் புதிய உலகத்தில் இன்னும் நல்லபடியாக வாழ முடியும் என்ற நம்பிக்கையையும் அவர்களுக்குக் கொடுக்க முடிகிறது. ஜூன் 2008-லிருந்து நான் முழுநேரமாக கடவுளுக்கு சேவை செய்துவருகிறேன். என் வாழ்க்கையில் இதுவரை கிடைக்காத சந்தோஷமும் திருப்தியும் இப்போது எனக்குக் கிடைத்திருக்கிறது. வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன். அதற்காக யெகோவாவுக்கு ரொம்ப நன்றியோடு இருக்கிறேன்.
^ யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டிருக்கும் ஆங்கில புத்தகம்.