Skip to content

அநீதிக்கு எப்படி முடிவு வரும் என்று தெரிந்துகொண்டேன்

அநீதிக்கு எப்படி முடிவு வரும் என்று தெரிந்துகொண்டேன்

அநீதிக்கு எப்படி முடிவு வரும் என்று தெரிந்துகொண்டேன்

ஊர்சுலா மெனா

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே, எல்லோரும் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்ற ஆசை எனக்குள் தீயாய் எரிந்துகொண்டு இருந்தது. இந்த ஆசைதான் கம்யூனிச கிழக்கு ஜெர்மனியில் நான் ஜெயிலுக்குப் போவதற்கும் காரணமாக இருந்தது. கடைசியில் பார்த்தால், அநீதிக்கு எப்படி முடிவு வரும் என்று அந்த ஜெயிலில்தான் நான் தெரிந்துகொண்டேன். என் கதையைச் சொல்கிறேன், கேளுங்கள்.

ஜெர்மனியில் இருக்கும் ஹாலா நகரத்தில் 1922-ல் நான் பிறந்தேன். 1,200 வருஷம் பழமையான நகரம் அது. பெர்லினுக்கு தென்மேற்கே சுமார் 200 கிமீ தூரத்தில் அது இருக்கிறது. ஒருகாலத்தில் அது புராட்டஸ்டன்ட் மதத்தின் கோட்டையாக இருந்தது. என் தங்கை கேத்தி 1923-ல் பிறந்தாள். என் அப்பா ராணுவத்தில் வேலை செய்தார். அம்மா இசை அரங்கத்தில் ஒரு பாடகியாக இருந்தார்.

அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற ஆசை என் அப்பாவிடமிருந்துதான் எனக்கு வந்தது. அவர் ராணுவத்தைவிட்டு வந்த பிறகு ஒரு கடையை ஆரம்பித்தார். கடைக்கு வந்தவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருந்ததால், அப்பா அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டு நிறைய பொருள்களைக் கடனாகக் கொடுத்தார். அவர் செய்தது நல்ல காரியமாக இருந்தாலும், கடைசியில் அவர் திவாலாகிவிட்டார். அப்பாவின் அனுபவத்தைப் பார்த்தாவது நான் பாடம் கற்றிருக்க வேண்டும். சம உரிமைக்காகவும் நியாயத்துக்காகவும் போராடுவது சாதாரண விஷயம் கிடையாது, அது ரொம்ப ரொம்ப சிக்கலானது. ஆனால், இளவயதில் நம் மனதில் கொழுந்துவிட்டு எரியும் கொள்கைகளை அணைப்பதும் ரொம்ப கஷ்டம்தான்.

அம்மாவிடமிருந்துதான் எனக்குக் கலைத்திறன் வந்தது. இசை, பாடல், நடனம் எல்லாவற்றையும் கேத்தியும் நானும் கற்றுக்கொள்ள அம்மாதான் காரணம். சின்ன வயதில் நான் துருதுருவென்றும் கலகலப்பாகவும் இருந்தேன். கேத்தியும் நானும் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்தோம், ஆனால் 1939 வரைக்கும்தான்!

கொடூரமான காலம் ஆரம்பம்

என்னுடைய பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, நான் பாலே நடனப் பள்ளியில் சேர்ந்தேன். அங்கு மேரி விக்மேனின் ஆஸ்ட்ரக்ஸ்டான்ஸ் நடனத்தைக் கற்றுக்கொண்டேன். இந்த வகையான டான்ஸுக்கு அவர்தான் முன்னோடியாக இருந்தார். உணர்ச்சிகளை நடனத்தில் வெளிப்படுத்துவதுதான் இந்த டான்ஸின் சிறப்பம்சம். நான் ஓவியம் வரையவும் ஆரம்பித்தேன். இப்படி, டீனேஜ் வயதில் புதுப் புது விஷயங்களைக் கற்றுக்கொண்டு ரொம்ப ஜாலியாக, சந்தோஷமாக இருந்தேன். ஆனால், 1939-ல் இரண்டாவது உலகப் போர் வெடித்தது. 1941-ல் இன்னொரு பெரிய இடி விழுந்தது. அப்பா காசநோயால் இறந்துபோனார்.

போர் என்பது கொடூரமான ஒன்று. இரண்டாவது உலகப் போர் ஆரம்பித்தபோது எனக்கு 17 வயதுதான். ஆனாலும், இந்த உலகத்துக்கு ஏதோ கிறுக்கு பிடித்துவிட்டது என்று நினைத்தேன். அவ்வளவு நாள் சாதாரணமாக இருந்த ஆட்களுக்குக்கூட திடீரென்று நாசி வெறி கிளம்பிவிட்டது. அதன் பிறகு பஞ்சமும், பட்டினியும், சாவும், அழிவும்தான்! வெடிகுண்டு தாக்குதலில் எங்கள் வீடு தரைமட்டமாகிவிட்டது. என் குடும்பத்தில் இருந்த நிறைய பேர் அந்தப் போரில் கொல்லப்பட்டார்கள்.

1945-ல் சண்டை நின்றபோது, ​​அம்மாவும் கேத்தியும் நானும் ஹாலாவில் இருந்தோம். அப்போது, எனக்குக் கல்யாணமாகி ஒரு பெண் குழந்தையும் இருந்தாள். ஆனால், என் கணவருக்கும் எனக்கும் ஒத்துப்போகாததால் நாங்கள் பிரிந்துவிட்டோம். அதன்பின், வாழ்க்கையை ஓட்டுவதற்காக நான் ஒரு நடனக் கலைஞராகவும் ஓவியராகவும் வேலை செய்தேன்.

போருக்குப் பிறகு ஜெர்மனி நான்கு பிரிவுகளாகப் பிரிந்தது. எங்கள் நகரம் சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் வந்தது. அதனால், நாங்கள் கம்யூனிச ஆட்சியின் கீழ் வாழ பழகிக்கொள்ள வேண்டியிருந்தது. 1949-ல், கிழக்கு ஜெர்மனி என்று பொதுவாகச் சொல்லப்படும் எங்கள் பகுதி, ஜெர்மன் ஜனநாயகக் குடியரசாக (GDR) ஆனது.

கம்யூனிச ஆட்சியின் கீழ் வாழ்க்கை

அந்த சமயத்தில், அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது, நான்தான் அவரைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு அரசாங்க அலுவலகத்தில் நான் வேலைக்கு சேர்ந்தேன். இதற்கிடையே, அநீதிக்கு எதிராகப் போராடிய ஒரு மாணவர் கும்பலோடு எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. ஒருசமயம், ஒரு இளைஞனைக் கல்லூரியில் சேர்க்க மறுத்துவிட்டார்கள். ஏனென்றால், அவனுடைய அப்பா நாசி கட்சியில் இருந்திருந்தார். அந்த இளைஞனை எனக்குத் தெரியும், ஏனென்றால், நாங்கள் அடிக்கடி ஒன்றாகச் சேர்ந்து இசையைக் கேட்டு ரசித்திருக்கிறோம். ‘இவனோட அப்பா செஞ்ச தப்புக்கு இவன எதுக்கு தண்டிக்கணும்?’ என்று நான் யோசித்தேன். பிறகு, அந்த மாணவர் கும்பலோடு சேர்ந்து இன்னும் அதிகமாகப் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தேன். ஒரு தடவை, உள்ளூர் நீதிமன்றத்துக்கே போய், வெளியில் இருந்த படிக்கட்டுகளில் சில போஸ்டர்களை ஒட்டிவிட்டு வந்தேன்.

மண்டல அமைதிக் குழுவின் செயலாளராக நான் சில கடிதங்களை டைப் பண்ண வேண்டியிருந்தது. அப்போதுதான், அநீதியை நினைத்து என் இரத்தம் இன்னும் அதிகமாகக் கொதித்தது. அங்கு நடந்த ஒரு சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்தக் குழுவில் இருந்தவர்கள், அரசியல் காரணங்களுக்காக, மேற்கு ஜெர்மனியில் வாழும் ஒரு முதியவருக்கு ஒரு பார்சல் அனுப்ப திட்டம் போட்டார்கள். கம்யூனிசத்தைப் பரப்பும் பிரசுரங்கள் அந்த பார்சலில் இருந்தன. அவர்மேல் சந்தேகத்தைக் கிளப்புவதற்காகவே அவர்கள் சதிவேலை செய்தார்கள். அந்த அநியாயத்தை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அதனால், அந்தப் பார்சலை எடுத்து அலுவலகத்தில் ஒளித்து வைத்துவிட்டேன். கடைசிவரை, அதை அனுப்பவே இல்லை.

‘ரொம்ப மோசமானவள்’ தந்த நம்பிக்கை

ஜூன் 1951-ல், இரண்டு பேர் என் அலுவலகத்துக்கு வந்து, “உங்கள கைது செய்றோம்” என்று சொன்னார்கள். பிறகு, ரோட்ட ஓக்சா அல்லது ரெட் ஆக்ஸ் என்ற சிறைக்கு என்னைக் கொண்டுபோனார்கள். ஒரு வருஷம் கழித்து, அரசுக்கு எதிராக நான் செயல்பட்டதாக என்மேல் குற்றம் சாட்டினார்கள். ஒரு மாணவன் என்னைக் காட்டிக் கொடுத்திருந்தான். முன்பு நான் போஸ்டர் ஒட்டி போராட்டம் செய்ததைப் பற்றி ஸ்டாசி என்ற ரகசிய போலீஸாரிடம் அவன் சொல்லியிருந்தான். வெறும் பெயருக்காக அவர்கள் ஒரு விசாரணையை நடத்தினார்கள். என் தரப்பில் நான் சொன்னதை யாரும் காதில் வாங்கவே இல்லை. எனக்கு ஆறு வருஷ சிறைத்தண்டனை கொடுத்தார்கள். அந்த சமயத்தில், எனக்கு உடம்புக்கு முடியாமல் போய்விட்டது. அதனால், சிறைச்சாலை மருத்துவமனை விடுதியில் என்னைத் தங்க வைத்தார்கள். அங்கே கிட்டத்தட்ட 40 பெண்கள் இருந்தார்கள். துளிகூட சந்தோஷமே இல்லாமல் நடைப்பிணம் மாதிரி வாழ்ந்துகொண்டிருந்த அவர்களைப் பார்த்தபோது எனக்கு ரொம்ப பதட்டமாகிவிட்டது. அதனால் ஓடிப்போய், இரண்டு கையாலும் கதவை ‘டம்! டம்! டம்!’ என்று வேகமாகத் தட்டினேன்.

“என்ன வேணும்?” என்று காவலர் கேட்டார்.

“என்னால இங்க இருக்க முடியாது! வேணும்னா என்னை தனியாகூட அடைச்சு வையுங்க, ஆனா எப்படியாவது இங்கிருந்து கூட்டிட்டு போயிடுங்க!” என்று நான் கத்தினேன். அவர் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. கொஞ்ச நேரம் கழித்து, அங்கே ஒரு பெண் மட்டும் வித்தியாசமாக இருப்பதைக் கவனித்தேன். அவருடைய கண்களில் ஒரு அமைதி தெரிந்தது. அதனால் அவருக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன்.

ஆனால், “என் பக்கத்துல உட்காரணுமானு நல்லா யோசிச்சுக்கோங்க” என்று அவர் சொன்னார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன்பின், “நான் யெகோவாவின் சாட்சிங்கறதால, இங்க இருக்குறவங்கள்லயே நான்தான் ரொம்ப மோசமானவள்னு எல்லாரும் நினைக்கிறாங்க” என்று அவர் சொன்னார்.

கம்யூனிச அரசாங்கம் ​​யெகோவாவின் சாட்சிகளை எதிரிகளாகப் பார்த்த விஷயம் அப்போது எனக்குத் தெரியாது. ஆனால், வேறொரு விஷயம் என் ஞாபகத்துக்கு வந்தது. என்னுடைய சிறு வயதில் இரண்டு பைபிள் மாணாக்கர்கள் (யெகோவாவின் சாட்சிகள் முன்பு அப்படித்தான் அழைக்கப்பட்டார்கள்) அடிக்கடி என் அப்பாவை சந்தித்து பைபிளிலிருந்து பேசினார்கள். “பைபிள் மாணாக்கர்கள் சொல்றது சரிதான்!” என்று அப்பாவும் சொல்வார்.

அதனால், இப்போது அந்தப் பெண்ணைப் பார்த்தது நிம்மதியாக இருந்தது, சொல்லப்போனால் கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன். அவருடைய பெயர் பெர்ட்டா ப்ரூகமையர். “தயவுசெஞ்சு யெகோவாவை பத்தி சொல்லுங்க” என்று நான் அவரிடம் கேட்டேன். அதுமுதல், நாங்கள் பைபிளைப் பற்றி நிறைய நேரம் பேசினோம். உண்மைக் கடவுள் யெகோவாதான், அவர் அன்பானவர், நீதியுள்ளவர், சமாதானத்தை விரும்புகிறவர் என்றெல்லாம் தெரிந்துகொண்டேன். அதுமட்டுமல்ல, அராஜகம் செய்கிற ஆட்களின் அட்டூழியங்களை அவர் ஒழித்துக்கட்டப்போகிறார் என்றும் தெரிந்துகொண்டேன். சங்கீதம் 37:10, 11 இப்படிச் சொல்கிறது: “இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். . . . ஆனால், தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”

விடுதலையானேன், மேற்கு ஜெர்மனிக்குத் தப்பியோடினேன்

ஐந்து வருஷத்துக்கும் மேல் சிறையில் இருந்த பிறகு, 1956-ல் நான் விடுதலையானேன். விடுதலையாகி ஐந்து நாளுக்குப் பிறகு, மேற்கு ஜெர்மனிக்குத் தப்பியோடினேன். அப்போது எனக்கு ஹானலோரா, சபீனா என்ற இரண்டு மகள்கள் இருந்தார்கள். அவர்களையும் கூட்டிக்கொண்டு போனேன். அங்கே நானும் என் கணவரும் விவாகரத்து செய்துகொண்டோம். பிறகு, நான் யெகோவாவின் சாட்சிகளை மறுபடியும் சந்தித்தேன். அவர்களோடு பைபிளைப் படித்தேன். ​​யெகோவா எதிர்பார்க்கும்படி வாழ்வதற்கு நான் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன். கடைசியில், அந்த மாற்றங்களையெல்லாம் செய்து 1958-ல் ஞானஸ்நானம் எடுத்தேன்.

பிறகு, கிளாஸ் மெனா என்ற யெகோவாவின் சாட்சியை நான் கல்யாணம் செய்துகொண்டேன். எங்கள் கல்யாண வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்தது. எங்களுக்கு பென்யமின், தாபீயா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். ஆனால், கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கு முன்பு கிளாஸ் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்! இறந்தவர்கள் பூஞ்சோலை பூமியில் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஆறுதல் தருகிறது. (லூக்கா 23:43; அப்போஸ்தலர் 24:15) என்னுடைய நான்கு பிள்ளைகளும் யெகோவாவுக்குச் சேவை செய்வதை நினைக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

நான் பைபிளைப் படித்ததால், யெகோவாவால் மட்டும்தான் அநீதிக்கு முடிவுகட்ட முடியும் என்பதைத் தெரிந்துகொண்டேன். அதுமட்டுமல்ல, யெகோவா ஒவ்வொருவருடைய சூழ்நிலையையும், பின்னணியையும், மனிதர்களுக்குத் தெரியாத மற்ற எல்லா விவரங்களையும் தெரிந்து வைத்திருப்பதால் ரொம்ப நீதியாக நியாயந்தீர்ப்பார் என்று புரிந்துகொண்டேன். இந்த உண்மைதான் இப்போதுவரை எனக்கு மன நிம்மதியைத் தந்திருக்கிறது. முக்கியமாக, அநீதியைப் பார்க்கும்போது அல்லது அநியாயமாக நடத்தப்படும்போது இந்த உண்மை எனக்கு ஆறுதல் தருகிறது. பிரசங்கி 5:8 இப்படிச் சொல்கிறது: “ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு.” (தமிழ் O.V. பைபிள்) நம்மைப் படைத்த கடவுளைத்தான் ‘உயர்ந்தவர்’ என்று இந்த வசனம் சொல்கிறது. “எல்லாமே அவருடைய கண்களுக்கு முன்னால் ஒளிவுமறைவில்லாமல் வெட்டவெளிச்சமாக இருக்கிறது. அவருக்குத்தான் நாம் கணக்குக் கொடுக்க வேண்டும்” என்று எபிரெயர் 4:13 சொல்கிறது.

கிட்டத்தட்ட 90 வருஷ வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறேன்

நாசி ஆட்சியிலும் கம்யூனிச ஆட்சியிலும் வாழ்ந்தது எப்படி இருந்தது என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். இரண்டு ஆட்சியிலுமே வாழ்க்கை மிகக் கொடுமையாகத்தான் இருந்தது. அந்த இரண்டு ஆட்சிகளும் சரி, மற்ற எல்லா ஆட்சிகளும் சரி, மனிதனை மனிதன் நல்லபடியாக ஆள முடியாது என்பதைத்தான் நிரூபித்திருக்கின்றன. பைபிள் இந்த உண்மையை வெளிப்படையாகச் சொல்கிறது: “இவ்வளவு காலமாக மனுஷனை மனுஷன் அடக்கி ஆண்டிருப்பதால் அவனுக்குக் கேடுதான் வந்திருக்கிறது.”—பிரசங்கி 8:9.

விவரம் தெரியாத வயதில், ​​மனிதர்கள் யாராவது நீதியாக ஆட்சி செய்வார்கள் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது எனக்கு உண்மை தெரியும். நம்மைப் படைத்த கடவுளால் மட்டும்தான் நீதியான ஆட்சியைக் கொண்டுவர முடியும். கெட்டவர்கள் எல்லாரையும் அழித்துவிட்டு இந்தப் பூமியை ஆட்சி செய்யும் பொறுப்பைத் தன் மகன் இயேசு கிறிஸ்துவின் கையில் அவர் கொடுப்பார். இயேசு எப்போதுமே தன்னுடைய நலனைவிட மற்றவர்களுடைய நலனில் அக்கறை காட்டுகிறவர். அவரைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “நீ நீதியை நேசித்தாய், அநியாயத்தை வெறுத்தாய்.” (எபிரெயர் 1:9) இந்த அற்புதமான, நீதியுள்ள ராஜாவிடம் கடவுள் என்னை ஈர்த்ததற்கு நான் ரொம்ப நன்றியோடு இருக்கிறேன்! இந்த ராஜாவின் ஆட்சியில் என்றென்றும் வாழப்போகும் காலத்துக்காக ஆசையோடு காத்திருக்கிறேன்!

[படம்]

எனது மகள்கள் ஹானலோரா மற்றும் சபீனாவுடன், நாங்கள் மேற்கு ஜெர்மனிக்கு வந்த பிறகு

[படம்]

இன்று, என் மகன் பென்யமின் மற்றும் அவன் மனைவி சாண்ட்ராவுடன்